மோகன் நடித்த இரட்டை வால் குருவி பார்த்திருப்பீங்கதானே... அது மாதிரி ஒரு படம்தான் இது... அதில் ரெண்டு மனைவி... இதில் முன்னாள், இந்நாள் காதலிகள்... அவ்வளவே வித்தியாசம்.. இங்கும் அங்கும் பயணித்தல் இரண்டிலும் ஒன்றே... அதுவும் ரெ.வா.குவில் மருத்துவமனையில் மாறிமாறி அலைவானே அதேபோல் இதில் தங்கையின் திருமணத்தில்... இருவருடனும் ஜோடி போட்டு ஆட வேண்டிய நிலையில் பேச்சு வார்த்தையில்லாத அப்பனால் இரட்சிக்கப்படுகிறான். மொத்தத்தில் மத்தளத்துக்கு அடிவிழுவது இரண்டிலுமே ஒன்றுதான்.
'தவறான நேரத்தில் மட்டுமே ஒரு பெண்ணுடனான உறவில் (நேசத்தில்) சிக்கிக் கொள்வதாய்' ஆரம்பத்திலேயே கிருஷ்ணா (சித்து ஜொன்னலஹடா) சொல்லி விடுகிறார். அப்படித்தான் படத்தின் கதையும் பயணிக்கிறது.
கிருஷ்ணன்னாலே லீலைகள்தானே... அதைத்தான் இந்தக் கிருஷ்ணனும் செய்கிறான். தான் சின்ன வயது முதல் ஒன்றாக சுற்றித் திரிந்த, படித்த சத்யா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்), காதலை ஏற்க மறுத்து பெங்களூருக்கு வேலைக்குப் போய் விடுகிறாள். முதல் காதல் உடைந்த வருத்தத்தில் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறான்.
அந்தச் சமயத்தில் மூன்றாமாண்டு படிக்கும் ராதாவைச் (ஷாலினி வாட்னிஹாட்டி) சந்திக்கிறான். அவர் மீது காதல்... அதுவும் அழகான கவிதை போல் பயணிக்கிறது. நாயகனுக்குப் பெங்களூரில் வேலை கிடைக்க, ராதா போவேண்டாம் என்கிறாள். ஆனாலும் அவளின் மனதை மாற்றி தன் தங்கை இருக்கும் இடத்தில் தங்கி வேலைக்குப் போகிறான். அங்கே தங்கையுடன் அவளின் தோழி ஷீரத் கபூர் இருக்கிறார். அவரைப் பார்த்ததும் மனசுக்குள் பட்டாம்பூச்சி... ஆனாலும் நல்ல தோழியாக மாற்றிக் கொள்கிறான்.
நல்லாப் போற கதையில பிரச்சனை இல்லைன்னா... அப்புறம் எப்படி..?
சத்யாவைச் சந்திக்கிறான்... அவளுக்கு உதவ வேண்டிய சூழல்... முறிந்த காதல் துளிர்க்கிறது.... ராதாவுக்குத் தெரிய வர பசும்சோலையாக இருந்த காதல் பட்டுப் போன மரமாகிறது.
அப்புறமென்ன... இங்கிட்டும் அங்கிட்டுமாய் பய மாறி மாறிப் பயணிக்கிறான். ஒருவரை ஏமாற்றி ஒருவரை அவன் விரும்பவில்லை... இவளா...? அவளாங்கிற முடிவுக்கு வர வேண்டிய சூழலில் நிறுத்தப்படும் போது ஒருத்திக்காக ஒருத்தியை விட்டுவிடுவதா... என்ற குழப்பத்தில் நிற்கிறான்... அதிலிருந்து மீண்டானா...? சத்யாவா... ராதாவா... யாரை மனைவியாக்கிக் கொண்டான் எனபதை ரொம்பச் ஜாலியாகச் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகன் இரண்டு பக்கமும் மாறி மாறிப் பயணிப்பதில் அருமையாக நடித்திருக்கிறார்... பெருங்காதலைக் கொடுத்து, அதற்கான அன்புப் பரிசாக கட்டிலைப் பகிர்ந்து கொள்கிறான்.
சத்யா தண்ணி, சிகரெட் என ஒரு சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் பெண்ணாகவே வலம் வருகிறார். ராதா படிக்கும் பெண் என்பதால் இந்த வட்டத்துக்குள் சிக்கவில்லை.
இறுதியில் நீயும் வேண்டும்... நீயும் வேண்டுமென அவன் இருவரிடமும் பேசும் போது சத்யா அப்ப நாந்தானே பிட்ச் எனத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்த, ராதாவோ அழுது ஆர்ப்பரிக்கிறாள்.
இரண்டு நாயகிகளுமே அழகு... அருமையான தேர்வு... அவர்களுக்கான உடைகளும் அவ்வளவு நேர்த்தி... அழகாய்த் தெரிகிறார்கள்... அதுவும் ஷாலினியின் உடைகள் நதியாவை நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறது. இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் இருவரையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார் ஷீரத்.. அந்தச் சிரிப்பும் அநாயசமான நடிப்பும்... சான்ஸே இல்லை. நாயகிகள் இருவரும் போட்டி போட்டு கண்ணீர் சிந்தி நடிக்க, நாயகனுடன் சுற்றித் திரிந்து கொண்டு அந்தப் புன்னகையாலேயே நம்மை வசீகரித்து விடுகிறார்.
ரொம்ப நல்ல படமெல்லாம் இல்ல... ஆனா ரெண்டு மணி நேரம் உக்காந்து பார்க்கிறதுக்கு உகந்த படம்தான்... ஆரம்பம் முதல் இறுதிவரை போரடிக்காமல் நகரும். இருவரிடமும் மாட்டிக் கொண்டு நாயகன் படும் பாடு ரசிக்க வைக்கிறது.
படத்தின் வசனங்கள் பெரிய ப்ளஸ்... 'சேலை கட்டாம சுடியில வந்திருக்கே... எனக்குச் சேலை கட்டத் தெரியாது... ஓ... டிபன் பாக்ஸ்ல மட்டும் தினம் தினம் வெரைட்டியா சாப்பாடு கொண்டு வரத் தெரியிது... சேலை கட்டத் தெரியாதா...' , 'எப்படா இவ்வளவு பக்குவம் உனக்கு வந்துச்சு... நீ பிரேக் அப் பண்ணிட்டுப் போன பின்னால...' , 'சாரி... நான் அப்ப தண்ணி அடிச்சிருந்தேன் அதான்... ஓ தண்ணியடிச்சா உங்கம்மாக்கிட்டயும் இப்படித்தான் பேசுவியா...' , 'டேய் சிகரெட்டை விட்டுருடா... அது மட்டும் முடியாது சாரி... நல்லவேளை சரியின்னு சொல்லியிருந்தியன்னா உன்மேல நம்பிக்கை வந்திருக்காது...' , 'நான் உனக்கு ஒரு முத்தம் கொடுக்கவா... எப்ப பர்மிஷன் கேக்குறத நிப்பாட்டுறியோ அப்பக் கொடு...' என சின்னச் சின்னதாய் வந்து போகும் வசனங்கள் 'வாவ்' போட வைக்கின்றன.
போனில் முன்னாள் காதலியின் போட்டோ வைத்திருப்பது போன்ற லாஜிக் சொதப்பல்களும் இருக்கத்தான் செய்கின்றன என்றாலும் படமே சொதப்பலாக இல்லாதது சிறப்பு.
படத்தின் இயக்குநர் ரவிக்காந்த் ஒரு மழையையும் அதன் பின்னே அடிக்கும் மனதை மயக்கும் காற்றையும் நம்முன்னே காட்சிப்படுத்தியிருக்கிறார். விருப்பமிருந்தால் பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.
4 எண்ணங்கள்:
விருப்பமிருந்தால் பார்க்கலாம்! :) லாம்!
மலையாளம் தவிர தெலுங்கு படங்களும் பார்க்க ஆரம்பித்து விட்டீர்கள் போலும். தொடரட்டும் அறிமுகங்கள். நன்றி குமார்.
எந்த முன் அரிவிப்பும் இல்லாமல் தெலுங்கில் வெளிவந்த படம்.
பார்க்கனும்னு இருந்தேன்.
உங்கலோட இந்த விமர்சனம் வாசிச்சதும் பார்த்துவிடனும்னு முடிவு பன்னிட்டேன் சார்.
திரைப்படம் ரொம்பவே பிடித்து விட்டதா குமார்...?
தமிழ் மலையாளப் படங்கள் தான் நீங்கள் அதிகம் பகிர்ந்துபார்த்திருக்கிறேன். தெலுங்கு படமும் இப்போது சேர்ந்திருக்கிறதே! உங்கள் விமர்சனம் நன்று.
துளசிதரன்
உங்கள் விமர்சனம் ம்ம்ம் லிஸ்டில் நான் சேர்ப்பேனா என்பது டவுட்டுதான் ஹா ஹா ஹா
கீதா
கருத்துரையிடுக