கோவில்களைப் பற்றி எழுத ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயில் என்ற தேடலில் முதல் பதிவை விட இரண்டாவது பதிவு... அதைவிட மூன்றாவதென ஒவ்வொன்றும் விரிவாகப் போக ஆரம்பிக்கக் காரணம் இன்னும் வேறேனும் செய்திகள் இருக்கா என்ற தேடல்தான் என்பதை உணரமுடிகிறது.
முன்பு சொன்னது போல் சாதிக்குள் தெய்வங்களை இழுத்து வைத்து எழுதப்படும் வரலாறுகளே அதிகமாய் இருக்கிறது. இன்று எழுதியிருக்கும் கண்டதேவி எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஊர்.. அங்கிருந்து சத்தமாகக் கூப்பிட்டால் எங்க ஊருக்குக் கேட்கும். இங்கிருக்கும் கோவில் குளம்தான் (தம்மம்) சுற்று வட்டார மக்கள் கோடையிலும் நீந்திக் குளிக்கும் இடம். படிக்கும் காலத்தில் பலமணி நேரம் நாங்களெல்லாம் ஆட்டம் போட்ட இடம். இப்பவும் நிறைந்து கிடக்கும் தம்மத்தைப் பார்க்கும் போது குளிக்கும் ஆசை மனதுக்குள் எழும்.
சென்ற வருடத்தில் என்று நினைக்கிறேன்... புதுக்கோட்டை பக்கமிருந்து கடத்தி வரப்பட்ட ஐம்பொன் சிலை ஒன்று இக்குளத்துக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது. நான்கு நாட்டார் வடமிழுக்க, ஆனி மாதம் நடக்கும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. அரசியல் பசிக்காக கிளப்பி விடப்பட்ட வடப்பிரச்சினையால் பல வருடங்களாக தேரோட்டம் நடத்தப்படுவதில்லை. அந்தப் பத்துநாள் திருவிழா எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்வைக் கொடுத்த திருவிழா. இப்போது அதெல்லாம் எதுவும் இல்லாமல் சாமி கும்பிடப்படுகிறது.
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர்
இந்த ஊர் இராமயணக் கதையுடன் தொடர்புடையதாகும்... சீதையைத் தேடி வந்த இராமன், அனுமனை அனுப்பித் தேடச் சொல்லிவிட்டு இங்கு சிவலிங்கத்தை வழிபட்டதாகவும், திரும்பி வந்த அனுமன் 'கண்டேன் தேவி'யை என்று சொன்ன இடம் இது என்பதால் கண்டதேவி என்றழைக்கப் படுவதாகவும், ராவணனுடன் மோதி சிறகுகளை இழந்த சடாயு இந்த இடத்தில் இறந்ததாகவும், இராமன் பிதுர்க்கடன் செய்ததால் சடாயுவின் ஆன்மா பரிபூரணமடைந்து லிங்கத் திருமேனியானதாகவும் புரணாக்கதை சொல்கிறது.
மேலும் சிறகுகள் இல்லாத சடாயுவின் லிங்கத் திருமேனி என்பதால் முதலில் சிறகிலிநாதர் என்று அழைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் ஸ்வர்ணாபரணேஸ்வரர் (ஸ்வர்ணா - தங்கம்; பரணா - இறக்கை) என்ற பெயரில் அழைக்கப்பட்டு அது மெல்ல மருவி சொர்ணமூர்த்தீஸ்வரர் என்றாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
கோவிலின் மேற்குப் பிரகாரத்தில் ஜடாயு நினைவாக ஸ்தூல லிங்கப் பீடத்தில் ஸ்ரீ திருவடியும் நாவல் மரமும் இருக்கின்றன.
இந்தக் கோவிலைப் புணரமைக்க நினைத்த ராஜா அதற்கென அண்ணன் தம்பிகளான இரு பெரும் பணக்காரர்களை பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்ளச் சொன்னதாகவும் அவர்களுடன் இப்பகுதியில் நடந்து சென்ற போது மூவரும் இப்போது கோவில் இருக்கும் இடத்தில் கால் தடுக்கி விழுந்ததாகவும் ஏதோ ஒன்று இங்கு இருக்கலாமென அங்கு தோண்டச் செய்தபோது தங்கமும் வைரமும் இருந்ததாகவும் அதை வைத்தே இந்தக் கோவிலைப் புணரமைத்ததாகவும் அதனால்தான் சிறகிலிநாதர் சொர்ண மூர்த்தீஸ்வரர் ஆனதாய் ஒரு கதையும் உண்டு.
இதேபோல் மழையில்லாது விவசாயம் பொய்த்துப் போனபோது இந்தப் பகுதி மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாது கஷ்டப்பட்டதாகவும் தங்களது கஷ்டத்தை சிறகிலிநாதரிடம் சொல்லி வழிபட்டதால் தங்கமழை பெய்ததாகவும் ஒரு கதை உண்டு. கண்டதேவிக்கு அருகில் இருக்கும் ஒரு ஊரின் பெயர் 'செம்பொன்மாரி' (எங்க பேச்சு வழக்கில் செம்மாரி).
சடாயுவின் இறக்கை விழுந்த இடம் 'இறகுசேரி' (எங்க பேச்சு வழக்கில் இரவுசேரி) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
சிவகங்கைச் சமஸ்தானத்துக்குச் சொந்தமான இக்கோவில் 350 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இங்கு 5 நிலை இராஜகோபுரம் கிழக்குப் பார்க்க உயர்ந்து நிற்கிறது. காளையார்கோவிலில் இருந்து பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியும் என்பார்கள். அதேபோல் இதில் ஏறிப் பார்த்தால் காளையார்க் கோவில் கோபுரம் தெரியும் என்று சொல்லக் கேள்வி. பழங்காலத்தில் தெரிந்திருக்கலாம்... இப்போது தெரியுமா தெரியவில்லை.
ஆனி மாதம் திருவிழாவும் தேரோட்டமும் சிறப்பாக நடைபெறும். கிட்டத்தட்ட 75 ஊரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திருவிழாவில் கூடுவார்கள். நான்கு நாட்டு மக்கள் வடம் பிடித்துத் தேர் இழுப்பார்கள். வடப்பிரச்சினையால் தேரோட்டம் சில வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போது புதிய தேர் செய்திருக்கிறார்கள்.
மூலவர் - சொர்ணமூர்த்தீஸ்வரர், அம்மன் - பெரியநாயகி.
அதிகாரநந்தி, சின்னக்கருப்பர், பெரிய கருப்பர், அனுக்கை விநாயகர், பைரவர், அண்ணாமலையார், மகாலட்சுமி, வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், தண்டபாணி, காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி, நடரஜர்-சிவகாமி என தனித்தனை சந்நதிகள் உள்ளது.
ஸ்தல் விருட்சம் : நாகலிங்க மரம்
தீர்த்தம் : சடாயு தீர்த்தம்
கோவிலுக்குப் பின்னே மிகப்பெரிய ஊரணி ஒன்று இருக்கிறது. கோடையிலும் தண்ணீர் நிறைத்து வைக்கப்படுவதால் எப்போதும் வற்றாமல் காட்சியளிக்கும். கோவிலுக்குப் பின்னே இருக்கும் கோவில் படித்துறை அருகே முனீஸ்வரர் கோவிலும் நாவல் மரமும் இருக்கிறது. ஒவ்வொரு படித்துறைக்கும் ஒரு ராசியின் பெயர் சூட்டப்பட்டிருக்கும்
கோவிலுக்கு வடக்கே பத்ரகாளி அம்மன் குங்குமகாளி என்ற பெயரில் தனிக்கோவிலில் இருக்கிறார். தேர் நிறுத்தப்பட்டிக்கும் இடத்தில் தேரடிக் கருப்பர் கோவில் இருக்கிறது. தேவகோட்டையில் இருந்து கண்டதேவி செல்லும் வழியில் ஒரு காளியம்மன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலில் அருகிலேயே இறந்து போன கோவில் மாட்டுக்கெனத் தனிக் கோவில் இருக்கிறது. அதில் அந்த மாட்டின் படுத்திருப்பது போல் மிகப்பெரிய சிலை இருக்கிறது. அதற்குப் பூஜைகள் நடைபெறும்.
இங்கிருந்து கூப்பிட்டால் எங்க ஊருக்குக் கேட்கும்... படிக்கும் காலத்தில் துணிகளை அள்ளிக் கொண்டு இங்குதான் குளிக்க வருவோம்... துணி துவைத்து மணிக்கணக்கில் தண்ணீரில் ஆட்டம்போட்டு வீடு போய் சேர்வதெல்லாம் எப்போதும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள்.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து.
நாளை தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி
-'பரிவை' சே.குமார்.
5 எண்ணங்கள்:
இளமைக்கால இனிய நினைவுகளோடு, கோவில் தகவல்களும் அருமை குமார்...
இனிமையான நினைவுகளோடு சிறப்பாக தகவல்களும் சேர்த்துச் சொன்னது நன்று. கோவில் உலா தொடரட்டும்.
கண்டதேவி திருக்கோயிலைப் பற்றிய செய்திகள் அருமை..
மனதில் குறித்துக் கொண்டேன்...
வாழ்க நலம்...
வடப் பிரச்சினையால் தேர்திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது மனவருத்தம். உங்கள் பசுமை நினைவுகளையும் தந்துள்ளீர்கள்.
கண்டதேவி கோவில் போனது இல்லை.
பார்க்கும் அவலை ஏற்படுத்தியது, விவரங்களும், படமும்.
வடப் பிரச்சசனையால் கோவில் தேர் ஓடவில்லை என்பதை படிக்கும் போது வருத்தமாய் இருக்கிறது.
உங்கள் மலரும் நினைவுகள் அருமை.
கருத்துரையிடுக