சில நாட்களாகவே தினம் ஒரு பதிவு என்பதாய் ஆகிவிட்டது... கொஞ்சம் வாசிப்பு... சின்னதாய் ஒரு பதிவு என்பதாய் நாட்கள் நகர்கிறது. ஊருக்குக் காலையும் மதியமும் மட்டுமே பேச முடிகிறது... இரவில் இணையம் இழுக்க மறுப்பதால் அலுவலகம் போய்விட்டு வந்து நீண்ட நேரம் பேசுவது போல் இப்போது முடிவதில்லை...
வீட்டில் இருந்து பணி... ஊருக்குப் பேசுவதற்காக சூழல் இரவில் இல்லாதது எனும் போது படங்களோ... பாடல்களோ... வாசிப்போ... அல்லது எழுத்தோதான் கிடைக்கும் நேரத்தை ஆக்கிரமிக்கிறது. தினம் ஒரு பதிவெல்லாம் ரொம்பக் காலத்துக்கு முன் எழுதியது... இப்போது கொரோனாவால் திரும்பியிருக்கிறது என்றாலும் என் வலைப்பூவில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறைந்திருக்கிறது என்பதே உண்மை... சிலர் மொய் வைக்கவில்லை என்று நினைத்துப் போய்விட்டாலும் பலர் இன்னும் வாசித்துக் கருத்தும் இடுதல் தொடரத்தான் செய்கிறது... இவர்கள் எல்லாம் மொய்யை விரும்புவதில்லை போலும்... மொய்க்காக எழுதவில்லை எல்லாம் மனசு திருப்திக்குத்தான்... சமீபமாய் எழுத்து சினிமா, புத்தகம் என்பதாய் மட்டுமே நகர்கிறது... கொஞ்சம் வேறு ஏதாவது எழுத வேண்டும்.
எதிர்சேவை குறித்து நண்பர்களின் கருத்துக்கள் ஒருபக்கம் மகிழ்வைக் கொடுத்தாலும் இப்போது சிறுகதைகள் எழுதும் மனநிலை இல்லாமலே இருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நிறையச் சினிமா பார்த்தாச்சு... எல்லாத்துக்கும் எழுதினா நிறையப் பதிவுகள் எழுத வேண்டியிருக்கும். நான் பார்த்த க்ரைம் படங்களைப் பற்றி ஒரு பார்வைதான் இது.
ஹிட் முதல் வழக்கு என்றொரு தெலுங்குப் படம்... ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுவெனச் செல்லும் கதைக்களம்... தனக்கு இருக்கும் நோய்க்கு மருத்துவம் பார்க்க மறுக்கும் காவல் அதிகாரி, காணாமல் போன பெண் தொடர்பான வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்துகிறார்... மருத்துவரும் அவரின் காதலியுமான நாயகியும் கடத்தப்பட, காணாமல் போன பெண் மீதும், அவளின் பெற்றோர் மீதும் சந்தேகம் கொள்கிறார்... அந்தப் பெண் கொல்லப்பட, ஒரு இளம் விதவையின் மீது அவர் சந்தேகப் பார்வை விழ, காவல் நிலையத்தில் அவளிடம் விசாரணை, காதலியைத் தேடுதல் என கதை உசேன் போல்ட் போல ஓடி இறுதியில் முடிவுக்கு வருகிறது... யாருமே எதிர்பார்க்காத ஒரு நபர்தான் இதைச் செய்தார் என்பதையும் அவர் எதற்காகச் செய்தார் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்... நாயகனுக்கு ஒரு முன்கதை... அதை விரிவாகச் சொல்லாதது சற்றே சறுக்கல் என்றாலும் இந்தக் கதையில் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமென நினைத்திருக்கலாம்.
அஞ்சாம் பாதிரா என்னும் மலையாளப்படம்... காவல்துறையில் இருப்பவர்களைக் கடத்தி, அவர்களைக் கொன்று... இதயத்தையும் கண்ணையும் எடுத்துவிட்டு கொண்டு வந்து போடுகிறார்கள்... இதை யார் செய்வது..? எதற்காகச் செய்கிறார்கள்..? என்பதறியாமல் இருபத்தி நாலு மணி நேரமும் வேலை பார்க்கிறது சிறப்புக் காவல்துறை... அவர்களுடன் மனோதத்துவ நிபுணரான நாயகனும் இணைந்து செயல்படுகிறார். அப்படியிருந்தும் எந்தத் துப்பும் கிடைக்கலை... இதற்கென அறிவிக்கப்பட்ட சிறப்புப் படையையும் மேலதிகாரி கலைத்து, வேறொரு நபரின் கையில் வழக்கைக் கொடுத்து விடுகிறார். எதற்காக கொலை செய்கிறார்கள்..? அவர்கள் பிடிபட்டார்களா..? என்பதை ஆரம்பம் முதல் இறுதிவரை கொஞ்சமும் நம்மை நகர விடாமல் அமர வைத்துச் சொல்லி முடிக்கிறார்கள்.
எவரு என்னும் தெலுங்குப் படம்... காவல் அதிகாரியைச் சுட்டுக் கொல்வதில் ஆரம்பிக்கிறது படம். சுட்ட பெண் அவன் தன்னைக் கற்பழிக்க முயன்றதால் கொன்றேன் எனச் சொல்லி, ஜாமீனில் வெளியாகிறாள். அவளிடம் விசாரிப்பதற்காக, அவளுக்கு உதவுபவனாக நாயகன் அவளின் இல்லம் வருகிறான்... விசாரணை தொடர்கிறது... இந்த விசாரணையில் கொல்லப்பட்ட காவல் அதிகாரி, ஒரு டாக்டரைக் கொன்ற கதையும் தெரிய வருகிறது... நூல் பிடித்தாற்போல அடுத்தடுத்து நகரும் கதையில் ஏகப்பட்ட ஷாக் நமக்கு... இறுதியில் எதற்காக இந்தக் கொலை..? டாக்டரைக் கொன்றது காவல் அதிகாரிதானா... என்பதை நாம் எதிர்பார்க்காத விதத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
கண் சிமிட்டும் நேரம் என்னும் தமிழ்ப்படம்... பழைய படம்தான்... கார்த்திக், அம்பிகா நடித்தது. இதில்தான் சரத்குமார் அறிமுகம். அம்பிகாவைக் கொல்ல வரும் கார்த்திக், தவறுதலாக அவரின் அத்தையைக் கொலை செய்து விடுகிறார். அங்கிருந்து தப்பும் போது விபத்துக்குள்ளாகி, பழையதை மறந்து புத்தி சுவாதீனமில்லாதவராகிறார். மருத்துவரான அம்பிகா அவரைப் பார்த்துக் கொள்வதுடன் யாருமற்ற அவரை தன்னுடன் வைத்துப் பழைய நினைவைத் திரும்ப வரவைக்க முயல்கிறார். கார்த்திக்கு பழைய நினைவு வந்ததா..? அம்பிகா என்ன ஆனார்...? என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் கொலை செய்ய வருவதும் இறுதிக் காட்சிகளும் மட்டுமே விறுவிறுப்பு... மற்றபடி சாதாரண மசாலாப் படம்தான். சரத்குமாரின் விசாரணையிலும் விறுவிறுப்பு இல்லை... தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்வதும்... அங்கிருந்து மைசூர் செல்வதும் சரிதான்... அவரே அந்த இடங்களுக்கு காரில் செல்வதெல்லாம்... சரி விடுங்க... வேணுமின்னாப் பார்க்கலாம்... படம் வந்தபோது மிகப்பெரிய வெற்றிப்படம்ன்னு நினைக்கிறேன்.
ஸ்வாதந்திரியம் அர்த்தராத்திரியில் என்னும் மலையாளப்படம்... கொலை வழக்கில் தப்பித் தன் காதலியையும் அழைத்துக் கொண்டு தலைமறைவாக இருக்கும் நாயகன் பிடிபடுகிறான்... நாயகி அடிபட்டு மனநல மருத்துவமனையில் இருக்கிறாள். சிறையில் இருந்து தப்பிப் போக நினைப்பவன், அவனுடன் தங்கியிருக்கும் மற்றவர்களை தன்னுடன் சேர்த்துக் கொள்ள முயல்கிறான்... அதற்கு ஒத்துழைக்காதவர்களை வேறு அறைக்கு மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள், வெளியில் தெரியாமல் கழிவறைக்குள் சுரங்கம் தோண்டும் பணி என விறுவிறுப்பாய் படம் நகர்கிறது. அவர்கள் எப்படித் தப்பித்தார்கள்..? காவல்துறை அவர்களை என்ன செய்தது...? என்பதே கதை. ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஒத்துழைப்பது ஓகே... சாதாரணமாய் வந்தவர்கள் எல்லாம் எதற்குத் தப்பிக்க நினைக்கிறார்கள் என்றோ... இப்படி ஒரு சுரங்கப்பாதை சாத்தியமா என்றோ... ஆமா அந்த கல்,மண்ணெல்லாம் எப்படி மறைத்தார்கள் என்றோ... யோசிக்காமல் பார்த்தால் இதுவும் நல்ல படம்தான்.
அப்பறம் ட்ரான்ஸ்க்கு எழுதணும்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாலும் என்னமோ இன்னும் எழுத முடியாமல்தான் போகிறது. அதற்கு இடையில் தியான்னு ஒரு கன்னடப்படம்... நம்ம 96 மாதிரி மெல்ல நகரும் படம்... நாயகிக்கு இருவேறு காதல்கள்... அதைச் சொன்ன விதம் செம... 96க்கு த்ரிஷா மாதிரி தியாவுக்கு குஷி ரவி... இந்தப் படத்தைப் பற்றி விரிவாத்தான் பேசணும்.. அடுத்த பதிவாய் வரும்ன்னு நம்புவோம்.
-'பரிவை' சே.குமார்.
6 எண்ணங்கள்:
ஹிட், எவரு பார்த்திருக்கிறேன். மற்ற இரண்டு மலையாளப் படங்கள் கிடைத்தால் பார்க்கலாம். பிரைமில் இருக்கிறதா?
எப்போதோ வந்த கன் சிமிட்டும் நேரம் படத்திற்கு இப்போதோ விமர்சனம். கதை மறந்து விட்டது. முடிந்தால் இன்னொருமுறை பார்க்கிறேன். நன்றி.
கண் சிமிட்டும் நேரம் பாத்திருக்கிறேன்...
'ஹிட்' பற்றி கவலைப்பட வேண்டாம்...
குமார் மலையாளப் படங்கள் பார்க்கவில்லை. பாலக்காட்டில் இருந்த சமயம் என்றால் பார்த்திருப்பேன். இங்கு இப்போது வீட்டில் என்பதால் டிவியில் வரும் படங்கள் தான். வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்க வேண்டும்.
துளசிதரன்
எனக்கு க்ரைம் கதைகள் ரொம்பப் பிடிக்கும். சினிமாவிலும் தான். க்ரைம் த்ரில்லர் படங்கள். அதே போன்று நகைச்சுவைப்படங்கள் ரொம்ப பிடிக்கும். நீங்கள் சொல்லியிருக்கும் படங்கள் எல்லாம் நோட் செய்துவிட்டேன். எப்போது பார்ப்பேன் என்று தெரியலை...
கீதா
கீதா
பார்த்த படங்கள் பட்டியல் வியப்பளிக்கிறது. என்னால் நீண்ட சினிமாக்களைப் பார்க்க முடிவதில்லை. கொஞ்சம் நேரத்திலேயே அலுப்பு தட்டி விடுகிறது. சின்னச் சின்னதாய் விளம்பரங்களையும், குறும்படங்களையும் மட்டுமே பார்க்கிறேன் - அதிக பட்சமாக அரை மணி நேரம் மட்டுமே ஓடும் படங்கள். அந்த வகையில் தினம் ஒன்றாவது பார்த்து விடுகிறேன் - ஒரு வாரமாக பார்க்க இயலாத சூழல்.
தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
பல படங்கள் ஒரே பதிவில்
அருமை
கருத்துரையிடுக