ஷார்ஜா உலக புகைப்படக் கண்காட்சி குறித்தான முதல் பதிவு பார்க்க இங்கே சொடுக்குங்கள்.
மதியம் வரை செந்தில்குமரன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அதன் பின் அசோக் அண்ணனின் நண்பர்கள் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு, பேசிக் கொண்டிருந்து விட்டு, கீழிறங்கி நல்லதொரு இஞ்சி டீயைச் சாப்பிட்டு, கொதிக்கும் ஷார்ஜா வெயிலில் மீண்டும் கவிமதி அண்ணனின் காரில் எக்ஸ்போ மையத்தை அடைந்தோம்.
மதியம் இரண்டு மணிக்கே வந்து படங்களைப் பார்த்து ரசித்து மகிழ்வையும் வலியையும் சுமந்து வெளியே வந்த சுபான் அண்ணா வாங்க கிளம்பலாம் என்றபோது எனக்கு காரில் போய்விடலாம் என்று தோன்ற, நெருடாதான் இதைப் பார்க்கத்தானே வந்தோம்... பார்த்துட்டு பஸ்ல போயிக்கலாம் என்று சொன்னார். பார்க்காமல் வந்திருந்தால் ஒரு நல்ல வாய்ப்பை இழந்திருப்போம். காட்சிப் படுத்தப்பட்டிருந்த அத்தனை படங்களும் ஏதோ ஒன்றை நமக்குள் புகுத்தி கண்ணீர், சந்தோஷம், வலி, வேதனை, கோபம், வருத்தம் என மாற்றி மாற்றி மனசுக்குள் சுழல விட்டுக் கொண்டேயிருந்தன.
பதிவு செய்து உள்நுழைந்து படங்களைப் பார்க்க ஆரம்பித்தோம்... ஒவ்வொருவரின் படங்களும் தனித்தனியாய் பிரிக்கப்பட்டு, அவற்றிற்கு பொதுவான ஒரு பெயர் கொடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருந்தன. சில அரங்குகளில் படம் எடுத்த புகைப்படக் கலைஞர்களும் இருந்தார்கள். அவர்களுடன் கொஞ்ச நேரம் பேச முடிந்தது... கிடைத்தற்கரிய நிகழ்வு... மகிழ்வான தருணங்களை மனசுக்குக் கொடுத்த சந்திப்பு.
எண்ணற்ற படங்கள்... பலரின் எண்ணங்கள் அங்கே வண்ணங்களாய்... குழந்தைகள், முதியவர்கள், விலங்குகள், கடல், காற்று, பூமி, ஆகாயம், போர், படுகொலைகள், போருக்குப் பின்னான வலி சுமந்த முகங்கள், அகதிகளின் துயரம், தாக்கப்பட்ட விலங்குகள், போதை, வாழ்க்கை, பிரிவு, மகிழ்ச்சி என எத்தனை எத்தனை கதைகளை, காலங்களைச் சுமந்து சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தன உலகளாவிய புகைப்படக் கலைஞர்களின் படங்கள்.
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைச் சுவர்கள்... பல இடங்களில் வீடுகளுக்கு இடையே எல்லைச் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. ஒரு படத்தில் ஒரு பக்கம் ஒரு மூதாட்டி துணி காயப் போட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ஒரு பெரியவர் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இரண்டும் வெவ்வேறு நாடுகள். பிரிவுக்கு முன் ஒருவரும் நண்பர்களாய் இருந்திருக்கலாம்... உறவினராய் இருந்திருக்கலாம்... காதலர்களாகக் கூட இருந்திருக்கலாம்... ஆனால் இப்போது அவர்களுக்கு இடையே மிகப்பெரிய சுவர் நின்று கொண்டிருக்கிறது.
இதுபோல் எங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உருவாட்டி என்னும் ஊர் பாதி சிவகங்கையிலும் பாதி இராமநாதபுரத்திலும் இருக்கும். கல்லூரியில் படிக்கையில் நண்பன் வீட்டுக்குச் சென்றபோது அவன் வீடு இருப்பது சிவகங்கை மாவட்ட எல்கைக்குள்... காளையார்கோவிலுக்கு அருகில் இருக்கும் ஊர் என்பதால் சிவகங்கை பக்கமே. ஆட்சியர் அலுவலகம் செல்வதென்பது எளிது. அவன் வீட்டுக்கு எதிர்வீடு இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் செல்வதென்பது ஒரு நீண்ட பயணத்தினால் மட்டுமே சாத்தியமாகும். எல்கை பிரித்தல் என்பது பல இடங்களில் மக்களின் மனங்களைப் பிரிக்கும் செயலாய் அமைவது வேதனையே.
சௌதிப் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்... இதை விடுத்து இப்படி இருந்தால் அது தவறு என்ற பார்வைதான் நம் எல்லாருக்குள்ளும் இருக்கு... ஆனால் இங்கே ஒருவர் அந்தப் பெண்களின் மற்றொரு பரிமாணத்தை மிக அழகான படங்களின் வாயிலாக எடுத்துச் சொல்லியிருந்தார். அடிமை வாழ்வென்பது எல்லா மதத்திலுமே உண்டு என்றாலும் இப்போது பெண்கள் அவற்றை உடைத்து சுதந்திர வாழ்க்கையை சுவாசிக்கிறார்கள்.
இந்தப் படங்களை எடுத்த புகைப்படக் கலைஞருடன் சிறிது நேரம் பேசும் போது அவரும் இவர்கள் இப்படித்தான் என்பதை உடைக்கும் விதமாக இவர்கள் இப்படியும் வாழ்கிறார்கள் என்பதைக் காட்டவே எடுத்த படங்கள் இவை என்றார். மேலும் இது மாதிரியான படங்களை மீடியாக்கள் கண்டு கொள்வதில்லை... ஆனால் பார்க்க வரும் மக்களுக்கு நிறையவே பிடித்திருக்கிறது. அது போதும் எனக்கு என்றார்.
இந்தப் படங்களைப் பார்க்கும் போது முகம் தெரியணும்... கை தெரியணும்... கால் தெரியணும்... இதுதான் புர்கா போடும் பெண்களுக்கு உள்ள கட்டுப்பாடு... அதைத்தான் இந்த உடைகளும் காட்டுகின்றன... ஆனாலும் இந்த உடைகளை நம்ம ஊரில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்... இதைச் சொன்னா நாம் இஸ்லாத்திற்கு எதிராகப் பேசுகிறோம் எனக் கொடி பிடிப்பார்கள் என்றார் இஸ்லாமியரான கவிமதி அண்ணன். என் மதமே பெரிது... அதுதான் எல்லாத்துக்கும் முதலானது என மதத்தைத் தூக்கிப் பிடிக்கும் மனிதர்கள் மத்தியில் இது சரி... இது தவறெனச் சொல்ல எல்லாருக்கும் மனம் வருவதில்லையே.
அப்படியே காட்டு விலங்குகள், பனிக்கரடிகள், திமிங்கிலங்கள், குழந்தைகள் எனப் படங்களைப் பார்த்தபடி நகர்ந்தோம். தந்தத்துக்காக கொல்லப்படும் யானைகளின் படங்களைப் பார்த்த போது கண்கள் கலங்கின. எத்தனை கொடுமைகள்... பாதிக்கப்பட்ட யானைகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் முதலுதவி செய்யும் வனவிலங்கு காப்பாளர்கள் ஒருபுறமும்... விலங்குகளைச் சுட்டும் வெட்டியும் கொல்லும் காட்டுவாசி மனிதர்கள் ஒருபுறமுமாக படங்கள் சுவற்றில் இருந்தன... அவை நம்மைச் சுழற்றி அடித்தன.
இந்த இடத்தில் கருப்பர்களை வைத்து இவர்கள் பணம் பண்ணுகிறார்கள்... ஆனால் அவர்களுக்கு இவர்கள் என்ன செய்துவிட்டார்கள்..? இங்கே யானைத் தந்தத்தை வெட்டுபவன் யாருக்காக வெட்டுகிறான்..? எதற்காக வெட்டுகிறான்..? இவனைக் காட்சிப்படுத்த முடிந்த நம்மால் ஏன் இவர்களை ஏவியவனைக் காட்சிப்படுத்த முடியவில்லை...? பார்ப்பவர் மனதில் இவன் தப்பானவன்... அப்ப இந்தத் தப்பைச் செய்யத் தூண்டியவன் நல்லவனாகிறான் இல்லையா...? எனக் கேட்டதுடன் பல விபரங்களைச் சொன்னார் அசோக் அண்ணன்.
ஒரு போட்டோவில் வெட்டப்பட்ட யானைத் தந்தங்களின் குவியல்... அதில் ஒவ்வொரு தந்தத்திலும் எடுத்த தேதி, எடை உள்ளிட்ட குறிப்புக்கள். 13.5 கிலோ, 9 கிலோ அளவில் எல்லாம் தந்தங்கள்... வெட்டபட்ட தந்தம் ரத்தத்துடன் கிடக்கும் காட்சி... தந்தம் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட யானை என வலி நிறைந்த படங்கள். அப்போது அங்கு சுத்தம் செய்யும் பணியில் இருந்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நண்பர் தமிழ்க்குரலைக் கேட்டதும் நீங்க தமிழா..? என வந்து பேசி மகிழ்ந்தார். சிலரிடம் நீங்க தமிழான்னு கேட்டா அழகான ஆங்கிலத்தில் பேசுவார்கள்... இந்த மொழி கொடுத்த அன்பில் அவருக்கு எங்களுடன் சில நிமிடங்கள் பேசியதில் மகிழ்ச்சி.
குண்டடி பட்டு இறந்த ராணுவ வீரர்கள்... அமீரகப் படங்கள்... போரும் அதன் இழப்புக்களும்... புலிகள்... ரோட்டோர மக்கள்... சலூனில் முடிவெட்டிக் கொள்ளும் இளம்பெண்... ஓவியத்தையும் போட்டோவையும் இணைத்து எடுக்கப்பட்ட படங்கள்... குருவிகள்... புல்வெளிகள்... பாலஸ்தீனில் இடிந்து சாய்ந்து கிடக்கும் மசூதி முன் தொழுகை... வயதான மூதாட்டியின் முகவரி சொல்லும் வலிகள்... பிலிப்பைனில் போதைக்கான கொலைகள்... நூர்ஜகானின் கல்லறை... தெருவோரக் காட்சிகள்... நீண்ட பயணங்கள்... பாலையும் ஒட்டகங்களும்... அழகிய பெண்கள்... நீருக்குள் இருக்கும் எழுத்தாளன்... தொழுபவர்களின் ஊடே தன் கடவுளைக் கும்பிடும் புத்தமதத்தினன்... எனப் படங்களைப் பார்த்துக் கொண்டே நகர்ந்தோம்.
கறுப்பு உடையில் அரபிப் பெண்களின் படங்கள்... அந்தப் படங்களுக்கு இடையே வேறொரு கலரின் உடையணிந்த பெண்ணோ... குழந்தைகளோ சிரித்துக் கொண்டிருந்தார்கள்.. அரபி ஆண்களுக்கு வெள்ளுடையும் பெண்களுக்கு கறுப்பு உடையும் என முடிவு செய்தது யார்..? ஏன்...? ஏன் வெள்ளை பெண்களுக்குக் கொடுக்கப்படவில்லை..? கறுப்பு வெப்பத்தை உள் வாங்கிக் கொள்ளும் நிறம்... வெள்ளை வெப்பத்தை திருப்பிப் பிரதிபலிக்கும் நிறம்... என விவரித்து இதற்கான காரணம் என்ன என்பதையும் விவரமாகச் சொன்னார் கவிமதி அண்ணன்.
தங்கச் சுரகத்தில் வதைபடும் சிறுவர்களின் படங்களும்... அவர்கள் தங்கம் எடுக்க ஆபத்தான சுரங்கத்துக்குள் இறங்கும் படங்களும்... இறந்தவர்களை அங்கயே புதைத்து ஒரு கல்லோ அல்லது சிலுவையோ வைத்துச் சென்றிருக்கும் படங்களும் மனதைப் பிழிந்தன. ஒரு மனிதனின் புதைகுழியின் மீது ஊன்றப்பட்டிருந்த சிலுவையில் 'Remember Me' என சிவப்புக் கலரின் எழுதப்பட்டிருந்தது. யார் நினைவில் அவர் நிற்பார்..?
படங்களைக் கடந்து சென்ற எங்களைக் கடந்து போக விடாமல் நிறுத்தினாள் ஈராக் போரில் தன் உறவுகள், உடமைகள் எல்லாம் இழந்து தவித்து நிற்கும் அந்தச் சிறுமி, இனி இழப்பதற்கு உயிரைத் தவிர ஒன்றுமே இல்லை என்ற நிலையில் கண்ணீர் நிறைந்து நிற்கும் கண்களுடன் முகமெல்லாம் ரத்தத் திட்டுக்களுடன் உதட்டில் புன்னகை சுமந்து நிற்கும் படம் வலியை விட, இந்த யுத்தங்கள் எல்லாம் எதற்காக... உயிர்களைக் கொன்று புதைத்து அதில் சாம்ராஜ்யம் அமைந்து வாழ்ந்து எதைக் கொண்டு போகப்போகிறோம்..? அப்படியென்ன பகை வேண்டிக் கிடக்கிறது மனித மனத்துக்குள் என்ற நினைவு வர, கண்ணீர்தான் அச்சிறுமிக்காக வெளியேறியது.
இந்தப் படத்தை எடுத்த மனிதர் அங்குதான் இருந்தார்... அவரிடம் பேச முடியாவிட்டாலும் இந்த வலியை உலகறியச் செய்த அந்தக் கரங்களைப் பற்றிக் கொள்ளவாவது செய்வோமென சிறிது நேரம் காத்திருந்து அவருடன் பேசி, அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை... எங்களுக்கு அரபி தெரியாது... உணர்வுகள் மட்டுமே கண்கள் வழியும்... கைகளின் வழியும்...
எங்களுடன் பேசஆங்கிலம் தெரிந்த நபரை அழைத்தார். பேச வேண்டியதை இறுகப் பற்றிய கைகள் பேசிவிட்டன... இனி என்ன வேண்டும்... இந்தியாவா என்றார்... எனக்கு இந்தியாவையும் இந்தியர்களையும் ரொம்பப் பிடிக்கும் என்றார். எங்களுக்கு அவரை ரொம்பப் பிடித்தது. பாசாங்கில்லாத மனிதர்கள் எப்போதும் எனக்குள் ஒட்டிக் கொண்டு விடுவார்கள். அந்த பெயர் தெரியாத மனிதரும் அப்படியே.
எல்லாரையும் கவர்ந்த அந்தச் சிறுமியின் புகைப்படம் சிறியதாகத்தான் இருந்தது.... வலியைக் கடத்த இதுவே போதும்... இதற்கு மேல் பெரிதாக்கி அந்த சிரிப்பில் வழியும் வேதனையையும் வலியையும் சரிவர பார்வையாளனுக்குக் கடத்த முடியாது என நினைத்திருக்கலாம்.... வலிகளைச் சுமந்த கவிதை அவள்.
நம்ம வீட்டுச் சுவற்றில் கல்லோ, பந்தோ வந்து விழுந்தாலே எகிறும் நாம்... தன் வீட்டுச் சுவரையெல்லாம் குண்டுகள் துளைத்தெடுத்த நிலையில் சன்னல் வழி வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மூதாட்டியின் படம் நமக்குச் சொல்வதென்ன...?
கடந்து சென்ற படங்களிடையே மறுபடியும் தேருக்கு கட்டை கொடுத்தது போல் எங்களை இழுத்து நிறுத்தியது இறந்தவர்களின் உடல்களுக்கு உடையணிவித்து சந்தோஷமாக கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் சகோதரர்களின் படம். இந்தோனேசியாவில் டோரோஜா என்னும் பகுதியில் வாழும் மக்கள் இறந்த தங்களின் மூதாதையர்களின் புதைக்கப்பட்ட உடலை வருடம் ஒருமுறை வெளியில் எடுத்து உடைகளைப் போட்டு தங்கள் வாரிசுகளுக்கு இவர்தான் உன் தாத்தா, அப்பா எனக் காட்டி மகிழ்வார்களாம். இதற்காகவே உடல்களைப் புதைக்கும் போது கெடாமலிருக்க சில வேதிப்பொருட்களைச் சேர்ப்பார்களாம். இந்தப் புகைப்படத்தில் அவர்களின் முகத்தில் எத்தனை சந்தோஷம் பாருங்க... சவப்பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட இருவருடன் எடுக்கப்படாமல் ஒருவர் படுத்திருக்கிறார் பாருங்கள்...
லிபியப் புரட்சியை தன் செல்போனில் படம் பிடித்திருக்கிறார் மைக்கேல் கிறிஸ்டோபர் ப்ரௌன் என்னும் எழுத்தாளர்.... ஒரு வருடம் அந்தப் பகுதியில் பயணப்பட்டு 'libian Sugar' என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற படங்கள் நம்ம் வீட்டில் இருக்கும் போட்டோக்களைப் போல் சிறிய சிறிய ப்ரேமுக்குள் பல விதமான வலிகளைப் பதிவு செய்திருந்தன. அவர் எழுதிய குறிப்புக்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் படங்களை கண்டிப்பாக பாருங்கள் எனச் சொன்னவர் செந்தில் குமரன்.
ஆம்... அவருக்கான அவசர வேலைகள் இருந்த போதும் எங்களைச் சந்தித்ததும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். செத்தவர்களுக்குச் சடங்கு செய்யும் இந்தோனேசிய படங்கள் குறித்த விபரங்கள் இணையத்தில் நிறைய இருக்கு... பாருங்கள் என்றார். லிபியப் புரட்சி பற்றிய படங்களைப் பாருங்கள் என்றார். இன்னும் நிறையப் பேசினார்... மாடர்ன் ஆர்ட் படங்களை நாங்கள் சிலாகிப்பதில்லை என்றும் சொன்னார். சாதாரண போட்டோக்களைவிட விலங்குகளின் வாழ்க்கையை, போரின் வலியைச் சொல்லும் படங்களைச் சிலாகிப்பவர்களால் வண்ணங்களைக் கலந்து கொடுக்கும் படங்களைச் சிலாகிக்க முடியாதுதான். வேலை நிறைய இருக்கு... அடுத்த முறை வரும் போது சந்தித்து நிறையப் பேசலாம் எனச் சொல்லி விடைபெற, நாங்கள் படங்களை ரசித்தபடி நடந்தோம்.
யானைகள்... கறுப்பினப் பெண்கள்... சிறுத்தைகள்...கைகள் போல் வெட்டப்பட்ட படங்கள் எனப் பார்த்துக் கொண்டே நகர்ந்தோம். தமிழ் கொடுத்த சந்திப்பாய்... தமிழா... நம்மாட்களைப் பார்த்தால் மனசுக்கு ஒரு சந்தோஷம் என எங்களிடம் தானாக வந்து பேச ஆரம்பித்தார் ஷார்ஜாவில் பணிபுரியும் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் கணேஷ். நீண்ட நேர உரையாடல்... செல்போன் நம்பர் பரிமாற்றம் எனக் கடந்து மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்.
பாகிஸ்தான் இராணுவ வீராங்கனை காத்திருக்கும் போட்டோ... தீவிரவாதத் தொடர்பினால் போலீஸால் கைது செய்யப்பட்டு, மனைவி மற்றும் குழந்தையிடம் இறுதியாக காட்டப்படும் காட்சி,.. கோவில் முன் படுத்திருக்கும் மனிதன்... மகிழ்வாய்க் குளிக்கும் குழந்தைகள்... அம்மாவின் உடைக்குள் முகம் புதைத்து நிற்கும் குழந்தை... பாலத்தின் மேலும் கீழுமான பார்வை... கண்ணாடியை தூக்கிச் செல்லும் மனிதர்கள்... இப்படியாக நிறையப் பார்த்தோம் நிறைவாய்ப் பார்த்தோம்.
பனிரெண்டடி நீளமுள்ள தந்தத்தைப் பெற்ற யானைகளைப் பார்க்கும் போது அவை உணவு உட்கொள்ளத் தந்தங்களே பிரச்சினையாக இருக்கும் என்பது தெரிந்தது. அதனாலேயே உடலில் புஷ்டி இல்லாமல் தளர்வாய் இருந்தன... ஒரிடத்தில் தண்ணீர் குடிக்கும் வரிக்குதிரை, காட்டெருமை. யானை, காண்டாமிருகம் என ஒரு பெருங்கூட்டத்தை மிகப்பெரிய ப்ரேமுக்குள் வைத்திருந்தார்கள். எல்லாம் ரசித்து அன்னையின் பிடியில் இருந்து ஓடிச் சிரித்த மலையாளிக் குழந்தையை ரசித்து.... அந்த அரங்கை தன் இசையால் நிரப்பிக் கொண்டிருந்த பெண்ணின் இசை கேட்டு வெளியேறிய போது மணி ஒன்பதுக்கு மேலாகியிருந்தது.
கிட்டதட்ட மூன்று மணி நேரங்களுக்கு மேல் நடந்து படங்களை ரசித்தும் ஒரு முழு நாள் தேவை என்பதை உணர்ந்தோம் என்றாலும் பார்த்தவரை படங்கள் உணர்வுக்கு மிக நெருக்கமாய் இருந்தன. காலையில் செந்தில்குமரனைச் சந்தித்தபோது வெறுமை சுமந்திருந்த எக்ஸ்போ மையத்துக்கு எதிரே இருந்த வாகன நிறுத்துமிடம் மாலையில் நிரம்பி வழிந்தது... போட்டோக்களைப் பார்க்க வருவார்களா என்ற யோசனையை தூக்கி வீசியது காருக்காக இடம் தேடி அலைந்த நொடிகள்.
இரவு உணவு முடித்து எங்களைப் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு அசோக் அண்ணனும் கவிமதி அண்ணனும் கிளம்பினார்கள். எங்களுக்காக, எங்களுடன் ஒரு நாள் முழுவதும் இருவரும் அலைந்து திரிந்து அன்பாய் பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்றது மறக்க முடியாத ஒன்று.
செந்தில்குமரன் அவர்கள் எடுத்த யானையின் படம் கண்காட்சியில் இருந்தது. மீண்டும் ஒருமுறை நானே பெரியவன் என்ற மமதையில்லாமல் எங்களுடன் குடும்பம் முதல் வனத்துக்குள் சென்று வருவது வரை சிரிப்போடும் மகிழ்வோடும் பேசிய செந்தில்குமரன் அவர்களுக்கு நன்றி.
(கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த திரு. செந்தில் குமரன் அவர்களின் போட்டோ) |
இரவு 1.30 மணிக்கு அறையை அடைந்தோம்.. பேருந்தில் வரும்போது நல்ல தூக்கம்... அறைக்கு வந்த பின் நான்கு மணி வரை உறக்கமில்லை... கண்களில் கண்ணீரும் உதட்டில் புன்னகையும் கன்னத்தில் ரத்தக்கறையுமாக அந்தச் சிறுமி, இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என் உயிரைத் தவிர எனச் சொல்லிய சிறுமி 'இந்தப் போர்களுக்கு மரணமெப்போது..?' என்றாள்.
படங்கள் செல்போன் மற்றும் சுபான் அண்ணனின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
-'பரிவை' சே.குமார்.
8 எண்ணங்கள்:
அந்தச் சிறுமியின் படம் மனதில் தங்குகிறது. பேசும் விழிகள்.. இறந்தவர்களை எடுத்து புகைப்படம் எடுப்பது புகைப்படம் ஷேர் பண்ண மறந்து விட்டீர்களோ...
இருக்கே அண்ணா... இரண்டாவது புகைப்படம்...
ஓ... ஆமாம். பார்த்தேன். இதை அதனுடன் இணைக்காமல் போனேன். ஆனால் பயங்கரம்.. இல்லை?
ஒவ்வொரு படமும் ஓராயிரம் கதை சொல்லுது அண்ணா...
இது குறித்து நிறைய செய்திகள் இணையத்தில் இருக்காம்... பார்க்கணும்...
எத்தகைய அனுபவம் ...படிக்கவே மெய் சிலிர்க்கிறது...
ஒவ்வொரு படமும் அற்புதம் ...
சிறுமியின் படம் ...என்றும் மனதை விட்டு அகலாது
ஒவ்வொரு படமும் உணர்ச்சிக்குவியலாய்..ஓராயிரம் கதைகள் சொல்கின்றன. இறந்தவர்களுடன் புகைப்படம் அதில்தான் எவ்வளவு மகிழ்ச்சி! கண்காட்சியின் ஒரு பகுதியைப் பகிர்ந்ததற்கு நன்றி சகோ.
கதை சொல்லும் படங்கள்... இப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.
சிறுமியின் படம்... மனதைத் தொட்ட படம்...
கருத்துரையிடுக