நேர் கொண்ட பார்வை... இது அஜீத்தின் அதிரடி பட வரிசையில் மாஸ் ஹீரோ படமாக வராமல் மக்கள் மனம் கவரும் படமாக வந்திருக்கிறது. கதையே இல்லாமல் அஜீத் என்ற பிம்பத்தை மட்டுமே வைத்து மாஸ் காட்டி எடுக்கப்பட்ட படங்களை விட கதையை மட்டுமே நம்பி அஜீத்தைக் கூட ஒரு கௌரவ நடிகரைப் போல் பாவித்திருக்கும் இப்படம் சொல்லும் கருத்துக்காக எல்லாராலும் பாராட்டப்படும்.
காமம் என்பது ஆண் பெண் இருவருக்குமானது... இந்த விஷயத்தில் நம் சமூகம் ஆண்களைச் சார்ந்தே கட்டமைத்து வைத்திருக்கிறது. பெண் என்பவள் இதில் விரும்பி முடிவெடுப்பது என்பதெல்லாம் கதைகளிலும் சினிமாக்களிலும் மட்டுமே காட்டப்படலாமே ஒழிய, வாழ்க்கையில் அவளின் விருப்பு வெறுப்புக்கு எல்லாம் இடம் கொடுப்பதில்லை. ஆணின் ஆசைக்கு மட்டுமே பெண்... இந்த விஷயத்தில் அவள் தன் ஆசையைச் சொன்னால் அவளை விசித்திரமாக சமூகம் மட்டுமில்லை கட்டியவனும் பார்க்கத்தான் செய்வான். பெண் இந்த விஷயத்தில் 'நோ' என மறுத்தால் 'நோ'தான்... அதற்கு மேல் அவளைத் துன்புறுத்தக் கூடாது. அந்தப் பெண் காதலியாக இருக்கலாம்... சக தோழியாக இருக்கலாம்... மனைவியாக இருக்கலாம்... பாலியல் தொழிலாளியாக இருக்கலாம்... இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்... அவள் மனமிசைந்து இணங்காமல் 'நோ' என்று சொன்னபின் அவளைத் துன்புறுத்த நீயார்..? என்ற கேள்வியை முன் வைக்கும் படம்தான் இது.
இந்தியில் அமிதாப் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பிங்க்' படத்தின் தழுவல். அமிதாப் சினிமாவில் இருந்து அவ்வப்போது நல்ல படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருவதில் வந்ததுதான் இந்தப் 'பிங்க்'. இதை சினிமா உலகில் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராய் இருக்கும் அஜீத் தமிழில் நடிக்க ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம்தான். தமிழுக்காய் சில மாற்றங்களுடந்தான் இந்தப் படம் வந்திருக்கிறது. அப்படியே வரவில்லை என்று சொல்வதெல்லாம் அபத்தம்... இதே பிங்க் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட போது மூன்று நாட்கள் கூட தியேட்டரில் நிற்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்தல் நல்லது.
இன்று பெண்கள் நிறைய மாறியிருக்கிறார்கள்... ஆணுக்குப் பெண் சமம் என்பதை சிகரெட், போதை, காமம் என எல்லாவற்றிலும் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். என் உரிமை நான் இதைச் செய்கிறேன் என்பதாய் வெளிப்படையாகச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் காதல், போதை, கலவி என எல்லாவற்றிலும் கை தேர்ந்து வருகிறார்கள். இவர்களின் ஆட்டமெல்லாம் இணையத்தில் விரவிக் கிடக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் கதையைப் பார்த்து தமிழகத்தில் இப்படியெல்லாம் இல்லை... இதை பெண்கள் எதிர்ப்பார்கள் என்றெல்லாம் பலர் எழுதுவதுதான் சிரிப்பாக இருக்கிறது.
மூன்று மாடர்ன் பெண்கள்... ஷ்ரத்தா, அபிராமி மற்றும் ஆன்ட்ரியா ஜாலியாய் பப்புக்குப் போய் ஆட்டம் போடுவது ஆண் நண்பர்களுடன் சுற்றுவது என வாழ்கிறார்கள். இவர்களின் இந்த மாடர்ன் வாழ்க்கைக்கு தனியாய் தங்கியிருப்பது ரொம்ப வசதியாய் இருக்கிறது. அப்படிப் போகும் போது போதைக்குப் பின் காமத்தைத் தேடும் அரசியல் புள்ளியின் மாப்பிள்ளையுடன் ஏற்படும் மோதலில் பீர்ப்பாட்டிலால் அவனின் தலையில் அடித்து விடுகிறாள் ஷ்ரத்தா. இதுதான் கதையின் ஆரம்பப்புள்ளி... இதிலிருந்துதான் விரிகிறது கதை.
இவர்கள் மூவரையும் பலி வாங்க வீட்டு ஓனரை மிரட்டி வீட்டை விட்டு காலி பண்ண வைக்க முயல்கிறார்கள்... அரசியல் பலத்தால் விபச்சாரிகள் பட்டம் கட்டி ஷ்ரத்தாவை சிறையில் தள்ளுகிறார்கள். அதன்பின் இந்தப் பிரச்சினை நீதிமன்றம் போகும் போது காசுக்காக உடம்பை விற்கும் மாடர்ன் பெண்கள் இவர்கள் என்று நிரூபித்து, அவர்களைத் தவறான நோக்கத்தில் அணுகிய தாங்கள் ஸ்ரீராமர்கள் என்பதாய் இந்த வழக்கை முடிக்க நினைக்கிறார்கள். இதற்காக கீழிருந்து மேல்மட்டம் வரை பணத்தால் அடிக்கிறார்கள். இந்தச் சமூகத்தில் பணமிருப்பவனிடம் பலவீனமானவன் மோதினால் என்னாவானோ அதைத்தான் இந்தப் பெண்கள் மீது திணிக்க முயல்கிறார்கள்... அதில் சமூகமும் அடக்கம்.
பொது நல வழக்குகளை வாதாடும் வக்கீல் பரத், கர்ப்பிணியான மனைவியை விட தான் கொண்ட தொழிலே முக்கியம் எனப் போய் மனைவியையும் இரட்டைக் குழந்தையையும் இழந்து அந்த வேதனையில் மனநோயாளியாக, தன்நிலை மறப்பவராக பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர் வீட்டில் வாழ்கிறார். சிகிச்சையில் இருக்கும் அவருக்குத் துணையாய் ஒரு முதியவரும். இவர்களின் நிலைகண்டு இவர்களுக்காய் வாதாட வருகிறார். அதன் பிறகு தன்நிலை மறப்பவராக இருந்த போதும் அந்தப் பெண்களுக்காக தன் வாதத்தை மெல்ல... மெல்ல எடுத்து வைத்து ஒரு கட்டத்தில் ஆக்ரோசமாகப் பேசி... பெண்களைப் பாதுக்காக்க இதெல்லாம் அவசியம் என்பதையும் 'நோ' என்பது எப்படிச் சொன்னாலும் 'நோ'தான்... அதற்கு வேறு அர்த்தமெல்லாம் இல்லை என்பதையும் எல்லாருக்கும் பதியும் விதமாய்ச் சொல்கிறார். அவர்களின் மன உளைச்சலுக்கு... இந்தச் சமூகத்தின் பார்வைக்கு... அரசியல் பலத்தால் அழிக்க நினைப்பவர்களுக்கு... என எல்லாத்துக்கும் தக்க பதிலைத் தருகிறார். ரொம்பவும் அமைதியான மனிதராய், அதே நேரம் கோபக்காரன் பரத்தாய்... மங்காத்தா, விஸ்வாசம், விவேகமென அதிரடியாய்ப் பார்த்த அஜித். தன் படப் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படத்தில் நடித்ததற்கே பாராட்டலாம்.
ஒரு பத்திரிக்கையில் விமர்சனமாய் 23 வருசத்துக்கு முன் அஜித் நடித்த காதல் கோட்டை படத்தில் தெருவில் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து ஆட்டோ ஓட்டுபவர் நாய்க்காதல் என்று சொல்லும் வசனம் வரும். அந்தப்படம் அவரை எல்லாவிதமான ரசிகர்களிடமும் கொண்டு சென்றது அவர் நடிக்கலாமா என்று எழுதியிருந்தார்கள். இன்றைய நிலையில் மாற்றங்கள் வரவில்லையா..? 23 வருசத்துக்கு முன்னிருந்த மாதிரித்தான் இப்பவும் சமூகம் இருக்கிறதா...? கள்ளக்காதலுக்காக கணவனை, குழந்தைகளைக் கொல்லும் பெண்களின் வீடியோக்கள் தினம் தினம் வந்து குவிகிறதோ... சரக்குப் பாட்டிலுடன் போட்டோ எடுத்துத் தைரியமாக பதிவிடும் போது இப்படியான கதைக்களத்தில் படம் வருவதும் அதில் ஒரு நடிகர் நடிப்பதும் தவறென்று சொல்வதுதான் நகைப்புக்குரியது.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்னே சென்னையில் இருக்கும் போது நண்பர்களுடன் மகாபலிபுரம் ரோட்டில் பயணித்து ரிசார்ட்டுகள் அடங்கிய ஒரு இடத்தில் கடற்கரையை ஒட்டிய தோட்டத்தினருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது சற்று தள்ளி ஒரு காரில் நாற்பதை நெருங்கும் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். சிகரெட் ஒன்று ஐவரின் கைக்கும் மாறி மாறிப் பயணித்தது. கூடவே பீர் பாட்டிலும்... இடையே சில முத்தங்களும்... இதெல்லாம் வெட்டவெளியில் பகலில்தான் அரங்கேறிக் கொண்டிருந்தது. இப்போது இணையம் கொடுக்கும் பல விதமான விசயங்கள் இன்னும் முன்னேற்றத்தைத்தான் கொடுத்திருக்கிறதே ஒழிய கலாச்சாரம் இன்னும் காவல் தெய்வங்களால் அப்படியே காப்பாற்றப்பட்டு வருகிறது. அதை இந்தப்படம் கெடுத்துவிடும் என்றெல்லாம் சொல்லுதல் அபத்தமானது.
ஷ்ரத்தாவிடம்'நீ வெர்ஜினா..?' அப்படின்னு அஜீத் கேட்கும் இடத்தில் 'இல்லை' என்பதாய் தலையாட்டுவார். தலையாட்டாதே ஆமாவா இல்லையான்னு சத்தமாச் சொல்லு என்பார். உடனே பத்தொன்பது வயதில் தன் ஆண் நண்பனுடன் உறவு வைத்துக் கொண்டதைச் சொல்வார். அதன் பின் அவனுடன் மட்டும்தானா என்பதையும் மறுத்து இன்னும் சிலருடன் என்றும் சொல்வார். அப்படிப்பட்ட நீ ஏன் இவனை மட்டும் தலையில் அடித்தாய் என்பதாய் கேள்வி எழும் போது நான் வேண்டாமெனக் கெஞ்சியும் இவன் என்னைத் துன்புறுத்தினான் அதனால் அடித்தேன் என்பார். விருப்பப்பட்டு ஒருவருடன் உறவு வைத்துக் கொள்ள் என்பது ஆணைப் போல் பெண்ணுக்கும் உரிமையிருக்கிறது. ஆனால் விரும்பமில்லாத பட்சத்தில் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உச்சபட்ச அழுத்தத்தில் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்பதே வாதமாய் நிறுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இவள் எல்லாம் பெண்ணா என தமிழ்சமூகம் காறி உழிழும் என்றும்... இவள் மீது பரிதாபம் வருவதற்குப் பதில் அருவெறுப்புடன் இப்படிப்பட்ட பெண்ணுக்காக வரிந்துகட்டும் சினிமாவை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுவது ஏனோ...?
இப்படித்தான் பாதிக்கப்பட்ட பல பெண்கள்... வெளியில் சொன்னால் நம் மீது பலி போடுவார்கள்... நம்மை வித்தியாசமாய்ப் பார்ப்பார்கள் என பல பெண்கள் மனசுக்குள் போட்டு வைத்து உக்கி உக்கி வாழ்வைத் தொலைக்கிறார்கள். சிலர் வாழவே விருப்பமின்றி வாழ்வை முடிக்கிறார்கள். பெண்கள் வெளியில் சொல்லாமல் மறைத்து வைப்பதாலேயே ஆண்களின் ஆட்டம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது. சில வருடங்களாகவே எத்தனையோ பெண்களை புரட்டிப் போட்ட பொள்ளாச்சி விவகாரம் ஒரு பெண் முன் வந்து சொன்ன பின்தான் வெளியில் தெரிய ஆரம்பித்தது. அந்த விவகாரத்தில் அரசு, காவல்துறை, பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் என எல்லாமே பாதிக்கப்பட்ட பெண்களைவிட முக்கியப்புள்ளிகளைக் காப்பதில்தானே முனைப்பாய் இருந்தது. வீடியோக்களைப் போட்டு தங்களின் வருவாயைப் பெருக்குவதில்தான் குறியாய் இருந்தார்கள். இப்போது பொள்ளாச்சி விவகாரம் என்னாச்சு..?
ஷ்ரத்தா செய்தது சரியா..? தவறா..? என்பதெல்லாம் விடுத்து இது போன்ற பிரச்சினைகளை எல்லாம் மக்களிடம் எளிதாய்க் கொண்டு செல்லும் சினிமாக்களை எடுக்க வேண்டும். அஜீத் என்னும் நடிகரின் ரசிகர்கள் மட்டுமே பார்க்கும் படமில்லை இது. ஆண்களும் பெண்களும் குறிப்பாய் இளம் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
படத்தில் வசனங்கள் அருமை... பிங்கில் வசனம் இன்னும் அருமை என்றார்கள்.. நல்லவேளை நான் 'பிங்க்' படம் பார்க்கவில்லை எனவே இந்தப் படத்தின் வசனங்கள் எனக்கு ரொம்பப் பிடித்தது.
இறுதிக் காட்சியில் அந்தப் பெண்களுக்கு விடுதலையும் அவர்களை விபசாரிகளாய் முன்னிறுத்த முயன்ற இளைஞர் கூட்டத்துக்குத் தண்டனையும் வாங்கிக் கொடுத்துவிட்டு, எதுவுமே நடவாதது போல் வெளியில் வரும் அஜீத்தை பெண் போலீஸ் கான்ஸ்டபிள் கை கொடுத்துப் பாராட்டுவது போல் முடித்திருப்பதில் இயக்குநரின் 'டச்'சும் பெண்களைக் கவர்வதற்கான முயற்சியும் தெரிகிறது.
இதெல்லாம் ஒரு படமா..? அஜீத்துக்கு இன்னும் பத்துவருசம் வேண்டும் நல்ல நடிகனாய் வர என்றெல்லாம் நண்பர்கள் விமர்சனத்தை விமரிசனமாக எழுதி வருகிறார்கள். இதற்கு மேல் என்ன நடிக்க வேண்டும்... மனச்சிதைவு உள்ள ஒருவன் இதைவிட எப்படிப் பேசிட முடியும்... நீதிமன்றத்தில் கர்ஜிக்க வேண்டுமோ...? எல்லா இடத்தில் நானே சிறப்பானவன்... நாங்கள் வள்ளுவனையும் பாரதியையுமே வம்புக்கு இழுப்போம் அஜீத்தெல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை என்பதாய்... படம் குறித்தான விமர்சனம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்... ஆனால் ஹிந்தி பிங்க் போலில்லை என்பதை ஒரு குற்றச்சாட்டாக்கி அஜித்துக்கு எல்லாம் நடிப்பு வர இன்னும் பத்து வருசமாகும் என்பதெல்லாம் அதிகம்தான். அந்த வகையில் ராஜ சுந்தரராஜன் அண்ணன் அவர்களின் விமர்சனம் மிக அருமை.
படம் ரொம்ப மெதுவாய்த்தான் நகரும்... இடைவேளைக்கு முன் ஒரு சண்டைக்காட்சி செம மாஸ்.... இடைவேளைக்குப் பின் நீதிமன்றக் காட்சிகளே அதிகம் என்பதால் ரொம்ப மெதுவாய் நகரும்... எதிர்த் தரப்பு வக்கீலாய் ரங்கராஜ் பாண்டே... பேட்டி எடுக்கும் போது பலரை ஓடவிட்டு ரசித்தவர் இதில் அவ்வளவாய் ரசிக்க வைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களில் ஷ்ரத்தாவுக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்பு அதைச் சரியாகப் பண்ணியிருக்கிறார். 'பிக்பாஸ்'அபியும் ஆன்ட்ரியாவும் தங்கள் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். டெல்லி கணேஷ் வந்து போயிருக்கிறார். அஜீத்துக்கு உதவியாய் ஜூனியர் பாலையா நடித்திருக்கிறார்.
அஜீத்தின் மனைவியாய் வித்யாபாலன் தமிழுக்கு அறிமுகம்... கொஞ்ச நேரமே என்றாலும் மிகச் சிறப்பாய் செய்திருக்கிறார்.
நீதிபதியாக வரும் ராமச்சந்திரன், அரசியல்வாதியாய் ஜெயப்பிரகாஷ், வில்லனாய் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அவருடன் வரும் நண்பர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் கல்பனாஸ்ரீ என எல்லாருமே சிறப்பாய் நடித்திருக்கிறார்கள்.
பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசையில் ராஜாவைப் போல் அவரின் வாரிசு யுவன் அடித்தாடியிருக்கிறார். அதுவும் அந்தச் சண்டைக் காட்சிக்கான பின்னணி இசை செம.
ஒளிப்பதிவு (நீரவ் ஷா) மற்றும் எடிட்டிங் (கோகுல் சந்திரன்) படத்துக்கு மிகப் பெரிய பலம்.
இயக்குநர் வினோத், சுஜித், ரித்தீஷ் மற்றும் அநிருத்தா ராய் எழுதிய திரைக்கதையை வினேத் இயக்கியிருக்கிறார். வினோத் கவனிக்கப்பட வேண்டிய இயக்குநராய் வளர்ந்து கொண்டிருக்கிறார். சாதீயத்தைத் தூக்கிக் கொண்டு அலையாமல் நல்ல படங்களைக் கொடுப்பார் என்று நம்பலாம்.
ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருக்கிறார்.
மொத்தத்தில் 'நேர் கொண்ட பார்வை' எல்லாரும் பார்க்க வேண்டிய படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் அஜீத் ரசிகர்களுக்கு பெரும் தீனி போடாது.
-'பரிவை' சே.குமார்.
6 எண்ணங்கள்:
பல மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் ஒரு நல்ல ஆழமான திரை விமரசனத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் குமார்! வாழத்துக்கள்!
நியூ ஜெர்சியில் இருந்து
வழக்கமான அஜித் படமாக இல்லாமல் “நேர் கொண்ட பார்வை”. பிங்க் படம் ஹிந்தியில் செம ஹிட்.. அமிதாப் நடித்த படத்தினை தமிழில் அஜித் நடித்ததற்கே பாராட்ட வேண்டும். ஹிந்தியில் எடுத்ததைப் போலவே தமிழில் எடுக்க வேண்டும் என அவசியமில்லை. மொழி மாற்றம் செய்யும் போது சின்னச் சின்ன மாறுதல்கள் செய்வது நல்லது தான். தலைநகரில் வெளியிட்டு இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. பார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறேன்.
நல்ல விமர்சனம். பாராட்டுகள் குமார்.
விமர்சனம் 'தல' போல...!
எனக்கு ஞாபகம் வந்தது :-
சரின்னா யாரா இருந்தாலும் விடக்கூடாது... வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது...
வசனம் : பாலமுருகன் / படம் : வசந்த மாளிகை / வருடம் : 1972
நான் பிங்க் படம் மிகவும் ரசித்துப் பார்த்த படம்.மேலும் நான் அமிதாப்பின் விசிறி! தமிழில் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. உங்கள் விமர்சனம் கொஞ்சம் சொல்கிறது. பார்க்க வேண்டும்.
டைம்லி நினைவூட்டல்.
அருமையான விமர்சனம் சகோ. படத்திற்கு எழும் எதிர்ப்புகளைச் சொல்லி அவற்றிற்கான தக்கபதிலையும் சொல்லிப் பதிந்துள்ளது சிறப்பு.
கருத்துரையிடுக