'Can I Give You A Hug?'
மொத்தப் படத்தின் கதையையும் இந்த ஒற்றை வரி அப்படியே அள்ளிக் கொள்கிறது நம் கண்களில் கண்ணீருடன்.
ஒரு கனவு... அதைத் துரத்திப் போய் எட்டிப் பிடிக்கும் போது வாழ்வில் விதி விளையாண்டால்...?
என் கனவை நான் துரத்திக்கொண்டே போகிறேன்... விதி என்னடா விதி... எண்ணமெல்லாம் அதுவாக இருக்கும் போது எது என்னைப் பாதிக்கும் என்ற எண்ணம் உண்டானால்..?
அழகிய வாழ்வை... ஆனந்தத்தை... அழிக்கும் காதல் தேவையா...?
உயரப் பறக்க விடாமல் சிறகை ஒடித்துவிட்டால்..?
மீண்டும் மலருமா வாழ்க்கை...? முளைக்குமா சிறகு..? மாறுமா விதி..? எண்ணம் பறக்குமா உயரே...?
பார்வதி...
இந்தப் பெண்ணை ஒரு நாயகியாக எந்தப் படத்திலும் என்னால் பார்க்க முடியவில்லை... முடிவதில்லை... அந்தக் கதாபாத்திரமாய் மாறி இரண்டு மணி நேரமோ இரண்டரை மணி நேரமோ படத்தின் நீளத்துக்குள் வாழ்ந்து விடுகிறாள்... கவர்ச்சியால்தான் குப்பை கொட்ட முடியும் என்று எல்லாரும் அதன் பின்னே ஓட ஒரு சிலரே நடிப்பால் 'உயரே' போக முடியும் என்பதை தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் மலையாளத்தின் நாயகிகளில் இவரும் ஒருவர் என்பதைவிட இவரே முதல்வர் என்றுதான் சொல்ல வேண்டும்.
விமானியாக வேண்டும் என்ற ஆசையை சின்ன வயதில் மனதுக்குள் விதைத்து அதற்குத் தினமும் தண்ணீர் விட்டு வளர்த்து வரும் ஒரு பெண், தான் விரும்பும் பணியையும் காதலையும் ஒரு சேர தன் வாழ்வில் இறுத்திப் பயணிக்கும் போது எதாவது ஒன்றில் உயரப் பறக்க, மற்றொன்றை இழக்க வேண்டியிருக்கும்தானே...? இவள் எதைப் பெற்றாள்...? எதை இழந்தாள்...?
பல்லவியாய் பார்வதி... தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வண்ணம் பெங்களூரில் விமான அகாதெமியில் (aviation academy) பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு சென்று தன் பயிற்சியையும் சிறப்பாக முடிக்கிறார். அந்த மகிழ்வைக் கொண்டாடும் இரவின் விடியல் அவளின் வாழ்வை மாற்றிப் போடுகிறது... ரோட்டில் கிடந்து கதறும் போது அவளின் முகம் சிதைந்து கொண்டும் கனவு கலைந்து கொண்டும் இருக்கின்றன...
கலைந்த கனவும் சிதைந்த முகமும் அவளுள் எதை விதைத்தது... மீண்டும் மேகமாய் மாறி மழை பெய்ததா... இல்லையா..?
தன் காதலி மற்றவருடன் பேசக்கூடாது... தன்னைப் பிரிந்து வெகுதூரம் செல்லக்கூடாது... வேலைக்குப் போகக்கூடாது... தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும்... பொய் சொல்லக்கூடாது என்பதெல்லாம் சாதாரணமாய் பெரும்பாலான காதலன்களிடம் காணும் நோய்தான்... என்னை ஏமாற்றிட்டாள்ன்னு அரிவாளையும், கத்தியையும், ஆசிட்டையும் கையில் எடுத்த காதலன்களை நிறையப் பார்த்திருக்கிறோம்... இவனும் அப்படித்தான் ஒரு முடிவுக்கு வருகிறான்... காதலின் மிருகமாய் மாறி அவளின் ஆசையை வெட்டிச் சாய்க்கிறான்.
தன்னோட ஆசைக்கு இடைஞ்சலாய் இந்தக் காதல் ஏன் வர வேண்டும் என்பதை ஆரம்ப அடாவடிகளின் அச்சுறுத்தலின் பின்னே பல்லவி யோசித்திருந்தால்... அவளின் வாழ்க்கை இப்படி ஆகியிருக்காது... இப்படியானதொரு சிறப்பான படம் நம் கண்ணுக்கு விருந்தாய் விரிந்திருக்காது... இது நடந்தால்தான் நம்மால் 'Can I give you a hug..?' எனப் பார்வதியிடம் அந்தப் பெரியவர் கேட்பது போல் மனசுக்குள் கேட்டு, இறுக்கி அணைத்துக் கொள்ள முடிகிறது... கொண்டாட முடிகிறது.
வேலைக்குப் போகும் பெண்கள் என்றாலே அழகாய் இருக்க வேண்டும்... அதுவும் சில வேலைகளுக்கு அழகான பெண்கள் மட்டும்தான் வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்... உலகின் எந்த மூலையிலும் அந்தந்த நிறத்துக்குத் தகுந்தார்போல் அழகு மட்டுமே பிரதானமாகக் கடை விரிக்கப்படுகிறது.
ரிசப்சனில் இருக்கும் பெண் ஸ்லிமாக இருக்க வேண்டாமா...? குண்டான பொண்ணை எப்படி எடுத்தார்கள்... உடம்பைக் குறைக்க வேண்டுமெனப் பார்வதியிடம் டொவினோ தாமஸ் ஓரிடத்தில் சொல்வார். அதுதானே உலக நடப்பு... வரவேற்ப்பில் இருக்கும் பெண்ணே வாடாமல்லியாய் இருக்க வேண்டும் எனும்போது விமானத்தில் பணிப்பெண்ணாய் இருப்பவள் எப்படியிருக்க வேண்டுமெனச் சொல்லவே வேண்டாம்... முக அழகு... வசீகரம்... எதற்கும் கோபம் கொள்ளாத புன்னகை... எனத்தானே உலகம் முழுவதும் விமானத்தில் பறக்கும் பணிப்பெண்களைப் பார்க்க முடிகிறது.
தன் ஆசையை... கனவை எரித்தவனை நீதிமன்றத்தில் நிறுத்தினாலும் நீதி கிடைப்பதில் தாமதம்... எப்பவுமே நீதி உண்மைக்கு கிடைப்பதைவிட பொய்க்கே அதிகம் கிடைக்கும் என்பது உலகறிந்த விஷயம்... வழக்கு ஒரு பக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவளின் வாழ்க்கை மறுபக்கம் மருகிக் கொண்டிருக்கிறது.
சமரசம் பேச வரும் காதலனின் அப்பாவின் முன்னே மறைத்து வைத்திருக்கும் தன் வேதனையை... வலியை... எந்தவித ஆர்ப்பாட்டமோ அழுகையோயின்றி மௌனமாய்த் திறந்து காட்டுகிறாள். திரை நீக்கிய சன்னலில் தெரியும் கோரத்தின் முன்னே அந்தத் தந்தை தன் மகனுக்காய் பேச வந்த சமரசம் செத்து மடிகிறது... எதுவும் பேசாமல் வலியைச் சுமந்து எழுந்து போகிறார்.
தோழியின் அழைப்புக்காய் பெங்களூர் நோக்கி விமானத்தில் பறப்பவளை விமானக் கம்பெனி முதலாளியின் பையனான விஷால் (டொவினோ தாமஸ்) பார்த்து முன்பொரு முறை அடித்த கிண்டலைத் தொடர, கடுப்பின் உச்சத்தில் திரை நீக்கி என்னை விமானப் பணிப்பெண் ஆக்குவாயா..? என்று கோபமாய்க் கேட்டுவிட்டு தன் போக்கில் பயணிக்கிறாள்.
பல வித எதிர்ப்புக்களுக்கு இடையில் தனது கம்பெனி விமானத்தில் பணிப்பெண் ஆக்குகிறான்... உலகில் அழகே பிரதானம் என்ற பணியில் அழகற்ற பல்லவி... எப்படி இது சரிவரும்..? யார் ஏற்றுக் கொள்வார்..? விஷாலுக்கும் அவளுக்கும் காதலா..? அதனால்தான் இப்படி ஒரு முடிவா..? என எல்லாருக்குள்ளும் பலவித கேள்விகள். பதிலாய்க் கடந்து போகிறது அவளின் ஆசையும் அவனின் நட்பும்.
முதல் நாள் பறக்கும் போதே அந்தச் சிதைந்த முகத்தின் புன்னகையைப் பார்த்து 'Can I give you a hug? 'என்கிறார் பயணியான ஒரு வயோதிகர்... அந்த அணைப்பில் பல்லவி மட்டுமில்லை படம் பார்க்கும் நாமும் பூரித்துத்தான் போகிறோம்.
விமானப் பணிப்பெண்ணுக்கு பொறுமை முக்கியம்... முகத்தில் துப்பினால் கூட துடைத்தபடி புன்னகைக்க வேண்டும்... இடுப்பில் கிள்ளினாலும்... தொடை தடவினாலும்... பொறுமையில் இருந்து மீறாப் புன்னகை வேண்டும்... தன்னை இந்த நிலைக்கு மாற்றியவனால் உயரே பறக்கும் போதும் தொல்லை என்னும் போது புன்னகையை எப்படிச் சுமப்பது..? விதியின் விளையாட்டால் வேலை பறிபோகத்தானே செய்யும்... ராஜினாமா செய்யும் போது அந்தத் தேதியில் இருந்து ஒரு மாதம் கட்டாயப் பணி செய்ய வேண்டும்... அதன்படி 'உயரே' பறந்தும் சிறகொடிக்கப்பட்ட நிலையில் ஒரு மாதத்தைத் தொடர்கிறார்.
விமானத்தில் ஒரு பிரச்சினை... உடல் நலம் பாதிக்கப்பட்ட விமானியின் இடத்தில் ஆள் வேண்டும்... பயிற்சி முடித்த யாரும் விமானத்தில் இல்லை... பயணிகளைப் பத்திரமாகத் தரையிறக்க வேண்டும்... வானிலையும் மிக மோசமாக இருக்கிறது... வேறு வழியின்றி தன் கனவுகளைச் சிதைத்த விபத்தின் பின்னே இவளுக்கு பார்வையில் குறை என்பதால் விமானியாக முடியாது என நிராகரிக்கப்பட பல்லவி அமர்கிறாள்.
விமானக் கட்டுப்பாட்டு அறையும் விமானத்தின் முதலாளியும் அவள் அந்த இருக்கையில் இருந்து எழ வேண்டும் என்கிறார்கள். விஷாலிடம் அவளை விமான அறையில் இருந்து வெளியேறச் சொல் என நிர்பந்திக்கிறார்கள். உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு பல்லவி... நீ செய்து முடிப்பாய்... என்கிறான் விஷால்.
எப்பவுமே சின்னதொரு உற்சாகம் பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும் அல்லவா..? அந்த உத்வேகத்தோடு விமானத்தை இயக்குகிறாள்... கட்டுப்பாடிழந்த விமானம்... ரன்வே தெரியாத மோசமான வானிலை... உயிரைக் கையில் பிடித்தபடி அமர்ந்திருக்கும் பயணிகள்... அவசரத் தரையிரக்கத்துக்கு அனுமதி பெற்ற போதிலும் இவளால் பல உயிர்கள் போகப் போகிறதே என்ற பதைபதைப்புடன் கட்டுப்பாட்டு அறை... என எல்லாமே தனக்கு எதிராய் இருக்க, நீ ஜெயிப்பாய் என விஷாலும்.... நான் ஜெயிக்கப் பிறந்தவள் என பல்லவியும் பயணிக்கிறார்கள்... ஆம் இரண்டு மனங்கள் மட்டுமே உயர்வாய் நிற்கின்றன.
காதலன் கோவிந்தாய் ஆசிப் அலி... கரணம் தப்பினால் மரணம் என்பது போல் கொஞ்சம் சாய்ந்தாலும் சைக்கோவாய் தெரியக்கூடிய கதாபாத்திரத்தில் சிறப்பாய் நடித்திருக்கிறார். காதலி தனக்கு மட்டுமே... தான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் லட்சோப லட்சம் இளைஞர்களின் நகலாய்... நல்ல நடிப்பு.
என்னைக் கட்டுப்படுத்தாதே... நான் சிறகை விரிக்க எனக்கு இடம் வேணும்... உன்னால் எனக்கு இடமும் தரமுடியாது... சிறகையும் ஒடிக்காமல் இருக்க முடியாதென விலகிய பின்தான் வில்லங்கமே... அதுவரைக்கும் பார்த்த பார்வதிக்கும் அதன் பின்னான பார்வதிக்கும் எத்தனை வித்தியாசம்..? நடிப்பு ராட்சஸி.
தன்னால் முடியுமென சாதித்தாளா... இல்லை கண் பார்வை விமானத்தை வீழ்த்தியதா..? நீதிமன்ற வழக்கின் முடிவென்ன..? என்பதையெல்லாம் படமாய் பாருங்கள்.
அப்பா ரவீந்திரனாக சித்திக், மூத்த விமானக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பிரதாப் போத்தன், அனார்கலி மரிக்கர், சம்யுக்தா மேனன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மகேஷ் நாராயணனின் எடிட்டிங்கும் முகேஷ் முரளிதரனின் ஒளிப்பதிவும் கோபி சுந்தரின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம்.
பாபி - சஞ்சயின் திரைக்கதையை அறிமுக இயக்குநர் மானு அசோகன் இயக்கியிருக்கிறார்.
எஸ் கியூப் பிலிம்ஸ் கிரிஹலட்சுமி புரொடக்ஷன்ஸ்க்காக, தயாரிப்பாளர் பி.வி. கங்காதரன் அவர்களின் மகள்களான ஷெர்கா, ஷெக்னா, மற்றும் ஷெனுகா தயாரித்திருக்கிறார்கள்.
படத்தின் கதையைக் கேட்டதும் உடனே ஒப்புக் கொண்டாராம் பார்வதி, ஆசிட்டால் பாதித்த முகத்திற்கான மேக்கப்பிற்கு தினமும் சூட்டிங்கிற்கு முன்னர் 4 மணி நேரம் பொறுமையாய் போட்டுக் கொண்டாராம்... முக்கால்வாசிப் படம் அந்த முகத்தோடுதான்... அதற்காகவே பாராட்டலாம் பார்வதியை...
மிகச் சிறப்பான படம்... கண்டிப்பாக பார்க்கலாம்.... யூடிப்பில் தரமான, தெளிவான HD பிரிண்ட் இருக்கிறது.
உயரே.... மிக மிக உயரமாய்ப் பறக்கிறது.
-'பரிவை' சே.குமார்.
5 எண்ணங்கள்:
அப்போ விமானம் வீழ்ந்து விட்டதா...? நீதிமன்ற வழக்கு வேறயா...?
// சின்னதொரு உற்சாகம் பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும் அல்லவா..? //
முழுக்கதையும் சொல்லாத சின்னதொரு விமர்சனம், படம் பார்த்தே தீர வேண்டும் எனும் உத்வேகத்தையும் கொடுக்கும்...!
youtube இணைப்பு கொடுக்கக் கூடாதா...? தேடுகிறேன்... நன்றி...
குமார் நல்ல விமர்சனம். பார்த்தே தீர வெண்டும் என்று தோன்றிவிட்டது. அட யுட்யூபில் கிடைக்கிறதா அப்ப பார்த்துவிட வேண்டியதுதான்...
பார்வதி அழகான ராட்சசி!! நடிப்பில்!!!!
கீதா
omg ...
இந்த வார்த்தைகள் தான் என்னுள் ...
விமர்சனம் படிக்கும் போதே கண்ணில் காட்சிகள் விரிகிறது ..
மிக மிக நன்றி இத்தகைய அருமையான படத்தை எங்களுக்கு காட்டி கொடுத்தமைக்கு ..
விரைவில் பார்க்க வேண்டும் ..
குறித்துக் கொள்கிறேன் குமார். நேரம் கிடைக்கும்போது பார்க்கவேண்டும்.
யூவில் இருக்கிறது என்பது அறிந்து மகிழ்ச்சி. நேரம் எடுத்துப் பார்க்கிறேன்.
நல்ல விமர்சனம் குமார். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கருத்துரையிடுக