மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 30 ஜூன், 2019

மனசின் பக்கம் : அறை மாற்றம்

மீண்டும் அறை மாறும் படலம் அரங்கேறியிருக்கிறது.

ஏழெட்டு மாதங்களில் அறை மாறுதல் என்பது இந்தப் பதினோரு வருடத்தில் இதுவே முதல்முறை... எப்படியும் இரண்டு வருடங்களுக்குக் குறையாமல் ஒரு அறையில் தங்கித்தான் பழக்கம்... இந்த முறை அதற்கான வாய்ப்பு இல்லாது போனதற்கு நாங்களே காரணம் ஆனதுதான் வேதனையான விஷயம். 

இந்த அறைக்கு வந்தபோது அறை குறித்தும் எங்கள் வீட்டுக்கு எதிரே இருப்பவர்கள் குறித்தும் பதிவாக்கியிருந்தேன். பால்கனியுடன் கூடிய நல்ல அறை, அருகே நண்பர் ஒருவர் வேலை செய்யும் சைவ ஹோட்டல், நண்பர்களின் பூக்கடை, சுற்றிலும் சூப்பர் மார்க்கெட் என நல்லதொரு அறையாகத்தான் இருந்தது. விடுமுறை தின மாலை நேரங்கள் பூக்கடை அருகே அரட்டையில் கழிந்தது.

இந்த அறைக்கு வந்தது முதல் பாத்ரூம், கிச்சன் பிரச்சினை என்பது இல்லவே இல்லை. ப்ரிட்ஜ், வாசிங்மெசின் என எல்லாமே அவர்களதுதான். வீட்டின் முதலாளி இருவர் என்பதாய்த்தான் அறிய முடிந்தது. ஒருவர் நாங்கள் இருந்த வீட்டில் மற்றொரு அறையில் நண்பர்களுடன்... மற்றொருவர் ஷார்ஜாவில் குடும்பத்துடன்... எங்களுடன் இருந்த முதலாளி மிகவும் நல்லவர்... பழக்கத்துக்கு தங்கமானவர் என்பதால் அந்த அறை நமக்கு ரொம்ப மகிழ்வளிக்கக் கூடியதாய் அமைந்தது.

எனது நண்பருடன் வேலை பார்க்கும் இரண்டு மலையாளிகள் அறைக்கு வந்தபோது எந்தச் சிக்கலும் இல்லாமல் எப்பவும் போல்தான் நகர்ந்தது. அமீரகத்தின் தற்போதைய தேக்கநிலை எல்லாக் கம்பெனிகளுக்கும் வேலை இல்லாத நிலையில் கொண்டு வந்து வைத்திருக்கிறது. பல கம்பெனிகள் ஆட்குறைப்பு செய்து விட்டன... சில கம்பெனிகள் சம்பளம் கொடுப்பதில் சிக்கல் வர ஆரம்பித்துவிட்டது. எங்கள் கம்பெனி எல்லாம் 27,28-ல் சம்பளம் என்ற நிலையில் இருந்து 10-ஆம் தேதி வரை வந்துவிட்டார்கள். ஆகஸ்ட்டுடன் முடியும் புராஜெக்ட்டுக்குப் பின்னர் இதுவரை வேற புராஜெக்ட் எதுவும் கிடைக்கவில்லை. நான்காண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை... இந்த வருடமும் வரவில்லை என்பதால் மோதிக் கொண்டுதான் இருக்கிறேன் என்றாலும் வேறு கம்பெனிகளிலும் வேலை கிடைக்கும் என்ற நிலை சுத்தமாக இல்லாததால் கொஞ்சம் நம் நிலையை நினைத்து அடக்கி வாசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. 2020 மாறும் என்று சொல்லி மாற்றத்தை நோக்கி நகர்கிறார்கள்... மாறும் என்ற நம்பிக்கை இப்போது இல்லை என்பதே உண்மை.

சரி விஷயத்துக்கு வருவோம்... மூவர் ஒரே கம்பெனி என்பதால் சம்பளம் வருவதில் சிக்கல் வந்தபோது வாடகையை பத்தாம் தேதிக்குள் கொடுப்பதிலும் சிக்கல் வர ஆரம்பித்தது. அது ஒரு மாத இடைவெளிக்கும் காரணமாக மாறிவிட, ஆரம்பத்திலேயே ஒரே கம்பெனி ஆட்கள் வேண்டாம் என நான் சொல்லியும் நண்பருக்கு அலுவலகத்தில் கொஞ்சம் உதவியாக இருக்குமே என்ற காரணத்தால் மலையாளிகளைக் கொண்டு வந்துவிட்டோம், இப்போது எப்படி அவர்களை வெளியேற்றுவது என்பதில் நண்பருக்குக் குழப்பம். 

படுத்த படுக்கை, போட்ட ஆடைகள் என சுத்தமில்லாத படுக்கைகளைப் பார்க்கும் போது வந்த கோபத்தில் ஒருநாள் நான் சத்தம்போட உடனே இப்படித்தான் இருப்பேன்... என்னோட படுக்கையில் எது கிடந்தால் உனக்கென்ன எனத் தர்க்கம் பண்ணினான். நானோ நீ உடனே அறையைக் காலி பண்ணிக்க என்றேன். நண்பர்தான் சமாதானம் பேசித் தொடரச் செய்தார். வாடகைப் பிரச்சினையும் தொடர்ந்தது.

ஒருநாள் சாப்பிடும் போது போதையில் மூவருக்குள்ளும் தர்க்கம் ஓட, இறுதியில் எனக்குத் தமிழன்மாரைக் கண்டாலே பிடிப்பதில்லை என ஒரு மலையாளி வார்த்தையை விட, நண்பர் ஒன்றும் சொல்லாமல் விவாதத்தை முடித்துக் கொண்டார். அடுத்த இரண்டு நாளில் ஒரு மதியவேளையில் சாப்பிடும் போது வாடகைப் பிரச்சினை இருக்குடே... அஞ்சு பேரு வைக்க வேண்டான்னு ஓனர் சொல்லுறான்.. நீ போயிக்க என ஒரு மலையாளியிடம் சொன்னார் நண்பர். உடனே இருவரும் அடுத்த மாதம் போகிறோம் என்றார்கள். மலையாளிகளை நாங்கள் போகச் சொன்னது வாடகை கொடுப்பதில் இருந்த சிக்கலால்தான்... மற்றபடி தமிழன்மாரைப் பிடிக்கலை... இந்தி வேண்டாம் என்ற விவாதங்களால் அல்ல... அது நிறை போதையில் நிதானமில்லாமல் வந்தது என்பதை அறிவோம். 

நம்ம ஊர்க்காரன் ஒருவன் இருந்தான்... திருமணம் ஆகாத தினக்குடி என முன்னரே சொல்லியிருக்கிறேன். அவன் அறையை விட்டுப் போறேன் என்றெல்லாம் சொல்லவில்லை... மாதக் கடைசியில் வாடகையும் கொடுக்காது... ஊருக்குப் போறேன்... வந்து கம்பெனி அறையில் தங்கிக்குவேன் எனச் சொல்ல, வாக்குவாதம் முற்றி... பின்னர் அவன் முடிஞ்சதைப் பாத்துக்க என ரொம்ப மரியாதையாகப் பேச, நம்ம சுயமரியாதையும் சிவகங்கை மண்ணுக்குன்னு உள்ள ஒரு கோபமும் எந்திரிச்சி, அதுவரை வாங்க தம்பி எனச் சொன்ன வாய் 'போடா நாயே வெளியே...' எனச் சொல்லியது. அதன் பின் அவன் வேலை செய்த கணிப்பொறி கடையிலும் போய் போலீஸ் கேஸ் கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன். இங்கு கொடுக்க வேண்டியதை அவன் எங்காவது கொடுப்பான் என்ற நினைப்புடன் தொலையட்டும் என விட்டு விட்டு அறை வாடகைப் பிரச்சினைக்காக ஆட்கள் தேடியபோது கிடைப்பது குதிரைக் கொம்பானது.

நாங்கள் இருவர் மட்டுமே அறையில் என்ற நிலையில் முழுவாடகையும் எதிர்பார்த்தார்கள்... கொடுக்க வேண்டியது கட்டாயம்... முடியாது என்று சொல்ல முடியாத நிலை... உறவினர் அறைக்கு வந்தவருக்கு அங்கு அந்தச் சூழ்நிலையில் (மாதத்தின் பாதியில்) இடமில்லை என்பதால் பதினைந்து நாட்களுக்கு மட்டும் எங்கள் அறைக்கு வந்தார். அப்படியும் வாடகை முழுவதும் கொடுக்க முடியாது என்பதாலும் அடுத்த மாதம் (ஜூன்) மீண்டும் இருவரும் மட்டுமே என்பதாலும் அறை மாறிக் கொள்கிறோம் எனச் சொல்லிவிட்டோம். இந்த மாத வாடகையில் எங்கள் இருவருக்குமாய் 500 திர்ஹாம் நஷ்டம். வேறென்ன செய்ய முடியும்..?

இதில் இன்னொரு பிரச்சினையும் வர ஆரம்பித்தது... அறை நாமெடுத்திருந்தாலும் ஆட்கள் இல்லை என்பதால் பெங்காளிகளை அறையில் ஏற்ற நினைத்து நினைத்த நேரத்தில் ஆட்களைக் கொண்டு வர ஆரம்பித்தார்கள். அது போக ஷார்ஜாவில் இருப்பவன் 'அந்தப் பணம்...' என வாட்ஸப்பில் இரவு ஒரு மணிக்கும் ரெண்டு மணிக்கும் வாய்ஸ் மெஜேஸ் அனுப்ப ஆரம்பித்தான். இப்படி ஒரு இடத்தில் இருத்தல் நலம் பயக்காது என்பதாலேயே நிம்மதியான இடம் வேண்டுமென காலி பண்ணிக்கிறோம் எனச் சொல்லிவிட்டோம்.

அறை தேடி ஒருவழியாக பிடித்து விட்டோம்... கோவா குடும்பம் இருக்கும் வீடு அது... ஒரு அறையில் பாகிஸ்தானிகள் இருக்கிறார்கள் என்றார். நாங்கள் இப்போது அறையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆட்கள் கிடைத்தால் மட்டுமே அறையாக எடுப்போம்... அதுவரை ரெண்டு கட்டில்கள் போதுமெனச் சொல்லிவிட்டோம். எங்களுக்கு அந்த அறையைக் காட்டியது சகோதரர் ராஜாராமின் நண்பர் ஒருவர்... நல்ல இடம்... பத்தாம் தேதிக்குள் வாடகையைச் சரியாகக் கொடுத்துவிட்டால் வருடக்கணக்கில் தங்க முடியும்... எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று தோன்றுகிறது. 


முன்னர் தங்கியிருந்த அறைக்கு உறவினர் திரும்ப அழைத்தார். அவர் அறையில் மூன்று கட்டில்கள் காலியாகத்தான் இருக்கிறது என்றாலும் சிலபல பிரச்சினைகளால்தான் உறவுகளுடன் இருக்க வேண்டாமென ஒதுங்கி வந்தோம்... மீண்டும் போய் பிரச்சினை என்றால் என்ன செய்வது...? தள்ளியிருத்தலே உறவைப் பேணும் என்பதால் வரவில்லை என்று சொன்னதில் அவருக்கு வருத்தமே. புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் தள்ளியே இருப்போம் என்பதாலே இந்த அறை... கொஞ்சம் தூரம்தான் என்றாலும் அறை நன்றாக இருப்பதால் பிடித்தாகிவிட்டது.

தொடரும் வாழ்க்கைச் சிக்கல்கள் எல்லாம் புதிய அறைக்குச் சென்ற பின்னாவது தீரட்டும் என்ற எண்ணம் மனசுக்குள்...

பார்க்கலாம்... வாழ்க்கை எப்படி நகரப் போகிறதென....
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

எத்தனை எத்தனைப் பிரச்னைகள் குமார்.... ரொம்பப் பொறுமை உங்களுக்கெல்லாம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தங்குமிடம் பிரச்சனை கொஞ்சம் கடினமானது தான். தில்லி வந்த புதிதில் சில வருடங்கள் இப்படியே பலருடன் இருந்த அனுபவம் உண்டு. எத்தனை எத்தனை சமாளிக்க வேண்டியிருக்கும் இந்த மாதிரி அறைகளில்! ரொம்பவே பொறுமை வேண்டும். எல்லா பிரச்சனைகளும் விரைவில் சரியாகட்டும் குமார்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்க்கைச் சிக்கல்கள் விரைவில் தீரும் நண்பரே

கோமதி அரசு சொன்னது…

வாழ்க்கை சிக்கல்கள் தீர்ந்துவிடும். புதிய அறையில் இனி எல்லாம் நலமே!
வாழ்க வளமுடன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் உங்களின் நிலையை, சிக்கல்களைப் பார்க்கும் போது நாங்கள் எல்லாம் மிக மிக மிக நல்ல நிலையில் இருக்கிறோம் என்றே சொல்ல வேண்டும். எத்தனைப் பிரச்சனைகள். கூடவே இருப்பவர்கள் குடிப்பது பற்றி முன்பே சொல்லியிருக்கீங்களே.

விரைவில் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும். நல்லனவே நடக்கட்டும்

துளசிதரன், கீதா