பிக்பாஸ் சீசன்-3 முதல் வாரம் என்பதால் எல்லாருமே ரொம்ப அன்பா இருக்காங்க... வந்தவுடனே அபிராமிக்கு கவின் மீது காதல் வந்தது. அது சரவணன் மீனாட்சி நாடகத்தை அம்மா பார்க்கும் போது கவினைப் பார்ப்பதற்காகவே உட்கார்ந்திருக்கும்போது வந்த கிரஷாம்.... எப்படியெல்லாம் காதல் வருது பாருங்க... ம்... நாமதான் இந்தக் கிரஷெல்லாம் குடிக்காமலேயே வாழ்க்கைக்குள்ள இறங்கிட்டோம்.
கவினுக்கும் முகனுக்கும் லாஸ்வியா மீது காதல் கலந்த பார்வை இருக்கத்தான் செய்யுது... தமிழகமும் இலங்கையுமா... இல்லை இலங்கையும் மலேசியாவுமான்னு போகப் போகத் தெரியும். அதை அபிராமியிடம் சொல்லாமல் எங்கூட கொஞ்ச நாள் பழகினா இவனெல்லாம் சரிவர மாட்டான்னு நீயே விலகிப் போயிருவேன்னு சொல்லி, கவின் மெல்லக் காதல் வலையில் இருந்து விடுபட்டது போல் நடித்தாலும் திரைக்கதையில் இந்தக் காதல் நூறுநாள் ஓடுமென்றால் கவின் அதில் நடித்துத்தான் ஆகவேண்டும். கவின்-அபிராமி, முகன்-லாஸ்லியா என்பதெல்லாம் பெரியபாஸின் கையில் இருக்கும் திரைக்கதையில்தான் இருக்கிறது.
பொங்கலுக்காக ஒரு பெரிய பொங்கல் வைத்தார்கள்... வனிதா வாயில் பொங்கல் வைத்தார். சாக்சி என்னைப் பேச விடுங்கன்னு பாவமாக் கேட்டுப் பார்த்து கிடாவெட்ட இடங்கிடைக்காமல் தவித்தார். 'நான் விரும்பும் இயக்குநர்' சேரன் நீண்டதொரு லெக்சர் கொடுத்தார் என்றாலும் அது அல்ஜீப்ரா நடத்தும் கணக்கு வாத்தியாரின் நிலையாய் ஆனது. இப்படியே போனால் முதல் நாமினேசன் நான் விரும்பும் இயக்குநராய்த்தான் இருப்பார்.
பாத்திமா பாபு தமிழில் செய்தி வாசித்து ஷோபனா ரவி, சந்தியா இராஜகோபாலன் வரிசையில் அழகிய தமிழுக்குச் சொந்தக்காரராய் இருந்தவர், ஆங்கிலத்தில் மட்டுமே அதிகம் பேசுவது கொடுமை. போன சீசனில் யாராவது ஆங்கிலத்தில் பேசினால் நீச்சல் குளத்தில் ஒருவர் இறங்கி நிற்க வேண்டுமென சட்டமெல்லாம் போட்டார்கள். பேசவே வராத ஐஸ்வர்யாவைக் கூட தமிழில் பேச வைத்தார்கள். இப்போது நிகழ்ச்சி முழுக்க குறிப்பாக பெண்கள் பேசுவது எல்லாமே ஆங்கிலம்தான்... எந்த தண்டனையும் இல்லாமல், தமிழில் சப் டைட்டில் போடுகிறார்கள். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்... கமலஹாசன் மட்டும் புரியாத செந்தமிழில் பேசுவார் வார இறுதிகளில்.
மொக்கை நடனம் சொல்லிக் கொடுக்கச் சொல்லி மோகன் வைத்யாவுக்கு ஒரு டாஸ்க்... அவரும் இளைஞராய் மாறி நடனம் சொல்லிக் கொடுத்து வயதானாலும் பொதுவெளியில் தனக்கு வாழக்கிடைக்காத வாழ்க்கைய இங்கு இருப்பவர்களுடன் வாழ்ந்து மகிழ்ச்சியாய் இருப்போமே என்ற எண்ணத்துடன் ஜாலியாய் வலம் வருகிறார்... இது மனசுக்கு மட்டுமின்றி உடலுக்கும் நயம் பயக்கும்... அப்படியே தொடர்தல் நலம்... இப்படியே நாட்களைக் கடத்துங்கள் மோகன்ஜி.
புதிதாக களம் புகுந்த மாடலிங் மீரா மிதுனைப் பார்த்ததும் பாண்டவ பெண்கள் அணியின் அபிராமி, தனக்கும் மீராவுக்கும்மான தனிப்பட்ட பிரச்சினையை வீட்டுக்குள் மீட்டெடுக்கிறார். போர் வெடிப்பது போல் ஒரு பிரளயம் ஆரம்பிக்கிறது. பிக்பாஸ் ஆஹா... டிஆர்பி எகிறப் போகுதுன்னு துண்டை விரிச்சி உக்கார்ந்தா... அது பதத்துப் போன தீபாவளி வெடி மாதிரி புகைஞ்சிக்கிட்டே இருக்கு. கிச்சனில் சாப்பிட்ட கீரைப் பாத்திரத்தை எடுத்து வைக்கவில்லை என அபிராமி கத்த, மெல்லப் பேசு... கத்தாதே என மீரா சொல்ல... எங்கே வெடி பெரிதாய் வெடிக்கப் போகுதுன்னு பார்த்தா அப்பவும் வெடிக்கலை... லேசா 'புஸ்...புஸ்...' மட்டுமே. இந்தவாரத் தலைவி எப்படியும் வெடிக்க வைப்பேன் என அதைக் கையில் எடுத்து, எங்கிட்டே நீ புகார் கொடுத்தேன்னு நான் அவளைக் கேக்குறேன்னு சொர்ணாக்கா 2.0 மாதிரி வர்றாங்க... சண்டையின் சூடு அடுப்பில் வைத்த பால்பாத்திரம் மாதிரி மெல்லக் கூடுது... எங்கே பால் பொங்கிருமோன்னு பார்த்தா... வேகமாப் பேசாதீங்க... உங்களுக்கு பீபீ வரும்ன்னு மீரா சொல்லி... கண்கள் மட்டுமே பொங்க அழுகையுடன் அந்தச் சண்டை பிசுபிசுத்துப் போயிருச்சு... தலைவிக்கு அவமானம்... பாவம் பிக்பாஸ் திரைக்கதையை மாற்ற வேண்டிய சூழல்.
நான் எம்ஜியார் காலத்துல இருந்து நடிப்பைப் பார்த்தவ... எங்கப்பன் எனக்கு இந்த மாதிரி நடிக்கிறவங்களை நம்பக் கூடாதுன்னு சொல்லித் தந்திருக்கான்... நான் ஒரு இயக்குநருக்கு அசிஸ்டெண்ட் தெரியுமா... அப்படி இப்படின்னு தலைவி வனிதா அள்ளி விடுறாங்க... இவங்க நடிப்பைத்தான் நாம பார்த்திருக்கோமே... நடிப்பால் கெட்டவர்தானே ராஜ்கிரண்... தெரியாதா என்ன... இந்த வீட்டுக்குள் சொர்ணாக்காவின் ஆட்டம் இப்பத்தான் ஆரம்பமாயிருக்கிறது. இனி அடித்து ஆடுவார் என்று எதிர் பார்க்கலாம்.
சாண்டி டான்ஸ் ஆடுறேன்னு கொல்றதுடன் மட்டுமில்லாமல் பேசியே கொல்லுறான். இவனையெல்லாம் வீட்டில் எப்படித்தான் சமாளித்தார்களோ... திறமை இருக்கவன் ஒரு இடத்தில் இருக்கமாட்டான்னு சொல்லுவாங்க... நானும் பல பேரைப் பார்த்திருக்கிறேன்... இவன் அந்த ரகம்தான்... எப்பா பிக்பாஸ் இவனுக்கு முதல்ல திரைக்கதையை மாத்துங்க... லாஸ்வியா மேல இவனுக்கும் கொஞ்சம் 'அது' இருக்கு... இழுத்து இழுத்துப் பார்க்கிறான்... ஆனாலும் லாஸ் ஆகாம மெல்ல எஸ்கேப் ஆயிடுது...சாண்டி வெளியில் இருந்து பையன் பார்த்துக்கிட்டு இருக்கான் என யாராவது சொல்லித் தொலையுங்கள்.
தர்ஷன் இன்னும் அடித்து ஆடவில்லை... போன சீசனில் கமலாகாமேஷ் பேரன் மும்தாஜை அம்மா... அம்மான்னு கட்டிப்பிடிச்ச மாதிரி இவன் பாத்திமா பாபுவை கட்டிப் பிடிக்கிறான். அம்மா மகன் அடிதடி ஸ்கிரிப்ரட் ஒண்ணு இந்நேரம் தயாராகி இருக்கும்... அம்பதாவது நாளுக்கு மேல் இருவரும் இருந்தால் கண்டிப்பாக அரங்கேற்றப்படும்.
மீராவின் நடையே அழகாய்த்தான் இருக்கு... பின்னே சூப்பர் மாடல் அல்லவா...? அபிராமியுடனான பகை, அபிராமிக்கு துணையாய் இருக்கும் பாண்டவர் பெண்கள் அணியில் நால்வர்... தலைவி வனிதா... ஏன் பாத்திமா கூட இவரை அடுத்த வாரம் முதல் தொடர்ந்து நாமினேட் செய்ய வாய்ப்பிருக்கு என்றாலும் மக்களால் காப்பாற்றப்படுவார் என்றே தெரிகிறது. அதேபோல் அபிராமியை பிக்பாஸ் அவ்வளவு சீக்கிரம் வெளியேற்ற மாட்டார்.
ஊர்ல வேலைக்குப் போகாம சாப்பிட்டு வேப்ப மரத்தடியில உக்காந்து போறவன் வர்றவனையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு, நமக்கெதுக்கு இந்த வம்புதும்பெல்லாம்ன்னு இருப்பான் பாருங்க... அவன மாதிரி ஒரு மூலையைக் கொடுத்து உக்கார்ந்திருக்கிறார் சரவணன். சித்தப்பு ரொம்ப நூதனமாப் பொழச்சுக்கப்புன்னு சொல்லி விட்டிருப்பானுங்க போல. பிக்பாஸ் சரக்கு கொடுப்பாரோ..?
கவின், முகன், தர்ஷன் மூவருமே காதல் மன்னர்கள்... கவினை அபிராமி காதலிப்பது குறித்த பேச்சில் வனிதா யார் அந்த புட்டிக்கண்ணாடியான்னு கேட்கிறார்... பர்ஸ் வாயை விட புட்டிக்கண்ணாடி அழகாய்த்தானே இருக்கிறார்... வேட்டையனாக தமிழக பெண்களின் இதயங்களைக் கவர்ந்தவந்தானே அவன்... அப்படி வீழ்ந்த ஆயிரத்தில் ஒருத்தியாய்த்தான் அபிராமி நிற்கிறாள்... அபிராமி என்ற பிரபலம் பொதுவெளியில் எனக்கு கவின் மீது ஒரு கிரஷ் எனச் சொல்ல முடிகிறது. அதை கூட இருப்பவர்கள் ஏற்றுக் கொண்டு அவனுடன் காதல் செய்ய சில நாடகங்களையும் சொல்லித்தர முடிகிறது. எத்தனையோ அபிராமிகள் கிராமங்களில் வேட்டையனை வெறித்தனமாக லவ்விக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். கிராமத்து அம்மாவிடம் கவினை நான் லவ் பண்றேன்னு சொல்லியிருந்தா செருப்பால் அடி வாங்கியிருப்பாள். எது எப்படியோ தன் மகளென்றால் எந்த வனிதாக்களும் பாத்திமாக்களும் இப்படிச் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் அல்லவா..?.
இந்த ஓவியா டான்ஸ் ஆடி ஆரம்பிச்சி வச்சிச்சு... இப்ப பள்ளிக்கூடத்துல காலையில வாய்ப்பாடு சொல்ற மாதிரி தூங்குறவங்க அப்படியே ஓடியாந்து தாவிக்குதிச்சி ஆடணும்ன்னு பிக்பாஸ் சட்டம் போட்டுட்டாரு... காலையில சின்ன டவுசரும் பனியனுமாய் அவங்க ஆடுறது... ம்.. இளவட்டத்துக்கு பிளஸ்... குடும்பத்தோடு பார்த்தா மைனஸ்.
கொசுறு : பாத்திமாபாபு ஏன் இவ்வளவு மேக்கப் போட்டுக்கிட்டு தசாவதாரம் கமல் மாதிரி இருக்காருன்னுதான் தெரியலை... மேக்கப் இல்லாத அபிராமி பார்க்க அழகாத்தானே இருக்கார்... சிறுசைப் பார்த்து பெருசு கத்துக்கிட்டாச் சரி.
மீராவைக் களத்தில் இறக்கியும் பருப்பு வேகலையேன்னு யோசிச்ச பிக்பாஸ் இந்த வாரத்துக்கான டாஸ்க் என மூன்று சீட்டெடுத்து அதில் உள்ள கேள்விக்குப் பதில் சொல்லச் சொல்லியிருக்கிறார். எல்லாருக்கும் ஓரே மாதிரி சோக ராகம் பாடும் சீட்டுத்தான்...
அதனால் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆரம்பமாகியிருக்கிறது சோகமழை...
பதிவு நீளமாப் போகுது... மழை பெய்யட்டும் சென்னையிலும்... பிக்பாஸ் அரங்குக்குள்ளும்...
மொத்தமாக அடுத்த பதிவில் வாசிப்போம் சோககீதம்...
பிக்பாஸ் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.
8 எண்ணங்கள்:
ஆழ்ந்த... விமர்சனம்...!
என்னைப் போன்றவருக்கு யார் யாரென்றே தெரிவது சிரமமாக இருக்கிறதுமுதல்நாள் அறிமுகக்ப்படுத்தப்படாத மீரா எப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார் என்னவொ சிறிது டைம் பாஸ்
நலமா நண்பரே
பிக் பாஸ் பார்ப்பதே இல்லை
ஆயினும் தங்களின் விமர்சனத்தை ரசித்தேன்
பிக் பாஸ் - சென்ற பதிவில் சொன்னது போல நான் பார்க்க வாய்ப்பும் இல்லை! பெரிதாக ஈர்ப்பதும் இல்லை டி.வி. நிகழ்ச்சிகள்.
நன்றி அண்ணா
மீரா தனியா இருநாட்களுக்குப் பிறகு வீட்டிற்குள் அனுப்பப்பட்டார்.
நன்றி அய்யா...
நலம் அய்யா
நன்றி அய்யா
நன்றி அண்ணா
கருத்துரையிடுக