மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 6 மார்ச், 2019

மனசின் பக்கம் : பல கதைகள் பேசலாமே

சில விஷயங்களைப் மனம் திறந்து பேசுவதே மனசின் பக்கமும் மனசு பேசுகிறதும். இதில் ஒரே விஷயம் என்றால் மனசு பேசும், அதே பல கலவை என்றால் மனசு பக்கமாய் மலரும். இங்கு மலர்ந்திருப்பது மனசின் பக்கம்.

உறவு சொல்லும் கதை

தேன்சிட்டு மின்னிதழில் தொடர்ந்து எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கிவரும் நண்பர் 'தளிர்' சுரேஷ்க்கு நன்றி. இந்த மாதம் வெளியான கதை சென்ற மாதமே அனுப்பியது. அடுத்த மாதம் பயன்படுத்திக் கொள்கிறேன் இந்த மாதம் காதலர் தினம் என்பதால் காதல் கதை ஏதாவது கொடுங்கள் என கேட்டு வாங்கிக் கொண்டார். அவர் சொன்னபடி 'உறவு சொல்லும் கதை'யை இந்த மாதம் பயன்படுத்தியிருக்கிறார். தேன்சிட்டு பிடிஎப் அவரின் வலையில் இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் வாசித்து உங்கள் மேலான கருத்துக்களை இங்கு தவறாமல் சொல்லுங்கள்.


ஸ்ரீராம் அண்ணனைப் பொறுத்தவரை, உரிமையுடன் கேட்டு கதைகளை வாங்கி தன் தளத்தில் அதற்கென ஒருநாளை ஒதுக்கி வாராவாரம் ஒருவர் என சிறப்பாக பகிர்ந்து, மனம் திறந்த கருத்துக்களை நட்புக்கள் சொல்ல, நம் எழுத்தைச் செம்மையாகும் முயற்சியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்தச் செவ்வாய் எனக்கான நாளாய் அமைந்தது. என் கதைக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி அண்ணா... கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி... எல்லாரும் வாசிச்சிருப்பீங்க... வாசிக்காதவங்க தலைப்பைக் கிளிக்கி எங்கள் பிளாக் போங்க... வாசிங்க... உங்க கருத்தைச் சொல்லுங்க.

விமர்சனம்

ஒரு புத்தகம் விமர்சனத்தின் பின்னே சில கசப்பான நிகழ்வுகள்... இனி இங்கிருக்கும் நட்பு வட்டத்தின் புத்தகங்கள் குறித்தான விமர்சனம் செய்யக் கூடாது என்ற நிலையை எடுக்க வைத்துள்ளது. அதுவும் நல்லதுதான்... நம் விமர்சனத்தால் அந்தப் புத்தகம் விற்கப்போவதில்லை... எழுத்தாளரின் எழுத்து நல்லாயிருக்கும் பட்சத்தில் விற்பனையில் அடித்து ஆடப் போகிறது... பின் ஏன் உண்மையைப் பேசுறேன்னு நாம எழுதணும்.

திருநங்கை

லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களின் 'நான் சரவணன் வித்யா' வாசித்தேன்... ஒரு திருநங்கையின் வாழ்க்கைக் கதை விரிவா எழுதணும்... திருநங்கைகள் குறித்த சிறுகதைப் போட்டிக்கு கதை எழுதி, அனுப்ப இருக்கும் எனக்கு இந்தப் புத்தகம் பல விஷயங்களைச் சொன்னது... நல்ல புத்தகம் இந்த வார இறுதியில் விரிவான பதிவாய் எழுதுவோம்.

தடம்

தடம் படம் பார்த்தேன்... வித்தியாசமான படம்... நல்ல த்ரில்லர்... இயக்குநர் மகிழ்திருமேனி பாராட்டுக்குறியவர். இது குறித்தும் விரிவாய் எழுதணும்... பார்ப்போம்.

பார்வைகள் பலவிதம்

கணேஷ் பாலா அண்ணன் அவர்கள் முகநூலில் ஒரு படம் கொடுத்து கதை எழுதுங்க புத்தகம் பரிசு தாரேன்னு சொன்னார். ஆளாளுக்கு எழுத, நானும் எழுதியிருக்கிறேன். நடுவர்களின் தேர்வில் வெற்றி பெற்று புத்தகம் பெறுமா தெரியாது என்றாலும் எப்பவும் போல் உணர்ச்சிக் கதையாய் இல்லாமல் ரொம்ப ஜாலியா கதை சொல்லியிருக்கிறேன். முடிந்தால் தலைப்பைக் கிளிக்கி வாசிங்க.

மரணம் உணர்த்திய பாடம்

சமீபத்திய மரணம் ஒன்று வாழ்வைக் குறித்து அதிகம் யோசிக்க வைத்து இருக்கிறது. என்ன செய்திருக்கிறோம் குடும்பத்துக்கு நாம் என எண்ணங்கள் அலை மோத ஆரம்பித்துவிட்டன. இங்கு நகரும் வாழ்க்கையில் கடனும் தீராது... கஷ்டமும் தீராது என்பதே உண்மை... யாரிடம் பேசினாலும் எதோ இரு அழுத்தத்தின் காரணமாகவே இங்கிருப்பதாகச் சொல்வதைக் கேட்கலாம். இந்த வாழ்க்கை இன்னும் எத்தனை தூரம்..? எத்தனை காலம்..? யோசிக்க வைக்கிறது.

இலக்கிய வட்டம்

நிறைய இலக்கியம் பேசும் நட்புக்களை இங்கு சில மாதத்தில் பெற்றிருக்கிறேன். மணிக்கணக்கில் நிறைய பேசமுடிவது மகிழ்வே என்றாலும் வாழ்க்கையின் இன்னல்கள் மனப் போராட்டத்தையே கொடுத்துக் கொண்டிருக்கின்றன... எதிலும் ஒட்ட முடியா நிலை... எனது கதைகளின் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் தினமும் அழைத்து அது குறித்து விவாதிப்பது மகிழ்வைக் கொடுக்கிறது.

காதலா... காதலா...

பிரதிலிபி போட்டியில் இருக்கும் கதை... இதுவும் ஜாலியான கதைதான். இதுவரை 2200 பேருக்கு மேல் வாசித்து போட்டியில் முன்னணியில் இருக்கும் கதைகளுடன் களத்தில் நிற்கிறது. வாசிக்க நினைத்தால் தலைப்பைக் கிளிக்கி வாசியுங்கள்.

கதையாசிரியன் விஷால்

விஷால் பள்ளியில் ஆங்கிலத்தில் கொடுத்த தலைப்புக்கு சின்னதாய் ஒரு கதை எழுதி மூன்றாம் பரிசும் சான்றிதழும் பெற்றிருக்கிறான். எப்பவாச்சும் நான் கதை எழுதியிருக்கிறேன் பாருங்க... என வாசிப்பான். அவனின் அம்மா, அப்பா மாதிரி நீயும் கதை எழுதுறேன்னு ஏன்டா வெறுப்பேத்துறே படிக்கிற வேலையைப் பாருடா எனத் திட்டினாலும், என்னைப் பொறுத்தவரை ஐந்தாவது படிக்கும் அவனின் செயலை பாராட்டுவதுதான் பிடிக்கும் அது எதுவாகினும். கதை எழுதி பரிசு வாங்கினேன்னு வீட்டில் சொன்னதும் அப்ப அப்பாவுக்கு நீதான் போட்டியாக்கும் என அவனின் அக்கா கேட்க, ஆம் என்றிருக்கிறார். திறமைகள் இருக்கட்டும்... வாழ்வில் எப்பவும் போல் பிறரை மகிழ்விப்பவனாக இருந்தால் போதும்.

மீண்டும் பேசலாம்.
-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

Anuprem சொன்னது…

விஷால் தம்பிக்கு எனது வாழ்த்துக்களும் ...

அவர் பிடித்து செய்யும் போது மிக நிறைவு கிடைக்கும் ..தொடர்ந்து பாராட்டுங்கள்...

பல எண்ணங்களின் கலைவையாக இன்றைய பகிர்வு .

ஸ்ரீராம். சொன்னது…

தேன்சிட்டை(யும்) மிஸ் செய்துகொண்டே இருக்கிறேன். ஒருமுறைப்பார்த்தபோது வடிவமைப்பு அருமையாக இருந்தது.

எங்கள் பகுதிக்கு (உண்மையில் அது உங்கள் எல்லோரின் அப்பகுதி) தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு எங்கள் நன்றி.

கசப்பான நிகழ்வுகளை ஒதுக்கி இனிக்கும்நினைவுகளை மட்டும் தேக்கி வைப்போம்.

ஸ்ரீராம். சொன்னது…

லிவிங் ஸ்மைல் வித்யாவின் புத்தகம் படிக்க வேண்டும் என்பது என் அவாவும்.

தடம் நன்றாயிருப்போபதாய் என் மகன்களும் சொன்னார்கள்.மற்றும் பொதுவான விமர்சனங்களும் பாராட்டுகின்றன. அமேசானில் வராமல் போகுமா என்ன! பார்க்கவேண்டும்!

கணேஷ் பாலாவின் அந்தப் போட்டிக்கு நானும் எழுதவேண்டும் என்று நினைத்து நேரமில்லாமலேயே போனது.

ஸ்ரீராம். சொன்னது…

மரணங்கள் மனங்களை அசைத்துதான் விடுகின்றன.

விஷால் குமாரின் பிள்ளை என்று நிரூபிக்கிறார் போலும். வாழ்த்துகள்.

Avargal Unmaigal சொன்னது…

விஷாலுக்கு வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

விஷாலை ஊக்குவித்து மேலும் கதை எழுதச்சொல்லுங்கள். விஷாலின் திறமைக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!

உங்கள் கதையை வாசிக்கிறோம் தேன்சிட்டில். சுரேஷின் உழைப்பும் தெரிகிறது மின்னூல் இதழில்.

துளதிதரன், கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

காதலா காதலா வாசித்தேன் குமார். ரொம்ப அழகா வித்தியாசமா எழுதியிருக்கீங்க பல இடங்கள் சிரிக்க வைச்சுச்சு...கடைசில பஞ்ச்...ஜாதி கூட இல்ல மதமே வேற....முடிவு என்னாகுமோ...

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மற்ற கதைகளையும் படித்துவிட்டு வரேன் குமார்....

கீதா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முடிவில் உள்ள வரி சிறப்பு...

விஷாலுக்கு வாழ்த்துகள்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பார்வைகள் பலவிதமும் ரொம்ப நல்லா வித்தியாசமா இருந்துச்சு. முடிவு நிஜமாவே எதிர்பார்க்காத ஒன்று குமார். செம...வித்தியாசமான சிந்தனை..

யதார்த்தம் உரையாடல்களில் இப்ப்டித்தான் எல்லா நிகழ்வுக்குமே பாத்தீங்கனா ஒவ்வொரு நாக்கும் ஒவ்வொன்று சொல்லும் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு...அப்படி அவர்கள் கற்பனைக் குதிரையை ஓட்ட நீங்க அதே கற்பனைக் குதிரைய வைச்சே கதையே எழுதிட்டீங்க!!!!

வாழ்த்துகள் பாராட்டுகள் குமார்.

கீதா

துரை செல்வராஜூ சொன்னது…

ஆகா.. விஷாலும் கதை எழுதத் தொடங்கியாயிற்றா?..

கம்பன் வீட்டுக் கட்டுத்தறிகள் சும்மா இருப்பதில்லை...