நாம் அறிந்த மனிதர்களின் சமீபத்திய மரணங்கள் நம்மைப் புரட்டிப் போட்டு விடுகின்றன. அப்படியான நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்தல் என்பது வேதனையைக் கூட்டிக் கொண்டே செல்கிறது. அப்படியானதொரு மறைவு நம் வலைச்சரம் சீனா ஐயாவினுடையது.
நம்மை எல்லாம் இணைத்தது இந்த எழுத்துத்தான்... அதுவும் குறிப்பாக வலையுலகம்... அங்கு எழுத ஆரம்பித்த பின்னர்தான் உலகளாவிய அளவில் ஐயா, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி, தோழன், தோழி என விரிந்தது உலகம். அப்படி விரிந்ததில் கிடைத்தவர்தான் சீனா ஐயா.
'வலைச்சர ஆசிரியராக ஒரு வாரம் இருக்க முடியுமா..?' எனக்கேட்டு விதிமுறைகள் அனுப்பி 'அன்பின்' சீனாவாய் மனசுக்குள் அமர்ந்தவர். எத்தனையோ பேரை ஆசிரியராக்கி, எத்தனையோ பேரை பலருக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர்.
இந்த வார ஆசிரியர் யார்..? நம்மை ஏழு பதிவில் எதாவது ஒன்றில் அறிமுகப்படுத்துவாரா..? என எல்லோரும் ஆவலாய் வாசிக்கும் தளமாய் வலைச்சரம் இருந்தது.
ஒருமுறை ஆசிரியரானதைத் தொடர்ந்து நல விசாரிப்புக்கள், குழந்தைகள் குறித்த விசாரிப்பு என மின்னஞ்சலில் உறவை வளர்த்து வந்தவர் சீனா ஐயா. இந்த வாரம் ஆசிரியராக வேண்டியரால் முடியாத நிலை அதனால நீங்க இருக்க முடியுமா..? என உரிமையுடன் மின்னஞ்சல் செய்வார்.
மூன்று முறை ஆசிரியர் பொறுப்புக் கொடுத்திருக்கிறார். பதிவுகள் குறித்து தனிப்ப்பட்ட முறையில் மின்னஞ்சல் செய்வார். பல முறை பலரால் அறிமுகப்படுத்தப்பட்டவன் நான் என்பதில் பெருமை எனக்கு உண்டு. அதனால்தான் மனசு குமராய் பலர் மனதில் இடம் பிடித்திருக்கிறேன்.
அதன் பின்னான அன்பின் தொடர்ச்சியால் எங்களின் இல்லப் புதுமனை புகுவிழா குறித்துச் சொன்னபோது எப்படியும் நான் வந்துவிடுவேன் என்றார். அவருக்கு அன்றைய தினம் நிறைய விஷேசங்கள் இருந்தபோதும் சொன்னபடி மதியத்துக்கு மேல் அம்மாவுடன் வந்து வாழ்த்திச் சென்றார்.
அவர் சற்று தளர்ந்தபோது வலைச்சரமும் தளர்ந்து போனது என்பதே உண்மை. அதன் பின் அது எழவேயில்லை... யாருமே எடுத்து நடத்த நினைக்கவும் இல்லை என்பதே வேதனைதான்.
நண்பர் தமிழ்வாசியிடம் பேசும்போது வலைச்சரத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் எனப் பேசினோம். ஏனோ அதைச் செயல்படுத்த முடியாமல் போனது. இப்போது வலைப்பூக்களும் 2008-2014 காலகட்டத்தில் இருந்தது போல் இல்லை... இன்றைக்கு முகநூல், டுவிட்டர் என மக்கள் நகர்ந்து விட்டது கூட காரணமாக இருக்கலாம்.
எப்போது மின்னஞ்சல் அனுப்பினாலும் அதில் என் பேத்தியும் பேரனும் நலமா என ஸ்ருதி, விஷாலைக் குறித்துக் கேட்காமல் இருக்க மாட்டார். சிறியவர் பெரியவர் என வித்தியாசமெல்லாம் பாராது எல்லாருடனும் புன்னகையுடன் நட்பைக் கொண்டாடியவர் அவர்.
மதுரைக்கு அடிக்கடி செல்லும் நிலையில் இருந்தும் கூட அவர் உடல்நலமில்லாது இருந்தார் என்பதை அறியவோ, நண்பர் தமிழ்வாசியைத் தொடர்பு கொண்டு போய் பார்க்கவோ செய்யவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.
எங்கு சென்றாலும் அம்மாவுடன்தான் செல்வார் என்று கேள்விப்பட்டதுண்டு. எங்க வீட்டுக்கும் இருவரும் வந்துதான் வாழ்த்தினார்கள். அவரின் மறைவு அம்மாவுக்கு மிகப்பெரிய வேதனையை வாழ்நாள் முழுவதும் கொடுத்துக் கொண்டிருக்கும். அதிலிருந்து அவர் மீளவேண்டும் என்று சொல்வதைவிட அந்த வேதனையத் தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திப்போம்.
தமிழ், எழுத்து, நட்பு என பரவலான பாதையில் பயணித்த ஐயாவின் மரணம் வலையுலகுக்கு மிகப்பெரிய இழப்பு. பிறக்கும் போதே இறக்கும் தேதியை எழுதி விடுகிறான் இறைவன். இன்னும் கொஞ்சக்காலம் இருந்திருக்கலாம் என நாம் ஆறுதலாய்ப் பேசினாலும் வந்த வேலை முடியும் போது எல்லாரும் செல்லத்தானே வேண்டும்.
அமைதியாய் ஓய்வெடுங்கள் ஐயா...
நீங்க ஊற்றிய தமிழ் என்னும் தண்ணீர் இன்னும் வலைச்சரத்தின் வேரில் இருக்கத்தான் செய்கிறது. உங்கள் நினைவாய்... வலைச்சரத்தை மீண்டும் தொடர்ந்து இயக்க முயற்சிகள் மேற்கொள்வோம் ஐயா.
உங்கள் ஆத்மா சாந்தியடையவும் குடும்பத்தினர் இந்த பேரிழப்பில் இருந்து மீண்டு வரவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ஐயா.
ஐயா... நினைவிருக்கும் வரை நீங்கள் எங்களுடன் இருப்பீர்கள்.
மறக்கக்கூடிய பெயரா இது.
'அன்பின்' சீனா
போட்டோவுக்கு நன்றி : கரந்தை ஜெயக்குமார் ஐயாவின் பதிவில் வந்தது... கூகுளார் மூலம் கிடைத்தது.
-'பரிவை' சே.குமார்.
11 எண்ணங்கள்:
நட்பு வட்டம் பெறுவதற்கு காரணமாக இருந்த நல்லதொரு உள்ளத்தை இழந்து விட்டோம்...
வலைச்சரம் - சரசரமாக நினைவுகள் வந்து என்னை வாட்டுகிறது...
சீனா அய்யா அவர்களின் நினைவுகளை மிகவும் சிறப்பாக பகிர்ந்திருக்கிறீர்கள் குமார்! அவருக்கு என் அஞ்சலிகள்!
அன்பான மனிதர். வலையுலகிற்குப் பேரிழப்பு. ஆழ்ந்த அஞ்சலிகள். அவர் தம் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
துளசிதரன், கீதா
சீனா சாரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர்களுக்கு இறைவன் ஆறுதலையும், தேறுதலையும் தர வேண்டும்.
நினைவுகளில் என்றும் வாழ்வார்.
நானும் அவரை சந்தித்து உரையாடி இருக்கிறேன் சிரித்தமுகம் நினைவுகளில்.
மீளாத்துயிலில் இருக்கும் அன்பின் சீனா ஐயாவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
நிச்சயமாக வலையுலகம் வாழும்வரை இவரது பெயரும் வாழும்...
16.10.1950 இல் பிறந்தவரும்,
’அன்பின் திரு. சீனா ஐயா’ என்று வலையுலகில் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவரும்,
வலையுலக மூத்த பதிவருமான
’ஆத்தங்குடி திரு. பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார் அவர்கள்
16.03.2019 சனிக்கிழமையன்று அவரின் சொந்த ஊரான மதுரையில், காலமானார் என்ற அதிர்ச்சியும், துக்கமும் தரும் செய்திகள் பலரின் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
என்னுடன் மிகவும் பிரியமாகவும், அன்புடனும், பாசத்துடனும் பழகி வந்த அவரின் இந்தப் பிரிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மிகவும் உயர்ந்த எண்ணங்கள் கொண்ட, அருமையான, மிகவும் நல்ல மனிதர் அவர்.
அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
அவரின் பிரிவினால் வாடும் அவரின் அன்பு மனைவி + இதர குடும்பத்தார் அனைவருடனும் என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். :(
அவருடனான என் சந்திப்பு பற்றி என் வலைத்தளத்தில் அடியேன் படங்களுடன் எழுதியுள்ள பதிவுகளில் சிலவற்றிற்கான இணைப்புகள் இதோ:
https://gopu1949.blogspot.com/2013/10/61-2-2.html
https://gopu1949.blogspot.com/2015/02/4-of-6.html
ஐயா அவர்களைப்பற்றி மிக அருமையான நினைவுகளை பகிர்ந்துள்ளீர்கள் .ஆழ்ந்த இரங்கல்கள் .
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலும் தேறுதலும் தர இறைவனிடம் பிரார்த்திப்போம்
நல்ல மனிதர். அவருடைய நினைவுகள் பதிவுலகில் இருக்கும் அனைவரிடமும்...
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
எனது வருத்தங்களும் ...
வலைச்சரம்
என்னையும் அறிமுகம் செய்து வைத்தது.
வலைச்சரம் ஊடாகப் பலரையறிய முடிந்தது.
ஏழலுக்கு ஒரு வலைச்சரம் ஆசிரியராகப் பலர்
தமிழ் வலைப்பதிவர்களை அறிமுகம் செய்திட
வலைப்பதிவர்களின் சிறந்த பதிவுகளை அரங்கேற்ற
கடின உழைப்பை வழங்கிய தமிழ் பற்றாளர்
சினா ஐயாவைத் தான்
வலையுலகம் ஒருபோது மறவாது! - அவரது
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்!
கருத்துரையிடுக