மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 4 பிப்ரவரி, 2019

மனசின் பக்கம் : இழப்பும் கதைகளும்

நேற்றைய நிகழ்வொன்று மனதை என்னமோ செய்கிறது. இரண்டாண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டு வாழ்க்கை... வீடு கட்ட வேண்டுமென்ற வேட்கையோடு உழைத்தவன்... மனைவி இரண்டாவதாக கருவுற்றிருக்கும் போது வெளிநாடு வந்தவன் பிறந்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் மகளைப் பார்க்கவில்லை என்பதால் மகளையும் பார்த்துவிட்டு வீடு கட்டுவதற்காக தச்சு (பூமிபூஜை) செய்துவிட்டு வரலாம் என்று வந்திருக்கிறான். மிகவும் சந்தோஷமாக பத்து நாட்கள் கழிந்திருக்கிறது... மகளுக்கும் தனக்கும் கோவிலில் மொட்டை போட்டிருக்கிறான்.

நேற்று மாமனார் வீடு சென்று திரும்பியவனுக்கு விதி ஓடு பாலத்தின் ஓரமாக நடப்பட்டிருக்கும் கல்லின் மீது அமர்ந்திருந்திருக்கிறது. பைக்கைக் கல்லில் மோதியதில் தூக்கியெறியப்பட்டு பாலத்துக்குள் விழுந்திருக்கிறான். வண்டியும் சேர்ந்துதான் விழுந்திருக்கிறது. வண்டிக்கு முன் பக்கத்தில் மட்டும் அடி... அவன் பாக்கெட்டில் வைத்திருந்த போன் ஸ்விட் ஆப் கூட ஆகவில்லை... ஆனால் அவன் உயிர் போயிருக்கிறது.

அவன் விழுந்து கிடந்ததை யாருமே பார்க்கவில்லை என்பதுதான் கொடுமை என்றாலும் அந்தப் பக்கம் போக்குவரத்து அதிகமில்லாத ஏரியா என்பதால் யாருக்கும் தெரியவில்லை என்பதே காரணம். போன் அடிக்கும் சப்தம் கேட்டு அவ்வழி போன ஒருவர் பார்த்து விபரம் சொல்லியிருக்கிறார். எல்லாம் முடிஞ்சி போச்சு... 

அந்தக் கல் காலையில்தான் ஒரு குடும்பத்தைச் சாய்த்திருக்கிறது.. காயங்களுடன் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்... உயிரை எடுக்க முடியவில்லை என்பதால் காலன் காத்திருந்திருப்பான் போல... மாலையில் தனித்து வந்தவனை தள்ளிக் கொண்டு போய்விட்டான்.

இதே போன்ற ஒரு நிகழ்வு நான் கல்லூரியில் பணி புரிந்த போது எங்கள் கல்லூரி ஆசிரியரின் ஒரே மகனுக்கு நிகழ்ந்தது. இதே போல் ஒரு விபத்து... உடனே காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் காப்பாற்ற முடியவில்லை... திருமணமாகி ஓராண்டு கூட ஆகாதவன் அவன்... இவன் இரு குழந்தைகளின் தகப்பன்.

இத்தனை சிறிய வயதில் கனவுகளைச் சுமந்தவன் பெற்றவளையும் கட்டியவளையும் கண்ணீரைச் சுமக்க வைத்துச் சென்று விட்டான். என்னத்தைச் சொல்வது..? நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் மனசுக்கு உகந்ததாய் இல்லை... மனைவிக்கு நெருங்கிய உறவு... எனக்கும்தான்... மனைவியின் அழுகை என்னையும் ஆட்டி வைக்கிறது. வலிகளைச் சுமக்கும் வாழ்க்கை எத்தனை கொடுமையானது.

ந்த மாதம் வாழ்க்கை எப்படியோ நகர்ந்தாலும் எழுத்து என்னும் வாழ்வின் இன்னொரு பக்கம் மகிழ்வாய்த்தான் தொடங்கியது. தமிழ் நெஞ்சம் இதழில் முதல் முறையாக... அதுவும் முதல் தடவை அனுப்பிய 'மனிதர்கள் பலவிதம்' என்ற சிறுகதை வெளிவந்தது. தேன்சிட்டு மின்னிதழில் ஒவ்வொரு மாதமும் வெளிவரும் சிறுகதை வரிசையில் இந்த மாதம் 'ஆராதனா' சேர்ந்து கொண்டது. காற்றுவெளியில் ஐந்தாவது சிறுகதையாக 'யாசகம்' வெளியாக இருப்பதாக பிழை திருத்த அனுப்பிய பிரிண்டிங்குக்கு முந்தைய காப்பி காட்டிக் கொடுத்தது என எழுத்து மகிழ்வின் பக்கமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. கதைகளுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைப்பது மகிழ்வைத் தருகிறது.

'மணல் பூத்த காடு' நாவல் வாசிப்புக்குப் பின் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனை இடங்கள் இருக்கின்றனவா... இதற்குப் பின் இவ்வளவு அரசியல் இருக்கா... என நிறைய யோசிக்க வைத்தது. அதே நேரம் நிறைய விஷயங்களில் சரியா தவறா என்ற குழப்பங்கள் நீடித்தது... சில இடங்கள் வலிந்து திணிக்கப்பட்டதா... சில இடங்கள் இதற்கு மேல் நுழைய வேண்டாமென குறைக்கப்பட்டதா... நாவல் என்பதன் வடிவத்தில் மாறுபட்டு நிறையச் செய்திகளைத் தாங்கிப் பயணிப்பது ஒரு கட்டத்துக்கு மேல் அயற்சியாய் இருக்கிறதா... வஹாபிகளைக் குறித்து இவ்வளவு விரிவாக, மிகவும் தைரியமாக பேசியிருக்கிறாரே... பிரச்சினைகள் எழதா... என்றெல்லாம் நிறைய யோசனைகளும் கேள்விகளும் எனக்குள்ளே... 

எழுத்தாளரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு... சில நாட்களாக எங்களுக்குள் சில புரிதல்களின் காரணமாக சின்ன மனவேறுபாடு... இருந்தும் என்ன... எதையும் களைதல் நல்லது... வருத்தப்பட்டு வாழாதிருந்து என்னத்தைக் கொண்டு போகப் போகிறோம்... அண்ணேன்னு சொன்னா நித்யான்னு அணைச்சிக்கிறவருதானே அவர்... என்ன வருத்தமிருந்தாலும் புத்தகத்தைக் கொண்டு வந்து உனக்குத்தான் கொடுக்கணும்ன்னு கூப்பிட்டுக் கொடுத்தவருதான் அவர்... போனில் கூப்பிட்ட போது எடுக்கவில்லை... பின்னர் பேசலாம் என்று நினைத்த நேரத்தில் அழைத்தார்.

என் கேள்விகளுக்கு மட்டுமின்றி இன்னும் நிறைய விஷயங்களை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார்... விளக்கமெல்லாம் விரிவாய்ச் சொன்னார். நீண்ட நாட்களுக்குப் பிறகு எங்களுக்குள் மனம் விட்டுப் பேசிய நிகழ்வு அது. வலிந்து ஏன் திணித்தேன் என்பதற்கெல்லாம் விளக்கம் கொடுத்தார். மணல் பூத்த காடு நாவலுக்காக அவர் உழைத்ததை நான் அறிவேன். மிகவும் சிறப்பானதொரு உழைப்பு அது... எவ்வளவு செய்திகளைச் சேகரித்துக் கொடுத்திருக்கிறார். சௌதி பற்றி இதற்கு மேல் விவரமாக அறிந்து கொள்ள முடியுமா தெரியவில்லை... இன்னுமொரு நாவலில் இதைவிட அதிகமாகப் பேசுவாரா தெரியாது. அவரின் உழைப்புக்கேற்ற அங்கீகாரத்தைப் பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மணல் பூத்த காடு பற்றி விரிவாய் எழுதணும்... நீ உன் மனசில்பட்டதை மறைக்காமல் எழுதணும் என அவரும் சொன்னார்... வீட்டில் கணிப்பொறி இல்லை என்பதே எழுதுவதில் முட்டுக்கட்டையாய்... அடுத்த பதிவாய் எழுத வேண்டும்.

ன்னைக்கு வேலை இல்லை... நாளை முதல் நகர முடியாத வேலை வந்துவிடும். அப்ப மனநிலையை மாற்ற என்ன பண்ணலாம்... இரண்டு போட்டிகளுக்காக கதை எழுதலாமென முடிவெடுத்து எழுதிய கதைகளில் இருந்து கீழே சில வரிகள் உங்கள் பார்வைக்காக....

முதல் கதை திருநங்கைகள் பற்றியதாய்...

// "அலோ... பெர்சனலா சம்சாரிக்கணும்ன்னு பறைஞ்சிட்டு நீங்கள் என்னை நோக்கிக்கிட்டே இருக்கு... இதுக்கா இவட வான்னு கூட்டியாந்தது..." என்ற அவளின் குரலால் மீண்டும் சுயத்துக்கு வந்தான்.

"எப்படிச் சொல்றதுன்னு தெரியலை... பட்... உங்க மேல... எனக்கு ரொம்பப் பிரியம்... ஐ திங்க்... ஜ லவ் யூ..." மெல்லச் சொன்னான்.

உதட்டில் புன் சிரிப்புடன் "ஆமா... என்னைப் பற்றி என்ன தெரியும்..."

"உங்களுக்கு மேரேஜ் ஆகலைன்னு தெரியும்... அது மட்டும் போதுமே.... வேறென்ன தெரியணும்..."

"லவ் பண்ண அது மட்டும் மதியோ..? பாஸ்ட் லைப்பெல்லாம் அறிய வேண்டாமா..?"

"எனக்குப் பிரசண்ட் மட்டும் போதும்... பாஸ்ட்டெல்லாம் வேண்டாம்..."//

இரண்டாவது காதல் கதை போட்டிக்கானது

//"அதான் சொன்னேன்ல ஆமான்னு..." கொஞ்சம் சத்தமாகச் சொன்னேன்... எனக்குப் பயமில்லை என்பதாய்க் காட்டிக் கொள்ள... ஆனால் உள்ளுக்குள் சோயிப் அக்தர் பாலை எதிர் கொள்ள இருக்கும் கும்ளேயின் மனநிலையில்தான் இருந்தேன்.

"என்னது ஆமாவா... உனக்கு முன்னாடி ரெண்டு பேரு இருக்குதுக... ரெண்டும் ரெண்டு டிகிரி படிச்சிருக்குக.. உங்கண்ணன் நல்ல வேலையில இருக்கான்... அக்கா வேலை தேடிக்கிட்டு இருக்கா... அதுகளே லவ்வுகிவ்வு சுத்தாம இருக்குதுக... உனக்கு இந்த வயசுல லவ்வு கேக்குதோ... லவ்வு..." எனக் கத்தியபடி எழுந்தார்.

'இப்பல்லாம் பள்ளிக்கூடம் படிக்கையிலையே லவ் பண்ணுதுக.. பப்ளிக்ல லிப் டு லிப் கிஸ் கொடுத்துக்கிட்டு நிக்கிதுக.. காலேசு படிக்கிற எனக்கு லவ்வு கேக்குற வயசில்லையாமே..' என நினைத்துக் கொண்டேன்.//

முதல் செய்தியில் இருந்து மீள முடியவில்லை... எத்தனை கொடுமையானது இந்த இழப்பு... வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை... இழப்புக்குப் பின்னேயான வாழ்க்கையின் வெற்றிடம் எத்தனை கொடுமையானது... இன்று முழுவதும் மனசு அலைபாய்கிறது. மாற்றவே கதை எழுதினேன் என்றாலும் ரணமான மனசு எதையோ நினைத்துத் தவிக்கிறது.
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

Avargal Unmaigal சொன்னது…

இளம் வயது இழப்பு இப்போ மிக அதிகமாக கேட்க தொடங்கி இருக்கிறது போல இருக்கு.... அமெரிக்க வந்த பலர் அதிலும் ஆண்கள் பலர் மாரடைப்பு அது இது என்று இளம் வயதிலே குழந்தைகளை மனைவியை விட்டு இறக்கும் செய்து கேட்டு கொண்டே இருக்கிறது மனதிற்கு மிகவும் கஷ்டமாகவே இருக்கிறது அட்லீஸ்ட் இங்கே உள்ளவர்கள் ஒரு கணிசமான தொகையை டொனேசனாக வசூலித்து கொடுத்து விடுகிறார்கள் குடும்ப தலைவனின் இழப்பிற்கு அது ஈடு இல்லை என்றாலும் வாழ்க்கையை சாமாளித்து மீண்டும் வர ஒரு உதவியாக இருக்கும்.. ஆனால் இந்தியாவில் இப்படி நடக்கும் போது அது போல யாரும் செய்கிறார்களா என்று தெரியவில்லை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பலி வாங்கிய கல், நிகழ்வு மனதில் தைத்தது. உங்களின் சிறுகதை சாதனைகளை ரசித்து வருகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விபத்து நடந்தது மிகவும் வருத்தப்பட வைக்கிறது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆம் அண்ணா...
இப்போது சின்ன வயது இழப்பு அதிகமாகிறது...
இங்கும் (அமீரகம்) நிறைய இளம் வயதினர் மாரடைப்பால் இறக்கிறார்கள்.
இவரின் இழப்பு மிகக் கொடுமையானது.
நீங்கள் சொன்னது போல ஊரில் செய்வதில்லை...
இருப்பினும் சில குடும்பங்களில் அண்ணண் தம்பிகள் கடைசி வரை பார்ப்பார்கள்.
என்ன இருந்தாலும் அந்த பெண்ணுக்கும்... பிள்ளைகளுக்கும்... கஷ்டம்தானே...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாம் அய்யா...
வருத்தமான நிகழ்வு...
எனது கதைகளை ரசிப்பதற்கு நன்றி அய்யா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வருத்தமான... வேதனையான நிகழ்வு அண்ணா...

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) சொன்னது…

இழப்பின் வலி என்ன என்று என்னை கேளுங்கள்.மகனை இழந்து 13 வருடங்களாக நெருப்பாற்றில் நின்று கொண்டிருக்கிறேன்.
karthik amma

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

முதல் செய்தி மனதை அசைத்துவிட்டது. மிகவும் வேதனை தரும் விஷயம்.

உங்கள் சிறு கதைகள் படைப்பிற்கு வாழ்த்துகள் குமார்.

துளசிதரன், கீதா

கீதா: இப்போதெல்லாம் மரணச் செய்திகள் அதுவும் இது போன்ற சிறு வயது மரணச் செய்திகளைக் கேட்பதே மனதை என்னவோ செய்கிறது...இனம்புரியா பயமும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…


அம்மா...
அந்த வலியை உணர்ந்தால்தான் தெரியும்..
நாங்களும் மனைவியின் ஒரே தம்பியை இழந்து தவிக்கிறோம் அம்மா...
அவனைப் பெற்றவர்கள் படும் படு இருக்கே... சொல்லி மாளாது...
உங்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை உணர்கிறேன் அம்மா...
மகனை/ளை இழந்தவர்களுக்கு காலம் கூட மருந்திடாது அம்மா...

ஸ்ரீராம். சொன்னது…

முதல் செய்தியின் பாதிப்பில் மற்ற செய்திகள் மங்கிவிட்டன. கஷ்டமாய் இருக்கிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா... அக்கா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

உண்மை அண்ணா... பெரிய இழப்பு இது.