மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 11 பிப்ரவரி, 2019

காற்றுவெளி சிறுகதை : யாசகம்

பிப்ரவரி மாத (மாசி) காற்றுவெளி இதழில் எனது 'யாசகம்' என்ற சிறுகதை வெளி வந்திருக்கிறது. கதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

இந்தக் கதை முகநூலில் வந்த யாசகம் வேண்டாம் என்று சொன்ன ஒரு பெரியவர் குறித்ததான ஒரு கருத்தினை மையமாக வைத்து எழுதிய கதை...  இப்படி எழுதுவது முதல் முறை என்றாலும் கதை நல்லாத்தான் வந்திருக்கும் போல... அதான் காற்றுவெளியின் முதல் பக்கத்தைப் பிடித்திருக்கிறது...

ஸ்ரீராம் அண்ணா படத்தைச் சுட்டி வாசிப்பதில் சிரமம் இருப்பதாக கருத்தில் தெரிவித்திருந்தார். அலுவலக கணிப்பொறி என்பதால் இதழில் இருந்து எடுத்த போட்டோவை இணைப்பது சுலபமாகத் தெரிவதால் கடந்த பதிவுகளில் செய்தது போல் செய்தேன். இப்போது கதையைப் பகிர்ந்திருக்கிறேன்.

நன்றி ஸ்ரீராம் அண்ணா...

(இது கதை வந்திருக்குன்னு காட்டிக்க.. :))
யாசகம்

பேருந்தில் ஏறப்போனபோது படியினருகில் நின்ற கண்டக்டர், 'ஆனாப்புதூர், ராம்நகர் நிக்காது சார்... தேவகோட்டை பஸ்ஸ்டாண்ட்தான்' என்றதும் நான் சிரித்தபடி உள்ளே ஏறி இருவர் இருக்கும் இருக்கையில் சன்னலோரமாக அமர்ந்து கொண்டேன்.

இந்தக் கண்டக்டர்கள் எப்பவும் இப்படித்தான்... அங்க நிக்காது.. இங்க நிக்காதுன்னு சொல்லிட்டு எல்லா இடத்திலும் நிப்பாட்டி ஆள் ஏற்றுவார்கள். நாம கேட்டா நிக்காதுன்னு சொல்லி ஏற விடமாட்டார்கள். பலர் வீம்புக்கு ஏறி 'ஏன் நிக்காது... அது ஸ்டேஜ்தானே... அங்க நிக்கிம்ன்னுதானே ரூட் வாங்கினீங்க' அப்படின்னு ரூல்ஸ் பேசி ஊரைவிட்டு நூறு நூற்றம்பது அடி தள்ளி இறக்கிவிடபடுவார்கள்.

ஒரு சில கண்டக்டர்கள் நிக்காதுன்னு சொல்ல மாட்டாங்க... 'ராம்நகருங்களா... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.... கிளம்பும் போது ஏறிக்கலாம்... இப்பவே ஏறி சீட்ல உக்காந்துக்கிட்டீங்கன்னா... லாங்க் ரூட் ஆளுங்க இடமில்லைன்னு ஏறமாட்டாங்க'ன்னு சொல்லி ஏத்திப்பாங்க... இந்தக் கண்டக்டரைவிட அவங்க நல்லவங்கன்னு தோணுச்சு.

என் யோசனையை தடுப்பது போல "தம்பி இங்க ஆளு வருதா?"என்ற குரல் கேட்டது. அவரைப் பார்த்தால் எழுபது வயசிருக்கும்... பழுப்பேறிய வேஷ்டி, பழுபேறிய சட்டை... தும்பைப் பூவாட்டம் முடி... கையில் ஒரு மஞ்சப் பை... 'இல்ல... உக்காருங்க' என்றதும் என் மீது படாதவண்ணம் ஓரமாக உக்கார்ந்தார்.

'ஐயா... நல்லாச் சிலாவத்தா உக்காருங்க... எதுக்கு மழையில நனைஞ்ச கோழி மாதிரி உக்கார்றீங்...' என்று சிரித்ததும் நன்றாக உட்கார்ந்து கொண்டு மஞ்சப்பையை மடியில் வைத்துக் கொண்டார்.

"தம்பி... நீங்க எங்க போறீக?"

"ஒரு வேலையா தேவிபட்டினம் வரைக்கும் போறேங்க..."

"இது திருவாடான போவுமா?"

"என்னய்யா பஸ்ல ஏறிக்கிட்டு திருவாடானை போகுமான்னு கேக்குறீங்க? கண்டக்டருக்கிட்ட கேக்கலையா...?"

"இல்ல... அங்க ஒரு டிரைவரு நின்னாரு... அவருக்கிட்ட கேட்டதுக்கு இந்த வண்டி போகும்ன்னு சொன்னாரு... நா இதுல ஏறுறப்ப கண்டக்டரு இல்லயே..."

"அப்படியா... இது போகும்..."

"ம்... ஒரு செல வண்டிக்காரனுக வெளக்குல எறக்கிவிட்டுட்டு ஊருக்குள்ள போவாதுன்னு சொல்லிருவானுக... வெயில்ல நடக்க முடியாது பாருங்க..."

"இல்ல... இது உள்ள போகும்... ஆமா நீங்க திருவாடானைதானா...?"

"பக்கத்துல... கிளியூருங்க... திருவாடானயில இருந்து டவுன்பஸ் போவும்..."

"அப்படியா... மகிழ்ச்சி... ஆமா இங்க எங்க வந்துட்டுப் போறீங்க...?"

"மவன் வூட்டுக்கு... பேரம்பேத்திய பாத்துட்டு வாறே..." சிரித்தார்.

"எத்தனை பசங்க உங்களுக்கு?"

"ரெண்டு பொண்ணுக... ஒரு பய..."

"பொண்ணுங்க..?"

"ஒண்ணு மதுர மேலூருல இருக்கு... இன்னொன்னு பட்டுக்கோட்டப் பக்கம்..."

"எல்லாரையும் தூரத்துல கட்டிக் கொடுத்துட்டிய..."

"பக்கத்தூருலதான் கட்டிக் கொடுத்தே... தொழில் பண்றேன்னு அங்கிட்டு பொயிட்டாக... எங்க இருந்தாலும் நல்லாருந்தாச் செரிதானுங்களே..."

"ஆமா... சரி உங்க பையன் இங்க என்ன பண்றார்..?"

"டெலிபோனு ஆபீசுல இஞ்சினியரு..."

"எங்கே எக்சேஞ்சுலயா..?"

"ஆமா..."

"அப்ப அவரு கூட இருக்க வேண்டியதுதானே..?"

பெரியவர் பேசாமல் அமர்ந்திருந்தார். பஸ் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது.

"என்னங்க பதிலைக் காணோம்..."

"என்னத்தச் சொல்ல தம்பி... பயலுக்கு பாசமிருக்கு... ஆனா பக்கத்துல வச்சிக்க முடியாத நெலமயில இருக்கான்... வந்தவளுக்கு வசதி கொஞ்சங் கூட... இப்பவும் வசதியா இருக்காளா... அதனால எங்கள பெத்தபுள்ளகிட்ட கூட பேச விடுறதில்ல..." கண் கலங்கியது.

"உங்க மகன் எதுத்துக் கேக்க மாட்டாரா..?"

"எங்க... படிக்கிற காலத்துல எல்லாத்துக்கும் நம்மள எதுத்துக்கிட்டு நிக்கிறானுக... இப்ப பொட்டிப்பாம்பா இருக்கானுக... இப்பக்கூட அவ பேச்சு சரியில்ல... கெளம்பி வந்துட்டேன்... பயலுக்குத் தெரியாது... பேரம்பேத்திக பாசமா இருக்குங்... ஆனா அதுகளையும் நெருங்க விடமாட்டா... நாஞ் சுத்தமில்லையாம்..." விரக்தியாய் சிரித்தார்.

"உங்க செலவுக்கு பணம் கொடுப்பாரா..?"

"முன்ன மாசாமாசம் கொடுத்தான்... இப்ப எப்பவாச்சும்..."

எனக்கு வலித்தது....

என்ன மனிதர்கள் இவர்கள்...

இந்த மனிதன் கண்டிப்பாக வயலில் கிடந்து உழைத்து படிக்க வைத்திருப்பார். கஷ்டப்பட்ட மனுசனை கடைசி காலத்துல கூட பாக்காத பையன் படித்து என்னத்தைக் கிழித்தான் என்று நினைத்தேன்.

என் மனசைப் படித்தவர் போல "தம்பி அவனத் தப்பா நெனக்காதீக... வாழ்க்க அவன மாத்திருச்சு... அம்புட்டுத்தான்... எங்களுக்காக அவகிட்ட பேசினா அவனோட சந்தோசம் போயிரும்... அவன் சந்தோசமா இருக்கட்டும்... அது போதும்..." என்றார்.

"பிள்ளை நல்லாயிருந்தாப் போதும்ன்னு நினைக்கிறீங்க பாருங்க... இதுதான் பெத்த மனசு... அப்பா நல்லாயிருக்கணும் நெனக்கிற பிள்ளை மனசு ரொம்பக் கம்மி..." என்றவன் "ஆமா உங்க மனைவி..?" மெல்லக் கேட்டேன்.

"அவ மவராசி... ஆறு மாசத்துக்கு முன்னால பொயிட்டா...." என்று அவர் சொன்ன போது ஒரு ஆம்புலன்ஸ் சைரனுடன் எங்கள் பேருந்தைக் கடந்து சென்றது.

பேச்சை நிறுத்தியவர் அதையே வெறித்துப் பார்த்து "பாவம் ஆரோ ஒருத்தருக்கு நேரம் வந்திருச்சு போல...  எம் பொண்டாட்டியவும் இப்படித்தான் தூக்கிட்டு ஓடினோம்... சண்டாளி பொயிட்டா..." தோளில் கிடந்த துண்டால் வாய் பொத்தினார். கண்ணீர் இறங்கியது.

ஆறுதலாய் அவரின் தோள் தொட்டேன்.

"முடியாம இருந்தாங்களா..?"

"நல்லாயிருந்தா... ஒடம்புக்கு முடியல டாக்டருக்கிட்ட போவனுமுன்னு மகனுக்கிட்ட கேட்டா, அப்ப மருமவ முடியலன்னா போய்ச் சேராம இருந்துக்கிட்டு எங்க வாநாளயும் வதயயும் ஏன் வாங்குறீகன்னு கேட்டா, ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்ன்னு கிராமங்கள்ல சொல்வாக.... அவ சொன்ன அந்தச் சொல்லு பொறுக்காம வயலுக்கு வாங்கி வச்சிருந்த பீரிடான தின்னுட்டா... ஒத்தச் சொல்லு கொன்னுருச்சு... யாருக்கு எப்போன்னு எழுதியிருப்பானுல்ல... அவ பொயிட்டா... நாங் கெடந்து நாயா லோல்படுறே..." கண் கலங்கினார்.

'டிக்கெட்... டிக்கெட்...' என்று கண்டெக்டர் வரவும் 'நான் எடுக்கிறேன் ஐயா' என்ற போது 'வேணாந்தம்பி சில்லறை இருக்கு' என்றார்.

நானும் திருவாடானைக்கே டிக்கெட் எடுத்தேன்.

"தேவிபட்டினம் போறேன்னு சொன்னீக..."

"இல்ல உங்க கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு உங்களை பஸ் ஏத்திவிட்டுட்டுப் போகலாமேன்னுதான்..." என்றதும் சிரித்தார்.

"மனைவி சாவுக்கு மருமகளோட பேச்சுத்தான் காரணம்ங்கிறது உங்களுக்குத் தெரியும்... அப்படியிருந்தும் மகன் வீட்டுக்குப் போறீங்க..?"

"என்ன தம்பி செய்ய... அவனைப் பெத்துட்டோம்... பேரம் பேத்திகள பாத்துப்புட்டோம் இல்லயா..."

"செலவழிவுக்கு என்ன பண்றீங்க..?"

"பொண்ணுக வாறப்போ எதாவது கொடுத்துட்டுப் போவாக... ஒத்தக்கட்டக்கு என்ன செலவு தம்பி... பேரம் பேத்திகள பாக்கப் போனாத்தானே செலவு... ஆடு மாடு வச்சிருக்கே... பால் ஊத்துறே... வெவசாயம் இருக்கு... முடிஞ்சவரைக்கும் அதுகள வச்சி ஓட்டிட்டு முடியாதன்னக்கி அவள மாதிரி பீரிடானோ பால்டாலோ சாப்பிட்டு போவண்டியதுதானே..."

"ஐயா...  நீங்க நல்லாயிருப்பீங்க... சாவை நீங்களே தேடிக்காதீங்க... நீங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமப் போயிரும்.." என்று அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டபோது என் கண் கலங்கியது.

திருவாடானையில் இறங்கி "வாங்க எதாவது சாப்பிடலாம்" என்றதும் "வேணாந்தம்பி... சாப்பிட்டுத்தா வந்தே..." என்று மறுத்தார்.

வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல "ரெண்டு இட்லி போதும்ய்யா..." என்றவருக்கு கூடுதலாக ஒரு மசாலா தோசை வாங்கிக் கொடுத்தேன்.

அவரிடம் தண்ணீர் பாட்டில் ஒன்றையும் வாழைப்பழமும் வாங்கிக் கொடுத்தபோது "எதுக்கு தம்பி இதெல்லாம்?" என்றார்.

"எனக்காக பாடுபட்ட எங்கப்பா மகன் தலையெடுத்துட்டான் இனி நம்ம கஷ்டம் தீர்ந்துருச்சுன்னு சந்தோஷப்பட்டார்... அவரை உக்கார வச்சி சோறு போடணும்ன்னு ஆசைப்பட்டேன்... ஆனா முதல் மாச சம்பளம் வாங்குறதுக்கு முன்னால விபத்துல அவரு பொயிட்டாரு... உங்களைப் பாத்தா எங்கப்பா மாதிரி இருக்குய்யா..." அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு சொல்லும் போது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.

"ஒங்க மனசுக்கு நல்லாயிருப்பீங்க தம்பி... அந்த பழனி முருகன் தொணயிருப்பான்" என்றார்.

பஸ்ஸில் அமர வைத்து கண்டக்டரிடம் 'கிளியூருக்கு ஒரு டிக்கெட் கொடுத்துருங்க... இந்தாங்க காசு' என்ற போது 'வேண்டாந்தம்பி எங்கிட்ட இருக்கு வாங்கிக்கிறேன்' என்றதோடு நில்லாமல் தனது இடைவாரில் கைவிட்டு தேடி ஒரு அம்பது ரூபாய் சில பத்து ரூபாய் நோட்டுக்களையும் எடுத்தவர்  'தப்பா நெனக்காம வாங்கிக்கங்க தம்பி... நா ஆருக்கிட்டயும் யாசகம் வாங்குறதில்ல... என்னய பழனி முருகன் இன்னும் அந்த நெலமக்கு விட்டுடல... வாங்கிக்கங்க' என்று அம்பதை என் கையில் திணித்தபோது நான் உடைந்து போனேன்.

தேவிபட்டினம் பேருந்தில் ஏறி அமர்ந்தவனின் பாக்கெட்டுக்குள் கசங்கிய அம்பது ரூபாய் கனமாய் இருந்தது... என் மனசைப் போல. 

-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

படம் க்ளிக் செய்து படிப்பது சற்றே சிரமமாக இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அலைபேசி வழியாக படிக்க இயலவில்லை. பிறகு படிக்கிறேன் குமார்.

காற்றுவெளி வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இதழில் வெளியானதறிந்து மகிழ்ச்சி. ரசித்தேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா...
கதையை பகிர்ந்து விட்டேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா...
இப்ப படம் மூலம் படிக்க வேண்டியதில்லை....
கதையை பகிர்ந்திருக்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி ஐயா...

ஸ்ரீராம். சொன்னது…

"நல்லா சிலாவத்தா உட்காருங்க.."

புதிய வார்த்தை. ஆயினும் புரிகிற வார்த்தை...!

ஸ்ரீராம். சொன்னது…

நல்லா இருக்கு. ரோஷம்னு சொல்லலாம்.... ஆனாலும் அந்தப் பெரியவர் அன்பை யாசகமாக்கி விட்டாரே... அன்பைப் புரியாதவர்....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பதிவும் மனசை விட்டு அகலாமல் கணமாய் இருந்தது...