மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 23 ஜனவரி, 2019

மனசு பேசுகிறது : சரக்கடியும் அதன் பின்னான நிகழ்வுகளும்

பிரதிலிபி 'கவி மழை' போட்டியில் இருக்கும் என் கவிதை

வேலிப் படலோரம்
வெள்ளெருக்கு செடியிருக்க...
காலிக் குடமொன்று
கல் சுவற்றின் மீதிருக்க...

கழட்டிய செருப்பொன்று
நடைபாதை வழி மறிக்க...
காலொடிந்த கோழிக்குஞ்சு
இரைக்காக இரைஞ்சி நிக்க...

தொடர்ந்து வாசிக்க / கருத்திட ---> 'மல்லுக்கு நிக்கும் மனசு'

Image result for குடிகாரன்

'யாரையும் குடிக்காதே' என்று சொல்லமுடியாது இங்கு, பெரும்பாலானோர் குடியை ஒரு முக்கியமான வேலையாகத்தான் செய்கிறார்கள் என்பதை கடந்த பத்தாண்டு அமீரக வாழ்க்கையில் பார்த்தாச்சு. 

தங்கும் அறையில் அவர்கள் இல்லாது தங்குதல் என்பது இயலாத காரியம்... அவர்களால் நமக்குத் தொல்லை இல்லாது இருக்குமா என்று மட்டுமே பார்க்க முடியும். அவர்களுக்கு விடுமுறை தினங்கள் விடிவதே பாட்டில்களோடுதான் என்றாலும் நம் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்கும் வரை பிரச்சினையில்லை.

இரண்டு மாதம் முன்பு நானும் நண்பரும் புதிய அறை பிடித்து வரும் போது  2200 திர்ஹாமை இருவர் பகிர்ந்து கொள்வதென்பது சிரமம் என்பதால் இன்னும் இருவரை இணைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். நண்பருடன் பணி செய்யும் மலையாளி அடுத்த மாதம் வருகிறேன் என்று சொல்ல, இன்னொரு நண்பர் மூலம் ஒரு பையன் கிடைத்தான். ரொம்ப கஷ்டப்படுறவன் 500 திர்ஹாம்தான் தர முடியுமென்று சொல்ல, முதல் மாதம் அவனின் வாடகை போக மீதத்தை நானும் நண்பரும் பகிர்ந்து கொண்டோம். 

இங்கு வாடகை மாத ஆரம்பத்திலே கொடுக்க வேண்டும். அதே போல் விடுமுறையில் ஊருக்குப் போனாலும் வாடகை கொடுத்து விட்டுத்தான் செல்ல வேண்டும் அல்லது நமக்குப் பதிலாக வேறு நபரைத் தற்காலிகமாக தங்க வைக்க வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதி. 

சரி விஷயத்துக்கு வருவோம்... 

மறுநாள் பையன் கையில் பையோட வந்தான்... என்னடான்னு பார்த்தா... சரக்கு... பால்கனியில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பிச்சிட்டான்... அதன் பின் அவனுக்கு கம்பெனி சாப்பாடு என்பதால் இரண்டு மூன்று கட்டிடம் தள்ளியிருக்கும் கம்பெனி ஆட்கள் தங்கியிருக்கும் கட்டிடம் போய் சாப்பிட்டு வந்து கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டான். இது தினமும் தொடர ஆரம்பித்தது என்றாலும் அவனிடம் எந்த அலம்பலும் இல்லை. சரக்கு அடிக்க... சாப்பிட்டு விட்டு வர... தூங்க... என்பதாய் நாட்களை நகர்த்தினான். நமக்கும் பிரச்சினையில்லை.

இரண்டு நாளுக்கு ஒருமுறை சரக்குக்கு முப்பது, நாப்பது எனச் செலவு செய்பவனால் வாடகை 500 திர்ஹாமுக்கு மேல் கொடுக்க முடியாது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நண்பனிடம் நீதானே சொன்னே கஷ்டப்படுறவன் என்று... உண்மையிலேயே கஷ்டப்படுறவன் என்றால் இன்னும் 100 திர்ஹாம் கூட குறைக்கலாம்... ஆனா இவனுக்கு எதுக்குச் செய்யணும்ன்னு சப்தம் போட, கொஞ்ச நாள் ஓடட்டும்... அவனால நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை பாரு என்றான். அதுவும் சரிதான் என்று தோன்றியதால் கொஞ்சநாள் போகட்டும் என நானும் நினைத்தேன் என்றாலும் இந்த வயதில்... அதுவும் திருமணம் கூட ஆகாத பையன் சரக்குப் போட்டால்தான் தூக்கம் வரும் என்று சொல்வதை நினைத்தாலே கோபம்தான் வருகிறது.

ஒருநாள் வேலை காரணமாகத் தாமதமாக அறைக்கு வந்தவனுக்கு சரக்கடிக்கும் நேரம் மாறிப்போச்சாம்... கையை உதறுறான்.... காலை உதறுறான்.. சை... சை... என்கிறான். அப்போதுதான் கவனித்தேன் அவன் சரக்குக்கு எவ்வளவு தூரம் அடிமையாகியிருக்கிறான் என்பதை... 

மற்றொருநாள் அறையில் குடிக்கும் தண்ணீர் இல்லை... வந்ததும் பாட்டிலை எடுத்தவன் கலக்க தண்ணியில்லை என்றதும் 'தண்ணி வாங்கலையா..? வாங்காம என்ன பண்ணுனீங்க..?' என நண்பனிடம் கோபமாகக் கேட்க, 'பைசா இல்லடா... காலையில வாங்கிக்கலாம்...' என்று பதில் சொல்லவும் 'காசில்லைன்னா சாப்பிடாம இருப்பீங்களா..?'ன்னு கேட்டிருக்கிறான். நண்பனுக்கு கோபம் தலைக்கேற. 'கீழ போயி கடையில வாங்கிட்டு வா... போ...' என்று சொல்லிவிட்டு என்னிடம் வந்து 'என்ன சொல்றான் பாத்தியா... முதல்ல தொலைக்கணும்' என்றான். இந்த முறை நான் இருக்கட்டும் பார்த்துப்போம் என்றேன்.

அறைக்கு வந்த இரண்டாவது மாதம் மலையாளி வந்து சேர்ந்தான். அவனும் சரக்கடிப்பான் என்று சொல்ல, முதல்ல ஒரு ஆள் இருக்கானுல்ல அவனோட சேர்ந்துக்கட்டும்... நமக்குப் பிரச்சினை இல்லைனாச் சரிதான் என்றேன். முதல் நாள் ஆரம்பம் அமர்க்களமாத்தான் இருந்துச்சு... சரக்கடிப்பதை விட்டிருந்த நண்பனும் மூன்றாவதாக இணைய, மும்மூர்த்திகளை பால்கனி தாங்கிக் கொண்டது... மும்மூர்த்தி சங்கமம் தினமும் இல்லை... வார இறுதி என்ற வியாழன், வெள்ளி, சனி மட்டுமே என்பதாய் நண்பர் இருவருக்குள்ளும் தீர்மானம். அது சில நாட்கள் உடைக்கப்படும் கண்டுக்கக் கூடாது.

ஒரு வியாழன் இரவு அந்தத் தளத்தின் உரிமையாளரும் வந்து சேர, நாலு பேரும் பால்கனியில் அமர்க்களமாய் சரக்கடித்தார்கள்... உரிமையாளர் ஒரு 'பெக்'குடன் ஊரில் இருக்கும் தொடுப்புடன் தொடர்பில் போய் சரக்குக்கு தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார். அந்தப் பையனும் தன் நிலை அறிந்து எழுந்து சாப்பிடப் போய்விட்டான். நண்பர்கள் இருவரும் மட்டும் அரசியல் பேசியபடி சரக்கில் மூழ்கியிருந்தார்கள்... நேரம் நீண்டு கொண்டே போனது முடிவில்லாமல்.

எல்லாம் முடிந்து சாப்பிட ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சினை ஆரம்பமாச்சு... உரிமையும் எங்களுடன் சாப்பிட, மலையாளி என்ன பேசுறோம்ன்னு தெரியாம பேச ஆரம்பிச்சி, சாப்பாடே போகம... ஆள் உட்கார்ந்த இடத்திலிருந்து ஆட ஆரம்பிச்சிட்டான்... பேசியதையே பேசுறான். 

நண்பனுக்கு நான் என்ன சொல்வேனோன்னு கவலை... சாப்பிடாதவனை அழைச்சிக்கிட்டு கீழே போய் உட்கார்ந்து அவனோட வாழ்க்கைப் பிரச்சினையை எல்லாம் கேட்டு, அவனைச் சரி பண்ணி, கொண்டு வந்து படுக்க வச்சான். படுத்த உடனே வேகமாக இறங்கி ஓடியவன் எங்க அறை வாயிலிருந்து மெயின் கதவு வரை வாந்தி எடுத்து வைத்து விட்டான்.

எனக்கு செம கடுப்பு... நண்பனுக்கு அதை விட... நாளைக்கு காலையில விரட்டி விட்டுறணும்... வச்சிக்கக் கூடாது என குதித்தான். சரி விடு எல்லாருந்தானே சாப்பிட்டீங்க... அவனோட லிமிட்டுக்கு மேல எதுக்கு குடிக்க விட்டீங்கன்னு கேட்டா... இல்ல.... லிமிட்டுக்கு மேல போகலைன்னு சொன்னான்... ஆனா ஊத்திக் கொடுத்ததே அவன்தான்னு உரிமையாளர் சாப்பிடும் போதே என்னிடம் தனியாக சொல்லிச் சென்றிருந்தார்.

சரி வாய்யா... நாம சுத்தம் பண்ணலாம் என நான் சொன்னதுக்கு நாம எதுக்குப் பண்ணனும்... அவன்தான் பண்ணனும் பண்ணட்டும்... அப்புறம் நாம சுத்தம் பண்ணலாம் என்று சொல்லி அவனைப் பிடித்துக் கொண்டு வந்து சுத்தம் பண்ண விட்டுவிட்டு அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டான். இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியில் கட்டிலில் படுத்திருந்த 'தினந்தோறும்' தம்பி எந்திரிச்சி, என்னாச்சு... லிமிட்டாக் குடிக்கணும்... அளவு தெரியலைன்னா என்ன குடிகாரன் என்று சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டான்.

பக்கத்து அறை மலையாளிகள் எல்லாம் நம்ம அறை மலையாளிக்கு உதவ,  மலையாளிகள் எப்பவும் அப்படியே... நாம் தான் நம்மவர்களைப் பார்த்ததும் பீட்டர் இங்கிலீசில் பிச்சு உதறுவோம்... சுட்டுப் போட்டாலும் தமிழ் வராது. ஆனா மலையாளிங்க அவங்க ஆளைப் பார்த்துட்டா உருகிடுவானுங்க.... அதான் அவனுங்க சுத்தம் பண்ண வந்துட்டாங்க... உரிமையாளரின் அறை நண்பர்கள் 'என்ன கேவலமானவனுங்களா இருக்கானுங்க...' என்று புலம்பியதால், அவரும் சுத்தம் செய்யும் குழுவில் இணைய வேலையை அட்சர சுத்தமாக செய்து முடித்தார்கள்.

அதுக்கப்புறம்தான் பிரச்சினையே... வேலை இல்லாத, 24 மணி நேர சரக்கடி மன்னனான பக்கத்து அறை மலையாளி... எங்க அறைக்குள் வந்து 'என்ன ஆசானே... உங்க ரூம் ஆளு வாமிட் எடுத்திருக்கு... நாங்க சுத்தம் பண்றோம்... நீங்க இங்க உக்காந்திருக்கு... என்ன இது...' அப்படியிப்படின்னு அட்வைஸ்... நான் வெளிய போடா என்று சொல்ல, நண்பன் சுத்தம் பண்ணுனதுக்கு காசு வேணுமாடா... என்று சத்தம் போட, திரும்பத் திரும்ப பேசினான்... நாங்க செய்தது தப்பென்று சத்தம் போட்டான். உன்னோட அறையில தங்க வச்சிக்கடா அவனை எனச் சொன்னதும் 'நம்ம ரூம் வளர டீசண்டானு'ன்னு சொன்னான் பாருங்க... எனக்குச் சுள்ளுன்னும் அதுக்கு மேல நண்பனுக்கும் வர 'போடா நாய்க்க மவனே'ன்னு நண்பன் விரட்டிட்டான்.

வெளியில போயி நின்னுக்கிட்டு ரொம்பப் பேசினான்.. உரிமையாளர், அவர் அறை நண்பர்கள் எல்லாம் சொல்லியும் கேட்கலை... நானும் நண்பனும் எதிர்த்துப் பேச, உரிமை என்னிடம் நீங்க போங்கன்னு சொல்லிட்டு அவனைத் திட்ட, அவன் மீண்டும் என்னிடம் அடிக்க வருவது போல் மோதினான்... நமக்குள்ள கிடந்த தேவகோட்டையான் சீறிக்கிட்டு எழ, 'வகுந்துருவேன்... என்ன நீ பாட்டுக்குப் பேசிக்கிட்டு இருக்கே... ஒழுங்காப் போயி படு... இல்லே மிதிவாங்குவே'ன்னு கையைத் தூக்கி அடிக்கப் போக, அதுக்குள்ளயும் உரிமை எங்கிட்ட உரிமையா நீங்க போய்ப் படுங்க நான் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டார்.

மறுநாள் உரிமையின் அறை நண்பர்கள் முகம் கொடுத்துப் பேசவில்லை... உரிமையும் கூட மௌனம் சாதித்தார். எங்க அறை மலையாளி 'குடும்பத்துல பிரச்சினையண்ணா... லவ் மேரேஜ் பண்ணின பொண்டாட்டி (தமிழ்) விவாகரத்து கேட்கிறா... மன வலி... அதான் ஓவராயிடுச்சு,,, இனி இப்படி நடக்காது'ன்னு மன்னிப்புக் கேட்டான். அதன்பின் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறான். நண்பனும் குடியைக் குறைத்துவிட்டு ஜிம்முக்கு போக ஆரம்பிச்சிட்டான்.

இங்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கத்தான் செய்யுது... எல்லாருமே எது ஒரு பிரச்சினையில் சிக்கித்தான் தவிக்கிறோம்... அதற்கான தீர்வு... குடி மட்டும் அல்லன்னு சொல்லத்தான் முடியுமே ஒழிய,  யாரையும் குடிக்காதேன்னு அறிவுரை சொல்ல முடியாது.. 80% பேர் இங்கு குடிக்காமல் இருப்பதில்லை. 

நானும் இந்த 10 வருடத்தில் நாலைந்து அறை மாறி, நிறையச் சரக்கு வண்டிகளைப் பார்த்திருக்கிறேன்... முதல் முறை வாந்தி எடுத்தவனைப் பார்க்கிறேன். ஊரில்தான் சொல்வார்கள் 'அவனுக்கு நிறைஞ்சது தெரியாது'ன்னு.... அது மாதிரி அவனுக்கு நிறைஞ்சது தெரியலைன்னு நினைச்சிக்கிட்டு நாம போக்குல போக வேண்டியதுதான்... வேறென்ன செய்வது..?

குடிதான் பலரை இங்கே இயக்குது... அதுவே உயிரையும் எடுக்குது.

ஒரே வருத்தம் உரிமையின் அறை நண்பர்களின் பார்வை அதன் பின் மாறியிருப்பதுதான். எத்தனை சோப்புப் போட்டுக் கழுவினாலும் பட்ட கறை போகப்போவதில்லை.
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சரக்கு... ரொம்பவும் கொடுமை... இதனால் எத்தனை பிரச்சனைகள்.....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த மனநோய் தானாக மாறினால் தான் உண்டு...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உண்மைதான். பட்ட கறை போகாது.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

துளசி: கேள்விப்பட்டதுண்டு. உங்கள் பதிவுகளின் மூலம் நடைமுறை சிரமங்களும் தெரிகிறது. கஷ்டம்தான்.

கீதா: குமார் ரொம்பவே கொடுமைதான். எவ்வளவு பிரச்சனைகள்! எப்படி நீங்க பொறுத்துக்கரீங்க? ஆனா யாரு ரூமுக்கு வந்தாலும் குடிப்பாங்கனா என்ன செய்யறது? குடிச்சா கண்ணு மண்ணு தெரியாதுன்னு சொல்லுறது இப்படித்தான் போல. எங்க ஊர்ல ஒருத்தர் முன்னாடி இப்படி அடிச்சிட்டு அவருக்குத் தெரியாத ஆங்கிலம், ஹிந்தி கூட நல்லா பேசுவார்.

iramuthusamy@gmail.com சொன்னது…

இந்தியர்கள் கடல் கடந்து போயும் குடியும் குடித்தனமுமாக இருப்பது வருத்தமளிக்கிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாம் அண்ணா..
நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாம் ஐயா...
நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்துக்கு நன்றி அண்ணா... மற்றும் அக்கா...
உண்மைதான் எனது உறவினர் ஒருவர் தண்ணி அடித்தால் எல்லாத்துக்கும் ACTUALLY போடுவார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

இங்கு தண்ணியே பிரதானம் ஐயா...
நன்றி.