மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 20 டிசம்பர், 2018

மனசு பேசுகிறது : கரும்புனல்

Image result for கரும்புனல்

ரும்புனல்

ராம்சுரேஷ் அவர்களின் கரும்புனல் நாவல் நிலக்கரி சுரங்கத்தின் கருப்புப் பக்கங்களை... நாம் அறிந்திராத அரசியலை... படிப்பறிவில்லாத மக்களின் வலியை... எந்த வித சமரசமும் இல்லாமல் பேசியிருக்கிறது. 

ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலோடும் அந்த மக்களுக்கு என்ன ஆகுமோ என்ற பதட்டத்தோடும் பயணிக்க வைக்கும் எழுத்து நடை.

மிகச் சிறந்த எழுத்தாளராய் வரவேண்டியவர் ஏன் அமீரகத்தில்  'பினாத்தல்' சுரேஷ் என தன்னைச் சுருக்கிக் கொண்டு ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டார் அல்லது தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டார் என்பதுதான் புரியவில்லை. அண்ணே அந்த வட்டத்தை விட்டு வெளியே வாங்கண்ணே... நீங்க போட்டுக் கொண்ட வட்டம் உங்கள் பாதையில் பயணிக்க விடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... உங்களிடமிருந்து இன்னும் நிறைய நாவலை எதிர்பார்க்கிறோம்.

வட மாநில அதிகாரிகளின் வெறிக்குப் பலியாடாய்ப் போகிறான் கோல் இந்தியா லீகல் ஆபீசர் சந்திரசேகர் என்ற சந்துரு.

நிலக்கரி சுரங்கத்துக்காக ஆதிவாசிகள் வாழும் உச்சிடி என்ற ஒரு கிராமத்தையே எடுத்துக் கொள்ள நினைக்கும் சாஹல் கோல்மைன்... அதற்கென இழப்பீடு தொகையாய் சில ஆயிரங்களை மக்களுக்குக் கொடுக்க நினைக்கிறது. மக்களோ வீட்டில் ஒருவருக்கு வேலை, இழப்பீட்டுத் தொகை மற்றும் பசுமை நிறைந்த ஜிர்க்கி என்னும் கிராமத்தில் இடம் என்ற மூன்று கோரிக்கைகளை வைக்கிறார்கள். 

ஆனால் அவர்களின் கோரிக்கையில் இரண்டை ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்லும் அரசு, அதற்கான முயற்சியில் மட்டும் இறங்காமல் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. காரணம் என்ன என யோசிக்கவே வேண்டியதில்லை... இதில்தான் ஒட்டு மொத்த அரசியலும் அடங்கியிருக்கிறது. அதைத்தான் நாவலும் பேசுகிறது.

ஆதிவாசி மக்களிடம் பேசுவதே தீண்டாமை என்று நினைக்கும் அதிகாரிகள் வர்மா, பானர்ஜி, சட்டர்ஜி என. அந்த மக்களிடம் பேசுவதற்கு என்றே வக்கீலான சந்திரசேகர் அனுப்பப்படுகிறார். அவருக்கு முதல் பார்வையிலேயே உச்சிடி நீலக்கண் தீபா மேல் காதல்... காதல் என்பது ஊறுகாய் போலத்தான்... கதை பேசுவது நிலக்கரிச் சுரங்கத்தையே.

தீபா... இவள் உச்சிடியில் பிறந்து கோயம்புத்தூரில் டிகிரி முடித்தவள். தங்கள் ஊரை எடுத்துக் கொள்ள நினைக்கும் அரசுக்கு எதிராக தாங்கள் கேட்கும் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களுக்காக... மக்களை ஒருங்கிணைத்துப் போராடும் லோபோவின் முறைப்பெண். இவளும் போராளியே. முரட்டுத்தனமில்லாமல் போராட வேண்டும் என்று நினைப்பவள். சந்துருவை கணவனாக அடைய நினைப்பவள்.

லோபோ... குடிகாரன்... முரடன்... மக்களுக்காகப் போராடுபவன். தீபாவின் பேச்சுக்கு அடிபணிபவன்... அரசு அதிகாரிகளை வெறுப்பவன்... இவனை வழக்கில் மாட்ட வைத்து தங்கள் காரியத்தை முடிக்க நினைக்கும் அதிகாரிகளை கருவறுக்கிறான் இறுதியில்... மாவோயிஸ்ட் தீவிரவாதியாக...

எந்த ஊர் என்றாலும் நல்லது செய்ய நாலு பேர் இருந்தால் தூக்கிப் போடும் பிஸ்கெட்டுக்கு வாலாட்டும் ஒருவன் இருக்கத்தான் செய்வான். அப்படி ஒரு கிழவன் இருக்கிறான் உச்சிடியில்... எல்லாரும் ஜிர்க்கி போக, இவன் மட்டும் வேறு இடம் போகிறான் அரசின் உதவியுடன்.

போட்டிருக்கும் சட்டையெல்லாம் கருப்புப் பொடியா இருக்கேன்னு உதறிப்போட்டா மறுபடியும் பொடி படியத்தானே செய்யும்... இந்தக் கருப்பு உதறினால் போகக்கூடியதா என்ன...? அப்படியான கருப்புப் பிடித்த அதிகாரிகள்... அவர்களின் குறுக்குப் புத்திகள்... தாங்கள் நினைத்ததைச் சாதிக்க நடத்தும் குள்ளநரி நாடங்கள் என விரிகிறது நிலக்கரிச் சுரங்கத்தின் புகை கரும்புனலாய்...

டீசல் திருடும் போலீஸ் எதிர்த்துக் கேட்டவன் மீது வழக்குத் தொடுப்பதும்... ரோட்டில் நடந்து செல்லும் சந்துருவை சந்தேகப்பட்டு பிடித்து வருவதும்... அதன் பின்னான போராட்டங்கள்... போலீஸ் நிலைய எரிப்பு... போலீசார் மரணம் என கதை விரியும் போது தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று தோன்றுவதை கரும்புனலை வாசிக்க நேர்ந்தால் உணர்வீர்கள்.

ஜார்க்கண்ட் உருவாவதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகள்தான் காட்சியாய் விரிகிறது. கிராமத்துக்கு கீழே இருக்கும் சுரங்கத்துக்குள் சந்துரு போகும் போது அவனுக்கும் அவனைக் கூட்டிச் செல்லும் நண்பனுக்குமான உரையாடலில் நமக்குத் தெரியாத நிறைய விஷயங்களை அறிய முடியும். 

வேலை தருவதாகச் சொல்லி நூறு கிலோமீட்டருக்கு அப்பால் டீக்குடுக்க, தண்ணீர்க் கொடுக்க... என வேலை கொடுப்பதையும்... இடம் தருவதாகச் சொல்லி ஒண்ணத்துக்கும் உதவாத மலையடிவார பாறை நிலங்களைக் கொடுப்பதையும் கதை வழியே நம்மிடம் சொல்லிச் செல்கிறார். நாமும் வாசிக்கிறோம் வலியுடனும் மலை உச்சியில் டீக்கடை வைத்து 50 பைசாவுக்கு டீக்கொடுக்கும் கிழவனின் மனநிலையுடனும்.

ஒரு கிராமத்தை அழிக்க ஓடும் ஆற்று நீரை அரசு அதிகாரிகளால் நிறுத்தி வைக்க முடியும் என்பதையும் நிலக்கரி சுரங்க அதிகாரிகள் தாங்கள் நினைத்ததை எல்லாம் செயல்படுத்துவார்கள் என்பதையும் படிக்கப் படிக்க இப்படியும் மனிதர்களா... இப்படியெல்லாம் செய்வார்களா என்று யோசிக்க வைத்ததுடன் சக மனிதனை மனிதனாகப் பார்க்காதவர்களை நினைத்து வருத்த வைத்தது.

இறுதிப் பக்கங்களை திக்... திக்... மனதோடுதான் வாசிக்க முடியும். அழிவும் அதன் பின்னான வன்முறைகளும் பதைபதைக்க வைக்கிறது. 

தீபா - சந்துரு காதல் கதையின் போக்கில் சினிமாத்தனம் என்றாலும் அந்த நீலக்கண்கள் பிழைத்துப் போகட்டும் என சொல்லி கண்ணீரோடு இறங்கும் போது சில நிமிடங்கள் அப்படியே உறைந்து உட்கார வைத்து விட்டது.

மாவோயிஸ்ட் எப்படி உருவாகிறார்கள்... உருவாக்கப்படுகிறார்கள் என்பதையும் கதை சொல்லிச் செல்கிறது.

பலரின் அரசியல் பசிக்கு... கோடிகளை சுருட்டுவதற்கு... சந்துரு என்னும் அப்பாவி பலியாடாக்கப்படுகிறான். அவனின் பார்வையிலேயே கதை விரிந்தாலும் இறுதிவரை அவன் நாயகனாக நிறுத்தப்படவில்லை. கதையில் போக்கில் எல்லாருமே சிறப்பான இடத்தைத்தான் பிடிக்கிறார்கள் கமல் பட கதாபாத்திரங்களைப் போல.

சுரேஷ் அண்ணா... ஒரே ஒரு வேண்டுகோள் நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் நிலக்கரி அரசியல் குறித்து... இதில் விரிவாகச் சொல்லக் களமில்லை என்றாலும் நிறைவாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

நண்பர்களே... முடிந்தால் அல்ல விருப்பத்துடன் கரும்புனலை வாசிக்க முயலுங்கள். ஒரு வித்தியாசமான நாவலை வாசித்த அனுபவம் கிடைக்கும்.

நிலக்கரி சுரங்கத்துக்குள் பயணித்த அனுபவத்தையும் ஒரு கிராமம் அரசியலுக்காகவும் தங்கள் வருமானத்துக்காகவும் எப்படி அழிக்கப்படுகிறது என்ற 'பய'ங்கர அனுபவத்தையும் ஒரு சேரப் பெறலாம் 'கரும்புனல்' என்னும் அருமையானதொரு நாவலை வாசிக்கும் போது. 

அவரின் அடுத்தடுத்த நாவல்களும் வாசித்தேன் செமையா இருந்தன... 

அண்ணா தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

லாப்டாப் உறங்கி ஒரு மாதத்துக்கு மேலாச்சு... கையில் இப்போது சிஸ்டம் இல்லை... அலுவலகத்தில் மாலை வேலையில்லாத போது வேகமாய் தட்டச்சியது. தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க.

கரும்புனல் 
வம்சி பதிப்பகம்
விலை : 170 ரூபாய் 
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

ஜோதிஜி சொன்னது…

இது போன்ற களம் உள்ள புத்தகங்களைத் தான் எதிர்பார்க்கின்றேன். புத்தக விமர்சனம் எழுதும் போது பதிப்பகம் கிடைக்குமிடம் அலைபேசி எண் போன்றவற்றையும் எழுது விடவும். வாங்க விரும்புவர்களுக்கு உதவியாய் இருக்கும். நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அண்ணா
வணக்கம்.
எப்பவும் விவரம் எழுதுவேன் அண்ணா.
இது எனக்கு எங்கள் அமீரக வாட்ஸ்-அப் குழுமத்தில் நாளைய நிகழ்வுக்காக வாசிக்க பி.டி.எப்.பாக்க வாசிக்க கிடைத்தது.
இப்ப விவரம் போட்டுட்டேன்.
கண்டிப்பா வாசிங்க அண்ணா.

ஸ்ரீராம். சொன்னது…

நல்லதொரு அறிமுகம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சிறப்பான நூல் மதிப்புரை

செந்தில்குமார் சொன்னது…

நல்ல அறிமுகம் நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்களின் அறிமுகம், நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டியுள்ளது. நன்றி.

அ.மு. நெருடா சொன்னது…

சிறப்பான அறிமுகம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி.

துபாய் ராஜா சொன்னது…

வாழ்த்துக்கள் ஆசிரியருக்கும், அறிமுகம் செய்த உங்களுக்கும்.

Geetha Sambasivam சொன்னது…

பெனாத்தலை நான் இணைய உலகுக்கு வந்ததில் இருந்தே அறிவேன். அவரிடமிருந்து இத்தனை தீவிரமான விஷயத்தில் ஒரு நாவல் வந்திருக்கிறது என்பதை முகநூல் மூலமே அறிந்தேன். நீங்கள் எழுதிய விமரிசனம் பற்றியும் அங்கே பேசப்பட்டது. அதான் படிக்க வந்தேன். நன்றி. புத்தகம் கிடைத்தால் படிக்க வேண்டும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

என்னிடம் PDF இருக்கு அக்கா... வாசிப்பீர்கள் என்றால் அனுப்புகிறேன்.

Geetha Sambasivam சொன்னது…

இதிலே சந்தேகமா குமார்? கட்டாயம் வாசிப்பேன். அனுப்பி வைங்க! ரொம்ப நன்றிப்பா.

மாதேவி சொன்னது…

அறிமுகத்துக்கு நன்றி. ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்லதொரு நூல் அறிமுகம் குமார்..மிக்க நன்றி

கீதா

மனோ சொன்னது…

Very interesting book. Read few years ago. Till last page very intresting