மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 2 டிசம்பர், 2017

பயணங்கள் முடிவதில்லை...

யணங்கள் முடிவதில்லை...

பயணங்கள் எப்போதும்  தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. பயணிக்கும் மனநிலை வேண்டுமானால் மாறுபடலாம் ஆனால் பயணம் மாறுவதில்லை. அதுவும் நல்ல நட்புக்களுடன் பயணிக்கும் சுகமே அலாதியானதுதான். தற்போதைய மனநிலையில் அடிக்கடி பயணிக்கும் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகச் சிறந்த மருந்தாய் மனசுக்கு... 


எனது இந்தப் பயணம் பள்ளிக்கு மஞ்சப் பைக்குள் சிலேட்டையும் குச்சி டப்பாவையும் வைத்துக் கொண்டு இடுப்பில் சரியாக நிற்காத டவுசரை இழுத்து பிடித்துச் சொருகி, தேவகோட்டை நோக்கி மூன்று கிலோ மீட்டர்கள் என்னைப் போல் புத்தகப் பை சுமந்த அக்காவுடனும் உறவுகளுடனும் நடக்க ஆரம்பித்த முதல் நாளில் இருந்து தொடங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் மேகம் கருத்தால் போதும் கிராமத்துப் பிள்ளைகள் வீட்டுக்குப் போகலாம் என்ற அறிக்கை வர, முகத்தில் அடைமழையெனப் அடித்து ஆடும் சந்தோஷத்துடன் புத்தக மூட்டையை தலைமை ஆசிரியரின் அறையில் வைத்து விட்டு சத்துணவுக்காக கொண்டு செல்லும் தட்டை மட்டும் எடுத்து கையில் பிடித்துக் கொண்டு மழைத் தண்ணீர் பள்ளம் நோக்கி ஓடுவது போல் நடக்க ஆரம்பிப்போம்... 

இந்தத் தட்டு மழை வந்தால் குடையாகும்... இல்லையேல் தாளம் போடப் பயன்படும்.  எது எப்படியோ மகிழ்ச்சியின் மழை எங்களுக்குள் அடித்தாடும்... ஆவாரஞ்செடிகளுக்கு இடையே வளைந்து நெளிந்து செல்லும் ரோடில்லா ஒற்றையடிப் பாதையில் ஓடி வரும் தண்ணீருடன் கால்கள் கொஞ்சிக் கதை பேச, நனைந்து செல்வதில் ஒரு சுகமே.

பள்ளிக் காண நடை பயணம் ஏழாப்பு வரைக்கும் தொடர்ந்தது.  கை, கால் முட்டிகளில் வீரத் தழும்புகள் ஏற்பட ஆறாப்பு, ஏழாப்பில் சைக்கிள் பழகி, கவட்டைக் காலில் இருந்து சீட்டுக்கு மாறி கை விட்டு ஓட்டும் அளவுக்கு வந்ததால் வீட்டில் நீ சைக்கிளில் செல்லலாமென கொடுத்த சான்றிதழினால் அப்பாவின் அட்லஸ் சைக்கிள் எட்டாப்பு படிக்கும் போது என்னுடன் தோழமையானது. 

கல்லூரி வரைக்கும் இவரே பயணத்தின் நண்பனாய்... கல்லூரியில் இருந்து குன்றக்குடி, பிள்ளையார்பட்டி என இவரோடு பயணித்த நாட்கள் மறக்க முடியாதவை. மறுநாள் கே.வி.எஸ். சார் எங்க போனீங்க எல்லாரும்ன்னு தண்ணி காட்டுனதெல்லாம் பயணத்தின் சுவராஸ்யம்தானே. படிக்கும் போது நண்பன் புத்தக ஏஜெண்டாக இருந்ததால் செம்மலரும் தாமரையும் சுபமங்களாவும் சுமந்து தேவகோட்டையில் வீதிவீதியாக பயணப்பட்டிருக்கிறோம்.

பள்ளிப் பயணம் ஒரு புறம் இருக்க, காலையில் குடி தண்ணீருக்கான பயணமாய் சைக்கிளில் குடங்களைக் கட்டிக் கொண்டு முருகன், சேகர் சித்தப்பு, சரவண சித்தப்பு, தம்பி சரவணன், சக்தி மச்சான், என் தம்பி என எல்லாருமாய் ஒவ்வொரு செங்கற்காலவாயாக அழைந்து கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்த அந்த தேடுதல் பயணம் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்... 

ஆம்... நாங்கள் செல்லவில்லை என்றால் அக்கா ரெண்டு மூணு கிலோ மீட்டர் போய் அலைந்து திரிந்து தண்ணீர் தூக்கி வர வேண்டும்.  மூன்று குடங்கள் வரை சைக்கிளில் கட்டி வருவதுண்டு. இந்தக் கிணற்றில் தண்ணீர் கிடக்குமென சென்றால் அங்கு எருங்கஞ்செடி நீந்தி நம்மைப் பார்த்துச் சிரிக்கும். அப்படியும் தண்ணீர் எடுக்க விட்டவர்கள் சிலரும் உண்டு. சில நாட்களில் அதிகாலையிலேயே செல்வதும் உண்டு.

கல்லூரியில் படிக்கும் போது திருவாடானையில் நண்பன் ஆதியின் இல்லத்தில் தங்கி இராமேஸ்வரம் பயணம்... இரண்டாமாண்டு படிக்கும் போது மைசூர், பெங்களூர் பயணம்... கணிப்பொறி நிலையம் வைத்திருந்தபோது நண்பர்களுடன் கம்பம், தேனி, கேரளாவென ஒரு திரில்லிங் பயணம்... பள்ளிகளில் கணிப்பொறி வகுப்பெடுக்க சிபியூவையும் மானிட்டரையும் வண்டியின் முன்னே வைத்து இருபது, இருபத்தைந்து கிலோ மீட்டருக்குமேல் நானும் நண்பனும் பயணித்த பயணம்... பழனிக்கு நடைப் பயணம்... திருச்செந்தூர் நடைப் பயணம்... சபரிமலை பயணம்... இப்படியான பயணங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

பெரும்பாலான பயணங்கள் திருமணத்திற்கு முன்னே நிகழ்ந்தவை என்பதால் மனைவிக்கு என்மேல் கோபம் உண்டு. ஆம் திருமணத்திற்குப் பின்னர் சில பயணங்கள் தவிர்த்து சொல்லிக் கொள்ளும்படியான பயணங்கள் எதுவும் நிகழவில்லை. ஒவ்வொரு முறையும் எங்காவது செல்ல வேண்டுமென நினைப்புடன் சென்றாலும் ஒரு மாதம் என்பது வீட்டில் செலவழிக்கவே பத்துவதில்லை. எங்களின் பயணம் பெரும்பாலும் தேவகோட்டை-மதுரைக்கானதாய் மட்டுமே இருந்து விடுகிறது. இந்த முறைதான் விண்ணப்பங்கள் மும்முனைத் தாக்குதலாக சேலம் அருகே இருக்கும் தீம்பார்க் சென்று வந்தோம்.


என்னோட பயணங்கள் எல்லாமே நண்பர்களால் நிரப்பப்பட்ட பயணங்களே... ஆமா இப்ப எதுக்கு பயண புராணம் என்பதாய் உங்கள் கேள்வி இருக்கலாம். நேற்றைய பயணத்தின் அனுபவமே பயணத்தைப் பற்றிப் பேச வைத்தது. ஆம்... இங்கு வந்து இந்த ஒன்பது வருடத்தில் முதல் நான்கு வருடங்கள் அடிக்கடி நீண்ட தூர பயணங்கள் சென்று வந்தோம் அது உறவுகள் சூழ்ந்த பயணம். பின்னர் எந்தப் பயணமும் இல்லை... இப்போது சுபஹான் பாய் அவர்களாலும் கனவுப்பிரியன் அண்ணனாலும் மனதுக்கு சந்தோஷமான பயணங்கள் அடிக்கடி நிகழ ஆரம்பித்திருக்கின்றன.

அப்படியான ஒரு பயணம்தான் நேற்றைய விடுமுறைநாள் அனுபவமாய்... அபுதாபியில் இருந்து அலைன் நோக்கி...

பயணத்தின் போது வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்... அப்படியான அனுபவம் நேற்றைய ரெண்டு மணி நேர பிரயாணத்தில்... தகிக்கும் பாலை வெயிலில் நாணிச் சிரிக்கும் மணலைப் பார்த்து ரசித்தபடி... இசைக்கும் ராசாவின் பின்னோடு பயணித்த நாட்களாய் நேற்றைய நாள் அமைந்தாலும் வாசிப்பின் ருசியும் கூடுதலாய்... 

என் செல்போனில் 'பார்த்தீபன் கனவு' கிடக்க, ரெண்டு மணி நேரத்தில் பொன்னனோடும் மாமல்லனோடும் பயணிக்கலாமென நினைத்துச் சென்றால் வாசிக்கக் கிடைத்தது தோழி ஒருவரின் முதல் கவிதைத் தொகுப்பான 'கனலி'. சின்னச் சின்ன கவிதைகள்... பக்கம் நிரப்பாமல் ஒன்றும் இரண்டுமாய் ஆக்கிரமித்திருக்க... வேகமாய் பக்கங்கள் நகர்ந்தன. கனலி நெருப்பாய்த் தகிப்பாள் என்று வாசிக்க ஆரம்பித்தாள் வரிக்கு வரிக்கு காதலில் கசிந்துருகியிருக்கிறாள். புத்தகம் பற்றி பின்னொரு பதிவில் பார்க்கலாம்... நாம் பயணத்தைத் தொடர்வோம்.

வெள்ளைப் பாலை மணலை தன் மேல் போர்த்தியிருக்கும் அபுதாபி கடந்து செம்மண் பூமியான எங்க ஊருக்குள் பயணிப்பது போன்றதொரு அனுபவத்தைக் கொடுத்தது சிவந்த மண் பாலையுடன் சிரிக்கும் அலைன்.

அங்கு போய்ச் சேரும் போது ரெண்டு மணியை நெருங்கிவிட காத்திருந்த காளிதாசர் பிரபுவும் கனவுப்பிரியன் அண்ணனும் எங்களுடன் இணைய, முழுக்கோழியும் பிரியாணியும் பிரபு அவர்களின் பிரியமாய் வயிற்றை நிரப்ப, நிரம்பிய வயிற்றுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம் நானும், அண்ணன் கனவுப் பிரியனும் ரவியும்... 

அதற்குள் பிரபு அவர்கள் நண்பரின் காரை சுபான் அவர்களும் நண்பர்களும் சென்று எடுத்து வந்தார்கள். பின்னர் பயணப்பட ஆரம்பித்தோம். அலைன் ஓயாசிஸில் கொஞ்ச நேரமே நடை... அதற்குள் கேமராக் கவிஞர் சுட்டுத் தள்ளிய போட்டோக்கள் அதிகம்... வயிற்றுக்குள் சென்ற கோழி அடைக்கத்திய கோழி போலும்... படுத்துக் கொண்டு எழுந்து நடக்க யோசிக்க... மலைப்பாம்பாய் உடலை திருகி... சுகம் காண முடியா நிலையில் நடையைச் சுருக்கி மீண்டும் காருக்குள் ஏறி ராசாவோடு பயணித்தோம். மெல்லக் குளிர் காற்று தாலாட்ட ஆரம்பித்தது.

ஷாகிர் ஏரியை நோக்கி ஒரு நீண்ட பயணம்... சூரியன் அஸ்தமிக்கும் முன்னர் போட்டோ அரங்கேற்றம் நிகழ்த்த நினைத்து விரைவுப் பயணத்தின் முடிவில் கொஞ்சமே தண்ணீர் நிறைந்திருந்த ஏரியை ரசித்தபடி... சூரியன் அஸ்தமனம்... மலைகளின் வனப்பு... நீரில் நீந்தும் நீர்க்கோழி... நாரைகள்... சூரியனைக் கடக்கும் கார்கள்... சிவப்பு ஒளியில் மிளிரும் பிம்பங்கள்... நிலவின் ரம்மியத்தில் சிலிர்த்துச் சிரிக்கும் மணலின் பிம்பங்கள் என ரசனையாய் ரசித்து போட்டோக்களில் சுருட்டிக் கொண்டு கொஞ்சம் கதை பேசி... மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். 

கனவுப்பிரியன் அண்ணனின் கூட்டுக்குள் வந்து கதை பேசி... அபிராமி அந்தாதி, கண்ணப்பர் கதை, ரஜினி, கமல் என எல்லாம் பேசி...  சிரித்து... கோழியுடன் புரோட்டாவும் சப்பாத்தியும் பழங்களும் சாப்பிட்டுப் படுத்தோம் நிறைந்த வயிறும் நிறைவான மனதுமாய்...

இந்தப் பயணத்தில் அறிந்த ஒன்று.... பிரபு நிறைய விஷயங்களை உள்வாங்கி வைத்திருக்கும் ஒரு ஹார்ட் டிஸ்க் என்பது... எத்தனை விஷயங்கள்... அருமையாக, விளக்கமாகப் பேசுகிறார்... உண்மையில் வியந்தேன்.

காளிதாசர் என்னும் கவிஞராய் மட்டுமே அறிந்திருந்தவர் கலந்து கட்டி இலக்கியத்தில் அடித்தாடுகிறார்... விளக்கத்திற்கான எடுத்துக்காட்டுகளில் காளிதாசராகத் ஜொலித்தார்.  இன்னும் பேச வேண்டும்... இல்லை இல்லை பேசச் சொல்லி கேட்க வேண்டும் மீண்டும் ஒரு விடுமுறை தினத்தில்.. நிறைய... நிறைய.... ரொம்ப விஷயம் கறக்கலாம் இந்த ஆளிடம்... பல சிறுகதைகளுக்கான கரு அவரிடம் இருக்கிறது.

அதிகாலை 5 மணிக்குத் தயாராகி மீண்டும் ஒரு பயணம்... ஜெபல் ஹபீத்தை நோக்கி... மலரும் சூரியனை மறைந்திருந்து படம் பிடிக்க...

ஒரு கரக் டீயைக் குடித்து விட்டு மலையேற ஆரம்பித்தோம்.... பதிமூன்று கிலோமீட்டர்... சில பல ஹேர்பின் வளைவுகளுடன்... நெருக்கமாய் சிரிக்கும் விளக்குகளின் வெளிச்சத்தில்... பகலெனத் தெரிகிறது மலையின் ஊடான பாதை... மேலே ஏற... ஏற... இந்தப் பனியிலும் குளிரிலும் சூரியனைக் காண அங்கு இரவே வந்து தங்கியிருந்த அரபிகளும்... பிலிப்பைனிகளும்... நம்மவர்களும்...  எழுந்து தயாராகிக் கொண்டிருந்தார்கள்.


கம்பமொட்டு வழி கேரளாவுக்குச் சென்ற போது சரியான மழை... டாடா சுமோவில் நண்பர்களுடன் பயணம்... இரவாகி விட மலையில் இருந்து மெல்ல இறங்கிக் கொண்டிருக்கிறோம்... மாலையில் அடித்துப் பெய்த மழையின் மிச்சங்கள் ரோடெங்கும்... கொண்டை ஊசி வளைவுகளில் சோபையாய் எரியும் தெரு விளக்குகள்.... 

தங்க நல்ல இடம் தேடி... அருகிருக்கும் ஊர் நோக்கி மெல்ல நகர்கிறது சுமோவை நண்பர் ஓட்டுகிறார்... ஓரிடத்தில் மொத்தமாய் மூடுபனி (Mist) வந்து வண்டியின் முன்னே அமர, வழி தெரியாத நண்பன் திணறி, ஒண்ணுமே தெரியலை என வண்டியை ஓரமாக நிறுத்த, ஹெட்லைட் எரிவோமா வேண்டாமா என யோசித்து ஓளிவிட, மெல்ல வளைவில் வந்து திரும்பி எங்களைக் கடக்கிறது அரசுப் பேருந்து.

கொஞ்ச நேரத்தில் மூடுபனிக்கு மூடு வந்து மெல்ல வழிவிட வண்டியை எடுத்தால் அந்தத் திருப்பத்தில் எங்கள் வண்டியோ நேரே செல்வதற்கு ஆயத்தமாய்... மூடுபனியில் நண்பன் மெல்லச் செலுத்தியிருந்தால் மலையை ரசித்தபடி மெல்ல கடந்திருப்போம் வாழ்வின் இறுதி நொடிகளை.... அத்துடன் நண்பனுக்கு பயமெடுக்க டிரைவர் சீட்டை மற்றொருவர் ஆக்கிரமித்தார். 

அப்படியெல்லாம் பயம் காட்டாமல் பகலில் பயணிப்பது போல் விளக்குகள் ஜொலிக்க, ஒரு மலை முகட்டில் பலர் கேமராவுடன் காத்திருக்க, சுபான் அவர்களும் காலைக் கதிரவனின் கவிதையை எழுத ஆயத்தமானார். நம்ம அரசியல்வாதிகள் பொதுக்கூட்டத்துக்கு வருவது போல் பகலவனும் ரொம்பச் சோதித்தான். அதுவரை ரசனையாய் அருகில் பிலிப்பைனிகள் போட்டோ எடுக்கவில்லை என்பதையும்... அவர்களின் பாடலுக்கு பிரபு லாலலா... லல... லாலல்லா... பாடவில்லை என்பதையும் சொல்ல வேண்டியது கடமை.

சூரியன் மெல்ல மேலெழும்பி வர, போட்டோக்கள் சுட்டுத் தள்ளப்பட... எல்லாவற்றையும் மலை முகட்டில் படுத்தபடி கவனித்துக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்... அவரும் சூரியனாருக்குத்தான் காத்திருந்தார் போல.... ஆம் மலை முகடு ஒரு முதியவனின் முகமாய்....

மீண்டும் இறங்கி... டீயுடன் இட்லி பார்சலும் பெற்று... கார் கொடுத்த நண்பருடன் பேச ஆரம்பிக்க அவரோ நம்ம பரம்பக்குடிக்காரர்.... அமராவதிபுதூர் குருகுலத்தில் படித்தவர்... குருகுலம் பற்றிப் பேசினார். கண்ணதாசன் பற்றியும் பேசினோம்.


மீண்டும் காரின் அருகில் நின்று பாலஸ்தீனம், சிரியா, நபிகள், சதாம் உசேனின் கடைசிக் கவிதை, செங்கிஸ்கான் என ஒரு குட்டி இலக்கிய அரட்டையுடன் பிரபுவை கார் கொடுத்த நண்பருடன் அனுப்பிவிட்டு கனவுப்பிரியன் அண்ணன் அறைக்குத் திரும்பி குளித்து... இட்லியை சாம்பாரில் நனைத்து தள்ளிவிட்டு அங்கிருந்து மீண்டும் அபுதாபி நோக்கி....

வரும் வழியெங்கும் சுபான் அவர்களின் கேமராவுக்கு நல்ல தீனி கிடைத்துக் கொண்டிருந்தது.... அறைக்குத் திரும்பிய போது நண்பரின் கை வண்ணத்தில் சிக்கன் வாசம் வரவேற்றது.

மிகச் சிறப்பானதொரு பயணம் நண்பர்களாலேயே சாத்தியப்பட்டது.

-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனிமையான பயண நிகழ்வுகள்
மனதை மகிழ்விக்கின்றன நண்பரே

ஸ்ரீராம். சொன்னது…

அழகிய படங்கள். பயணங்கள் சுகமானவைதான்.

பூ விழி சொன்னது…

பயணங்கள் உடல் அலுப்பை கொடுத்தாலும் மன நிறைவை கொடுக்கும் தண்ணியெடுக்க இவ்வளவுதூரமா ?நீங்கள் சைக்கிள் போய்விட்டீர்கள் சகோதரிகள் என்றால் அவர்களும் சைக்கிள் பயணம் தானா

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

அலுப்பு தட்டாத வகையில் உங்களுடன் பயணித்ததுபோல இருந்தது. பள்ளிக்காலம் தொடங்கி இன்றைய பயணங்களை நினைவுகூர்ந்து எழுதிய விதம் ரசிக்கும்படி உள்ளது. பயணங்கள் என்றுமே சுகமானவை. பயணத்தின்போது வாசிப்பு என்பதானது இன்னும் சுகம் தரும். மென்மேலும் நீங்கள் பயணிக்க வாழ்த்துகள். என் வாழ்வில் ஆய்வுப்பயணம், சுற்றுலா, கோயில் உலா என்ற பல நிலைகளில் தொடர்கிறது.

Yarlpavanan சொன்னது…

அருமையான பகிர்வு
நல்ல நண்பர்கள் இருக்கும் வரை
இனிய பயணங்கள் இருக்கத் தான் செய்யும்
"பயணங்கள் முடிவதில்லை"

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பயணங்கள் என்றுமே இனிமையானவை. உங்களுடன் நானும் பயணப்பட்ட உணர்வு. படங்கள் அழகு!

G.M Balasubramaniam சொன்னது…

பயணங்கள் முடிவதில்லைதான் ஆனால் வாழ்க்கைப்பயணம் முடிந்துதானே ஆக வேண்டும் ( இது என்மனநிலை )

ராமலக்ஷ்மி சொன்னது…

பயணங்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்த விதம் அழகு. தொடரட்டும் இனிய பயணங்கள்.