இது ஒரு பரிஷார்த்த முயற்சி.
அப்படித்தான் சொல்ல வேண்டும். இதுவரை இப்படியான ஆந்தாலஜி வகை படங்கள் தென்னிந்திய மொழிகளில் வந்திருக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி இல்லை என்ற வார்த்தையைச் சொல்லும் போது இது ஒரு கன்னி முயற்சிதானே... அதுதான் பரிஷார்த்தம் என்பதாய் முதல் வரியில்.
நாம் பார்த்த சினிமாக்களில் நாலைந்து கதைக்களங்கள் இருந்தாலும்... வெவ்வேறு புள்ளியில் ஆரம்பித்து நகர்ந்து எல்லாக் கதையும் ஒரே புள்ளியில் இணைந்து சுபமாகவோ சோகமாகவோ முடியும். ஆனால் இதில் நான்கு புள்ளிகளை வைத்து அதை இணைக்க மையப்புள்ளி என்று ஒன்று வைக்கவே இல்லை.
நாலும் நாலுவிதமான... ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கதைகள். ஒன்று முடிந்ததும் மற்றொன்று...எல்லாம் அழகிய குறும்படமாய்... அதற்குள் காதல், சோகம், மகிழ்ச்சி, வலி என எல்லாமே இருக்கிறது.
ஒவ்வொரு கதைக்களத்துக்கும் இசை,ஒளிப்பதிவு என எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்.
படம் ஆரம்பிக்கும் போதே சிவனின் நர்த்தனத்தை ஓவியமாகி ஒரு பாடலின் பின்னணியில் இது சிவன் சார்ந்த கதை எனக் காட்டி விடுகிறார்கள். ஒவ்வொரு கதைக்கும் முன்னர் சிவனின் ஓவியம் காட்சிப்படுத்தப்படுகிறது. அது விளக்குகிறது கதைக்கான களத்தை.
நீர், காற்று, நெருப்பு, நிலம் என நான்காய் களம்.
நான்கிலும் நாயகன் மம்முட்டியின் மைந்தன் துல்கர் சல்மான்.
நான்கிற்கும் நான்கு விதமான நாயகிகள்.
நீண்ட முடி வளர்த்து கல்லூரி ரவுடியாக, திக்குவாய் ஷேகர்...
கண்ணாடி அணிந்த, லேசான தாடி வைத்த விலங்குகள் மருத்துவர் திரிலோக்...
டானின் வலதுகரமாக... எதற்கும் துணிந்த ஷிவா...
இராணுவ வீரனான, கோபக்காரனான ருத்ரா...
இப்படியான நாலு கதாபாத்திரங்களையும் தன் தோளில் சுமந்து படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் துல்கர்.
முதல் கதையின் நாயகியாய் தன்ஷிகா... கபாலியில ரஜினியின் மகளாய் வருவாரே... அட டி.ஆர். இங்கிதமில்லாம மேடையில் வைத்து திட்ட, அதை அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் சிரிச்சிக்கிட்டு வேடிக்கை பார்க்க கண்ணீர் விட்டு அழுதுச்சே... அந்தப் பொண்ணுதாங்க...
தன்ஷிகாவுக்கு கண் தெரியாது... அவரோடு ஷேகருக்குக் காதல்... வீட்டில் கண் தெரியாதவளைக் கட்டக்கூடாதென எதிர்ப்பு... மீறித் திருமணம்... குழந்தை... பிறக்கும் குழந்தைக்கும் கண் தெரியாமல் போவதற்கான சாத்தியக்கூறு... ஒரு தொகை கொடுத்து ஒதுக்கி விடலாம் என வீட்டார் முடிவு... இப்படியான நகர்வின் முடிவு என்ன என்பதை கோபம், காதல், பிரிவு, வேதனை என எல்லாம் சமமாய்க் கலந்து கொடுத்திருக்கிறார்.
இது நீர் சம்பந்தப்பட்டது என்பதால் பெரும்பாலான காட்சிகள் நீரோடு... கண் தெரியாத தன்ஷிகாவின் அறிமுகம் நீர் நடனத்தில்... காதலைச் சொல்லும் இடம்... பிரிவுக்கான இடம் என எல்லாமே நீர் சம்பந்தப்பட்ட இடமாகவே.
முடி வளர்த்த துல்கரைவிட அழகான தன்ஷிகா கவர்கிறார்.
இரண்டாவது கதையில் ஆர்த்தி வெங்கடேசை காதல் திருமணம் செய்த திரிலோக்... மனைவியுடன் ஒரு ஜாலியான சைக்கிள் பயணம்... கணவனை விடுத்து தனியே பயணிக்கும் மனைவிக்கு ஆக்ஸிடெண்ட்... உயிர் இருக்கு காப்பாற்றி விடலாம் என மருமகனும்... வேண்டாமென மாமனும்.. இந்தப் போராட்டத்தில் மாமன் வெற்றிபெற சில தூரம் கொண்டு சென்று ரோட்டில் போட்டுவிட்டு போய்விடுகிறார்கள்... அவள் மூச்சை விடுகிறாள்.
அவளை மோதியவனில் மாமன் மரணமடைய மருமகனுக்கு ஒரு விபத்து... அவனைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறான் கால்நடை மருத்துவரான திரிலோக். அவனின் மனைவியின் சாவுக்கு தானே காரணம் என்பதால் அவனிடம் உண்மையைச் சொல்லத் துடிக்கிறான் மருமகன்.
அவன் சொன்னானா... மனைவியைக் கொன்றவர்களை என்ன செய்தான் த்ரிலோக் என்பதை விறுவிறுப்பாய்ச் சொல்லியிருக்கிறார்கள்.
இது காற்று சம்பந்தமானது என்பதால் மூச்சும், செல்போன் பேச்சுமே பிரதானமாய்...
மூன்றாவது கதைக்களம் தமிழ்ச் சினிமாவின் டான் வகையறா... ஒரு பெரிய ரவுடி... அவனுக்குக் கீழே சில இரண்டாம் கட்ட ரவுடிகள்... அதில் பிரதானமாய்... வலது கையாய் ஷிவா... பொதுவாய்ச் சொல்லப் போனா தேவாவுக்கு சூர்யா மாதிரி... புதுப்பேட்டை தனுஷ் மாதிரி...
அவன் முரடன் என்றாலும் காதலிக்கும் மனைவியாய் ஸ்ருதி ஹரிஹரன்... ரவுடியாகத் துடிக்கும் தம்பி... அவன் அன்பு செலுத்தும் குழந்தை.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏற்பட்ட பிரிவின் வலி சுமக்கும் இதயம்... அப்பாவைக் கொன்றவனை தேடிச் செல்லுமிடத்தில் அவனின் மனைவியாய் அம்மா.
முடிவு பரிதாபமாய்...
இது நெருப்பு சம்பந்தப்பட்டது என்பதால் துப்பாக்கியே பிரதானம்.
நான்காவது கதையில் ருத்ரன் இராணுவத்தில் பயிற்சி நிலையில்... இராணுவ அதிகாரி மகளான நேஹா சர்மாவுடன் காதல்... பெண் வீட்டார் எதிர்ப்பால் வேலைக்கு அபாயம்... காதலி படிப்பிற்காக வெளிநாடு செல்கிறாள்... காதல் உடைக்கப்படுகிறது... அவளுக்குத் திருமணம்.
அதை நிறுத்த வந்து பிரச்சினையாக, காதல் உடைபட்டதற்கு உன் அப்பனே காரணம் என்கிறாள் (முன்னாள்) காதலி. அப்பா மீது கோபம்... அம்மாவும் அப்பாதான் காரணம் என்கிறாள் வேறொரு கதையோடு.
திருமணம் நின்றதா... இல்லையா.. காதல் சேர்ந்ததா... என்பதை காதலோடு சொல்லியிருக்கிறார்கள்.
நாலு விதமான கதைகள்... ஒன்றோடொன்று இணையாத தண்டவாளமென.
இதில் தன்ஷிகாவுக்கே முதலிடம்... நேஹாவுக்கு இரண்டாமிடம்... மற்றவர்களுக்கு அதிக வேலையில்லை என்றாலும் நடிப்பில் குறையில்லை.
அதென்ன சோலோ... இந்தப் படத்தை சோலோவாக அதாவது தனியாளாக தூக்கி நிறுத்தியிருப்பவர் சல்மான். அதனால் இருக்கலாமோ என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
அப்ப சோலோன்னா...?
நான்கில் மூன்றில் தனிமைப்பட்டு நிற்பதாலும் வலிகளையும் வேதனையையும் அவன் ஒருவனே சுமப்பதாலுமே 'சோலோ' என்ற தலைப்பிட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
சரி விடுங்க... பெயர் காரணம் இப்ப எதற்கு...? படம் எப்படி...?
இது வித்தியாச முயற்சி.... 2.30 மணி நேரத்தில் நாலு படங்களைப் பார்த்த திருப்தி.
அழகான நாயகிகள்...
அருமையான எடிட்டிங்...
புதிய முயற்சியைப் பார்க்கும் விருப்பமிருந்தால் படத்தைப் பார்க்கலாம்...
முதல் கதையின் முடிவை அறியாமல் கதை சூடு பிடிக்கும் என்று நினைக்கும் போது இரண்டாவது கதை தொடங்கிவிடுவதால் ஒரு அயற்சி ஏற்படுகிறது... ஒவ்வொரு கதையையும் விரிவான திரைக்கதையாக்கினால் நாலு படங்கள் எடுத்திருக்கலாமே எனத் தோன்றுகிறது.
நல்ல படம்ன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். அப்படி என்ன வித்தியாசமாய் இருக்கு எனப் பார்க்க விரும்பினால் பார்க்கலாம்... போரடிக்காது என்றுதான் சொல்லுவேன்.
நேரடித் தமிழ்ப்படமாகவும் வந்திருக்கிறது. தமிழ்க்கண்-ல் நல்ல பிரிண்ட் வந்தாச்சு.
நான் மலையாளத்தில் பார்த்தேன்.
***
பிரதிலிபி போட்டியில்....
சிறுகதை : தலைவாழை
கட்டுரை : பதின்மம் காப்போம்
***
பிரதிலிபி போட்டியில்....
சிறுகதை : தலைவாழை
கட்டுரை : பதின்மம் காப்போம்
-'பரிவை' சே.குமார்.
13 எண்ணங்கள்:
தங்களுடைய விமர்சனம் ஆர்வத்தைத் தூண்டுகின்றது..
நேரம் கிடைக்கட்டும்!..
நல்ல விமர்சனம்...
துல்கரின் நடிப்பும் பிடிக்கும்... கொஞ்சம் எதார்த்தமாகவும் அழகாகவும் இருக்கும்...
ஏற்கனவே இப்படம் பற்றி படித்ததில் நல்ல முயற்சி என்றே அனைவரும் பாராட்டினர்...
பார்க்கலாம் பகிர்வுக்கு நன்றி
யதார்த்த சினிமாவில் இருந்து மலையாளப் படங்களும் விலகி வந்தாயிற்றா
புதிய முயற்சியாக இருக்கும் போலவே...பாலச்சந்தர் (என்று நினைக்கிறேன்) இடைவேளை வரை ஒரு கதை, டைவேளைக்குப் பின் வேறு கதை என்று ஒரு படம் எடுத்த நினைவு. ஒரு வீடு இரு வாசல்?
உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது. ம்ம்ம் வித்தியாசமான முயற்சி என்றே பார்த்தேன். மட்டுமல்ல மம்முக்காவின் மகன் துல்கரும் நன்றாக நடிப்பதால் அவருக்காகவும் பார்த்தேன். படம் ஒகே தான். பெரிய கதையைச் சுருக்கிக் கொடுத்தால் கொஞ்சம் அப்படியும் இப்படியும் இருக்கும் இல்லையா அப்படித்தான்....வித்தியாசமான முயற்சிக்குப் பாராட்டலாம்.
துளசி
ஆமாம் ஸ்ரீராம். இறுதியி முடிவில் இரு கதையும் இணையும். வயலின் கணேஷ் குமரேஷ் நடித்திருப்பார்கள் இதில். முழுப் படமும் பார்த்ததில்லை. யார் வீட்டுக்கோ போயிருந்தப்ப அங்கு ஓடிக் கொண்டிருந்ததைக் கொஞ்சம் பார்த்த நினைவு.
கீதா
சூப்பர்ர்..விமர்சனம் படம் பார்க்க தோனுது..பார்த்துடுவோம் !!
துல்கரின் நடிப்பு நல்ல இருக்கும் அதற்க்காகவே பார்க்கலாம்
விமர்சனம் அருமை
அருமை
ஆர்வத்தைத் தூண்டும் விமர்சனம்
தம+1
லிங்க் கொடுங்க குமார்... பார்க்க முயற்சிக்கிறேன்.
விமர்சனத்தைப் படித்ததும் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. பார்ப்போம்.
பார்க்கலாம் என்று தோன்றுகிறது. பார்த்து விட்டு நன்றி சொல்கிறேன்.
கருத்துரையிடுக