மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 12 அக்டோபர், 2017

மனசு பேசுகிறது : வாசிப்பும் மருத்துவமும்

சென்ற ஆண்டில் நண்பர் தமிழ்வாசியின் மூலமாக கல்கியின் பொன்னியின் செல்வனுக்குள் நுழைந்து அதன் தொடர்ச்சியாக சாண்டில்யனின் கதைகளைத் தொடர் வாசிப்பாக்கி... பாலகுமாரன், விக்கிரமன், இந்திரா சௌந்தர்ராஜன் எனப் பயணித்த வாசிப்பு அப்போது இருந்த வேகம் இல்லாவிட்டாலும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எப்படி மீள்வோம் எனத் தினந்தினம் நடக்கும் மனப்போராட்டம்,  வேலையில் ஒண்ணுமே தெரியாத மேனேஜரின் கீழ் மாட்டிக் கொண்டு எல்லா வேலைகளும் தலையில் சுமத்தப்படுவதால் ஏற்படும் அயற்சி... இந்தக் கம்பெனியில் இது ஒன்பதாவது ஆண்டு, இதுவரை பார்த்த எந்தப் புராஜெக்ட்டிலும் வாரத்தில் மூன்று நாள் மீட்டிங் எல்லாம் போனதே இல்லை... சொல்லப் போனால் மீட்டிங்கிற்கே போனதில்லை... அதெல்லாம் நமக்கு மேலுள்ளவன் பார்த்துப்பான். இப்ப தினமும் ஐந்து மணி நேர மீட்டிங்... இந்த வாரம் பெரும்பாலும் மதிய உணவு நாலு ஐந்து மணிக்குத்தான்... இப்படி எல்லாமுமாகக் கொடுக்கும் மனவலிகளின் நிவாரணி காலையும் மாலையும் பேருந்தில் பயணிக்கும் போது வாசிப்பவைதான்... 

ஊரில் இருந்து வந்தது முதல் வாசிப்பும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பாலகுமாரனின் தேடிக் கண்டு கொண்டேன் வாசித்து முடித்ததும் அடுத்து என்ன வாசிக்கலாம் என்ற தேடுதலில் கிடைத்தது தற்போது வாசிப்பில் இருக்கும் என் அண்ணன் ஜோதிஜி அவர்களின் 'காரைக்குடி உணவகம்'. இதுவரை இருநூறு பக்கம் வாசித்து இருக்கிறேன். ஒரு எழுத்து கதையாகும் பட்சத்தில் அது எப்படியிருந்தாலும் வாசித்து விடுவேன்... கதையின் பயணமும் முடிவும் என்ன ஆகும் என்ற ஆவலில் எப்படியும் முடித்து விடுவேன். அதே கட்டுரைகள் என்னும் பட்சத்தில் சில பத்திகளைப் படிக்கும் போதே தேருக்கு கட்டை கொடுத்து நிறுத்தியது போல் நிறுத்தி மேற்கொண்டு படிக்காமல் அடுத்த கட்டுரைக்கு தாவிவிடுவேன். பாலகுமாரனின் தேடிக் கண்டு கொண்டேன் கட்டுரைகளின் தொகுப்புத்தான்... அதிகம் கோவில்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள், செவி வழிச் செய்திகள், அவர் பார்த்தது அறிந்தது என கலந்துகட்டி எழுதி, அந்தக் கோவில் குறித்தும் அங்கு சென்றால் என்ன நடக்கும் என்பதையும் சொல்லும் கட்டுரைகள்... வாசிப்பில் அயற்சி ஏற்படுத்தவில்லை... உடையார் வாசிக்கும் போது அதில் அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே உயர்ந்தவர்களாகவும் அவர்களுக்கு இராஜராஜனே பயந்தான் எனவும் சொல்லியிருந்தார்... உடையார் ஏனோ கோவில் கட்டுமானம் தவிர மற்றவற்றில் ஈர்க்கவில்லை. இதிலும் அவர்கள் துதிதான் என்றாலும் கட்டுரைகள் வாசிக்க வைத்தன. 

காரைக்குடி உணவகம்... நம்ம ஜோதிஜி அண்ணனின் எழுத்தைச் சொல்லவே வேண்டாம்... எள்ளல், எகத்தாளம், நையாண்டி என எல்லாம் ஊறுகாயாக இருந்தாலும் சொல்ல வந்ததை, சொல்ல வேண்டியதை மிகத் தெளிவாக புள்ளி விபரத்துடன் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. இதிலும் அப்படியே சத்துமாவு செய்யும் குறிப்புக்கள், தேன் இஞ்சி, தேன் நெல்லிக்காய் என சாப்பாட்டில் ஆரம்பிக்கும் எழுத்து அரசியல், ஆன்மீகம் என கலந்து கட்டி பயணிக்கிறது. கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்தால் அது நம்மை உள்ளிழுத்து தொடர்ந்து வாசிக்க வைக்கின்றன... இந்தத் திறமை எல்லாருக்கும் சாத்தியமல்ல. மேலே சொன்னது போல் கட்டுரைகள் பெரும்பாலும் மெகா தொடர் போல சவ்வாய்ப் பயணித்து வாசிக்க முடியாத அயற்சியை ஏற்படுத்தும்... ஆனால் இவையோ ஆவலைத் தூண்டுகின்றன. இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை... இது விமர்சனப் பகிர்வும் அல்ல. அதில் மருத்துவம் குறித்து அண்ணன் எழுதிய கட்டுரையை வாசித்ததும் நான் எடுத்துக் கொண்ட ஆயுர்வேத மருத்துவமும் இங்கு இருக்கும் மருத்துவமும் குறித்து எழுத நினைத்து ஆரம்பித்த கட்டுரைதான் இது.

அப்ப நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். பேராசிரியர் பழனி இராகுலதாசனின் செல்லப்பிள்ளையாகி அவர் வீட்டில் நாங்களெல்லாம் ஆட்டம் போட்ட நாட்கள் மறக்க முடியாதவை. சின்ன வயதில் இருந்தே உள்நாக்கு வளரும் பிரச்சினை  இருந்தது.  வீங்கிவிட்டால் எச்சில் முனுங்க... சாப்பிட, தூங்க என நான்பட்ட சிரமம் சொல்லி மாளாது. வலியின் காரணமாக கண்ணீர் ஓடிக்கொண்டேயிருக்கும். உப்புப் போட்டு வாய் கொப்பளித்தல் செய்தாலும் ஊசியே நிவாரணி ஆகும். கல்லூரி படிக்கும் போதும் அது தொடர, என் நிலை பார்த்து காரைக்குடி ஆனந்த் தியேட்டர் (இப்போது சத்தியன்) அருகில் ஞாயிறன்று இலவச ஆயுர்வேத சிகிச்சை கொடுப்பதை அறிந்த ஐயா என்னைக் கூட்டிக் கொண்டு பஸ் ஏறினார். முதல் வாரம் சென்றோம் எல்லா விசாரணைகளும் முடிந்து இது இது சாப்பிடக் கூடாதெனச் சொல்லி, கடுகை விட கொஞ்சம் பெரிதாக மாத்திரைகள் கொடுத்து காலை, மாலையில் இரண்டு மாத்திரையை வாயில் போட்டு சப்பிச் சாப்பிடச் சொன்னார். இரண்டு முறை சென்றோம்... அதன் பின்னர் ஐயா தங்களின் கிளினிக்கிற்கு வருகிறோம் என்று சொல்லிவிட்டார். பின்னர் அங்கு பயணம்...  கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து பேருக்கு காபி கொடுக்கும் அம்மா, காபி சாப்பிடக்கூடாது என்பதால் எனக்கு மட்டும் ஐயாவின் உத்தரவினால் கல்லூரி முடிக்கும் வரை... ஏன் இப்போது சென்றாலும் சுடச்சுட பால் மட்டுமே கொடுப்பார்கள் என்பது தனிக்கதை. அவரிடம் தொடர்ந்து பார்த்ததில் இதுவரை வலி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான செலவு இல்லை... அதிகமான மாத்திரை இல்லை... உண்மையில் மிகச் சிறப்பான மருத்துவம்... மருத்துவர்... இப்பவும் கழனிவாசல் ரோட்டில் அவரது கிளினிக் இருக்கிறது.

இங்கு மருத்துவம் என்பது கம்பெனி கொடுத்திருக்கும் மருத்துவத்துக்கான இன்சூரன்ஸ் அட்டையை வைத்துத்தான். அட்டைகள் கலர் கலராய் பலவிதம்... இன்சூரன்ஸ் கம்பெனிகளும் பலவிதம்... இதில் அட்டைக்குத் தகுந்தாற் போல் கட்டணமும் சிகிச்சையும் உண்டு. எங்கள் கம்பெனி வருடா வருடம் அட்டை கம்பெனியை மாற்றி இப்போது நமக்கு லாபமில்லாத ஒரு அட்டையைத் தந்திருக்கிறது. மருத்துவருக்கு குறைந்தது 50 திர்ஹாம் முதல் 100 திர்ஹாம், லேபரெட்டரிக்கு 20%, மாத்திரைக்கு 30% இதுதான் இப்போதைய எங்கள் அட்டையின் கணக்கு. இதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை. சென்ற முறை கொடுத்த அட்டையில் மருத்துவருக்கு 50ம் மாத்திரைக்கு 10%ம் தான் இருந்தது. இப்போதைய அட்டையைப் பார்த்தாலே உடம்புக்கு முடியவில்லை என்றாலும் மருத்துவமனை செல்ல வேண்டுமா என்றுதான் தோன்றுகிறது. இங்கு பெரிய பதவியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கும்  அட்டைக்கும் சாதாரண வேலையில் இருப்பவர்களுக்குக் கொடுக்கும் அட்டைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பின்னவர்கள் அதிகம் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். மருத்துவம், லேபரெட்டரி, மாத்திரை என எல்லாம் இலவசமாகப் பார்க்கும் அட்டையும் உண்டு... எல்லாத்துக்கும் 10% முதல் 50% வரை கொடுக்க வேண்டிய அட்டைகளும் உண்டு. இங்கு மருத்துவம் என்பது நம்ம ஊரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் செலவு வகையில் மிச்சம் என்றாலும் அந்தளவுக்கு நல்ல மருத்துவமாகத் தெரிவதில்லை. எல்லா வசதிகளும் இருக்கும்... நல்ல மருத்துவர்களும் உண்டு. இருப்பினும் அதிகமான மருத்துவர்கள் கணிப்பொறியில் தேடித்தான் மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதுடன் லாபம் பார்க்கும் தொழிலாகவே இருக்கிறது. குறிப்பாக மருத்துவமனைகள் பெரும்பாலும் மலையாளிகளால் நடத்தப்படுகின்றன. மருத்துவர்களில் மலையாளிகளும் தெலுங்கரும் அதிகம். நம்மவர்களும் சிலர் உண்டு. பிலிப்பைனி, அரபிகள் என நாம் பார்க்க நினைக்காத மருத்துவர்களும் உண்டு.

எல்லாமே அட்டையை மையமாக வைத்து நடக்கும் தொழில் என்பதால் மேலே சொன்னது போல் மருத்துவமனைக்கு வருமானம் வரும்படியான செயல்கள் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும். இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே போன்றவை முக்கியமானதாக கருதப்படும். மருந்துக்கள் டப்பா, டப்பாவாக எழுதப்படும். மெடிக்கலிலும் இன்சூரன்ஸ் அட்டைக்குத்தான் மருந்து கொடுக்கப்படும். அதற்கு முதலில் இன்சூரன்ஸ் கம்பெனியின் அனுமதியை மெடிக்கல்காரர் பெற்றுத்தான் மாத்திரை மருந்து கொடுப்பார். தனிப்பட்ட முறையிலான விற்பனை அரிது. அப்படி வாங்கினாலும் நம்மூரைப் போல ரெண்டு மூணு மாத்திரைகள் வாங்குவது என்பது முடியாத காரியம்... ஒரு டப்பாதான் கிடைக்கும். எல்லாமே இன்சூரன்ஸ் பணத்தையும் நம் பணத்தையும் குறிவைத்தே நடக்கும் வியாபாரம் என்பதால் டப்பா, டப்பாவாக வாங்கி அதை தின்று... குறிப்பாக கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை டப்பாக்களைத் தொடர்ந்து விழுங்குபவர்களே அதிகம். எனக்கும் கெட்ட கொழுப்பு (LDL Cholesterol ) இருக்கென மாத்திரை டப்பாக்களைக் கொடுத்து ஒரு வருடத்துக்கு மேலாச்சு... நான் அதில் ஒரு மாத்திரையும் சாப்பிடலை. மற்றொரு மருத்துவமனையில் பரிசோதித்த போது அப்படி எதுவும் இல்லை. ஊருக்கு வந்த போது அங்கு பரிசோதனை செய்த போதும் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். யூரிக் ஆசிட் பிரச்சினை கூட ரெண்டு மூணு ஹாஸ்பிடலில் இருக்கு என்பதாகவும் கடைசியாக பார்த்த ஆஸ்பத்திரியிலும் ஊரிலும் இல்லை என்பதாகவுமே வந்தது. இல்லாத ஒன்றை அதாவது சர்க்கரை, உப்பு, கொழுப்பு போன்றவற்றை இருப்பதாகக் காட்டி லாபம் சம்பாதிக்கிறார்களோ என்றும் தோன்றுவதுண்டு. ஏனென்றால் இங்கு 100க்கு 98 பேருக்கு இந்த வியாதிகள் இருக்கென மாத்திரை சாப்பிடுகிறார்கள். தொடர்ந்து இருபத்தைந்து முப்பது வருடங்கள் இருப்பவர்கள் மாத்திரைகளை விழுங்கியே ஊர் வந்ததும் வாழ முடியாமல் உயிரை விட்டு விடுவதையும் பார்க்க நேர்கிறது... இதுவே ஊருக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தையும் நாளுக்கு நாள் கிளைவிட்டு வளரச் செய்கிறது.

மகளுக்கு சிறு வயது முதல் பார்த்த மருத்துவத்தில் தீராத பிரச்சினையை, என்னய்யா இந்த மாத்திரையெல்லாம் கொடுத்து பிள்ளையை பாடாப் படுத்தியிருக்காங்க படிச்சவங்க நீங்களும் அதை யோசிக்கவே இல்லையா என்று திட்டிவிட்டு ஒரு மாத மருத்துவத்தில் சுத்தமாகக் குணமாக்கிக் கொடுத்தார் மதுரையில் இருக்கும் டாக்டரான அவ்வை நடராஜனின் சகோதரர். இது வரை எந்தத் தொந்தரவும் இல்லை...  மனைவிக்கு பார்த்த மருத்துவம் குறித்தும் நிறையப் பேசலாம். அதையெல்லாம் பேசினால் இந்தக் கட்டுரை இன்னும் இன்னுமென நீண்டு போகும். பிறகு பார்க்கலாம்.

வாசிப்பு ஒரு போதை.... அது பிடித்துக் கொண்டால் எதையும் தேடித்தேடி வாசிக்கச் சொல்லும். முடிந்தால் காரைக்குடி உணவகத்தை வாசியுங்கள். நிறைய விபரங்களைப் பேசியிருக்கிறார். சில கட்டுரைகள் அவரின் தேவியர் இல்லத்தில் எழுதியவைதான். அவரின் கட்டுரைகளின் தொடர்ச்சியாக நாமும் நிறையப் பேசலாம்.
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

மனோ சாமிநாதன் சொன்னது…

பதிவு முழுவதும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது.
உடையார் எப்படி பொறுமையாக படித்தீர்கள்? என்னால் அது முடியவேயில்லை. கல்கியின் தமிழ்நடைக்கும் இவரின் தமிழ்நடைக்கும் நிறைய வித்தியாசம் என்பதால் ரசிக்கக்கூட முடியவில்லை.

யூரிக் ஆசிட் பிரச்சினையில் அலட்சியமாக இருக்க வேண்டாம். அதில் சிறுநீரகமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒரு நல்ல மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யமான குறிப்புகள்.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

நல்ல, அருமையான விமர்சனம் என்று நான் எழுதுவதைவிட, வாசிப்பில் மூழ்கி ரசனையோடு உங்கள் அனுபவத்தையும் குழைத்து எழுதி இருக்கிறீர்கள் என்று சொல்வதே சாலச் சிறந்தது.

அட்டையை மையமாக வைத்து என்று நீங்கள் சொல்வது சரிதான். இப்போது தமிழ்நாட்டில் அட்டையை வைத்துதான் ஒருவருக்கு நோயையே தீர்மானிக்கிறார்கள். ( உங்கள் வலைத்தளம் வரும்போதெல்லாம் tamil10.com , ta.indli.com என்று ரொம்ப நேரம் சுற்றியதாலேயே அடிக்கடி வர இயலவில்லை )

ராஜி சொன்னது…

என் மகனுக்கு உணவு விழுங்குதலில் பிரச்சனை இருக்கு. கொஞ்சம் மெனக்கெட்டுதான் உணவை விழுங்குவான். ஒரு மாசமா இந்த பிரச்சனை இருக்கு. எத்தனை மருத்துவம் பார்த்தும் குணமாகல. உங்க பதிவை படித்தபின் ஏன் அவனுக்கு உள்நாக்கு வளர்ந்திருக்காதுன்னு யோசிக்க வைத்தது. தீபாவளி விடுமுறைக்கு வரும்போது டாக்டரை பார்க்க சொல்லனும்.

நன்றி சகோ

ஜோதிஜி சொன்னது…

நன்றி தம்பி. சில நோய்கள் சித்த மருத்துவத்தில் எளிதில் குணமாகும். ஆட்களை கண்டுபிடிக்க வேண்டும்.

G.M Balasubramaniam சொன்னது…

முதலில் நோய்கள் கண்டு பயப்படுதல் கூடாது சில மருத்துவர்களைப் பார்த்தாலேயே நம்பிக்கை பிறக்கும் சிலமருத்துவர்கள் நேர் எதிர் நான் இது பற்றி ஒருபதிவு எழுதி இருக்கிறேன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வாசிப்பு என்ற பரந்த தளமானது நம்மை மேம்படுத்தும் என்பதே உண்மை. ஆழமாக விவாதித்துள்ள விதம் உங்களின் வாசிப்பு ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. திரு ஜோதிஜி அவர்களுக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

மீரா செல்வக்குமார் சொன்னது…

அருமையான பதிவு ..குமார்

ராமலக்ஷ்மி சொன்னது…

நூல் அறிமுகம் நன்று.

பரிசோதனை அறிக்கை பிரச்சனை எனக் காட்டினால் மேலும் இரு இடங்களில் செய்து கொள்வது நல்லதே.

தினமணி கதிர் தளத்தில் உங்கள் சிறுகதையை வாசித்தேன். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

Yarlpavanan சொன்னது…

வாசகர்களைச் சுண்டியிழுக்கும்
அருமையான கண்ணோட்டம்

Unknown சொன்னது…

வயது முதுமை வாசிக்க அதிகம் இயலவில்லை