இந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில் ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின் ஐயா திரு. ஜி.எம்.பாலசுப்ரமணியம் அவர்கள்.
GMB WRITES என்னும் தளத்தில் பல்சுவைப் பதிவுகளைப் பகிர்ந்து வரும் ஐயா அவர்கள், நான் ஒரு திறந்த புத்தகம் என்று சொல்லி, உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும் என்ற வாசகத்தை வலைப்பூவில் வைத்து அதே போன்று எழுதியும் வருகிறார். மணிமேகலைப் பிரசுரம் வாயிலாக சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். அது குறித்து நான் கூட ஒரு பதிவாகக் கிறுக்கியிருந்தேன்.
ஐயாவுடன் வலையுலக தொடர்புதான்... எல்லாரையும் கருத்துக்களால்... அதுவும் மனதில்பட்ட கருத்தை தயங்காது சொல்லித் தட்டிக்கொடுக்கும் ஐயா அப்படித்தான் என் பதிவுகளிலும் தட்டிக் கொடுத்தார். ஐயா என்னைப் பற்றி நானுக்கு எழுதித் தரமுடியுமா என்று கேட்டதும் எழுதிக் கொடுத்தார்.
ஐயா குறித்து அவரின் எழுத்து கீழே.....
மனசு குமார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க என்னைப் பற்றி நான்.
ஊரறிந்த பாப்பானுக்கு பூணூல் எதற்கு என்னும் சொல்வழக்கு இருக்கிறது என்னை நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் அது சரியில்லையோ என்று தோன்றுகிறது சில அடையாளங்கள் மட்டும் போதாது தமிழ் வலையுலகில் என்னை அறியாதார் இருக்க மாட்டார்கள் என்னும் கர்வம் அது அப்படியில்லை ஐயா என்று எனக்குணர்த்தியது.
ஒரு வலைப்பூவில் வந்திருந்த ஒரு செய்தி. ஒரு பதிவர் பலரது பதிவர்கள் பெயரைக் குறிப்பிட அதில் என் பெயரைக் காணவில்லை அப்போதுதான் உரைத்தது என்னை அறியாதவர்களும் படிக்காதவர்களும் இருக்கிறார்கள் என்று என் ஈகோவுக்கான ஒரு அடி அது. என்பதிவுகளைத் தவறாமல் வாசிப்பவர்களுக்கு நான் ஒரு திறந்த புத்தகம் என்பது தெரியும். இது என்னை நானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சியே தாங்க்ஸ் டு மனசு குமார்.
என் பெயர் வயது ஆசைகள் ஆதங்கங்கள் என என்பதிவுகள் ஒரு கலந்து கட்டியவையாக இருக்கும் என் வலைத்தள முகப்பில் எழுதி இருக்கும் வாசகங்கள் என் கொள்கையை ஓரளவு காட்டும் பெரும்பாலும் உண்மை என்று நான் நம்புவதைத்தான் எழுதுகிறேன் என் பெயர் படம் என்பன போன்ற தகவல்களை நான் வெளிப்படையாகவே காட்டுகிறேன் முகம் தெரியா வலை அறிமுகங்களில் என்னைப் படிப்பவருக்கு நான் யார் என்று தெரிந்திருப்பது அவசியம் என்றே எண்ணுகிறேன் முடிந்தவரை வலை அறிமுகங்களை நட்பாக்கிக் கொள்ள விரும்புகிறேன் அதற்கு நான் யார் என்பது தெளிவாக இருக்க வேண்டும் அல்லவா புனைப் பெயரிலோ தெரியாத தகவல்களிலோ நான் மறைந்து கொள்ள விரும்பவில்லை இதைப் படிப்பவர்களுக்கு இவன் இப்படித்தான் என்னும் ஒரு கணிப்பு வரவேண்டும் .
ஜோதிஜி திருப்பூர் எழுதி இருந்ததைப் படித்தபோது அவரைப் போலவே எனக்கும் என் மூதாதையரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆவல்பிறந்தது என் செய்ய எனக்கு என் தாத்தா பாட்டி மற்றும் உறவினர்கள் பற்றிய எல்லா செய்தியும் கிடைக்கவில்லை அதுபோல் என் வாரிசுகளுக்கும் அந்தப் பிரச்சனை எழக் கூடாது என்று எண்ணியே என்னைப் பற்றி என் சுய சரிதையை ஆவணமாக்கும் முயற்சியில் இருக்கிறேன் ஆனால் அது ஏனோ முடிவு இல்லாமல் தேங்கி நிற்கிறது.
என் சொந்த ஊர் எது என்பது சந்தேகமாக இருக்கிறது என் அப்பாவின் ஊர் பாலக்காட்டில் உள்ள கோவிந்தராஜபுரம் அதன் முதல் எழுத்தே என் பெயரின் இனிஷியலில் உள்ளது அப்பா பெயர் மஹாதேவன் அவர் பெயரின் முதல் எழுத்தே என் இனிஷியலில் உள்ள இரண்டாவது எழுத்து ஆக ஜீ. எம் பாலசுப்பிரமணியம் என்பது என் பெயர் 1938-ம் ஆண்டு நவம்பர் பதினொன்றாம் தேதி பெங்களூரில் பிறந்தேன் இப்போது ஊரில் எனக்கென்று மூரிங் ஏதும் இல்லாததால் என் பிள்ளைகளின் பெயர்களில் என் ஊரின் இனிஷியலை நீக்கி விட்டேன்.
அப்பாவுக்கு அரசு பணி செல்லும் இடமெல்லாம் நாங்களும் செல்வோம் என் தாய் எனக்கு மூன்று வயதாய் இருக்கும் போதே இறந்து விட்டார் என் தாயின் முகம் கூட எனக்கு நினைவில்லை புகைப்படத்தில் பார்த்ததுதான் என் தாய் இறந்த ஓராண்டுக்குள் என் தந்தை மறுமணம் செய்து கொண்டார் எங்கள் குடும்பம் பெரியது தந்தைக்கு முதல் தாரம் மூலம் ஆறு பேர் பிறந்து இப்போதும் ஐவராக இருந்தோம் ஒரே சகோதரி அவளும் போய்ச் சேர இப்போது நாங்கள் நால்வர் மீதி இரண்டாம் தாரம் மூலம் ஏழு குழந்தைகள் பிறந்தது. அதில் மூவர் பெண்கள் பிறந்த சில நாட்களிலேயே இறந்துவிட்டனர் ஆக மீதி நால்வரில் இரண்டு பேர் பரலோகம் சென்று விட்டனர் நான் என் சிறிய தாயாரின் பராமரிப்பிலேயே வளர்ந்தேன் என் பிறந்த நாளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அது நூறாண்டுக்கு ஒரு முறைதான் இப்படி ரிபீட் ஆகும் 11-11- என்று ஒரு முறை யாரோ இது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள்
என்னைப் பற்றிய செய்திகள்பலவும் வலையில் எழுதி இருக்கிறேன் பள்ளியில் முதல் மூன்று வகுப்புகள் படிக்கவில்லை அரக்கோணத்தில் மூன்றாம் வகுப்பில் சேர்ந்து ஆறாம் வகுப்பு படிக்கும் போதே டைபாய்ட் வந்து பள்ளிப் படிப்பு தடை பட்டது அதன் பின் என் தந்தையாருக்கு பூனாவுக்கு மாற்றல் ஆக பாலக் காட்டில் அப்பா வழிப்பாட்டியுடன் ஓராண்டு படிப்பே இல்லாமல் சுற்றினோம் அங்கு மலையாளம் படிக்க வேண்டும் என்பதால் இதன் நடுவே தந்தைக்கு கோவைக்கு மாற்றல் ஆகி அங்கே ராமநாதபுரம் முனிசிபல் பள்ளியில் தேர்ட் ஃபார்மில் சேர்ந்தேன் நான் அந்தப் பள்ளியில் சேர்ந்த விவரம் எனது தளத்தில் இது லஞ்சமா .? என்ற பதிவில் இருக்கிறது.
ஃபோர்த் ஃபார்மும் அங்கேதான் வகுப்பில் நானே முதலாம் மாணவன் ஃபிஃப்த் ஃபார்ம் மற்றும் சிக்ஸ்த் ஃபார்ம் எனப்படும் பள்ளி இறுதி கூனூரில் புனித அந்தோனியார் பள்ளியில் முடித்தேன் இவை எல்லாம் என் பதிவுகளில் ஆங்காங்கே எழுதப்பட்டிருக்கும் பின் என்ன வேலை தேடு படலம்தான் நான் கல்லூரி செல்லாதவன் ஒரு முறை நண்பனொருவனைப் பிற்காலத்தில் சந்தித்து நான் எஞ்சினீயராக வேலையில் இருக்கிறேன் என்றதும் அவன் பத்தாம் க்ளாஸ் படித்து எஞ்சினீயரா என்று கேலி செய்தது நினைவுக்கு வருகிறது . நான் வாழ்வியலில் நிறையப் படித்திருக்கிறேன் என்பது எங்கும் என்னை நிலை நாட்டிக் கொள்ள உதவுகிறது எனது 53 வயது முடிந்தபோது பீ எச் ஈ எல் லிருந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டேன் அதையே என் பதிவொன்றில் என்னை பெற்றவருக்காகவும் நான் பெற்றதுகளுக்காவும் இதுவரை வாழ்ந்தாகி விட்டது போதுமடா சாமி இனி எனக்காக வாழவேண்டும் என்று எழுதி இருப்பேன்.
விருப்ப ஓய்வு பெறும் போது என் மனைவியிடம் நமக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வருமானம்போதுமல்லவா என்று கேட்டேன் அது 1991ம் ஆண்டு அவளும் நம் இருவருக்கு அது தாராளம் என்றாள் காலம் தான் எவ்வளவு மாறி விட்டது ரூபாயின் மதிப்பே போய் சில நேரங்களில் எடுத்த முடிவு குறித்த சந்தேகம் வந்ததுண்டு இருந்தாலும் இப்போது நோ ரிக்ரெட்ஸ் என் வாழ்வின் எல்லா நிலைகளுக்கு ம் நானே பொறுப்பு என்பதை உணர்கிறேன் மற்றபடி விதி என்றோ கடவுள் என்றோ நம்புவதில்லை
வலையில் என் கருத்துகளை ஆணித்தரமாகக் கூறுவேன் வெளிப்படையாக இருக்கும் ஆனாலும் பிறர் மனம் புண்படக்கூடாது என்று நினைப்பவன் எனக்கு முன் வாயில் சிரித்துக் கடை வாயைக் கடிக்கும் பலரையும் பிடிக்காது அதே போல் என்னையும் பலருக்குப் பிடிக்காது என்றும் தெரியும் யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது வெளிப்படையாக இருப்பதே என் பலம் பலவீனமும் கூட பதிவுகளில் எழுதி இருந்த சிறுகதைகளின் தொகுப்பை நூலாக்கி இருக்கிறேன். மணிமேகலைப் பிரசுரம் அதை என் 75-ம் வயது நிறையும் போது என் மக்கள் பரிசாக்கினர் எனக்கு இந்த எழுதும் வழக்கம் முன்பே இருந்தது எழுதியவை என் ஆத்ம திருப்திக்கே பத்திரிக்கைகளுக்கு அனுப்பியது இல்லை.
என் எழுத்துகளை யாராவது ரிஜெக்ட் செய்வது எனக்குப் பிடிக்காது நாடகங்களை எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறேன் புதிது புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்னும் ஒரு உந்துதல் உண்டு எழுத்துகளிலும் அவற்றைக் கடைப்பிடித்து இருக்கிறேன் என் அறுபது வயதுகளில் தஞ்சாவூர் பெயிண்டிங்கும் கண்ணாடி பெயிண்டிங்கும் ஆசிரியர் யாருடைய உதவியும் இன்றி கற்றேன் இப்போது அதைத் தொடர இயலாமல் இருக்கிறேன் நுண்ணிய வேலைகளுக்குக் கண்களும் கைகளும் சேர்ந்து இயங்கல் அவசியம் அது இப்போது குறைந்து கொண்டு வருகிறது. ஒரு ஆண்டுக்கு முன்னால் க்வில்லிங் வேலையும் டெரகோட்டா அணிகலன் வேலையும் முயற்சி செய்தேன் ஆனால் நான் செய்து வைப்பதை யாருக்கு அணிவித்து அழகு பார்க்க என்று தோன்றியதால் விட்டு விட்டேன்.
இப்போதெல்லாம் எல்லா முதியோரைப் போல் கிருஷ்ணா ராமா என்று இருக்க முடியவில்லை உடலில் தெம்பு இருக்கும் வரை எதையாவது புதிதாகச் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் வலை உலகில் நான் டிஃப்ஃபெரெண்ட் என்று பலருக்கும் தெரியும்.
மனசு குமாருக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.
நல்வாழ்த்துக்களுடன்,
ஜி.எம்.பாலசுப்ரமணியம்.
நான் கேட்டதும் உடனே எழுதிக் கொடுத்த அன்பின் ஐயா அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களை இட்டு என்னைப் பற்றி நான் எனச் சொல்லும் வலை ஆசிரியர்களை மகிழ்விக்கும் அனைவருக்கும் நன்றி.
என்னைப் பற்றி நான் பகுதிக்கு மட்டும் கருத்துரை மட்டுப்படுத்துதல் நீக்கப்படுகிறது என்பதை அறிவீர்கள். தங்கள் கருத்துக்களை இங்கு பகிருங்கள்... நான் கேட்டவர்களில் பலர் இதுவரை அனுப்பவில்லை... விருப்பமில்லை என்றால் பரவாயில்லை... விருப்பம் இருப்பின் விரைந்து அனுப்பிக் கொடுங்க... நன்றி.
அடுத்த வாரம் மற்றொரு வலை ஆசிரியர் தொடர்வார்...
-'பரிவை'. சே.குமார்.
31 எண்ணங்கள்:
இந்த கால ஆட்கள் எதையும் நேரடியாக சொல்லாமல் பூசி மழுப்பி பேசி எழுதி வரும் வேளையில் மனதில் உள்ளதை அப்படியே சொல்லும் பெரிய மனிதாரக ஜி,எம் பாலசுப்பிரமணியம் சார் இருக்கிறார். வாழ்க வளமுடன் சார்
ஜி எம் சார் வயது எனக்கு இருந்தால் அவரை மற்றவர்களை போல கிண்டல் கேலி செய்யலாம் ஆனால் வயதில் மூத்தவர் என்பவர் என்பதால் வணங்கி செல்லுகிறேன்... அதிரா நீங்கள் இவரை கிண்டல் செய்யலாம் காரணம் உங்களைவிட வயதில் மிக இளையவர்தான் ஜிஎம் சார்
க்ருஷ்ணா, ராமான்னு ஏன் இருக்கனும்?! நல்லா நிறைய எழுதுங்க. அப்பதான் எங்களுக்கு வழிகாட்டியாய் இருக்கும்
வெளிப்படையாக, விளக்கமாக சுவாரஸ்யமாக இருக்கிறது.
வாவ்! மிக அருமையான பகிர்வு ஐயா ..
நானும் சமீபத்தில்தான் உங்கள் பதிவுகளை தொடர துவங்கினேன் ..இந்த பள்ளிக்கூடங்களில் சில ஆசிரியர்களை கண்டா மாணவர்களுக்கு பார்க்க பயம் வருமே அப்படிதான் கொஞ்சம் பயந்தேன் இப்போ நினைத்தாலும் சிரிப்பா வருகிறது :)
நிறைய எழுதியுள்ளீர்கள் மீண்டும் வருகைதந்து பின்னூட்டமிடுவேன் ..
>>> உடலில் தெம்பு இருக்கும் வரை எதையாவது புதிதாகச் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. <<<
உண்மை தான் ஐயா.. நம்மால் மண் பயனுற வேண்டும்...
தங்களுக்கு அன்பின் வணக்கங்கள்.. வாழ்க நலம்!..
ஐயா தங்களைப்பற்றி முழுமையாக அறிந்தவர்களில் நானும் ஒருவன்.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவரை எனக்கும் பிடிக்காது
செல்லில் எழுதுவதால் அதிகம் எழுத இயலவில்லை மன்னிக்கவும்.
இங்கு பகிர்ந்த விஷ்யங்கள் எல்லாம் உங்கள் பதிவுகளில் முன்பே படித்தவைதான். உங்களின் புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்
மலைக்க , வியக்க வைக்கும். உங்கள் துணைவியாரும், நீங்களும்
மாயவரம் வந்த போது சந்தித்தது என்றும் நினைவுகளில்.
குமாருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
GMB அவர்களின் 'நினைவில் நீ' என்ற நாவலை புஸ்தகா மின்நூலாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் வரும் கதாநாயகனுக்கும் பல குழந்தைகள். இப்போதுதான் தெரிகிறது. தமது பெரிய குடும்ப அனுபவத்தை அதில் கொஞ்சம் தெளித்திருக்கிறார் என்று. பெங்களூரில் அவர் வீட்டுக்குச் சென்று உணவருந்தியிருக்கிறேன். அழகான வீடு. (இன்றும்) அழகான மனைவி. நல்ல குழந்தைகள். நினைத்ததைச் செய்யும் உடம்பு. வேறென்ன வேண்டும் GMB அவர்களே! ஜமாயுங்கள். உங்கள் எழுத்தை படிக்க நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றிவிடாதே சாந்தா! ..அய்யையோ..அவர்களை ஏமாற்றிவிடாதீர்கள் GMB ஐயா!
-இராய செல்லப்பா (இன்னும்) நியூஜெர்சி
மனதில் பட்டதைத் தயங்காமல் வெளியில் கூறுபவர்
ஐயா அவர்களைப் பலமுறை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் பெரு மகிழ்வு கொள்கின்றேன்
இதை ஒரு பாராட்டு என்று எடுத்துக் கொள்ளட்டுமா வாழ்த்துக்கு நன்றி சார்
வயது ஒரு குறியீடுதானே சார் மனம் புண்படாதபடி யாரும் என் எழுத்துகளை விமரிசிக்கலாம் உடல் மூப்பு அடைந்தாலும் உள்ளம் இளமையே
நிறையவே எழுதுகிறேன் ஆனால் பெரும்பாலும் நான் சொல்ல வருவது அறிந்து கொள்ளாமலேயே போகிறதோ என்னும் எண்ணம் உண்டு
அதைத்தனே விரும்பினேன் நன்றி ஸ்ரீ
உங்கள் அஞ்சல் முகவரி இல்லை இருந்தால் நீங்கள் படிக்க விரும்பும் சில பதிவுகளை அனுப்புவேன் என்னைக் கண்டு பயமா சிரிப்பு என் புகைப்படத்தத் தானே பார்த்தீர்கள் நிஜத்தில் நான் மிகவும் மென்மையானவனாக்கும்
If you rest you will rust என்று படித்தநினைவு,
என்னைப் புரிந்து கொண்டதற்கு நன்றி ஜி
மாயவரம் சந்திப்பு எங்கள் நினைவுகளிலும் வருகைக்கு நன்றி மேம்
என் நினைவுகளையும் மீட்டிச் செல்லும் உங்கள் பின்னூட்டம் பல பதிவர்களின் கூற்றைக் கேட்கும் போது என்பதிவுக்கு வருகை தருபவர்கள் குறைவே முடியும் வரை எழுதுவேன் படிக்கிறார்களோ இல்லையோ
கரந்தையில் உங்களை சந்தித்து உரையாடியது சொற்பநேரமே இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் நிறையவே பேசவேண்டும் உங்களை மாதிரி நல்லோர்களின் தொடர்பு வேண்டுவேன் நன்றி சார்
அருமை ஐயா
ஹஹஹ்ஹ மதுரை அப்ப நீங்க அதிராவை விட பெரியவர்னு சொல்லுறீங்களா...சரி சரி...அதிரா வெர் ஆர் யு??!!
கீதா
சார் உங்கள் வெளிப்படையான பேச்சு நாங்கள் அறிந்ததே. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லையே நீங்கள். உங்கள் எழுத்துகளே அதைப் பிரதிபலித்துவிடும் சார். நேரில் நீங்கள் மென்மையானவர் என்பதும் தெரியும் எங்கள் இருவருக்குமே. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் சார்!
பாராட்டுக்கு நன்றி சார்
எழுதுவது கொண்டு புரிவது சொற்பமே நேரில்கண்டு பரிச்சயப்பட்டு அறிவதுவேறு அதனால்தான் பதிவர்களை சந்திப்பதில் நான் ஆர்வம் காட்டுகிறேன் வருகைக்கு நன்றி
சுருக்கமாகக் கூறினாலும் அருமையாகக் கூறியுள்ள ஐயாவிற்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
என்னைப் பற்றிநானால் என்னைப் புரிந்து கொண்டால் மிகவும் நன்றி சார் குமாரின் எண்ணம் ஈடேறியதா தெரியவில்லை
அன்பின் ஐயாவுக்கு
எனது எண்ணம் கண்டிப்பாக ஒவ்வொருவரின் என்னைப் பற்றி நானில் நிறைவேறிக் கொண்டு வருகிறது ஐயா....
நான் கேட்டதும் தாங்கள் எழுதிக் கொடுத்ததில் நான் பாக்யவானானேன்.... நன்றி.
வணக்கம்.
இங்கு கருத்துச் சொன்ன அனைவருக்கும் ஐயா நன்றி கூறியிருந்தாலும் என் சார்பிலும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்....
நன்றி.
ஜி.எம்.பி . அவர்களின் சில பதிவுகளை வாசித்திருக்கிறேன் . துணிச்சலாய்க் கருத்து தெரிவிப்பவர் .அவரது வாழ்க்கை பற்றி இப்போது அறிந்தேன் . பல்லாண்டு வாழ்ந்து மேன்மேலும் எழுத வாழ்த்துகிறேன் .
சுவாரஸ்யமான பதிவு! //எல்லாமுதியோரைப் போல கிருஷ்ணா ராமா என்று இருக்க முடியவில்லை. உடலில் தெம்பு இருக்கும் வரை புதிதாக எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும்// என்னும் உங்கள் விருப்பதை படித்த பொழுது, "விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்" என்னும் பாரதியின் வேண்டுதல்தான் நினைவிற்கு வந்தது. உங்கள் விருப்பம் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.
கருத்துரையிடுக