மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

சினிமா : கடுகு

டுகு சிறுத்தாலும் காரம் போகது என்பது எல்லாரும் அறிந்ததே... அதேபோல் இந்தக் கடுகும் ஒரு முக்கியமான பிரச்சினையை மையப்படுத்தி அதிக காரம் கலக்காமல் மிகச் சரியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

Image result for கடுகு விமர்சனம்

தமிழ் சினிமாவில் மட்டும் எப்போதும் ஒரு டிரண்ட் இருக்கும்... ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் பார்மூலாவை மாற்றி மாற்றி கறி சமைத்து வரிசையாக ஒரே மாதிரி படங்களைத் தயாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். பேய்க் கதைகள்... க்ரைம் கதைகள்... என ஒரு வெற்றி பல படங்களை வர வைக்கும்.

இந்த அகத்தியன் 'காதல் கோட்டை'யின்னு ஒரு படம் எடுத்தார்... அது பார்க்காமலே காதல்... மிகப்பெரிய வெற்றி... உடனே பார்த்து... பார்க்காமல்... சொல்லி... சொல்லாமல்... டெலிபோன்... என எத்தனை விதமான காதல் படங்கள் அடுத்தது வந்தது என்பதை அனைவரும் அறிவோம்...  அந்த வகைப் படங்கள் மீது பார்வையாளனுக்கு ஒருவித சலிப்பு ஏற்படும் சமயத்தில் ஏதோ ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் வெற்றி பெற, அங்கிருந்து நகர்ந்து இந்த வளையத்துக்குள் நுழைந்து கொள்வார்கள்... இதுதான் என்றைக்கும் தமிழ் சினிமாவின் நிலை... மாற்றமில்லை. அப்படியிருந்தும் சில சமயங்களில் நல்ல படங்கள் வருவதுண்டு. சமீபத்தில் புதிய இயக்குநர்களின் பல நல்ல படங்கள் சரியான விளம்பரம் இன்றி தோல்வியும் அடைந்திருக்கின்றன. 'இளமி' என்ற படம் கூட சல்லிக்கட்டு, அந்தக் கால கட்ட மனிதர்களின் வாழ்க்கை எனப் பேசிய ஒரு உண்மைக்கதைதான்... நல்ல படம்... ஆனால் எதிர்பார்த்த வெற்றியைத் தொடவில்லை. அப்படி ஒரு படம் வந்ததே பலருக்குத் தெரியலை.

சமீபத்தில் 'துருவங்கள் 16' கொடுத்த வெற்றிக்குப் பின்னர் அதே மாதிரியான க்ரைம் கதைகள் வலம் வர ஆரம்பித்துவிட்டன. என்னடா தமிழ்ப்பட உலகுக்கு வந்த சோதனை அப்படின்னு யோசிக்க வைத்த நேரத்தில் அதிக எதிர்பார்ப்பின்றி வந்த படம்தான் கடுகு. குற்றங்களையே பார்த்த பார்வையாளர்களுக்கு சற்றே ஆறுதலான விஷயம்தான் என்றாலும் இதிலும் குற்றம் இருக்கு... அளவோடு.

அரசியல் என்ற ஒன்றில் நுழைய நினைக்கும் போது நல்லவனும் கெட்டவனாக மாறுவது என்பது அரசியலின் சாபக்கேடா... அல்லது மக்களின் தலையெழுத்தா என்று தெரியவில்லை. பதவி ஆசையும் சொத்தின் மீதான மோகமும் மன்னார்குடிக்கு மட்டுமல்ல நமக்கும் உண்டுதானே... சின்னத்தா ஜெயிலுக்குப் போக சித்தப்பாவை ஓரங்கட்டிட்டு உறவுக்குள்ளே அடிச்சிக்கிட்டு கிடக்கானுங்க பாருங்க... அதுதான் அரசியல்... அப்படியான அரசியல் சாக்கடையில் சாதாரண தொண்டனாய் இருக்கும் ஒருவன், ஊருக்கு நல்லது மட்டுமே செய்யும் ஒருவன் எப்படி... எதனால் கெட்டவனாக மாறுகிறான் என்பது மட்டுமல்ல கதை, அதனால் பாதிக்கப்படுபவர்களின் மனநிலை என்ன என்பதைக் காட்டுவதே கதை.

தேவயானியின் கணவரும் சில நல்ல படங்களை இயக்கிய இயக்குநருமான இராஜகுமாரன்தான் கதையின் நாயகர்களில் ஒருவர். நானும் நாயகன் ஆகி 'டேன்ஸ்' ஆடுவேன் என ஒற்றைக்காலில் நின்று டூயட் பாடி... ஆடி... அவர் அசத்திய 'தமிழ்' என்ற காவியத்தை ஒரு நிமிடம் கூட பார்த்ததில்லை... ஏனோ பிடிக்கவில்லை... நம்ம இராஜகுமாரன் பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன், மலையாளத்தின் சந்தோஷ் பண்டிட்... தெலுங்கின் சம்பூர்ணேஷ்பாபு ஆகியோருடன் கூட போட்டி போட முடியாது, ஏன்னா இவர்கள் எல்லாம் அவரைவிட 'நல்ல' நடிகர்கள் என்றார்கள் பல நண்பர்கள். அந்தளவுக்கு இராஜகுமாரனால் பாதிக்கப்பட்டது 'தமிழ்' சினிமா மட்டுமல்ல... தமிழக சினிமா ரசிகனும்தான்.

அப்படிப்பட்ட இராஜகுமாரன் இதில் புலிப்பாண்டி... அதுவும் மேக்கப் இல்லாமல்... உண்மையைச் சொல்லணும்ன்னா அந்த கதாபாத்திரத்தில் இவ்வளவு சிறப்பாக நடிக்க இயக்குநருக்கு வேறு நடிகர் கிடைத்திருக்க மாட்டார். ஒரு அநாதையாய்... சமூக அவலங்களைக் கண்டு பொறுமும் மனிதனாய்.. இறுதியில் சீறி எழுந்து.. பின்னர் நாயகன்தான் இவ்வளவுக்கும் காரணம் என்பதைச் சொல்லாமல் நீ எல்லாருக்கும் நல்லவன் இனி நல்லவனாகவே இரு என்று சொல்லிச் செல்வது வரை மனுசன் ஒவ்வொரு காட்சியிலும் போட்ட பந்தில் எல்லாம் நிதானமாக சிக்ஸர் அடித்திருக்கிறார்... ஆமா அப்ப தமிழ்ல ஏன் அப்படி அப்படினெல்லாம் யோசிக்காதீங்க... புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கிறதில்லையா... சரி விடுங்க... இதில் புலி வேஷம் போடுபவராக....

Image result for கடுகு விமர்சனம்

நாயகனாய் பரத்... அப்பா, அம்மா இல்லாத பெரிய வீட்டுப் பிள்ளை.... ஊருக்குச் செல்லப்பிள்ளை... எல்லாருக்கும் நல்லது செய்யும் ரொம்ப நல்ல பிள்ளை... மந்திரியின் வருகையும் அதன் பின்னான மந்திரியின் செயலுக்குத் துணை நிற்கப் போய்.... அதுவும் எம்.எல்.ஏ. ஆகப்போறோம்ங்கிற அல்ப ஆசைதான் காரணமே தவிர மனதால் நல்லவரே.... இருப்பினும் தவறுக்கு உடன்பட்டு அதன் பின் அந்தத் தவறை மறைக்கும் பொருட்டு எடுக்கும் முயற்சிகளால் வில்லனாக இறுதியில் இராஜகுமாரனுடன் மோதி... அப்புறம் என்ன தவறை உணர்ந்து மந்திரியைத் தேடிப் போறார். ஆஹா... உடம்பை என்னமா ஏத்தி வச்சிருக்கான் மனுஷன்.. சும்மா நச்சின்னு.. செம உடம்புய்யா... சும்மா சொல்லக்கூடாது நல்லாவும் நடிச்சிருக்காப்ல... எல்லாரும் அவரை வெகுவாக நம்புவதால் இயக்குநர் அவருக்கு 'நம்பி' என்ற நாமகரணம் சூட்டியிருக்கிறார். 'தண்ணீர்' நாவலில் மையப்பிரச்சினை தண்ணீர்தான் என்றாலும் அதில் நாயகிக்கும் மற்ற சில பெண்களுக்கும் இருக்கும் வாழ்க்கைப் பிரச்சினையை மெல்ல விரிக்கும் அசோகமித்திரன் நாயகிக்கு 'யமுனா' எனப் பெயரிட்டிருப்பது போல.

அப்புறம் அந்தப் பெண் குழந்தை (கீர்த்தி)... வயசுக்கு வந்த பள்ளிச் சிறுமியை குழந்தை என்றே சொல்லலாம் தப்பில்லை... ஏழ்மை நிலை, ஷூ போடாததால் ஆசிரியரின் தண்டனைக்கு ஆளாகுதல், புலிப்பாண்டி மீதும் டீச்சர் மீதும் அளவு கடந்த பாசம்... படத்தின் கதையில் அவளால் மாற்றம் வந்த பின்னர் அடங்கி ஒடுங்கிப் போகிறாள்... ஆண்களைக் கண்டாலே அலறும் அவளின் உலகம் ஒரு கட்டிலுக்குள் சுருங்கி விடுவதை காட்சியாய் பார்க்கும் போது கண்ணுக்குள் செய்திகளாய் படித்த பல குழந்தைகளின் நிலை வந்து செல்கிறது. அதன் பின் புலிப்பாண்டியிடம் மட்டுமே அண்டுகிறாள்... ஆனாலும் அந்தப் பேதை அதிலிருந்து மீளாமல் அவள் நலம் விரும்பிகள் கண் எதிரே தண்ணீருக்குத் தன்னை தாரை வார்த்துக் கொடுத்து நம்மை கண்ணீரில் நனைய வைத்து விடுகிறாள்...மிகையில்லா நல்ல நடிப்பு...

அந்த டீச்சர் (ராதிகா ப்ரசித்தா)... இன்னார் எனத் தெரிந்து தன்னைக் காட்டிக் கொள்ளாமல் முகநூல் அரட்டையில் தொடங்கி, இரயில்வே ஸ்டேசனுக்கு சந்திக்க வரச்சொல்லி, தனது வாழ்க்கைத் துன்பக்கதையை போனில் சொல்லியபடி இரயில் பெட்டிக்குள் முகம் காட்டாது,  சன்னல் வழியே கைப்பிடிக்கும் போது முளைவிடும் காதல் இறுதிக் காட்சியில் போலீஸ் பிடிக்குள் இருந்து தப்ப, புலிப்பாண்டின் கரம் பிடிக்கும் போது மெல்ல இதழ் விரிக்கிறது. இதழ் விரிக்கும் முன்பே டீச்சர்தான் அந்த முகம் தெரியாத முகநூல் தோழி எனத் தெரியவந்து அது சின்னப்பெண் என புலிப்பாண்டி ஒதுங்க,   மந்திரியின் வருகை கொடுத்த பேரதிர்ச்சியின் பின் தன் முகம் காட்டாமலே டீச்சரும் விலகி நிற்க, இறுதிக்காட்சியில் பிடிபட்ட கைக்குள் சிக்கி நிற்கும் போது காதல் நான்கு கண்களில் பசுமை காட்டுகிறது... டீச்சர் சிறப்பான நடிப்பு. இவர் குற்றம் கடிதலில் டீச்சராய் வந்து கலக்கியவர்.

நல்லவரான போலீஸ்காரர் இயக்குநர் வெங்கடேஷ் மாற்றலாகிப் போகும் போது அவருக்கு உதவ துணைக்குப் போகும் புலிப்பாண்டிக்கு நண்பனாகிறான் காவல் நிலையத்தில் சின்னச் சின்ன வேலைகள் பார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் பெட்டிகேஸ் அனிருத் (பாரத் சீனி)... ஒருவேளை அனிருத் வீடியோ வர்றதுக்கு முன்னால பேர் வச்சிட்டானுங்க போல... இல்லேன்னா மாத்தியிருப்பாங்கன்னு தோணுது... அப்படியே மாற்றினாலும் இளையராஜான்னு வைக்க முடியாது... அவரு பாட்டுக்கு ராயல்டி கேட்டுட்டா... ஹிப்ஹாப் நல்லா இருந்திருக்கும்.... ஆனா அவன் துரோகியாயிட்டானே சல்லிக்கட்டுல... சரி இப்ப எதுக்கு இந்த ஆராய்ச்சி... அதான் அனிருத்துன்னு வச்சி படமும் வந்து போயிருச்சே... பேரில் என்ன இருக்கு... விட்டுட்டு நகர்வோம். காதலியை விரட்டித் திரிவது... புலிப்பாண்டி காதலுக்கு ஐடியா கொடுப்பது... போலீசில் இருந்து தப்பும் போது காதலியை பார்த்து காதலை வெளிப்படுத்துவது என அனிருத் நடிப்பும் சோடை போகவில்லை... 

அனிருத் லவ்வும் பெண்ணாக சுபிக் ஷா, இவர்தான் லவ்வுறாருன்னு தெரியாமல் சந்தர்ப்பம் சரியாய் அமைய பரத்தை லவ்வுறார்... அனிருத் லவ்வி செவ்விதழ் கடித்த ஆண்ட்ரியா, செல்வராகவன் படத்துக்கு தன் மேனி காட்டுச்சாம்... அதை வெளியிட வேண்டாமென மின்னஞ்சல் விட்டுச்சாம்... இதை ஏதோ ஒரு வகையில் தனுஷால் பாதிக்கப்பட்ட சுசித்ரா போட்டு உடைக்க... அப்போதைக்கு டூவிட்டரில் இதுதான் போதைக்கு ஊறுகாய் என்பது எல்லாருக்கும் தெரியுமே... அப்ப சுசித்ரா மெண்டல்ன்னு சொன்னானுங்க... இப்ப சுசியைக் காணோம்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நாமும் அடுத்தடுத்து தாவிக்கிட்டே இருக்கோம். கவுதமி கமலைப் பிரிய மகளைக் காரணமாக்கியதை ஏத்துக்க முடியலைதான் என்றாலும் ஆண்ட்ரியாவும் பூஜாகுமாருமே முக்கிய காரணம் என்ற பேச்சு அடிபடுறதை நம்பத்தான் வேண்டியிருக்கு. கமல்தான் செவ்விதழ் கடித்து... அட சுபிக் ஷா லவ்வைப் பற்றிப் பேச ஆரம்பிச்சிட்டு இதெல்லாம் எதுக்கு... தனுஷையும் அனிருத்தையும் நம்பக்கூடாதுங்க... ஆனா கடுகு அனிருத்தை நம்பலாம்... பரத்தினால் மிரட்டப்பட்டாலும் ஒரு அசாதாரண சூழ்நிலையில் தன் காதலை அனிருத் வெளிப்படுத்தும் போது அவளின் பார்வையில் தெரியும் மிரட்சியில் மெல்ல விரியும் காதலையும் பார்க்கலாம். ஆனாலும் சுபிக்கு அதிக வாய்ப்பில்லை.

'யோவ் புலி வேஷம் போட்டு ஆட தெம்பு இருக்க மாதிரி தெரியலை.... இந்தா இதை அடிச்சி தெம்பு ஏத்திக்கன்னு' அசிஸ்டெண்ட் டைரக்டர் சொல்ல, 'குடிக்கு எதிரா படம் எடுக்குறீங்க.. அதுல குடிச்சிட்டு நடிக்கச் சொல்றீங்களே' என்ற ஆரம்ப வசனமே ஏதோ சொல்ல வர்றாங்கன்னு தோண, 'தப்பே நடக்கலைன்னு சொல்லி அதை மறைக்கச் சொல்றீங்களே அது தப்புத்தானே' என்று பேசும் இடத்தில் சொல்ல வந்ததை சரியாத்தான் கொண்டு போறாங்கன்னு தோண, 'கண்ணாடியில உன்னோட முகத்தைப் பார்க்கும் போது என்ன தெரியுதோ அதுதான் நீ'ன்னு சபாஷ் போட வச்சிட்டாங்க.

போலீஸ், பரத்தின் பாட்டி, கீர்த்தியின் அம்மா என எல்லாரும் அந்தந்த கதாபாத்திரங்களாக...

Related image

அரசியல் என்ன செய்ய வைக்கும் என்பதை சில மனிதர்களின் வாழ்க்கையோடு சொல்லும் படம் கடுகு. தமிழகத்தின் பழங்கலைகள் எல்லாம் அழிந்து வருவதையும் சொல்லிச் செல்கிறது புலிவேஷம் கட்டுபவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதத்தில். ஆமாம் கரகாட்டம் காம ஆட்டமாகி நாளாச்சு... நாடகத்தில் நாரதர் டான்ஸைக் கட்டிப்பிடித்து ஆடுறார்... எல்லாக் கலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக சுயமிழந்து... சில அழிந்து...

ஆஹா.. ஓஹோ... மட்டும்தானா 'அய்யே...' எதுவும் இல்லையான்னு யோசிக்காதீங்க... கொஞ்சம் 'அய்யே'வும் இருக்கு. பாண்டி புலி வேஷம் போடும் போது காட்டும் ஆக்ரோஷத்தில் துளி கூட சாதாரண மனிதனாய் இருக்கும் போது காட்டாதது... வேகமெடுக்காத இரண்டாம் பாதி . எதார்த்த நடிப்பில் சில இடங்களில் எரிச்சலை வரவைக்கும் இராஜகுமாரன்... என கொஞ்சமே கொஞ்சம் 'அய்யே'வும் இருக்கு. இருந்தாலும் கடுகு காரம் போகலை.

கடுகு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

துருவங்கள் பதினாறு படமே நேற்றுதான் பார்த்தேன். கவண், டோரா படங்கள் எல்லாம் பார்க்க வேண்டும்! எமன் கூட வைத்திருக்கிறேன். பொறுமை இருக்கும்போது பார்க்க வேண்டும்!

இதையும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பார்த்து விடுவோம்!

துரை செல்வராஜூ சொன்னது…

கடுகு.. இன்னும் கொத்தமல்லி, சீரகம் என்றெல்லாம் கூட வரும்..

மக்கள் தான் சித்தப் பிரமை பிடித்தவர்கள் போலாகி விட்டார்களே!..

இராய செல்லப்பா சொன்னது…

நான் பார்க்க முடியாத பல படங்கள் நல்ல படங்கள் இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. பார்க்கவேண்டிய படங்கள் என்று பட்டியல் இடுவதற்குள் தியேட்டரில் இருந்து ஓடிவிடுகிறது! என்னத்தைச் செய்ய...?

- இராய செல்லப்பா நியூஜெர்சி

G.M Balasubramaniam சொன்னது…

தியேட்டரில் படம் பார்த்து ஆண்டுகளாகி விட்டன் சிறு வயதில் நிறையப் படம் பார்த்ததுண்டு

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி நண்பரே

Yarlpavanan சொன்னது…

தங்களது கண்ணோட்டம்
கடுகு
காரமா, காரமில்லையா என்பதை
பார்க்க வைக்கத் தூண்டுகிறதே!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு அறிமுகம். பார்க்க முயல்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

லிஸ்டில் இருக்கிறது. பார்க்க வேண்டும். அது போல் நிசப்தம் இருக்கிறது பார்க்க வேண்டும். கொரியன் தழுவல்தான்...என்றாலும்..

கீதா: துருவங்கள் 16 சூப்பர். பார்த்தாச்சு. குற்றம் 23 பார்க்கணும் நல்லாருக்குனு சொன்னாங்க சினிமாத்தனம் இருந்தாலும். கடுகும் பார்க்க எண்ணம் உள்ளது. மாநகரம் பார்த்தேன். ம்ம்ம் ஓகே. ஆனால் எல்லோரும் கொண்டாடி மார்க் அதிகம் இட்டதுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. எப்போதுமே இப்படித்தான் அப்படிக் கொண்டாடப்படும் படங்கள் ஒரு சிலதான் மெய்யாலுமே நன்றாக இருக்கும். மாநகரத்திற்கு நல்ல விளம்பரம். ஆனால் அப்படி விளம்பரம் கிடைக்காமல் போகும் நல்ல படங்கள் பல உள்ளன ஆனால் வியாபார ரீதியாகத் தோல்வியைத் தழுவி நீங்கள் சொல்லியிருப்பது போல்...விமர்சனத்திற்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.