மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

மூன்று முத்துக்களை வாழ்த்துவோமே...

லையுலக சொந்தங்களின் பிறந்த நாள் தெரிய வரும் பட்சத்தில் மனசு தளத்தில் அதற்கான சிறப்பு பகிர்வு ஒன்றை வெளியிட்டு வருகின்றேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். எனக்கு தெரிந்தால்... 'என்னைப் பற்றி நான்' பகிர்வுக்கான நாள் தவிர்த்து கண்டிப்பாக பதிவு எழுதி வாழ்த்துவது என்பதில் இதுவரை தவறவில்லை என்று நினைக்கிறேன். இதுவரைக்கும் ஒருவரின் பிறந்தநாள் மட்டுமே வந்ததால் அவரைக் குறித்து எனக்குத் தெரிந்த வரை எழுதி வாழ்த்தியிருக்கிறோம். ஆனா இன்றைக்கு மூன்று பேருக்கு பிறந்தநாள் ஒருவர் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர்... முனைவர் பட்டம் பெற்றவர். அடுத்தவரோ சமையல் குறிப்புக்களில் கலக்கும் தங்கை... மூன்றாமவர் சமூக சேவகி...  பள்ளிக் கூடத்தில் சிறு குறிப்பு வரைகன்னு எதாவது ஒன்றைப் பற்றி எழுதச் சொல்வார்களே அது மாதிரி இங்கு மூவரையும் பற்றியும் நானும் சிறு குறிப்பு வரையலாம் என்று நினைக்கிறேன்.

முதலாமவர்... தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 35 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறவர், மிகுந்த தேடுதல் வேட்டை மிக்கவர்...  விரைவில் பணி நிறைவு பெற இருக்கிறார் என்றாலும் சுறுசுறுப்பான இளைஞர்... தனது தேடுதல் வேட்டையில்  கிலோமீட்டர் கணக்கில் நடந்தும் சைக்கிளில் பயணித்தும் வெற்றி கண்டவர். சமீபத்தில் அவருடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றேன். போனை எடுத்ததும் ஒரு இளைஞராய்... அவ்வளவு அன்பாய்... நம்மோடு பேசும் போது நேசத்துடன் ஒரு துள்ளலாய் பேசினார். எனக்கு மிகுந்த சந்தோஷம்... இந்த எழுத்து மிகப் பெரியவர்களை நம் பக்கத்தில் இருத்திக் கொடுத்திருக்கிறதே... உங்க குணத்துக்கு எல்லார்கிட்டயும் சுலபமாப் பழகிடுவீங்க அப்படின்னு அடிக்கடி எங்கள் பேராசன் சொல்வார்... அவர் எழுதுங்கன்னு சொல்லி எழுத ஆரம்பித்த எழுத்து இப்போது ஒரளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்றாலும் இப்போதைய எழுத்தை என் பேராசான் இன்னும் வாசித்ததில்லை என்பதுதான் உண்மை என்றாலும் இந்த எழுத்து என் பேராசானைப் போல் எத்தனை பேராசான்களையும், ஐயா, அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அக்கா, தம்பி, தோழன், தோழி என எத்தனை சொந்தங்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. எத்தனையோ பேர் நம் எழுத்தைப் பாராட்டுகிறார்கள். சரி விஷயத்துக்கு வருவோம் ஐயாவுடன் பேசும் போது சொன்ன வார்த்தை, 'நீங்க நல்லா எழுதுறீங்க... விமர்சனக் கட்டுரைகள் உங்களுக்கு நல்லா வருது... விடாமல் எழுதுங்க' என்றார். இதுதானே நமக்கான உந்துதல்... இது பாராட்டு என்பதைவிட நம்மை இன்னும் செழுமைப் படுத்திக் கொள்ள உத்வேகம் கொடுக்கும் விதை... இப்படி எத்தனை பெரிய மனிதர்களின் ஆசியும் உறவையும் இந்த எழுத்து வாங்கிக் கொடுத்திருக்கிறது... 

இந்த இளைஞரைப் பற்றி செய்திகள் வராத பத்திரிக்கை இல்லை... சோழ இராஜ்ஜியத்தினை அலசி ஆராயும் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களின் அன்பைப் பெற்றவரும், சோழர் கால புத்த சிலைகளை தனது தேடலின் மூலம் கண்டெடுத்து வருபவரும் களப்பணி மூலம் வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துக்களில் எழுதி வைத்திருப்பவருமான அன்பின் ஐயா முனைவர். பா.ஜம்புலிங்கம் அவர்கள்தான் பிறந்தநாள் கொண்டாடும் அந்த இளைஞர்.

'முனைவர் ஜம்புலிங்கம்' என்னும் தனது தளத்தில் பணி நிறைவு பெற இருப்பது குறித்த பகிர்வில் தாத்தா-பாட்டி முதல் இன்றைய வலை நட்புக்கள் வரை எல்லாருக்கும் நன்றி சொல்லி இருக்கிறார் பாருங்கள்... அவரின் இந்த மனமே இன்றைக்கு மிகப்பெரிய உயரத்தில் அவரைச் சிம்மாசனம் இட்டு அமர வைத்திருக்கிறது. பௌத்தம் குறித்த ஆராய்ச்சிச் செய்திகள் மற்றும் பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்திகள் குறித்துப் பகிர 'சோழ நாட்டில் பௌத்தம்' என்ற வலைப்பூவும் வைத்திருக்கிறார். விக்கிப்பீடியாவிலும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

அவரின் '30 ஏப்ரல் 2017 பணி நிறைவு' என்ற கட்டுரையை வாசித்துப் பாருங்கள்... பிரமித்துப் போவீர்கள்.

Image result for பிறந்தநாள் வாழ்த்து

ரண்டாமவர் சமையல் குறிப்புக்களின் ராணி... விதவிதமாய் சமையல் செய்து அதை அழகாக படம் எடுத்து முகநூலிலும் தனது வலைப்பூக்களிலும் பகிர்ந்து வருபவர். இவரின் சமையல் குறிப்புக்கள் எல்லாமே அருமையாக இருக்கும். வலையில் எழுத வந்தது முதல் தொடர்ந்து எனது தளத்தை வாசிப்பவர். நானும் அவர் தளத்தை வாசித்து விடுவேன்... சமீப நாட்களாக பலரின் தளங்களை வாசித்தாலும் வாசிப்பில் ஏதோ ஒரு சுணக்கம்... பெரும்பாலும் கருத்து இடுவதில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்றுத்தான் அதிகம் வாசித்து கருத்து இட்டேன்.

என்னை தொடர்கதை எழுதச் சொல்லி, எழுதவும் வைத்தவர் இவர்... அப்படித்தான் முதல் தொடர் ஆரம்பமானது. சரி சொன்னாரேன்னு கிராமத்து வாழ்க்கையை வைத்து ஒரு கதை எழுதி முடித்தால் எனக்கு க்ரைம் கதைகளில்தான் அதிக விருப்பம்.. க்ரைம் தொடர் எழுதுங்கன்னு அடுத்து வரும் பின்னூட்டங்களில் எல்லாம் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தார். அட இது என்னடா வம்பாப் போச்சுன்னு... ஆத்தாடி... நான் அம்புட்டுக்கு ஒர்த் இல்லை... ஏதோ கதையின்னு கிறுக்குவேன் அவ்வளவே... கொலை, கொள்ளைன்னு எழுதி அதை துப்பறிஞ்சி இதெல்லாம் நடக்காது விடுங்கன்னு சொன்னா... ம்ஹூம் விடலையே... சரியின்னு இவருக்காகவே ஒரு தொடர்க்தை... அதுவும் க்ரைம் கதை... அதுவும் கொலையை துப்பறியும் ஒரு குறுந்தொடர் கதை எழுதியாச்சு... அதுல என்ன கூத்துன்னா எப்படியோ எழுதி முடிக்க எல்லாரும் நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாங்க... பலர் இது மாதிரி இன்னும் எழுதுங்கன்னு வேற உசுப்பேத்தி விட்டாங்க... நானா மயங்குவேன்... ஆளை விடுங்க சாமிகளான்னு அதுக்கு  அப்புறம் துப்பறியவே போகலை... 

'SASHIGA KITCHEN' என்ற வலைத்தளத்தில் சமையல் குறிப்புக்கள் எழுதும் மேனகா ஸத்யா இப்போதெல்லாம் முகநூலில் ரொம்ப பிஸி. சமையல் பிரியர்களுக்கு இவரின் தளம் வரப்பிரசாதம்.

Image result for பிறந்தநாள் வாழ்த்து

மூன்றாமவர் மனதோடு மட்டும் என்று சொல்லி மனசுக்கு நெருக்கமான சமூக விழிப்புணர்வு பதிவுகளை தனது தளத்தில் பதிபவர். பசுமை விடியல் என்ற அமைப்பினை நடத்துபவர். இவரின் சமூக சேவைகளும் விழிப்புணர்வு பகிர்வுகளும் முகநூலின் வழி நடந்து கொண்டிருக்கின்றன. வலைப்பூவில் எழுதி ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிறது என்றாலும் அவர் எழுதிய பதிவுகள் எல்லாமே பெண் குழந்தைகள் வளர்ப்பு, தாம்பத்யம் பற்றிய பார்வைகள், வீட்டுத் தோட்டம், சுற்றுச் சூழல் என விழிப்புணர்வு பதிவுகள்தான். பெண் குழந்தைகள் பற்றிய பதிவுகள் எல்லாமே எல்லாரும் வாசிக்க வேண்டிய பகிர்வுகள். நிறைய செய்கைகளை நிறைவாய்ச் செய்து கொண்டிருக்கிறார் அக்கா திருமதி. கொசல்யா ராஜ்.

இவரின் வலைத்தளத்தில் நிறைய விஷயங்களை அறியலாம்... 'மனதோடு மட்டும்' வாசிச்சி விஷயங்களை மனசுக்குள் நிறுத்திக்கங்க....

முத்துக்கள் மூன்று என்று சொல்வோமே அப்படியான முத்துக்கள்... சோழ நாட்டில் பௌத்தத்தைத் தேடி புத்தர் சிலைகளைக் கண்டெடுக்கும் முயற்சியில் வரலாற்றுப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும்  முனைவர் ஐயா,  விதவிதமான சமையல்களைச் செய்து அவற்றை பொறுமையாய் போட்டோ எடுத்து பதிவிடும் தங்கை மேனகா, சமூக சேவையும் பெண்கள் விழிப்புணர்வும் தன் இரண்டு கண்ணெனச் செயலாற்றும் அக்கா கௌசல்யா ராஜ் ஆகிய மூவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீங்களும் வாழ்த்துங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

16 எண்ணங்கள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

மூவருக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

Avargal Unmaigal சொன்னது…

ஜம்புலிங்கம், மேனகா மற்றும் கெள்சல்யா அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

KILLERGEE Devakottai சொன்னது…

அனைவருக்கும் இறைவன் நலம் புரிவானாக...
வாழ்க வளமுடன்.

Yarlpavanan சொன்னது…

மூவருக்கும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

துரை செல்வராஜூ சொன்னது…

எல்லா நலன்களும் பெற்று வாழ்ந்திட வேண்டுகின்றேன்..

அனைவருக்கும் அன்பின் நல் வாழ்த்துகள்..

ஸ்ரீராம். சொன்னது…

மூவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

Angel சொன்னது…

முனைவர் ஐயா அவர்களுக்கும் ,எங்க தலைவி கௌசல்யாவுக்கும் அப்புறம் தங்கச்சி பாப்பா மேனகாவுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மூவருக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மூவருக்கும் எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மூவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Kousalya Raj சொன்னது…

இப்படி ஒரு அழகான அறிமுகத்துடன் கூடிய வாழ்த்தை எதிர்பார்க்கவில்லை குமார்...நெகிழவைத்துவிட்டீர்கள்...அன்பு நன்றிகள் !!

என் அன்பு தோழி மேனகாவும் நானும் ஒவ்வொரு வருடமும் மாற்றி மாற்றி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம்... அவர்களை உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்...

முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் தளத்தை அறிய வைத்தமைக்கு நன்றி குமார்... அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் !!

இங்கே எங்களை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள்... இப்பதிவை பற்றி என்னிடம் தெரிவித்த தோழி ஏஞ்சலின்கு ஒரு ஸ்பெசல் நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தொலைபேசியில் பேசியபோது உங்களுடைய எழுத்தின்மீதான ஆர்வ்த்தை நன்கு உணர்ந்தேன். எனக்கு பிறந்த நாள் தெரிவித்த விதமும், அறிமுகப்படுத்திய விதமும் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்களைப் பற்றிப் பகிர்ந்த விதமும் என்னை நெகிழவைத்துவிட்டது. பாராட்டுகள். தொடர்ந்து எழுத்துகள் மூலமாகச் சாதிப்போம், வாருங்கள். நன்றி.

கோமதி அரசு சொன்னது…

மூவருக்கும் பிறந்த வாள் வாழ்த்துக்களை தாமதமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
வீட்டு மாற்றம் காரணமாய் வலை பக்கம் வர முடியவில்லை. நிறைய பதிவுகளை படிக்க வில்லை. வந்த பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவில்லை.

நிஷா சொன்னது…

மூவருக்கும் இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள். அழகாக,அருமையாக அறிமுகம் தந்த குமாருக்கும் பாராட்டுகள். எனக்கு இவர்கள் புதியவர்கள். இதுவரை இவ்வலைப்பூக்களை வாசித்ததில்லை. நேரம் கிடைக்கும் போது படிக்க வேண்டும்.

Menaga Sathia சொன்னது…

ஆஹா சகோ,என்னசொல்வதென்று தெரியவில்லை,ரொம்ப மகிழ்ச்சியாஇருக்கு..நானும் பலரின் வலைப்பக்கம் சென்று பலநாட்களாகிவிட்டது.
சில மனக் கஷ்டத்தால் பதிவு போடுவதோடு சரி,பின்னூட்டம் இடுவதில்லை...இனி அடிக்கடி வருவேன்.

என் பிறந்தநாள் பரிசா இன்னொரு கிராமத்து கதை எழுதுங்க...காத்திருக்கேன்.
முனைவர் ஐயா அவர்களுக்கும்,தோழி கௌசல்யாவிற்க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்...

வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.