தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் இசை ஆளுமை மணி அவர்களின் ஆர்க்கெஸ்ட்ராவின் 'எங்கேயும் எப்போதும்' என்ற இசை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. சொல் அரங்கம், பட்டிமன்றம், பிரபலங்களின் உரை போன்றவற்றுக்கே முன்னுரிமை கொடுக்கும் பாரதி நட்புக்காக அமைப்பு எனக்குத் தெரிந்து இந்த முறைதான் முழுக்க முழுக்க இசை நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது. சரி நிகழ்வு எப்படி என்று பார்ப்போம்.
(எப்படிப்பட்ட பாடலையும் துள்ளலுடன் பாடி அசத்திய அல்கா அஜீத்) |
மொத்தம் நாலு பாடகர்கள்... நால்வருமே சூப்பர் சிங்கரின் மூலம் உயர்ந்தவர்கள்... இன்று திரையுலகிலும் அடி எடுத்து வைத்திருப்பவர்கள். தனியாக... இணையாக.. என கிட்டத்தட்ட மூணே முக்கால் மணி நேரம் சித்திரை முதல் நாளை மகிழ்வுடன் கொண்டாட வைத்தார்கள். பட்டிமன்றம், சொல்லரங்கம் என்றால் நாமளும் அவர் அதைப் பேசினார்... இவர் இதைப் பேசினார் என பக்கம் பக்கமாக... மூணு நாலு பதிவு தேத்திடுவோம்... ஆனா பாட்டுக் கச்சேரியில ஒரு பதிவு தேத்துறதே பெரிய விஷயம்... என்னத்தை எழுதுறது சொல்லுங்க...
எப்பவும் ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அழைப்பிதழில் போடுவார்கள்... இந்த முறை 5.55க்கு என்று போட்டிருந்தார்கள். அறையில் யாரும் வர விரும்பாத காரணத்தால் சரி நடந்து போகலாம் என முடிவு செய்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எங்க கட்டிடத்துக்கு பின்னாலிருக்கும் பெங்காலி கடையில் டீ வாங்கி உறிஞ்சியபடி நடக்க, சென்ற முறை நானும் கில்லர் அண்ணாவும் மச்சானும் பேசிக்கொண்டே நடந்து சென்றது நினைவில் ஆடியது. இப்ப இங்க வெயில் காலம் ஆரம்பிக்கும் போதே ஐபிஎல் வீரர்களைப் போல அடித்து ஆடுகிறது. பேருந்து நிறுத்தம் கடக்கும் போது ஒரு நண்பர் பேருந்து ஓட்டுனரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் (அடுத்தவன் சண்டை போட்டாத்தான் என்ன நடக்குதுன்னு பார்க்க கூடுற கூட்டத்துல நாமளும் ஒருத்தன்தானே) நிற்க, அவரோ இந்த வண்டி ஐஎஸ்சி போகும்ன்னு அழைப்பில் போட்டிருந்தாக ஆனா இப்ப போகாதுன்னு இவரு சொல்றாருங்க.. அப்புறம் எதுக்கு அழைப்பில் போட்டாங்க... ரெண்டு திர்ஹாம் கட்டான கடுப்பில் பேசினார்.
டிரைவரிடம் நாங்க ஐந்து பேர் இருக்கோம்... எங்களை அங்க கொண்டு போய் இறக்கி விடு என்று வாதாடினார். எனக்குச் சிரிப்பு... அவன் போற ரூட்டை விட்டுட்டு இவருக்காக ஐஎஸ்சி வடான்னு சொன்னா, நம்ம ஊரா காலேசு பசங்களுக்காக பஸ்ஸை காலேஜ் வாசல் வரைக்கும் கொண்டு செல்ல, நாங்க படிக்கும் போது எங்க கல்லூரிக்கு காரைக்குடியில் இருந்து வரும் ஒரு தனியார் பேருந்து கல்லூரி வாசல் வரைக்கும் வந்து திரும்பும். சரி விஷயத்துக்கு வருவோம்... அந்த மலையாளி டிரைவர் சிரித்துக் கொண்டே அதெல்லாம் முடியாது எனச் சொல்ல, அந்த நேரத்தில் ஐஎஸ்சி வழி செல்லும் ஒன்பதாம் நம்பர் வர அதில் ஏறிப் பயணித்தோம். இதை நான் விழா அமைப்பினரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்... ஐஎஸ்சியில் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்வேன் என்றெல்லாம் குதித்துக் கொண்டே வந்த அந்த நண்பர் சொன்னாரா தெரியவில்லை... எனக்கு நாமெல்லாம் வாய்ச்சொல்லில் வீரரடி என்றுதான் தோன்றியது. அங்கு இறங்கி கனவுப்பிரியன் அண்ணாவுக்கு போன் செய்தால் இப்போதான் கிளம்புறேன் என்றார். காத்திருந்தேன்... கூட்டம் கூட்டமாய் தமிழர்கள் கடந்து சென்றார்கள்.
(ஆர்ப்பாட்டமில்லாமல் பாடி அசத்திய சத்யபிரகாஷ் - பிரியங்கா) |
பின்னர் அண்ணன் வரவும் ஆறு மணிக்கு உள்ளே சென்றோம்... அரங்கு நிறைந்திருந்தது... நாங்க சென்ற போதுதான் சிங்கத்தில் இருந்து பாரதி வர ஆரம்பித்தார்.... அதைப் பார்த்ததும் அரங்கில் ஆரவாரம்... அதன் பின்னர் அவர்களின் முந்தைய வருடத்து நிகழ்வுகள் திரையில்... இந்திய தூதரக அதிகாரிக்கு மரியாதை செய்யப்பட, அவர் தமிழ் அதிகம் பேச வராது என்று சொல்லி ஆங்கிலம் கலந்து தமிழில் மலையாளமும் வீச, இந்திய தூதரக முகநூல், டுவிட்டர் பக்கங்களைப் பயன்படுத்துங்கள்... எதுவாகினும் அதில் தெரிவியுங்கள் என்று சொல்லிச் சென்றார். உடனே மேடை ஆர்க்கெஸ்ட்ரா குழு வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பமாக எங்கேயும் எப்போதும் மியூசிக்கை இசைத்தார்கள்... மிக அருமை... அதன்பின்னர் தலைவர் இராமகிருஷ்ணன் அவர்கள் இசைக்குழுவினருக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். அவருக்கு பூங்கொத்தைக் கொண்டு வந்து கொடுத்த குட்டிப்பூக்கள் அழகோ அழகு.
முதல் நான்கு பாடல்களை நால்வருக்கும் அறிமுகமாக வைத்திருந்தார்கள்... ஒவ்வொருவரைப் பற்றி பாரதி அமைப்பின் சகோதரி விளக்கமாய்ச் சொல்ல, பின்னர் அவர்கள் பாடினார்கள்... அல்கா அஜீத் தமிழுக்கும் அமுதென்று பெயர் என ஆரம்பிக்க, அடுத்தடுத்த பாடல்கள் அழகாய் நகர்ந்தன... உதயா உதயாவில் உருக வைத்து.... சிங்கார வேலனில் சிலிர்க்க வைத்து... அல்லை நல்லை பாடி... ராஜாளியில் நனைய வைத்து... கூடை மேல கூடை வைத்து... அழகு மலராட பாடி... இப்படி நிறைய பாடல்களை நிறைவாய்ப் பாடி... உதயாவை ஒன்ஸ்மோராக்கி, சின்ன சிறிய வண்ணப் பறவையை அழைத்து குத்துப் பாடல்களை கலைவையாய் பாடி முடித்தார்கள். இங்கு சொன்னது சில பாடல்கள் சொல்லாதது நிறையப் பாடலகள்.... பெரும்பாலும் கொலைக்குத்துப் பாடல்கள் இல்லாது மெலோடியாய்ப் பாடல்களைத் தெரிவு செய்து பாடினார்கள்.
பாடியவர்களில் பார்வையாளரை அதிகம் கவர்ந்தவர் அல்கா அஜீத், என்ன குரல் வளம்... தமிழகத்தின் தங்கக் குரலென மலையாளிகளை விஜய் தொலைக்காட்சி தேடித்தேடி எடுத்தாலும் விழா ஆரம்பிக்கும் போது தமிழ் வருடப்பிறப்பு வாழ்த்துச் சொல்லாமல் மலையாள 'விசு'வுக்கு வாழ்த்து சொன்னாலும் எந்தப் பாடலையும் பார்த்துப் பாடாது அட்சர சுத்தமாக பாடியதிலும் ஒவ்வொரு பாடலையும் அனுபவித்து ரசித்துப் பாடியதிலும் அனைவரையும் கவர்ந்தார் அல்கா... இவரைத் தொடர்ந்து சத்யபிரகாஷ்... உதயா உதயாவில் உருக வைத்தார்... எந்த அலட்டலும் இல்லாமல் ரொம்ப ஜாலியாக பாடல்களைப் பாடினார். அல்லை நல்லை ரொம்ப அருமை. அப்புறம் நம்ம வீட்டுப் பிள்ளை போல்... எங்க ஸ்ருதி மாதிரி ஒரு ஒல்லிக்குச்சி... பிரியங்கா... சிரிச்சிக்கிட்டே... பாடல் வரிகள் என் மூளையில் பத்திரமாக இருக்கு என்று கைகாட்டி மிக அழகாகப் பாடினார். பிரசன்னா நல்ல வாய்ஸ்... காக்கை சிறகினிலே மிகச் சிறப்பாக பாடினார். மொத்தத்தில் பாடல்கள் சிறப்பு.
(கர்நாடக சங்கீதத்திலும் கலக்கிய பிரசன்னா) |
பிரசன்னாவின் அளவுக்கதிகமான பேச்சு... அதிலும் தற்பெருமை... அவரின் அலட்டலும் அசைவுகளும் செயற்கையாய்... இன்னும் சில வருடத்தில் ஜி.வி.பிரகாஷ் போல் இவருக்குள்ளும் நாயகன் ஆசை துளிர்க்கலாம். இவர் பாடலின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ பேச ஆரம்பித்தால் எங்கள் அருகில் இருந்தவர்கள் திட்ட ஆரம்பித்து விடுவார்கள். அல்காவின் குரலை வெகுவாய் ரசித்தார்கள்... இந்தப் புள்ள ரொம்ப அருமையாப் பாடுது... மலையாளியா...? பாட்டைப் பார்க்காமலே சூப்பராப் பாடுதே என்றார்கள். சத்தியபிரகாஷ் பாடும் போது கை தட்டி ரசித்தார்கள். இசைக்குழுவினர் ஒவ்வொருவரையும் இஞ்ச் பை இஞ்சாக ரசித்துப் பேசினார்கள். பாவம் மணி அண்ணா சும்மாவே நிக்கிற இந்தாளைப் புகழ்றானுங்களேன்னு ரொம்பவே திட்டுனாங்க... இதையெல்லாம் விட அவர்களுக்கு ஒரே வருத்தம் கானா பிரபா, தனுஷ் பாடிய அடிப் பாடல்களைப் பாடவில்லையே என்பது மட்டுமே.
நிகழ்ச்சியின் இடையே இந்த விழாவிற்காக உழைத்தவர்களில் இரவு பகல் பாராது ஏற்பாடுகளைச் செய்த நால்வர் மேடை ஏற்றப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அவர்கள் துணைவியாரின் கையால் அதைக் கொடுக்க வைத்தது சிறப்பு. இந்த யோசனையை யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.... உண்மையிலேயே மிகவும் சிறப்பான நிகழ்வு... மனைவி கையால் நினைவுப் பரிசு வாங்குவது என்பது எத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது... அடுத்த முறை நிறையப் பேர் வாங்குவார்கள் என்று நினைக்கிறேன்.
ஆரம்பத்தில் ரகுமான் பாடல்கள் வர, ஆஹா... ராயல்டி பிரச்சினையால் இளையராஜா பாடல்கள் வராதோ என்ற வருத்தம் மேலிட, அதை நீக்கும் வண்ணமாக பிரியங்கா, அரங்கிற்குள் ராஜகானத்தைக் கொண்டு வந்தார். அதன் பின் காதல் ஓவியத்தில் நம்மை ஈர்த்த பிரியங்காவுடன் இசைக்குழுவில் இருந்த அந்த தாடிக்காரர் பாடி அசத்தினார்... அப்படியே இளையராஜாவை குரலில் கொண்டு வந்தார்.... மற்ற சில பாடல்களிலும் குரல் கொடுத்தவர் இவர்.... ஒருமுறை குரல் கொடுக்க ஆரம்பிக்கும் போது சத்யபிரகாஷ் குரலுடன் இடை வர, சிரிப்புடன் விலகிக் கொண்டார். சிங்காரவேலனின் ஆரம்பத்தில் நாதஸ்வரத்தில் சற்றே சறுக்கினாலும் பாடலின் இறுதிக் கட்டங்களில் தன்னைச் சரி செய்து கொண்ட புல்லாங்குழல் வித்வான், புல்லாங்குழலில் கலக்கினார். பழமுதிர்ச்சோலையில் இடையில் வரும் விசில் சப்தத்தை அழகாக விசிலாக்கினார்... அதற்கேற்ப பார்வையாளர்கள் பக்கம் இருந்து அவருக்கு சீட்டி... அதாங்க விசில் பறந்தது. அந்த கீ போர்ட் பையனை எங்கோ பார்த்த ஞாபகமாய் இருந்தது.
(நினைவுப் பரிசு பெற்றவர்களுடன் திரு. இராமகிருஷ்ணன் மற்றும் திரு. கலீல் அவர்கள் (முறையே 4th , 1st நிற்பவர்கள்)) |
மிகச் சிறப்பாக இந்த நிகழ்வை நடத்தி, அபுதாபி வாழ் தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான மணித்துளிகளைக் கொடுத்த பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர் இராமகிருஷ்ணன் சார், கலீல் சார் மற்றும் சிறப்பாக விழாவை நடத்த உழைத்த அமைப்பின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
படங்கள் : திரு.இராமகிருஷ்ணன் சாரின் தளத்திலிருந்து, படங்களை எடுத்தவர் திரு.சுபஹான் அவர்கள்... இருவரிடமும் சொல்லாமல் உருவிதற்கு மன்னிக்கவும்...
-'பரிவை' சே.குமார்.
12 எண்ணங்கள்:
இளையராஜா பாடல்களுக்கு முறையாக அனுமதி வாங்கி இருப்பார்களோ..
நிகழ்வை விமர்சித்த விதம் அருமை...
பதிவை படிக்கத் தொடங்கும்போதே ராஜாவின் பாடல் பாடினார்களா என்ற ஆவல் ஏற்பட்டுவிட்டது/நிகழ்ச்சியை சிறப்பாக விவரித்துள்ளீர்கள்
பகிர்வுக்கு நன்றி. அபுதாபியில் இருந்த வரை பாரதி நட்புக்காக நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தது நினைவு வருகிறது.
நிகழ்வு பற்றி எங்களுக்கும் அறியத் தந்தமைக்கு நன்றி.
அருமை
இனிமையான பாடல்கள் என்றுமே மகிழ்ச்சி தரும்
மலையாளிகள் என்றும் மலையாளிகளே. 'விஷு' வைத்தான் முதலில் வைப்பார்கள். அவர்கிகளில் பிரிவினை இல்லையே! நம்ம ஆட்கள்தான் சித்திரை மாதமா, தை மாதமா என்று குழப்பம் உண்டாக்கி மக்களை இரண்டுபடுத்திவிட்டு இப்போது ஓய்ந்து படுத்துவிட்டார்களே!
நிகழ்வின் வருணனை சிறப்பாக இருந்தது நண்பரே!
- இராய செல்லப்பா நியூஜெர்சி
நல்ல நிகழ்வின் பகிர்வு
ஸ்ரீராம் இது போன்ற இசை குழுக்கள் பாடலாம்னு சொல்லிருந்தாங்களே.....
கீதா
பதிவும், நிகழ்வின் விவரணமும் அருமை குமார்...
நிகழ்வை அழகாகத் தொகுத்து வழங்கி உள்ளீர்கள்.
கருத்துரையிடுக