இன்று நண்பர் கோவை ஆவி அவர்களுக்கு பிறந்தநாள் என்பதை முகநூலில் நண்பர்களின் பதிவுகள் மூலமாக அறிந்தேன். கோவை ஆவியுடன் அவ்வளவாக பழக்கம் இல்லை என்றாலும் நம்ம குடந்தை சரவணன் அண்ணனின் குறும்படங்கள், துளசி சாரின் குறும்படங்கள் மற்றும் ஆவி எடுத்த குறும்படம் மூலமாக அறிவேன். அவரின் தளத்தை அவ்வப்போது வாசிப்பேன். என் தளத்தில் எப்போதாவது அவர் கருத்து இடுவதுண்டு. நண்பர் ஆவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சென்ற வார நிகழ்வுகள் மனசுக்கு இதமானதாக இல்லை... அறை மாறியதும் அதன் முன்னும் பின்னுமான நிகழ்வுகளும் பல உண்மைகளைப் புரிய வைத்தாலும் மன வருத்தத்தையே கொடுத்தது. பணமும் சொத்துமே பிரதானம் என்று எண்ணம் எனக்கு அறவே பிடிப்பதில்லை. அப்படிப்பட்ட முகங்களை அறிந்தேதான் இருந்தேன் என்றாலும் முற்றிலுமாக அறியும் பாக்கியம் கிட்டியதில் மகிழ்ச்சியே. புதிய அறை பழைய அறையைப் போன்று விசாலமானதாக இல்லாவிட்டாலும் புறாக்கூட்டுக்குள் வாழ்வது போல் தோன்றினாலும் இருப்பவர்களின் மனம் விசாலமாய்... அதுதானே வேண்டும். ஏழு வருடங்களுக்கு மேலாக பெரும்பாலும் சமையல் நானே என்று இருந்த நிலை போய்... நான் வருவதற்குள் சமையல் முடிந்து விடுகிறது. ஊருக்குப் பேச, வாசிக்க என நேரம் என்னிடம் மிச்சமாய்... சனிக்கிழமை மட்டுமே நான் சமைக்க வேண்டும்... மனநிலையின் போக்கினால்தான் பதிவுகளை வாசித்தபோதும் கருத்துக்கள் இடவில்லை. இனி எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.
'என்னைப் பற்றி நான்' பகிர ஆரம்பிக்கும் போது ரொம்ப யோசனை... காரணம் முதல் வாரம் எனக்கு ஸ்ரீராம் அண்ணா மட்டுமே கொடுத்திருந்தார்கள். நான் அதட்டி உருட்டி வாங்கும் நட்புக்கள் எல்லாம் கொஞ்சம் நாள் கழித்துத் தருகிறோம் என்று ஜகா வாங்கிவிட, எங்கே ஸ்ரீராம் அண்ணாவின் பதிவுடன் என்னைப் பற்றி நான் சில வாரங்கள் தடை பட்டுவிடுமோ என்று கூட யோசித்தேன். என்ன ஆனாலும் பரவாயில்லை ஆரம்பித்து விடலாம் என்ற முனைப்போடு முதல் வாரம் பதிந்துவிட்டு சகோதரி கிரேஸ், செல்வக்குமார் அண்ணா மற்றும் சிலரிடம் பதிவு கேட்க, செல்வக்குமார் அண்ணன் உடனே அனுப்பித்தர, அன்று இரவே சகோதரி கிரேஸூம் அனுப்ப... மூன்று வாரம் பிரச்சினை இல்லை என்று நினைத்து நகர, இப்போ கைவசம் இன்னும் மூன்று பிரபலங்களின் கட்டுரைகள்... என்னைப் பற்றி நான் நீண்ட தொடராய் பயணிக்கும் என்ற நம்பிக்கை ஆலம் விழுதாய் மனதுக்குள் வளர்ந்து கிடக்கு. நன்றி உறவுகளே.
இங்கு செம குளிர்... ஊட்டி கொடைக்கானலில் இருப்பது போல் இருக்கிறது. கடந்த வெள்ளியும் சனியும் ரொம்ப மோசமாய்... இதுவரை குளிருக்காக ஸ்வெட்டர் எல்லாம் வாங்கவில்லை. இந்த வருடம் வாங்கும் எண்ணம் இல்லை என்றாலும் பஸ்ஸை விட்டு இறங்கி அறை வந்து சேர்வதற்குள் உடம்பு ஆடுவதுடன் மழை நேரத்தில் பல் தாளம்போடுமே அதுமாதிரி தாளம் போட ஆரம்பிச்சிடுது.... அப்பப்பா எட்டு வருடத்தில் காணாத குளிர். வெள்ளியன்று காற்றும் குளிரும்.... என்னுடன் வேலை செய்யும் மலையாளியின் பெரியப்பா பையனும் மற்றும் இருவரும் அந்தக் குளிர் காற்றில் மதாம் என்ற இடத்துக்கு காரில் பயணித்திருக்கிறார்கள். சிட்டிக்குள்ளேயே அடித்து தூள் பறத்திய காற்றும் குளிரும் பாலைவனப் பகுதியிலா விட்டு வைக்கும். இவர்கள் மதாம் என்ற இடத்தை அடைய பத்து நிமிடம் இருக்கும் போது மணல் காற்றில் சிக்கிய கார், ரோட்டின் நடு தடுப்புச் சுவரைத் தாண்டி அடுத்த பக்கம் போய்விட எதிர் திசையில் வந்த கார் மோதி மிகப்பெரிய விபத்து... இருவருக்கு லேசான காயம் என்றாலும் நண்பரின் சகோதரருக்கே பலத்த அடி.... மற்றவர்களை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை இவரை மட்டும் ஹெலிகாப்டரில் துபாய்க்கு அனுப்பிவிட, இவர்கள் அங்கும் இங்கும் அலைந்து காவல்துறையிடம் கேட்டு விவரம் அறிந்து சென்ற போது அவருக்கு வயிற்றில் ஆபரேசன் முடிந்திருக்கிறது. இப்ப அவர் ஹோமாவில்... வேகம் விவேகம் அல்ல... அதுவும் மணல்காற்று வீசும் பகுதியில் மெதுவாகச் சென்றிருக்க வேண்டும்... எது எப்படியோ அவர் மீண்டும் நினைவு திரும்ப வேண்டும்.
சசிகலா முதல்வர் ஆவதை நாமெல்லாம் கருத்துப் பதிந்து தடுத்துவிட முடியாதுதான். அதிமுக எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் அவர்தான் முதல்வர் என்பது எங்கள் முடிவு இதை யாரும் எதிர்க்க முடியாது என்று சொல்கிறார். அப்ப வாக்களித்த நாமெல்லாம் அவர்களுக்கு செல்லாக்காசு... ஏன்னா பணத்துக்கு விலை போயிட்டோமே... தமிழச்சி ஆளணும்ன்னு சொல்றவன் எல்லாரும் பன்னீர் தமிழன் என்பதை மறந்துட்டானுங்க... என்ன ஒரு விந்தை... திட்டமிட்டு காய் நகர்த்தி இன்று தமிழர்களை ஆளத்துடித்து அதையும் அடைந்து விட்ட சசிகலாவால் தமிழனுக்கு என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது... ஊழல்வாதிகள் எல்லாம் சொம்பு தூக்குவது எதற்காக.. எல்லாம் சம்பாரிக்கவே... அதிமுக அழியும் என்று தெரிந்தும் இதைச் செய்வது இருக்கும் வரை சம்பாரித்துக் கொள்வோம் என்பதால்தான்... எது எப்படியோ இனிமேலாவது காசுக்கு விலை போகாமல் யோசித்துச் செயல்படுவோம்.
-'பரிவை' சே.குமார்.
12 எண்ணங்கள்:
என்னைப்பற்றி நானும் இன்னும் சொல்லவில்லை.ஆரம்பித்த நேரம் சிந்தனை திசை மாறிக்கொண்டே இருக்கின்றது.
மண்புயல் வாகன விபத்து என்பது நம் வேகத்தால் மட்டும் அல்ல குமார். நாம் மெதுவாக போனாலும் நம் நேரம் அதுவெனில் அப்படித்தான் ஆகும். ஆனால் மெதுவாக சென்ற வாகனத்தில் அடித்தே கோமா ஸ்டேஜ் என்பது பாவம். சீக்கிரம் குணமடையட்டும்.
சசிகலா?????????????? ஹாஹா... அக்கா இப்ப எல்லோருக்கும் எதிர்க்கட்சியாகிட்டேன். சசிகலாவின் கொள்கைப்பரப்பு செயலாளர் நானே? வர லாபத்தில் ரெண்டு பேரும் பங்கு போடலாம். என் கட்சிக்கு மாறிக்கோங்க குமாரு.
நண்பர் கோவை ஆவி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
பணமும் சொத்துமே பிரதானம் என்பது எனக்கும் பிடிப்பதில்லை சகோ. உறவுகளும் நட்புகளும் ஒன்றாக இருக்கும் அன்பே பெரிது. இனி அனைத்தும் நன்றாய் நடக்க வாழ்த்துகள். குளிரில் உடல்நலனையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கோமாவில் இருக்கும் நண்பருக்கும் பிரார்த்தனைகள்.
நண்பரின் சகோதரர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்...
ஆஹா...
ஆவிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். சசிகலா முதல்வராவது ஜீரணிக்க முடியாததுதான்... நண்பரின் சகோதரர் விரைவில் குணமடைய வாழ்த்துகள்
புதிய இடத்தில் சற்று கூடுதல் நேரம் கிடைப்பது அறிந்து மகிழ்ச்சி.
கோவை ஆவி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
ஆம், வேகம் விவேகமன்று:(. நண்பரின் சகோதரர் நலப் பெறப் பிரார்த்தனைகள்.
ஆவிக்கு வாழ்த்துகள்.
நண்பர் கோமாவிலிருந்து விழித்தெழட்டும். பிரார்த்தனைகள்
தமிழக மக்களை எவ்வளவு அடித்தாலும் தாங்குமளவு பழக்கி வைத்திருக்கிறார்கள்!
இனி எல்லாம் சரியாகிவிடும் என்ற உங்களின் நம்பிக்கை துளிர்விடும் நிலை உங்களை மென்மேலும் எழுத வைக்கும் என நம்புகிறேன். வாழ்த்துகள்
பணமும் சொத்தும் துளியும் பிடிப்பதில்லை. உறவுகள், நண்பர்கள் என்று அன்புமழையில் நனைவதைப் போல் வேறொன்று உண்டோ??!! தங்களுக்கு நல்லதே நடக்க பிரார்த்தனைகள்!
ஆவிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!
பாவம் நண்பர் ஆனால் கவனமாக இருந்திருக்க வேண்டும்...கோமாவிலிருந்து மீண்டெழ வேண்டுகிறோம்.
கீதா: மேற் சொன்ன எங்கள் இருவரின் கருத்துடன், நம் மக்கள் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள். பொறுமையின் சிகரங்கள். இதன் முன் பாக்காத ஆட்சியா இல்லை ஊழலா? இதையும் அப்படியே பார்ப்போம் என்று ..என்றாலும் நல்ல சிறந்த ஆட்சி அமைய இது நல்ல வாய்ப்பு. அதாவது மூன்றாவதாக ஒரு தலைமை...நடக்குமா??!!
மலையாள நண்பர் விரைவில் குணமடைய எமது பிரார்த்தனைகள்.
அமெரிக்காவில் ஒரு டொனால்டு டிரம்ப், தமிழ்நாட்டில் ஒரு சின்னம்மா.வாய்ப்பு கொடுத்து தான் பார்க்கலாமே! நாம் உழைத்தால்தானே நமக்கு சோறு!
- இராய செல்லப்பா நியூஜெர்சி
கருத்துரையிடுக