தமிழகத்தில் 1715-ல் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு அறிமுக இயக்குநர் ஜூலியன் பிரகாஷ் கதை, திரைக்கதை எழுதி அத்துடன் தானே தயாரித்து இயக்கியிருக்கிறார். இப்படி ஒரு கதைக்களத்துடன் சினிமா உலகிற்குள் தைரியமாக இறங்கி யாரும் தயாரிக்க முன் வரமாட்டார்கள் என்பது தெரிந்து தானே தயாரித்து இருக்கிறார். அவரது முயற்சியில் வெற்றி பெற்றாரா... இல்லையா என்பதை பார்க்கும் முன்னர் அவரின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
எப்பவுமே நம்மாளுங்க சாமி கும்பிடுவதில்தான் தகராறு செய்வார்கள். கிராமங்களில் வழி வழியாக ஒரு குடும்பத்துக்கு முதல்மரியாதை கொடுத்துக் கொண்டு வருவார்கள், புதிதாய் ஒருவன் கிளம்புவான் எனக்கு முதல் மரியாதை வேண்டுமென அப்புறம் சண்டை, சச்சரவுன்னு ஆகி கடைசியில் திருவிழா நின்று போகும். எங்க ஊரில் இருக்கும் ஐயனார் கோவிலில் சிறப்பாக திருவிழா நடக்கும் என்பது எனக்கெல்லாம் சொல்லக் கேள்வி, அதுவும் பக்கத்து ஊர்க்காரன் மரியாதை கேட்டதால் நின்றதாகச் சொல்வார்கள். எங்க ஊருக்கு அருகில் இருக்கும் கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் கோவிலில் பல வருடங்களுக்குப் பிறகு குதிரை எடுப்பு நடத்தினார்கள். கோவிலுக்கு குதிரைகளைக் கொண்டாந்ததும் புதிதாய் ஒருவருக்கு முதல் மரியாதை வேண்டுமென ஒரு கூட்டம் கேட்க, அதுவரை வாங்கிவருபவரும் அவருக்கு சளைத்தவரில்லை என்பதால் விட்டுக் கொடுக்க மற்றொரு கூட்டம் மறுக்க நீண்ட நேரமாக தீர்வு காணப்படாமல் பேச்சு வார்த்தை நீடித்து எப்பவும் கொடுப்பவருக்கே கொடுப்பதென முடிவாகி சாமி கும்பிட, அதன் பிறகு இதுவரை குதிரை எடுப்பு இல்லை. அப்படியான ஒரு பிரச்சினைதான் கதையின் ஆரம்பப்புள்ளி... இரு ஊருக்கும் பொதுவான சாமியை, அது இருந்த கிராமத்தில் இருந்து அபகரித்து மற்றொரு ஊரில் வைத்து அவர்கள் இஷ்டம் போல விழா எடுக்க, இன்னொரு கிராமத்தான் பிரச்சினைக்கு வருகிறான்.
மஞ்சு விரட்டில் மூன்று வகை உண்டு என்று பெயர் போடும்போதே விரிவாகச் சொல்கிறார்கள். மாடுகளை மொத்தமாக அவிழ்த்து விட்டு முடிந்தவர்கள் பிடிக்கலாம் என்று சொல்வது, வாடி வாசல் வழியாக மாட்டை அவிழ்த்து விட்டு பிடிக்கச் சொல்வது, மாட்டை கயிற்றில் கட்டி ஒரு வட்டத்துக்குள் குழுவாக இறங்கி பிடிக்கச் சொல்வது என மூன்று வகையைக் குறித்துச் சொல்கிறார்கள். மாட்டை பார்த்துப் பார்த்து வளர்ப்பவர்கள் மாடு தோற்றால் கொன்று விடுவான் என்று சொல்கிறார்கள். இது உண்மையா தெரியலை... சினிமாவில்தான் நம்பியாரும், விஜயகுமாரும் மாட்டை சுட்டுக் கொல்வார்கள். நிஜவாழ்க்கையில் அப்படியெல்லாம் கொல்லமாட்டார்கள். வந்த விலைக்கு விற்று விடுவார்கள் என்பதே நான் எங்கள் பக்கம் பார்த்தது. இந்த மூன்று வகை போக எருது கட்டு ஒன்று எங்கள் பக்கம் மிகவும் பிரபலம். நீண்ட வடத்தில் மாட்டைக் கட்டி ஒரு குழு இழுத்துக் கொண்டு செல்ல இன்னொரு குழு மாட்டை பிடிக்க முயலும். இந்த வகை எருது கட்டில் நீண்ட தூரம் சுற்றி ஓடி வருவார்கள். இதைத்தான் வடமாடு மஞ்சுவிரட்டு என மாட்டை வட்டத்துக்குள் கட்டி சுற்ற வைத்தார்கள் போலும் என்று நினைக்கத் தோன்றும்.
விலங்குகள் நல வாரியம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு விலங்குகள் பற்றி அறியாத இவர்கள் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவேயில்லை. மஞ்சுவிரட்டுப் பற்றி தெரியாதவனெல்லாம் கூடிப் பேசி வீடியோ கேமில் விளையாடச் சொன்ன கேவலம் இந்த நாட்டில்தான் நிகழ்ந்தது. சின்னக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை மாட்டை எவ்வளவு நேசத்தோடு வளர்ப்பார்கள் என்பதை அந்த வீடுகளில் போய் பார்த்தால்தான் தெரியும். இந்தப் படத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுதான் கதையின் திருப்பத்திற்கான காரணி, என்ன ஒண்ணு மேலே சொன்ன விலங்குகள் நல வாரியத்தின் புண்ணியத்தால் தமிழ் சினிமாவில் மஞ்சுவிரட்டு பற்றி விரிவாய் பேசிய படத்தில், ஒரு நல்ல வடமாடு மஞ்சுவிரட்டைப் பார்க்க முடியாமல் கிராபிக்ஸ் மாட்டைத்தான் பார்க்க முடிகிறது. அங்குதான் இளமிக்கு சறுக்கல். இருப்பினும் முடிந்தவரை அதையும் சரியாக செய்ய முயன்றிருக்கிறார்கள் என்றாலும் மாடு முன்னும் பின்னும் போகும் போது கிராபிக்ஸ் சிரித்து விடுகிறது ஆனாலும் விறுவிறுப்புக் குறையவில்லை.
ஒரு காதல்... அந்தக் காதல் எப்படி ஏற்பட்டது என்பதெல்லாம் சொல்லப்படவில்லை. அதற்கு வில்லனாகிறது இரு ஊருக்கும் பிரச்சினையாக இருக்கும் சாமி சிலை, யாராலும் அடக்க முடியாத தன்னோட மாட்டை எவன் அடக்குகிறானோ அவனுக்கு தன் மகளையும் கொடுத்து அந்த ஊருக்கு சாமியையும் கொடுப்பதாய்ச் சொல்ல பிரச்சினை விஸ்வரூபமாகிறது. எல்லா ஊரிலும் மாடுபிடித்து... அதிலும் கொஞ்சம் தில்லாலங்கடி வேலை செய்து... பெயரை வாங்கி வைத்திருப்பவனுக்கு சிலை கொண்டு வருவதுடன் தங்கச் சிலையை கட்டிக்க ஆசை... அந்த ஆசையால் விளைவது... பயங்கரம்.
மாங்குளத்தின் தலைவராக ரவி மரியா, இவரின் மகள் இளமியாக (இளமீனாட்சி) அனு கிருஷ்ணா, பக்கத்து ஊரில் காட்டுக்குள் போய் வேட்டையாடும் கருப்பாக யுவன், அவனுக்கு வில்லனாகும் சடைப்புலியாக 'கல்லூரி' அகில் என அனைவரும் அந்தக் காலத்து மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். அந்தக் காலத்து கதைக்களம் என்பதால் ஒரு தார் ரோட்டுக்கு கூட வந்து விடக்கூடாது என தேனிப்பக்கம் ஒரு பொட்டல்காட்டில் செட் போட்டு படத்தை எடுத்திருக்கிறார்கள். பல காட்சிகள் நாடகத்தனமாக இருந்தாலும் கதையின் போக்கில் நம்மை இழுத்துச் செல்வதால் அது அதிகம் உறுத்தவில்லை.
யுகாவின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம்... ஆரம்பம் முதல் இறுதி வரை பழைய காலத்து மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் வேட்டை ஆடுதல், தேன் எடுத்தல், மாடு பிடித்தல் என ஒவ்வொரு நிகழ்வையும் மிக அழகாக படம்பிடித்திருக்கிறார். அதேபோல் பின்னணி இசையும் மிகப்பெரிய பலம்தான்... வடமாடு மஞ்சுவிரட்டின் போது உறுமி ஒலிப்பதே ஒரு சுகம்தான்... பாடல்கள் பழைய காலத்தை நினைவு படுத்துபவை என்பதால் வித்தியாசமாக இருந்தாலும் கேட்க இனிமை. மதுரைத் தளபதியாக வரும் கிஷோர் மட்டும் சுத்தத் தமிழில் பேசுவது வித்தியாசமாக இருக்கிறது.
சாமி சிலை - இரு ஊர் பிரச்சினை - காதல் - வடமாடு பிடித்தல் என நகரும் கதையின் இறுதிக் காட்சி மிகக் கொடூரம்... இதை ஆகச் சிறந்த வன்முறை என பலர் வாதிடலாம்.. இருந்தாலும் ஒரு உண்மைச் சம்பவம்... இன்றும் மதுரை மேலூருக்குப் பக்கத்தில் செவி வழிச் செய்தியாக தலைமுறை கடந்து வாழும் ஒரு நிகழ்வு... இன்றும் கருப்புக்கும் இளமிக்கும் மாங்குளத்தில் இருக்கும் கோவிலுக்கு தங்கள் காதலைச் சேர்த்து வைக்கச் சொல்லி காதலர்கள் வந்து சாமி கும்பிட்டுச் செல்கிறார்கள் என்பதை படத்திலும் காட்டுவதால் அந்த நிகழ்வு அப்படியே நடந்திருக்கலாம் என்று நினைப்போடு அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு நாம் வந்துவிடுகிறோம்.
எப்படியும் சினிமா எடுக்கும் பலர் மத்தியில் இப்படித்தான் சினிமா எடுப்பேன் என்று வருபவர்கள் சொற்பமே. அப்படிச் சொற்பத்தில் விளைந்த இந்த ஜூலியன் பிரகாஷ் அடுத்த படத்தையும் தயாரிப்பாளருக்காகவும் தமிழ் சினிமாவுக்காகவும் சமரசம் செய்யாமல் எடுத்தால்... இவரை தமிழ் சினிமா உலகம் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றால் ஒரு நல்ல இயக்குநரின் படங்களைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறலாம். அப்படியான வாய்ப்பு கிடைக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.
இளமி... கோர தாண்டவத்தை மனதில் சுமக்க வைக்கும் இளமையான காதல் கதை... வட்டத்துக்குள் கட்டிய மாடாக இல்லாமல் அவிழ்த்து விட்டதும் சீறிப் பாய்ந்து வரும் காளையாக மிக அழகாக வந்திருக்கிறது.
கண்டிப்பாக பார்க்கலாம்... ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்.
-'பரிவை' சே.குமார்.
14 எண்ணங்கள்:
Kumar, Thanks for a great a review and introducing this movie. I will certainly try to watch this movie.
இளமி என்றொரு படமா? அந்தப் பெயரை தட்டச்சில் கொண்டு வரவே சிரமமாய் இருக்கிறது!!!
இளமி - இப்போது தான் கேள்விப்படுகிறேன். இணையத்தில் கிடைக்கிறதா... கிடைத்தால் பார்க்க விருப்பம் உண்டு.
இப்படி ஒரு படம் வந்திருப்பது, இந்தப் பதிவின் மூலம் தான் தெரியும் ஜி...
தங்களின் மூலம்தான் இப்படி ஒரு படம் வந்திருப்பதை அறிந்தேன் நண்பரே
அருமை
வணக்கம் ஐயா...
இளமி விளம்பரங்கள் எல்லாம் வந்தது... ஆனாலும் அதிகமாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பது வருத்தமே...
பாருங்கள் ஐயா... ஒரு வித்தியாசமான படம்... உண்மைக் கதையும் கூட...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஐயா...
விளம்பரங்கள் இருந்தும் சரியான முறையில் மக்களைச் சென்றடையாத படங்கள் எல்லாம் தோல்விப் படங்களே என்றாலும் இது நல்ல படம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஐயா...
இணையத்தில் கிடைக்கிறது அண்ணா... பாருங்கள்... நல்லபடம்... இறுதிக்காட்சிதான் ரொம்ப வேதனையானது... ஆனாலும் உண்மைக்கதை என்பதால் சமரசம் செய்யாத இறுதிக்காட்சி என்பதால் ஏற்புடையதே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அண்ணா என்பது தங்களுக்கும் தனபாலன் அண்ணாவுக்கும் ஐயான்னு ஆயிருச்சு... மன்னிச்சூ...
வணக்கம் அண்ணா...
பாருங்க... எல்லாருக்கும் படம் பற்றிய விவரமே தெரியலை... கொடுமை என்னன்னா நல்ல படங்களுக்கு சரியான விளம்பரம் இல்லாமல் தோல்விப்படங்களாகி விடுகின்றன... பெரிய நடிகர் படங்கள் விளம்பரம் இல்லாமலேயே குப்பையாக இருந்தாலும் கோடியை வசூலிக்கின்றன...
நல்ல படம்... உண்மைக் கதை... முடிந்தால் பாருங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் சந்திர குமார் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கண்டிப்பாக பாருங்கள்... வித்தியாசமான படம்...
இளமியின் விமரிசனம் அருமை.. அந்தக் காலத்தில் நடந்த சம்பவத்தில் ஆழ்ந்து எழுதியிருக்கின்றீர்கள்.. வாழ்க நலம்..
வாவ்
கோவில் வேறு இருக்கா
பாப்போம்
தம +
இளமி போன்ற படங்கள் எல்லாம் எங்க ஊர்ப்பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்காது!! ம்ம் எப்படியாவது பார்க்க வேண்டும். பார்ப்போம்..
கீதா: இளமி! உங்கள் பதிவிலிருந்துதான் தெரிய வருகிறது..இணையத்தில் பார்க்க வேண்டியதுதான்
கருத்துரையிடுக