மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

சினிமா : கிடாரி

Image result for கிடாரி

ங்க பக்கம் பருவம் அடையாத... அதாவது சினை பிடிக்கும் பக்குவத்தை எட்டாத வரை மாட்டை 'கிடேரி' என்று அழைப்பார்கள். பசுவங்கிடேரி... எருமைக்கிடேரி என்பது பெயராகவே ஆகிவிடும். ஒருவேளை கிடாரி என்பதுதான் பேச்சு வழக்கில் கிடேரி என்று ஆகியிருக்கக் கூடும். எங்க வீட்டில் பிறந்து வளர்த்த மாடுகளில் பலவற்றை  'கிடேரி' என்றே அழைத்துப் பழக்கப்பட்டதால், அவற்றை மேய்க்கும் போது எங்காவது ஓட எத்தனித்தால் 'ஏய் கிடேரி' என்று கத்தினால் அப்படியே நின்று திரும்பிப் பார்த்து குரல் கொடுக்கும். கிடாரி என்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றிற்குச் சொல்கிறார்கள்.  கிடேரி என்பது பெண் மாட்டைக் குறிப்பதால் இந்தப் படத்திற்கு பெயர் வைத்தார்கள் என்றால் அது நாயகனைக் குறிக்கும் என்பதாக இல்லை... எல்லாவற்றிக்கும் துள்ளி எழும் அவனைப் பெட்டை என்ற பதத்தில் அழைக்கமாட்டார்களே... ஒருவேளை வில்லனாய் சித்தரிக்கப்படுபவர் தனது வாழ்க்கைக்காக மற்றவரை அழிப்பதாலும் இந்தப் பெயர் வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பெயர்காரணம் இருப்பதால் படத்தின் பெயரைப் பிரபலமாக்க நாயகனுக்கு கிடாரி என்ற பெயரை வைத்திருக்கிறார்கள். ஊரில் அடங்காப்'பிடாரி' என்று சொல்வார்களே அப்படிப்பட்டவன்தான் இந்த கிடாரி. 

கிடாரி... இங்கு யாருக்கும் அடங்காமல் திமிரிக் கொண்டு திரியும்... நம்ம பக்கம் அப்படித் திணவெடுத்துத் திரிபவனை கோவில் காளை என்றோ பொலி எருது என்றோ அழைப்போமே அப்படிப்பட்டவந்தான் இவன்... முறுக்கு மீசையும் குறுங்கத்தியுமாகத் திரிபவன். தன்னை வளர்த்து பிள்ளை போல் நினைப்பவருக்காக அடிக்கடி ரத்தம் பார்க்கும் ராட்சஸன். அவனுக்குள்ளும் மென்மையான காதல் இருக்கிறது... வளர்த்தவள் என்றாலும் அவள் மீது பெற்றவள் போன்ற அன்பு இருக்கிறது... உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் பண்ண மாட்டேன் என்ற நல்ல குணமும் விரவிக் கிடக்கிறது.

கிடாரி... யாரை நல்லவன் என்று நம்புகிறோமே அவன் நல்லவன் இல்லை என்பதே படத்தோட கரு... சசிகுமாரோட படங்களில் எல்லாமே இதுதான் மையக்கரு... தனது படங்களில் வன்முறை இருந்தாலும் சில நல்ல விஷயங்களைப் பேசும் சசிகுமார், படம் முழுவது தன்னைச் சுற்றியே நகரும்படி கதை அமைப்பதில் கில்லாடி. இந்தப் படத்தில் கொஞ்சம் மாறுதலாய் வன்முறைக்கு வன்முறைதான் சரி என்று சொல்வதுடன் எல்லாக் கதாபாத்திரங்களும் தன்னைப் பற்றி பேசும்படி வைத்திருக்கிறார். இதில் சாதித்தாரா..? இல்லை நம்மைச் சோதித்தாரா...? என்றால் இரண்டும் சமபங்குதான்... பெரிய எதிர்பார்ப்பைக் கொடுத்த படம்... ரத்தச் சகதியில் சிக்கி குற்றுயிராய்க் கிடந்து தவிக்கிறது.

படத்தில் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு நிற்பவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்கள்தான்... 'ஏய் பொட்டை வெளியில வாடா'ன்னதும் கோவணத்தை வரிந்து கட்டியபடி எண்ணெய் தேய்த்த உடம்புடன் வேல் கம்பைத் தூக்கிக் கொண்டு வீதிக்கு ஓடிவரும் போது  மனுசன் கலக்கிட்டாரு... அவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்... மகனிடம் கோபப்படும் இடம்... கிடாரி வரவில்லை என்று வருந்தி இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து, அவன் வீட்டுக்குள் நுழைந்து மாடத்தில் நிற்கும் தன்னைப் பார்த்து லேசான புன்னகை பூத்ததும் விடும் ஒற்றைப்  பெருமூச்சு... மகனின் பிணத்தைப் புரட்டி செருப்பை எடுத்துக் கொண்டு பதட்டத்துடன் நடப்பது என தூள் கிளப்புகிறார். வேல ராமமூர்த்தி ஐயா அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால் அவரின் போக்கில் நடிக்க வைத்த இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பாராட்டியே ஆகவேண்டும். பெரும்பாலான படங்களில் இது போன்ற பாத்திரங்களையே அவர் ஏற்பதுதான் ஏனென்று தெரியவில்லை... மாற்றிக் கொண்டால் மிகச் சிறப்பான இடத்தை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை அவர் உணர்ந்து கதாபாத்திரத்தை தேர்வு செய்ய வேண்டிய காலகட்டம் இது.

ரத்த வாடை வீசும் படத்தில் காதல் தென்றலை வீசச் செய்து நெஞ்சை அள்ளி நம் நெஞ்சுக்குள் 'விரல் தொடும் தூரத்தில் வரம் இருக்கு' என்று அமர்ந்து கொள்பவர் நிகிலா விமல்... இந்தப் பொன்ணு என்னமா நடிக்குது... வெற்றிவேல் படத்தில் சோகமாய் இருக்கும் போதே பட்டையைக் கிளப்பியிருக்கும் இதில் சொல்லவா வேண்டும்... காதல் காட்சிகளில் எல்லாம் செம...  காதல் காட்சிகளை ரொம்ப ரசனைக்குரியதாய் ஆக்கியதில் பெரும்பங்கு இவருக்குத்தான்.... அந்த உதட்டுச் சுழிப்பு... புருவ நெளிப்பு... கண் ஜாடை... சின்னச் சின்ன துள்ளல்கள்... என எல்லாமே கலக்கல். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்திருக்கிறார். ஊதாக்கலரு ரிப்பனில் ஸ்ரீதிவ்யா கண்ஜாடை காட்டுமே.... உன்மேல ஒரு கண்ணுதானில் கீர்த்தி கண்ஜாடை காட்டுமே... அதெல்லாம் பின்னுக்குத் தள்ளி வண்டியில நெல்லு வருமில் கண்ஜாடை காட்டி எல்லாரையும் தன் பக்கம் இழுத்திருச்சு... உண்மையிலேயே நல்ல நடிப்பு... தன்னோட படங்களில் கதாநாயகிக்கு நிறைய காட்சிகள்... அதுவும் நிறைவாய் கொடுப்பது சசிகுமாரின் பாணி. அது இதிலும்... நிகிலாவும் பட முழுக்க வருவது போல் காட்சிகள் வைத்ததில் ரத்தத்தின் ஊடே காதல் பாய்ந்திருக்கிறது.

கொம்பையா பாண்டியன் அதாங்க வேலராமமூர்த்தி ஐயாவின் மகனான வருபவர் மிகச் சிறந்த எழுத்தாளுரும் இலக்கியவாதியுமான வசுமித்ரவாம். அவரோட வசன உச்சரிப்பு... பேசும் போது முகத்தில் காட்டும் பாவங்கள் என பக்காவாச் செய்திருக்கிறார். நடிகனின் மகன் நடிகன் ஆவது போல்... அரசியல்வாதி மகன் அரசியல்வாதி ஆவது போல் ஒரு ரவுடியின் மகன் ரவுடி ஆக ஆசைப்படுவான் என்பது நம்ம தமிழ்ச் சினிமாவில் எழுதப்படாத விதி. கபாலி குடும்பச் சிதைவுக்கும் இதுதானே காரணம்... அதேதான் இங்கும்... தன் இடத்தில் சசியா என்று பொருமுபவரை தன்னுள் அடக்கி ஏத்திவிட்டு தனக்கான வரவு செலவு கணக்கை முடிக்க நினைக்கும் பெண் ஒருத்தியின் தூண்டுதலில் சிலிர்த்தெழுந்து அடங்கிப் போகிறார்.

சசிகுமார்... மீசையைத் தடவிக் கொண்டு... குறுங்கத்தியை வாயில் கடித்துக் கொண்டு... டநான் இருக்கும் போது உங்களை போட வந்துட்டானே...' என்று மதயானை போல் கொம்பையா பாண்டியனுக்காக சதக்.. சதக்குன்னு காசாப்புக் கடையில் ஆடு வெட்டுவது போல் வெட்டுகிறார். தன்னோட படத்தில் வன்முறைகள் இருந்தாலும் கடைசியில் ஒரு நல்ல தீர்வைச் சொல்லி முடிப்பார். இதில் வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பதாய்த்தானே சொல்கிறார்... திருந்தி வாழவில்லை... யாரையும் திருத்தவும் இல்லை... நீண்ட முடி வைத்து வழித்துச் சீவி.... எப்பவும் போல் தாடியுடன் முறுக்கிய மீசை வைத்து கண்ணில் வன்மம் காட்டி நடித்து சசிகுமார் நாயகனாக நின்றாலும் வேலராமமூர்த்தியுடன் வரும் காட்சிகளில் எல்லாம் அந்த மனுசன் நாயகனைப் பின்னுக்குத்தள்ளி வில்லனை முன் நிறுத்திவிட்டார். சசிகுமார் வன்முறைகளில் இருந்து வெளி வரவேண்டிய காலகட்டத்துக்கு வந்துவிட்டார். வன்முறையை வைத்து மட்டுமே நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்பதில்லை... சொல்ல வேண்டிய நல்லதை எப்படியும் சொல்லலாம் என்பதை உணர வேண்டும். காதல் காட்சிகளில் அசத்துகிறார். சின்னச் சின்ன சில்மிஷங்களில் நிகிலாவுக்கு இணையாய்... எப்பவுமே நகைச்சுவை காட்சிகளை தனக்கும் வைத்துக் கொள்ளும்  இவர் இதில் 'தூளியிலே ஆட வந்த' பாடலில் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்... சசி ராக்ஸ்.

கொம்பையா பாண்டியனின் மைத்துனராய்.... மகனுக்கு பெண் கொடுத்த சம்பந்தியாய் வருபவர் எழுத்தாளர் மு.இராமசாமி ஐயாவாம்... கொந்தளிப்பை தன்னுள்ளே வைத்துக் கொண்டு சின்னக் குழந்தையின் காலை கொஞ்சி விளையாடும் அலைகளை அனுப்பும் கடலாய் அவர் இருந்தாலும் அப்படியான கதாபாத்திரத்துக்கு இன்னும் அழுத்தம் கொடுத்து நடித்திருக்கலாமே என்று எண்ண வைத்தது என்னவோ உண்மை என்றாலும் நிறைவாகத்தான் செய்திருக்கிறார். நாடக நடிகர்கள், எழுத்தாளர்கள் என நல்ல நடிகர்களை வைத்து செதுக்கியிருப்பதால்  படக்குழுவைப் பாராட்டலாம்.

இசை தர்புகா சிவா... பின்னணி இசையில் கலக்கல்... பாடல்களும் சூப்பராய் வந்திருக்கிறது.... மெலோடி பாடல்கள் செம... வண்டியில நெல்லு வரும் பாடல் முன்னரே இணையத்தில் கேட்ட பாடல்தான்... தஞ்சை அந்தோணி அவர்களின் பாடல்... அவரே இதில் பாடியும் ஆடியும் இருக்கிறார். எல்லாருக்கும் தலகாலு புரியலையே பிடிக்கும்... எனக்கு வண்டியில நெல்லு வரும் பாடலின் இடையே சசி-நிகிலா ரொமான்ஸாய் வரும் சில வரி மெலோடியான 'விரல் தொடும் தூரத்தில் வரமிருக்கு....'  ரொம்ப பிடிச்சிருக்கு... இன்னைக்கு மட்டும் தொடர்ந்து ஓடிக்கிட்டே இருந்துச்சு அந்த அஞ்சாறு வரி மட்டும்...  டிரஸ்ம்சைப் போட்டு உருட்டாமல் உருப்படியான இசை கொடுத்த சிவா...  முன்னணி இசையமைப்பாளராய் வரும் காலம் விரைவில் வரும்.... வாழ்த்துக்கள் சிவா.

ரத்தச் சட்டையை அணிந்து களமிறங்கியிருக்கும் இயக்குநர் பிரசாத் முருகேசன் மாஸ் படத்தைக் கொடுத்து தன்னை தமிழ் சினிமா இயக்குநர்களில் ஒருவராய் அடையாளம் காட்டிக் கொள்ள முயன்றிருக்கிறார். இது தோல்வி அல்ல வெற்றிதான் என்றாலும் எதற்காக ஒரு இளம் இயக்குநரின் மனதுக்குள் வன்முறை கதைக்களமாய்... சாதியையும் வன்முறையையும் தூக்கி வைத்து கொண்டு படம் காட்டினால் சாதித்து விடலாம் என்ற எண்ணத்தை இளம் இயக்குநர்கள் சுமப்பது வேதனையான விஷயம். காதல் காட்சிகளில் இயக்குநரின் சொந்த அனுபவம் பேசியது போல் அவ்வளவு சிறப்பு...  கதையிலும் நல்ல நேர்த்தி... சின்னச் சின்ன காட்சிகளிலும் அதீத கவனம்... வன்முறை இல்லா நல்ல படம் கொடுத்தால் இயக்குநராய் நிறைய சாதிக்கலாம்.

ஓ.ஏ.கே. சுந்தர் வில்லானாக காட்டப்பட்டு காமெடியனாக்கப்பட்டு அதிகாரம் இழந்த அரசியல்வாதிபோல் தெருவில் நிற்கிறார். அவருக்கு அண்ணனாக வருபவர், வில்லன்களாக வரும் மற்றவர்கள், கொம்பையா பாண்டியனின் மனைவி, மருமகள், குழந்தையை இழந்து அதற்காக தன்னையே அடகு வைக்கும் அந்தப் பெண், அவளின் கணவன், மூக்கையாவாக வரும் காளை, விநாயகமாக வருபவர், குழறிப் பேசியபடி வருபவர் என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சாத்தூர் மண்ணையும்... அந்தப் பக்கத்து மனிதர்களையும்...  அந்தக் கிராமத்தையும் அழகாய் படம் பிடித்திருக்கிறார் கதிர்.  பிரவீண் ஆன்டணியின் படத்தொகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. சண்டைக் காட்சி திலீப் சுப்புராயன்... நிறைய இடங்களில் மிரட்டியிருந்தாலும் இன்னும் மிரட்டியிருக்கலாமே என்று யோசிக்க வைத்தது.  சோளத்தட்டையில் மாட்டி கார் நின்ற இடத்தில் நடக்கும் சண்டைக்காட்சியில் தூள் கிளப்பியிருக்கிறார்.

இன்னொருத்தரை சொல்லாமல் விட்டாச்சு பாருங்க... நம்ம சீவலப்பேரி பாண்டி நெப்போலியனின் மறு வருகை... நெப்போலியனை நீங்கதான் நடிக்கணும்ன்னு சொல்லி அழைத்து வந்தேன்னு சசிகுமார் சொல்லியிருந்தார். உண்மைதான்... அந்தக் காதாபாத்திரம், படத்தினை திருப்பிப் போடும் சின்ன பிளாஸ்பேக் காட்சி.... இவர் நடிக்காமல் வேறு யார் நடித்திருந்தாலும் எடுபட்டிருக்காது... கனகச்சிதமான நடிப்பு... நடிப்பை தொடருங்கள் நெப்ஸ்.... ரகுவரன் இல்லாத சினிமாவில் நீங்களும் விலகியிருப்பதால் நிறைய வில்லன் கதாபாத்திரங்கள் வாழாமலேயே போய்விட்டன.

ஒரு கிராமத்து வீட்டுக்குள் எப்படி இருக்குமோ அப்படியான வாழ்க்கையை அச்சு அசலாகத் தந்திருக்கிறார்கள்.  நடிகராய், இயக்குநராய், தயாரிப்பாளராய்  பரிணமிக்கும் சசிக்குமார் அவர்கள் தொடர்ந்து வன்முறை என்னும் களத்தில் ஏன் வலம் வருகிறார் என்று தெரியவில்லை. நல்ல விஷயத்தைப் பேசணும்... நல்ல விஷயத்தைச் சொல்லணும் என்று சொல்லும் அவர் நண்பேன்டா என்னும் வளையத்துக்குள் இருந்து வெளியே வந்திருந்தாலும் வன்முறை என்னும் சட்டையை தன் மேல் கர்ணனின் கவச குண்டலமாய் மாட்டிக் கொண்டு இருப்பது ஏனோ தெரியவில்லை. சுப்ரமணியபுரம் கொடுத்த போதும் நாடோடிகள் கொடுத்த போதும் ஏற்புடையதாக இருந்த வன்முறைக் காட்சிகள் இதில் ஏனோ நம்மைச் சுற்றி ரத்தவாடை அடிப்பது போன்றதொரு பிரமையை ஏற்படுத்தி விடுகிறது. ஆரம்பக்காட்சியில் ஓடிவரும் ரத்தமும் அதன் மீது விழும் கையும்.... கடைசி வரை நம்மை ரத்த சேற்றில் நிற்க வைத்துவிடுகிறது.

எனக்கு சசிக்குமாரை ரொம்பப் பிடிக்கும் என்பதற்காக படம் குறித்து புகழ்ந்து எழுத நினைக்கவில்லை... மனதில் பட்டதை அப்படியே பகிர்ந்திருக்கிறேன். சசிக்குமார் என்னும் நல்ல நடிகரைவிட ஒரு திறமையான இயக்குநர், சமூகத்தைப் புரட்டிப் போடும் படங்களை... அவரின் நண்பரான சமுத்திரக்கனியைப் போல் சமூக அவலங்களை படமாக எடுக்க வேண்டியதில்லை... வன்முறை மட்டுமே தீர்வு என்ற எண்ணத்தைக் கைவிட்டு வன்முறையில்லா நல்ல படங்களைக் கொடுத்தாலே போதும். கொடுப்பார் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது. வன்முறைக் கூடாரத்துக்குள் இருந்து பரந்த வெளியில் சிறகை விரியுங்கள் சசி.

கிடாரியை பார்க்கலாம்... காதலும் ரத்தமும் கலந்த கலவை இது... வெட்டி வீழ்த்துறதைத் தவிர சசிக்கு வேற தெரியாதா என்று சொல்லும் இணைய ஊடகங்கள்தான் படம் முழுவது சுட்டு வீழ்த்தி வன்முறையைக் கட்டவிழ்த்த கபாலியை தூக்கி வைத்துக் கொண்டாடின என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. நடிகர்களுக்காக விமர்சனம் செய்யாதீர்கள்... மனதில்பட்டதைப் பேசுங்கள்.... என்னைப் பொறுத்தவரை கிடாரியைவிட கபாலியில் வன்முறை தூக்கல்தான்... இல்லையென்று சொல்ல முடியாது... இதை அழுத்திப் பேசினால் சாதீயம் பேசுகிறேன் என்ற ஒரு வார்த்தை வந்து விழும்.  அதனால நாம கிடாரியைப் பேசலாம். ரவடித்தனம் பண்ணும் சண்டியர் கதைதான் என்பதால் அவருக்கு வில்லன்கள் ஒவ்வொரு பிரச்சினையிலும் துளிர் விடுகிறார்கள். அவர்களைப் பற்றிய அறிமுகத்துடன் அவர்கள் கதை தொடர்வது புதுமுயற்சி என்றாலும் நமக்கு அயர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு கதை முடிவிலும் விதையை விட்டுட்டோம் அது வளரத்தானே செய்யும்ன்னு வில்லன்களை வளர்ப்பது கதையை தொய்வடையச் செய்கிறது. 

வேல ராமமூர்த்தி , நிகிலா, சசிகுமார், இசை, பாடல்கள், வசனம், ஒளிப்பதிவு இவற்றைக் கருத்தில் கொண்டு கிடாரியைப் பார்க்கலாம்.

மொத்தத்தில் கிடாரி ஒரு தென் மாவட்டத்து வாழ்க்கை என்றாலும் வன்முறை மட்டுமே தென் மாவட்டத்து வாழ்க்கை இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அழகான எதார்த்தமான... வாஞ்சையான மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள் நிறையக் கிடக்கு... அதையெல்லாம் விடுத்து எப்பவும் அருவாளையும் கத்தியையும் எடுத்து முன்னிறுத்தி தென்மாவட்டம் என்றாலே வீச்சருவாவும் வேலுக்கம்பும்தான் என்று தமிழ்ச் சினிமா பாடம் நடத்துவது ஏனோ..? நம்ம பக்கத்து நல்ல கதைகளை படமாக்குங்கள் சசிகுமார்... மற்றவன் செய்தால் பரவாயில்லை.... செம்மண் பூமிக்காரன் ரத்த ஆறுதான் ஓடுதுன்னு ஏன் சொல்லணும்... அன்பும் உறவும் இரண்டறக் கலந்திருக்கும் வாழ்க்கையை படமாக்குங்கள்... கிடாரிகளை எல்லாம் விட்டுவிட்டு வெற்றுடம்பு மனிதர்களின் வியர்வைக் கதைகளை உள்வாங்குங்கள்,,, இன்னும் சாதிக்கலாம்.

ஒரு விளக்கம் : நான் எப்பவுமே படத்தின் கதை குறித்து அதிகம் பேசமாட்டேன். தர்மதுரை பற்றி எழுதும் போது ஏனோ படத்தின் கதையை விலாவாரியாக எழுத வேண்டும் என்று தோன்றியது... அப்படியே கிறுக்கியும் விட்டேன். அதற்கு பயங்கர எதிர்ப்பு பலரிடமிருந்து வந்தது. தனிப்பட்ட முறையிலும் சிலர் சொன்னார்கள். எனக்கு சினிமா விமர்சனமெல்லாம் எழுத வராது. தமிழ் சினிமாவை விட மலையாளப் படத்தை விரும்புவது அதற்கு விமர்சனம் எழுதுவதும் பிடித்திருப்பதால் அவ்வப்போது எழுதுவதுண்டு. விமர்சனம் என்ற பெயரில் லைட்பாய் அங்க நிக்கணும்... கேமரா இங்க வைக்கணுமின்னு எல்லாம் எழுதத் தெரியாது... மனதில்பட்டதை கிறுக்கவே இந்தத் தளம்... என் மனதில் தோன்றுவதை இங்கு கிறுக்கிவேன் அவ்வளவே....


-'பரிவை' சே,குமார். 

20 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

தங்கள் படைப்புகளை இங்கும் பதியலாம் http://tamiln.in/

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மிக நீண்ட விமர்சனம் நண்பரே
அருமை
தம +1

Geetha சொன்னது…

நல்ல துல்லியமான விமர்சனம் ....வன்முறை விட்டு தமிழ்சினிமா தடம் பதிக்க துவங்கியுள்ளது..சசி போல சமூக அக்கறை நிறைந்தவர்கள் இதை கருத்தில் கொள்ள வெண்டும் தான்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு. பாராட்டுகள் குமார்.

மனோ சாமிநாதன் சொன்னது…

ரத்தவாடை வீசும் படம் என்று சொல்லி விட்டீர்கள். படத்தைப்பார்க்க யோசனையாக இருக்கிறது! அதே சமயம் நிகிலா பற்றி சொல்லியிருப்பதைப்படித்தால் பார்க்கலாமா என்றும் யோசனையாக இருக்கிறது!

ஸ்ரீராம். சொன்னது…

திரு ராஜா சுந்தரராஜன் கூட வேல ராமமூர்த்திக்காகத்தான் படம் பார்த்தகஞ்ச் சொல்லி இருக்கிறார். ஏனோ எனக்கு சசிகுமார் படங்கள் பிடிப்பதில்லை!!

:))

துரை செல்வராஜூ சொன்னது…

இன்றைய தலைமுறைக்கும் நகரத்தின் நவீன நாகரிக நளினங்களுக்கும் கிடாரி என்றால் என்னவென்றே தெரியாது..

ஈனாக் கன்று என்பது நயம்.. ஈனுதல் என்ற சொல்லே பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது..

இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ..

நமது வாழ்நாளில் பாதி - கிடாரிகளுடனும் காளைகளுடனும் கழிந்தவைதான்..

அந்த அளவில் சொல் விளக்கம் குறித்தமைக்கு மகிழ்ச்சி..

Anuprem சொன்னது…

நன்று....அதிக வன்முறையின் காரணமாகவே பல படங்கள் பார்ப்பது இல்லை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் நண்பரே...
பகிர்கிறேன்... நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
பார்க்கலாம் ரகம்தான் பாருங்கள்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
நானும் வாசித்தேன்... பெரும்பாலான விமர்சனங்களில் அவரைத்தான் சொல்லியிருக்காங்க...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாரதா சமையல் சொன்னது…

அருமையான விமரிசனம் குமார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சசிகுமார் படங்கள் அவ்வளவாக ஈர்ப்பதில்லை. அதுவும் இப்போதெல்லாம் தமிழ் படங்கள் சாதி சார்ந்த படங்களாகவே இருக்கின்றன. வேறு கதையே தமிழ்நாட்டில் இல்லையா? பக்கத்து மாநிலத்தைப் பார்த்து எப்போதுதான் கற்றுக் கொள்ளப் போகின்றார்களோ தெரியவில்லை. நான் மலையாளப் படம் பார்ப்பதை விரும்புவேன். தமிழ்படங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே அப்பா, மொழி, அம்மா கணக்கு போன்ற படங்கள்....துளசி தமிழ்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவார்....மலையாளப்படங்கள் பார்த்தாலும்...

கீதா

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.