முதல் பகுதி வாசிக்காதவர்கள் கீழிருக்கும் சுட்டியைச் சொடுக்கி வாசியுங்கள்...
***
(தெப்பக்குளம் பக்கமிருந்து எடுக்கப்பட்ட காளீஸ்வரர் கோவில் கோபுரம்) |
கோவிலின் சொத்துக்கள் சுவர்ணகாளீஸ்வரர் பெயரில்
இருப்பதாவும் திருவிழாக் காலங்களில் சோமேசுஸ்வரர் சந்நிதியில் இருக்கும்
மூர்த்திகள் திருவீதி உலா வருவதாகவும் நெய்வேத்தியம் படையல் எல்லாம்
சுந்தரேஸ்வரருக்கு செய்யப்படுவதாகவும் கோவில் குறித்தான செய்திகளில் காணமுடிகிறது.
இங்கு பிறப்பதும் இறப்பதும் முக்தி என்று சொல்லப்படுகிறது. மேலும் காளீஸ்வரரை வணங்கினால்
நம் முந்தைய வினைகள் எல்லாம் விலகும் என்றும் சொல்கிறார்கள். இங்கு சகஸ்ரலிங்கம்
(ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) உள்ளது. இதன் காரணமாக இங்கு தரிசனம் செய்தால் ஆயிரம்
சிவாலங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறது வரலாறு. இந்தக் கோவிலில் தங்கத்தாலான பள்ளியறை
இருக்கிறது. தேவாரம் பாடப்பெற்ற 274 சிவதலங்களில் இது 200வது தலமாகும். கோவிலின்
உள்ளே முத்து வடுகநாத சேதுபதி மற்றும் மருது
சகோதர்களுக்கு சிலைகள் இருக்கின்றன.
இந்தக் கோவிலின் இராஜகோபுரத்தில் ஏறிப் பார்த்தால் மதுரை
மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரியும். இதன் காரணமாகவே 'மருதைக் கோபுரம்
தெரியக் கட்டிய மருது வர்றதைப் பாருங்கடி..' என்ற நாட்டுப்பாடல் இருக்கிறது. இது
சிவகங்கை சீமை என்ற படத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதேபோல் எங்கள்
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் இராஜகோபுரத்தில் ஏறிப்பார்த்தால்
காளையார்கோவில் காளீஸ்வரரின் இராஜகோபுரம் தெரியும். இது அந்தக்கால கட்டிடக்
கலைக்கு சான்றாகும். இப்போது தெரியுமா என்று கேட்டால் ஏறிப் பார்த்தால் தெரியலாம்...
ஆனால் இப்போது எல்லாரையும் ஏற விடுவதில்லை. சிறுவயதில் கண்டதேவி கோவில்
கோபுரத்தில் ஏறி இருக்கிறோம். கல்லூரியில் படிக்கும் போது என்.எஸ்.எஸ் பணிக்காக
காளையார்கோவில் சென்றபோது பாதி வரை ஏறியதாகவும் அதற்குள் ஆசிரியர் சத்தமிட்டு
இறங்கி வரச் சொன்னதாகவும் நண்பர்கள் சொன்னார்கள்.
இனிக் கொஞ்சம் கோவிலுடன் சம்பந்தப்பட்ட வீர வரலாற்றையும்
பார்போமே... வெள்ளையரைப் பார்த்து 'யாரைக்
கேட்கிறாய் வரி..'
என கட்டப்பொம்மன் சொல்வதற்கு முன்னர் 'வரி என்று கேட்டால் வாய் கிழிக்கப்படும்...' என்று சொன்னவர்தான் சிவகங்கை சீமையின் மன்னர் முத்து
வடுகநாத சேதுபதி,
அவரின் மனைவிதான் ஜான்சிராணிக்கு முன்னரே வெள்ளையரை
எதிர்த்து முதல் குரல் கொடுத்த வீரப்பெண்மணி ராணி வேலு நாச்சியார். இவர்களின்
படைத் தளபதிகளாய் இருந்து முத்துவடுகருக்குப் பிறகு ராணி வேலுநாச்சியாரின்
ஆட்சியில் அவருக்கு உறுதுணையாய் இருந்து வெள்ளையரை ஆட்டம் காண வைத்தவர்கள்தான் வீரம்
செறிந்த மருது சகோதரர்கள்.
(மன்னர் முத்து வடுகநாத சேதுபதி மற்றும் ராணி கௌரி நாச்சியார் அடக்கம் செய்யப்பட்ட இடம்) |
காளீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது முத்துவடுகரும்
அவரது இரண்டாவது மனைவி கெளரி நாச்சியாரும் ஆங்கிலேயரால் சுற்றி
வளைக்கப்படுகிறார்கள். அஞ்சி ஒளியாமல் ஆக்ரோஷமாய் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட முத்து வடுகரை வெள்ளையர் தளபதி பான்சோர்
என்பவன் ஒளிந்திருந்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட. அதைப் பார்த்த ராணி கௌரி நாச்சியார் மன்னரைக் காக்கும் விதமாக குறுக்கே பாய குண்டு அவர் மீது பாய்ந்து மண்ணில் சாய்க்க, அடுத்த குண்டில் மன்னரையும் மண்ணில் சாய்த்து விடுகிறான். செம்மண் பூமியான சிவகங்கை
சீமை அவர்கள் இருவரின் ரத்தத்தால் இன்னும் சிவப்பானது என்கிறது வரலாறு.
அதேபோல் வெள்ளையரின் சூழ்ச்சியில் சிக்குண்டு தாங்கள்
உயிரோடு இருந்தால்தான் போராட்டத்தில் வெல்ல முடியும் என சிவகங்கை காடுகளில் (அப்போது
மிகப்பெரிய அளவில் காடு பறந்து விரிந்து கிடந்திருக்கிறது) மருதிருவரும் தலைமறைவு
வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வெளியில் வராவிட்டால் காளையார்கோவில்
கோபுரத்தை தகர்ப்போம் என ஆங்கிலேயர்கள் மிரட்ட,
எங்கள் உயிரை இழப்போமே ஒழிய, எங்கள் கோவிலை ஒருபோதும் இடிக்க விடமாட்டோம் என வெளியில் வந்து சரணடைந்தார்களாம்.
ஆங்கிலேயர்கள் 1801ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி மருதிருவரையும் தூக்கிலிட்டு இருக்கிறார்கள். பெரிய மருதுவை
தூக்கிலிட்ட போது பலமுறை கயிறு அறுந்தாகச் சொல்கிறார்கள். வேகமும் விவேகமும்
நிறைந்த சின்ன மருதுவோ 'என்னை தூக்கிலிட நீ யார்..? எனக்கு நானே இட்டுக் கொள்கிறேன்...' எனச் சொல்லி தனக்குத்தானே தூக்கிட்டுக்
கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இறந்தபின் தங்களை காளீஸ்வரர் சன்னதிக்கு நேரே புதைக்க வேண்டும் என்ற அவர்களின் இறுதி
ஆசையின்படி தலையை மட்டும் வெட்டி எடுத்து வந்து சின்னக் கோபுரத்திற்கு நேர் எதிரே
புதைத்த வெள்ளையர்,
உடம்பை திருப்பத்தூரில் புதைத்தார்களாம்.
காளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் கொல்லங்குடி
வெட்டுடைய காளி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு காளியாக வீற்றிருப்பவர்
ராணி வேலு நாச்சியாரை ஆங்கிலப் படையிடமிருந்து காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த
உடையாள் என்ற வீரப்பெண்மணிதான்... தன்னைக் காக்க தன்னுயிரைக் கொடுத்த உடையாளின்
பெயரில் பெண்கள் படையை அமைத்திருந்தார் வேலு நாச்சியார். ராணியைக் காப்பதற்காக இரு
துண்டுகளாக வெட்டுப்பட்ட உடையாளை வெட்டு உடைய காளியாக அந்தப் பகுதி மக்கள் வணங்க
ஆரம்பித்தனர். கோவில் இருக்கும் கொல்லங்குடி ஆயுதங்கள் செய்யும் இடமாக, கொல்லர்கள்
குடியிருந்த இடமாக இருந்ததால் கொல்லர்குடி என்று அழைக்கப்பட்டு பின்னாளில்
கொல்லங்குடி ஆகியிருக்கிறது.
(மருது சகோதரர்கள்) |
மேலும் மறவர்படை தங்க வைக்கப்பட்டிருந்த இடம்தான் காளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் மறவர்
மங்களம் (இப்போது மறவமங்களம்) என்ற ஊர். வெள்ளையருக்கு எதிரான போரில் இந்த ஊரில் இருந்த வீரர்கள்
நிறையப் பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களின் நினைவாக இந்த ஊரில் ஒரு ஊரணி
வெட்டப்பட்டிருக்கிறது. அந்த ஊரணிக்குப் பெயர் 'குழு மாண்ட ஊரணி' என்பதாகும்.
இன்றும் அந்த ஊரணி வரலாற்றின் சாட்சியாக மறவமங்களத்தில் இருக்கிறது.
இதேபோல் கொல்லங்குடிக்கு அருகில் இருக்கும் ஊர் குறுக்கத்தி, காளையார் கோவிலுக்கு
மருது சகோதரர்கள் புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்தியபோது தேர் ஓடவில்லையாம். எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லை என்றபோது என்ன
பிரச்சினை இதை எப்படி சரி செய்வது என்று மருது சகோதரர்கள் ஆலோசனை செய்த நேரத்தில் கொல்லங்குடி
காட்டுக்குள்ளே இருக்கும் குறுக்கத்தி கண்மாயில் வீரமுத்து ஆனந்தசாமி என்ற சித்தர்
இருக்கிறார் என்றும் அவர் வந்தால் சரி செய்வார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உடனே அவரை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் அழைத்து வந்த சித்தர் என்பவர் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இருக்கும் மனிதர்தான், அந்தச் சித்தரும் தேர்ச்
சக்கரத்தில் இருந்த பிரச்சினையை கண்டுபிடித்து நீக்கி, அங்கு ஒரு கவியும் பாடியிருக்கிறார். அதன் பின்னரே தேர்
ஓடியிருக்கிறது.
ஓடாமல் நின்ற தேர் ஓடிய மகிழ்ச்சியில் பெரியமருது என்ன வேண்டும் கேள் என்று சித்தரிடம் கேட்டதற்கு இப்போது நாங்கள் இருக்கும் குறுக்கத்தி கண்மாய்ப் பகுதியை எனக்கு
எழுதித் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். அப்படியே எழுதிக் கொடுக்க, குறுக்கத்தி கிராமம் உருவாகியிருக்கிறது. அதன் பின்னர் சில காலம் வாழ்ந்த அந்த
சித்தர் தம் மக்களிடம் உருவ வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு ஜீவசமாதி
அடைந்திருக்கிறார். அதனால் இன்று வரை அந்தக் கிராமத்தில் எந்தக் கோவிலும் இல்லை என்பதை
அந்தக் கிராமத்தில்... அந்த சித்தரின் பரம்பரையில் பிறந்த... எனக்கு மிகவும் தெரிந்த அண்ணன் ஒருவர் சொன்ன போது நம்
மாவட்டத்தில் இப்படி ஒரு கிராமமா என்று ஆச்சர்யமாக இருந்தது. அது என்ன குறுக்கத்தி
என்றால் குறுக்கத்தி என்பது ஒருவகைப் பூவாம்... சங்க காலத்தில்
இருந்திருக்கிறது... இந்தப் பூ குறித்து புறநானூற்றில் பாடல் இருப்பதாகவும் அவர்
சொன்னார்.
இப்படி அரண்மனைச் சிறுவயல், தேவகோட்டையில் இருக்கும் சங்கரபதிக்கோட்டை என இன்னும் நிறைய ஊர்கள் இந்த வரலாற்றோடு
தொடர்பில் இருந்திருக்கின்றன. மற்ற வரலாறுகள் பலவும் மக்களிடம் கொண்டு செல்லப்பட்ட
அளவுக்கு இந்த வீரவரலாறு கொண்டு செல்லப்படாததன் காரணம் தெரியவில்லை. இப்போதுதான்
பலர் வேலுநாச்சியார் குறித்தும் மருது சகோதரர்கள் குறித்தும் நிறைய எழுத
ஆரம்பித்திருக்கிறார்கள். வரலாற்றைப் பேசினால் இன்னும் போய்க் கொண்டே இருக்கும்
அப்புறம் இது ஆன்மீகப் பதிவாக அல்லாமல் வரலாற்றுப் பதிவாக மாறிவிடும்.
முத்து வடுகநாத சேதுபதியும் மருது சகோதரர்களுமே இந்தக்
கோவிலை செப்பனிட்டுக் காத்தார்கள் என்றும் மருது சகோதரர்கள்தான் இரண்டு
கோபுரங்களையும் கட்டியவர்கள் என்றும் ஆரியர்களின் வரவுக்குப் பின்னர் பல
கோவில்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்பட்டன என்றும் அப்படித்தான் காளையார்கோவிலின்
வரலாறும் மாற்றி மாற்றிச் சொல்லப்பட்டது என்றும் கொல்லங்குடி காளியின் வரலாறு கூட
மாற்றித்தான் எழுதப்பட்டிருக்கிறது என்றும் மருதுபாண்டியர் குறித்த ஆய்வில்
இருக்கும் குறுக்கத்தியைச் சேர்ந்த அண்ணன் கூடுதல் விவரங்களோடு சொன்னார்.
எது எப்படியோ வரலாறுகள் மாற்றி மாற்றிச் சொன்னாலும்
சிவகங்கை மண்ணில் பிறந்த நாங்கள் அறிந்த வரலாற்றின்படி ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற
வீரம் செறிந்த மறவர்கள் வாழ்ந்த பூமியில் விண்ணைத் தொடும் இராஜகோபுரத்துடன்
மூன்று சிவன்களை தன்னுள்ளே வைத்து வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் வீரத்தை இன்றுவரை நமக்கெல்லாம் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது
திருக்கானாப்பேர் என்னும் காளையார்கோவில். இக்கோவில் சைவ மதத்தின் அடையாளமாக
மட்டுமில்லாமல் ஒரு வீரம் செறிந்த தமிழினத்தின் போராட்ட வரலாற்றைத் தாங்கி
உயர்ந்து நிற்கிறது. இன்றைய தமிழர்களாகிய
நாம் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க தவறி வருகிறோம்... பல சின்னங்கள் அழிவை
நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன... வீர வரலாறுகளை எல்லாம் பள்ளிக்கூட வரலாற்று
பாடங்களில் மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறோம். இனி வரும் காலங்களிலாவது பண்டைய வரலாற்றுச் சின்னங்களை
அழிவில் இருந்து காப்பாற்ற முயற்சிப்போம்.
கதை, கவிதை என்றால் என்னால் எப்படி வேண்டுமானாலும் கிறுக்க
முடியும் ஆனால் ஆன்மீகம் என்னும் போது... அதுவும் இதுவே எனது முதல் ஆன்மீகக்
கட்டுரை என்பதால் வரலாற்றுப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் இருந்தால் மன்னியுங்கள். நான் அறிந்த செய்திகளுடன்
இணையத்தில் வாசித்த செய்திகளை வைத்து ஆரம்பித்து மருதுபாண்டியர் குறித்த வரலாற்றை
மிக விரிவாக எழுதும் பொருட்டு அதற்கான முயற்சியில் இருக்கும் அண்ணனிடம் போனில் நீண்ட
நேரம் பேசி... பேசி என்பதைவிட அவரை தொந்தரவு செய்து பெற்ற செய்திகளைக் கொண்டு
என்னால் முடிந்தளவுக்கு எழுதியிருக்கிறேன். இதுவும் நண்பர் சத்யாவின்
வேண்டுகோளுக்காக எழுதியதுதான் இது. ஆனாலும் இதற்கான தேடல் எனக்கு நிறைய ஆச்சர்யங்களைக்
கொடுத்தது. இன்னும் இதுபோன்ற கோவில்கள் குறித்து அறியும் ஆர்வத்தையும்
கொடுத்ததிருக்கிறது என்பதே உண்மை.
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
-'பரிவை' சே.குமார்.
6 எண்ணங்கள்:
அடேங்கப்பா! எங்க குமாரா இதை எழுதியது என ஆச்சரியப்படும் படி தகவல்களை அள்ளித்தெளித்து இருக்கின்றீர்களேப்பா!
அருமையாய் இருப்பதோடு நிரம்ப விபரங்களும் அறிய முடிகின்றது. நீண்ட பதிவு, அதிலும் சரித்திரம் கலந்த ஆன்மீகப்பதிவிலும் உங்கள் உங்கள் எழுத்துக்கள் அசத்துவதை காணும் போது மகிழ்ச்சியாய் இருக்கின்றதுப்பா.
இன்னும் தொடர்ந்து எழுதலாம். வாய்ப்பளித்தவர்களுக்கும் என் சார்பிலும் நன்றி!
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
தமிழர் தம் வீரம் காட்டும்
அரிய தகவல்களுடன் இன்றைய பதிவு..
அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..
முக்கிய அறிவிப்பு வில்லங்கத்தார் வந்தால் சத்தமின்றி படித்துப்போக வேண்டும் இல்லையேல் யுத்தம் ஒன்று உருவாகும் டும்... டும்... டும்....
அருமை நண்பரே அழகிய விளக்கவுரைகள் நான் சில புதிய விடயங்களை அறிந்து கொண்டேன் அந்த முதல் புகைப்படம் மறவமங்களத்திலிருந்து காளையார்கோவில் நுழையுமிடத்திலிருந்து எடுக்கப்பட்டு இருக்கின்றது
மேலும் தேவகோட்டை சங்கரபதிக்கோட்டையைப்பற்றி... வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஒழிந்திருந்த விடயம் மற்றும் ஏ.வி.எம். ஸ்டூடியோ, தேவகோட்டை ரஸ்தா உருவாக்கப்பட்ட காரணங்கள்.. தேவகோட்டையில் மகாத்மா காந்தி தங்கியது.... செட்டிய வீட்டு கலாச்சாரங்கள்... சுதந்திர போராட்ட வீரர்கள் மொத்தமாக உயிர் நீத்த இடம்,, எவர்சில்வர் கம்பெனிகள்... ஊரணிகள்.... கோயில்கள்.... இதனைக் குறித்தும் எழுதி இருந்திருக்கலாம் கட்டுரை அருமை வாழ்த்துகள்
தமிழ் மணம் 3
வெட்டுப்பட்ட உடையாளை வெட்டு உடைய காளியாக அந்தப் பகுதி மக்கள் வணங்க ஆரம்பித்தனர்.//
இந்த கோவில் போய் இருக்கிறேன். அங்கு காசை வெட்டிப்போட்டுக் கொண்டு இருந்தார்கள்.
காளையார் கோவில் சிற்பங்கள் , கல் சங்கிலி தொங்குவது எல்லாம் அழகாய் இருக்கும்.
ஆன்மீக கட்டுரை பல செய்திகளை தாங்கி இருக்கிறது .
வாழ்த்துக்கள்.
இரு பதிவுகளையும் இன்றுதான் படித்தேன். ஆன்மிகக் கட்டுரை என்ற நிலையோடு சமூகம் சார்ந்த நிலையில் பல செய்திகளைத் தந்துள்ள விதம் அருமையாக உள்ளது. வேறு தளத்திற்கு மாறிவந்துவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றியது. தாங்கள் கூறியுள்ள இடங்களுக்கு நான் சென்றுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது தொடர்ந்து ஆன்மீகப்பதிவுகளையும் எழுத அழைக்கிறேன். வாழ்த்துகள்.
கருத்துரையிடுக