மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 28 ஏப்ரல், 2016

வாக்காளர் அலப்பறை...9

"என்ன வெயிலு... என்ன வெயிலு.... ஆரம்பமே அமர்களமா இருக்கு... இந்த வருசம் மழை பெய்துன்னு சந்தோஷப்பட்டா... இனி வெயில் கொன்னுடும் போலவே..." சொல்லிக் கொண்டே ஹெல்மெட்டை ஆணியில் மாட்டினான் மெஜஞ்சர் வேலை பார்க்கும் பார்த்தீபன்.

"என்னங்க இப்பத்தான் வெயில் ஆரம்பமாகுது... இப்பவே புலம்ப ஆரம்பிச்சிடீங்க..." என்றார் ஜாக்கிங் போக தயாராகிக் கொண்டிருந்த பரந்தாமன்.

"உங்களுக்கு என்னங்க... கவர்மெண்ட் ஆபீசில புராஜெக்ட்... அதுவும் அரபிப் பெண்ணுங்க அதிகம் வேலை பாக்குற இடம்ன்னு வேற சொன்னீங்க... சும்மாவே ஏசி அதிகம் வைப்பாங்க... இப்ப வெயில் ஆரம்பிக்குதுல பிரீசர்க்குள்ள உக்காந்த மாதிரி இருந்துட்டு வருவீங்க... உங்களுக்கு எங்கங்க தெரியும் வெயில்ல நாயா அலையிறவன் வாழ்க்கை..." பார்த்தீபன் அலுத்துக் கொண்டான்.


"அது உண்மைதாங்க... சுத்தமா ஏசியை குறைச்சு வைக்கமாட்டேங்கிதுங்க... இந்தா நேத்து தலைவலி... இன்னைக்கு இருமல்... வீக்கெண்டுல நாம வீக்குத்தான் போல..." சிரித்தார் பரந்தாமன்.

"அதாவது பரந்தாமன் அண்ணன் ஜெயலலிதா மாதிரி ஏசிக்குள்ள உக்காந்திருக்காரு... நீங்க இருநூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு வெயில்ல கிடந்து செத்து மடியிற வீரத் தமிழர்கள் மாதிரி நாயா வீதியில அலைஞ்சு அல்லல்படுறீங்க அப்படித்தானே..." என்றான் அவன்.

"அவனவன் படுற கஷ்டத்தைச் சொன்னா... இவரு அதுக்குள்ள அரசியல்லை வைக்கிறார் பாருங்க... நம்ம தலையெழுத்து கஷ்டப்படுறதுதான்... ஆனாலும் நம்ம மக்கள் இன்னும் ஏமாந்து சாகுறானுங்களே... கோடிக்கோடியா பதுக்கி வச்சிக்கிட்டு சொத்து மதிப்பு எழுபது கோடிங்கிறான்... நூற்றி இருபது கோடிங்கிறான்... நாம இன்னும் தெருக்கோடியிலதான் நிக்கிறோம்..." என்றபடி வேலை முடிந்து வந்து கொஞ்ச நேரம் படுத்துறங்கும் அவர் எழுந்தார்.

"ஆமா... என்னமோ நான் மட்டுந்தான் இந்த ரூமுக்குள்ள அரசியல் பேசுற மாதிரி... சூப்பர் சிங்கரை மட்டுமே பாக்குற நீங்க... முழு நேர அரசியல் பேச்சுத்தான் கேக்குறீங்க... அதுவும் அந்தப் பழக் கட்சியோட மீட்டிங் மட்டும்தான் பாக்குறீங்க... பரந்தாமன் அண்ணன் எப்பவும் மக்கழே... மக்கழே... மட்டும்தான்... இங்க பார்த்தீபன் மட்டும்தான் அரசியல் பேசுறதுமில்லை... விழுந்து விழுந்து பேச்சைக் கேக்கிறதும் இல்லை..."

"இப்ப சொன்னே பாரு மாப்ள... இது கரெக்ட்... எவன் வந்து என்ன பண்ணப் போறான்... அடிக்கிற கொள்ளையை இன்னும் கூட அடிப்பானுங்க... இதுக்கு எதுக்கு இங்க உக்காந்துக்கிட்டு நாம கத்தணும்... " என்றான் பார்த்தீபன்.

"அதுக்காக நாட்டு நடப்பை பேசாம இருக்க முடியுமா..? நடக்குற கூத்தையெல்லாம் ரசிச்சிக்கிட்டா இருக்க முடியும்..." என்றார் அவர்.

"அது சரிதான்..." சிரித்தார் பரந்தாமன்.


"விஜயகாந்த் பழைய பன்னீர் செல்வமா மாறிட்டாராம்... ஆனா நம்ம பன்னீரு... இன்னும் பழைய கஞ்சியாத்தான் இருக்கு... துணூறு வச்சி அதுமேல பொட்டு வச்சி மங்களகரமா இருக்க மனுசன்... நடந்துக்கிறதைப் பாக்கும் போது சே... காசுக்காக இப்படிக் கேவலப்பட்டு நிக்கிறாரேன்னு தோணுது..." என்றான் அவன்.

"காமராஜர் வகித்த முதல்வர் பதவியை அன்னையின் அன்பினால் ரெண்டு முறை வகித்த ஒரு மனுசன்... தமிழ்நாட்டோட முன்னாள் முதல்வர்... கார்ல போற மக்களைக் கொன்ற மகராசியைப் பார்த்ததும் கேள்விக்குறியாய் வளைந்து... நெளிந்து... ரோட்டைத் தொட்டுக் கும்பிடுறாருய்யா... என்ன கேவலம் பாருங்க... இங்கிலீஸ் நியூஸ்க்காரன் போட்டு கிழிகிழியின்னு கிழிக்கிறான்... பதவிக்காகவும் பணத்துக்காகவும் அந்த அம்மா என்னத்தை திங்கச் சொன்னாலும் திம்பானுங்க போல... கேவலப்பட்டவனுங்க..." என்றார் அவர்.

"ஆமா... இப்படி  ஒரு இனத்தோட கவுரவத்தைக் கெடுக்கிற கருமாந்திரம் பிடிச்சவனுங்களை தூக்கி வச்சி ஆடுற நம்ம பயகதான்... மரியாதை செய்யப் போன வைகோவை விடமாட்டோம்ன்னு சாதி சண்டைக்கு வித்திடுறானுங்க... அங்க ஒரு போலீஸ்காரன் சொன்னான் பாருங்க... எத்தனை வருசம் ஆனாலும் நீங்கள்லாம் திருந்தமாட்டீங்கடான்னு... அது எவ்வளவு நிதர்சனம் தெரியுமா...? அதை மறுபடி மறுபடி கேட்டுச் சிரித்தேன்..." என்றார் பரந்தாமன்.

"நம்மளால சிரிக்க மட்டும்தானே முடியும்... சிந்திக்கச் தெரிஞ்சாத்தான் எப்பவோ ரெண்டு குடும்பத்தையும் விரட்டியிருப்போம்ல்ல..." என்றார் அவர்.

"சரியாச் சொன்னீங்க... ரெண்டாயிரத்தை வாங்கிக்கிட்டு ஓட்டைப் போட்டு கோடியில சம்பாரிக்கிறதை வேடிக்கை பார்க்கிறோம்... மறத்தமிழினத்தை இன்னைக்கு மலையாளிகளும் கன்னடக்காரனுங்களும் ஆந்திரா ஆசாமிகளும் கேவலமாப் பேசிச் சிரிக்கிறானுங்க..." என்றான் பார்த்தீபன்.

"கரூர்ல பாத்தீங்களா... கோடிக் கோடியா பிடிபட்டிருக்கு... அந்த போலீஸ் அதிகாரியை கொல்லப் பாக்கிறானுங்க... அப்புறம் எப்படி இவர்கள் மக்களாட்சி கொடுப்பார்கள்... நேர்மையான அதிகாரிகளை எல்லாம் கொன்னுட்டு இவனுங்க தனி அரசாட்சி நடத்தப் போறானுங்க... அன்னைக்கு இந்தியா ஆங்கிலேயனுக்கிட்ட அடிமைப்பட்டுக் கிடந்துச்சு... இன்னைக்கு தமிழன் வந்தேறிகள்கிட்ட அடிமைப்பட்டுக் கிடக்கான்..." என்றார் அவர்.

"தமிழன் அடிமைப்பட்டுக் கிடக்கலைங்க... தானே வழியப் போயி அடிமை ஆகிக்கிறான்... சுயமா யோசிக்கத் தெரியாதா என்ன... இதுவரைக்கும் இல்லாத மாற்றத்தை நட்சத்திரக் கிரிக்கெட்டில் நம்மால கொடுக்க முடிந்ததுதானே... அதேபோல இந்தத் தேர்தல்லயும் கொடுக்கணும்... கொடுப்போம்ன்னு ஒவ்வொரு தமிழனும் நினைச்சாலே போதும்... கூனிக்குறுகி கெடக்க எல்லாப் பயலையும் குறுக்கெலும்ப உடைச்சி நிரந்தரமாக் கூன வச்சிடலாம்..." என்றான் அவன்.


"ஆமா... செய்யணும்... செய்தால் நல்லாயிருக்கும்... நட்சத்திர கிரிக்கெட் போட்டி வெற்றி... மக்களை நாங்க வாங்கன்னு அழைக்கவில்லை... அப்படியிருந்தும் கூட்டம் வந்திருச்சு... கிடைச்ச பணத்துல கடனை எல்லாம் அடைச்சிட்டோம்...  படம் எடுத்து அதுல வர்ற லாபத்துல கட்டடம் கட்டப் போறோம்... அஜீத் கூட எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு நேத்து விஷால் பேசுறான்ய்யா..." என்றார் பரந்தாமன்.

"மக்கள் வரலை... ஆப்பு வச்சிட்டானுங்க.. நட்சத்திர கலை நிகழ்ச்சி வச்சாலும் வருவானுங்களான்னு தெரியாது... உள்ளூருலயே விலை போகல... வெளிநாட்டுல எப்படி விலை போகும்ன்னு யோசனை... அதான் படம் நடிக்கப் போறோம்ன்னு சொல்றானுங்க... அதுக்கும் ஆப்பு வச்சிட்டா... விஷால் ஓவரா ஆடுறான்..." என்றான் பார்த்தீபன்.

"அடுத்து அவனையும் முதல்வராக்குவோம்ன்னு நப்பாசைதான்..." என்றான் அவன்.

"சேரன் சொன்ன மாதிரி வந்தமா... நடிச்சமா... சம்பாரிச்சோமா... ஊரைப் பாக்க போனமான்னு இருக்கணும்... இல்லேன்னா விரட்டிறமாட்டோம்." சிரித்தார் அவர்.

"அவன் பேச்சு எதுக்கு... அவனொரு செல்லாக்காசு.... பெரியவரு எனக்கு ஓய்வு கொடுங்கன்னு சொல்றாரு... எதுக்கு அப்புறம் அலைய விடணும்... எல்லாருமாச் சேர்ந்து நீங்க ஓய்வு எடுங்கய்யான்னு சொல்லிட வேண்டியதுதானே..." என்றார் பரந்தாமன்.

"அதுவாவது ஓய்வு எடுக்கிறதாவது... அதெல்லாம் பதவி ஆசையில உயிரை வச்சிக்கிட்டு திரியுது... மக்களுக்காக உழைக்கத்தான் இப்படி அலையிறேன்னு வாய் கூசாம பொய் சொல்லுது... இதை நம்பி இந்த உபிக்கள் முகநூல்ல எல்லாம் பண்ற அட்டூழியம் இருக்கே... தாங்க முடியலை..." என்றார் அவர்.

"திராவிட ஆட்சிகள் முடியட்டும்... தமிழர்களுக்கு விடியட்டும்ன்னு முகநூல்ல போட்டு வச்சேன்... பத்து லைக்கு வராத எனக்கு ஆயிரக் கணக்குல லைக் வந்திருக்குய்யா... எப்படியும் மாற்றம் வரும்..." என்றான் அவன்.


"மாற்றம் வரணும்ன்னுதான் நாங்க வித்தியாசமா இந்தத் தேர்தலை கையாளுறோம்..." சிரித்தபடி சொன்னார் அவர்.

"ஆமா... ஆமா... மே 19-ம் தேதி ரிசல்ட் வந்ததும் உங்க சின்ன டாக்டரைத்தான் ஆளுனர்  பதவியேற்க அழைப்பாராமே... பெரிய டாக்டர் ஆரூடம் சொல்லியிருக்காரு... டிக்கெட் புக் பண்ணி வையுங்க,,, பதவி ஏற்ப்புக்கு போகணுமில்ல..." அவரைச் சீண்டினான் அவன்.

"தேர் கிளம்பின இடத்துல வந்து நிலைக்குத்துற மாதிரி எங்க சுத்தியும் அங்க வந்திருவாரு.... இனி பேசினா வீணாவுல சண்டை வரும்... " என்றபடி அவர் எழ, பரந்தாமன் ஜாக்கிங் கிளம்ப, பார்த்தீபன் குளிக்கச் செல்ல, அவன் சிரித்தபடி ஸ்கைப்பை ஆன் செய்தான்.

நன்றி : படங்கள் இணையத்திலிருந்து...
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

இவர்கள் எல்லாம் சேவை செய்யவா அரசியலுக்கு வருகிறார்கள்? ஒருவர் திருவாரூரிலிருந்து திருட்டு ரயிலேறி பிழைக்க வந்தவர். இன்னொருவர் நடித்துச் சம்பாதித்த பணம் எல்லாம் செலவழிந்து ஓட்டாண்டியாய் ஆனவர். அன்றைய கட்சித் தலைவர் உதவியால் மேலே வந்தவர். இன்று அவர்களிடம் கோடி கோடியாய் பணம்! வெறுப்பாய் இருக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று?
தம +1

KILLERGEE Devakottai சொன்னது…

அயல் நாட்டில் வாழும் நம் போன்ற தமிழர்களுக்குத்தான் தெரியும் தமிழனை பிற மாநிலத்தின் எப்படி பேசுகின்றான் என்பது .... வேதனையாகத்தான் இருக்கின்றது கோபமாகத்தான் இருக்கின்றது அரசியல்வாதிகள் மீது அல்ல மக்கள் மீதுதான்...

Yarlpavanan சொன்னது…

கருத்தாடல் அழகாயிருக்கு
காலம் பதில் சொல்லும்

தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
http://tebooks.friendhood.net/t1-topic

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நல்ல விவாதம். வித்தியாசமான சிந்தனை.

Ajai Sunilkar Joseph சொன்னது…

இவர்கள் சேவை செய்ய வரவில்லை
மக்களின் பணங்களை சேவ் செய்யவே
வருகிறார்கள்....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அரசியலை நினைத்தால் கேவலமாகத்தான் இருக்கிறது. பதிவ ஆசை.என்ன செய்யவும் தயாராக இருக்கிறாகள். மக்கள் திருந்தினால்தான் உண்டு