ஒரு மாத விடுமுறையில் ஊருக்குப் போய்விட்டு திரும்பிய ராகேஷிடம் "என்னங்க தேர்தல் பிரச்சாரமெல்லாம் ஊரில் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு... இந்த முறை யாருக்கு வாய்ப்பு இருக்கு" என்றான் அவன்.
"இந்தத் தடவை கொஞ்சம் வித்தியாசமான தேர்தலா இருக்கும்ன்னு தோணுதுங்க... யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. கூட்டணி ஆட்சிதான் அமையும் போல... இந்தாங்க சுவீட் எடுத்துக்கங்க..." என்று சுவீட் பாக்ஸை நீட்டியபடி சொன்னான் கண்ணன்.
"ம்... அப்ப அம்மா வந்துருவேன்... ஐயா வந்துருவேன்... அண்ணே வந்துருவேன்... டாக்டரு வந்துருவேன்னு சொல்றதெல்லாம் பம்மாத்துத்தானா..." சிரித்தான் அவன்.
(இப்படி பேசிப் பேசியே மக்களை ஏமாத்தி வாழ்ந்து முடிச்சிட்டீங்க போங்க) |
"அட ஏன் நீங்க வேற நட்சத்திர கிரிக்கெட்டுக்கு நம்மாளுங்க வச்ச ஆப்புல இப்ப அரசியல்வாதிகளுக்கு கூட உதறல் எடுத்திருக்கு... எங்க நமக்கு ஆப்பு வச்சிருவானுங்களோன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டானுங்க..."
"அட ஏம்ப்பா நீ வேற பணத்தை வாங்கிக்கிட்டு பக்காவா ஓட்டப் போட்டுடுவானுங்க நம்மாளுங்க... வேணுமின்னா பாரேன் பணம்தான் பேசப் போகுது..." என்றபடி எழுத்தார் முத்துலிங்கம்.
"இந்த தடவை அப்படி நடக்காதுண்ணே... வேணுமின்னா பாருங்க மாற்றம் வரும்... ஆமா உங்க தொகுதியில முன்னாள் எம்.எல்.ஏ. நிக்கிறாரு போல..." என்றான் ராகேஷ்.
"ஆமா திருவாடனைத் தொகுதியா இருக்கும் போது தொடர்ந்து எம்.எல்.ஏ. பல பிரச்சினைகள்ல அவர் பேர் இருந்தாலும் வெளியில ரொம்ப அடிபடாது.... தொகுதியில பல கிராமங்களுக்கு போனதே இல்லை.... எங்க ஊருப் பக்கமெல்லாம் வந்ததேயில்லை... இருந்தும் பிரச்சினையில்லாத மனுசன்னு பேரு... போன தடவை காரைக்குடி தொகுதியானதும் நிக்காமல் ஒதுங்கிட்டாரு... ஆனா இந்த முறை நிக்கிறாரு... பார்ப்போம்... தொடர் வெற்றி தொடருதா... இல்லை முற்றுப்புள்ளி ஆகுதான்னு..."
"ம்... நிறைய இடங்களில் வலுவான போட்டியிருக்கு... அதனால மாற்றம் வரும்ன்னு நினைக்கிறேன்..."
"அதான் சொல்றேன்... மாற்றம் வரணும்... நான் எதாவது சொன்னா இவரு... அதுக்கு எதிர்த்துப் பேசுவாரு... இவரு விஜயகாந்துக்கு சப்போர்ட்..." என்றபடி ஆஜரானார் அவர்.
"மாற்றம் வரணும்தாங்க... ஆனா மாற்றம் முன்னேற்றம்ன்னு சொல்லிக்கிட்டு உங்காளு சாதிக்காரன் அதிகம் இருக்க இடத்துல பாதுகாப்பா நின்னுக்கிட்டாரு... தென் மாவட்டத்துல நிக்கலாமேன்னு ஒருத்தர் கேட்டதுக்கு பதில் சொல்லாம மழுப்பலா சிரிச்சிட்டு வந்திருக்காரு... அப்புறம் எப்படி மாற்றம்... முன்னேற்றம்..." என்றான் அவன்.
"அவரு மட்டும்தான் பாதுகாப்பு பாக்குறாராக்கும்... ஏன் கலைஞர் பாக்கலையா... திருமா பாக்கலையா... விஜயகாந்த் கூட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு இடம் மாறுறாரே... அது கூட பாதுகாப்புத்தான்.... போன முறை ஜெயிச்ச தொகுதியில இந்த முறை ஓட்டுக் கிடைக்காதுன்னு அவருக்குத் தெரியும்..." நக்கலாய்ச் சொன்னார் அவர்.
"விஜயகாந்த் மட்டும் தொகுதி மாறி மாறி நிக்கலைங்க... எல்லாருந்தான் நிக்கிறாங்க... விஜயகாந்த் டெபாசிட் வாங்க முடியாதுன்னு சொல்லிக்கிட்டு நீங்க ஏன் வேட்பாளரை மாத்துறீங்க... இந்தத் தடவை மாதிரி வேட்பாளர் மாற்றம் வேறு எப்பவும் இல்லை..."
(எதைச் சொன்னாலும் கேக்குற மக்கள் இப்ப இல்லைங்கிறதை மனசுல வச்சுக்கங்க) |
"அட ஏம்ப்பா நீ வேற... அம்மா மாதிரி விஜயகாந்த் நடக்குறாரு... விஜயகாந்த் மாதிரி அன்புமணி.... சீமானெல்லாம் பேசுறாங்க... அம்மாவை கேவலமாப் பேசுற ஸ்டாலின்... ஸ்டாலினைப் பேசுற அம்மா இப்படி அரசியல் சாக்கடை காமெடியாப் போய்க்கிட்டு இருக்கு... எல்லாம் பதவி படுத்தும் பாடு..."
"பதவிக்காகத்தானே துரை முருகன் கண்ணீர் சிந்துறாரு... கோடியில கார் வச்சிருக்காரு... எதுக்கு அழுகுறாருன்னு பேஸ்புக்ல போட்டு கிழிக்கிறானுங்க... வயதான காலத்துல முதுகுவலியோட உங்களை நாடி வாறேன்னு கலைஞர் பேசுறாரு... யாரு அவரை தேர்தல்ல நிக்கச் சொன்னா... மத்தவங்களுக்கு எல்லாம் வயசாயிருச்சு... ஆனா இவருக்கு ஆகலை... " சிரித்தான் ராகேஷ்.
"அட ஏன் கேக்குறே... பேஸ்புக்ல ஒருத்தர் திமுகவோட தேர்தல் அறிக்கையோட ஒவ்வொரு பாயிண்டையும் ஒவ்வொருவாரம் விளக்கமா எழுதினாலே போதுமாம்... அவ்வளவு நல்ல அறிக்கையாம்... 190 இடங்களைப் பிடிப்பாங்களாம்.... அதைவிட கொடுமை என்னன்னா ஜெயலலிதாவை எதிர்த்து அவங்க நிப்பாட்டியிருக்கிற சிம்லாவை ஆதரிக்காம திருமா வேட்பாளரை அறிவிச்சி மக்களுக்கு துரோகம் பண்ணிட்டார் துரோகியின்னு இன்னைக்கு ரெண்டு பக்கத்துக்கு கட்டுரை... அதுக்கு ஆஹா.. ஓஹோன்னு கருத்துக்கள் வேற.... ஏன் திருமா நிக்கிற இடத்துல இவங்க ஆள் நிப்பாட்டாம இருக்காங்களா... வாரிசு அரசியல்ங்கிறது எல்லாக் கட்சியிலயும் இருக்கு... ஆனா திமுக மட்டுந்தான் புதியவர்களை நிப்பாட்டுறேன்னு சொல்லி முன்னாள் எம்.எல்.ஏ. குடும்பத்துல ஒரு ஆளை நிப்பாட்டி தமிழகம் எங்கும் வாரிசு அரசியலாக்கி வைச்சிருக்கானுங்க... இவனுக ஜெயிக்கவே கூடாது... ஜெயிச்சா தமிழகத்தை கூறு போட்டு வித்துருவானுங்க..." பொரிந்து தள்ளினார் முத்துலிங்கம்.
"நீங்க சொல்றதுதான் சரிதான்... எல்லாக் கட்சிகளும் அப்படித்தான் இருக்கு... நம்ம சனம் பிரியாணிக்காவும் இருநூறு ரூபாய்க்காகவும் போயி சாவுது பாத்தீங்களா... நாம திருந்தாத வரைக்கும் எல்லாப் பயலும் நம்மளை முட்டாளாக்கியே ஜெயிக்கப் பாப்பானுங்க..." என்றான் அவன்,
"ஆமால்ல... இந்தம்மா மத்தியானம் மூணு மணிக்கு வர்றதுக்கு... பனிரெண்டு மணியில இருந்து மொட்ட வெயில்ல போட்டுக் கொல்றானுங்க... பாவம் பிரியாணிக்கு ஆசைப்பட்டு உசிரை விட்டா... தேர்தல் முடிந்ததும் நிதி உதவி செய்யப்படும்ன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கு... மொதல்ல இந்தப் பொம்பளையை மத்தியானம் கூட்டம் போடாதேன்னு சொல்லணும்... இல்லேன்னா பத்து ஏர் கூலர் வச்சி சொகுசா உக்காந்து பேசுறதை வெயில்ல இறக்கி விடணும்... அப்பத்தான் அதுக்கெல்லாம் மக்களோட வேதனை புரியும்..." என்றார் அவர்.
"ஆமா புரிஞ்சிட்டாலும்... நாம் ஏய்யா போகணும்... பணமும் வேண்டாம்.. மயிரும் வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருக்க வேண்டியதுதானே...." கோபத்தில் வார்த்தைகளை விட்டார் முத்துலிங்கம்.
(டாஸ்மாக் சரக்கு வண்டியிலதான் பணம் போகுதாமே... உண்மையா?) |
"சரி... சரி... எதுக்கு கோபம்? விடுங்க...விடுங்க... இந்த சினிமாக்காரனுங்க பாருங்க... கிரிக்கெட்டுல ஏற்பட்ட நஷ்டத்துக்கு தமிழக மக்கள் பொறுப்பேற்கணுமின்னு விஷாலும்... இதுக்கு மக்கள்தான் வேதனைப்படணுமின்னு தனுஷூம் பேசியிருக்கானுங்க பாத்தீங்களா..." பேச்சை மாத்தினான் ராகேஷ்.
"இதுக்கு எதுக்குய்யா நம்ம வருத்தப்படணும்... அவனுக்கு மாமனாரு போயிருந்தும் கூட்டம் வரலைன்னு ஆதங்கம்... அவனே போகலை.... பேசுறான் பாரு பேச்சு... தென்னிந்திய நடிகர் சங்கம்ன்னு வச்சிருக்கானுங்கதானே... போயி ஆந்திரா, கேரளான்னு அங்க நடத்த வேண்டியதுதானே.... எல்லாப் பயலுக்கும் தமிழன்னா இளிச்சவாயன்னு நெனப்பு... மொத்தமா ஆப்பு வைக்கணும்... இந்த விஷால்... வெஷம்... இவந்தான் சொன்னான் மக்கள் பிரச்சினைக்கு நாங்க போறாட மாட்டோம்ன்னு... இப்ப இவனுக கட்டிடம் கட்ட நாம பணம் கொடுக்கணுமாம்... இல்லேன்னா நஷ்டத்துக்குப் பொறுப்பேற்கணுமாம்... இந்த விஷச்செடியை முதல்ல அழிக்கணும்... இல்லேன்னா இது நாளைக்கு முதல்வராகணும்ன்னு ஆசைப்படும்... நாமளும் வந்தாரை வாழ வைப்போம்... எல்லாத்துக்கும் மொத்தத்துல மாற்றம் கொண்டு வரணும்... அது இந்தத் தேர்தல்ல ஆரம்பிக்கணும்... தீச்சட்டி எடுக்கிறதையும் பாலாபிஷேகம் பண்றதையும் நிப்பாட்டிட்டு ஆக்கப் பூர்வமா இளைஞர்கள் செயல்படணும்... அப்படி செயல்பட்டா,,, நல்லதொரு தமிழகத்தை உருவாக்க முடியும்..." வேகமாகப் பேசினார் முத்துலிங்கம்.
(நடிகைகள் விளையாடுவாங்கன்னு சொல்லியும் கவுத்துட்டானுங்களே...) |
"ஆமா விஜயகாந்த் என்ன செஞ்சாலும் அதை செய்தி ஆக்கிற டிவி சேனலெல்லாம் இந்த அம்மாவால சாகுறதைக் காட்டமாட்டேங்கிதே... முதல்ல அவனுக திருந்தட்டும்... அது நரகல்தான்னு தெரிஞ்சும் அதுக்கு பின்னால சந்தனத்தோட காத்திக்கிட்டு இருக்கதை விட்டுட்டு... அந்த நரகலை அள்ளி வீசுற வழி என்னங்கிறதை அவனுக சொன்னா கண்டிப்பாக மாற்றம் வரும்... பார்க்கலாம்... " என்றபடி அவன் வெளியில் கிளம்ப ஆயத்தமானான்.
படங்களுக்கு நன்றி இணையம்...
படங்களுக்கு நன்றி இணையம்...
-'பரிவை' சே.குமார்.
4 எண்ணங்கள்:
ரசித்தேன். இயல்பான உரையாடல். இந்த முறை குழப்பமான ரிசல்ட் வரப் போகிறது போலும்!
சரியான கருத்துகளுடனான அலசல் நண்பரே... யதார்த்தமான உண்மைகள்...
அலப்பறை ரசித்தோம். சந்திக்கும் போது பேசுவது போன்ற நடை..குமார்.
கீதா: கிரிக்கெட்டைப் புறக்கணித்தது போல இந்த தேர்தல்லயும் மக்கள் சிந்திச்சு வாக்களிக்கணும் ...வாக்களிப்பாங்கனு நம்பிக்கை இருக்கு..ஆனால் இம்முறை தேர்தலுக்குப் பின் காமெடியான காட்சிகள் அரங்கேற வாய்புள்ளது போல் தோன்றுகின்றது. தொங்கும் நிலைமையாகும் ஆதலால்...பார்ப்போம்..
ஊரில் உள்ளவர்களிடம் பேசுவது போல மிக இயல்பாக இருக்கிறது உங்கள் அலப்பறை. பாராட்டுக்கள் இந்த மாதிரியான உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து விரும்பி படிக்கிறேன் நேரம் இல்லாததால் கருத்துக்கள் இடுவதில்லை.. முடிந்த வரையில் இட முயற்சிக்கிறேன்
கருத்துரையிடுக