அறைக்குள் நுழையும் போதே அவர் மிகுந்த சந்தோஷத்தோடு வந்தார். அவரின் சந்தோஷத்திற்கான காரணம் என்ன என்பதை அவன் அறிந்து வைத்திருந்ததால் ஒன்றும் பேசாமல் படுத்திருந்தான்.
"இந்தாங்க ஸ்வீட் எடுங்க... கொண்டாடுங்க..." என அறையில் இருந்த எல்லாருக்கும் கொடுத்தார். அவனிடமும் நீட்ட, 'இல்லங்க அப்புறம் எடுத்துக்கிறேன்...' என்றபடி திரும்பிப் படுத்தான்.
"என்ன ஸ்வீட்டெல்லாம்...?" கையைத் துடைத்தபடி கேட்டார் அன்வர் பாய்.
"சந்திரகுமார் தந்திரகுமாரா மாறிட்டாருல்ல... அதான் ரொம்ப சந்தோஷமா சுவிட் வாங்கிக்கிட்டு வந்திருக்கிறார்..." சொல்லிச் சிரித்தான் காரைக்குடி கணபதி.
(போன தேர்தல் வரை காந்தி நோட்டா வாங்கிட்டு இப்ப பேச்சைப் பாரு)
"ஏங்க அது நான் சொல்லிக்கிட்டு இருந்ததுதானேங்க... இன்னும் போகப் போக பாருங்க தேமுதிகவே இல்லாமப் போயிடும்... அதுக்காக சுவிட் இல்லைங்க... அவனுக கோடிகளை வாங்கிட்டு கேடிகளாகுறானுங்க... நாம ஸ்விட் எடு கொண்டாடுன்னு கொண்டாட என்ன இருக்கு... ஆபீஸ்ல போஸ்டிங் மாத்தியிருக்கானுங்க... ஒரு ஆயிரம் திர்ஹாம் கூடக் கிடைக்கும்... அதான்..."
"ஓ... சந்தோஷங்க.... " என்றார் அன்வர் பாய்.
"பாத்தியளா... கேப்டனாம்... கிங்காம்... கிங்மேக்கராம்... இந்த வைகோ வேற இந்தாளைப் பார்த்ததும் புதுசா கல்யாணமானவன் மாதிரி என்ன பண்றோம்ன்னு தெரியாம கத்திக்கிட்டு இருந்தாரு... இப்ப என்னாச்சு கட்டுமரம் களை எடுக்க ஆரம்பிச்சிருச்சு...."
"இதுல கொடுமை என்னன்னா கட்சித் தலைமையை இந்தக் கட்சியில சேரு... அதுதான் ஜெயிக்கும் அப்படின்னு சொல்லி 24 மணி நேர கெடு விதிச்சானுங்க பாருங்க அங்கதான் நிக்கிறாரு கலைஞரு... ஹா...ஹா.... காசு எப்படியெல்லாம் பேச வைக்குது பாத்தியளா?" என்றார் அறை நிர்வாகி.
"விஜயகாந்துக்கு இது தேவைதாங்க.... இப்ப கட்சி அவன் கையில இல்லை... பொண்டாட்டியும் மச்சினனும்தான் எல்லாமே... பணம் பாக்குறதுக்காக அவனை பயன்படுத்துறாங்கன்னு தங்கர்பச்சனே சொல்லலையா...?" என்றார் அவர்.
அவன் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டான். "என்ன கேப்டனுக்கு சப்போர்ட் பண்ணுறவரு கம்முனு கெடக்காரு... முரசு தெரிச்சிப் போச்சுன்னா..." என்று சிரித்தார்.
"அட ஏங்க அவரை இழுக்கிறீங்க... அப்புறம் அவரு எதாச்சும் பேசுவாரு... தேவையா... சந்தோஷமான செய்தியோட வந்திருக்கீங்க... ஊருக்கு போன் பண்ணுங்க... அதை விட்டுட்டு வீணாப்போன அரசியல் எதுக்குங்க?" என்றார் அன்வர் பாய்.
"பாருங்களேன் இந்த வைகோவை... என்ன பேசுறோம்ன்னு இல்லாம கலைஞரை சாதியை வைச்சிப் பேசி... திருமாவெல்லாம் எதிர்க்க ஆரம்பிச்சிட்டாப்ல... தீவிர அரசியல்வாதிக்கு நாவடக்கம் இருக்கணும்... என்ன பேசுறோம்ன்னு யோசிச்சிப் பேசணும்... எதை வேணுமின்னாலும் பேசலாமா..?" என்றபடி கைலிக்கு மாறினார் அவர்.
"அதான் ரொம்ப வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுட்டாரே..." என்றான் கணபதி. இவன் மதிமுக விசுவாசி.
"மன்னிப்பு கேட்டா முடிஞ்சி போச்சா...? இப்படி பேசுறவனுக எல்லாம் சேர்ந்து ஆட்சி அமைச்சா தமிழ்நாடு விளங்குமா?"
"வேற என்னங்க பண்ணனுங்கிறீங்க... எவ்வளவு வருந்தி மன்னிப்புக் கேட்டிருக்கிறார்... இன்னைக்கு எவன் எவனைப் பேசலை சொல்லுங்க... ஏன் அதே கலைஞர் காமரைஜரை கருவாட்டிக்காரி பெத்தவர்ன்னு சொல்லி இன்னும் என்னென்னமோ பேசலையா?" என்றார் அன்வர் பாய்.
"அது ஏங்க நேத்து ஒரு வீடியோ பார்த்தேன்... அதிமுக பிரச்சார மேடையில் ஒரு பொம்பளை பேசுது... கருணாநிதையும் ஸ்டாலினையும் என்ன பேசுறதுன்னு இல்லை... அதை ரசிச்சிக்கிட்டு கழக கண்மணிகள் உக்காந்து இருக்காங்க... அழகிரிக்கும் ஸ்டாலிக்கும் எவன் குஷ்புவை வச்சிக்கிறதுன்னு சண்டையாம்... இதைவிட இன்னும் கேவலமா வளர்மதி பேசுது... அதெல்லாம் ஏன் உடன்பிறப்புக்கள் எதிர்க்கலை." சற்று காட்டமாகக் கேட்டான் கணபதி.
"அது அவங்களுக்குள்ள ஒத்துப் போயிருவாங்கங்க... அவங்க ரெண்டு பேரு டார்க்டெட்டுமே மாற்று அரசியல்ன்னு கிளம்பியிருக்கிற கட்சிகள்தான்..." என்றான் அவர்.
"அப்ப அவங்களுக்குள்ள அண்டர்ஸ்டாண்டிங் இருக்குன்னு ஒத்துக்கிறீங்கதானே... அவங்க டார்க்கெட் மற்ற கட்சிகள் இல்லைங்க... மக்கள் நலக்கூட்டணி... அவங்க பிரிக்கப் போற ஒவ்வொரு ஓட்டும் திமுகவுக்கானதுதான்... அதான் இப்படி ஒரு கேவலமான வேலையில இறங்கியிருக்காங்க.... எங்களை நீக்க உனக்கு அதிகாரம் இல்லைன்னு சொல்ல வச்சி... முரசை முடக்கணுமின்னு துடிக்கிறாங்க... இதுதான் உண்மை.... தைரியமிருந்தால் மோதிப் பாக்கணும்... அதைவிட்டுட்டு காசு கொடுத்து அடிமைகளை வாங்கி பேச வச்சி வேடிக்கை பார்க்கிறது ஒரு நல்ல அரசியல்வாதி செய்யிற வேலையா?" கணபதி கனன்றான்.
"ஆமாங்க அவனுங்க கேக்குறதுல ஞாயம் இருக்குல்ல... சொந்தக்காசைப் போட்டு கட்சி வளர்த்தோம்... திமுக பக்கம் போனா, ஒருவேளை அவங்க ஜெயிச்சா மந்திரி சபையில இடம் கொடுக்காட்டியும் காண்ட்ராக்ட் அது இதுன்னு கொடுப்பாங்கதானே.... மநகூவுல இருந்து என்னத்தை புடுங்க முடியும் சொல்லுங்க..."
"இவங்க யாருமே மக்கள் சேவைக்காக எல்லாம் அரசியல்ல இல்ல... கோடிகள் சம்பாதிக்கணும் அதுதான் குறிக்கோள்..." என்றார் அறை நிர்வாகி.
"ஏங்க இதே தேமுதிக எம்.எல்.ஏக்கள் மக்கள் பணி ஆற்றப் போறோமுன்னு நாலு வருசம் முன்னால காசு வாங்கிக்கிட்டு அம்மாக்கிட்ட போனானுங்களே... என்ன மக்கள் பணி பண்ணுனானுங்க... ஓட்டுப் போட்ட மக்களை முட்டாளாக்கலையா" என்றார் அவர்.
"அதனாலதானே அம்மா அவனுகளை அப்படியே கட்டம் கட்டி ஒதுக்கிருச்சு... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ன்னு வள்ளுவர் சும்மாவா சொன்னாரு..." என்றான் கணபதி.
"ஆமா வேட்பாளர் அறிவிச்சிட்டு தினம் நாலு பேரை தூக்கிட்டு பழைய ஆளுங்களையே போட்டுக்கிட்டு வருது பாருங்க... இந்தப் பொழப்புக்கு..." என்றார் அவர்.
"இது தெரிஞ்சதுதானே... இந்த அஞ்சு வருசத்துல எத்தனை முறை மந்திரிகளை மாத்தியிருக்கும்... அறிவிக்கப்பட்டவனெல்லாம் வேட்புமனு தாக்கல் பண்ணினாத்தான் வேட்பாளர்ன்னு முடிவாகும்... அதுவரைக்கும் இப்படித்தான்..." என்றார் அன்வர் பாய்.
"ஹா... ஹா... ஒருத்தன் நான் எம்.எல்.ஏ. வேட்பாளர்ன்னு அம்மாவே சொல்லிட்டாங்கன்னு கிடா வெட்டி விருந்து கொடுத்திருக்கான்... விருந்து முடியிறதுக்குள்ள ஆளை மாத்திருச்சாம்... இப்ப கையில வச்சிருந்த காசெல்லாம் செலவழிச்சிட்டு நிக்கிறானாம்..."
(சரியா கணிச்சி வச்சிருக்கீங்க... இந்தத் தடவை ஆப்படிப்பானுங்கன்னு நம்புறோம்...) |
"எது எப்படியோங்க... இந்தக் கலவரத்துல தேமுதிக-மநகூ ஒண்ணுமில்லாமப் போகப்போகுது...சொல்ல முடியாது தேர்தலுக்குள்ள மநகூ இல்லாமலேயே போனாலும் போகும்... நாம் தமிழர்ன்னு ஒருத்தன் கத்தினான்.. கத்தினான்... கத்திக்கிட்டே இருக்கான்... அதுவும் புஸ்வானம்தான்... பாஜக சொல்லவே வேண்டாம்... ஒரு வீட்டுக்கு மருமகனாப் போனவளை தாலியை அத்தெறிஞ்சிட்டு வா... நாங்க கட்டிக்கிறோம்ன்னு இன்னும் தொங்கிக்கிட்டு நிக்கிது... இப்படி எல்லாம் ஆட்டம் கண்டதால தைரியமா முன்னுக்கு வரப்போறது பாமகதான்..." என்றார் அவர்.
"எங்கடா சொல்லலையேன்னு நினைச்சேன்.... பாமக தைரியமா தென் தமிழகம் பக்கம்... குறிப்பா மதுரை தாண்டி எங்க பக்கத்துல வேட்பாளரை நிறுத்துமா...? அப்படி நிறுத்தினால் டெபாஸிட் வாங்குமா...? அன்புமணியாகிய நான்ன்னு எங்க ஊர்ப்பக்கம் வந்து பேசுவாரா உங்க சின்னய்யா... சொல்லுங்க..." என்றான் கணபதி.
"ஏங்க... அங்க அங்க இருக்க பெரிய பெரிய சாதி அமைப்புகளோடு மறைமுகமா பேசி வச்சிருக்காங்க... பாருங்க... இந்த முறை மாற்றம் வருதா இல்லையான்னு... ஏங்க கருணாஸ் தேவரே இல்லைங்கிறானுங்க... முக்குலத்தோர் பேருல ஒரு கட்சி வச்சிருக்கான்... அவனை திருவாடனை தொகுதியில நிப்பாட்டலையா... அப்படிப் பாக்கும்போது பாமக ஒவ்வொரு ஏரியாவுலயும் எந்த சாதி முன்னணியின்னு பார்த்து ஆட்களை நிப்பாட்டும்..."
"எப்பவும் நீங்க பண்ற ஆர்க்யூமெண்ட்படி பார்த்தா பாமக சாதிக்கட்சி இல்லைதானே... ஆனா இப்ப சாதி பாத்து நிப்பாட்டும்ன்னு சொல்றீங்க... எங்க பக்கமெல்லாம் மாம்பழம் பழுக்காதுங்க... அழுகிப்போயிடும் தெரிஞ்சிக்கங்க..." என்றான் கணபதி.
"சும்மா ஏங்க நீங்க எப்ப பார்த்தாலும் சாதிக்கட்சியின்னு சொல்லிக்கிட்டு... இன்னைக்கு அதிமுக அறிவிச்சிருக்கிற லிஸ்ட்ல சாதி இல்லாம இருக்கா... எங்க பக்கமெல்லாம் பெரும்பாலும் நிறுத்தியிருக்கிறது பெரும்பான்மை சாதியில இருந்துதான் போதுமா...? எல்லாக் கட்சியும் சாதி பாக்கத்தான் செய்யுது... பாமக, விடுதலை சிறுத்தைகள்ன்னு சில கட்சிகள் வளர ஆரம்பிச்சதும் அதை சாதிக்குள்ள கொண்டு வந்திடுறாங்க..." என்றார் அவர்.
"நடந்துக்கிறது அப்படித்தானேங்க... பின்ன சாதிக்கட்சியின்னு சொல்லாம..." என்றார் அறை நிர்வாகி.
"எங்களுக்கு ஜெயலலிதா மட்டுமே போட்டி... வேறு கட்சிகளை கணக்கில் எடுக்கலைன்னு அன்புமணி பேசியிருக்காரு பாருங்க... அதுதான் இந்த வருசத்தோட மிகச் சிறந்த காமெடி... அந்தம்மா நீயெல்லாம் எம்..... அப்படின்னு இருக்கு.... தைரியம் அதுக்கு அதிகம்... இந்தாளு தேவையில்லாம அதை சீண்டுறாரு..." என்றான் கணபதி.
"ஹா... ஹா.... வடிவேலு இல்லாத குறையைப் போக்கணுமில்ல... என்னதான் இருந்தாலும் அம்மா மாதிரி தில்லு வேற யாருக்கும் இல்லை... அதான் அன்புமணி தைரியமான பொம்பளையோட மோதுவோம்ன்னு சொல்றாப்புல..." என்றார் அறை நிர்வாகி.
"அப்ப பிரேமலதா தைரியமான ஆளில்லையா...?" சிரிக்காமல் கேட்டார் அன்வர் பாய்.
"அதெல்லாம் குழாயடி சண்டைக்குத்தான் லாயக்கு... கூட்டத்துக்குள்ள மாடு புகுந்து மூணு நாலு பேரை குத்திப்புடிச்சி... அப்ப இந்தம்மா மாடு புகுந்தா நல்லதுதான்... அது இதுன்னு பேசிக்கிட்டு இருக்கு... இதெல்லாம் விஜயகாந்த் பேரைச் சொல்லி அரசியல் பண்ணி காசு பாக்கப் பாக்குதுங்க... புருசனால பேச முடியலை... இது என்ன பேசுறதுன்னு இல்லாம பேசுது... இன்னைக்கு நிலமையில தமிழக அரசியல் காமெடியில களைகட்டிக்கிட்டு இருக்கு... ரொம்ப பொறுமையா விளக்கமா பேசுறது அன்புமணி மட்டுந்தான்..." என்றார் அவர்.
"தயவு செய்து அன்புமணி பேச்சை நிப்பாட்டுங்க... அம்மா இன்னும் களத்துல இறங்கலை... இறங்கட்டும்... அப்புறம் பாருங்க... சந்திர குமாரை தந்திரமா பணம் கொடுத்து இழுத்து பேச வச்சி வேடிக்கை பாக்குறாங்க... ஆனா அதுதான் திமுகவுக்கு பெரிய ஆப்புன்னு தெரியாம இருக்காங்க... சுருக்கமாச் சொல்லப்போன தந்திர... இல்ல சந்திர குமாருதான் திமுகவுக்கு தரித்திரகுமாரா இருக்கப் போறாரு... தேமுதிகவுக்கு இருக்க ஓட்டு வங்கி விஜயகாந்த் என்ற தனி மனிதனுக்கானதுதான் என்பதை எல்லாரும் அறிவோம்... சந்திரகுமாரையெல்லாம் எவனுக்கும் தெரியாது... மக்கள் மனசுல கதாநாயகன்னா அது விஜயகாந்த்தான்... வெற்றி தோல்வி எல்லாம் சகஜம்... கெடு வச்சவனுங்களை தூக்கி அடிச்சாரு பாருங்க... அங்க நின்னாரு கேப்டன்..." என்றான் கணபதி.
"எங்கயும் அவரால நிக்க முடியாது... விட்டா சாஞ்சிருவாரு... பிரேமலதாவும் சுதீஷூம் ஸ்குரு போட்டு நிப்பாட்டுறாங்க... தாங்கிக்கிட்டு திரிஞ்ச சந்திரகுமாரு... ஐயா வண்டி தள்ளப் பொயிட்டாரு..." எனச் சிரித்தார் அன்வர் பாய்.
"எது எப்படியோ இந்தத் தடவை மக்கள் மனசுல புதிய சிந்தனை வந்தாச்சு... ரெண்டு பெரிய கட்சியும் ஆட்டம் காணுதா இல்லையான்னு பாருங்க..." என்றார் அவர்.
"அதெல்லாம் இல்லைங்க... பணத்தைக் கொடுத்து நம்மளோட புதிய சிந்தனையை எல்லாம் மழுங்கடிச்சிருவானுங்க... இந்தா பாருங்க... சினிமா நடிகர் நடத்துற நட்சத்திர கிரிக்கெட்டுக்கு ஆதரவு கொடுக்காதீங்கன்னு எல்லாரும் கத்துறானுங்க... தண்ணிக்குள்ள கிடந்து சென்னை தத்தளிச்சப்போ ஒரு சிலர் தவிர எந்தத் தக்காளியும் வரலை... ஆனாலும் டிக்கட் விக்க ஆரம்பிச்சதும் சென்னையில டிக்கெட் கிடைக்கலை... ரசிகர்கள் அடிதடின்னு வருதா இல்லையா பாருங்க... அப்படித்தான் அடிச்ச கொள்ளையில சில கோடியை ஒதுக்கி ஓட்டுக்கு பணம் கொடுத்து அதே அம்மா ஜம்முனு வந்து உக்காரப் போகுது.... அப்புறம் குத்துதே குடையுதேன்னு நிக்கப் போறோம்... இதுதான் உண்மை..." என்றான் கணபதி.
"காசுக்கு ஓட்டுன்னு இந்தத் தடவையும் பண்ணினா... தமிழன் செத்தொழிய வேண்டியதுதான்.... அதுக்கப்புறம் பீகார் மாதிரித்தான் தமிழகமும் இருக்கும்..." என்றார் அறை நிர்வாகி.
(அது சந்திரகுமாரு தலைவரே...!) |
"இப்பவே அப்படித்தானே இருக்கு... காசுக்கு ஓட்டுப் போடாம யோசிச்சி ஓட்டுப் போட்டா நல்லது என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..." என்றான் கணபதி.
"ஏம்ப்பா... எப்பப் பாத்தாலும் இந்த கேடுகெட்ட அரசியல்தானா...? என்னமோ நீங்கதான் நாட்டை திருத்தி முன்னுக்கு கொண்டு வரப்போறது மாதிரி பேசிக்கிட்டு... ஆண்டி கூடி மடங்கட்டுன கதைதான் உங்க கதை.... ஆளாளுக்கு பேசுவீங்க... காலையில அடிச்சிப்பிடிச்சி எந்திரிச்சி வேலைக்கு ஓடுவீங்க... அதுசரி இப்ப பேசின நாலு பேருல யாரு ஓட்டுப் போட ஊருக்குப் போறீங்க..." என்றபடி கட்டிலில் இருந்து எழுந்தான் அவன்.
'ஆஹா... எழுந்திருச்சிட்டான்... வாயைக் கொடுத்தோம்... அப்புறம் பின்னாடி புண்ணாகிடும்' என்று நினைத்தபடி பாத்ரூம் சாவியை எடுத்தார் அவர். 'டீப் போட்டுக்கிட்டு வாறேன்'னு கிளம்பினார் அறை நிர்வாகி. 'அலோ அம்மாவா... நம்ம தொகுதியில கற்பகம் நிக்குதாமே... ஓட்டு விழுகுமா?' என ஆரம்பித்தான் கணபதி. 'அட ஏங்க லீவு கேட்டா கடுப்படிக்கிறானுங்க... எங்கிட்டு ஊருக்குப் போறது...' என்றபடி பேண்டை மாட்டினார் அன்வர் பாய்.
"பாத்தீங்களா... இதுதான் நடப்பு.... நாட்டை திருத்துவோம்... மாற்றம் வரும்... மண்ணாங்கட்டி வரும்ன்னு பேசுறவனெல்லாம் வெளியில இருந்துக்கிட்டு ஓட்டுப் போடக்கூட போகமாட்டானுங்க... நான் இன்னைக்கு எதுவும் பேசக்கூடாதுன்னு பேசமா இருந்தேன்... இனிமே அறைக்குள்ள அரசியல் பேசக் கூடாதுன்னு சொல்லணும்... அந்தாளு பாட்டுக்கு சுவிட்டோடதானே வந்தாரு... அவரைக் கிளப்பி விட்டு மாம்பழம் அது இதுன்னு... ஏன்டா மாப்ள இந்த வேலை.... பாய் எப்பவும் பேச மாட்டாரு... அவரும் இன்னைக்கு இடையில சரடு விடுறாரு... பாய் நமக்கெல்லாம் இது எதுக்கு... நம்ம வாழ்க்கையை ஓட்டுறதே பெரிசா இருக்கு... போங்க போயி சமைக்கிறதுக்கு வாங்கிக்கிடு சீக்கிரம் வாங்க... வேலையை ஆரம்பிப்போம். எவன் வந்தாலும் நாம இப்படித்தான் புரியுதா...? சாப்பிட்டு சீக்கிரம் படுத்தாத்தான் நாளைக்கு காலையில எந்திரிச்சி வேலைக்கு ஓடமுடியும்..." என்றான் அவன்.
படங்களுக்கு நன்றி - இணையம்...
-'பரிவை' சே.குமார்.
8 எண்ணங்கள்:
ரசித்தேன்.
ரசித்தேன் நண்பரே
தம+1
நாட்டில் நடக்கும் கூத்துக்களை மிக தெளிவாக எளிமையான நடையில் மிக அருமையாக சொல்லி சென்று இருக்கிறீர்கள். பாராட்டுகள்
அலப்பறை தேர்தல்வரை அலறட்டும்
தமிழ் மணம் 4
நல்லாயிருக்கையா
நம்ம நாட்டு நடப்பு!
அரசியல் ரகளையை ரசித்தேன் சகோ
தம +1
தேர்தல் வரை எல்லோருக்கும் நல்ல பொழுது போகும்.
ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற தன்னை முன்னிருத்திக் கொள்வதில் தவறில்லை. ஆனால் தாங்கள் எப்படி ஆளப் போகின்றோம் ஆட்சிக்கு வந்தால், என்ன கொள்கைகள் என்பதை விட்டுப் பிற கட்சிகளையும், தனிநபர்களையும் தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்திப் பேசுவதுஎன்பது மிக மிக மோசமான அரசியல் நாகரீகம். இந்த அடிப்படை அரசியல் நாகரீகம் கூட இல்லாதக் கட்சிகளும், தலைவர்களும்தான் நம்மை ஆளப் போகும் பட்டியலில் இருப்பது வேதனை.
நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள் இப்போது நடந்து வரும் கூத்துகளை..
கீதா
கருத்துரையிடுக