வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி
இன்றைய உலகில் பெண்கள் எல்லாத்துறைகளிலும் சாதனை படைத்துக் கொண்டிருந்தாலும் அவர்களை இந்தச் சமுதாயம் எப்படிப் பார்க்கிறது... எப்படி நடத்துகிறது என்று பார்த்தால் இன்னும் அவர்களுக்கு முழுமையான வாழ்க்கை கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் இருந்து சற்றே முன்னேறியிருக்கிறார்கள்... அப்படிப்பட்ட வாழ்க்கையில் இருந்து இன்று சுயமாக முடிவெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது. முன்னேற்றப் பாதையில் பயணிக்க பெண்களுக்குத் தயக்கம்... அந்தத் தயக்கத்தை உடைத்துக் கொண்டு வெளியில் வரவேண்டும்.
கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் சிலர் மட்டுமே வேலைகளைப் பகிர்ந்து பார்த்து வாழ்ந்து வருகிறார்கள். இது ஆரோக்கியமான உறவுக்கு அடித்தளம்... இது போன்று வாழ்பவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும்... ஒரு அந்நியோன்யம் எப்போதும் ஒட்டிக்கொண்டே இருக்கும். ஆனால் பல வீடுகளில் பெண் அதிகாலையில் எழுந்து சமையல் வேலைகள் எல்லாம் செய்து, குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்ல எல்லாம் எடுத்து வைத்து, அவர்களைக் கிளப்பி தானும் கிளம்பி கணவனுக்கு பெட்காபி கொடுத்து எழுப்பும் போது எட்டு மணிக்கு மேலாகும். மெதுவாக எழுந்து குளித்து பேப்பர் பார்த்து, சாப்பிட வரும் போது அவள் குழந்தைகளை வேனில் ஏற்றிவிட்டு வந்து அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருப்பாள். அவனும் அவளைப் பற்றிய கவலை ஏதுமின்றி கிளம்பிப் போய்விடுவான். அதேபோல் மாலை வந்து அவள் எல்லா வேலைகளையும் பார்த்து சமையல் முடித்து சாப்பிட அழைக்கும் வரை இவன் குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுப்பானா என்றால் அதுவும் இல்லை... டிவியில் செய்தி பார்ப்பான்... வடிவேலு நகைச்சுவைக்கு சிரித்துக் கொண்டிருப்பான். சாப்பிட்டதும் எல்லோரும் படுக்கைக்குப் போனாலும் பாத்திரங்களைக் கழுவி குழந்தைகளுக்கு பால் காய்ச்சி எடுத்து வரும்போது பத்து மணிக்கு மேலாகிவிடும். அதன் பிறகு படுத்து அவனை சந்தோஷப்படுத்தி தூங்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு என்னடி பிகு பண்ணுறேன்னு கோபம் வந்துவிடும். இந்த இயந்திர வாழ்க்கையில் எப்படி அந்நியோன்யம் இருக்கும். இங்கு பெண்மை எங்கே போற்றப்படுகிறது. அடிமைத்தனம் அல்லவா தலைவிரித்தாடுகிறது. சமூகம் அல்ல குடும்பத்துக்குள்ளேயே இப்படித்தான் பார்க்கப்படுகிறது.
கிராமங்களில் முன்பெல்லாம் கணவன் சாப்பிடும் போது மனைவி எழுந்து நின்றுதான் பரிமாறவேண்டும். இல்லையேல் சாப்பிடும் கணவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். உடம்புக்கு முடியலை என்று உட்கார்ந்து கொண்டு சாப்பாடு போட்டால் 'என்ன மரியாதை இருக்கு' என்று சத்தம் போடுவார்கள். இதற்காகவே உடம்புக்கு முடியவில்லை என்றால் மகளிடம் சொல்லி போடச் சொல்வார்கள். அவளும் நின்றுதான் போடவேண்டும். ஆனால் இன்றைக்கு நிலமை ரொம்ப மாறிவிட்டது. உட்கார்ந்து கொண்டும் டிவி பார்த்துக் கொண்டும்தான் சாப்பிடுகிறார்கள். நின்று கொண்டு பரிமாற வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. இது முன்னேற்றமா... இங்கே பெண்மை போற்றப்படுகிறதா என்று நீங்கள் கேட்கலாம். இது அடிமைத்தனத்தில் இருந்து வெளிவந்ததற்கான அடையாளம்தானே... கணவன் சாப்பிட்ட பின்னே மனைவி சாப்பிட வேண்டும் என்ற நிலையெல்லாம் மாறி எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் காலம் வந்துவிட்டதல்லவா?
பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் என்பது நரகமான நாட்கள் என்பதை எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்... நேற்று எப்படி தனக்கு பணிவிடை செய்தாலோ அப்படித்தான் இன்றும் செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அந்த நாட்களில் நீ ஒன்றும் செய்ய வேண்டாம்... நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்பவர்கள் கொஞ்சமே... மற்றவர்கள் எல்லாம் அதையெல்லாம் பெரிதாய் பார்ப்பதில்லை. நாப்கின் வாங்கிக் கொடுக்கும் அப்பா, கணவன், சகோதரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் இன்னும் இது குறித்த அறிவு பரவலாகவில்லை என்பதை நாப்கினை கருப்பு பிளாஸ்டிக் கவரிலோ அல்லது பேப்பரிலோ சுற்றிக் கொடுக்கும் கடைக்காரர் சமூகத்தின் சார்பாக சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதுதானே உண்மை.
பெண்களை வீட்டில் நடத்தும் விதங்கள் மாறிவிட்டாலும் சமூகத்தில் அவர்கள் இன்னும் போகப்பொருளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்... எத்தனை எத்தனை கற்பழிப்புக்கள்... தினமும் செய்திகளாய் சிரிக்கின்றன என்பதை நாம் அறிவோம். எல்லாவற்றிற்கும் காரணம் என்ன..? போதையில் செய்தான்... குடும்பப்பகையில் செய்தான் என்று சொல்கிறார்களே... போதையும் பகையும் ஒரு பெண்ணை இவ்வளவு கொடூரமாகவா பார்க்க வைக்கும். இதற்கெல்லாம் காரணம் சினிமாதான்... பட நாயகியின் கவர்ச்சி உடைகளைப் போல் இன்று வீட்டில் வாங்கிக் கொடுக்கிறார்கள். அதை போட்டுக் கொண்டு வெளியில் போகும் போது உறுத்தும் அழகுதான் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமே... இங்கு சமூகத்தின் மீது பலியைப் போட்டாலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை விடுத்து எல்லை மீறும் பெண்களும்தான் காரணம் என்பதை மறுக்க முடியுமா இல்லை மறைக்க முடியாமா? இங்கு தங்கள் முன்னேற்றத்திற்கு தாங்களேதான் தடையாக இருக்கிறார்கள் என்பதை பெண்ணினம் ஏன் யோசிப்பதில்லை.
இங்கு நம்ம நாட்டு மக்கள் நிறைய இருக்கிறார்கள். தங்களின் வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை அங்கங்கள் தெரியும்படியான உடைகள் அணிவித்து பெற்றவர்களே ரோட்டில் கூட்டிச் செல்வதை கண் கூடாக பார்க்க முடிகிறது. அந்தப் பெண்ணை கடந்து செல்லுவோர் பார்த்துச் செல்வதை ரசித்துக் கொண்டே போவது போல்தான் தோன்றும் அவர்களின் செயல். வேலைக்கு போகும் போது ஒரு பத்தாவது படிக்கும் பையனும் அவனுடன் படிக்கும் பெண்ணும் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் கடந்து செல்லும் நாட்களும் உண்டு. இதெல்லாம் இங்கே சரியாகப்படலாம். சிகரெட் பிடிப்பது எல்லாம் இங்கு சாதாரணமாகிவிட்டது. ஆண்களுக்கான சிகரெட் பெண்களுக்கான சிகரெட் என்று தரம் வேறு... ஒரு பெண் கையில் புகையும் சிகரெட்டுடன் நான்கு ஆண்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டே தம் அடிக்கிறாள். இந்தக் கலாச்சாரம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நம்ம ஊரிலும் வந்து கொண்டுதான் இருக்கிறது. குடித்து விட்டு ரோட்டில் கிடந்த மாணவி, பீர் அடிக்கும் ஐடி பெண்கள் என அமோகமாய் நாமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். இந்தச் சமூகம் பெண்களை தவறாக பார்க்கிறது... மோசமாக நடத்துகிறது என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தாலும் இன்றைய இளைய சமுதாயம் மோசமான ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்தானே?
முன்பெல்லாம் வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தான் காலூன்றி நிற்க வேண்டும் என்றால் எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டும். ஆனால் இன்று பாரதி கண்ட புதுமைப்பெண்கள் நிறைய வலம் வர ஆரம்பித்துவிட்டதால் இன்றைக்கு அனுசரித்துச் செல்ல வேண்டும் என்று சொல்லும் ஆண்வர்க்கம் அடங்கிப் போய்கிடக்கிறது. பெண்கள் எல்லாம் முடங்கிப்போய் கிடக்காமல் புதிய தென்றலாய் புறப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகத்தின் பார்வையில் இன்றைய நிலையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராய்த்தான் இருக்கிறார்கள்.
பெண்களை சமூகம் பார்க்கும் பார்வைக்கு எத்தனையோ கதைகளையும் காரணங்களையும் சொல்லலாம்தான் ஆனால் பணத்துக்காக சினிமா... கரகாட்டம்... ஆடல்பாடல்... தெருக்கூத்து போன்ற பொதுவெளிகளில் தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்வதை என்னவென்று சொல்வது...? இந்தச் சமூகமா அவர்களை இப்படி நடந்துகொள்ளச் சொல்கிறது..? அவர்களுக்கு சுய சிந்தனை இல்லையா...? பெற்றவர்களோ... கட்டியவனோ இப்படி நடக்கச் சொன்னால் அவனை எதிர்த்து... தன்னால் சுயமாக வாழ முடியாதா..? எத்தனையோ பாதிக்கப்பட்ட பெண்கள் இன்றைய சமூகத்தில் தாங்கள் தனித்து வாழ்ந்து சாதிக்கவில்லையா...? அப்படியிருக்க சில பெண்கள் சமூகம்தான் என்னை இப்படி ஆக்கியது என்று புலம்பிக்கொண்டே அதே சகதியில்தான் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்... அவர்கள் எல்லாம் அதிலிருந்து வெளிவந்து வாழ்ந்து காட்டும்போது பெண்ணை கேவலமாகப் பார்க்கும் இந்தச் சமூகம் தன்னைத் திருத்திக்கொள்ளும்.
இன்று ஆயா வேலையில் இருந்து நாட்டை ஆள்வது வரை பெண்கள் ராஜ்ஜியமே.... சென்னையில் முதல் மெட்ரோ ரயிலை முதன் முதலில் ஓட்டியதும் இரண்டு பெண்கள்தான்... இன்று விமானத்தையும் இயக்குகிறார்கள்... ஏன் கல்பனா சாவ்லா நிலவுக்கு செல்லவில்லையா..? சானியா மிர்சாக்களும் செய்னா நோவல்களும் பிடி.உஷாக்களும் சாதிக்கவில்லையா..? திலகவதி ஐ.பி.எஸ்களும் ஜானகிகளும் சாதிக்கவில்லையா..? கண் இல்லை என்றாலும் கணீர்க்குரலால் வைக்கம் விஜயலெட்சுமி சமூகத்தில் சாதிக்கவில்லையா...? ஆணுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் பெண்கள் ஜொலிக்கிறார்கள். இங்கு ஆணுக்கு நிகராக என்று சொல்லும் போது நட்சத்திரங்களாய் மின்னுகிறார்கள் என்ற சந்தோஷத்தோடு சிகரெட், மது என்று இன்னொரு பக்கம் இன்றைய இளம் பெண்கள் ஆணுக்கு நிகராக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற வேதனையையும் சுமக்கத்தான் வேண்டியிருக்கிறது.
சமூகம் என்னை இப்படிப் பண்ணுது... அப்படிப் பண்ணுதுன்னு புலம்புறதை விட்டுட்டு இன்றைக்கு கிடைத்திருக்கும் சுகந்திர வாழ்க்கையில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்றால் கவர்ச்சிக்கும் போதைக்கும் தங்களை இழக்காமல் இருக்க வேண்டும். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று சொன்ன காலம் போய் பெண்கள் படிக்க வேண்டும் என்று கண்டிப்பாக கல்வி கொடுக்க நினைக்கும் சமூகத்தில்தான் இப்போது வாழ்கிறோம். சமூகம் பெண்களை எப்படிப் பார்த்தாலும் நான் பெண்... என்னை சமூகம் அப்படிப் பார்க்கிறது... கேவலமாகப் பேசுகிறது என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் பரந்த உலகில் குதித்து வெளியே வந்தால் சாதிக்கலாம்... அப்படி சிறகடித்துப் பறந்த பெண்கள் எல்லாம் இன்றைக்குச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாரும் சிறகை விரிக்க வேண்டும்... சிறகுகள் சிறந்த இலக்கை நோக்கிப் பறக்க வேண்டும்... சிந்தையில் முன்னேற்றத்திற்கான கரு விளைய வேண்டும்...
ஆணுக்குப் பெண் நிகர் என்றாலும் இட ஓதுக்கிட்டில் இன்னும் முழுமை பெறாவிட்டாலும் சாதனைச் சிகரங்களை தொட்டுக்கொண்டிருக்கும் பெண்கள் உலகம் விரிய வேண்டும் என்றால் அடிமைச்சிறை, அழித்துக் கொள்ளும் நிலைகளில் இருந்து பெண்கள் வெளியில் வரவேண்டும்... பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புற்றீசல் போல் வெளிவரவேண்டும்... வருவார்கள்... சாதிப்பார்கள்...
நாளைய உலகம் பெண்கள் கையில்... உயரப் பறக்கப் போகும் அவர்களை உச்சிமோர்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தை நாம் கண்கூடாக பார்க்கத்தான் போகிறோம்...
**************
"இப்படைப்பு எனது சொந்தப் படைப்பு, 'வலைப்பதிவர் திருவிழா-2015' மற்றும் 'தமிழ்இணையக் கல்விக்கழகம்' நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது, இதற்கென எழுதப்பட்ட கட்டுரை இது, இதற்கு முன் வெளியான கட்டுரை அல்ல... முடிவு வெளிவரும் வரை வேறு எங்கும் பதியவோ இதழ்களுக்கு அனுப்பவோ மாட்டேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்..."
**************
பதிவர் விழாவுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கிறது... புதுக்கோட்டை குலுங்கட்டும்... வலைப்பதிவர் புகழ் உலகெங்கும் பரவட்டும்... தமிழகத்தில் இருக்கும் பதிவர்களெல்லாம் தவறாது கலந்து கொள்ளுங்கள்... எழுத்தின் ஆற்றல் எட்டுத் திக்கும் தமிழைக் கொண்டு செல்லட்டும்...
-'பரிவை' சே.குமார்.
22 எண்ணங்கள்:
பெண்கள் முன்னேற்றம் குறித்த பார்வை அருமை குமார். பெண்கள் முன்னேற்றம் என்பது உடலில் அணியும் ஆடைகளை குறைத்தலும் வீட்டைக்கவனிக்காமல் ஊரை திருத்த செல்வது அல்ல என புரிந்து கொண்டாலே போதும்.
சிறந்த இலக்கை நோக்கிச் சிறகினை விரிக்கும்படி
பெண்களுக்கு அறைகூவல் விடுத்த அருமையான கட்டுரை சகோதரரே!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்
அருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
தம +1
ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் நண்பரே...
"சாதனைச் சிகரங்களை தொட்டுக்கொண்டிருக்கும் பெண்கள் உலகம் விரிய வேண்டும் என்றால் அடிமைச்சிறை, அழித்துக் கொள்ளும் நிலைகளில் இருந்து பெண்கள் வெளியில் வரவேண்டும்..." என்ற சிறந்த கருத்தை வரவேற்கிறேன்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
அருமை,,,,,, வெற்றிபெற வாழ்த்துக்கள்,
போட்டிகளுக்கான படைப்புகளை அனுப்ப இறுதி தேதியை மேலும் இரண்டு நாட்கள் நீட்டித்திருக்கிறார்கள். http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_1.html
மேலும் சில படைப்புகளை அனுப்ப முயற்சியுங்கள் நண்பரே...
அருமையான கட்டுரை.
வெற்றிபெற வாழ்த்துக்கள்.
அருமையான விடயங்களை உள்ளடக்கிய நல்ல கட்டுரை போட்டியில் வெற்றி பெற
எமது வாழ்த்துக்கள் நண்பரே
வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க நண்பரே...
முயற்சியின் முடிவில் 3 போட்டிகளுக்கு எழுதியிருக்கு நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் குமார்.
சிறப்பான கட்டுரை... இன்றைக்கு பெண்கள் முன்னேற்றத்துக்கு மிகவும் தேவையான பகிர்வு. பாராட்டுக்ள.
கருத்துரையிடுக