மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 29 ஜனவரி, 2015

கிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்


நாங்க படிக்கிற காலத்துல எங்க ஊர் வயல்களெல்லாம் பச்சைப் பசேல்லுன்னு வெளஞ்சி நிக்கும். எந்தப் பக்கம் திரும்பினாலும் பயிராகத்தான் இருக்கும். தை மாத ஆரம்பத்தில் அனைத்து வயல்களும் வெளஞ்சி நிக்கும். பாக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கும். இப்பல்லாம் விவசாயம் இல்லாம கருவை மண்டிக்கிடக்கிற வயல்களைப் பார்க்கும் போது ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. 

பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்கள் ஊர் விவசாயம் என்பது நாற்றங்காலில் நாற்றுப்பாவி அது வளர்ந்ததும் குறிப்பிட்ட நாட்களில் அதைப் பறித்து சிறு சிறு முடிகளாகக் கட்டி, நூறு நூறாக எண்ணி (அதை ஒரு குப்பம் என்போம்) ஒவ்வொரு வயலுக்கும் எத்தனை குப்பம் வேண்டுமோ அதை பிரித்து வைத்து மறுநாள் விடியற் காலையில் நாற்றங்காலில் தண்ணீருக்குள் இருக்கும் நாற்று முடிகளை எடுத்து வரப்பில் அடுக்கி தண்ணீர் வடிய வைத்து, அங்கிருந்து நடவேண்டிய வயலுக்கு தூக்கிச் சென்று நடுவதற்கு தோதாக நாற்று முடிகளை வயலெங்கும் வீசி வைப்போம்... அப்புறம் நடவு, கருநடை திரும்புதல், பொதி கட்டுதல், கதிர் என வளர்ந்து களம் வந்து சேரும்.

கல்லூரிக்கு வந்த சமயத்தில் நாற்றுப்பாவி நடவு செய்யும் வேலை அதிகம் இருப்பதோடு கண்மாய் நிறைந்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதால் மழை ஆரம்பித்ததும் வயலை உழுது அதில் விதையை வீசி முளைக்க வைத்து, பின்னர் களை எடுத்து, உரமிட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். இங்க விவசாயம் எப்படிப் பண்றதுங்கிறது கதையில்லை. இதை முன்னரே ஒரு கிராமத்து நினைவில் பகிர்ந்த ஞாபகம் இருக்கு. கட்டுரைத் தலைப்பு என்ன கோவில் மாடுகள்... வாங்க அதுக்குள்ள போவோம்.

எங்க ஊருக்கு பக்கத்துல இருக்கிற தாழைக் கண்மாய் ஓரத்தில் இருக்கும் கோவில்தான் கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் கோவில். இந்த அம்மனைப் பற்றியும் ஒரு கதை இருக்கு. அதை பின்னர் ஒரு பதிவில் பார்ப்போம். அந்தக் கோவிலில் நேர்த்திக் கடனாக விடப்படும் மாடுகள் அதிகம். அந்த மாடுகள் எல்லாம் பராமரிப்பின்றி தாங்களாகவே வாழ்வை நடத்தி வருகின்றன என்பதால் பெரும்பாலும் பகல் நேரத்தில் கோவிலுக்கு அருகிலோ அல்லது நாடகமேடையிலோ படுத்திருக்கும். அதுவும் விவசாய காலங்களில் மட்டுமே அவைகளை அப்படிப் பார்க்க முடியும். மற்ற நாட்களில் எங்கிருக்கின்றன எப்போ வருகின்றன என்பதெல்லாம் தெரிவதில்லை. இரவு உணவு வேட்டைக்குக் கிளம்பிவிடுவார்கள்.

இவர்களின் டார்க்கெட் என்னவென்றால் கதிர் பால் பிடித்து பொதி கட்டுகிற சமயத்தில் இருக்கும் வயல்கள்தான். வந்து இறங்கிவிட்டால் அவ்வளவுதான் அந்த வயல் சுத்தமாக அழிக்கப்படும். நாங்க பக்கத்து ஊருங்க... எங்க ஊருக்கு வரும்ன்னு சொல்லலாம்... பத்துக் கிலோ மீட்டருக்கும் அந்தப்பக்கம் கூட ஆட்டுக்காரனுங்க கெடை போடுற மாதிரி கிளம்பிப் போயி சாப்பிட்டு வருவார்கள்.

ஒரு முறை மாடுகளின் அழிவு ரொம்ப இருக்கு என்று அவற்றை பராமரிக்கச் சொல்லி கோவில் நிர்வாகத்திடம் கண்டதேவியைச் சேர்ந்தவர்கள் எடுத்துச் சொல்லியும் பலனில்லை என்பதால் மாடுகளை விரட்டி வலை வைத்துப் பிடித்தார்கள். அதன் பின்னர் அந்த வயல்கள் எல்லாம் விளையவே இல்லை என்பது தனிக்கதை. இதை நாங்களும் பார்த்திருக்கிறோம்.

எங்க ஊர் வயல்களிலும் இவர்கள் இறங்காமல் இல்லை. நல்ல விளைஞ்சிருக்கு... இந்த வருசம் சாப்பாட்டுக்கு பஞ்சமில்லைன்னு நினைச்சிக்கிட்டு இருக்கும் போது ராவோட ராவா வந்து வேலையை முடிச்சிட்டுப் போயிருவாங்க. எங்க வயல் ஒரு கால் ஏக்கர் இருக்கும். வீடுகளுக்குப் பக்கத்துலதான் அந்த வயல்... நல்லா விளையிற வயல்... ரெண்டு வருசம் தொடர்ந்து ரெண்டு ரெண்டு முறை சாப்பிட்டுட்டுப் போயிருச்சுங்க... அப்புறம் வெறும் வைக்கோல்தான் மிச்சம். ஆனா அவங்ககிட்ட ஒரு நேர்மை உண்டு. இன்னைக்கி ராமசாமி வயல்லதான் சாப்பாடுன்னா கடந்து வரும் வயல்களில் வாய் வைக்க மாட்டார்கள். வரப்பில் வந்து வரப்பிலே சென்று விடுவார்கள். வயலில் இறங்க வேண்டிய சூழல் வந்தால் பயிரில் வாய் வைக்காமல் நடந்து சென்று விடுவார்கள்.

கோவில் மாடுகளின் தொந்தரவு அதிகம் இருந்ததால் பயிர் பால் பிடிக்கிற நேரத்துல ஆளாளுக்கு வயல்களின் ஓரத்தில் கொட்டகை போட்டு அங்கு படுத்திருப்பார்கள். எங்கப்பா எங்களின் புளியஞ்செய் ஓரத்தில் ஒரு கொட்டகைபோல் தயார் செய்து அதில் கட்டில் போட்டு வைத்திருப்பார். அதில்தான் இரவில் மாட்டுக்கு காவலாகப் படுத்து இருப்பார். அதற்கு இரண்டு செய் தாண்டித்தான் எங்க ஊர் சுடுகாடு. அவரு அங்க போயி படுக்கும் போது எங்களுக்குப் பயமா இருக்கும். ராத்திரி சாப்பிட்டுட்டு கைவிளக்கு, கையில் ஒரு மூங்கில் கம்பி, தலையில் இருக்கிக் கட்டிய மப்ளர், உடம்பில் போர்த்தியிருக்கும் கம்பளி என அவர் கிளம்பிவிடுவார்.

சித்தப்பா, ஐயா, மச்சான், மாமான்னு வீட்டுக்கு ஒரு ஆள் அவங்க அவங்க வயல்கிட்ட படுத்து இருப்பாங்க... இரவெல்லாம் திடீர் திடீர்ன்னு கையில் வைத்திருக்கும் தகரத்தை ஒருத்தர் தட்ட ஆரம்பித்தால் ஒவ்வொருத்தாராக தட்டி மொத்தமாகத் தட்டுவார்கள். இது இரவில் நாலைந்து தடவை நடக்கும். அதிலும் மீறி மாடு வரும்போது 'ஆய்... ஊய்... ' என கத்த, எல்லாப் பக்கமும் சத்தம் கேட்கும். அப்படியிருந்தும் சில நாட்களில் அதிகாலை நேரத்தில் வந்து தங்கள் வேலையைக் காண்பித்துச் சென்றுவிடுவார்கள்.

பின்னர் ஊரே சேர்ந்து எல்லா வயல்களையும் சேர்த்து சுற்றி அடைப்பதென முடிவு செய்து இரண்டு வருடம் அடைத்து விவசாயம் செய்தோம். அதிலும் முதலில் கன்றுக்குட்டியை தாவிச் செல்ல வைத்து அது உள்ளிருந்து 'அம்மே...'ன்னு கத்த ஒவ்வொருத்தரா தாவிக்குதிச்சி வர ஆரம்பிச்சாங்க... இந்தக் குரூப் ஒதுக்கிய ஒரு கோவில் காளை ஒன்று எங்கள் ஊருக்குள்ளேயே ரொம்ப நாள் திரிந்தது. ரொம்ப நல்லவரு... யாரையும் குத்தவோ விரட்டவோ மாட்டாரு... அவரு பாட்டுக்கு மாரியம்மன் கோவில் பக்கமா நிப்பாரு... படுப்பாரு... நைட்டுல வயலுக்குள்ள போயி கொஞ்சம் வேலையைக் காட்டிட்டு வருவாரு....

இப்படி கோவில் மாட்டுக்குப் பயந்து பயந்து விவசாயம் செய்த நிலமையில் வயலில் சென்று பார்க்க வயது இடங்கொடுக்காததால் பெரியவர்கள் எல்லாம் விவசாயம் செய்ய விரும்பவில்லை. இப்போ எங்க ஊரில் பெரும்பாலும் வயசானவங்க இருப்பதால் அவர்களால் இந்த மாடுகளுடன் போராட முடியவில்லை என்பதே உண்மை. இப்போ விவசாய நிலங்கள் எல்லாம் கருவை மண்டிக் கிடக்க, இப்போ ரிலையன்ஸ் மூலமாக எல்லா கருவைகளையும் வெட்டி சுத்தம் பண்ணிக் கொடுத்திருக்கிறார்கள்.

அப்பா, ஊரில் இல்லாத இரவுகளில் நானும் தம்பியும் வயல் பார்க்க சென்ற கதை, களத்து மேட்டில் அப்பா சாப்பிட்டு வரும் வரை நானும் அவனும் அந்த இருட்டுக்குள் அமர்ந்திருந்த கதை எல்லாம் இருக்கு... நேரம் இருக்கும் போது பார்ப்போம்.

இன்னும் கோவில் மாடுகள் மற்ற ஊர்களில் இன்னும் தங்கள் வேலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கோவில் நிர்வாகம் இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.

மீண்டும் வேறு ஒரு நினைப்போடு தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

31 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

கோயில் மாடுகள் அழகாய் மேயக் கண்டேன் நண்பரே..
தமிழ் மணம் 2

UmayalGayathri சொன்னது…

கோவில் மாடுகள் அதுவும் ஜனம் போல் அங்கங்கு கூட்டமாய் இருக்கக்கண்டேன்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சில நாட்களாக கணினி ஓய்வெடுத்துக் கொண்டது நண்பரே
இன்றுதான் கணினி வீடு திரும்பியுள்ளது
இனி தொடர்ந்து வருவேன் நண்பரே
தம +1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

களத்து மேட்டு சிரமத்தையும் அறிய காத்திருக்கிறேன்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பள்ளி நாள்களில் இவ்வாறாக கோயில் மாடுகளைக் கண்டதுண்டு. தற்போது அவை எண்ணிக்கையில் குறைந்துவிட்டன.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கோவில் மாடுகள் பல சமயங்களில் இப்படி தொல்லை தருவதுண்டு. நெய்வேலியிலும் இப்படி கோவிலுக்கு நேர்ந்து விட்ட மாடொன்று மக்களை ரொம்பவே படுத்தியதுண்டு!

நல்ல பகிர்வு.

துரை செல்வராஜூ சொன்னது…

கோயில் மாடுகள் என்பதை விட கோயில் காளைகள் என்பதே சரி!..
இவை மிகப் பெரிய வரலாற்றுக்குச் சொந்தமானவைகள்!..

நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறைக்குச் சொல்லாமல் விட்டதால் - வந்த வினைகளுள் இதுவும் ஒன்று!..

அடுத்த தலைமுறையினரை விவசாயம் செய்ய விடாமல் தடுத்த - பல காரணிகளால் - எத்தனையோ புதையல்கள் ஒழிந்தன/ஒழிக்கப்பட்டன.

மலரும் நினைவுகள் அருமை.. வாழ்க நலம்..

மனோ சாமிநாதன் சொன்னது…

வழக்கமாய் நீங்கள் எழுதும் உங்களின் கிராமத்து நினைவுகள் போல இந்தக் கோவில் மாடுகளின் கதையும் மிகுந்த சுவாரசியத்தைத் தந்தது!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
நானும் என்னடா ஐயாவைக் காணோமுன்னு யோசிச்சேன்...
இப்போ சிஸ்டம் சரியாயிருச்சா?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இல்லை ஐயா...
கோவில் காளைகள் என்பவை வெறும் காளை மாடுகளே....
இவற்றில் பசு, காளை, கிடேரி, கன்றுக்குட்டி என எல்லா வகையும் அடக்கம்.
எனவே இவற்றை நாங்கள் கோவில் மாடுகள் என்றுதான் அழைப்பது வழக்கம்... எங்கள் பேச்சு வழக்கில்தான் இங்கு குறிப்பிட்டேன்...

தங்களின் கருத்துக்கு ரொம்ப நன்றி ஐயா....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

அடக் கடவுளே .இப்பிடியும் ஒரு கொடுமையா. :( ஹ்ம்ம் கோவிலுக்கு நேர்ந்துவிடப்படும் காளைகளா இவை.. அப்ப அவங்க ஒரு கோசாலை மாதிரி வைச்சுப் பராமரிக்கலாமே.குமார் சகோ இத உங்க ஊர்ல சொல்லுங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

இது நம்ம ஊர்க் கோவில் இல்லை...
கோவில் நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட ஊர்க்காரர்கள் எல்லாம் சொல்லிப் பாத்துட்டாங்க...
அவங்க எந்த முயற்சியும் எடுக்கலை...
இப்ப பக்கத்து ஊர் விவசாயம் எல்லாம் அழிந்ததுல இவைகளுக்கும் கொஞ்சூண்டு பங்கு இருக்கு.

துபாய் ராஜா சொன்னது…

ருசி கண்ட மாடுகளை கட்டுப்படுத்துவது கடினம்தான்... என்ன ஊர்க்காரர்கள் சேர்ந்து கோயில் மாடுகளுக்கு மணி கட்ட முயற்சிக்கலாம்... மாடுகள் வரும்போது மணிச்சத்தம் கேட்டு எச்சரிக்கையாக இருக்கலாம், ஆனால் முன்னெடுப்பது யார்...

ஸ்ரீராம். சொன்னது…

சுடுகாட்டுக்கு அருகிலேயே இரவில் படுக்கை! பயமான அனுபவங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்கா ராஜா...
கோவில் மாடுகள் கழுத்தில் கயிரெல்லாம் இருக்காது...
இதுல பூனைக்கு யார் மணி கட்டுவது...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்ன் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீராம் அண்ணா...
அப்பாவுக்கு எதற்கும் பயமில்லை....
நமக்குத்தான் பயமே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தேனக்கா...
போன பதிலில் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொல்லலை விட்டுப்போச்சு,,,
நன்றி அக்கா...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கோயில் காளை/மாடு ம்ம்ம்ம் நல்ல நினைவுகள் . எங்களுக்கும் எங்கள் கிராமத்து நினைவுகளைக் கிளறின இந்த மாடுகள்.....எங்கள் ஊரில் மாடுகளுக்கு மணி உண்டு. எனவே காளைகள் வரும் போது ..பையன் கள் சத்தம் போட்டுக் கொண்டே வருவார்கள், டையர் உருட்டிக் கொண்டு....எச்சரிக்கையோடு இருப்போம். பெரும்பாலும் ஒன்றும் செய்யாது. அவற்றை வம்புக்கிழுத்தால் அவை முட்ட வரும்....தங்கள் நினைவலைகளின் பதிவு அருமை.

Unknown சொன்னது…

கோவில் மாடு மாதிரி ஊரை சுத்துறியேன்னு காரணம் புரிகிறது :)
த ம 9

தனிமரம் சொன்னது…

கோவில் மாடுகள் ஒரு காலத்தில் அதிக சொத்தாக இருந்தது கோவில் நிறுவாகத்துக்கு இன்று எல்லாம் மாறிவிட்டது! அருமையான பகிர்வு அண்ணாச்சி.

ராமலக்ஷ்மி சொன்னது…

அறியாத தகவல்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜி...
உண்மைதான்... கோயில் காளையாட்டம் திரியிறதைப் பாரு...
அவனா அவன் பொலி எருது மாதிரி திரிவான்...
அப்படியெல்லாம் திட்டக் கேட்டிருக்கிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நேசன்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.