மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 16 ஜனவரி, 2015

கிராமத்து நினைவுகள் : மாட்டுப் பொங்கல்


கிராமத்து விஷேசங்கள் என்றாலே சந்தோஷத்துக்கு குறைவிருக்காது. அதிலும் குறிப்பாக மாட்டுப் பொங்கல் என்பது மிகவும் சிறப்பான விழாவாக கொண்டாடப்படும். முதல் நாள் வீட்டுப் பொங்கல் என்பது எங்கள் முனியய்யா கோவில் இருந்து ஆரம்பிக்கும். அன்று மட்டும் முனியய்யா கோவில், வீடு மற்றும் வெற்றியூர் கருப்பரைக் கும்பிடும் பங்காளிகளால் நாச்சியம்மன் கோவிலில் வைக்கப்படும் பொங்கல் என மூன்று பொங்கல்களைச் சுவைக்க, தை முதல் நாள் தித்திப்போடு சந்தோஷமாக நகரும்.

மறுநாள் அதாவது மாட்டுப் பொங்கல் அன்று காலையில் எழுந்ததும் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு எல்லாம் மாற்றி, காளைகளுக்கு வால் முடியை அழகாக வெட்டி, குளிப்பாட்ட கண்மாய்க்கு பிடித்துச் செல்வோம். அங்கு தண்ணீர் நிறைந்து கிடக்கும் வருடங்களில் அவைகளை நடுத்தண்ணிக்கு கொண்டு சென்று நீந்த விட்டு அழுக்குத் தேய்த்து குளிப்பாட்டி, குளிக்கும் துறைக்கு அருகே கண்மாய் கரையில் இருக்கும் முனியய்யா கோவிலில் குங்குமம் எடுத்து மாட்டின் நெற்றியில் இதயம் போல், மாங்காய் போல் பொட்டு வைத்து... உடம்பெல்லாம் அங்கங்கே பொட்டு வைத்து... புதுக்கயிறு போட்டு கட்டி வைப்போம். இப்ப மாடுகளும் இல்லை விவசாயமும் இல்லை.

பின்னர் எப்போது பொங்கல் வைக்கலாம் என நல்ல நேரம் பார்த்து ஆண்கள் எல்லாம் பொங்கல் வைக்கும் இடம் சுத்தம் பண்ணப் போவோம். எங்கள் ஊர் எல்லையில், கண்டதேவி போகும் பாதையில் இருக்கும் ஊர்க்காவல் தெய்வம் கருப்பர் கோவிலின் முன்பாக எந்தப்பக்கம் சூலம் எனப்பார்த்து பொங்கல் வைப்பதற்காக சுத்தம் பண்ணி, வரிசையாக பொங்கல் வைக்க செதுக்கி வைத்து அதற்கு அருகே திட்டிக்குழி ஒன்றை தயார் பண்ணி வைப்போம். திட்டிக்குழி என்பது நான்கு பக்கம் வாசல் போல் வைத்து மண்வெட்டியால் வெட்டி வைக்கப்படும் வீடு போன்ற அமைப்பிலானது. மாடுகளைக் கட்ட நிழலான இடத்தில் சுத்தம் பண்ணி வைத்து வருவோம்.

பின்னர் நல்ல நேரத்தில் பொங்கல் வைக்க ஊரே கூடி அங்கு சென்று பொங்கல் வைத்து, எல்லாருடைய பானைகளும் பொங்கியதும் சங்கு ஊதி சந்தோஷித்து எல்லாரும் இறக்கியதும் பாச்சோறு தீட்டுவதற்காக காய்கறிகளை வெட்டிப் போட்டு ஒரு குழம்பு போல் வைத்து திட்டிக்குழியில் பறங்கி இலைகளைப் போட்டு அதில் எல்லா வீட்டிலும் எடுத்த சோற்றை கொட்டி வைத்து அதன் மீது குழம்பை ஊற்றி படையல் போட்டு அதில் கொஞ்சம் புறமடத் தண்ணீர் எடுத்து வரப்பட்ட மரக்காவில் போட்டு மந்திரித்து மாடுகளுக்குத் தீட்டி பொங்கலோ பொங்கல் என சத்தமாக பாடல்களைப் பாடியபடி மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் பாச்சோறு தண்ணீர் தெளித்து கருப்பர் கோவிலையும் சுற்றி மூன்று முறை அதே போல் வலம் வருவோம்.

(இன்று... இப்போது வைக்கும் பொங்கல் விழா - மனைவியின் நேரடி ஓளிபரப்பில் - கையை உயரே தூக்குபவர் அப்பா)
பொங்கலோ பொங்கல் என சுற்றிச் செல்லும் போது புது மண் சட்டியில் நெருப்பைக் கொண்டு வருவார் எங்கள் ஊர் இளையர் ஐயா, அதில் கடைசியாக பெரும்பாலானவர்கள் தங்கள் வீட்டினருக்கு திட்டி சுற்றி மிளகாய் உப்பென அதில் இட அது வெடிக்கும் போது ஏற்படும் காரம் எல்லாருடைய நாசியிலும் ஏறும். பின்னர் பொங்கல் வைத்த இடத்தைத் தாண்டி திட்டிக்குழிக்கு முன்னர் அதைப் போட்டு உடைத்ததும் எல்லோரும் பொங்கக்குழி தாண்டி விழுந்து வணங்கி எழுந்து திட்டிக்குழி சோறு வாங்கி சாப்பிட்டு கேலி முறைக்காரர்களுக்கு எல்லாம் முகத்தில் தீட்டி சந்தோஷமாக சில நிமிடங்களைக் கரைப்போம். அதிலும் மிளகாயை மட்டும் எடுத்து தீட்டுவோரும் உண்டு.

பின்னர் மாடுகளை திட்டிக்குழி தாண்டவிட்டு வீட்டிற்கு கொண்டு சென்று கசாலைக்கு முன்னர் இடப்பட்ட உலக்கையைத் தாண்ட வைத்து வைக்கோல் அள்ளிப் போட்டு கட்டி வைத்து விட்டு மீண்டும் பொங்கல் வைக்கும் இடம் வந்து கருப்பர் கோவிலில் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு வீட்டுக்குச் சென்று மாட்டுப் பொங்கல் விருந்து சாப்பிடுவோம்.

இதற்கிடையில் கண்டதேவியில் இருந்து வரும் தபால்காரர் வழியிலேயே ஊரே கூடி பொங்கல் வைப்பதால் அங்கேயே பெயரை வாசித்துக் கொடுக்கும் வாழ்த்து அட்டைகள் எல்லாம் வாங்கி யார் அனுப்பினார்கள் எனப் பார்த்து சந்தோசித்து ஆட்டம் போடுவோம். தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் வந்த பின்னர் மாட்டுப் பொங்கல் சந்தோஷ மணித்துளிகளில் சில துளிகளை களவாடிவிட, பொங்கக்குழியில் கூடும் பசங்க கூட்டம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. என்பதையும் சொல்லித்தான் ஆகணும். 

சில வருடங்களாக எங்கள் ஊர் இளவட்டங்கள் உரி அடித்தல், சின்னப் பசங்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என கலக்கலாக நடத்துகிறார்கள். அந்த சந்தோஷ நிகழ்வுகள் முடிந்ததும் மாலை மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைப்பார்கள். இதை சில ஊரில் கொப்பிப் பொங்கல் என்பார்கள். இரவு மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு பொங்கலைச் சிறப்பாக முடிப்பார்கள்.

பொங்கலுக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே இப்போதெல்லாம் நீடிக்கிறது. கடந்த ஆறு வருடத்தில் ஒரு முறை மட்டும் பொங்கலுக்கு ஊரில் இருந்திருக்கிறேன்.பொங்கக்குழி சுத்தம் பண்ண எங்க சித்தப்பா அழைக்க, நாங்கள் எல்லாம் கிளம்பிப் போவோம். இந்த வருடம் இளங்கோ மச்சானுடன் நம்ம விஷாலும் நானும் ஆம்பளைதான் என கிளம்பிவிட்டானாம். அவனின் மகனும் இவனும் சேர்ந்தால் அதகளம்தான். பரவாயில்லை நம்ம வாரிசு கிராமத்து வாசனையை நுகர்வதில் ரொம்பத் தீவிரம் காட்டுறார். இன்னைக்கு எல்லாம் ஒரே ஆட்டமாகத்தான் இருக்கும்.

எங்கள் ஊர் மாட்டுப் பொங்கலை நான் ரொம்பத் தவற விடுகிறேன் என்பதில் வருத்தமே.

கிராமத்து நினைவுகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

30 எண்ணங்கள்:

S சொன்னது…

திருவிழா என்றாலே அது கிரமத்திற்க்குத்தான்.
அண்டை வீடும் பக்கத்து தெரு நண்பன் என்று பழகியவர்களின்
தொடற்ச்சியாய் மகிழ்ச்சி அணைவருக்குமானது.
பக்கத்து வீடு மனிதரின் முகமே அறியாத நகர்ப்புரத்தானிற்க்கு
திருவிழா சம்பிரதாயமே.

மனதை கிரமத்திலும்
இருப்பை நகரிலும் கொண்டவனின்
அல்லாடலே திருவிழா சம்பிராதாயம்.

"பொன் வைத்த இடத்தில்
பூ வைத்த கனக்காய்"

சரவணகுமார்

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
உண்மையில் மறக்க முடியாத நினைவுதான் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி.த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Angel சொன்னது…

சுவாரஸ்யமாக இருந்தது வாசிக்க.10 வயது வரை கிராமத்தில் இப்படி கண்டு இருக்கேன் ..அந்த சந்தொஷம்லாம் தனி சகோ .உங்க ஊர் பொங்கல் விழா படம் அருமை .

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

படிக்கும்போதே ரசிக்கும்படியான இருக்கிறது...
கிராம பொங்கல் வழிப்பாடு பலசடங்குகளுடனும் ரசிக்கும்படியாகவும் மனதில் நீங்காத நினைவுகளாகவும் பதிந்துக்கிடக்கும்...

இதுபோன்ற நிகழ்வுகளை தவறவிடும்போது கண்டிப்பாக மனசு வலிக்கும்

KILLERGEE Devakottai சொன்னது…

உண்மைதான் நண்பரே பொங்கல் கொண்டாடி விட்டு தேவகோட்டையிலிருந்து புறப்பட்டவன் 19 ஆண்டுகள் கடந்து விட்டன.... அடுத்த வருடப்பொங்கல் முதல் கண்டிப்பாக எனது இனிய இந்தியாவில்தான்.
தமிழ் மணம் 5

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்ன தான் ரசித்தாலும் மனதின் ஏக்கம் புரிகிறது...

துரை செல்வராஜூ சொன்னது…

இனிய நினைவுகளில் ஆழ்கின்றது மனம்..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நினைவுகள் என்றுமே இனிமையானவைதான்
தங்களின் ஏக்கமும் புரிகிறது
தம +1

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

r.v.saravanan சொன்னது…

நானும் சிறு வயதில் கிராமத்தில் பொங்கல் திருவிழா பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்
அது ஒரு இனிய காலம் குமார்

ராமலக்ஷ்மி சொன்னது…

அந்நாளைய நினைவுகளை மலரச் செய்தது உங்கள் பதிவு. இன்னும் கிராமத்தில் இந்தப் பாரம்பரியங்கள் தொடருவது மகிழ்ச்சியைத் தருகிறது. நல்ல பகிர்வு.

ஜோதிஜி சொன்னது…

அவரவர் வாழும் சூழலில் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பழைய நினைவுகளை அசை போட்டுக் கொள்ள வேண்டியது தான். இனிய வாழ்த்துகள் குமார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ம்ம்ம்பழைய நினைவுகள் ....பெருமூச்சுத்தான்...ஹை பரவாயில்லையே லைவ் ரிலேயா..உங்கள் ஊரிலிருந்து....ஆம் உங்களுக்கு அது மனதில் ஒரு சிறிய சந்தோஷத்தைத் தந்திருக்கும்...இதற்காகவாவது டெக்னாலஜி வாழ்க....

கோமதி அரசு சொன்னது…

அருமையான மலரும் நினைவுகளை தாங்கிய பதிவு.
இங்கும் , கோவிலும், சில் வீடுகளிலும் நீங்கள் சொல்வது போல் நான்கு பக்கம் வாசல் போல் வைத்து மண்வெட்டியால் வெட்டி வைக்கப்படும் வீடு போன்ற அமைப்பிலானது. செய்து இருந்தார்கள் பார்த்தேன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஸ்வாரசியம் குமார். இப்படி ஒரு கிராமத்தில் இருந்து பொங்கல் கொண்டாட வேண்டும்.... பார்க்கலாம் எப்போது முடிகிறது என....

krish சொன்னது…

i was in village until my +2. I was from educated family and I all the way hated the village life & the villagers surrounding me.

But now I miss and I love them so much. But it is too late. Yearly once I go and it kindles all memory for me. Thats it.

Nowadays becoming more emotional after running behind US and Dollars.

Regards,
Krishna

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார், கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கண்டிப்பாக எங்கள் ஊருக்கு வாங்க அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
எனக்கு கிராமத்து வாழ்க்கை ரொம்பப் பிடிக்கும்..
இப்போ வெளிநாட்டு வாழ்க்கையில் ரொம்ப மிஸ் பண்ணுறேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.