மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 23 ஆகஸ்ட், 2014

வெள்ளந்தி மனிதர்கள் : 1. முனைவர் மு.பழனி இராகுலதாசன்.



ந்த வெள்ளந்தி மனிதர்கள் பதிவில் என் வாழ்வில் நான் நினைத்துக் கூடப் பார்க்காமல் கிடைத்த மிகப் பெரிய உறவுகளைப் பற்றி பகிரலாம் என்று நினைக்கிறேன். எத்தனை எத்தனை உறவுகள்... எப்படிப்பட்ட உறவுகள்... அவர்களைப் பற்றியெல்லாம் ஒரு முறை அல்ல வாழ்நாளில் பலமுறை அசை போடலாம். இவர்கள் எல்லாம் இப்படித்தான் வாழனும் என வாழ்க்கைப் பாடத்தைப் போதித்தவர்கள். இவர்களுடன் பழகிய காலங்களில் இவர்களின் குடும்பத்தில் செல்லப்பிள்ளைகளாக வலம் வந்தோம் என்பதை நான் மட்டுமல்ல என் நட்புக்களும் சந்தோஷமாகச் சொல்வார்கள். 

ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதும் இவரைப் பார்க்க வேண்டும் அவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் எழும். ஆனால் ஊருக்குப் போனதும் வேலைகள் ஒவ்வொன்றாகக் கூட அவற்றை முடித்து நிமிரும் போது ஒரு மாதம் ஓடிவிடும். சரி அடுத்த முறை பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் மீண்டும் திரும்பி வந்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது. 

வெள்ளந்தி மனிதர்களில் முதலில் வருபவர் எனது கல்வித்தந்தை எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியர். முனைவர் மு.பழனி இராகுலதாசன் அவர்கள்.

Displaying ayya.jpg

படிக்கும் காலத்தில் பல விஷயங்கள் பேசி மகிழ்ந்த இடம்தான் எங்க தமிழய்யா வீடு. அப்போது வேறு வீட்டில் குடியிருந்தார்கள். மாலை நேரம் எங்களுக்கு அங்குதான் கழியும். விடுமுறை நாட்களும் அப்படியே. எனக்கு அப்போது தொண்டையில் உள்நாக்கு வளர்ந்து அடிக்கடி பிரச்சினை வரும். காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவரைப் பார்த்தால் சரி ஆகும் என என்னை வாராவாரம் கூட்டிச் சென்று காண்பித்து சரி பண்ணியவர் ஐயா, மேலும் மாத்திரை சாப்பிடும் போது காபி, டீ குடிக்க வேண்டாம் என மருத்துவர் சொல்ல மேகலாவிடம் எனக்கு மட்டும் ஸ்பெஷலாக பால் போட்டுக் கொடுக்கும்படி அம்மாவிடம் சொல்லச் சொல்வார். எத்தனை பேர் இருந்தாலும் எம்புள்ள காபி, டீ குடிக்கக்கூடாது என பால் மட்டுமே காய்ச்சிக் கொடுப்பார் அம்மா. அந்த அன்பு அம்மாவிடம் இன்றும் தொடர்கிறது. இப்போது போனாலும் எனக்கு அம்மா கொடுப்பது காபி, டீ அல்ல பால்தான்... 

எப்ப ஊருக்குப் போனாலும் ஐயா வீட்டுக்கு அடிக்கடி சென்று அவர்களுடன் அமர்ந்து பேசி அம்மா கையால் கொடுக்கும் பாலோ, பலகாரமோ சாப்பிட்டு ஐயாவுடன் கொஞ்சம் இலக்கியம் நிறைய குடும்ப விஷயங்கள் பேசி மகிழ்வேன். என்னைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் எனக்குத் தாய் தந்தையர்தான். எனது வீட்டு விசேசங்கள் என்றால் இருவரும் வந்துவிடுவார்கள். இந்த முறை வீட்டில் நிகழ்ந்த சின்ன விழாவிற்கு அழைத்தபோதே அம்மா நான் வந்துவிடுவேன். உங்க ஐயாதான் இப்ப எங்கும் போவதில்லை. ஆனா நம்ம வீட்டுக்கு கண்டிப்பா வரச்சொல்லுறேன் என்றார்கள். அப்பவே ஐயா எனக்கு ஒரு வேலை இருக்குய்யா முடிச்சிட்டு கண்டிப்பாக வாறேன் என்றார்.

விழா அன்று அம்மா மட்டுமே வந்தார். ஐயா வருவாக எனச் சொல்லிச் சென்றார். ஆனால் அன்று அவர் வரவில்லை. மறுநாள் காலை எங்கள் வீட்டிற்கு ஐயா வந்தார். எப்பவும் போல் அதே சைக்கிள்... அதே புன்னகையுடன் வந்தார். அவர் அமர்ந்த நாற்காலிக்கு அருகில் தரையில் நானும் என் மனைவியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்தத் தருணங்கள் மிகவும் சந்தோஷமானவை. பேச்சின் இடையே மனைவி கொடுத்த காபியை உறிஞ்சியபடி நேற்றிலிருந்து உங்க அம்மா 'குமார் வந்து சொல்லிட்டுப் போச்சுல்ல... பொயிட்டு வாங்க' என என்னையப் போட்டு நச்சரிக்கிறாங்க. 'அதான் நீங்க பொயிட்டு வந்துட்டீங்கள்ல அது போதும்' எனச் சொன்னாலும் அவங்க விடலை. ஏன்னா அம்மாவுக்கு குமார் மேல ரொம்பப் பாசம் என என் மனைவியிடம் சொன்னார்.

ஸ்ருதிக்கு பாரதியார் கவிதைகள், ஆங்கிலக் கதைப் புத்தகம், டிராயிங் நோட்டு என எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பார்த்த விஷால் அவரிடம் 'தாத்தா அதுக்கு மட்டும் எல்லாம் கொண்டாந்து கொடுத்திருக்கீங்க... எனக்கு மட்டும் எதுவுமே கொடுக்கலை' என அவரிடம் நேரிடையாகக் கேட்க அடுத்த முறை உனக்கு வாங்கி வருகிறேன் என்றவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனது கையில் வைத்திருந்த பைக்குள் தேடி சிவப்பு, ஊதா என இரண்டு பேனாக்களை எடுத்துக் கொடுத்தார். அவர் கையில் இருந்து பேனா பெருவது பெரிய விஷயம். பெரும்பாலும் யாருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்க மாட்டார். கல்லூரியில் படிக்கும் போது எனக்கு மை ஊற்றி எழுதும் பேனா ஒன்று கொடுத்தார். அது இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அதைச் சொன்னதும் வெண்ணிற தாடிக்குள் வெள்ளந்தியாய்ச் சிரித்தார்.

அப்புறம் நித்யாவிடம் நான் நிறையப் பேருக்கு கல்யாண வாழ்த்துப்பா எழுதி மேடையில வாசிச்சிருக்கேன். ஆனா எனக்கு ரொம்பப் பிடிச்சது உங்களுக்கு வாசிச்ச வாழ்த்துப்பாதான் என்றவர் எங்கள் திருமணத்தில் அவர் வாழ்த்துப்பா வாசித்ததற்குப் பின்னே நிகழ்ந்த நிகழ்வுகளைச் சொன்னார். வாழ்த்துப்பா வாசித்து முடித்து கீழே இறங்கினால் இலக்கிய மேகம் சீனிவாசன் வந்து என் காலைத் தொட்டு வணங்கி ஐயா வாழ்த்துப்பா ரொம்ப அருமையா இருக்கு... எல்லாருக்கும் எழுதினதைவிட குமாருக்கு எழுதியது ரொம்பச் சிறப்பா இருக்கு... குமார் மட்டும் ரொம்பப் ஸ்பெஷலா? என்று கேட்டார். அதற்கு என் பிள்ளைகள் இருவருமே அருமையான பிள்ளைகள்... அதுதான் பாடலும் அருமையாக வந்திருக்கிறது என்று சொன்னேன் என்றார். இன்னும் அந்த வாழ்த்துப்பா பேப்பரை பத்திரமாக வைத்திருப்பதாகச் சொன்னார். இதைவிட எங்களுக்கு வேறென்ன சந்தோஷம் வேண்டும்,

இதே ஐயாதான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கடைசியில் எங்கள் வகுப்பில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் பேசும் போது 'மேகலாவோ மேவியதோர் அண்ணன் என்கிறாள்... வாசகனோ தனக்கு வாய்த்த தம்பி என்கிறான்... இல்லத்தாளோ இனிய மகன் என்கிறார்... பிறகு நான் என்ன சொல்ல... எனச் சொன்னார். அந்தத் தந்தையின் பாசம் அன்று முதல் இன்று வரை மாற்றுக் குறையாமல் மலர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இப்படியான மனிதர்களை எல்லாம் என் வாழ்வில் கிடைக்கச் செய்த இறைவனுக்குத்தான் முதலில் நன்றி சொல்லணும். ஐயாவை முதன் முதலில் சந்திக்க வைத்து என்னை ஐயா எழுத்தாளனாக்க அடி எடுத்துக் கொடுத்த முருகனை இங்கு நினைத்துக் கொள்கிறேன்.

வெள்ளந்தி மனிதர்கள் வரிசையில் அடுத்து பதிவில் எனது அன்பிற்குரிய ஆசான். புலவர் ம. சவரிமுத்து ஐயா அவர்களுடனான உறவு குறித்துப் பார்க்கலாம்.

-தொடர்வார்கள்...
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

இனிய மனிதரைப் பற்றி நினைவு கூருதல் நலமே.

கவிதை வானம் சொன்னது…

வெள்ளேந்தி மனிதராக ஓர் ஆசிரியரை பார்த்தப்போது........உண்மைதான்

KILLERGEE Devakottai சொன்னது…


பழமையை மறவாத தங்களின் செயல்பாடு பாராட்டுக்குறியது... கவிதைப்போட்டிக்கு அனுப்பிய எனது கவிதை காண வேண்டுகிறேன் நண்பரே...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ஐயாவின் பாசம் சிலிர்க்க வைத்தது! அருமையான மனிதரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்லதொரு மனிதரைப் பற்றி சிறப்பாக அறியத் தந்திருக்கிறீர்கள்.

அன்பினால் உங்கள் மனதில் உயர்ந்து நிற்பவர்களைப் பற்றித் தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறோம்.

Unknown சொன்னது…

நமக்குள் என்ன பொருத்தம் இன்றைய என் பதிவிலும் ஒரு தமிழ் ஆசிரியர் ,ஆனால் அவர் மோசமான ஆசிரியர் .உங்கள் ஆசிரியரோ மனிதப் புனிதராய் இருக்காரே !
த ம 1

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சிறப்பான நினைவு கூறல். நம் மீது அன்பு கொண்டவர்களை நினைவு கூர்வது அலாதி இன்பம்தான்.

J.Jeyaseelan சொன்னது…

great person sir.... keep it up sir!!!