மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

மாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன்


சமீபத்தில் திருநெல்வேலி நண்பர்களோடு சேர்ந்து குறுக்குத்துறை ஆற்றுக்குக் குளிக்கச் சென்றேன். புதுமைப்பித்தன் குளித்தேறிய அந்தப் படிக்கட்டுகளில் ஒரு துயர நாட கத்தைப் போல அரங்கேறிக்கொண்டிருந்தது ஒரு காட்சி. ஆண்கள் கூட்டம் பின்னால் நகர்ந்து வர ஐம்பது, அறுபது பெண்கள் சேர்ந்து ஆற்று மண்டபத்துக்கு ஒரு அம்மாவை அழைத்துவந்தார்கள். அந்த அம்மாவுக்கு அதிகபட்சம் ஐம்பது வயது இருக்கலாம். அந்த அம்மாவின் தலையில் இருந்த மல்லிகைப்பூ, ஒரு பெரிய தோட்டத்தில் பூத்த மொத்தப் பூவாக இருக்க வேண்டும். அவ்வளவு பூ. அதைச் சுருட்டிச் சுருட்டி தலை முழுவதும் அப்படியும் இப்படியுமாக நிரப்பிவைத்திருந்தார்கள். அந்த அம்மாவின் இரு கைகள் கொள் ளாத அளவுக்குக் கண்ணாடி வளையல்கள். யாரோ பார்வையற்றவர் அள்ளிப் பூசியது போல  நெற்றி நிறைய அவ்வளவு குங்குமம். உடம்பு முழுக்கச் சுற்றப்பட்ட பல வண்ணச் சேலைகள் என, குயவர் புதுசாகச் செய்து கொண்டுவந்த  பேச்சியம்மன் சிலை போல அசைந்து வந்த அந்த அம்மாவை, மெல்லிய ஒப்பாரியோடுஆற்றின் படிக்கட்டுகளில் அமரவைத்தார்கள்.

அந்த அம்மாவின் தலையில் சூட்டப்பட்டு இருந்த ஒரு கூடை மல்லிகைப் பூவை எடுத்து, நான்கு வெள்ளைச் சேலை கட்டிய பாட்டிகள் ஏதோ முனகியபடி ஆற்றில்விட்டார்கள். பிறகு அந்த அம்மாவின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு இரண்டு பாட்டிகள் குலுக்க, பல வண்ணங்களில் உடைந்து சிதறிய கண்ணாடி வளையல் துண்டுகள், படிக்கட்டுகளில் விழுந்து சிதறித் தெறித்து, ஆற்றோடு ஆழ்ந்துபோயின. உடலில் சுற்றியிருந்த பல வண்ணப் புடைவைகளை ஒவ்வொன்றாக உருவி ஆற்றுக்குள் ஒரு முக்குமுக்கி படிக்கட்டில் தூரமாக வீசினார்கள். கடைசியாக அந்த அம்மாவின் தாலிக் கொடியை ஒரு பாட்டி கழற்ற ஆரம்பித்தபோது, அதுவரை வெறுமென சிலை போலிருந்த அந்த அம்மா, வெடுக்கென கண் விழித்து தாலிக் கொடியை இறுக்கமாக கொஞ்ச நேரம் பிடித்துவைத்துக்கொண்ட அந்தக் காட்சி... அங்கு நின்ற அனைத்துப் பெண்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துவிட்டது. சில பெண்களின் கை அவர்களை அறியாமல் அவர்களின்கழுத் தையும் அதில் தொங்கும் தாலியையும் தடவிக்கொடுத்தது தெரிந்தது. எப்ப டியோ அந்த அம்மாவின் கழுத்தி லிருந்து தாலியைக் கழற்றியவர்கள், அதை ஒரு வெண்கலச் செம்புக்குள் போட்டார்கள். அப்புறம் அப்படியே அசையாமல் ஆற்றுக்குள் அந்த அம் மாவைக் கூட்டிக்கொண்டுபோய் ஒரு முக்கு முக்கினார்கள். அத்துடன் சரி... ஒரு வெள்ளைப் புடைவையால் அந்த அம்மாவின் உடலை முழுவதும் சுற்றி, முகத்தையும் மூடி எந்த வண்ணமும் இல்லாமல் வெள்ளை வெளேரென அழைத்துக்கொண்டு போனார்கள்.

அவர்கள் போனதுக்குப் பின் நெடுநேரம் அந்த அம்மாவிடமிருந்து பிடுங்கி வீசப்பட்ட அத்தனை வண்ணங்களும் குறுக்குத்துறைப் படிக்கட்டிலிருந்து ஆற்றுக்குள் வடிந்துகொண்டிருந்தது. கணவனை இழந்துவிட்டாள் என்பதற்காக அந்த அம்மாவின் வண்ணங்களை இவ்வளவு கட்டாயப்படுத்திக் கலைத்து போட வேண்டுமா எனத் தோன்றியது. மனைவியை இழந்துவிட்ட பெரும்பாலான ஆண்கள் மறுநாளே பரோலில் விடுதலையாகும்போது, கணவனை இழந்த பெண்கள் மட்டும் ஏன் வண்ணங்களை இழந்த விதவைகளாகி, ஆயுள் கைதியாக வேண்டும்? நடு ஆற்றுக்குள் நின்று யோசிக்க யோசிக்கத்தான் எனக்குப் புரிந்தது, பால்யத்தில் சிறுவனான என்னைச் சாட்சியாகவைத்து சுப்பக்கா ஊருக்குள் நிகழ்த்தி விட்டுப்போனது, எவ்வளவு பெரிய சமூக யுத்தமென்று!

ஊரில் பெரியவர்கள் யாருக்குமே சுப்பக்காவைப் பிடிக்காது. ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை சுப்பக்காவை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொல்வார்கள்.  

வயதுக்கு வந்து தாவணி கட்டிவிட் டாலும் அதை மடித்துக் கட்டிக் கொண்டு, அவள் எங்களோடு பாண்டி ஆட வருவாள். அதைவிட பெருசுகள் கண் அசந்த நேரத்தில பசங்களுடன் மல்லுக்கட்டி சுப்பக்கா கபடிகூட ஆடியிருக்கிறாள். கையில் ஒரு கொத்து கொடுக் காப்புளி இருந்தால்போதும், பள்ளிக்கூடம் சென்று கொண்டிருக்கும் பிள்ளைகளை மறித்து, 'புள்ளையளா அந்த போஸ்ட்ட போய் முதல்ல யார் தொடுதாவளோ, அவங்களுக்குத்தான் இந்தக் கொடுக்காப்புளி’ என்பாள். யார் போய் முதலில் போஸ்ட்டைத் தொட்டாலும் கொடுக் காப்புளி எல்லாருக்கும் நிச்சயம். 'மாமன் ஒரு நாள் மல்லிகைப் பூ கொடுத்தான்’, 'செந்தூரப் பூவே...’ என எங்கிருந்து எந்தப் பாடல் கேட் டாலும், அங்கிருந்தபடியே அந்தப் பாடலை அப்படியே பாடுவாள் சுப்பக்கா. அவள் பாடியதைக் கேட்டவர்கள், பார்த்தவர்கள் எல்லாரும் சொல்வார்கள்... 'இந்தப் புள்ள குழந்தையா இருக்கும்போதே வயசுக்கு வந்துடுச்சா... இல்ல வயசுக்கு வந்த பெறவுதான் குழந்தையா மாறிச்சா? தெருவுல இப்படிக் கெடந்து ஆடுது!’

நான் நான்காவது படிக்கும்போது சுப்பக்காவுக்குக் கல்யாணம் நடந்தது. தாலி கட்டும்போது அவளை வெட்கப்படவைக்க, ஒரு ஆணிடம் தலை குனியவைக்க எல்லாரும் எவ்வளவு கஷ்ட பட்டார்கள் என்பது இன்னும் ஊர் கூரையில் ஏறி நிற்கும் நகைச்சுவை. அன்று சிரிப்பும்விளை யாட்டுமாக கணவன் வீட்டுக்குப் போனவள், நான் ஏழாவது படிக்கும்போது வெள்ளைச் சேலையோடு திரும்பிவந்துவிட்டாள். டிரை வரான கணவன் லாரி விபத்தில் மரணமடைந்த அன்று முதல் அழகான சுப்பக்கா அபசகுன சுப்பக்காவாக மாறி, வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டாள்.

தெருவில் நாங்கள் விளையாடிக்கொண்டு இருக்கும்போது வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பாள். அதைத் தாண்டிக் கூப்பிட்டாலும் வர மாட்டாள். அங்கு இருந்தபடியே எங்கள் விளையாட்டில் நடக்கும் கோல்மால்களுக்குச் சாட்சி சொல் வாள். நாங்கள் பாட்டுப் பாடினால் அவளும் பாடுவாள். தாகம் எடுப்பவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பாள். நன்றாகப் பாடிய, ஆடிய குழந்தைகளைக் கூப்பிட்டு, வாசலுக்கு உட்பக்கம் இருந்தே முத்தங்களைக் கொடுப்பாள். நாளாக நாளாக வெளியே விளையாடிக்கொண்டிருந்த நாங்கள், ஆளில்லாத நேரங்களில் சுப்பக்காவின் வீட்டுக்குள் அவளோடு சேர்ந்து விளையாடத் தொடங்கினோம்.


ஒரு பெட்டியை எடுத்து நடுவீட்டில் வைத்துக்கொண்டு, அதில் உள்ளிருக்கும் அத்தனை வண்ணச் சேலைகளையும் எடுத்து உடுத்திக்கொண்டும், சின்னப் பெண் குழந்தைகளின் தலையில் இருக்கும் வாடிய மல்லிகைப் பூக் களை வாங்கி தலையில் சூடிக்கொண்டும், வித விதமான கலர் பொட்டுகளை எல்லாருக்கும் வைத்துவிட்டு தானும் வைத்துக்கொண்டும், வீட்டுக் கதவை அடைத்துக்கொண்டு சுப்பக்கா எங்களோடு ஆடிய ஆட்டமும் பாடிய பாடல் களும், இன்னும் அப்படியே நினைவின் தாழ் வாரத்தில் சொட்டிக்கொண்டிருக்கிற மழைத் துளி. 'நான் இங்கே உங்ககூட சேலை கட்டி பூ வெச்சி விளையாண்டதை யார்கிட்டயும்சொல் லக் கூடாது’ என்று சுப்பக்கா எங்களிடம் சொல் லித்தான் அனுப்புவாள். ஆனால், யார் சொல் லித் தெரியுமோ, அது எல்லாருக்கும் தெரிந்து விடும். 'வூட்டு ஆம்பிளையச் சுட்டு, ஆத்துல அள்ளிவுட்டு அத்தன மாசம்கூட ஆகல. எங்க வூட்டுப் பொம்பளைக்கு அதுக்குள்ளே பூ மேல, சீலை மேல ஆசை வந்துடுச்சி’ என்று சுப்பக் காவின் அம்மா சுப்பக்காவைத் தீட்டித் தீர்ப்பதை ஊரே, 'இந்தப் புள்ளை என்ன இப்படி இருக்கு’ என்பதைப் போல வேடிக்கை பார்க்கும்.

சுப்பக்கா ஒருநாள் கூப்பிட்டு அவளுக்கு வந்த ஒரு கடிதத்தை என்னைப் படிக்கச் சொன்னாள். அவள் தோழி திருப்பூரிலிருந்து அவளுக்கு எழுதிய ஆறுதல் கடிதம் அது. ரொம்பவே நெருக்கமான தோழி போல... அவ்வளவு உருகி எழுதியிருந்தாள். படித்து முடித்ததும் சுப்பக்கா ஏதோ முடிவு எடுத்துவிட்டதான முகபாவனையில், 'டேய், அக்காவுக்கு வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு. நாளைக்கு நீ கருங்குளத்துக்குப் பள்ளிகூடம் போறப்ப ஆஸ்பத்திரி வரைக்கும் என் கூட வர்றீயா?’ என்று கேட்டாள். சுப்பக்கா கூப்பிட்டால் போகாமல் இருக்க முடியுமா? போனேன். சுப்பக்கா என் புத்தகப் பையை வாங்கி அதிலிருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வீட்டில் உள்ள ஒரு பெட்டியில்போட்டுவிட்டு அந்தப் பை நிறைய அவளுடைய சேலை ரவிக்கைகளை எடுத்துவைத்துக்கொண்டாள். 'எதுக்குக்கா புக்கெல்லாம் எடுத்துவைக்கிற? என்று கேட்டால், 'நீ பள்ளிக்கூடத்துக்கா போகப் போற... என்கூட ஆஸ்பத்திரிக்குத்தானே வரப் போற... பேசாம வா!’ என்று கூட்டிப்போனாள். கருங்குளம் ஆஸ்பத்திரிக்குப் போனதும் உள்ளே போகாமல் வெளியே ரோட்டிலேயே நின்று கொண்டிருந்தவள், 'தம்பி, அக்கா ஊருக்குப் போறேன். இந்தா... இந்தக் காசை வெச்சுக்கிட்டு நீ வீட்டுக்குப் போ. அங்கே அக்கா எங்கனு யார் கேட்டாலும் எனக்குத் தெரியாது... எங்கேயோ பஸ்ல ஏறிப்போச்சு’னு சொல்லிடு... என்ன?’ என்று என் கையில் சில்லறைக் காசைத் திணித்து விட்டு ஓடிப்போய், அப்போது வந்த எலியாஸ் பஸ்ஸில் ஏறி, விருட்டென்று ஒரு மின்னலைப் போல மறைந்துபோய்விட்டாள் சுப்பக்கா.

நான் வீட்டுக்குத் திரும்பி வருவதற்குள் மொத்தத் தெருவுமே கூடிவிட்டது. வருகிறவர், போகிறவர் என யார் யாரோ என்னை அடித்தார்கள். அடுத்தவர்கள் என்னை அடிக்கக் கூடாது என்பதற்காக அம்மா ஒரு கம்பை எடுத்து கொஞ்ச நேரம் அவள் கை வலிக்க என்னை விளாசினாள். 'எப்பா, ஆச்சி கேட்கம்லா... சொல்லுப்பா... அக்கா யார்கூடப்பா போனா?’ என்று சுப்பக்காவின் அம்மா என் காலில் விழுந்து அழுது புரண்டுகொண்டிருந்தாள். பதில் சொல்லாமல் அப்படியே குனிந்து நின்ற தால், ஆளாளுக்கு என்னை அடித்து நையப் புடைத்தார்கள். வலி பொறுக்க முடியாமல் எனக்குத் தெரிந்த பதிலை அப்போதைக்குச் சொன்னேன்.

'அக்கா எலியாஸ் பஸ்ல ஏறிப் போச்சு!’

'எங்க போச்சு?’

'ஊருக்குப் போச்சு!’

'எந்த ஊருக்கு?’

'எலியாஸ் பஸ் போற ஊருக்கு!’

'யார்கூடப் போச்சு?’

'தனியாதான் போச்சு!’

'யாரைப் பாக்கப் போச்சு?’

'டாக்டரைப் பாக்கப் போச்சு!’

'எந்த டாக்டர்?’

'வயித்து வலி டாக்டர்!’

இதே பதிலைத்தான் நாள் முழுக்க யார் கேட்டாலும் சொல்லிக்கொண்டே இருந்தேன் என்பதால் அவர்கள் ஓய்ந்துவிட்டார்கள். ஆனால் சுப்பக்காவைத்தான், 'எம்மா... புருஷன் செத்து எட்டு மாசம் இருக்குமா? அதுக்குள்ளே இந்தப் புள்ளைக்கு ஆம்பள சோக்கு கேட்டிருக்கு பாரேன்!’, 'நல்லவேளை அவன் செத்தான்... அவன் உயிரோட இருந்தாலும்
இவ வேற ஒருத்தன்கூட ஓடிருப்பா போலிருக்க!’ என்று ஊர் வாய்  கிழி கிழி என்று கிழித்தெடுத்துவிட்டது. வாய் வலிக்கும் வரை பேசினார்கள். அப்புறம் 'எங்கேயோ போய் தொலைந்தது’ என்று சுப்பக்காவை மறந்துவிட்டார்கள்.

அதன் பிறகு ஊரில் எந்த வீட்டிலிருந்து எந்த அக்கா கடைக்குக் கடுகு வாங்க என்னைக் கூப் பிட்டாலும், 'என்ன மகாராணி... யார்கூட ஓடிப் போறதுக்கு அந்தப் பயலைத் தூதுக்குக் கூப்பிடுற?’ என்று அந்த அக்காவுக்கும் எனக்கும் அன்று வீட்டில் பூசைதான் நடக்கும். தெருவில் எப்போ தாவது விளையாடிக்கொண்டிருக்கும்போது சுப்பக்காவின் அம்மா என்னைப் பார்த்தால் போச்சு... 'என் குடியைக் கெடுத்துட்டு ஆட்டத் தைப் பாரு’ என்று மண்ணை அள்ளி வானத்தைப் பார்த்து வீசுவாள்.

நல்லவேளையாக நான் ஏழாப்பு படிக்கும்போது ஓடிப்போன சுப்பக்கா, நான் ஒன்பதாப்பில் இருந்தபோது, திரும்பிவந்துவிட்டாள். எல்லாருக்கும் ஆச்சர்யம். காரணம், சுப்பக்கா அப்போதுதான் வயசுக்கு வந்தவளைப் போல மாறி அவ்வளவு ஜொலிஜொலிப்பாக இருந்தாள். ஆனால், வந்தவள் சும்மா வரவில்லை... யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல பத்து பெண் தோழிகளை உடன் அழைத்து வந்திருந்தாள். அந்தப் பட்டாம்பூச்சி குழாம், ஊராரின் வாயை எதுவும் சொல்லவிடாமல் அடைத்துவிட்டது. திருப்பூருக்குச் சென்று ஒரு புடைவைக் கடையில் இத்தனை நாள் வேலை பார்த்ததாகவும், தன்னோடு வந்திருக்கும் தோழிகள் அவளோடு வேலை பார்க்கும் பெண்கள் எனவும் எல்லாருக்கும் அறிமுகப் படுத்திவைத்தாள். சாஸ்திரம், சம்பிரதாயம், பெண்ணொழுக்கம் பேசிய எந்த வாயும் எந்தக் கேள்வியும் கேட்டு அவளிடம் வாயைத் திறக்கவில்லை. எல்லாமே 'ஆ’வென வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என்னை சுப்பக்கா அடையாளம் கண்டுபிடித்து அழைத்தபோது, விடலைப் பையனாக வளர்ந்திருந்த எனக்குக் கூச்சமாகிவிட்டது. நகராமல் அப்படியே சிரித்தபடி நின்றுகொண்டிருந்த என்னை, கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் அவளோடு தின்ணையில் உட்காரவைத்துக்கொண்டாள்.

''நான் போனதுக்கு அப்புறம், உன்னை ரொம்ப அடிச்சாங்களா மாரி?''

''ஆமாக்கா!''

''நீ என்ன சொன்ன?''

''நீங்க பஸ்ல ஏறிப் போனதாச் சொன்னேன்!''

''எங்க போனேன்னு சொல்லலியா?'

''எனக்குத் தெரியாதே... அதான் சொல்லலை!''

"திருப்பூர்ல இருந்து வந்த லெட்டரை நீதானே வாசிச்ச... அதைச் சொல்லலியா?''

''யோசிச்சு யோசிச்சுப் பார்த்தேன்... அந்த ஊர் பேர் வாயில வரலை... அதான் சொல்லலை!''

''வந்தா சொல்லியிருப்பியா?''

"ம்ம்ம்... கண்டிப்பா சொல்லியிருப்பேன். ஏன்னா அவ்ளோ அடி வெளுத்தெடுத்துட் டாங்க!''

எல்லாரும் நாங்கள் இருவரும் பேசுவதை ஏதோ ஒரு நாடகத்தைப் போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, சுப்பக்கா அவள் வாய் வரை வடிந்த கண்ணீரோடு என் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தாள். எல்லாருக்கும் கேட்டுவிட்ட அந்த  முத்தத்தின் 'ப்ச்’ என்ற சத்தம்தான் சுப்பக்காவின் 'விடுதலைப் பறை’ என்பது இப்போது புரிகிறது எனக்கு!

நன்றி : மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்
நன்றி : ஆனந்த விகடன்

-'பரிவை' சே.குமார்

7 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான சிறுகதை.

பகிர்ந்தமைக்கு நன்றி.

சக்தி கல்வி மையம் சொன்னது…

Nice

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி

ezhil சொன்னது…

##சுப்பக்காவின் 'விடுதலைப் பறை’ என்பது இப்போது புரிகிறது ## அருமையான வரிகள்...கதை அருமை...

கோமதி அரசு சொன்னது…

அருமையான கதை.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அருமையான தொடரை விகடனில் வாசிக்க முடியலைன்னு வருத்தமாயிருந்தது. இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மறக்கமுடியாத கதை.. பாராட்டுக்கள்..