"மாப்ள எந்திரிக்கிறாரு பாருங்க... வூட்டுக்குப் போவ அவதியாகிருச்சுனு எந்திரிக்கிறாரு பாருங்க... டேய் காண்டா... அந்தத் தடிக் குச்ச எடு'' - சடசடவென எரிந்துகொண்டிருந்த தீயிலிருந்து, பொறபொறவென முறுக்கி மேலெழுந்த பிணத்தை 'மட்ட்டேர் மட்ட்டேரென’ தடிக் கம்பால் கத்தியபடி அடித்தார் செல்வம். அந்த ராத்திரி வல்லம் சுடுகாட்டில் நண்பர் மருதுவுடன் உட்கார்ந்திருந்தேன். மருதுவின் தாத்தாதான் டிக்கெட் எடுத்தது. மயான உழைப்பாளி செல்வம்தான் இப்படிக் கத்திக்கொண்டு பிணத்தை அடித்தார். 'வூட்டுக்குப் போவ அவதியாகிருச்சுனு எந்திரிக்கிறாரு பாருங்க...’ என அவர் சொன்ன பின்புலத்தில் அந்தக் காட்சி இப்போதும் நினைவில் எரிகிறது. நேற்று இரவுதான் பிரமிளின் கவிதை ஒன்றில் 'வீடடைதல்’ என்ற வார்த்தையைக் கண்டடைந்தேன். பிணம் முறுக்கி எழுவதும் வீடடையும் நினைவில் அன்றோ?
பிரமிள் தன் கடைசிக் காலத்தில் வசித்த குடிசைப் பகுதி வீட்டைப் பார்க்கணும் போலிருக்கிறது. அப்புறம் பஷீரின் பூர்வீக வீடு. வெள்ளாடுகள் மேயும் பஷீரின் கதைகளில் படித்த அந்த வீட்டுக்குப் போக வேண்டும். எட்டயபுரத்தில் பாரதியாரின் வீட்டுக்குப் போய் இரண்டு ராத்திரிகள் பார்த்துக்கொண்டே நின்றிருக்கிறேன். கம்பிகளைப் பிடித்தபடி... விளக்கசையும் கூடத்தைப் பார்த்தபடி, பாரதி நினைவுகளில் நின்றிருக்கிறேன். ''இதான் காமராஜர் வாழ்ந்த வூடுப்பா...'' என அப்பா காட்டியபோது, ஓடிப்போய் வெகுநேரம் உட்கார்ந்திருந்தது ஒருமுறை. வண்ணதாசன் சார் வீட்டைப் பார்க்க இன்னும் போகவில்லையே என இக்கணம் தோன்றுகிறது. வாசலில் நந்தியா வட்டைகள் உதிர்ந்த, பூசணிப்பூ வைத்த, கரிசலாங் கண்ணிக் கீரைகள் முளைவிட்ட, மரவட்டைகள் ஊறும் ஈரம் படிந்த முற்றத்துடன் வண்ணதாசன் சார் எனக்கு அளித்த அவரது வீட்டுக்கு அவர்தானே வர வேண்டும் என்றும் தோன்றுகிறது.
ஒரு கருக்கலில் தென்காசியில் விக்ரமாதித்யன் அண்ணாச்சியின் வீட்டுக்குப் போய் நின்றேன். குளிர் நிறைத்த வீட்டுத் திண்ணையில் அண்ணியோடு அண்ணாச்சியைப் பார்த்தது அபூர்வமாயிருந்தது. ''காபி சாப்பிடுங்க ராஜு... நம்மூடு இது... இப்பிடிக் கொஞ்சம் நீட்டிக்குங்க ஃப்ர்ரியா...'' என அவர் சொன்னபோது சிங்கம்போல் தாடியை நீவினார். காடடைந்த சிங்கமும் வீடடைந்த கலைஞனும் ஒன்று.
வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்பது எத்தனை நாள் ஆசை..? பதின் வயதில் இன விடுதலைக்காக வீட்டைவிட்டு வெளியேறிக் காடடைந்தவரின் நினைவில் அழியாமல் நின்றிருக்கும் அந்த வீடு. அங்கே அத்தனை பேரின் மனசுக்குள்ளும் எத்தனை எத்தனை வீடுகள் இருந்திருக்கும்..? ஏதுமின்றிப் பதுங்கு குழிக்குள் இருந்த பாலச்சந்திரனின் கடைசி நிமிடங்களை உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா..? மக்கள் விடுதலைக்காகக் கடைசி வரை வீடடையவே முடியாத ஒரு தகப்பனின் பிள்ளை பதுங்கு குழிக்குள் கிடந்ததை... ஒன்றும் புரியாமல் பசித்த கண்களோடு வெட்ட வெளியில் விழுந்து செத்துப்போனதை... உங்களால் ஓட்டிப்பார்க்க முடிகிறதா..? இப்போது 'மேதகு தமிழினத் தேசியத் தலைவர் பிரபாகரன் இல்லம்’ என்ற எழுத்துகள் தார் பூசப்பட்டு, சிதைந்து சிதிலமாகிக் கிடக்கும் வல்வெட்டித்துறை வீட்டைப் பார்க்கும்போது அழுகையும் கோபமும் முட்டுகிறதா..?
என் நினைவில் படிந்து படிந்து ஏராளமான வீடுகள் கிடக்கின்றன. வாசலில் உப்புக்கறி காயும், அணிலும் உடும்பும் கட்டித் தொங்கும், புங்க மரத்தடியில் கயித்துக் கட்டில் விரித்துக்கிடக்கும் மணியின் குடிசை வீடு. எப்போதும் கறிக் குழம்பு மசாலா வாசம் அடிக்கும் சாணி மெழுகிய வீடு. ராத்திரிக்கு ரேடியோவில் வழியும் பாட்டும், தூரத்தில் எப்போதோ போகும் வாகனங்களின் சத்தங்களும், வீட்டை ஒட்டிய ஆகாயத் தாமரை மண்டிய குளக்கரையும், கயித்துக் கட்டிலில் தூங்கும்போது கொளத்துக்கு மேலே வந்து நிற்கும் நிலவுமாக... அப்படி ஓர் ஏகாந்தமான வீடு.
மணி, ஒரு குறவர். வேலை தேடி வீட்டைவிட்டு வந்துவிட்ட பிறகு, வேலை இல்லாமல் திரிந்தபோது மேலூரில் நான்கு நாட்கள் மணியின் வீட்டில்தான் தங்கியிருந்தேன். நாலு நாள்தான். ஆனால், நினைவில் காலம் தாண்டிச் சித்திரமாகிவிட்டது அந்தக் குடிசை. மூணாறில் அன்னாசித் தோட்டத்தின் நடுவே ஒரு ராத்திரி குண்டு பல்பில் தங்கியிருந்த மர வீடும் அப்படித்தான். பல்லாவரத்தில் ரயில்வே டிராக் ஓரம், ஹாலுக்குள் ரயில் புகுந்து ஓடுகிற மாதிரி இருக்கும் சேகர் வீடு. ஹைதராபாத் சார்மினார் ஏரியாவில் மாடியில் இருந்து கைக்கெட்டும் தூரத்தில் ரயில்கள் பறக்கிற ரதி வீடு. பம்மலில் மொட்டை மாடியில் தலையை உரசி உரசி விமானங்கள் பறக்கிற மகேஷ் வீடு. கொட்டிலில் குதிரைகள் கட்டிக்கிடக்கிற, கொல்லையில் வான்கோழிகள் மேய்கிற ஒட்டக் குடி தாத்தா வீடு, நெல் மூட்டைகள் அடுக்கப்பட்ட திண்ணையில் கோழிகள் மேய்கிற எனது பழைய கிராமத்து வீடு, கதவெல்லாம் பழைய ஹீரோயின்களின் படங்கள் ஒட்டப்பட்ட, ஜன்னலில் சினிமா போஸ்டர் தட்டிகள் கதவான, பவுடர் டப்பா ஆஷ்ட்ரேவாகவும், கருவக்குச்சி ஹேங்கராகவும் இருக்கும் வெங்கட் வீடு, மலை மேல் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் லோகம்மா வீடு, பொள்ளாச்சியில் வயல்களுக்கு நடுவே இருக்கும் சக்திவேலின் வீடு, சாக்கடைக் குழிக்குப் பக்கத்தில் சமையல் நடக்கும் தாராவி சின்னசாமி வீடு, எங்கு பார்த்தாலும் சாமி படங்கள் தொங்கும் செல்வி வீடு, சென்னையில் மெயின் ஏரியாவில் அத்தனை அபார்ட்மென்ட் மாடி வீடுகளுக்கு நடுவே ஆச்சர்யமாக இருக்கிற பழைய ஓட்டு வீடு என நிமிடத்தில் தடதடவென இவ்வளவும் வருகின்றன.
நான் ஒரு மலையாளப் பெண்ணைக் காதலித்தேன். அவளுக்கு திருவனந்தபுரம் பக்கம் ஒரு கிராமத்தில் பூர்வீக வீடு இருந்தது. இப்போது சென்னைக்கு வந்துவிட்டார்கள். ஆனால், அவள் பேசும்போதெல்லாம் அந்தப் பூர்வீக வீட்டைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பாள். பெரிய பெரிய குத்துவிளக்குகள் இருக்கும் முற்றங்களோடு, பின்வாசலில் குளம் இருக்கும் கிராமத்து வீடு. வீட்டை ஒட்டி இருக்கும் தோப்பு முழுக்கப் பாக்கு மரங்கள். அந்த வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாகப் போய்விடும் சதித் திட்டத்தில் நான் இருந்தேன்.
ஒருமுறை அவள் ஊருக்குப் போயிருந்தபோது லேண்ட்லைனில் போன் பண்ணினேன். எடுத்து என்னிடம் தமிழில் பேசியவள் வேறு யாரிடமோ திரும்பி, 'ஆங் குட்டா... உண்ணு கழிஞ்சு... போன்ல ஃப்ரெண்டானோ...’ என என்னவோ மலையாளத்தில் பேசினாள். அப்போது நான் அடைந்த ஆனந்தப் பரவசத்தைச் சொல்ல முடியாது. ஒரு மலையாள ஃபிகர்... கூடவே ஒரு கேரளத்து வீடு. அவள் ஊரிலிருந்து திரும்பிய நாளிலேயே எனக்கு போன் போட்டு அழுதாள்.
(ஓவியம்: ஹாசிப் கான்)
'ஏம்மா... என்னாச்சு..?''
''ரொம்பக் கஷ்டமா இருக்குடா... ஊர்ல இருக்கற வீட்டை வித்துட்டோம்... அக்காவுக்குக் கல்யாணம் பண்றோம். வீட்டை வித்துட்டு ஃபேமிலியே இங்க வந்துரலாம்னு வித்துட்டாங்க... என்னால தாங்கவே முடியலடா!''
இன்னொரு முறை மதுரையில் கீர்த்தனாவின் வீட்டைத் தேடிப் போனேன். முழுதாக முகவரிகூட இல்லாமல் நீங்கள் உங்கள் காதலியின் வீட்டைத் தேடிப் போயிருக்கிறீர்களா? காதலியின் வீடு என்பது காதலியேதான். அந்திக்கு மேல் பயந்து பயந்து போய் அரசரடி ஏரியாவில் வீட்டைத் தேடினேன். தெருத்தெருவாக அவள் எந்த வீட்டிலாவது தென்படுகிறாளா எனத் தேடினேன். வீடுகளுக்குள் நுழைந்து திண்ணைகளில் அவள் செருப்பு இருக்கிறதா..? கொடிகளில் அவள் சுடிதார்கள் காய்கிறதா எனப் பார்த்தேன். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. ஆனால், அது ஒரு கிறுக்கு... பித்து... அதுதானே காதல். அவள் வீட்டை ஒருமுறை பார்த்துவிட்டால் போதும் என்று திரிந்தேன். இரண்டாவது நாள் போனபோது ஒரு பூக்கார அம்மாவிடம் கீர்த்தனாவின் பெயர் சொல்லிக் கேட்டேன். ''அந்த தையக்காரு புள்ள வூடா? அந்தா கடேசில ஊதா கேட்டு போட்ட வூடுப்பா...'' என்றது. வேக வேகமாகப் போய் அந்த வீட்டைப் பார்த்தேன். ஊதா நிற மர கேட் போட்ட சின்ன வீடு. அப்படி ஒரு சாதாரண வீட்டிலிருந்தா கீர்த்தனா வருகிறாள் என ஆச்சர்யமாக இருந்தது. உள்ளிருந்து தையல் மெஷின் ஓடுகிற சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. பாதி ராத்திரி வரை அங்கேயே நின்று அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பிவிட்டேன். அப்புறம் எப்போது அவளை நினைத்தாலும் அந்த வீடும் சேர்ந்தே வருகிறது.
''மச்சான்... நா தங்கிருக்கற ஃப்ளாட்ல எதிர் ப்ளாக்ல ஒருத்தரு... செத்துப்போன வொய்ஃபைக் கூடவே வெச்சுக்கினு மூணு நாளா வூட்டுக்குள்ளயே இருந்துருக்கார்றா... கப்பு வந்து அக்கம்பக்கத்துல போய்ப் பாத்து.... போலீஸ்லாம் வந்து பாடியைக் கைப்பத்திருச்சு. அந்தம்மா ரொம்ப நாளா ஒடம்பு முடியாமக் கெடந்து செத்துப்போச்சு. என்னன்னு தெரில... அந்தாளுக்கு மென்டலா என்னமோ ஆகிருச்சு... வூட்லேருந்து வெளிய வுடாம அங்கயே உக்காந்துருக்காரு... அவர ஆஸ்பத்திரி அனுப்பிட் டாங்க. காலைல ஒரே கூட்டம்... தூக்கமே போச்சுரா...'' என ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு நண்பன் வந்து நின்றான். எனக்கும் அதைக் கேட்டுத் தூக்கமே இல்லை. அந்த மனுஷனும் மனைவியோடு அந்த வீட்டிலேயே செத்துப்போக நினைத்தாரா என்ன?
புலம்பெயர்ந்த ஒவ்வொருவர் நினைவிலும் தாய் நிலத்தில் இருக்கும் வீடு உயிர்த்திருக்கிறது. ''சிட்டில சொந்த வீடு வாங்கிரலாம்ல... மொதல்ல அஞ்சு ரூவா போதும். லோன் போட்டா மாசாமாசம் கட்டிக்கலாம். போரூர் பக்கம் பாத்தா கொஞ்ச எறங்கி வரும்...'' எனப் பார்க்கிற பாதிப் பேர் சொல்கிறார்கள். வேன் வேனாக ஏறி இடம் பார்க்கப் போகிறார்கள். வங்கிகள் எங்கும் கூட்டம் கும்முகிறது. நகரத்தைத் தாண்டினால், கலர் கலராக பெயின்ட் அடித்து சாலை ஓரமெல்லாம் ஃப்ளாட்கள். நடுத்தரவர்க்கத்துக்கு இப்போது இதுதான் பெரிய கனவு.
பறவைகளுக்குக் கூடடைதல் என்றால், மனிதர் களுக்கு வீடடைதல். கூடற்ற பறவைக்கு வானம். வீடற்ற மனிதனுக்கு ஞானம். 'சொந்த வீடு’ என்ற பதமே கொஞ்சம் காமெடிதான். வீடடைதல் என்ற ஒரு சொல், பல பொருள்களை வைத்திருக் கிறது. என்றோ ஒரு கணம் நானும் எனது வீட்டை விட்டு மானசீகமாக வெளியேறிவிட்டேன். ஜோடிப் பெயர்களும், கெட்ட வார்த்தைகளும், போன் நம்பர்களும் கிறுக்கப்பட்ட பப்ளிக் டாய்லெட்டில், ஸ்டவ் அடுப்பும், குண்டான் சட்டியும், ஒரு அட்டைப் பெட்டியும் வைத்துக்கொண்டு வீடடைந்துவிட்ட ஒரு குடும்பம் என்னை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டது. லாட்ஜில் ரூம் போட்டுச் சம்பாதித்த காசில், ஜி.ஹெச். வாசலில் ஸ்க்ராட்ச் கார்டு விற்கும் புருஷனுக்கு பொக்னா சோறு வாங்கிப் போகிறவள் வீடு பற்றிய என் கனவுகளை நொறுக்கிவிட்டாள். சாலையோரம் வசிக்கிறவர்களுக்கு அதுதான் வீடு.
விவசாய நிலத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு, ஊரிலிருந்து கடைசியாகக் கிளம்பிய தணிகை போன் பண்ணும்போது, ''உங்க ஏரியால நல்ல வீடிருந்தா பாரேன்... ஆறாயிரத்துக்குள்ள...'' என்கிறான். வாழ்ந்து கெட்டவர்களின் வீடு களையும் வாழ்ந்துகொண்டிருக்கிறவர்களின் வீடு களையும் கடந்து போய்க்கொண்டே இருக்கிற கால்கள் காலத்தினுடையது!
மானுடம் வீடாகிவிட்டால், எல்லா ஷாட்டும் டாப் ஆங்கிள்தான். அனைத்து முகங்களும் வீட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றன. அல்லது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. வீட்டிலிருந்து எடுத்து வந்த வருத்தங்களும் பிரியங்களும்தான் அவர்கள் முகம். அல்லது வீட்டுக்கு எடுத்துப் போகும் வருத்தங்களும் பிரியங்களும். வீடு நிம்மதி இல்லாத இடமாகவும் வீடு மட்டுமே நிம்மதியான இடமாகவும் இருக்கின்றன. இறுதியில் வீடடைவதுதான் எல்லோருடைய நோக்கமும். வீடு என்ற சொல் வீட்டை மட்டுமே குறிப்பதல்ல. அதோ வேக வேகமாகக் கடவுளும் போய்க்கொண்டிருக்கிறார்.
அவரை நிறுத்திக் கேட்கிறேன், ''எங்கே போகிறாய்..?''
''வீடடைவதற்கு...''
''வீடடைவதற்கா..? எங்கிருக்கு ஒன் வூடு..?''
சிரித்தபடி சொன்னார், ''உன் இதயத்தில்!''
நன்றி : ராஜுமுருகன், ஆனந்தவிகடன்
*************
நன்றி : ராஜுமுருகன், ஆனந்தவிகடன்
-'பரிவை' சே.குமார்
3 எண்ணங்கள்:
மானுடம் வீடாகிவிட்டால்...
சூப்பர்...
கண்ட, கேட்ட, அனுபவித்த அனுபவங்களை வார்த்தையாக்கி மனதில் தைக்கும் கலை கைவரப் பெற்றிருக்கிறார் ராஜு முருகன். இப்போதும் படித்து ரசிக்க முடிந்தது. அருமையான பகிர்வு!
வீடு நிம்மதி இல்லாத இடமாகவும் வீடு மட்டுமே நிம்மதியான இடமாகவும் இருக்கின்றன. இறுதியில் வீடடைவதுதான் எல்லோருடைய நோக்கமும். வீடு என்ற சொல் வீட்டை மட்டுமே குறிப்பதல்ல.//
வீடு சந்தோஷ்ம் , துக்கம், வெறுப்பு கொடுப்பது அவர் அவர் மனநிலையை பொருத்தது என்பது
உண்மை.
வீடு என்பது வீட்டை மட்டும் குறிப்பதல்ல வீடுபேற்றையும் தான் குறிக்கும்.
// அதோ வேக வேகமாகக் கடவுளும் போய்க்கொண்டிருக்கிறார்.
அவரை நிறுத்திக் கேட்கிறேன், ''எங்கே போகிறாய்..?''
''வீடடைவதற்கு...''
''வீடடைவதற்கா..? எங்கிருக்கு ஒன் வூடு..?''
சிரித்தபடி சொன்னார், ''உன் இதயத்தில்!'' //
அருமை அருமை.
இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி ஓடிக் கொண்டு இருக்கிறோம்.
வட்டியும் முதலும் படம் கதை சொல்கிறது.
கருத்துரையிடுக