மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 24 டிசம்பர், 2012

சச்சின் என்னும் சகாப்தம்..!


கிரிக்கெட் என்றால் நினைவில் வரும் பெயர் சச்சின்... சச்சின் மட்டுமே.... இந்தியாவில் மட்டுமல்ல.... உலக அளவில் கிரிக்கெட் அறிந்தவர்கள் உச்சரிக்கும் பெயர் சச்சின்.

கிரிக்கெட்டில் எத்தனை எத்தனையோ வீரர்கள் உலகெங்கும் இருந்தாலும் எல்லாரும் விரும்பும் வீர்ராக, களத்தில் சிங்கமாக திகழ்ந்த வீரர் சச்சின். எப்படிப்பட்ட வீரர் பந்து போட்டாலும் விளாசக் கூடிய திறமை படைத்தவர் சச்சின். 

படிக்கும் காலத்தில் சச்சினின் தீவிர ரசிகனாக இருந்தவன் நான். இன்றும் சச்சின் ஆட்டம் என்றால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு பார்க்கக் கூடியவன்தான். எந்தப் பத்திரிக்கையில் சச்சின் போட்டோ வந்தாலும் அதை எடுத்து வைக்கும் அளவுக்கு சச்சின் பைத்தியம் பிடித்தவர்களில் நானும் ஒருவன்.

சாதனைகளுக்காகவே பிறந்தவன் சச்சின்... கிரிக்கெட்டில் அவர் படைத்திருகும் சாதனைகள்தான் எத்தனை... எத்தனை...  அத்தனையும் எட்ட முடியாத சாதனைகள்தான்... அவரது சாதனைகளை தகர்க்க இன்னுமொரு சச்சின் பிறந்து வரவேண்டும் என்பதே உண்மை.

ஆடுகளத்தில் அவர் நின்றால் எதிர் அணிக்கு கிலி பிடித்துக் கொள்ளும் என்பதே உண்மை. சச்சினிடம் பிடித்த இன்னொரு விஷயம் அவரை அவுட் ஆக்கிவிட்டு அவருக்கு முன் கத்திக் கொண்டு ஓடினாலோ குதித்து அவரை பார்த்து கிண்டல் பண்ணினாலோ மைதானத்துக்குள் அவர் எதுவும் பேசமாட்டார். ஆனால் அடுத்த போட்டியில் அவரை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்.

ஜிம்பாப்வேயின் ஒலாங்கோ சில போட்டிகளில் சச்சினை ஆரம்பத்திலேயே அவுட்டாக்கிவிட்டு ஆட்டம் போட ஆரம்பித்தார். ஒலங்கா என்றாலே சச்சினுக்கு உதறல் எடுக்கும் என்ற விமர்சனமெல்லாம் வர ஆரம்பித்தது. ஒரு போட்டியில் பந்து வீச வந்த ஒலங்கோவின் பந்து ஆறுக்கும் நாலுக்கும் இடையில் மாட்டி சின்னாபின்னமாகியது. நான்கு ஓவர் போட்டவர் சச்சின் அவுட்டான பின்னர்தான் வந்தார். 

ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வார்னேயின் பந்தை சச்சின் விளாசியதை வார்னே இன்னும் மறக்கவில்லை. இலங்கையின் முரளிதரன் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம் ஆனால் சச்சின் அவருக்கு சிம்ம சொப்பனம்.

தான் அவுட் என்று தெரிந்தால் நடுவர் சொல்லும் முன்னரே வெளியேறும் சொற்ப வீரர்களில் சச்சினும் ஒருவர். ரன் குவிப்பில் சச்சினுக்கு நிகர் சச்சினே... 

ஜாம்பவான் சச்சின் சாதனைகள் பல புரிந்த போது தூக்கி வைத்து கொண்டாடிய பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் அவர் சில போட்டிகளில் விளையாடாத போது விமர்சிக்க ஆரம்பித்தனர். நேற்று கூட ஒரு தமிழ் பத்திரிக்கையில் வழியாக ஓய்வை அறிவித்தார் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. என்ன கொடுமை பாருங்கள். எத்தனை கேவலமான செய்திகள், கமெண்டுகள்... இவ்வளவுக்கும் சாதனை நாயகன் சச்சின் எந்த கருத்தும் சொல்லவில்லை. மௌனத்தையே பதிலாக அளித்தார். 

அவரின் இந்த முடிவு அவரது சொந்த முடிவாக இருந்தாலும் கேலிகளும் கிண்டல்களும்தான் ஒரு மாவீரனை இப்படி ஒரு முடிவெடுக்க வைத்துள்ளது என்பதே உண்மை. இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எப்படிப்பட்டவரும் கடைசியில் அசிங்கப்பட்டு கேவலப்பட்டுத்தான் வெளியே போவார்கள். இதற்கு உதாரணங்களாக கங்குலி, திராவிட், லெட்சுமணன்  என அடுக்கிக் கொண்டே போகலாம். அசிங்கங்கள் அரங்கேற பிள்ளையார் சுழி போடப்பட்ட போதே சச்சின் அசிங்கப்பட்டு போகக்கூடாது என்று கடவுளை வேண்டிய கோடானுகோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.

சச்சினின் ஓய்வுக்குப் பிறகு அவர் 50வது சதத்தை பூர்த்தி செய்திருக்கலாம். இப்போது ஓய்வு எடுத்திருக்க வேண்டாம் என்று ஆளாளுக்குப் பேசுகிறார்கள். முன்பு வெளியேறு என்று சொன்ன நாக்கு இன்று ஏன் வெளியேறினாய் என்கிறது. ஆமாம் நரம்பில்லாத நாக்குத்தானே எப்படியும் பேசும். திடீரென ஓய்வை அறிவித்து எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் சிங்கம் சிங்கம்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் சச்சின்.

சச்சின் இல்லாத இந்திய அணியில் இனி என்ன ஆகும் என்பதை பாகிஸ்தானுடனான ஒருதினப் போட்டியில் தெரிந்துவிடும். சச்சின் இல்லாதது உலக அணிகளுக்கு கொஞ்சம் அல்ல அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க சச்சின் விலகியிருக்கிறார். தொடர்ந்து சொதப்பும் சிலர் இன்னும் அணிக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சச்சினுக்குப் பிறகு தோனியில் தலையும் உருள ஆரம்பித்திருக்கிறது. நடப்பவைகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

சச்சின் கிரிக்கெட் என்னும் மதத்தின் கடவுள்... அவர் ஓய்வு அறிவித்தாலும் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காமல்தான் இருப்பார் என்பது எல்லாரும் அறிந்ததே....

சச்சினின் ஓய்வுக்காலம் குடும்பத்தாருடன் சந்தோஷமாகவும் மனதுக்கு நிறைவாகவும் அமையட்டும்.

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சச்சின் சாதனைகள் எப்போதும் நினைவு கூறத் தக்கவை. ஓய்வுக்குப் பின் விளையாட்டு வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அவர் ஓய்வு அறிவித்தாலும் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காமல்தான் இருப்பார் என்பது எல்லாரும் அறிந்ததே.

சரியாகச் சொன்னீர்கள் நண்பா.
எனக்குக் கிரிக்கெட் பிடிக்காது சச்சினைப் பிடிக்கும். அவர் விளையாடினால் மட்டும் பார்ப்பேன்..

மனோ சாமிநாதன் சொன்னது…

சச்சினின் தீவிர ரசிகர் நீங்கள் என்று அறிந்ததும் மிகவும் மகிழ்வாக இருந்தது. எங்கள் குடும்பத்தில் அனைவருமே அவரின் தீவிர ரசிகர்கள் தான்! 1989 ஆம் ஆண்டு அவர் விளையாட ஆரம்பித்ததிலிருந்து அவர் விளையாடிய அத்தனை ஆட்டங்களையும் ஒன்று நேரில் அல்லது தொலைக்காட்சியில் அல்லது ரேடியோ வர்ணனையில் என்று எதையும் தவற விட்டதில்லை. சமீப காலமாக அவர் மீது சுமத்திய அத்தனை விமர்சனங்களையும் ஒரு சில ஒரு நாள் ஆட்டங்களிலாவது தூள் தூளாக்கி விட்டு ஓய்வு பெற்றிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ரொம்பவும் சாதாரணமாக விலகி விட்டார்! டெஸ்ட் மாட்சுகளிலாவது இந்தக் குறையை நிறைவு செய்ய வேன்டும்!

Asiya Omar சொன்னது…

கிரிக்கெட் என்றால் சச்சின் நினைவிற்கு வருமளவு சாத்னைகளுக்கு சொந்தக்காரர்.
தன்னடக்கமானவர்.
அவருக்கு இப்ப ஏற்பட்டுள்ள அழுத்தத்திற்கு இந்த முடிவு சிறிது நிம்மதியை தரலாம்.பொறுத்திருந்து பார்ப்போம்.
//சச்சினின் ஓய்வுக்காலம் குடும்பத்தாருடன் சந்தோஷமாகவும் மனதுக்கு நிறைவாகவும் அமையட்டும்.//

ஆத்மா சொன்னது…

அவரது சாதனைகளை தகர்க்க இன்னுமொரு சச்சின் பிறந்து வரவேண்டும் என்பதே உண்மை
////////////////

பிறந்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன்