மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 10 ஜூலை, 2014

மனசு பேசுகிறது: தொட்டார்... தொடர்வார் கேபிள்ஜி


மது வலைப்பதிவர் ஒருவர் இயக்குநராகி இருக்கிறார் என்பது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. இதுவரை சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் சின்னத் திரையில் தோன்றியிருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீண்ட கால போராட்டத்துக்குப் பின் திரையுலகில் தொட்டால் தொடரும் என இயக்குநராய் இறங்கி இருக்கிறார். தனது படத்தின் பாடல்களை சூப்பர் ஹிட்டாகக் கொடுத்திருப்பதுடன் படத்தின் டிரைலரிலும் மிரட்டியிருக்கிறார்.

ஆம்... நான் யாரைச் சொல்கிறேன் என்பது பதிவுலக நட்புக்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்தான் அண்ணன் கேபிள் சங்கர் அவர்கள். இவருடன் எனக்கு நேரடித் தொடர்பு எல்லாம் இல்லை. வலையுலகம் மூலம் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே. தனது வலைப்பக்கத்தில் உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை பிரிச்சி மேயும் இரண்டு ஆட்களின் பகிர்வுகளைத் தொடர்ந்து படிப்பேன். ஒருவர் ஜாக்கி சேகர் மற்றொருவர் கேபிள்ஜி, இருவரின் விமர்சனங்களும் மிகச் சிறப்பாக இருக்கும். படம் நல்லாயில்லை என்றால் அதை விமர்சனத்தில் கடுமையாகச் சாடுவார்கள். அதே நேரத்தில் நல்ல படம் என்றால் அதை புகழாமல் இருக்கமாட்டார்கள். படம் பிடித்த கேமரா, கேமாரா கோணங்கள் என எல்லாவற்றையும் அலசி ஆராய்வார். 

கேபிள் அண்ணாவின் சினிமா விமர்சனம் மட்டுமின்றி சாப்பாட்டுக் கடை, கொத்துப்பரோட்டா எல்லாமே அருமையாக இருக்கும். சின்னச் சின்ன கருத்துப் பரிமாற்றங்கள் மட்டும்தான் எங்களுக்குள் அமைந்தது. பெரும்பாலும் மதுரையைக் களமாகக் கொண்டு வரும் படங்களை விமர்சிக்கும் போது போட்டுத் தாக்கிவிடுவார். அப்படி ஒரு படத்தை விமர்சிக்கும் போது பேச்சு வழக்கை ரொம்ப கிண்டல் செய்திருந்தார். அதற்கு நான் மதுரைத் தமிழ் பற்றி நீண்ட பின்னூட்டம் இட்டிருந்தேன். அதற்கு அவர் விளக்கப் பதில் அளித்தார். பின்னூட்டம் மூலமாக மட்டுமே எங்கள் நட்பு இருந்தது... இன்னும் இருக்கிறது. 

(படத்தின் முதல் டிரைலர்)

சென்னை செல்லும் போது பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்களில் கேபிள் அண்ணாவும் உண்டு. ஆனால் ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் விடுமுறை தினங்கள் கழிந்தனவே தவிர எண்ணங்கள் நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகள் அமையவில்லை. குடந்தையூர் ஆர்.வி.சரவணன் அண்ணன் கேபிள்ஜி பற்றி எழுதும் போதெல்லாம் அவருடன் பழகுவதற்கான வாய்ப்பு சரவணன் அண்ணனுக்கு கிடைத்திருப்பது குறித்து சந்தோஷமாக இருந்தாலும் நாமும் சென்னையில் இருந்தால் இவர்களுடன் எல்லாம் நட்பாக இருந்திருக்கலாமே என்ற எண்ணமும் தலைதூக்கும்.

தனது முதல் படத்தை துவார் சந்திரசேகர் அவர்களின் தயாரிப்பில் உருவாக்கியிருக்கிறார். இத்தனை வருட கஷ்டமும் கலையும் விதமாக நான் திரையுலகைத் தொட்டுவிட்டேன். இனி எப்போதும் தொடரும் என்பதை சிம்பாளிக்காகச் சொல்லும் விதமாக தொட்டால் தொடரும் என படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறார். நீண்ட காலமாக தனக்குள் வைத்து அடைகாத்த பொன் முட்டையை நம் கண்முன்னே படைத்திருக்கிறார் என்பது படத்தின் டிரைலரில் தெரிகிறது. மிகவும் அற்புதமான படமாக அமைந்து தொடர்ந்து நல்ல படங்களை இயக்கும் வாய்ப்பை அவருக்கு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாஸூ... பாஸு என்ற பாடலை முதலில் களத்தில் இறக்கி விட்டார். அந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்ப, தனது படம் தொடர்பாக டென்சன் குறைந்து கொஞ்சம் ரிலாக்ஸாக பாடல் வெளியீட்டு விழாவை வைத்தார். இன்று அனைத்து நண்பர்களும் பாடல்களைப் பாராட்டுகிறார்கள். குறிப்பாக யாருடா மச்சான்... பாடல் பாஸூ... பாஸூக்குப் போட்டியாக பட்டையைக் கிளப்பும் என்று நட்பு வட்டத்தில் கூறுகிறார்கள்.

(பாஸூ... பாஸூ)

இறுதியாக கேபிள் அண்ணாவுக்கு, உங்களது படத்தை அக்குவேர் ஆணிவேராக பிரித்து மேய ஒரு கூட்டமே காத்திருக்கும். அவர்கள் எல்லாம் மூக்கில் விரல் வைப்பது போல் படத்தின் ட்ரைலரை தயார் செய்திருக்கிறீர்கள்... அந்த வகையில் எல்லாப் பக்கமும் சிறப்பான விமர்சனம் மட்டுமே வரும் என்பது உறுதியாகிவிட்டது. தொடருங்கள் உங்கள் கலைப் பயணத்தை...

கேபிள் அண்ணாவின் திரைப்பயணம் வெற்றி பயணமாகத் தொடர தொட்டால் தொடரும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பதே எனது ஆசை. கண்டிப்பாக அவர் சிகரங்களைத் தொடுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

வாழ்த்துக்கள் அண்ணா....

மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

கவிதை வானம் சொன்னது…

குமார் அண்ணேன்....கேபிள் சங்கரை நான் கடந்த பதிவர் விழாவில் சந்தித்தேன்....அவரது சினிமா விமர்சனம் புத்தகம் ஓன்று வாங்கினேன் இன்னும் படிக்க முடியவில்லை அவர் ரொம்ப எளிமையானவர் விழாவில் எல்லோருக்கும் பிரியாணி பரிமாரினார்
அவரது படம் இன்று திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கேபிள் சங்கர் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha ma 2

பால கணேஷ் சொன்னது…

கொமாரு... சென்னை வரச்சொல்லோ முன்னாடியே சொல்லிகினா கேபுளு அண்ணாத்திய எப்ப வோணா பாக்கலாம். அக்காங்.. நேர்ல கண்டுக்காமயே இம்மா பாசத்தோட எயுதற ஒன்னிய ஒரு தபா பார்த்துப் பேசிட்டன்ன லைபுல மறக்க முடியாதபடி பண்ணிருவாரு அண்ணாத்த. எப்பய்யா வர்ற?

துரை செல்வராஜூ சொன்னது…

''தொட்டால் தொடரும்'' - தொடரட்டும் வெற்றிகள்..

வெற்றிப் படமாக அமைய நல்வாழ்த்துக்கள்!..

r.v.saravanan சொன்னது…

அவரிடம் எனக்கு பிடித்ததே அவரது பழகும் தன்மையும் நகைச்சுவை ததும்பும் எழுத்தும் . அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார்

Unknown சொன்னது…

கேபிள் சங்கர் அவர்கள் அடுத்த படத் தலைப்பும் வெளியாகி விட்டதே ,இதுவே அவர் திறமைக்கு சான்று !
பதிவர் இயக்குனரானதில் எனக்கும் மகிழ்ச்சியே !
த ம 3

Cable சங்கர் சொன்னது…

உங்க அன்புக்கும் வாழ்த்துக்கு நன்றி நண்பா..

Unknown சொன்னது…

வணக்கம்,குமார்!நலமா?///பதிவுலகில் கேபிளார் படம் குறித்து நல்ல விமர்சனங்கள்,ஊக்குவிப்புகள் தொடர்ந்து வருகின்றது.எதிர்பார்ப்புகளுக்கு ஊறின்றி கேபிளார் படம் அமையும் என்று நம்புவோம்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கேபிள் சங்கர் அவர்களின் தொட்டால் தொடரும் வெற்றி பெற எனது வாழ்த்துகளும்....