மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 23 ஏப்ரல், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 63

முந்தைய பதிவுகளைப் படிக்க...



63.  உரசிய உதட்டால் உள்ளம் மகிழ்ந்தது 

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் தனித்தனியே படிப்பைத் தொடர்கிறார்கள். வருடங்கள் ஓட , சேகர் - கவிதா திருமணத்துக்கு வந்தவள் ராம்கியின் அம்மா மனதில் இடம் பிடிக்கிறாள்.

இனி...

புவனாவின் பின்னால் வந்த ராம்கி அவள் சைக்கிளை எடுக்கவும் "இரு நானும் கொஞ்சத்தூரம் வர்றேன்" என்றபடி அவளோடு நடக்க, "இங்க வேலை இருக்குமில்ல... எதுக்கு நீங்க... நான் போயிடுவேன்" என்றாள்.

"என்ன மகாராணிக்கு கோபமாக்கும்... என்ன பண்ணச் சொல்றே... இவங்க எல்லாம் கிராமத்துச் சனங்க... நாம ரெண்டு பேரும் உக்காந்து சிரிச்சிப் பேசிக்கிட்டு இருந்தா கண்ணு காது வச்சி பேசிருவாங்க.... அதான்..."

"ம்... இப்ப மட்டும் ஜோடி போட்டுப் போகயில கண்ணு காது வைக்க மாட்டங்களாக்கும்..."

"சரி... சரி... பேசாதது தப்புத்தான்... இந்தச் சேலையில சூப்பரா இருக்கே"

"என்ன பேச்சை மாத்துறதுக்கு அழகின்னு சொன்னா நம்பிடுவோமாக்கும்..."

"ஏய் உண்மைக்குந்தான்... இந்த சேலையில தேவதை மாதிரி இருக்கே..." என்றவன் அவளை உரசியபடி நடந்தான்.

"ஏன்... நீங்க கூடத்தான் வேஷ்டி சட்டையில சும்மா ராமராஜனாட்டம்... சேச்சே... ராஜாவாட்டம் இருக்கீங்க..." என்று வம்புக்கு இழுத்தாள்.

"என்ன ராமராஜனா... கிண்டலா?"

"இல்லப்பா... டங்கு சிலிப்பாயிருச்சு... இப்ப நம்மளைப் பாக்குறவங்க என்ன நினைப்பாங்கன்னு சொல்லுங்க..."

"ம் என்ன நினைப்பாங்க... இங்க பாரு காலம் கெட்டுக் கிடக்கு... ஜோடி போட்டுப் போறதைப் பாருன்னு நினைப்பாங்க..."

"அறிவு..." என்று அவன் தலையில் குட்டினாள்.

"அப்புறம் என்ன நினைப்பாங்க... நீயே சொல்லு..."

"ம்... புதுசா கலியாணம் ஆனவங்க போல.... அதான் ஜோடியா போகுதுக.... பொருத்தமான ஜோடியா இருக்குதுக... அப்படின்னு நினைப்பாங்க..."

"ஆமா புதுசா கலியாணம் பண்ணுனவங்க நாம... அது சரி... அதுதான் பொண்டாட்டி ஒரு ஓட்டைச் சைக்கிளைத் தள்ளிக்கிட்டு வர, புருஷன்காரன் அது கூட இல்லாம நடந்து போறானாக்கும்..."

"ஏய்... என்ன லொள்ளா... ஆசையாச் சொன்னா அதுக்கும் ஒரு பதில்... எல்லாத்துக்கும் எகனைக்கு மொகனை பேசுறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை...." முகத்தை கோபமாக இருப்பதுபோல் வைத்துக் கொண்டாள்.

"இங்க பார்டா கோபத்தை... சும்மா உன்னைய சீண்டிப்பாத்தா.... இம்புட்டுக் கோபம் வருது... சரி... கண்ணுக்கு எட்டிய தூரம் யாருமே இல்லை.... அதனால..." பேச்சை நிறுத்தி சைக்கிள் பிரேக்கைப் பிடித்து நிறுத்தினான்.

"அதனால..." கலவரமாகக் கேட்டாள்.

"அதனால...." என்று அவளது முகத்துக்கு அருகில் தன் முகத்தைக் கொண்டு போனான்.

"அ... த... னா...ல.." என்ன செய்யப் போறான்னோ என்ற பயத்தில் உலர்ந்த உதடை நாக்கால் எச்சில் படுத்திக்கொண்டாள்.

"அதனால கண்ணம்மா... இன்னைக்கு எனக்கு...." என்றவன் பேச்சை நிறுத்தி அவளது உதட்டில் 'இச்' பதிக்க, அவனைத் தள்ளித் தோற்றாள்.

ராம்கியின் உதடுகள் தனது உதட்டில் செய்த வித்தையால் அதிர்ந்து நின்ற புவனாவை ' டேய் மாப்ளே ரோட்டுக்கரையில வச்சி பொம்பளப்புள்ளைய என்னடா பண்ணுறே..?' என்று வயலுக்குள் இருந்து கேட்ட குரல் வெட்கப்பட வைத்தது.

'எவனுமே இல்லைன்னு முத்தம் கொடுத்தா இந்த நாயி வயலுக்குள்ள மாட்டோட மாடா நின்னுச்சா' என்று முனங்கியபடி "கண்ணுல தூசி விழுந்திருச்சின்னு சொன்னாங்க... அதான் பார்த்தேன்... கருத்தெருமை அங்கிட்டு போகுது பாருங்க... அதைப் பார்த்து திருப்புங்க... இல்லைன்னா சாயங்காலம் அயித்தை உங்களுக்கு அர்சசனை பண்ணும்மாமோய்ய்ய்..." என்று கத்திவிட்டு "வா... புவி போகலாம்" என்றான்.

"உங்களுக்கு ரொம்பத் தைரியந்தான்... உதட்டுல முத்தம் கொடுக்கிறியளோ, யாருமே இல்லைன்னு சொல்லி எவனோ கத்துறான் பாருங்க... எனக்கு வெக்கமாப் போச்சு..."

"அவன் கத்துனதுதான் உனக்கு வெக்கமா... அப்ப முத்தத்தால இல்ல... அது சரி... அப்ப இன்னொன்னு..."

"உதைபடுவீங்க... பேசாம போயிடுங்க..."

"சரி... போறேன் பாத்துப் போ... போனதும் போன் பண்ணு..."

"ம்... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..." என்றபடி அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.

"என்ன சந்தோஷம்... தித்திப்பான முத்தம் கொடுத்ததா?"

"ஆமா ரொம்ப முக்கியம்... உங்கம்மா நம்மளை ஏத்துக்கிட்டாங்க போல இருக்குல்ல அவங்க நடவடிக்கை அதான்..."

"எனக்கும் அதுதான் புரியலை... எங்கம்மாதானா இப்படி மாறினாங்கன்னு... எனிவே ஒரு பக்கம் பிரச்சினை இல்லைன்னு தெரியுது... இனி அம்மணி பக்கம்தான் சரி பண்ணனும்..."

"ம்... ஆனா எங்க வீட்டுல அவ்வளவு சீக்கிரத்துல ஒத்துக்குவாங்கன்னு சொல்ல முடியாது... சிலப்பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்... ஆனா எத்தனை பிரச்சினை வந்தாலும் உங்களோடதான் வாழ்க்கை..."

"எல்லாம் நல்லபடியா நடக்கும்... இன்னும் கொஞ்ச நாள்தான்... சாயந்தரம் ஐயா வீட்டுக்கு வாறியா... நானும் வர்றேன்... கொஞ்ச நேரம் மனம் விட்டுப் பேசலாம்..."

"இனிமே நான் திரும்ப சாயந்தரம் வர்றது... சான்ஸே இல்ல... அம்மா கத்த ஆரம்பிச்சிருவாங்க..."

"அப்ப மல்லிகா வீட்ல இரு... சாயந்தரமா ஐயா வீட்டுக்குப் போயிட்டுப் போகலாம்..."

"இங்க பார்றா... இவரு கொடுக்கிற ஐடியாவை... வேண்டாம்... போன்ல பேசிப்போம்... இப்ப நான் கிளம்புறேன்...." என்று சைக்கிளை எடுத்தாள்.

"ஐயாவை விட்டு உங்க அப்பாக்கிட்ட பேசச் சொல்லலாமா?"

"ஐயாவையா... ம்... இப்ப வேண்டாம்...படிப்பு முடியட்டும் பேசலாம்... ஒத்துக்கிட்டா அவங்க ஆசியோட... இல்லைன்னா அவங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துட்டு நாம எஸ்கேப் ஆகிடலாம்..."

"அதெல்லாம் வேண்டாம்... ஐயா பேசினா சரியாகும்... எல்லாம் நல்லா நடக்கும்... பாத்துப் போ... போனதும் போன் பண்ணு..." என்று அவளது கன்னத்தில் தட்டிவிட்டு அவள் சைக்கிளில் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றான் ராம்கி, அதே நேரம் ராம்கியின் உதடுகள் பதிந்த தனது உதட்டை ஒற்றை விரலால் தடவியபடி சைக்கிளைச் செலுத்திய புவனா வெட்கத்தோடு சிரித்துக் கொண்டாள்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Unknown சொன்னது…

அருமை!அதுக்குள்ளே முத்தமா?விளங்கிடும்,ஹ!ஹ!!ஹா!!!

Unknown சொன்னது…

ஐயா நிர்வாகி,"நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்" ..........போதும் ஒரு தடவை விளம்பரப்படுத்தியது!பதிவுக்கும் ஊக்கம் கொடுங்கள்,இல்லாவிடில் கண்டு கொள்ள 'நாதி' இருக்காது.

துரை செல்வராஜூ சொன்னது…

அட.. அட!...

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
குமார்(அண்ணா)

தொடருங்கள்....காத்திருக்கேன்..

சில நாட்கள் இணையம் வரமுடியாமல் போனது இனி வருகை தொடரும்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-