எங்கள் நட்பு வட்டத்தில் ஒவ்வொருத்தரைப் பற்றியும் நண்பேன்டா என்ற தலைப்பில் எழுதிவருகிறேன். எனக்குள் இருக்கும் என் நட்புக்கள் பற்றி கொஞ்சம் பதிந்து வைத்துக் கொள்ளும் வகையில் எழுதப்படும் பகிர்வாகத்தான் இதைக் கருதுகிறேன். அந்த வகையில் இன்றைய தினம் நான் பகிர்ந்து கொள்ளப் போவது எனது அன்பு நண்பன் சேவியரைப் பற்றிய சில நினைவுகள்.
கல்லூரியில் முதல் நாள் முதல் பெஞ்சில் முத்தரசு, ராமகிருஷ்ணன், பிரான்சிஸ் இருக்க இரண்டாம் பெஞ்சில் அண்ணாத்துரைக்கு அருகில் இருந்தவன் சேவியர் இவர்களோடு நானும் அமர, அண்ணாத்துரையும் பின்னர் சேவியரும் என்னுடன் ஓட்டிக் கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களும் சேர நட்பு வட்டம் பெருகியது.
சேவியர்... [இவனுக்கு எப்போது சேவி என்று எழுதுவதுதான் பிடிக்கும்] ஆனந்தூருக்கு அருகில் சூராணத்தில் இருந்து கல்லூரிக்கு வந்தவன். அண்ணாத்துரையும் இவனும் சேர்ந்து அறை எடுத்துத் தங்கியிருந்தனர். மாலை கல்லூரி முடிந்ததும் அறைக்குச் சென்று சோறு வடிப்பதுதான் இவனது வேலை. அண்ணாத்துரை எல்லா வேலைகளிலும் வேகம் என்றால் இவன் சோறு வைப்பதையே பெரிதாகச் சொல்லுவான். நான் என்னத்தடா இனி ராம்நகர் வந்தேன். இப்படியே போறேன் என்றாலும் விடாமல் இழுத்துச் செல்வான். சாப்பிட்டுத்தான் போகனும் என்று கட்டளை இடுவான்.
சேவியருக்கு எப்போதும் கன்னியர் மீது ஒரு காதல்... எதாவது ஒரு பொண்ணு அவனைப் பார்த்துவிட்டால் போதும் பங்காளி அவ என்னையேவே பாக்குறாடான்னு புலம்ப ஆரம்பிச்சிடுவான். எல்லாரிடமும் சகஜமாகப் பேசுவான்.... யாரிடத்திலும் வெட்கப்பட மாட்டான். நமக்குத் தெரிந்த பெண் போனாப் போதும் பங்காளி.... ம்.... உன்னோட ஆளு.... இங்கதான் வருதுன்னு நம்மளை வம்புல மாட்டிவிடப் பார்ப்பான்.
சேவியருக்கு பாட்டு என்றால் மிகவும் பிடிக்கும்... இசை ரசிகன்... எந்தப் படத்தின் பாடல்கள் வெளியானாலும் உடனே கேசட் வாங்கி விடுவான். கையில் ஒரு வாக்மேன் இருக்கும் எப்போது பாட்டுக் கேட்டுக் கொண்டே இருப்பான். நம்ம வீட்டுக்கு வந்தாலும் பாட்டுப் போடுடா... பாட்டுப் போடுடான்னு சொல்லிக்கிட்டே இருப்பான்.
இவன் எல்லாருடைய வீட்டுக்கும் வந்திருக்கிறான். எங்களையும் அவனது வீட்டுக்கு கூப்பிட்டுக் கொண்டே இருந்தான். ஏனோ தெரியவில்லை... இவனது வீட்டிற்கு மட்டும் செல்லவே முடியவில்லை. அவனுக்கும் அதில் எப்பவும் வருத்தம் உண்டு. இருந்தாலும் அவனுக்கு கோபம் என்பதெல்லாம் எப்போது வருவதில்லை.
சேவியர் படத்துக்குப் போகலாமா என்றால் உடனே கிளம்பிவிடுவான். கிளாஸ் இருக்குடா என்றால் எல்லா நாளுந்தான் கிளாஸ் இருக்கும் வாங்கடா என்று சொல்லிக் கிளப்பத்தான் பார்ப்பான். படமும் பாடலும் இவனிடமிருந்து பிரிக்க முடியாதது என்பதை இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
எங்களுக்கு 25 மார்க்குக்கு இண்டர்னல் தேர்வு உண்டு. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது முக்கியமான பரிட்சையில் எல்லாம் முன்னுரையும் முடிவுரையும் ஒழுங்காக எழுதி ஆங்கிலக் கட்டுரையையோ படக் கதையையோ எழுதி வைத்து அடிக்கோடெல்லாம் இட்டு அழகு படுத்தி வைத்து விடுவான். எங்க சாரும் நல்லா எழுதுவனுக்கு 9.5/10 போடுவாரு. அவனுக்கு 0 போடுவாரான்னு கேக்குறீங்களா? அங்கதான் அவன் நிப்பான் பாருங்க... அவனுக்கு 9/10 போட்டு வைச்சிருவாரு...
உடனே எங்ககிட்ட வந்து மாங்கு மாங்குன்னு படிச்சாலும் நம்மளைவிட அரை மார்க்குத்தான் அதிகம் கிடைக்கும். எதிலயுமே யோசிக்கக் கத்துக்கங்கடான்னு சொல்வான். இதையெல்லாம் விட அதே ஆசிரியரிடம் சார் முக்கியமான வேலை... இப்ப வந்துடுறேன்னு சொல்லிக் கிளம்புவான். உன்னோட நம்பர் இதுதானே நான் அட்டண்டன்ஸ் போட்டுடுறேன்னு சொல்லிடுவாரு. அப்புறம் அந்த பாடவேளை அவ்வளவுதான். வெளியில போயி சுத்திட்டு வகுப்பு முடிந்ததும் திரும்பி வருவான்.
மூன்றாம் ஆண்டு படிக்கும் போது பங்காளி ஒரு பொண்ணை லவ் பண்றேன்... அவளைக் கவர்ற மாதிரி ஒரு கவிதை வேணும் பங்காளின்னு சொன்னதும் எழுதி கீழே அழகா என்னோட கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தாச்சு... இது நவநீயோட வேலை... மாப்ள கையெழுத்தைப் போட்டுக் கொடு அந்த நாதாரி என்ன பண்ணுறான்னு பாப்போம்ன்னு சொன்னான். அதனால போட்டாச்சு...
அவனும் ஒண்ணும் சொல்லாமல் வாங்கிக்கிட்டுப் போயிட்டான். அவரு ரொம்ப விவரம், நமக்கிட்ட ஒண்ணும் சொல்லாம வாங்கிக்கிட்டுப் போயி ரூம்ல அவரோட கையெழுத்துல மானே தேனே... பொன்மானே எல்லாம் சேர்த்துப் போட்டு எழுதியிருப்பாரு போல... அப்பத்தான் கீழே இருக்க பேரைப் பாத்திருப்பான் போல... அப்புறம் என்ன நடந்திருக்கும்... அடுத்த நாள் உன்னைய பங்காளின்னு சொன்னது தப்பாப் போச்சு... அவனை (நவநீ) மாதிரி மாப்ளைன்னே கூப்பிட்டிருக்கணுமின்னு ஒரே அர்ச்சனைதான்.
படிப்பு முடிந்ததும் திருப்பூர் பக்கம் பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போனான். அதன் பிறகு சில மாதங்கள் எங்களுக்குள் கடிதப் போக்குவரத்து இருந்தது. அப்போது பனியன் கம்பெனி ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னான். நண்பர்கள் அவன் பனியன் கம்பெனி ஆரம்பித்து திருப்பூர் பக்கம் செட்டிலாகிவிட்டதாகச் சொன்னார்கள்.
எனக்கு மிகவும் பிடித்த நண்பர்களில் இவனும் ஒருவன். எந்த ஒளிவு மறைவும் இல்லாதவன். எங்கிருந்தாலும் நலமுடனும் வளமுடனும் இருடா சேவி.
நட்பின் பயணம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
10 எண்ணங்கள்:
என்னைப் போல் ஒருவர் - பாடல் என்றால்...
நண்பர் சேவியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
தங்களின் நண்பர் நிச்சயம் நலமுடனும் வளமுடனும் இருப்பார்
நட்பின் நினைவுகள் வாழ்க!
உண்மையான நட்பு எப்போது நினைத்தாலும் மகிழ்ச்சி தரக் கூடியது
அழகாக விவரித்திரிக்கிரீர்கள்.வாழ்த்துக்கள்
தொடரட்டும் நண்பர்கள் பகிர்வுகள்!
நண்பர்களின் பயணம் தொடரட்டும்... வாழ்த்துகள்
தங்கள் நண்பர் செவிக்கு எனது வாழ்த்துக்கள் குமார்
இனிய நட்பு சிறக்கட்டும்! பகிர்வுக்கு நன்றி!
தொடரும் நட்பு நினைவுகள்.....
எங்கிருந்தாலும் வாழ்க!
எனக்குப் பிடித்த நண்பர் ஒருவரும் இப்படித்தான். பத்து ஆண்டுகளாக தற்போது தொடர்பில் இல்லை...
கருத்துரையிடுக