மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 7 ஏப்ரல், 2014

மனசு பேசுகிறது : தமிழன் என்பதில் தயக்கம் ஏன் மக்களே?


ரண்டு தினங்களுக்கு முன்னர் வேலைக்குச் செல்லும் போது பள்ளி செல்லக் காடத்திருந்த குழந்தைகள் தங்கள் அன்னையரிடம் தமிழில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். பெற்றவர்களோ அவர்களின் மழலைப் பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது காரணம் இங்கு பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லி இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்பா அம்மா என்று கூப்பிட்டாலே முறைப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். அம்மா என்று அழைத்தால் அரபிக் குழந்தைகளைப் போல் மம்மா என்று அழைக்கப் பணிக்கும் பெற்றோரையும் பார்த்திருக்கிறேன். 

தாங்கள் படிக்கவில்லை என்றாலும் தமிழ் ஆட்களுடன் பேசும்போது ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்பும் பெற்றோரையும் பார்த்திருக்கிறேன்.  குழந்தைகளிடம் அரைகுறை ஆங்கிலத்தில் பேசினாலும் ஆங்கிலத்துக்கு தமிழ் அர்த்தத்தை தங்கள் கைப்பேசியில் தேடிப்பிடித்துப் பேசி ஆங்கிலம் வளர்க்கும் பெற்றோரையும் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு மத்தியில் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போதும் தமிழில் பேசுவதை ரசிக்கும் பெற்றோரை இதுபோல் எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது. அப்போதெல்லாம் என்னை அறியாமல் சந்தோஷம் புகுந்து கொள்கிறது. மனதுக்குள் அந்தக் குழந்தைகளையும் அவர்களைப் பெற்றவர்களையும் வாழ்த்தியபடி கடந்து செல்றேன்.

மேலே சொன்ன சந்தோஷ அனுபவத்துடன் அலுவலகம் சென்றவன் ஒரு வேலையாக எங்களது தளத்தில் இருந்து மற்றொரு தளம் சென்றேன். அங்கு புதிதாக ஒருவன் வேலைக்கு வந்திருந்தான். அவன் தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். எங்கள் அலுவலக எகிப்து நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தேன். நம்ம பையன் அதுவரை என் பக்கம் திரும்பவே இல்லை. 

கிளம்பும் போது சரி நாமே பேசலாம் தமிழந்தானே என்று அவனிடம் கை கொடுத்து நீங்க தமிழ்நாடான்னு கேட்டேன். என்னமோ நீதான் கொலை பண்ணினியான்னு கேட்ட மாதிரி ஒரு பார்வை பார்த்தான். என்னங்க நீங்க தமிழ்தானேன்னு மறுபடியும் கேட்டான். வேண்டா வெறுப்பாக 'ம்' என்றான். அத்துடன் வந்திருக்கலாம். நான் தேவகோட்டை நீங்க எந்த ஊர் என்றேன். எதுக்குடா இதைக் கேட்கிறே என்பது போல் தஞ்சாவூர் என்றவன் ஆமா நான் தமிழ்ன்னு உங்களுக்கு யார் சொன்னான்னு கேட்டான். தமிழன்னுதான் மூஞ்சியில எழுதி ஒட்டியிருக்கேன்னு நினைச்சிக்கிட்டு கேள்விப்பட்டேன்னு சொன்னேன். பதில் சொல்லாமல் வேலை செய்வது போல் கணிப்பொறியை சீரியஸாகப் பார்த்தான். தமிழனுடன் பேசலாம்... தமிழன் என்று சொல்வதற்கே கூச்சப்படுபவனுடன் என்ன பேச... போடா ம.... அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு கிளம்பி வந்துட்டேன். 

அப்புறம் நேற்றும் அங்கு செல்ல வேண்டி வந்தது... போனேன்... என் வேலையைப் பார்த்தேன்... பக்கத்திலிருந்த பாகிஸ்தானியுடன் பேசினேன்... அவனைப் பார்க்கவும் இல்லை... பேசவும் இல்லை.... தேவையில்லாமல் ஒரு புன்னகையை வீணாக்காமல் திரும்பி வந்தேன். அப்படியே அவனைப் பார்க்க நேர்ந்தாலும் இனி என் தமிழ் தன்மானம் இழக்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறது. தமிழன் என்று சொன்னால் தரம் தாழ்ந்து விடுவோம் என்று நினைக்கும் தரங்கெட்ட மனிதருடன் நமக்கு அப்படி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு.

பெரும்பாலும் இங்கு தமிழர்கள் தமிழர்களுடன் பேசுவதற்கு யோசிக்கிறார்கள் என்பதே வேதனையான விஷயம்தான். இதில் என்ன கௌரவக் குறைச்சல் வந்துவிடப் போகிறது என்று தெரியவில்லை. மலையாளி இன்னொரு மலையாளியிடம் மலையாளத்தில்தான் பேசுகிறான். கன்னடாக்காரன் கன்னடத்தில்தான் பேசுகிறான். ஆந்திராக்காரன் தெலுங்கில்தான் பேசுகிறான். ஆனா நம்மவன் மட்டும் நம்மளைப் பார்த்தால் ஆங்கிலத்துக்கு தாவிவிடுகிறான். அதில் என்ன அப்படி ஒரு ஆனந்தமோ தெரியலை. நாங்கள் இப்போது இரண்டு ஆந்திராக்காரர்களுடன் வேலை செய்கிறோம். ஒருவனுகு தமிழ் நன்றாகத் தெரியும் என்பதால் என்னைப் பார்த்தால் தமிழில்தான் பேசுவான். ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாலும் தமிழுக்கு மாறிவிடுவான். அவனுக்கு அதில் ஒரு சந்தோஷம். நம்மவர்களுக்கு தமிழ் என்றால் தோஷம்... என்ன செய்ய....

'தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா'

- என்பதெல்லாம் பாடநூலில் பாட்டாக மட்டுமே இருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்று நினைக்கும் போது வருந்தத்தான் முடிகிறது. 

-மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்..

13 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…


இப்படியும் சில தமிழ் நண்டுகள்! :))))

பெயரில்லா சொன்னது…

உண்மை தான், தமிழர் பலர் தமிழரோடு தமிழில் பேசுவதில்லை, என்னோடு பணியாற்றிய தமிழ் தெரிந்த தெலுங்கு நண்பரும், மலையாள நண்பரும் என்னோடு குழுமும் போது தமிழில் தான் பேசுவார்கள் என்பது என்னை பலமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதே போல வடநாட்டவர் எங்கு குழுமினாலும் இந்தி தான் பேசுவார்கள், அவர்கள் குழந்தைகளும் இந்தி தான் பேசும். இத்தனைக்கும் இவர்கள் அனைவரும் இரண்டாம் தலைமுறை இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள்..

அ.பாண்டியன் சொன்னது…

அன்பின் சகோதரருக்கு
தங்களின் பதிவைப் படித்ததும் தங்களின் மீதான மரியாதை மிகுவிக்கிறது சகோதரரே முதலில் தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தங்கள் மனநிலை எழுத்தில் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி எனக்குள் குடி புகுந்து வெளியேற மறுக்கிறது. தமிழன் என்பதில் கர்வமும் திமிரும் இருக்க வேண்டும் அப்பொழுது தான் அவன் தமிழன். நல்லதொரு மனநிலை காட்டிய பதிவு. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரர்.

Unknown சொன்னது…

தமிழ் உணர்வூட்ட மீண்டும் அண்ணாவும் ,பெரியாரும் வரணும் போலிருக்கு !
த ம 3

Unknown சொன்னது…

'சில' நேரங்களில் "சில" மனிதர்களா?யாம் மாதவம் செய்தவர்கள் அல்லவா?விடுங்கள்,வழிக்கு வருவார்!

பெயரில்லா சொன்னது…

தமிழர்கள் தற்பெருமை மிக்கோர் என்ற எண்ணம் பிறரிடம் உண்டு, ஆனால் தமிழர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டோர் தம் தாய்மொழியில் பேசுவதையும் கற்பதையும் கூட இழிவாக கருதுவோர், வெறும் பேச்சுக்காக மட்டும் தமிழ் தாய் மொழி, தமிழன்டா என கூச்சலிடுவார்கள் ஆனால் ஆக்கப்பூர்வமாய் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழர்களாகி நாம் கடந்த 35 ஆண்டுகளில் என்ன செய்துள்ளோம்? சிந்தித்துப் பார்த்தால் ஒன்றுமே கிடையாது..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தஞ்சாவூரில் இருந்து வந்தவர் தமிழில் பேச மறுத்துவிட்டாரா, வேதனையாக இருக்கிறது நண்பரே
இதுபோன்ற பச்சோந்திகளுடன் பழகுவதைவிட , விலகிச் செல்வதே நல்லது

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha.ma.4

துரை செல்வராஜூ சொன்னது…

தமிழனுடன் தமிழில் பேச மறுத்தவன் எந்த ஊர்க்காரனாக இருந்தால் என்ன!..

இந்த ஆளை விட கேவலமான தமிழனையும் - இங்கே குவைத்தில் சந்தித்துள்ளேன்.

அரிசியில் கல் போல - சில!..
தூர எறிந்து விட்டு தொடர்ந்து செல்லுங்கள்!..

ராமலக்ஷ்மி சொன்னது…

புன்னகையை வீணாக்காமல் திரும்பியது சரிதான்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தமிழ் பேச்சு பெருமை அல்லவா தமிழ்ருக்கு..!

ஜீவன் சுப்பு சொன்னது…

இங்க உள்ளூர்லயே ஆங்கில உப்புமாவைதான் கிண்டிக்கொண்டிருக்கிறோம் .

பொதுவா, பணி நிமித்தமாக பேசும் தமிழர்கள் தங்களது தொலைபேசி உரையாடல்களை ஆங்கிலத்திலையே ஆரம்பிக்கிறார்கள் . எனக்கு யாரும் அழைத்தால் , உங்களுக்கு தமிழ் தெரியும்னா , நாம் தமிழிலேயே பேசலாமென்று சொல்லிவிடுவேன் .என்ன , கொஞ்சம் அசிரத்தையா , நக்கலா பேசுவாய்ங்க ...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தில்லியிலும் இது போன்ற பலர் உண்டு குமார். பார்க்கும்போதே தமிழர் என நன்கு தெரியும். தமிழில் பேசினால் ஹிந்தியில் பதில் சொல்வார்கள்.... தமிழில் பேச விரும்புவதும் இல்லை....

இது போன்ற நண்பர் ஒருவர் பற்றி நானும் முன்பு ஒரு பதிவு எழுதி இருந்தேன் - “ஹே, மா!” http://venkatnagaraj.blogspot.com/2011/10/blog-post_4457.html