மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 16 ஜூலை, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 69

முந்தைய பதிவுகளைப் படிக்க...



69.  முடிவை நோக்கி நகர்த்தும் காலம்

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். வைரவனுக்காகவும் புவனாவை அடையவும் இளங்கோ ஒரு பக்கம் ராம்கியை கொல்ல அலைகிறான். மணி அவனைக் காப்பாற்ற புவனாவிடம் பேச முயல்கிறான்.

இனி...

திர்முனையில் புவனாவின் அப்பா குரல் கேட்டதும் மணி மெதுவாகப் பேசி அவர் கேட்ட குறுக்குக் கேள்விக்களுக்கெல்லாம் பதில் சொல்லி ஒரு வழியாக வீட்டு நம்பரை வாங்கி போன் செய்தான். எதிர்முனை குரலை வைத்து அது அவளின் அம்மா என்று முடிவு செய்து "புவனா இருக்காங்களா?" என்று கேட்டான்.

"இருக்கா... ஆமா நீங்க யாரு...?"

"அவங்க கூட படிக்கிறேன்... பாட சம்பந்தமா ரெண்டு வார்த்தை பேசணும்... கொஞ்சம் கொடுக்குறீங்களாம்மா?"

"ம்..." என்றவள் "புவனா... உனக்குத்தான் போன்..." என்று கத்திவிட்டு 'எப்பப் பார்த்தாலும் பயலுகதான் போனடிக்கிறானுங்க' என்று முணங்கியபடி நகர, "அலோ" என புவனாவின் குரல் ஒலித்தது.

அந்தக் குரலைக் கேட்டதும் மணிக்குள் அவள் மீதான காதல் மெல்ல எழும்பியது. கண்கள் கலங்க, பேசமுடியாமல் வாயை அடைத்தது.

"அலோ யாருங்க... ஒண்ணும் பேசாம இருந்தா யாருன்னு தெரியும்?"

"நா... நா... மணி பேசுறேங்க..."

"மணியா... எந்த ம... ஓ.... அவனா... உனக்கு என்ன வேணும்...?"

"இருங்க... கோபப்படாதீங்க... நான் இப்ப சொல்றதை மட்டும் கேளுங்க... உணர்ச்சி வசப்பட்டு பேசாதீங்க... ப்ளீஸ்.."

"ம்... சொல்லுங்க..."

"உங்க அண்ணனும் இளங்கோவும் சேர்ந்து ராம்கியை முடிக்கத் திட்டம் போட்டிருக்காங்க..."என்று அவன் சொன்னதும் புவனா சத்தமாகச் சிரித்தாள்.

"ஏங்க சிரிக்கிறிங்க...?"

"அப்புறம் சிரிக்காம... நீ நல்லவன் மாதிரிப் பேசுறே... ஆமா இந்தக் கதையை யாரு சொன்னா?"

"இது கதையில்லங்க... இளங்கோ எங்கிட்ட வந்து ராம்கியைப் போடணும்ன்னு சொன்னான்... நான் மறுத்துட்டேன்... ஆனா அவனுங்க யாரையாச்சும் ஏற்பாடு பண்ணுவானுங்க... இளங்கோ எம்புட்டுக்காசு வேணுமின்னாலும் கொடுக்கத் தயாரா இருக்கான். காரணம் என்னன்னு தெரியுமா? உங்கண்ணன் அவனுக்கு உங்களைக் கட்டித்தாறேன்னு சொல்லியிருக்கான்....இப்ப சொன்னதெல்லாம் எங்கம்மா மேல சத்தியாமா உண்மைங்க..." என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் "ராம்கியை  காப்பாற்றி உங்க காதலையும் காப்பாத்திக்கங்க... செஞ்ச பாவங்களுக்கு பிராயச்சித்தமா இதை உங்ககிட்ட சொல்றேன்... அவசரப்படாம முடிவெடுங்க..." என்றபடி போனை வைக்க, அப்படியே தலையில் கையை வைத்துக் கொண்டு சோபாவில் 'தொபுக்கடீர்' என விழுந்தாள்.

"அம்மா... சீக்கிரம் கிளம்புங்கம்மா... அக்கா வீட்டுக்கு பொயிட்டுத் திரும்பணுமில்ல..." பைக்கை ஸ்டார்ட் பண்ணியபடி கத்தினான் ராம்கி.

"இருடா... வாரேன்..." என்றபடி வந்த நாகம்மா "ஆமா அப்பவே கேக்கணுமின்னு நினைச்சேன்... இது ஆருவுட்டு வண்டிடா?"

"அண்ணாத்துரையோடது... அவங்க வீட்ல மூணு வண்டியிருக்கு... ஊருக்குப் போறவரைக்கும் இதை வச்சி ஓட்டச் சொல்லிக் கொடுத்தான்..."

"ம்... அம்புட்டும் தங்கமான புள்ளங்க..." என்றபடி வண்டியில் ஏறினாள்.

அம்மா இருப்பதால் வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டு போன ராம்கியின் மனசுக்குள் புவனா வந்து 'என்னடா... வந்து ஒரு போன் கூட பண்ணலை... ஏன்?' எனக் கேட்டுக் கொண்டே இருந்தாள். அம்மாவுக்குப் பயந்து அவளுக்கு போன் கூடப் பண்ணாதது மனசுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. மல்லிகாவிடம் கிளம்பும் போது போனில் சொன்ன செய்தியை புவனாவுக்கு சொல்லியிருப்பாள் என்பதால் மல்லிகா வீட்டிற்கு புவனா வந்தாலும் வரலாம். எப்படிப் போய் பார்ப்பது.... வரும் போது அம்மாவை எங்காவது இருக்கச் சொல்லிவிட்டு மல்லிகா வீட்டு வரைக்கும் பொயிட்டு வரணும் என நினைத்துக் கொண்டான்.

"என்னடா... ஒண்ணுமே பேசாம வாறே... என்னாச்சு..?"

"ஒண்ணுமில்லம்மா... சும்மாதான்..."

"ம்... அக்கா வீட்டுக்குப் பொயிட்டு வரும்போது அப்படியே தமிழய்யா வீட்டுக்குப் போகணும்... மறந்துடாதே..."

"அ...ஐயா வீட்டுக்கா... அங்க எதுக்கும்மா..?"

"சும்மாதான்... உன்னோட கலியாண விசயமாப் பேசணும்..."

"என்னோட கல்யாண விசயமா? இப்ப அதுக்கு என்ன அவசரம்?"

"இல்ல அந்தப் புள்ள படிப்ப முடிச்சிட்டா வேற யாருக்காச்சும் கட்டி வச்சிருவானுங்கள்ல..."

"எந்தப்புள்ள...?"

"அடேயப்பா... உனக்கு ஒண்ணுமே தெரியாதுல்ல... ரொம்ப நடிக்காத..."

"இ..இல்லம்மா... புவனா பத்தியா பேசினீங்க?"

"ஆமா.. சாதி சனம், ஊரு நாடுன்னு பாத்தா உன்னோட ஆசையை நிறைவேத்த முடியாதுல... அதான்... துணிஞ்சிட்டேன்... உங்க ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்..."

"உ...உண்மையாவாம்மா?"

"ஆமா... சீதையும் ரொம்பச் சொன்னா... யோசிச்சேன்... அதுதான் சரியின்னு பட்டது... நாம போயி பேசுறதைவிட படிச்சவங்க போனா எப்படிப் பேசணுமோ அப்படிப் பேசி சுமூகமான ஒரு முடிவுக்கு வர வைப்பாங்க... அதான் ஐயாவை விட்டு பேசச் சொல்லலாம்ன்னு..."

"அம்மா... ரொம்பச் சந்தோஷமா இருக்கு... நம்ம பக்கம் சரிம்மா... ஆனா அவங்க அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கமாட்டாங்கம்மா..."

"பேசிப் பாப்போம்... வந்தா சரி... இல்லைன்னா இருக்கவே இருக்கா நம்ம சின்னத்த மவ... மெட்ராசுல படிச்சிட்டு எதோ வேலைக்குப் போறான்னு சொன்னாக... உனக்குச் சரியா வரும்... "

"என்னம்மா திடீர்ன்னு மாத்திப் பேசுறீங்க?"

"ஆமா... சரி வரலைன்னா அவங்க கூட மோதவா முடியும்... அப்புறம் அம்மா எடுக்கிற முடிவுதான்.... என்ன நாஞ்சொல்றது?"

"ம்..." என்றவன் அதற்கு மேல் பேசவே இல்லை. 

க்கா வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது...

"என்னத்தா... இப்பல்லாம் மாப்ள வந்தாத்தான் இங்கிட்டு வாறே... என்னாலயும் முன்ன மாதிரி எங்கயும் போகமுடியலை" என்ற முத்து மாமா, "மாப்ளக்கும் காலாகாலத்துல ஒரு கால்கட்டைப் போட்டுற வேண்டியதுதானே?" என்றார்.

"எண்ணன்னே பண்றது... எல்லாத்தையும் பாக்க வேண்டியிருக்குல்ல... ராமு கலியாண விஷயமா நானும் ஒரு முடிவெடுத்திருக்கேன்... நானே உங்கிட்ட பேசணுமின்னு நெனச்சேன்... நீங்க ஆரம்பிச்சிட்டீங்க... நீங்கதானே முன்னாடி நின்னு நடத்தப் போறீங்க..."

"என்ன பீடிகை போடுறே...?"

"பீடிகை இல்ல... அவன் விரும்புற புள்ளையே கட்டி வச்சிறலாம்ன்னு பாக்குறேன்..."

"என்னத்தா சொல்றே... அவங்களுக்கும்... நமக்கும்..." இழுத்தார்.

"புள்ளைங்க சந்தோசத்தைவிட வேற என்னண்ணே இருக்கு... பேசிப்பார்ப்போம்... இல்லேன்னா இவன் காலமெல்லாம் அவள நினைச்சு கட்டுனவளையும் சந்தோஷமா வச்சிக்கமாட்டான்..."

"சொல்றது சரிதான்... ஆனா... சரி சரி... நீ முடிவு பண்ணிட்டே... பேசிப்பாரு...  எல்லாம் நல்லா முடியும்.. அப்ப நீங்க பேசிக்கிட்டு இருங்க..." நான் கம்மாயில போயி ஒரு விழுக்காடு விழுந்துட்டு வாறேன்..." என்றபடி கிளம்பினார்.

க்கா வீட்டில் இருந்து திரும்பும் போது...

"அம்மா... நா ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே...?"

"என்ன...?"

"பிள்ளைங்க சந்தோஷம்தான் முக்கியம்ன்னு மாமாக்கிட்ட சொன்னீங்கள்ல..."

"ஆமா... அதுக்கென்ன இப்போ..."

"நான், அக்கா சரி... மூணாவதா அண்ணனோட சந்தோஷமும் முக்கியந்தானே..."

"வேற பேச்சு இருந்தாப் பேசு..." என்றாள் கோபமாக.

"இல்லம்மா... அண்ணன் என்ன செஞ்சுச்சு... அண்ணி... எல்லாப் பொண்ணுங்களும் மாதிரி தனியா இருக்கணுமின்னு ஆசைப்பட்டாங்க... சின்னவங்கதானே... விட்டுங்கம்மா... என்ன இருந்தாலும் அவங்களும் நம்ம வீட்டுப் பிள்ளைங்கதானே..."

"அதுக்காக..."

"அதுக்காக நாம இப்ப அண்ண வீட்டுக்குப் போயி அண்ணி குழந்தைகளை பாத்துட்டு அப்புறம் ஐயா வீடு போறோம்..."

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..."

"ப்ளீஸ்ம்மா... எனக்காக..." என்றபடி வண்டியைச் செலுத்தி அண்ணன் வீட்டு வாசலில் நிறுத்த உள்ளிருந்து வேகமாக வெளியே வந்த அண்ணி "வாங்க அத்தே... வா ராமு..." என்றவள் "டேய்... அப்பத்தா பாரு... " என மூத்தவனிடம் சொல்ல அவன் நாகம்மாவைப் பார்க்க... அவளின் கை அவனைத் தூக்க நீண்டது.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 15 ஜூலை, 2014

வீடியோ : சிம்மக்குரலோன் படத்திலிருந்து சில பாடல்கள்

டிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிப்பவர் என்பவர் எல்லோரும் அறிந்ததே... இன்று பெரும்பாலான பாடல்கள் குரலுக்கும் வாயசைக்கும் நடிகருக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் பாடல் நன்றாக இருந்தால் ரசிக்கத்தான் செய்கிறோம். ஆனால் சிவாஜி அவர்களுக்கு டி.எம்.எஸ், சீர்காழி என எவர் பாடினாலும் ஏதோ அந்தப் பாடலைப் தானே பாடுவது போல் வாயசைப்பு உச்சரிப்பிலும் உடல் மொழியிலும் கலக்கிவிடுவார். இந்தளவுக்கு உழைக்கும் நடிகர்கள்கள் அவருக்கு முன்னும் பின்னும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்று நடிகருக்கோ நடிகைக்கோ வாயசைக்க வரவில்லை என்றால் பின்னணிlலாம் பாடல் ஓட வாயசைக்காமலேயே நடித்து விடுகிறார்கள்.

இவையெல்லாம் நான் தூர்தர்சனில் பார்த்த படங்கள்தான்... தியேட்டரில் படம் பார்க்க ஆரம்பித்த காலத்தில் ரஜினியும் கமலும் கோலோச்சியிருந்தார்கள். பிறக்கும் முன்னே வந்த படங்கள் என்றாலும் இந்தப் பாடல் எல்லாம் மனம் கவர்ந்த பாடல்களே...

இங்கு பகிர்ந்து இருக்கும் நடிகர்திலகத்தின் பாடல்கள் எல்லாம் உங்களும் பிடிக்கும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன...  பாடல்களை ரசியுங்கள்...

படம் : பாபு
பாடல் : இதோ எந்தன் தெய்வம்...



படம் : பொன்னூஞ்சல்
பாடல் : ஆகாயப் பந்தலிலே...




படம் : கௌரவம்
பாடல் : யமுனா நதி இங்கே...




படம் : கவரிமான்
பாடல் : பூப்போல உன் புன்னகையில்...




படம் : நல்லதொரு குடும்பம்
பாடல் : சிந்து நதிக் கரையோரம்...




படம் : தியாகம்
பாடல் : வசந்த கால கோலங்கள்...




படம் : திரிசூலம்
பாடல் : திருமாலின் திருமார்பில்...



------------------------------------------------------------

கர்ம வீரரின் இறுதி ஊர்வலம்


கர்ம வீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 112வது பிறந்த தினத்துக்கு ஒரு கட்டுரை தயார் செய்ய நினைத்து அது முடியாமல் போனதால் மக்கள் மனதில் என்றும் நிற்கும் மக்கள் தலைவன் காமராஜர் அவர்களின் இறுதி ஊர்வல காணொளியை இங்கு பகிர்ந்திருக்கிறேன்... 


-------------------------------------------------------------

நடிகர் திலகத்தின் பாடல்களை அவரது நவரச நடிப்போடு பார்த்து ரசித்திருப்பீர்கள்.  மீண்டும் அடுத்த பாடல் பகிர்வில் இன்னும் நல்ல பாடல்களோடு சந்திப்போம்.

-பாடல்கள் பகிர்வு தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 14 ஜூலை, 2014

கிராமத்து நினைவுகள் : ஐஸ் வண்டி


ப்பல்லாம் ஐஸ் வண்டி ஊருக்குள் வருவது என்பது எப்போதாவது பெய்யும் கோடைமழை போலாகிவிட்டது. அப்படியே வந்தாலும் அன்று கிடைத்தது போல் சுவையான ஐஸ் இப்போது கிடைப்பதில்லை. ஐஸ் கட்டியில் கலரும் இனிப்பும் மட்டுமே சேர்க்கப்பட்ட கலவையாகத்தான் இருக்கிறது. ஆனால் பள்ளியில் படிக்கும் காலத்தில் மதிய உணவு இடைவேளைக்கு பள்ளியின் இரண்டு வாயில் பக்கமும் ஐஸ் பெட்டி தாங்கிய சைக்கிள்கள் நிற்கும். பால் ஐஸ், சவ்வரிசி ஐஸ், சேமியா ஐஸ், திராட்சை ஐஸ் என பல ஐஸ்கள் விலை வித்தியாசத்தில் கிடைக்கும்.

இது தினமும் நடக்கும் கதை என்றாலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மற்ற விடுமுறை நாட்களில் ஊருக்குள் ஐஸ் வண்டி வந்து செல்லும். கண்மாய்க் கரையில் ஏறி மாமரத்தின் அருகில் வரும்போதே சைக்கிளில் கட்டியிருக்கும் ஹாரனை 'பாம்... பாம்..' என்று அழுத்தி அடிக்க வீட்டில் இருக்கும் நமக்குள் 'அய்யா... ஐஸ் வந்தாச்சு' என்று நினைப்பு தோன்றும்போதே நாவில் எச்சில் வர ஆரம்பித்துவிடும். கோவிலுக்கு அருகே வேப்பமரத்தடியில் வந்து நின்று கொண்டு 'ஐஸ்...ஐஸ்... பால் ஐஸ், சவ்வரிசி, சேமியா ஐஸ்' என்று குரல் கொடுத்தவாறு ஹாரனை 'பாம்... பாம்...' என்று அடிப்பார்கள். உடனே வீட்டில் எத்தனை பேருக்கு வேண்டும் என தலையை எண்ணிக் கொண்டு காசும் ஐஸை வாங்க ஒரு கிண்ணம் அல்லது தூக்குச்சட்டி எடுத்துக் கொண்டு ஐஸ் வண்டி நோக்கி பறப்போம்.

எங்க ஊருக்கு தொடர்ந்து வரும் ஐஸ் வண்டிக்காரர் செந்தி என்கிற செந்தி மாமா. எல்லோரும் அவரை மாமா என்றுதான் அழைப்போம். ஒரு காலை சற்று தாங்கி நடப்பார். அவர் வரும் நேரத்தில் வேறு வண்டிக்காரரும் வந்தால் செந்தி மாமாவிடம் மட்டுமே வாங்குவோம். காசைப் பற்றி எல்லாம் கவலைப்படமாட்டார். கொடுக்கும் காசுக்கு ஐஸ் கொடுப்பார். எல்லோரும் ஐஸ் வாங்கும் போது வீட்டில் அம்மா வெளியே போய்விட ஐஸ் வண்டியையே பார்த்துக் கொண்டே நிற்பவர்களுக்கு காசில்லாமலே ஐஸ் கொடுத்து விட்டுச் செல்வார். எப்பவும் உடைந்த ஐஸ்களை எல்லாம் எல்லாரிடமும் கொடுத்து விட்டுச் செல்வார். அதனாலேயே செந்தி மாமா என்றால் எல்லாருக்கும் உயிர். அவரும் சிங்கப்பூர் ஆசையில் ஐஸ் வண்டியை ராஜினாமா செய்து விட்டு வெளிநாடு பறந்தார். இப்போ உலகை விட்டே சென்று விட்டதாக கேள்விப்பட்டேன்.

எப்பவும் எங்கள் ஊர் திருவிழா அன்று கரகம் இறக்கப் போகும் போது நாலைந்து ஐஸ் வண்டிகள் வரும். இந்த முறை ஒரே ஒரு வண்டிதான் வந்தது... சின்னப் பிள்ளைங்க சிலர் வாங்கிச் சாப்பிட்டார்கள். அவரும் கண்மாயுடன் திரும்பி விட்டார். ஐஸ் வண்டிகள் எல்லாம் மறைந்து விட்டன... இப்போது அந்த இடத்தை அருண் ஐஸ்கிரீம், ஜமாய் ஐஸ்கீரிம் என பெரிய கம்பெனிகள் பிடித்து விட்டன. பிஸ்தா, பாதாம் எனப் போட்டு பணத்தைப் பிடுங்கிவிடுகிறார்கள். என்னதான் இருந்தாலும் 50 காசு, ஒரு ரூபாய்க்கு வாங்கிச் சாப்பிட்ட குச்சி ஐஸ்க்கு முன்னால் இவை சாதாதான்.


இங்க இன்னொரு விஷயம் சொல்லணும்... இந்த முறை காரைக்குடியில் பெரியார் சிலையில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் வழியில் புதிதாக ஒரு ஐஸ்கிரீம் கம்பெனி ஆரம்பித்திருக்கிறார்கள். என்னமோ பெயர்... நினைவில் வரவில்லை... ஸ்ருதி அங்குதான் ஐஸ்கிரீம் வாங்க வேண்டும் என்று இரண்டு மூன்று தடவை கேட்டும் வாங்கிக் கொடுக்கவில்லை. ஒரு முறை சரி வாங்கலாம் என்று போனால் என்ன பிளேவர் எனக்கேட்டு ஒரு டப்பாவில் போட்டு அதன் மீது மாங்கோ சாஸ், அது இது என்று கேட்டுக் கேட்டு ஊற்றி எல்லாத்தையும் மொத்தமாக வைத்து எடை போட்டு 5 சிறிய டப்பா ஐஸ்கீரிம் 875 ரூபாய் என்றார்கள். எனக்கு மயக்கமே வந்துவிட்டது... சரி பிள்ளைகளுக்காக வாங்கியாச்சு என்று சமாதானமாகி பணத்தைக் கொடுத்துவிட்டு வந்தேன். போகும் வழியில் சாப்பிட்டால் பாதிதான் குழந்தைகளுக்குப் போனது... வாங்கிட்டமே என மற்றவர்கள் சாப்பிட்டோம். 

-கிராமத்து நினைவுகள் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 13 ஜூலை, 2014

பார்த்தவை... ரசித்தவை... இனியவை...

நோன்பு துவங்கியதில் இருந்து காலையில் அலுவலக நேரம் மாறியிருப்பதால் ஐந்து மணிக்கு அலறி அடித்து எழுந்து குளிக்க ஓடும் நிலமை இல்லாமல் இந்த பதினைந்து நாள் கழிந்து விட்டது. இன்னும் பதினைந்து நாளைக்கு இந்தச் சுகம். மீண்டும் காலை ஐந்து மணிக்கு கிளம்ப வேண்டும். சரி விஷயத்துக்கு வருவோம். இந்த நாட்களில் சில படங்களைப் பார்த்தேன்... இருங்க ஓடிடாதீங்க நாஞ்சில் மனோ அண்ணன் மாதிரி பழைய படமா தேடிப்பிடித்துப் பார்க்கலை... சில மலையாளப் படங்கள்... சில தமிழ்ப்படங்கள்... முதலில் தமிழ்ப்படங்களை கவர்ந்த வரிசையில் பார்க்கலாம்.


முண்டாசுப்பட்டி :  போட்டோ எடுத்தால் செத்துப் போவோம் என்ற மூடநம்பிக்கை கொண்ட கிராமத்துக்குள் செத்தவரை போட்டோ எடுக்கப் போகும் நாயகன் அங்கு காதலில் விழுந்து தான் செய்யும் ஒரு காரியத்தால் அங்கு அடிமையாக வேலை பார்த்து காதலையும் தொடர்கிறார். படம் முழுவதும் நகைச்சுவை... நகைச்சுவை... நகைச்சுவை... எனவெ லாஜிக் எல்லாம் பாக்காமல் கதையோடு பயணிக்க முடிகிறது. முனீஸ்காந்த்... சான்ஸே இல்லை.... மனுசன் சிரிக்க வைத்தே கொல்கிறார்... கதையையோ... சதையையோ எதிர்பார்க்காமல் சிரித்து வரவேண்டும் என்றால் முண்டாசுப்பாட்டிக்கு தயங்காமல் ஒரு விசிட் அடிக்கலாம்.

உன் சமையல் அறையில் : என்னைப் பொறுத்தவரை பிரகாஷ்ராஜ் படங்கள் என்றால் பார்த்து விடுவது வழக்கம். ஒரு சிறிய கதையை எடுத்துக் கொண்டு அதை தொய்வில்லாமல் கொண்டு போவதில் அவர் கில்லாடி. சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாயகன், தவறாக சாப்பாடு ஆர்டர் கொடுக்க போன் செய்த பெண்ணிடம் போனில் பேசி பழகி நேரில் சந்திக்கும் நாள் வரும்போது தன்னைப் பற்றி என்ன நினைப்பாரோ என இருவரும் தங்களுக்கு மாற்றாக ஒருவரை அனுப்ப, அதன் பின்னான நிகழ்வுகளை அழகாகச் சொல்லியிருக்கிறார். சிநேகா நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முகத்தில் எப்பவும் இருக்கும் சிரிப்பில் கொஞ்சம் கம்மிதான். ஊர்வசி நன்றாக நடித்திருக்கிறார்... இளங்காதலர்கள் இருவரும் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். தம்பி ராமையா சிரிப்பு வெடி வெடிக்கிறார்.

சைவம் :  எங்கள் ஊர்ப்பக்கம் எடுத்திருக்கிறார்கள். ஒரு சேவலையும் குழந்தையையும் வைத்து நகர்கிறது கதை. இடையில் அத்தை பெண்ணை விரட்டி விரட்டி லவ் பண்ணும் பையன், வீட்டுப் பெரியவரான தாத்தா, வேலைக்காரன், அவனது மனைவி மற்றும் திருவிழாவுக்கு வரும் ஒட்டு மொத்தக் குடும்பம் என கதை ஒரு வீட்டுக்குள் நகர்கிறது. ஒரு ஏரியா பேச்சு வழக்கை எடுக்கும் போது சின்னச் சின்ன வார்த்தைகளையும் கவனிக்க வேண்டும் என்பது இயக்குநருக்கு தெரியவில்லையோ என்னவோ... நிறைய வார்த்தைகள் சிவகங்கை மாவட்ட வழக்கில் இல்லாதது... வெடக்கோழி என்பது முட்டையிடும் பருவத்தில் உள்ள கோழி, வெடக்கோழி ரசம் உடம்பு வலியைப் போக்கும்... இந்தப்படத்தில் சேவலை விடக்கோழி என்று சொல்லும் போது சிரிப்புத்தான் வந்தது. இயக்குநர் விஜய் கொடுத்த படத்தில் இது சொந்தக் சரக்கு என்பதால் கதையின் போக்கு பிடித்திருந்தது.

மேலும் அமரா, அன்றும் இன்றும், கல்பனா ஹவுஸ் என சில படங்களையும் பார்த்தேன். சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எங்கள் அறை நண்பர் அமரா பாக்கும் போது இதென்ன படம் என்றார். அமரா என்றதும் அப்படி ஒரு படம் வந்திருக்கா.. நீ எப்படிய்யா இப்படி எல்லாம் படம் பாக்குறே என்று கேட்டார். இப்படிப்பட்ட படங்களில்தான் எப்படி இந்தப் படத்தை எடுத்தார்கள் என்று ஆராய்ந்து பார்க்க முடியும் என்று சிரிக்கவும்... உனக்கு ரொம்ப பொறுமைதான் என்று சொல்லி பேர் தெரியாத படமெல்லாம் பார்க்க இங்க நீ இருக்கேன்னு அந்த டைரக்டருக்கு தெரியும் போல என்று சொல்லி இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டார்.

தமிழ்ப்படங்கள் தவிர சில மலையாளப் படங்கள் பார்த்தேன். இந்த மலையாள இயக்குநர்களுக்கு எப்படித்தான் இப்படியான கதைகள் கிடைக்கின்றனவோ... எல்லாமே அருமையான படங்கள்... அதில் சில கவர்ந்த வரிசையில்...


த்ரிஷ்யம் : மோகன்லால் நடிப்பில் கலக்கலான ஒரு கிரைம் படம். மகளை செல்போனில் போட்டோ எடுத்து மிரட்டியவனை மகளும் மனைவியும் கொன்று புதைக்க அவர்களைக் காப்பாற்ற மோகன்லால் எடுக்கும் நடவடிக்கைகள்... அதற்கு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் கொடுக்கும் ஒத்துழைப்பு என படம் அமர்க்களமாய் நகரும். இங்கு கூட ஒரு ஒரு காட்சியாக ஓட்டி 100 நாட்கள் ஓட்டினார்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

1983 : கிரிக்கெட்டில் பெரியாளாக வரவேண்டும் என்ற தனது கனவுக்காக படிப்பு கெட்டு காதல் விட்டு அதை அடைய முடியாமல் குடும்ப வாழ்க்கைக்குள் செல்பவன் தன் மகனை கிரிக்கெட்டில் பெரிய ஆளாக்க போராடும் கதை. கிரிக்கெட்தான் களம் என்றாலும் ஒரு அருமையான படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்கும்.

லா பாயிண்ட் : குஞ்சக்கோபோவன், நமீதா ப்ரமோத் நடித்த படம். காதலித்தவன் ஏமாற்றியதால் தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்பட்ட பெண்ணின் தந்தை கோர்ட்டில் வழக்கு தொடர்வதும் அந்த வழக்கை முடித்துக் கொள்ள பையனின் தந்தை பணம் கொடுப்பதற்காக வக்கீலான நாயகனிடம் வருகிறார். அதன் பின் நகரும் கதை ஒரு நீண்ட தூரப் பயணமாக நாயகனும் நாயகியும் செல்வதில் இருந்து நம்மையும் அழைத்துச் செல்கிறது.

லைப் : நம்ம ஊரு கலாபக்காதலன் படத்தை கொஞ்சம் உல்டாவாக்கி இருக்கிறார்களோ எனத் தோன்றும் கதை. தனது அலுவலகத்தில் வேலை செய்பவருக்கு உடம்பு முடியாத ஒரு சூழலில் அவர்களின் இளவயதுப் பெண்ணை தன் வீட்டில் கொண்டு வைத்து வைத்துக் கொள்கிறார்கள் முதலாளியும் அவரது மனைவியும்.. இந்த நட்பு தொடர, எதேச்சையான தொடல்கள் எல்லாம் பருவ வயதுப் பெண்ணுக்குள் மாற்றத்தைக் கொண்டு வர, தன்னை மகளாகப் பாவிக்கும் நாயகியின் கணவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். நாயகியின் கணவனும் அவள் பின்னே சுற்ற கடைசியில் என்ன ஆகிறது என்பதை அழகான திரைக்கதையில் நகர்த்தியிருக்கிறார்கள். நாயகி சாவித்திரியாக புதுமுகம் ஸ்டெப்பிகிரேஸ் என்பவர் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.

திரா : ஷோபனாவின் நடிப்பில் வந்து வெற்றி பெற்ற படம், பருவப் பெண்களைக் கடத்தும் கும்பல் டாக்டரான ஷோபனாவின் ஆதரவில் இருக்கும் பெண்களைக் கடத்த அவர்களைத் தேடி அலையும் போது தங்கையை அதே கும்பலிடம் தொலைத்தவனும் இணைய இருவருமாக எப்படி அவர்களை மீட்கிறார்கள் என்பதுதான் கதை.

டைமண்ட் நெக்லஸ் : இந்த பகத்பாசிலுக்கு எப்படித்தான் எல்லாக் கதாபாத்திரமும் பொருந்துகிறதோ தெரியவில்லை... துபாயில் டாக்டராக பணிபுரியும் பகத், தனது தாந்தோன்றித்தனமான பகட்டான வாழ்க்கைக்காக கிரெடிட் கார்டில் லோன் வாங்கி அதனால் படும் கஷ்டங்கள், இடையில் தமிழ் பெண்ணுடன் காதல், ஊரில் பணக்காரப் பெண்ணுடன் திருமணம், கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்ணுடனான உறவு, அந்தப் பெண்ணிடம் திருடும் வைர நெக்லஸ் அதன் பின்னான நிகழ்வுகள் என மனிதர் கலந்து கட்டி ஆடியிருக்கிறார். படமும் போரடிக்காமல் போகிறது.

படங்கள் ஒரு பக்கம் இருக்க பார்க்க வேண்டும் என்று நினைத்த சில உறவுகளில் இருவருடன் பேசவாவது செய்தேன் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு சாதனைதான் போங்க... ஒருவர் குடந்தை சரவணன் அண்ணா, இரண்டு மூன்று முறை பேசியாச்சு... மிகவும் பாசமான பேச்சு. மற்றொருவர் திண்டுக்கல் தனபாலன் சார்... நேற்று பேசினேன்... ஊருக்கு வந்தும் சந்திக்கவில்லையே என்ற ஆதங்கத்தோடு ஆரம்பித்தார். பதிவுலகம், மதுரை பதிவர் சந்திப்பு என பதிவுலகம் பற்றியே பேசினார். உண்மையில் நீண்ட நாள் பழகியது போல் ஒரு அருமையான... அன்பான பேச்சு.... என்னுடன் பேசிய இருவருக்கும் மனசு நிறைந்த நன்றி.... இந்த உறவு இனித் தொடரும்...

-'பரிவை' சே.குமார்.

சனி, 12 ஜூலை, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 68

முந்தைய பதிவுகளைப் படிக்க...


68.  மாற்றம் என்பது மனதைப் பொறுத்தது

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். இதனால் கோபம் அடைந்த வைரவன் ஒரு சந்தர்பத்தில் தனது பரம எதிரி இளங்கோவிடம் பேசும் சூழல் வர, ராம்கியை நான் போடுகிறேன் என்று சொல்லும் இளங்கோ அதற்கு கைமாறாக புவனாவைக் கேட்கிறான். ஊரில் நடப்பது தெரியாமல் ஊருக்குப் புறப்பட்டு வருகிறான் ராம்கி.

இனி...

மாஹா ஆர்.எக்ஸ்.100ஐ ஸ்டார்ட் பண்ணிய இளங்கோ தனது நண்பனை "ஏறுடா" என்றான்.

"எங்க மாப்ள? இப்ப எங்க போறோம்...?" என்றபடி ஏறியவனிடம் "மணிப்பயல பாத்துட்டு வருவோம்" என்றபடி ஆக்ஸிலேட்டரை முடுக்கினான்.

"என்னடா... திடீர்ன்னு எதிரிகூட நண்பனாயிட்டு வந்திருக்கே? அவனை எல்லாம் எப்பவுமே தூரத்திலதான் வச்சிருக்கணுமின்னு சொல்வே... எப்படிடா?"

"மாப்ள உனக்கே தெரியும்... அந்த புவனாக்குட்டி மேல எனக்கு ஒரு இதுன்னு... அந்தப் பய... அதான்டா ராம்கியோ மூர்த்தியோ... அவன் அவளை லவ்வுறான்னு தெரிய வந்தப்போ ஒரு கணக்குப் போட்டேன்... எப்படியும் வைரவனுக்கு இதுல இஷ்டம் இருக்காது... அந்த இடத்துல நாம புகுறணுமின்னு நினைச்சேன்... ஆக்சுவலா அன்னைக்கு நடந்த தண்ணிப் பார்ட்டிக்கு சொன்ன காரணம்தான் அந்த பயலோட பிறந்தநாள்... ஆனா செலவெல்லாம் நாந்தான்... வைரவனுக்கிட்ட வத்தி வச்சி அவனோட மனசுல எடம் பிடிக்கப் போனவனுக்கு அவன் பத்திக்கிட்டு வந்து நின்னதும் நிறையக் குடிச்சதால அதைக் கக்கினதும் லாபமாப் போச்சில்ல... இப்ப காலேசுல ஒழிக்க நினைச்சவனை சிலவருடங்களுக்குப் பின்னால மேல அனுப்பப்போறேன்... அப்புறம் என்னோட மனசுக்குள்ள ஒரு மூலையில நின்னு சிரிச்சிக்கிட்டு இருக்க புவனாவை அடையப்போறேன்... அதாவது ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கப்போறேன்... " என்று சத்தமாகச் சிரித்தான்.

"சரி மாப்ள... அப்ப பெங்களூர்ல நம்ம கூட படிச்ச ராதிகா, உன்னைய விரும்புனாளே... நீயும் அவளைக் கட்டிக்கிறதாச் சொன்னியே... அது?"

"என்னடா நீயி... அங்க படிக்க வரைக்கும் நமக்கு ஒரு துணை வேணாமா... அதுக்குத்தான் ராதிகா... அனுபவிச்சாச்சு... இனி அவளை கழட்டி விட்டுற வேண்டியதுதான்... வீட்ல ஒத்துக்கலை... தங்கச்சிக்கு மேரேஜ் பண்ணிட்டுத்தான் பண்ணனும்... கன்வின்ஸ் ஆவாங்களான்னு தெரியலை... நீ நல்லா பையனாப் பார்த்து கட்டிக்கிட்டு சந்தோஷமா இருன்னு சொல்லி அத்து விட்டுற வேண்டியதுதான்.... நமக்கா சொல்லக் காரணம் கிடைக்காது.... நம்புற மாதிரி பேசிக்குவோம்..."

"மாப்ள நீ சாதாரண வில்லன் இல்லடா... வில்லனுக்கு வில்லன்...." 

"இங்க பாருடா... எல்லாத்தையும் பேஸ் பண்ணத் தெரியலைன்னா வக்கீலுக்குப் படிச்சு என்ன லாபம் சொல்லு..." என்றவனின் வண்டி பஸ் நிலையத்தைக் கடந்தபோது அண்ணாத்துரை பைக்கில் யாருக்கோ காத்திருப்பதைப் பார்த்ததும் பைக்கைத் திருப்பிக் கொண்டு அவனிடம் வந்தான்.

"என்ன அண்ணாத்துரை எப்படியிருக்கே?"

"என்ன ஆச்சர்யமா இருக்கு ஒரு நாளும் இல்லாத திருநாளா எங்கிட்ட எல்லாம் பேசுறீங்க..." என்றான் அண்ணாத்துரை.

"ஏன் பேச மாட்டோமா... அப்ப மோதிக்கிட்டம்முன்னா அதுக்காக அப்படியேவா இருக்க முடியும்..."

"அது சரிதான்... படிப்பெல்லாம் முடிச்சிட்டிங்களா? இப்ப யார்கிட்ட பிராக்ட்டிஸ் பண்ணுறீங்க?"

"இன்னும் ரிசல்ட் வரலை... பிராக்டிஸ் போகலை... இனித்தான் போகணும்... சண்முகவேலு மாமாக்கிட்டதான் போகலாம்ன்னு இருக்கேன். ஆமா என்ன பஸ்ஸ்டாண்டுல நிக்கிறே?"

"ஏன்... நிக்கக்கூடாதா...?"

"அப்படிக் கேக்கலை... பூபாலண்ணன் வர்றாரா என்ன?"

"இல்ல... என்னோட பிரண்ட் வர்றான்... அதான்..."

"ம்...அதானே யாராவது வந்தாத்தானே இங்க நிக்க வேண்டிய சூழல் வரும்... அதான்... ஆமா யாரு... இப்பக் கூடப்படிக்கிறவனா?"

"இல்ல... உங்களுக்கு அவனை நல்லாத் தெரியுமே... உங்க ஆளுகளை பிரிச்சு மேஞ்சானே ராம்கி... அவந்தான் வர்றான்..." அண்ணாத்துரை எதார்த்தமாகப் பேச, வைரவனுக்கு கையில் லட்டைக் கொண்டு வந்து கொடுத்து தின்னு தின்னு என்று சொல்வது போல் இருந்தது.

"ராம்கியா... ஆமா அவன் திருப்பூர் பக்கம் இருக்கதால்ல கேள்விப்பட்டேன்... எத்தனை நாள் லீவுல வர்றான்... அந்தப் புள்ள... அட வைரவனோட தங்கச்சி... பேருகூட புவனாவோ கனகாவோ..."

"ம்... அது பேரு புவனா... பசங்களை ஞாபகம் இருக்கு... நீங்க விரட்டுன புவனா பேரு ஞாபகம் இல்லையாக்கும்... நடிப்பா?"

"சரி... சரி... அவங்க ரெண்டு பேரும் லவ்வு அது இதுன்னு கேள்விப்பட்டேனே..."

"அப்படியா... எங்களுக்குத் தெரிஞ்சு அந்த மாதிரி இல்லை... அவன் வர்றது அவங்க அம்மாவையும் அக்காவையும் பாக்க... ரெண்டு நாள் இருப்பான்... அப்புறம் போயிடுவான்... புவனா கிவனாவையெல்லாம் பாக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கில்லை.... இந்தத் தகவல் போதுமா இல்லை இன்னும் ஏதாவது வேணுமா?" என அண்ணாத்துரை கடுப்பாகக் கேட்கவும் வேண்டியது கிடைச்சாச்சு இனி தேவையில்லாம எதுக்கு பேச்சு என்று நினைத்தபடி "சரி வர்றோம்..." என்றபடி வண்டியை மணி வீடு நோக்கிச் செலுத்தினான்.

"அம்மா... நீ என்ன முடிவு பண்ணியிருக்கே?" தன்னிடம் போனில் கேட்ட சீதாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் "அது... அது..." என இழுத்தாள் நாகம்மா.

"என்னம்மா இழுக்குறீங்க... எதுலயுமே தீர்மானமா ஒரு முடிவெடுங்க...?"

"அதுக்கில்ல நாம எப்படி அவங்ககிட்ட பொண்ணு கேக்கிறது... அதுவும் இல்லாம நம்ம சாதி சனம் என்ன சொல்லும்... நாளைக்கு ஊர்க்கூட்டம்... நாட்டுக்கூட்டமுன்னு போட்டா எல்லாப்பயலும் அவனுக பக்கம் சேந்துக்கிட்டு நம்மள நாறடிச்சிப்புடுவானுங்களே... முடிய அறுத்து கரும்பு(ள்)ளி செம்பு(ள்)ளி குத்தி கழுத மேல ஏத்தி கேவலப்படுத்துவானுங்களே..."

"அம்மா... எவனும் கேவலப்படுத்த வரமாட்டான்... அவனுக்கு அவளைப் பிடிச்சிருக்கு... அவளுக்கு அவனைப் பிடிச்சிருக்கு... ரெண்டு பேரும் மேஜர்... ஒத்து வந்தாப்பாப்போம்... இல்லைன்னா போலீஸ் ஸ்டேசனுக்குப் போயி கட்டி வைப்போம்... நம்ம சந்தோஷத்தைத்தான் அவன் பெரிசா நினைக்கிறான்... அவன் சந்தோஷத்துக்காக நாம இதைக்கூட செய்யலைன்னா எப்படிம்மா... சொல்லு..."

"சரி நா... எப்படி... அவங்ககிட்ட..."

"நீங்க வேண்டாம்... அவனோட ஐயாவையும் அம்மாவையும் பேசச்சொல்வோம்... அவனுக்காக அவங்க பேசுவாங்க... என்ன சரியா.."

"ம்... சரி... என்ன நடக்கணுமின்னு இருக்கோ அது நடந்துதானே ஆகணும்..." என்றவள் "சீதை... தம்பி வந்துட்டான் போல... வாசல்ல வண்டி வந்து நிக்கிற சத்தம் கேக்குது நா அப்புறமா கூப்பிடுறேன்..." என்றவள் மகளின் பதிலுக்குக் காத்திராமல் வாசலுக்கு ஓடினாள்.

"என்னண்ணே திடீர்ன்னு இந்தப்பக்கம்?" இளங்கோவைப் பார்த்து கட்டிலில் படுத்திருந்த மணி கேட்டான்.

"சும்மாதான் உன்னயப் பாத்துட்டு போகலாம்ன்னு..."

"ஏண்ணே காமெடி பண்றே?" என்று சிரித்தவன், "சொல்லு என்ன விஷயம்?"

"அது... உன்னால எனக்கொரு காரியம் ஆகணும்..?"

"என்னாலயா... படுக்கையில கிடக்கவன் என்ன செய்ய முடியும் சொல்லு?"

"நீ இருந்த இடத்துல இருந்தே என்ன வேணுமின்னாலும் செய்வே... எனக்கு ஒருத்தனைப் போடணும்?"

"போடணுமா...? யாரை...?"

"முன்னாடி நீ போடப் பொயிட்டு பிரண்டு வந்துட்டான்னு வந்தியே அந்த...." அவன் வார்த்தையை முடிக்குமுன்னர் "ராம்கியையா?" என்றான் மணி.

"ஆமா... அவனைத்தான்... உன்னை நம்பித்தான் வைரவனுக்கிட்ட நா போடுறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்... நீ உன்னோட பசங்ககிட்ட சொன்னா வேலை சுலபமா முடிஞ்சிடும்... எவ்வளவு கேக்குறியோ அதை நா இங்க கொண்டாந்து தந்திடுறேன்..."

"வைரவணும் நீயும் சேந்துட்டிங்களா? சந்தோஷம்ண்ணே... ஆனா இது வேண்டாண்ணே... இதுவரைக்கும் நான் எனக்குன்னு எதுவுமே செஞ்சுக்கலை... எல்லாமே உங்கள மாதிரி ஆளுகளுக்காகத்தான் செஞ்சேன்... நா பண்ணுன பாவந்தான் இன்னைக்கு எல்லாமே படுக்கையின்னு ஆயிப்போச்சு... இனி எனக்கு கலியாணம் காச்சி எதுவும் நடக்கும்ன்னு தெரியலை... என்னய பாவம் பண்ணக் கூப்பிடாதீங்கண்ணே..."

"என்னடா இப்படி மாறிட்டே... பணம்டா... பணம்டா... படுத்துக்கிட்டே சம்பாதிக்கலாம்... உன்னால குட்டிக்கரணம் போட்டாலும் இம்புட்டுப் பணம் சம்பாரிக்க முடியாது..."

"எதுக்குண்ணே எனக்குப் பணம்... தினம் தினம் செத்துக்கிட்டு இருக்க இந்த வாழ்க்கைக்கு எதுக்குப் பணம்... என்னடா இவனெல்லாம் வேதாந்தம் பேசுறானேன்னு பாக்குறியா... வரும் போது வாசல்ல பாத்திருப்பியே அம்மாவை... எப்படி இருந்தவங்க... இன்னைக்கு எப்படியிருக்காங்க பாத்தியா... எல்லாம் என்னையப்பத்தின கவலைதான்... நா ரவுடிப்பயலா இருந்தாலும் அவங்களுக்கு தங்கந்தானே... அடிபட்டதுக்கு அப்புறந்தாண்ணே அப்பா, அம்மா பாசமெல்லாம் எனக்குத் தெரிய ஆரம்பிச்சிச்சு... என்னய நினச்சே ரெண்டு பேரும் ஓடாப்பொயிட்டாங்க... மறுபடியும் வெட்டுக்குத்துன்னு இறங்கி எல்லார் தலயிலயும் மண்ணள்ளிப் போட விரும்பலைண்ணே.... அவனும் பாவண்ணே...புவனாவுக்காக நா கூட அவனைக் குத்தினேன்... விட்டிருந்தா கொன்னிருப்பேன்... அப்ப மூடனா மூர்க்கனா இருந்தேன்... மகனுக்காக வாழ்ற அந்த தாயை நான் எங்கம்மா மாதிரித்தான் பார்க்கிறேன்... வேண்டாண்ணே... ஒரு தாயோட வலிய பக்கத்துல இருந்து பாக்கும் போதுதாண்ணே அதோட அழுத்தம் புரியிது..."

"சரி... நீ ரொம்ப மாறிட்டேடா... சித்தாந்தம் எல்லாம் பேசுறே... உன்னோட சித்தாந்தமும் வேண்டாம்... வேதாந்தமும் வேண்டாம்... பணம் குடுத்த எத்தனையோ பேர் இதைச் செய்யக் காத்திருக்கானுங்க... நான் பார்த்துக்கிறேன்... நீ உடம்பைப் பார்த்துக்க.... வர்றமுடா..." என்றபடி கிளம்பினார்கள்.

'பாவம் ராம்கி... எப்படியாச்சும் அவனைக் காப்பாத்தணுமே..?' என்று நினைத்தவன் தன்னைக் கடந்து போன அம்மாவிடம் "அந்தப் போனை இங்கிட்டுக் கொடுத்துட்டு அப்பா போன் நம்பர் எழுதி வச்சிருப்பாங்கல்ல அந்த நோட்டையும் கொடுங்கம்மா..." என்றான்.

அம்மா எடுத்துக் கொடுக்க புவனாவின் அப்பா கடை நம்பரைத் தேடி, கருப்பையா பாத்திரக்கடை என்பதற்கு நேராக இருந்த நம்பருக்கு போன் செய்து ரீசிவரைக் காதில் வைத்தான். சற்று நேரத்தில் எதிர்முனையில் புவனாவின் அப்பா 'அலோ' என்றார்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.