மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 10 ஜூலை, 2015பாபநாசம்... அட்டகாசம்


த்ரிஷ்யம் - மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம். படத்தின் கருவும் கதையோட்டமும் மிக நேர்த்தியாக இருந்ததால் படத்தை மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் நடிக்க அந்தந்த மொழிக்கேற்ப எந்த மாற்றமும் செய்யாமல் நடிகர்களுக்காக சமரசம் செய்யாமல் அப்படியே எடுத்து அசத்தல் வெற்றி பெற்றார்கள்.

அதே கதையை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கிறார்கள் என்றதும் கமல் நல்ல கலைஞன்தான்... ஆனால் அவரது தலையீடு இல்லாமல் படம் எடுக்கப்படுமா? கமலுக்காக திரைக்கதையில் மாற்றம் செய்யப்படுமா? இதைவிட முக்கியமாக கமல் நடிக்கிறாரே படம் பிரச்சினையில்லாமல் வெளிவருமா? என்று ஆளாளுக்கு பேச ஆரம்பித்தார்கள். இதில் முக்கிய பிரச்சினையாக மலையாளத்தில் நடித்த மீனாவே இங்கும் நாயகி ஆகலாம் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் கமல் மீனா வேண்டாமென மறுத்து நதியாவை நடிக்க வைக்க முயற்சிப்பதாக செய்திகள் வந்தபோது இயக்குநரே விரும்பி கவுதமியை நடிக்க வைத்துவிட்டார் என்றார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்... பாபநாசம் தமிழில் எப்படி? கமல் என்ற மகாநடிகன் கதையின் நாயகனாக மட்டுமே நடித்து இருப்பதே படத்தின் மிகப்பெரிய வெற்றி. அது போக கதையை தமிழுக்கு ஏற்றார்போல் எடுத்திருந்தாலும் த்ரிஷ்யத்தில் இருந்து காட்சிகளை மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப், த்ரிஷியத்தின் இயக்குநரும் இவரே. நெல்லைப் பேச்சு வழக்கோடு நகரும் கதை மக்கள் மனதில் மிகப்பெரிய இடம் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


த்ரிஷியத்தில் மோகன்லால் தன்னிடம் ஜீப் இருந்தாலும் ஒரு பழைய சைக்கிளை தலையை ஒரு பக்கமாக சாய்த்தபடி ஓட்டிக் கொண்டு வருவார். நான் கமல் ரசிகன் என்றாலும் தமிழில் எடுக்கிறார்கள் அதுவும் கமல் நடிக்கிறார் என்றதும் கண்டிப்பாக சைக்கிள் ஓட்டமாட்டார்... வண்டியை கொடுத்து இந்தக் காட்சியின் அழுத்தத்தைக் கெடுத்து விடுவார்கள் என்று எனது மலையாள நண்பரிடம் சொன்னேன். ஆனால் படம் பார்த்தபோது சைக்கிளுக்குப் பதிலாக டிவிஎஸ்ஸில் கமல் வரும்போது ரொம்பப் பிடித்துப் போனது.

பாபநாசத்தில் வாழும் ஒரு அன்பான குடும்பத்தில் கல்வி சுற்றுலா போன மகளால் சுற்றும் ஒரு பிரச்சினை கொலையில் முடிந்து அதை நாயகன் எப்படி மறைத்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறான் என்பதே கதை. கதையோடு ஒன்றி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக நகர்த்தியிருப்பார்கள். கமலின் சின்ன மகளாக நடிக்கும் எஸ்தருக்கு இதே கதையில் மூன்றாவது முறையாக நடிக்கும் வாய்ப்பு... முகத்தில் பயம் காட்டும் ஒவ்வொரு காட்சியிலும் குட்டி கலக்கியிருக்கு.

கமல்... சொல்லவே வேண்டாம்... நடிப்புக்காகவே பிறந்த கலைஞன்... விஸ்வரூபம், உத்தம வில்லனில் பார்த்த கமலுக்கும் பாபநாசத்தில் பார்க்கும் கமலுக்கும் நிறைய வித்தியாசம். வேஷ்டி சட்டையில் மகாநதியில் பார்த்த கமலைப் போல மீண்டும் பார்க்க முடிகிறது. பாசமான குடும்பத் தலைவனாக, கேபிள் டிவி நடத்துபவராக, கொலையை மறைக்க தான் பார்த்த படங்களை வைத்து திட்டம் தீட்டி போலீசில் அடிவாங்கி, உதைவாங்கி குடும்பத்தை காப்பாற்றுபவராக... நெல்லைத் தமிழ் பேசி சுயம்புலிங்கமாகவே வாழ்ந்திருக்கிறார். இறுதிக் காட்சியில் ஒரே டேக்கில் ஓராயிரம் முகபாவம் காட்டி கமலுக்கே உரிய நடிப்பில் மிளிர்கிறார்.


கமலின் மனைவியாக வரும் கவுதமி... பாபநாசம் வெளியானதும் மீனா கும்முனு இருந்தார்... இது வத்தக் காமாட்சி மாதிரி இருக்கு... நல்லாவே நடிக்கலை என்றெல்லாம் சொன்னார்கள். த்ரிஷ்யம் முன்னால் வந்து அதில் மீனா நடித்திருந்ததால் நமக்குள் மீனா பொருத்தமான தேர்வாகத் தெரிந்தார். இதே வேறு யாராவது நடித்திருந்தால்...? மேலும் வயதுக்கு வந்த பெண்ணுக்கு தாயாக வரும்போது வத்தக்காமாட்சி எந்த விதத்திலும் குறையவில்லை. பெண் குழந்தைகளைப் பெற்ற தாயின் பரிதவிப்பை முகத்தில் காட்டியிருக்கிறார். அவருக்கான குரல் மற்றும் உடல்மொழி கொஞ்சம் ஒத்துழைக்கவில்லை என்றாலும் தனக்கான இடத்தை சரியாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். 

ஆஷா சரத்... மிடுக்கான போலீஸ் அதிகாரி... மலையாளத்தில் சும்மா கலக்கி எடுத்திருப்பார். அவரே தமிழிலும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஒரு போலீஸ் அதிகாரி என்றால் எப்படி இருக்க வேண்டும்... அதுவும் காணாமல் போனது தனது மகனைப் பற்றி விசாரிக்கும் போது எந்தவிதமான விசாரணை முறைகளைச் செய்வார் என்பதை எல்லாம் அழகாக, போலீசுக்கே உரிய மிடுக்கோடு செய்து கமலுக்கு நிகராக நடிப்பில் கலக்கியிருக்கிறார். எஸ்தரை கலாபவன் மணி அடிக்கப் போகும்போது கமலின் கண்கள் போவதைப் பார்த்தே அவர்களை வெளியேற்றிவிட்டு விசாரிப்பதிலாகட்டும், என் மகன் என்ன ஆனான் என தவிப்பதிலாகட்டும் சபாஷ் போட வைக்கிறார்.

கமலின் மகள்களாக வரும் நிவேதா தாமஸ், எஸ்தர், டீக்கடை பாயாக வரும் எம்.எஸ். பாஸ்கர் (மனுசனின் நெற்றியில் தொழுவதால் ஏற்படும் அடையாளத்தை கூட தத்ரூபமாகக் கொண்டு வந்து நம் கண்முன்னே ஒரு பாயாகவே நிறுத்தியிருக்கிறார்கள்), போலீசாராக வரும் அருள்தாஸ், இளவரசு, கலாபவன் மணி, ஆஷாவின் கணவராக வரும் ஆனந்த் மகாதேவன், கமலின் மாமனாராக வரும் டில்லி கணேஷ், கமலிடம் வேலை பார்க்கும் பையன், கண்டக்டராக வரும் சார்லி என எல்லாருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


இசை ஜிப்ரான்... கமலின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் இசையமைப்பாளாராக கமலின் மனம் கவர்ந்தவராக மாறிவிட்டார் ஜிப்ரான். பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் பின்னணி இசையில் வெற்றி பெற்றுவிட்டார். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் அடக்கி வாசித்தாலும் வீட்டிற்கு போலீஸ் ஜீப் வரும்போது பின்னணி இசையில் இனி ஒரு திக்... திக்.. அனுபவத்தோடு படம் பார்ப்பீர்கள் என்று எல்லோரையும் உணர வைத்துவிட்டார்.

மோகன்லாலா...? கமலா...? யார் வெற்றி பெற்றார்கள் என ஒரு பட்டிமன்றமே நடக்கிறது. கமல் நடிப்பை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை... ஆஷா சரத் வீட்டில் அடிபடும் இடத்தில்... பிணத்தை தோண்டும் இடத்தில்... மனைவியை கொஞ்சுமிடத்தில்... மகள்களை அணைத்துக் கொள்ளும் இடத்தில்... இறுதிக் காட்சியில்... என ஒவ்வொரு இடத்திலும் மனுசன் பின்னிப் பெடலெடுத்துவிட்டார். மேலும் இந்தக் கதையை மூன்று மொழிகளில் மூன்று நடிகர்களின் நடிப்பில் பார்த்தும் விட்டார். அந்தச் சாயல் வராமல் நடிக்க வேண்டும் என்பதே அவருக்கான சவாலாக அமைந்தது. ஆனால் மோகன்லால்... ஒரிஜினலுக்கு முகம் கொடுத்தவர், தனக்கான பாத்திரப் படைப்பில் அவர் அச்சு அசலாக வாழ்ந்திருப்பார்... இதில் கமலா, லாலா என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. மலையாளத்தில் அவர் எப்படிச் செய்தாரோ அதைவிட ஒருபடி மேலே கமல் தமிழில் செய்திருக்கிறார்... அவ்வளவே. நான்கு கதாநாயகர்களிலும் நம்மவருக்கே முன்னிலை...

வசனம் ஜெயமோகன்... இவரும் சுகாவும் எல்லோருக்கும் நெல்லைப் பேச்சு வழக்கை அட்சர சுத்தமாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். வசனம் பல இடங்களில் கூர்மையாக இருக்கிறது. 


கமலால் மீண்டும் ஒரு மகாநதியைக் கொடுக்க முடியுமா என்றால் நிச்சயம் கொடுக்க முடியாது என்று சொல்லலாம்... அதில் பொம்பளப்புள்ளையை பெத்த அப்பனாக வாழ்ந்து... படம் பார்த்த ஒவ்வொருவரையும் கலங்க வைத்திருப்பார். அதனால் நிச்சயமாக அப்படி ஒரு படத்தை அவரால் இனி திரும்பிக் கொடுக்கமுடியாது என்றால் பாபநாசம் போன்ற படங்களை மகாநதிக்கு அடுத்த இடத்தில் அவரால் கண்டிப்பாக கொடுக்க முடியும். விஸ்வரூபங்களையும், உத்தமன்களையும் தாங்கிப் பிடிக்கும் கமல் தனது நடிப்பிற்கு தீனி போடும் இது போன்ற படங்களை இடையிடையே கொடுக்க வேண்டும். இவைதான் உலக நாயகனை என்றும் நினைவில் நிறுத்தும். காலத்தால் அழியாத படங்களாக அமையும்.

கமலுக்காக இயக்குநர் சமரசம் செய்யாமலும் கதைக்காக கமல் சமரசம் செய்து கொண்டும் சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆம்... பாபநாசம் ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

-'பரிவை' சே.குமார்.

28 கருத்துகள்:

 1. வணக்கம்,
  கமல் ஒரு கலைஞன்,
  அவரின் ஒவ்வொரு அசைவும் கலைப் பேசும்,
  நான் அவரின் ரசிகன் என்றெல்லாம் இல்லை,,,,,
  உண்மை இது தான் எந்த கதையாக இருந்தாலும் சிறப்பாக செய்யும் கலைஞன்.
  தங்கள் விளக்கம் வெகு அருமை,
  படம் பார்க்கனும்,
  வாழ்த்துக்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாம்க சகோ.
   கமல் எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதாகவே மாறும் கலைஞன்...
   தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

   நீக்கு
 2. பாபநாசம் படம் விளக்கம் அருமை குமார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. வணக்கம்
  தங்களின் பார்வையில் விமர்சனம் நன்று பகிர்வுக்கு நன்றி த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. அருமையான படத்திற்கு அழகான விமர்சனம்.

  படம் இன்னும் பார்க்கவில்லை என்றாலும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது முதல் எனக்கு ஒரு பரபரப்பும், நிறைய எதிர்பார்ப்புகளும். ஏனென்றால் படத்தின் பெயரான திருநெல்வேலி பாபநாசத்தில்தான் நான் வீடு கட்டி குடியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ராஜா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. உங்களது பார்வையில் மறுபடியும் ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. படத்தை பார்க்கத்தூண்டும் விமர்சனம்! அருமை! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. பாராட்டு மழைதான் இந்தப் படத்துக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. சிறப்பான விமர்சனம்.ம் படம் பார்த்த அனைவருமே பாராட்டுகிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. வணக்கம் பரிவையாரே எனக்குப் பிடித்த போலிஸ் ஜீப் என்ட்ரி காட்சியை நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்!

  இசை மட்டுமல்ல கமல் சுயம்புவாக அந்த தருணத்தை எதிர்கொள்ளும் நொடி ஒரு பெரிய வாவ் தானே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மது சார்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. ஒவ்வொரு பதிவருமே இப்படத்தினைப் பாராட்டுகிறார்கள்
  மனம் மகிழ்கிறது நண்பரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 11. இன்னும் பார்க்க வில்லை. பார்க்கணும்.....

  த.ம. 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 12. ஆம் ! நண்பரே இந்தப் படம் மலையாளத்தில் வந்த பிறகு தமிழில் என்றது கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் நம்ம கமல் என்றதும்...அதுவும் ஒரிஜனல் நேட்டிவிட்டியுடன் எடுத்திருப்பதும் மனதிற்கு இதமாகவும் நம்ம கமல் நடிப்பில் அசத்தியதும் மிகவும் பிடித்துப் போனது...

  னீங்கள் சொல்லி இருப்பது போல் எந்தக் கதையுமே கதையில் வரும் நாயகன் எப்படியோ அப்படியே படமாக்கப்பட வேண்டும். அதில் நடிகரும் சரி இயக்குனரும் சரி காம்ப்ரமைஸ் என்பது இருக்கக் கூடாது. படத்திற்கு கதைதான் மிகமிக முக்கியம். அதில் நடிகருக்காகவோம் இயக்குநருக்காகவோ காம்ப்ரமைஸ் ஆனால், படம் ஊத்திக்கும்....அதனால் தான் தமிழ் படங்கள் பலவும் வீக்காகி விடுவது...ஹீரோ அடிப்படையில் எடுக்கப்படுவதால்...

  அருமையான விமர்சனம் நண்பரே!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துளசி சார்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 13. பாபநாசம்.படம் மட்டுமா அட்டகாசம் ,உங்கள் பதிவும்தான்:)

  பதிலளிநீக்கு
 14. இன்னும் பார்க்கவில்லை. பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...