மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 5 மார்ச், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 53

முந்தைய பதிவுகளைப் படிக்க...


                                           பகுதி-50       பகுதி-51

53.  என்ன செய்யலாம் - ஆலோசனை

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதலை வெளிச்சமிட ராம்கிக்கு புவனாவின் சித்தப்பாவாலும் அவளைக் கட்டிக்கொள்ளத் துடிக்கும் ரவுடி மணியாலும் கத்திக் குத்து விழ, காயத்துடன் அவனைப் பார்த்தவள் கட்டிப் பிடித்துக் கொள்கிறாள்.  இவர்களின் காதல் விவகாரம் இரண்டு பக்கமும் பூதகரமாகச் செல்ல, முடிவு எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

இனி...

"என்னடா எதாவது சொல்லுவீங்கன்னு வரச்சொன்னா எல்லாரும் பேசாம இருக்கீங்க..." ஊருக்கு அருகே இருக்கும் அம்மன் கோவில் மரத்தடியில் கூடியிருந்த நண்பர்களிடம் ராம்கி மெதுவாகக் கேட்டான்.

"சொல்றதுக்கு என்னடா இருக்கு... ரெண்டு பேரும் மூணு வருசமாப் பழகுனீங்க... இப்போ அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டிய நேரம் வந்தாச்சு... ஆனா அந்த நேரத்தில எடுக்கப்போற முடிவுதான் உங்களோட வருங்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகுது... அதனால எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு இல்லாம சரியான முடிவா எடுக்கணும்... அதான் யோசிக்கிறேன்..." என்றபடி சரவணனைப் பார்த்தான் அண்ணாத்துரை.

"ம்... இப்போ சாதிதாண்டா பெரிய பிரச்சினையா இருக்கும்... இடையில சித்தப்பன் பெரியப்பன்னு சில பிரச்சினைகள் இருக்கு... அந்த மணிப்பய வேற எதாவது செய்யணுமின்னு நினைப்பான்.... முன்னாடிப் போனா முட்டும்... பின்னாடிப் போன உதையுங்கிற கதையாத்தான்டா இருக்கு..." சரவணன் முகவாயைத் தடவினான்.

"பேசாம வைரவன்கிட்ட விவரத்தைச் சொல்லி பேசிப் பாக்கலாம்டா... ஏன்டா அவருக்கு மச்சான் மேல கொஞ்சம் பாசம் இருக்கு... அதே நேரம் புவனா மேல படிக்கணுமின்னு நினைக்கிறாரு.... சோ கூட்டிக் கழிச்சிப் பார்த்த நாம போடுற கணக்கு சரியா வரும்..." அறிவு சொன்னதை பழனியும் ஆமோதித்தான்.

"என்னடா அவன்தான் சொல்றான்னா... நீயும் மடச்சாம்பிராணியாட்டம் அதுதான் சரியின்னு சொல்றே... வைரவன் பதுங்குறான்னா பாயிறதுக்காகக்கூட இருக்கலாம்... ஐயாக்கிட்ட வந்து விசாரிச்சு இருக்கான்.... ஐயாவும் ராம்கியை கண்டிச்சிருக்காரு... கொஞ்ச நாளைக்குப் பொறுமையாப் போகச் சொல்லியிருக்காரு... இப்போ அவனுக்கிட்ட போயி பேசி தேவையில்லாம பிரச்சினையை இழுக்கச் சொல்லுறியா..?" அண்ணாத்துரை கடுப்பானான்.

"அதுக்கில்லடா... அவனுக்கிட்ட பேசிப் பாக்கலாமேன்னுதான்..." பழனி இழுத்தான்.

"ஒரு மசுரும் புடுங்க வேண்டாம்... வேற நல்ல யோசனையா யோசிக்கலாம்... இந்த சேவியர்பய மேல படிக்கலைன்னு திருப்பூர் பக்கம் பொயிட்டான்... இல்லேன்னா அவன் சரியான முடிவா எடுப்பான்..." அண்ணாத்துரை சொல்லவும் "அப்புறம் என்ன மயித்துக்கு எங்ககிட்ட கேட்டே... பேசாம அவனுக்கிட்ட போனைப் போட்டுக் கேக்க வேண்டியதுதானே... ஒண்ணு சொன்னா சரிவரும் வராதுன்னு சொல்ல வேண்டியதுதானே... அதை விட்டுட்டு மசுரு மட்டையின்னு பேசுறே?" பழனி சூடானான்.

"அடேய்... இப்ப எதுக்குடா நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிறீங்க... பிரச்சினையை எப்படி சால்வ் பண்ணலாம்ன்னு கேட்டா... தேவையில்லாம பேசிக்கிட்டு.... இங்க பாரு மாப்ள வைரவன் வேண்டாம்... அவன் பாக்கத்தான் ஆளு நல்லவனாட்டம் இருப்பான்... மோசமான ஆளு...  இப்ப என்ன பண்ணலாம்... ம்... இப்படிச் செஞ்சா என்னடா?" என்று நண்பர்களைப் பார்த்துக் கேட்டான் ராம்கி.

"எப்படி... கூட்டிக்கிட்டு ஓடிப்போயி ஒரே பாட்டுல பெரியாளாகி திரும்பி வந்து குடும்பத்துல சேந்துக்கலாம்ன்னு பார்க்கிறியா?" பழனி கேட்கவும் எல்லாரும் சேர்ந்து சிரிக்க, கோபங்கள் இருந்த இடம் தெரியவில்லை.

"சும்மா போடா... நா ஒண்ணும் கூட்டிக்கிட்டு ஓடுறேன்னு சொல்லலை... புவியோட அப்பாக்கிட்ட நேர போயி பேசுனா என்ன?" ராம்கி கேட்டதும் அறிவு படக்கென்று எழுந்தான்.

"என்னடா... ஏன் எந்திரிக்கிறே?"

"பின்னே.... அவனுக எல்லாம் சாதிக்காக தலையைக்கூட கொடுப்பானுங்க.. அந்தாளுக்கிட்ட... அதுவும் கடையில போயி... நல்லாச் சொல்றான்டா.... எல்லாரையும் தூக்கிப் போட்டு மிதிச்சி போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு போயி லாடம் கட்டிப்புடுவானுங்க... தெரியாமப் பேசுறான்..."

"ஆமாடா ராம்கி.... அவரெல்லாம் சாதி... சாதியின்னு இருக்கவரு... நாம எதாவது கேட்கப் போயி அது நமக்கு மட்டும் பாதிப்பைக் கொடுத்தாக்கூட பரவாயில்லை... புவனாவை மண்ணெண்ணை ஊத்தி கொளுத்தற வரைக்கும் போகணுமா?"

"டேய் நா ஒண்ணு சொன்னா நீ என்னென்னமோ சொல்றே? அவரைப் பாக்க அப்படித் தெரியலையேடா..."

"தெரியாது... பக்கத்துல போயிப்பாரு எல்லாம் புரியும்... பேசாம கூட்டிக்கிட்டு ஓடிடு... அதுதான் இப்போதைக்கு சரியா வரும்?" பழனி சிரித்துக் கொண்டே சொன்னான்.

என்னடா நீயி... எனக்கு அவளோட வாழணும்... அதுக்காக கூட்டிக்கிட்டு ஓடி... அவங்களோட மகளை அவங்க எவ்வளவு கனவுகளோட வளர்த்திருப்பாங்க... பாத்துப் பாத்து படிக்க வச்சிருப்பாங்க... அவங்களோட கனவு சந்தோஷத்துல என்னால மண் அள்ளிப் போடமுடியாதுடா.... நம்ம பக்கமும் யோசிக்க... நா படிச்சு குடும்பத்தை நல்ல நிலமைக்கு உயர்த்துவேன்னு நினைக்கிற அம்மா... நா என்ன கேட்டாலும் ஏன் எதுக்குன்னு கேட்காத அண்ணன்... ஒண்ணு தெரியுமா எங்க காதல் விசயம் தெரிஞ்சு அம்மா சத்தம் போட்டப்போ அண்ணன் எதுவும் சொல்லலை... முத்து மச்சான் திருந்திடுவாருன்னு நினைச்சு வாழ்ற எங்கக்கா... எல்லாருடைய மனசையும் கலைச்சிட்டு நாங்க நல்லாயிருக்க முடியுமாடா..." ராம்கிக்கு கண் கலங்கியது.

"டேய் மாப்ஸ்... சும்மா ஜாலிக்குச் சொன்னேன்... அண்ணனும் வேண்டாம்... அப்பனும் வேண்டாம்... அப்போ கடைசியா இருக்கது புவனாவோட அம்மா... அவங்கிட்ட போயி பட்டுன்னு பேசிட்டா என்ன?" பழனி சொன்ன யோசனை எல்லாருக்கும் பிடித்துப் போக. "சூப்பர்டா மச்சான்" எனக் கத்தினான் அண்ணாத்துரை.

"என்னடா சூப்பரு... இதெல்லாம் நடக்கிற காரியமா?"

"எப்பவும் அம்மாக்கள் சத்தம் போட்டாலும் பொண்ணுங்க மேல பாசம் இருக்கும்... இப்ப கல்யாணம் பண்ணிக்கிறோம்ன்னு பேச வேண்டாம்..." அண்ணாத்துரை பேசிக் கொண்டிருக்கும் போதே இடையில் புகுந்த அறிவு "அப்புறம் என்னத்தைப் பேசப்போறோம்?" என்றான்.

"இப்போ யாருடா கல்யாணம் பண்ணனுமின்னு சொன்னா... பிரச்சினையின்னா அப்படி ஒரு முடிவ எடுக்கலாம்... இப்போதைக்கு வீட்ல அண்ணன் இருக்கும் போது கல்யாணம் அது இதுன்னு முடிவெடுத்தா எங்க குடும்பத்தை எல்லாரும் கேவலமாப் பேசுவாங்க..." 

"இதை அப்பவே யோசிச்சிருக்கணுமப்பு... இப்ப யோசிச்சு... நாளைக்கே அந்தப்புள்ள எங்க வீட்ல மாப்ள பாத்துட்டாங்கன்னு கண்ணைக் கசக்குனா அப்ப அண்ணன் தங்கச்சின்னு எல்லாம் யோசிக்கத் தோணுமா என்ன? எந்த முடிவா இருந்தாலும் அதை ஏத்துக்கத்தான் வேணும்" என்றான் பழனி.

"இல்லடா அவங்ககிட்ட கல்யாணம் அது இதுன்னு எப்படிடா பேசுறது?"

"உன்னைய டைரக்டா போயி பொண்ணு கேக்கச் சொல்லலை... இந்த மாதிரி பழகுறோம்.. உங்களோட விருப்பத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கோம்... விருப்பமில்லாட்டி நாங்க விலகிடுறோம்... புவனா ஆசைப்பட்டபடி மேல படிக்க வையுங்க.... மேற்படிப்பு முடிக்கும் போது உங்க மனசுல நான் நல்லவன்னு தெரிஞ்சா நீங்க நின்னு எங்க கல்யாணத்தை நடத்துங்க... இல்லைன்னா நாங்க பிரண்ட்ஸாவே பிரிஞ்சிடுறோம்... அதுவரைக்கும் அங்க பார்த்தேன்... இங்க பார்த்தேன்னு எந்த செய்தியும் உங்க காதுக்கு வராது.. நாங்க வெளியில பாத்துக்கவோ பேசிக்கவோ மாட்டோம்ன்னு சொல்லி கொஞ்சம் கரைச்சிப் பாரு..." என்றான் அண்ணாத்துரை.

"நல்லாத்தான் இருக்கு... ஆனா அவங்களை கரைக்க முடியுமா? வேற மாதிரி ஆயிட்டா... அதுபோக புவி கூட பேசாம... பாக்காம... எப்படிடா?"

"இதெல்லாம் அவங்களை கரைக்கத்தான்... சரியா... இதென்ன சினிமாவா அப்படியே ரெண்டு சோகப்பாட்டைப் பாடி கடைசியில வில்லனைக் கொன்னு காதலியை கைபிடிக்க... இது வாழ்க்கை... அப்படி இப்படி சொல்லி நம்மளுக்கு காரியம் ஆகுதான்னு பாப்பியா... அதைவிட்டுட்டு..." சரவணன் சீறினான்.

"ம்... எனக்கு இது விஷப் பரிட்சையின்னு தெரியுது"

"எதாயிருந்தாலும் பரவாயில்லை... அவங்க பிரச்சினை பண்ணினா அப்புறம் எஸ்கேப் முடிவ எடுக்கலாம்... இல்ல அத்தை மாறிட்டா ரெண்டு மூணு வருசத்துக்கு பிரச்சினையில்லாம போகும்... அதுக்குள்ள நாமலும் ஒரு நல்ல நிலமைக்கு வந்துடலாம்... சரி எப்படியாவது புவனாவைக் கூப்பிட்டு... எப்படியாவது என்ன... எப்படியாவது... நம்ம மல்லிகா மூலமா புவனாவைக் கூப்பிட்டு அம்மா தனியா இருக்கிற நேரம் கேட்டு அப்போ போயி பேசு... இல்லேன்னா அம்மாவை மல்லிகா வீட்டுக்கு கூட்டியாரச் சொல்லி அங்க வச்சு பேசிப்பாரு... என்ன பேசுவியோ... எப்படிப் பேசுவியோ... காரியத்தை கச்சிதமா முடிக்கணும்..."

"ம்... சரிடா...."

"என்னடா... பம்முறே... விரைப்பாச் சொல்லு காதலிக்கும் போது பயமில்லாமத்தானே சுத்துனீங்க... வாழ்க்கை பத்தி பேச என்ன பயம்..."

"சரிடா பழனி... அக்கா பிரச்சினைக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலை... அதுக்குள்ள இதுவும் பிரச்சினை ஆயிட்டா..."

"இங்க பாரு அதெல்லாம் ஒண்ணும் ஆகாது... மச்சானை நான் கவனிக்கிற விதமா கவனிக்கிறேன்... அப்புறம் ஆளு மாறிடுவாரு... மாமா, அம்மான்னு எல்லாம் யோசிக்காதே... லேசா தட்டுனா ஆளு எல்லாத்தையும் விட்டுட்டு அக்காவே சரணம்ன்னு இருப்பாரு... அக்கா வாழ்க்கையில பிரச்சினையை நாங்க பாத்துக்கிறோம்... உன்னோட வாழ்க்கைப் பிரச்சினையை சரி பண்ணு... உடனே மல்லிகாவுக்குப் போன் போட்டு ஏற்பாடு பண்ணு... உடனே காரியம் நடக்கணும்... ஓகே..." அண்ணாத்துரை சொல்லவும் மற்றவர்கள் எழுந்தார்கள்.

"சரிடா... பேசிப் பாக்குறேன்... சரி இம்புட்டுத்தூரம் வந்தீங்க... அப்படியே வீட்டுக்கு வந்துட்டுப் போங்க..." என்றான்

"வேணான்டா... கிளம்புறோம்... சொன்னதை ஞாபகம் வச்சிக்க... எதாவதுன்னா போன் பண்ணு.... மச்சானை ஒரு வாரத்துக்குள்ள சரி பண்ணிடலாம்... அக்காகிட்ட எதுவும் சொல்லிக்காதே... அம்மாக்கிட்ட சண்டை போட்டுக்காதே... வாறோம்... பை..." என்றபடி அனைவரும் கிளம்ப....

அவர்கள் கிளம்பியதும் குளத்தில் காலைக் கழுவிவிட்டு கோயிலுக்குள் போய் 'எடுக்கிற முடிவு சரியானதா இருக்கணும் தாயே' என அம்மனைக் கும்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு சைக்கிளை எடுத்தான்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

தனிமரம் சொன்னது…

என்ன முடிவாக இருக்குமோ ராம்கியின் நிலை. தொடர்கின்றேன் ஐயா!

Yarlpavanan சொன்னது…

தங்கள் பதிவை வரவேற்கிறேன்.

http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடர்கிறேன் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha/ma/3

துரை செல்வராஜூ சொன்னது…

'எடுக்கிற முடிவு சரியானதா இருக்கணும்!..’

- அதுதான் அனைவருடைய விருப்பமும்..

Unknown சொன்னது…

அணுகு முறை சரியாக வருமா?பார்க்கலாம்,பொறுத்திருந்து!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

very intresting story. continue... congrats