மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 14 மார்ச், 2014ஒரு மழை நாள்

லேசாகத்தான் ஆரம்பித்தது...
கனமழை வரும் என்று
வானிலை அறிக்கையில்லை...
வெயிலோடுதான் வந்தது...

காக்காவுக்கும் நரிக்கும்
கல்யாணம் சொல்லிச்
சிரித்தார்கள் சிறுவர்கள்...

கேட்டதோ என்னவோ
வெயிலுக்கு விடுப்புக்
கொடுத்தது மேகக் கருப்பு...

எங்கோ ஒரிடத்தில்
இடி விழுந்த சப்தம்
காதுக்குள் சதிராடியது...

உருட்டிய வானம்
மிரட்டிய மிரட்டலில்
சனி மூலையில் ஒரு
மின்னல் கண்ணடித்தது...

மேக்கால கருத்திருக்கு
பே மழ பேயுமுடா...
தூறலில் சொல்லிச்
சென்றார் சின்னையா...

வர்ணஜாலம் காட்டியது
மேகத்தினிடையே வானவில்.
கருத்த மேகம்
கனமழை ஆனது...

சோவென்று ஊற்றியது...
வெள்ளிக்கம்பிகள்
விண்ணுக்கும் மண்ணுக்கும்...

வீட்டுக்கெதிரெ நிற்கும்
பனையின் காய்ந்த ஓலை
ஊசலாடியது மழைக்காற்றில்...

மாமரத்து குயிலின்
குரலில் குளிரின் நடுக்கம்.

நனைந்த மாடுகள்
ஓடோடி வந்த கசாலைக்குள்...

எப்பவும் போல மழையில்
குளித்தது அப்பாவின்
அட்லஸ் சைக்கிள்...

ஓட்டுத் தண்ணீருக்காக
அணி வகுத்தன குடங்கள்...

வீட்டில் இருந்து ஓடும்
தண்ணீரில் தள்ளாடியது
காகிதக் கப்பல்...

மழ வருமின்னு சொன்னா
மனுசன் கேக்குறதில்ல...
நனஞ்சிக்கிட்டு வந்து
நம்ம உயிர எடுப்பாரு...
சொல்லியபடி வாசலை
நோக்கினார் அம்மா...

அடித்துப் பெய்து
அயர்ந்து ஓய்ந்தது...
மறுமழ வாறதுக்குள்ள
வைக்க அள்ளப் போடா...

கோபமாய் படப்புக்குப் போன
சில்லென்ற தண்ணியை
காற்றில் சிந்தியது வேம்பு..

சிலிர்த்துத் திரும்ப
பக்கத்துப் படப்பில்
நின்று சிரித்தாள்
நெஞ்சில் நிறைந்த வடிவு...

இதயத்துக்குள் சாரல்
இன்பமாய் பெய்ய....
பொறுக்காத வானம்
அவசரகதியில் அள்ளித்
தெளித்தது மேகத்தண்ணீரை...

-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

 1. மழை மனதுக்கும் உடலுக்கும் இதம், கவிதை மழையில் நனைந்தேன் ஆனந்தம் கொண்டேன்...!

  பதிலளிநீக்கு
 2. கிராமத்து மழையை கண் முன் கொண்டுவந்துவிட்டீர்கள்!!
  அருமை சகோ!

  பதிலளிநீக்கு
 3. மழையில் நனைந்ததைப் போலவே இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 4. மழை, கிராமத்து வாழ்க்கை.. நன்று.. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. கவிதை மழையில் நனைந்த போது நிஜ மழையில் நனைந்த உணர்வு....

  பாராட்டுகள் குமார்.

  பதிலளிநீக்கு
 6. மழையிலும்அழகிய வடிவு கண்டேன் !
  த ம +1

  பதிலளிநீக்கு
 7. வர்ணத்தூறல் மனதுள் வண்ணமிழைக்கும் மழைச்சாரல் கர்ணகொடுப்பினை புன்னிய பூமிக்கு ...

  அழகான கவிதை நிசம் பேசியது ...

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...