மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 11 மார்ச், 2014மனசு பேசுகிறது : இப்படியும் மனிதர்கள்


டுத்தவனுக்கு நம்மாலான உதவி செய்யணும்... உதவி செய்ய முடியலைன்னா உபத்திரவம் பண்ணாமலாவது இருக்கணும் என்றுதான் என்னைப் பெற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் ஊருக்குள் எங்கப்பாவுக்கு மரியாதை இருக்கு என்றால் அவர் நடந்து கொள்ளும் விதம் அப்படி. செய்கிறாரோ இல்லையோ ஆத்தா, அம்மான், சித்தப்பா என அழைக்கும் அந்தப் பாங்கு... அவர்களிடம் அவர் நடந்து கொள்ளும் முறை.... இதுதான் அனைவரையும் அவர்மேல் பாசம் வைக்கச் சொல்கிறது. அவரின் வாரிசாக... அடுத்தவரை மதிக்க வேண்டும்... வீட்டிற்குப் பெரியவர்கள் வந்தால் அவர்கள் போகும் வரை எழுந்து நிற்க வேண்டும்... இல்லையேல் அவர்கள் சேரில் அமர்ந்திருந்தால் நாம் தரையில் அமர வேண்டும் என்ற பண்பைச் சொல்லி வளர்த்தார்கள். அதுதான் எங்களிடம் இப்போதும் இருக்கும் ஒரே சொத்து.

சத்தியமாக ஒருவனை முன்னுக்கு விட்டு பின்னுக்குப் பேசும் குணம் படைத்தவர்கள் அல்லர் நாங்கள். படிக்கும் போதே எனக்கென்று ஒரு நட்பு வட்டம் உண்டு... அதுவும் கல்லூரியில் படிக்கும் போதெல்லாம் பாரதி கலை இலக்கியப் பெருமன்றம், அது இது என்று எல்லாவற்றிலும் இருந்ததால் எப்போதும் அறிவு சால் பெருமக்களுடன் இருக்கும் பழகும் அவர்களின் பிள்ளைகளில் ஒருவனாய் அவர்கள் வீட்டில் நுழையும் வாய்ப்பெல்லாம் எனக்குக் கிடைத்தது. தே பிரித்தோவில் எனக்கு வகுப்பாசிரியராய் இருந்த தமிழாசிரியர்கள் எல்லாம் பின்னாளில்... இன்று வரை எனக்கு ஒரு தகப்பானாய் ஆனார்கள் என்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். அருள்சாமி ஐயா, சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயா, பழனி ஐயா என எல்லா ஐயாக்களிடமும் மாணவனாய் இருந்து இன்று மகனாகிப் போனவர்கள் நாங்கள்.

ஒவ்வொருவர் வீட்டிலும் ஐயாக்களை விட அம்மாக்களுக்கு நாங்கள் என்றால் உயிர். எப்போது போனாலும் எதாவது ஒன்றை சாப்பிட வேண்டும் என்று அன்பாய் வற்புறுத்துவார்கள். பழனி ஐயா வீட்டில் நாங்கள் இன்னும் செல்லப் பிள்ளைகள்.... அடுப்படியில் நுழைந்து என்ன இருக்கிறதோ அதை எடுத்துச் சாப்பிடும் உரிமையை கூடுதலாகப் பெற்றிருந்தோம். இன்னும் பெற்றிருக்கிறோம். எப்போதுமே நல்லவர்கள்... அடுத்தவர்களுக்கு துரோகம் நினைக்காதவர்கள்... அடுத்தவர்கள் வாழ பார்த்துச் சந்தோஷப்படுபவர்கள் சூழ வாழ்ந்த வாழ்க்கை எத்தனை சுகமானது... எத்தனை அன்பானது.... என்பதை இங்கு வந்து இந்த ஐந்து வருடத்தில் சில நாட்களாக உணர்கிறேன்.

சின்னப்பயலா இருக்கான்... பேசாம ஒண்ணாப்புலயே போட்டுடுங்க என்று சொன்ன அம்மாவிடம் எம்புள்ள நல்லாப் படிக்கிறான்... அவனை எதுக்கு ஒண்ணாவதுல போடணும்... ரெண்டாவதுக்கும் நானே ஆசிரியர் அவன் என் கூடவே இருக்கட்டும் என்று சொன்ன எனது முதல் ஆசிரியை மறைந்த மரியம்மை டீச்சர்.... என் பிள்ளைகள் எனக் கட்டிக் கொள்ளும் அன்பான தாசரதி ஐயா.... என்னோட மகன் குமார் என்று கல்லூரி விழாவில் சொன்ன எனது ஆசான் அன்பான தந்தை பழனி இராகுலதாசன் ஐயா... எம்புள்ள எப்படியிருக்கான் என வாஞ்சையுடன் மனைவியை சந்திக்கும் போதெல்லாம் கேட்கும் என்னோட சவரிமுத்து ஐயா.. குமார் எப்படியிருக்கார்? எங்க இருக்கார்?... என நண்பனிடம் விசாரிக்கும் அருள்சாமி ஐயா... எப்பய்யா வந்தே... புள்ளைங்க நல்லா இருக்குகளா என வெற்றிலை வாய்ச் சிர்ப்போடு கேட்கும் பேனாக்கடை லெட்சுமணய்யா... குமாரு... என்று கையைப் பிடிக்கும் கல்லூரிப் பேராசிரியர் எம். எஸ். சார்... டிகிரி முடிச்சதும் இந்தக் கோர்ஸ்தான் படிக்கணும் அதுக்கு நான் முயற்சி பண்றேன் என எனக்காகப் பரிந்து பேசிய எங்கள் கேவிஎஸ் சார்... என எல்லா நல்ல உள்ளங்களுடனும் இந்த ஐந்து வருடங்களாக அதிகம் தொடர்பில்லாமல் போனதற்காக இப்போது வருந்துகிறேன்.

ஊரிலேயே கல்லூரி ஆசிரியனாக காலத்தை ஓட்டியிருந்தால் பச்சோந்தி மனிதர்களிடமிருந்து விலகி மேன்மக்களின் சுவாசத்தை கொஞ்சமேனும் சுவாசித்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பணம் தேடும் வாழ்க்கையில் சுக துக்கங்களைத் துறந்து வெளிநாட்டில் வாழும் போது அருகே நல்ல உள்ளங்கள் இல்லாத சூழல் எவ்வளவு சூனியமானது என்பதை இப்போது உணர்கிறேன். அவன் உனக்கு கெடுதலே நினைத்தாலும் நீ அவனுக்கு நல்லதே நினை என்று சொல்லித் தந்தார்கள் ஆனால் என்னால் அப்படியிருக்க முடியுமா என்பதே இப்போதைக்கு மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

வீடு கட்டினால் லபோதிபோ என்றார்கள்.... லோன் வாங்கியதற்காக ஊரெங்கும் தண்டோரா போட்டார்கள்.... கடன் வாங்கித்தான் கட்டுகிறார்கள் என்று ஏளனமாய்... கடன் என்றாலும் நாங்கள்தான் கட்டப்போகிறோம் என்பதை அவர்கள் அறியாமல் பேசினார்கள் என்று நாங்கள் பொறுத்துக் கொண்டோம்... ஒவ்வொரு விஷயத்திலும் எங்களை போட்டியாக... பொறாமையாகப் பார்த்த போது நாங்கள் எப்பவும் போல் அவர்களிடம் பழகி வந்தோம்... எதையும் காட்டிக் கொள்ளவுமில்லை... கேட்டுக் கொள்ளவும் இல்லை.... எங்கள் பாதையில் நாங்க பயணித்தோம் எப்போது எல்லாரும் வேண்டும் என்ற எண்ணத்தைச் சுமந்தபடி...

என்னைப் பொறுத்தவரை கூடப் பிறந்தவர்கள் என்ன பேசினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டேன். எப்படிப்பட்ட பிரச்சினை என்றாலும் எனக்குள் நான் கேட்டுக் கொள்ளும் கேள்வி 'மறுபடியும் எல்லாரும் ஒண்ணாவ பிறக்கப் போறோம்... இருக்கும் வரைக்கும் கோபதாபங்களை விட்டுவிட்டு சந்தோஷமாக இருப்போமே?' என்பதுதான். அப்படித்தான் இதுவரைக்கும் இருந்து வருகிறேன். இனிமேலும் என் நிலையில் மாற்றம் வராது என்ற நம்பிக்கை எனக்கு.

என்னைப் பொறுத்தவரை இங்கிருக்கும் உறவுகளிடம் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மறைப்பதில்லை. மறைக்க வேண்டும் எனத் தோன்றியதும் இல்லை. ஆனால் ஒருசிலர் ஒரு சில விஷயங்களை மறைப்பதுடன் நம்மைத் தரக்குறைவாக பேசும் போது சே என்ன மனிதர்கள் இவர்கள் என்று எண்ணத் தோன்றினாலும் ஏன் இப்படிச் செய்கிறார்கள்... எதற்காக நம்மிடம் மறைக்கிறார்கள்... அவர்கள் மறைப்பது அவர்கள் சார்ந்தது என்றால் பரவாயில்லை. அதுவும் என் குடும்பம் சார்ந்ததுதான் என்கிற போது வருத்தம் எனக்குள் வந்து போவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இப்போதுதான் எனக்கும் உரைக்கிறது... இனி நாமும் சொல்ல வேண்டியதைச் சொல்லியும் மறைக்க வேண்டியதை மறைத்தும் வாழப் பழக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இப்போதுதான் தோன்றுகிறது. நம்மிடமும் நல்லவர்கள் போல் பேசிக் கொண்டு நம்மைப் பற்றி தப்பாக மற்றவர்களிடம் பேசும் இவர்கள் என்ன மனிதர்கள்? எப்படி இவர்களால் இப்படி இரட்டை வேடம் பூண முடிகிறது.

எல்லாரும் வேண்டும் என்று நினைக்கும் மனம் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது யாருமே வேண்டாம் என் குடும்பம், என் மனைவி, என் பிள்ளைகள் என  'என்'ன்னுக்குள் சுருக்கிவிடுமோ என மனசு பயம் காட்டுகிறது. பச்சோந்தி மனிதர்களிடம் இருந்து விலகி இருத்தல் நலமென நேற்றிலிருந்து என் எண்ணச் சுவற்றில் எழுதித் தீர்க்கிறது இந்த பாழாப்போன மனசு.

வருத்தங்களும் வசந்தங்களும் மாறி மாறி வருவதே வாழ்க்கை என்ற போதிலும்  என்னைச் சுற்றி இப்படிப்பட்ட மனிதர்கள் நிறைந்திருக்கும் இந்த வாழ்க்கை மேல் பற்றற்றுப் போய்விட்டது. பாசாங்கு மனிதர்கள் சூழ் உலகில் பல்லிளித்துக் கொண்டு வாழ எனக்குப் பிடிக்கவில்லை. முகத்துக்கு முன்னே எப்படியிருக்கிறாய் என்றும் முதுகுக்குப் பின்னே நீ எப்படியிருந்தால் என்ன அழிந்தால் சந்தோஷமே என்றும் நினைக்கும் மனிதர்கள் மத்தியில் இதுவரை பாசத்தோடு வாழ்ந்திருக்கிறோமே என்று என்னும் போது வருத்தமாக இருக்கிறது.

உண்மையான பாசத்தை முகமறியாதவர்கள் கொடுக்கும் போது நம்மை அறிந்தவர்கள் நன்கு தெரிந்தவர்கள் பாசாங்கு மனிதர்களாய் வாழ்வது கண்டு வெறுப்பின் உச்சத்துக்குத்தான் செல்ல முடிகிறது. கோபங்களையும் ஆத்திரங்களையும் அடக்கிக் கொண்டு அவர்களிடம் என்னாலும் சிரிக்க முடிகிறது என்றாலும் மனம் ஏனோ வெறுமையை அறுவடை செய்கிறது. 

எத்தனை இதயங்கள் இருந்தாலும் அன்பு சூழ் இதயங்கள் எல்லாம் வெகு தூரத்தில் இருப்பதால் உணரும் தனிமை... எவ்வளவு கொடுமையானது என்பதை சில நாட்களாக உணர முடிகிறது. எனக்கும் என் மனைவிக்கும் தெரியக் கூடாதென அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் எதாவது ஒரு விதத்தில் எங்களுக்குத் தெரிய வரும்போது சே... என்ன மனிதர்கள் இவர்கள்... இவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் நம்மிடம் எதற்காக மறைக்கிறார்கள்... நம் குடும்பம்... நம் உறவுகள் என்று நாம் பார்க்கும் போது நம்மைப் பிரித்துப் பார்க்கிறார்கள் என்ற வருத்தம் வரத்தான் செய்கிறது. 

இத்தனை வருத்தத்திலும் எனக்கு வரமாய் கிடைத்தவர் என் மனைவி... சின்னச் சின்ன கோபங்கள்... மனஸ்தாபங்கள் வந்தாலும் அவருக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்கிறவங்க ஏன் எங்கிட்ட சொல்ல வாறீங்க என முகத்தில் அடித்தார்போல் கேட்டிருக்கிறார். எப்போதும் என்னை விட்டுக் கொடுக்காத... எனக்காகவே வாழும் என்னவர்.

பாசாங்கு மனிதர்கள் மத்தியில் இருந்து விரைவில் விலகிவிடுதலே நலம் பயக்கும் என தோன்ற ஆரம்பித்துவிட்டது... விடாது கருப்பாக இருந்தாலும் விட்டு விலகிச் செல்லும் போது நமக்கென சில நல் இதயங்கள் கிடைக்காமலா போய்விடும். வேஷதாரிகளின் வெளிப்பேச்சு சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிப் பூவின் வாசமாய் இருந்தாலும் உள் எண்ணம் நம்மை நெருஞ்சியாய் குத்தத்தான் செய்கிறது. இந்தச் சில நாளில் எனைச் சூழ்ந்த நல்ல உள்ளங்களான என அருமை ஐயாக்கள் அருகில் இல்லாத வெறுமையை உணர்ந்தேன். வெறுமை சூழ் உலகு எவ்வளவு கொடியது என்பதை இப்போது நடக்கும் கேவலமான பாசாங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

கற்றறிந்த பெரியோரே.... இன்னாருக்கும் நன்னயம் செய்யச் சொல்லும் பேரமையாளர்களே உங்களுடனான உறவுதான் பாசாங்கு மனிதர்களின் போலித் தனங்களில் இருந்து என்னை காத்து வருகிறது என்பதே உண்மை. உங்கள் ஆசிகளும் அறிவுரைகளும் அன்பும் அரவணைப்பும் இப்போது அதிகம் தேவைப்படுகிறது. தாய்கோழியின் சிறகுக்குள் சூடு தேடி பதுங்கிக் கொள்ளும் கோழிக்குஞ்சாய் உங்கள் அன்பினை அசை போட்டபடி அமர்ந்திருக்கிறேன் வெறுமையாய்...

மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.

9 கருத்துகள்:

 1. இப்படி நிலை வரும்போது நான் பாடிக்கொள்ளும் பாடல் உங்களுக்கும் பொருந்தும் சகோ ...உலகம் ஆயிரம் சொல்லட்டுமே ,உனக்கு நீதான் நீதிபதி !த ம 1

  பதிலளிநீக்கு
 2. எந்த உறவுகள் உணர்வுகளைக் கொன்று குவிக்க விழி மூடி
  விலகி வந்தோமோ அதே நிலையில் தங்கள் மனதும் இன்று
  எடுத்துள்ள முடிவே சரியானது .துன்பம் தரும் உறவுகளை
  விட்டகன்று முகம் தெரியாது போனாலும் இனப் பற்று தமிழ்
  மொழிப்பற்று நிறைந்த எங்கள் வலைத்தள உறவுகளின்
  அன்பில் பிணைந்து கிடப்பதிலும் ஓர் ஆனந்தமே .கவலைகள்
  தீரும் கண்ணீரும் மறையும் உறவுகள் உணரும் காலமும்
  வரும் வாழ்த்துக்கள் சகோதரா மனமும் வாழ்வும் அமைதி
  பெற .

  பதிலளிநீக்கு
 3. வருத்தங்களும் வசந்தங்களும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை .
  பாசங்கு மனிதர்களை அடையாளம் கண்டு கொண்டாலே, நாம் வாழ்வில் வெற்றி பெற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.
  வாழ்த்துக்கள் நண்பரே
  வளமையான, மகிழ்வான எதிர்காலம் காத்திருக்கிறது

  பதிலளிநீக்கு
 4. பகவான் ஜி பொருத்தமான பாடல் சொல்லியிருக்கிறார். நீங்கள் உங்கள் ஆசிரியர்கள் பற்றி எழுதி இருப்பதைப் படித்தபோது இப்படி ஆசிரியர்களை நெருக்கமாக நான் எண்ணி நடந்து கொள்ளவில்லையே என்று தோன்றியது.

  பதிலளிநீக்கு
 5. குஞ்சு எத்தனை நாட்களுக்குத் தான் - கோழியின் சிறகுக்குள் பதுங்கி இருக்க முடியும்!..

  காலம் எல்லாத் துயரங்களையும் மாற்றும். கவலை வேண்டாம்!..

  பதிலளிநீக்கு
 6. யார் என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்... நம் மனதை மட்டும் தளர விடாமல் இருந்தால் சரி...

  இரு கோடுகள் தத்துவம் என்றும் உதவும்...

  நீங்கள் சொன்ன சொத்து தான் உங்களை என்றும் காக்கும்...

  தமிழாசிரியர்கள் உட்பட குறிப்பிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 7. இன்றைய பதிவும் உங்களுக்கு உதவக்கூடும்...

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-4.html

  பதிலளிநீக்கு
 8. மனம் திறந்து சொல்லிவிட்டீர்கள்! சுற்றமும் நட்பும் சொல்வதை எல்லாம் ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட வேண்டியதுதான்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...