மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

நண்பேன்டா : சேவியர்


ங்கள் நட்பு வட்டத்தில் ஒவ்வொருத்தரைப் பற்றியும் நண்பேன்டா என்ற தலைப்பில் எழுதிவருகிறேன். எனக்குள் இருக்கும் என் நட்புக்கள் பற்றி கொஞ்சம் பதிந்து வைத்துக் கொள்ளும் வகையில் எழுதப்படும் பகிர்வாகத்தான் இதைக் கருதுகிறேன். அந்த வகையில் இன்றைய தினம் நான் பகிர்ந்து கொள்ளப் போவது எனது அன்பு நண்பன் சேவியரைப் பற்றிய சில நினைவுகள்.

கல்லூரியில் முதல் நாள் முதல் பெஞ்சில் முத்தரசு, ராமகிருஷ்ணன், பிரான்சிஸ் இருக்க இரண்டாம் பெஞ்சில் அண்ணாத்துரைக்கு அருகில் இருந்தவன் சேவியர் இவர்களோடு நானும் அமர, அண்ணாத்துரையும் பின்னர் சேவியரும் என்னுடன் ஓட்டிக் கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களும் சேர நட்பு வட்டம் பெருகியது.

சேவியர்... [இவனுக்கு எப்போது சேவி என்று எழுதுவதுதான் பிடிக்கும்] ஆனந்தூருக்கு அருகில் சூராணத்தில் இருந்து கல்லூரிக்கு வந்தவன். அண்ணாத்துரையும் இவனும் சேர்ந்து அறை எடுத்துத் தங்கியிருந்தனர். மாலை கல்லூரி முடிந்ததும் அறைக்குச் சென்று சோறு வடிப்பதுதான் இவனது வேலை. அண்ணாத்துரை எல்லா வேலைகளிலும் வேகம் என்றால் இவன் சோறு வைப்பதையே பெரிதாகச் சொல்லுவான். நான் என்னத்தடா இனி ராம்நகர் வந்தேன். இப்படியே போறேன் என்றாலும் விடாமல் இழுத்துச் செல்வான். சாப்பிட்டுத்தான் போகனும் என்று கட்டளை இடுவான்.

சேவியருக்கு எப்போதும் கன்னியர் மீது ஒரு காதல்... எதாவது ஒரு பொண்ணு அவனைப் பார்த்துவிட்டால் போதும் பங்காளி அவ என்னையேவே பாக்குறாடான்னு புலம்ப ஆரம்பிச்சிடுவான். எல்லாரிடமும் சகஜமாகப் பேசுவான்.... யாரிடத்திலும் வெட்கப்பட மாட்டான். நமக்குத் தெரிந்த பெண் போனாப் போதும் பங்காளி.... ம்.... உன்னோட ஆளு.... இங்கதான் வருதுன்னு நம்மளை வம்புல மாட்டிவிடப் பார்ப்பான்.

சேவியருக்கு பாட்டு என்றால் மிகவும் பிடிக்கும்... இசை ரசிகன்... எந்தப் படத்தின் பாடல்கள் வெளியானாலும் உடனே கேசட் வாங்கி விடுவான். கையில் ஒரு வாக்மேன் இருக்கும் எப்போது பாட்டுக் கேட்டுக் கொண்டே இருப்பான். நம்ம வீட்டுக்கு வந்தாலும் பாட்டுப் போடுடா... பாட்டுப் போடுடான்னு சொல்லிக்கிட்டே இருப்பான். 

இவன் எல்லாருடைய வீட்டுக்கும் வந்திருக்கிறான். எங்களையும் அவனது வீட்டுக்கு கூப்பிட்டுக் கொண்டே இருந்தான். ஏனோ தெரியவில்லை... இவனது வீட்டிற்கு மட்டும் செல்லவே முடியவில்லை. அவனுக்கும் அதில் எப்பவும் வருத்தம் உண்டு. இருந்தாலும் அவனுக்கு கோபம் என்பதெல்லாம் எப்போது வருவதில்லை.

சேவியர் படத்துக்குப் போகலாமா என்றால் உடனே கிளம்பிவிடுவான். கிளாஸ் இருக்குடா என்றால் எல்லா நாளுந்தான் கிளாஸ் இருக்கும் வாங்கடா என்று சொல்லிக் கிளப்பத்தான் பார்ப்பான். படமும் பாடலும் இவனிடமிருந்து பிரிக்க முடியாதது என்பதை இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

எங்களுக்கு 25 மார்க்குக்கு இண்டர்னல் தேர்வு உண்டு. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது முக்கியமான பரிட்சையில் எல்லாம் முன்னுரையும் முடிவுரையும் ஒழுங்காக எழுதி ஆங்கிலக் கட்டுரையையோ படக் கதையையோ எழுதி வைத்து அடிக்கோடெல்லாம் இட்டு அழகு படுத்தி வைத்து விடுவான். எங்க சாரும் நல்லா எழுதுவனுக்கு 9.5/10 போடுவாரு. அவனுக்கு 0 போடுவாரான்னு கேக்குறீங்களா? அங்கதான் அவன் நிப்பான் பாருங்க... அவனுக்கு 9/10 போட்டு வைச்சிருவாரு...

உடனே எங்ககிட்ட வந்து மாங்கு மாங்குன்னு படிச்சாலும் நம்மளைவிட அரை மார்க்குத்தான் அதிகம் கிடைக்கும். எதிலயுமே யோசிக்கக் கத்துக்கங்கடான்னு சொல்வான். இதையெல்லாம் விட அதே ஆசிரியரிடம் சார் முக்கியமான வேலை... இப்ப வந்துடுறேன்னு சொல்லிக் கிளம்புவான். உன்னோட நம்பர் இதுதானே நான் அட்டண்டன்ஸ் போட்டுடுறேன்னு சொல்லிடுவாரு. அப்புறம் அந்த பாடவேளை அவ்வளவுதான். வெளியில போயி சுத்திட்டு வகுப்பு முடிந்ததும் திரும்பி வருவான்.

மூன்றாம் ஆண்டு படிக்கும் போது பங்காளி ஒரு பொண்ணை லவ் பண்றேன்... அவளைக் கவர்ற மாதிரி ஒரு கவிதை வேணும் பங்காளின்னு சொன்னதும் எழுதி கீழே அழகா என்னோட கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தாச்சு... இது  நவநீயோட வேலை... மாப்ள கையெழுத்தைப் போட்டுக் கொடு அந்த நாதாரி என்ன பண்ணுறான்னு பாப்போம்ன்னு சொன்னான். அதனால போட்டாச்சு...

அவனும் ஒண்ணும் சொல்லாமல் வாங்கிக்கிட்டுப் போயிட்டான். அவரு ரொம்ப விவரம், நமக்கிட்ட ஒண்ணும் சொல்லாம வாங்கிக்கிட்டுப் போயி ரூம்ல அவரோட கையெழுத்துல மானே தேனே... பொன்மானே எல்லாம் சேர்த்துப் போட்டு எழுதியிருப்பாரு போல... அப்பத்தான் கீழே இருக்க பேரைப் பாத்திருப்பான் போல... அப்புறம் என்ன நடந்திருக்கும்... அடுத்த நாள் உன்னைய பங்காளின்னு சொன்னது தப்பாப் போச்சு... அவனை (நவநீ) மாதிரி மாப்ளைன்னே கூப்பிட்டிருக்கணுமின்னு ஒரே அர்ச்சனைதான். 

படிப்பு முடிந்ததும் திருப்பூர் பக்கம் பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போனான். அதன் பிறகு சில மாதங்கள் எங்களுக்குள் கடிதப் போக்குவரத்து இருந்தது. அப்போது பனியன் கம்பெனி ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னான். நண்பர்கள் அவன் பனியன் கம்பெனி ஆரம்பித்து திருப்பூர் பக்கம் செட்டிலாகிவிட்டதாகச் சொன்னார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த நண்பர்களில் இவனும் ஒருவன். எந்த ஒளிவு மறைவும் இல்லாதவன். எங்கிருந்தாலும் நலமுடனும் வளமுடனும் இருடா சேவி.

நட்பின் பயணம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

மனசின் பக்கம் : வலைச்சரம் முதல் தேர்தல் வரை

ன்றைய வலைச்சரத்தில் சகோதரி செல்வி அவர்கள் எழுத்துலக ஜாம்பவான்கள் விஜயன் அண்ணா (இப்போது இவரது எழுத்துக்கள் முழுக்க முழுக்க முகநூலில் மட்டுமே) மற்றும் அனைவரும் அறிந்த நகைச்சுவை மன்னன் எங்கள் அண்ணன் நாஞ்சில் மனோ அவர்களுடனும் மதுரை மண்ணின் சிறப்பான எழுத்தாளர்களில் ஒருவரான சகோதரி ஆனந்தி (இப்போது இவரும் வலையில் எழுதுவதில்லை) அவர்களுடனும் என்னையும் செவ்வாயின் செவாலியர்கள் என்ற தலைப்பில் முதல் நாள் அறிமுகத்தில் சொல்லியிருக்கிறார். அறிமுகம் செய்த சகோதரிக்கு நன்றி. வலைச்சரத்தில் ஒவ்வொரு முறை அறிமுகம் ஆகும் போதும் கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு எதுவும் இல்லை.  அறிமுக விவரம் நான் வலைச்சரம் போகும் முன்னரே தனபாலன் சார் மற்றும் சகோதரர் ரூபனால் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருவருக்கும் நன்றி.


'விஜயகாந்தை கேலி செய்யலாமா என்ற எனது பதிவு இந்த வாரத்தில் அதிகம் பேரால் வாசிக்கப்பட்டிருப்பதுடன் சிலரின் சிறப்பான கருத்துக்களையும் படிக்க முடிந்தது. அதில் ஒரு சகோதரியின் கருத்தை கீழே கொடுத்துள்ளேன்.

Rrgana Bagam said...
சே.சேகர் சார் நிங்க சொல்றது 100/100 உண்மை ஆனா என்ன மாதிரி முஸ்லிம்களின் வாக்கு அவருக்கு கிடைக்காது அவா் உணமையிலோ மக்களின் பக்கம் என்றால் திமுக மாதிரி அதிமுக மாதிரி தனித்து நின்று ஜெயிக்க வேண்டும்மோ தவிர ஜாதி வேறி பிடித்த பாஜக உடன் ஏன் உடன்பாடு செய்து கொள்ள வேண்டும் தெளிவாக கூற முடியும் மா திரு.சே.சேகா் சார்.

சே.குமார் சேகராகிவிட்டேன்... அதை விடுங்க.... அதுவா முக்கியம் அவரின் கருத்துத்தானே முக்கியம்... முதலில் தங்களின் கருத்துக்கு நன்றி சகோதரி.

சகோதரிக்கு அந்தப் பதிவிலேயே கருத்துச் சொல்ல நினைத்தேன். ஆனால் எனக்கு அதை இங்கு சொல்வதுதான் சரியெனப்பட்டது. காரணம் இந்தப் பதிவு ஜாதிக் கட்சிகள் பற்றிய பகிர்வு கிடையாது. இது தனி மனிதனை கேலி செய்வது குறித்தான பகிர்வு. நான் இங்கு தே.மு.தி.கவுக்கோ பாஜகவுக்கோ ஓட்டுக் கேட்கவில்லை. மேலும் இன்று ஜாதிக்கு ஒரு கட்சி இருக்கத்தான் செய்கிறது. ஜாதிக் கட்சி ஆதரவு நிலையில் எழுதப்பட்ட பகிர்வு அல்ல இது. 

அதிமுக, திமுகவெல்லாம் தனித்து நிற்கிறது என்று யார் சொன்னார்கள். எல்லாருமே ஜாதிக்கட்சிகளை தொங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் அதிமுகவில் எங்களுக்கு மரியாதை இல்லை என்று வெளியே வந்த முஸ்ஸீம் கட்சிகளில் ஒன்றுக்கு கருணாநிதி சிவப்புக் கம்பளம் விரிக்க தயாராக இருக்கிறேன் என்று சொல்லவில்லையா? 

மேலும் பஜக வேட்பாளர்களை தங்கள் ஊருக்குள் வரவிட மாட்டோம் என்று சொல்லும் உங்களவர்கள் சாதிக்கட்சிகளை நடத்தவில்லையா என்ன? வாக்களிப்பது உங்கள் உரிமை... யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது உங்களது முடிவு... அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அதேபோல் அடுத்த வீட்டில் இருக்கும் குப்பையைப் பார்க்கும் முன்னர் நம் வீட்டில் இருக்கும் குப்பைகளையும் பார்க்க வேண்டுமல்லவா?

விஜயகாந்தின் மீதோ தேமுதிக மீதோ எனக்கு தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை. முகநூலில் அவரை வைத்து நடக்கும் காமெடி கலாட்டாக்களைப் பார்த்து எழுதியதுதான் இந்தப் பதிவு. இதில் முழுக்க முழுக்க எனது கருத்துக்களே இடம் பெற்றுள்ளன. இதை எல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. 

சகோதரிக்கு இப்படி எழுதலாமா என்று என்று யோசித்தேன். யோசனையின் முடிவில் இங்கு எழுதுவதுதான் நன்று என்று தோன்றியதால் எழுதிவிட்டேன்... எனக்கு எல்லோரும் ஒன்றுதான்... எங்கள் ஜாதிக்கும் ஒரு கட்சியிருக்கிறது... அதற்கும் ஒரு தலைவர் இருக்கிறார்... ஆனால் நான் அதில் உறுப்பினர் கூட இல்லை. சாதி மதம் கடந்த நட்புத்தான் எனக்கு அதிகம் உண்டு. அதைத்தான் நான் எப்போதும் விரும்புவேன். இங்கு எழுதியிருக்கும் எனது கருத்து யாரையேனும் புண்படுத்தும் விதமாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.

ம்முட்டி நடித்த 'தெய்வத்தின்டே சொந்தம் கிளிட்டஸ்' என்ற படம் பார்த்தேன். நாடகத்தில் இயேசு பிரான் வேடமிடுவதற்காக பங்குத் தந்தையால் அழைத்து வரப்படும் ரவுடியாக மம்முட்டி நடித்திருந்தார். விரித்துப் போட்ட தலைமுடியுடன் தோளில் போட்ட சிவப்புத் துண்டை கையில் தாங்கியபடி அவர் நடந்து வரும் போது அந்த முகத்தில் தெரியும் தெய்வீகக் கலை சாட்சாத் இயேசு பிரானே நேரில் வருவது போல் இருந்தது. அடாவடித்தனம் கலந்த கதாபாத்திரம் ஓரளவு ரசிக்கும்படி செய்திருக்கிறார். படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்த போதிலும் படம் போரடிக்காமல் சென்றது. 

ங்கு குளிர் காலம் முடிந்து வெயில் தொடங்கிவிட்டது. இன்று மதியமெல்லாம் நடந்து வர முடியாத அளவுக்கு வெயில் பட்டையை எடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்த வருடம் குளிர்காலத்தில் அதிக முறை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இன்னும் நான்கைந்து மாதங்களுக்கு நீடிக்கும் வெயிலின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே.

தேர்தலில் கட்சி சார்பின்றி உங்களுக்கு எவர் நல்லவர் என்று தெரிகிறதோ அவருக்கு வாக்களியுங்கள். நம்மை ஏமாற்றி மீண்டும் மீண்டும் சம்பாதிக்கத் துடிப்போருக்கு சரியான பாடம் கற்பியுங்கள். எங்கள் சிவகெங்கைத் தொகுதியில் அதிமுக, பஜகவுக்கு இடையில்தான் போட்டி அதிகம் என்று சொல்கிறார்கள். அதிமுகவின் கை ஓங்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள். மொத்தத்தில் சிவகெங்கை சீமை எனக்குத்தான் என்று சென்ற தேர்தல் வரை இறுமாப்புடனே இருந்த ஐயா பசி அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் பந்தயத்தில் இறுதியில் இருப்பதாக நண்பன் ஒருவன் சந்தோஷமாகச் சொன்னான்.

இன்னும் நல்ல விஷயங்களுடன் அடுத்த மனசின் பக்கத்தில் சந்திப்போம்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 14 ஏப்ரல், 2014

என்னருமைக் காதலனே



வெற்றிலைக் கொடிக்காலோரம்
வெசனமா நிக்கயில
நெற்றியில முத்தமிட்டு
நெடுந்தூரம் போனவனே..!

கற்றாழைச் செடி பிடிங்க
கரம்பக்காடு போகயில
கடுதாசி கொடுத்து
காக்கவச்சிப் போனவனே...!

குடிதண்ணிக்காக குடத்தோடு
தனியே நான் போகயில
கைப்பிடித்து வம்பு செய்து
காணாமல் போனவனே..!

கருதறுக்கும் போது
நெல்மணியால் என் கழுத்தில்
குறுகுறுக்க வைத்து
கூறாமல் போனவனே...

பருத்தி எடுக்கயில
பக்கம் வந்து நின்னுக்கிட்டு
வெடிச்ச பருத்திபோல சிரிச்சி
பரிதவிக்க விட்டுப் போனவனே

எத்திசை பார்த்தாலும்
அத்திசையில் சிரிக்கிறாய்...
உறக்கம் மறந்து
உணவும் மறந்து
நினைவுகளைப் பருகி
உயிரை பிடித்திருக்கேன்
உன்னோட வாழ்த்தானே...

மழை கேட்கும் தரிசாட்டம்
காஞ்சிருக்கு எம்மனசு...
எப்பொழுது வருவாயென
முப்பொழுதும் ஏங்குகிறேன்...

அறுவடையும் முடிஞ்சாச்சு...
அக்காவுக்கும் கலியாணமாச்சு...
ஆடி வந்தா நீ போயி
வருசம் ஒண்ணாச்சு...

உலகம் மறந்து
உன்னையே நெனச்சு
ஓடி வருவாயென
ஒரு வருடமாக் காத்திருக்கேன்...

தேடித்தேடி பூத்த கண்ணு
தெருவத்தானே பாத்திருக்கு...
வாடிப்போன நெஞ்சு மட்டும்
வழி தெரியாம தவிச்சிருக்கு...

பரிதவிக்கும் பாவி என்னை
அள்ளி அணைக்க வருவாயென
எண்ணி எண்ணிக் காத்திருக்கேன்...
ஏமாற்றாமல் வந்துவிடு...


-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

கிராமத்து நினைவுகள் : தமிழ் வருடப் பிறப்பு


ன்றைக்கு தமிழ் வருடப் பிறப்பு என்பது சித்திரை மாதமா அல்லது தை மாதமா என்று குழப்பான சூழலில் இருந்தாலும் தமிழ் வருடம் பிறக்கும் தினமான சித்திரை - 1 ஆம் தேதியையே நாம் தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடுகிறோம்.

சித்திரை ஒன்றாம் தேதி என்றாலே நல் ஏர் கட்டுதல் என்பதுதான் கிராமத்து வாழ்வின் சிறப்பு. நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் எல்லாருடைய வீட்டிலும் காளை மாடுகள் இருக்கும். அதிகாலையில் எழுந்து கலப்பையையும் (ஏர்) நுகத்தடியையும் கழுவி திருநீறு, குங்குமம் இட்டு வைத்துவிட்டு காளை மாடுகளைக் குளிப்பாட்டி குங்குமம் வைத்து உழவுக்கு தயார்ப் பண்ணி வைப்போம். மாட்டின் முகத்தில் மாங்காய் போன்று குங்குமம வைத்து கருப்புக் கயிரைப் பின்னி அதில் மணி கோர்த்து இரண்டு கொம்புகளையும் சேர்த்து நெற்றியில் விழுமாறு கட்டி அழகு படுத்தி வைப்போம்.

அப்பா காலண்டரில் நல்ல நேரம் பார்த்து நெல்லெடுத்து அத்துடன் பூ, பழம் பாலெல்லாம் வைத்து வீட்டில் சாமி கும்பிட்டு வீட்டு வாசலில் இருக்கும் எங்கள் ஊர் மாரியம்மனை 'தாயி இந்த வருடம் வெளச்சல் நல்லாயிருக்கணும்' என்று வணங்கி எங்களையும் கும்பிடச் செய்து ஏரைத் தூக்கிக் கொண்டு முன்னே செல்ல மாட்டைப் பிடித்துக் கொண்டு நாங்கள் பின்னே செல்வோம். வயலுக்குச் சென்று சனி மூலையில் ஏரைக்கட்டி அப்பா இரண்டு மூன்று சால் உழுவார். பின்னர் விதை நெல்லைத் தூவி விட்டு தண்ணீர், பாலெல்லாம் ஊற்றி ஊது பத்தி சூடம் பற்ற வைத்து பூ போட்டு சாமி கும்பிட்டு வீட்டுக்குத் திரும்புவோம்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் எல்லா வீடுகளிலும் காளை மாடுகள் இல்லாமல் போய்விட்டது. டிராக்டர்களைக் கொண்டு மணிக்கணக்கு வைத்து உழுகும் காலம் வந்து விட்டது. எங்கள் ஊரில் விதைப்பு என்பது இந்தச் சமயத்தில்தான் அறிமுகமானது. அதுவரை நாற்றுப்பாவி நடவு முறைதான் இருந்தது. டிராக்டர் உழவு வந்ததும் ஒரு முறைதான் உழ முடியும், அடுத்தவர் வயலில் பயிர் இருந்தால் உழவு செய்ய முடியாது என்பதால் ஊரே விதைப்பு முறைக்கு மாறியது.

அப்போதைய சித்திரை நல்லேர் என்பது மண்வெட்டியோ களைக்கொட்டோ வைத்து கொத்திவிட்டு விதை போடுவதுதான். கால ஓட்டத்தில் கலப்பைகள் எல்லாம் கசாலைகளில் பரணிலோ அல்லது சுவற்று ஓரங்களிலோ கேட்பாரற்றுக் கிடக்க, அன்றைய தினம் இவற்றின் செயல்பாட்டோடு முடிவுக்கு வந்துவிடும். காலை எழுந்ததும் மண்வெட்டியை அடிபைப்பில் கொண்டு போய் கழுவி குங்குமம் எல்லாம் வைத்து நெல், தண்ணீர். சூடம். ஊதுபத்தி எடுத்து தயாராக வைத்திருப்போம். நல்ல நேரம் பார்த்துக் கிளம்பி மாரியம்மனிடம் முறையிட்டு வயலுக்குச் செல்வோம்.

காய்ந்து போய் கிடக்கும் வயலின் சனி மூலையில் மண்வெட்டியால் கொத்திவிட்டு நெல்லைப் போட்டு தண்ணீர் ஊற்றி சாமி கும்பிட்டு வருவோம். அன்று மதியம் சைவச் சாப்பாடு பாயாசத்துடன் அருமையான அம்மா கைச்சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டுவோம். இதற்கு இடையே வைகாசி மாதம் வரும் எங்க ஊர் மாரியம்மன் கோவில் செவ்வாய்க்கான கூட்டம் நடைபெறும்.

அன்றிரவு தேவகோட்டையில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க சைக்கிளில் கிளம்பி விடுவோம்... இரவு முழுவதும் சுற்று சுற்றென்று சுற்றி ஒரு நிகழ்ச்சியை உருப்படியாகப் பார்ப்பதில்லை. எல்லா நிகழ்ச்சிகளையும் ஊறுகாய் போல் தொட்டு சுற்றி ஆட்டம் போட்டு நடக்கும் அடிதடிகளை எல்லாம் தள்ளி நின்று பார்த்து திரும்புவோம்.

நாளை சித்திரை மாதம் பிறப்பு.... ஜய வருடம் அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும்... என் அன்பிற்குரிய அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

-கிராமத்து நினைவுகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 12 ஏப்ரல், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 61

முந்தைய பதிவுகளைப் படிக்க...



61.  அம்மாவிடம் மாற்றமா?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் தனித்தனியே படிப்பைத் தொடர்கிறார்கள். சேகரின் திருமணத்திற்காக ராம்கி ஊருக்கு வருகிறான். அம்மா அண்ணன் மனைவி செய்ததை எண்ணி வருந்த இருதலைக் கொள்ளியாய் தவிக்கிறான்.

இனி...

சேகரின் திருமணத்துக்கு கண்டிப்பாகப் போக வேண்டுமா என்று கேட்ட அம்மாவிடம் போயே ஆகணும் இங்க காலேசுல படிச்ச பிரண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க அவங்களைப் பார்க்கலாம்ல என்று ஒரு கதையை விட்டு கிளம்பி வந்திருந்த புவனா, வந்ததும் வராததுமாய் ராம்கியைத்தான் தேடினாள். இரண்டு முறை அவளைக் கடந்து போனவன் ரொம்ப பிஸியாக இருந்தான். அவளிடம் இரு என்று சாடை மட்டும் காட்டிச் சென்றான். என்ன இவன் வந்து பேசக்கூட முடியவில்லை... அப்படியென்ன வேலையை இழுத்துப் போட்டுப் பார்க்கிறாரு... என்று கோபம் கோபமாக வந்தது.

'சே... வராமல் இருந்திருக்கலாமோ... ரொம்பத்தான் பிகு பண்ணுறாரு... பேசாம கிளம்பிடலாம்' என்று நினைத்தபடி எழுப்போனபோது அவளருகில் சீதா வந்து அமர்ந்தாள். அவளைப் பார்த்ததும் சிநேகமாகச் சிரித்தாள்.

"நீ புவனாதானே?"

"ஆமா"

"என்ன இன்னும் சாப்பாடெல்லாம் முடியல... கிளம்பப் பாக்குறே...?"

"ம்... வந்து காலையில சாப்பிட்டாச்சு... சேகர் அண்ணனைப் பார்த்து வாழ்த்துச் சொல்லிட்டு வந்தாச்சு... அப்புறம் என்ன"

"தம்பி வந்து பேசலையாக்கும்..."

"தம்பி... யார்...?" தெரியாத மாதிரிக் கேட்டாள்.

"இந்தா... எனக்கு எல்லாந் தெரியும்... சும்மா தெரியாத மாதிரி நடிக்காதே... அவனுக்கு கொஞ்சம் வேல... அதான் அங்கிட்டு இங்கிட்டுமா ஓடிக்கிட்டு இருக்கான்... இரு வருவான்..." என்றாள் சீதா.

"ம்... சரி..." என்றபடி பேசாமல் அமர்ந்தாள்.

"எந்தம்பிக்கு சரியான ஜோடி நீதான்... ரெண்டு பேரும் ரோட்டுல போன ஊருக் கண்ணே பட்டுடும்... ராஜாத்தி.... அம்புட்டு அழகா இருக்கே..." என்று கன்னத்தை கைகளால் தடவி தனது தலையில் அழுத்தி சொடக்கு எடுத்தவள் "பாரு எம்புட்டுத் திட்டி இருக்குன்னு... அம்புட்டுப் பேரும் உன்னயத்தான் பாத்திருப்பாளுவ..." என்று சொன்னாள்.

"அக்கா... என்னைய உங்களுக்கு உண்மைக்குமே பிடிச்சிருக்கா?" கண்கள் விரிய ஆர்வமாய்க் கேட்டாள்.

"ஏஏஏஏன்... உன்னைய புடிக்காம... எந்தம்பிக்கு நீதான் பொண்டாட்டியா வரணும்ம்ம்ம்..." இழுத்துப் பேசினாள்.

"ரொம்ப சந்தோஷமா இருக்குக்கா... தேங்க்ஸ்..."

"இதுக்கு எதுக்கு டேங்க்ஸ் எல்லாம் சொல்லுறே... எந்தம்பி பொண்டாட்டி நீயிதான்..." என்றவள் அவர்களைக் கடந்து சென்ற ராம்கியைப் பார்த்து "டேய் இங்க வாடா" என்று அழைத்தாள்.

'ஆஹா... அக்கா எதுக்கு புவி பக்கத்துல இருக்கு... புவியப் பத்தித் தெரிஞ்சாலும் எதாவது ஏழரையைக் கூட்டிட்டா என்ன பண்றது...' என்று நினைத்தபடி அருகே வந்தவன், புவனாவை பார்க்காத மாதிரி "என்னக்கா?" என்றான்.

"ஏன்டா... அவ எம்புட்டு நேரமாத் தேடுறா... எதுக்குத் தவிக்க விடுறே... வேல இருக்கத்தான் செய்யும்.... அவகிட்ட அன்பா நாலு வார்த்தை பேசிட்டுப் போடா..."

"அக்கா... நீ... நீயா சொல்றே... உண்மையாவா?"

"இங்க பாரு... என்னோட வாழ்க்கை இன்னைக்கு நல்லா இருக்குன்னா அதுக்கு யார் காரணம்ன்னு தெரியும்... உங்க மச்சான் இன்னைக்கு ஒரு மனுசனா திருந்தி வாழ்றார்ன்னா நீயும் என்னோட மத்த தம்பிகளும் செஞ்சதுதான்... உன்னோட ஆசை, கனவெல்லாம் இவதான்னு எனக்குத் தெரியும்... எங்கிட்ட எத்தனை தடவை புவி அப்படி... இப்படின்னு சொல்லியிருப்பே... போட்டாவைக் காட்டி என்னோட புவி... என்னோட புவியின்னு எம்புட்டுத்தடவை எங்கிட்ட சொல்லியிருப்பே... எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நா கட்டி வக்கிறேன்டா..." என்றதும் "அக்கா..." என்று கண்கலங்க அவளது கைகளாய்ப் பிடித்துக் கொண்டான்.

"அக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா... எனக்கு இப்போ தைரியம் வந்தது மாதிரி இருக்கு..." என்று புவனாவும் கையைப் பிடிக்க "இங்கரு... நீ இருக்கேன்னு அக்கா போடுறான்... இல்லேன்னா சீதான்னுதான் சொல்லுவான் களவாணிப்பய..." என்று அவர்கள் இருவரின் இறுக்கத்தையும் மாற்றினாள்.

"ஆமா உங்கள ஒக்கா போடுறாக ஒக்கா... என்னலேன்னு கூப்பிட்டாத்தான் நம்மளோட நெருக்கம் அப்படியே இருக்கும்... புவி...ப்ளீஸ் கொஞ்ச நேரம் அக்கா கூட இரு... வர்றேன்... மதியம் சாப்பிட்டுப் போகலாம்... உங்கிட்ட பேசணும்... ஓகே... " என்றவன் அக்கா கவனிக்காத போது 'ப்ளீஸ் டியர்..." என்று கண்ணடித்தான்.

"ம்... சீக்கிரம் வாங்க..." என்று புவனா சொன்னதும் அங்கிருந்து அகன்றான்.

"ரொம்ப நல்ல பய... யாருக்கு உதவினாலும் ஓடி ஓடி செய்வான்... ஊருக்குள்ள இவன்னாலே எல்லாருக்கும் புடிக்கும்... இந்தா சேகருப்பயல கட்டியிருக்காளே காவேரி அவ எதாயிருந்தாலும் இவங்கிட்டதான் சொல்லுவா... ரொம்ப நல்லபுள்ள... சேகர் கொடுத்து வச்சவன்..."

"ம்..."

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, "இங்க என்னடி பண்ணுறே...?" என்றபடி வந்தாள் நாகம்மா.

"சும்மாதான் உக்காந்திருக்கேன்.. " 

"சும்மா உக்காந்திருக்கியா? " என்றபடி புவனாவைப் பார்த்தாள். "வணக்கம் அம்மா" என்று சொன்னபடி புவனா சிநேகமாய் அவளைப் பார்த்தாள்.

படக்கென்று மறுபக்கம் திரும்பியபடி " என்ன சம்பந்தம் பேசுறியளோ..? இவகிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்கே... எப்படியாச்சும் அவனைப் பாக்கிறதுக்காக மினுக்கிக்கிட்டு வந்துடுறா?" என்று கடுப்பாகச் சொன்னாள்.

"அம்மா... இது கலியாணக்கார வீடு... தேவையில்லாம பேசாதீங்க... சேகர் கூப்பிட்டிருக்கான்.. இவ வந்திருக்கா... சும்மா போங்க..." என்று சீதை சீற, புவனாவுக்கு அழுகை வந்தது.

"அக்கா நான் கிளம்புறேன்..." என்றபடி எழுந்தவளை "நீ இரு" என்று இழுத்து அமர வைத்தவள், "அம்மா இவளைவிட நல்ல பொண்ணா அவனுக்குப் பாத்துருவீங்களா? இந்தா அண்ணனுக்குப் பாத்து வச்சீங்களே என்னாச்சு... வந்தனைக்கே உங்கள தூக்கிப் போட்டுட்டு புருஷனைக் கூட்டிக்கிட்டுப் பொயிட்டா... ஏன் எனக்குப் பாத்தீங்களே... அண்ணன் சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு... என்னாச்சு... எம்புட்டு அடி ஒதை பட்டிருக்கேன் தெரியுமா? இன்னைக்கு நான் சந்தோஷமா இருக்கேன்னா அதுக்கு நீனோ மாமாவோ காரணமில்லை... எந்தம்பிதான் காரணம்... அவனுக்கு இவதாம்மா பொருத்தமானவ... அவங்க வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும்... புரிஞ்சிக்கங்க... யாரும் ஒத்துக்கலைன்னா நா நின்னு பண்ணி வைப்பேன்... ஆமா சொல்லிப்புட்டேன்..." என்று சீதா படபடவென பேசினாள்.

"அ... அக்கா... எல்லாரும் பாக்குறாங்க... வேணாம் விடுங்க.." அவளை அடக்கினாள் புவனா.

"பாத்தா என்ன... இது என்ன தப்புங்கிறேன்... பாத்துட்டுப் போறாங்க..." என்றதும் நாகம்மா சூழல் கருதி அங்கிருந்து ஒண்ணும் பேசாமல் நகர்ந்தாள். அவளுக்குள் 'நான் இன்னைக்குச் சந்தோஷமா இருக்கேன்னா அதுக்கு நீனோ மாமவோ காரணமில்லை... எந்தம்பிதான் காரணம்' என்ற வார்த்தை ஆழமாகத் தைக்க தனியாகப் போய் அமர்ந்தாள்.. 

"என்னடி உம்மவ அந்த மேலாமினுக்கிக்கு இம்புட்டு சப்போர்ட் பண்ணுறா?" என்றபடி அவளருகில் வந்து அமர்ந்தாள் முத்து.

"அதை விடுக்கா?"

"என்னத்தை விடச் சொல்றே...? தூரத்துச் சொந்தம் எனக்கு ஒத்தாசையா இருப்பான்னு கட்டிக்கிட்டு வந்தியே என்னாச்சு... இந்தா காலையில மினுக்கிக்கிட்டு ஆட்டோவுல வந்தா... இருந்தா... சாப்பிட்டா... பொயிட்டா.. அவளே அப்படின்னா... வேற சாதிக்காரிய கட்டிக் கூட்டியாந்து நாளைக்கு நம்ம சாதி சனத்துக்குள்ள ஒண்ணா மண்ணா பொழங்க முடியுமா என்ன... அதைவிட அவளே கஞ்சி ஊத்தாத போது இவ உனக்கு கஞ்சி ஊத்துவான்னு என்ன நிச்சயம்?" முத்து நறுக்கென்று பத்த வைத்தாள்.

"அட நீ வேற சும்மா ஏங்க்கா ஏத்திவிடுறே...? என்ன நடக்கணுமின்னு இருக்கோ அதுதானே நடக்கும்... இந்தப் பய அவுக அக்கா வாழ்க்கை இப்படியிருக்கேன்னு என்னமோ பண்ணி அவ வீட்டுக்காரரை சரி பண்ணியிருக்கான்... இந்தாப் பாரு... எந்தம்பி எனக்கு வாழ்க்கை அமைச்சிக் கொடுத்தான்... அவன் இவளைக் கட்டுனா என்னன்னு கேக்கிறா... இந்தப்பய அவுக அப்பன் மாதிரி அடுத்தவுகளுக்கு ஒண்ணுன்னா பாத்துக்கிட்டு இருக்கமாட்டான்..."

"நான் எதார்த்தத்தைச் சொன்னா நீ எதை எதையோ பேசுறே?" - முத்து.

"அக்கா... அவனுக்கு என்ன நடக்கணுமின்னு இருக்கோ அது நடக்கட்டும்... என்னோட தலையில எழுதுன எழுத்தை இனியா மாத்தமுடியும்.. விடுங்க அக்கா.... கலியாணக்கார வீட்டுல நம்ம குடும்ப பிரச்சினை எதுக்கு... இன்னைக்கு சேர்ற புள்ளைங்க நல்லா இருக்கட்டும்... இங்க உக்காந்து கண்ணக் கசக்குறது நல்லாவா இருக்கு... எதார்த்தம் எல்லாம் பேசிக்கிட்டு காரியம் இல்ல..." என்றதும் முத்து "ம்க்கும்... மவனுக்கு சப்போட்டா பேசுறே... என்னமோ போ" என்று கிளம்பிவிட்டாள்.

அவள் போனதும் சீதாவும் புவனாவும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். 

"அம்மா..." என்று ராம்கியின் குரல் கேட்டு படக்கென்று திரும்பினாள்.

"என்னப்பா?"

"என்னம்மா என்னாச்சு... ஏன் ஒரு மாதிரி இருக்கே?"

"ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்ல..."

"சரி வாம்மா.... சேகர் மச்சானுக்கு ஒரு கிப்ட் வாங்கி வச்சிருக்கேன் கொடுத்துட்டு வரலாம்..." என்று அழைக்கவும் பேசாமல் எழுந்தாள்.

அவனுடன் நடந்தபடி "தம்பி அக்காவையும் கூப்பிடு" என்றாள்.

சீதா இருந்த பக்கம் பார்க்க புவனாவும் அவளும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இப்போ அக்காவைக் கூப்பிட்டா புவி வருத்தப்படுவா.... புவியக் கூப்பிட்டா அம்மா பத்ரகாளியாயிடுவா... என்ன செய்வது என்ற யோசனையோடு "அக்கா அந்தப் பொண்ணுக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கு.... நாம மட்டும் கொடுத்துட்டு வரலாம்... வாம்மா" என்று அவளது கையைப் பிடித்து இழுத்தான்.

"அப்ப அந்தப் புள்ளையையும் சேத்துக் கூப்பிடு..." என்ற நாகம்மாவை நம்பாமல் பார்த்தான் ராம்கி.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

விஜயகாந்தை கேலி பண்ணலாமா?



இந்தக் கட்டுரை விஜயகாந்த் என்னும் மனிதரைப் பற்றிய கட்டுரை. இதைப் படிக்கும் முன்னரே நான் தேமுதிக-காரன் என்ற எண்ணம் எல்லாம் வேண்டாம். நமக்கும் அரசியலுக்கும் ரொம்பத் தூரம். எதோ எழுதணும்ன்னு தோணிச்சு... அவ்வளவுதான். இது விஜயகாந்துக்கு ஆதரவு நிலையிலோ எதிர்ப்பு நிலையிலோ எழுதப்பட்டது அல்ல... ஒரு தனி மனிதன் காமெடியன் ஆக்கப்படும் நிலை கண்டு எழுதியதுதான் அவ்வளவுதான்...

இன்றைய அரசியல்வாதிகளில் அதிகம் விமர்சிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாறியிருக்கிறார். அதிலும் குறிப்பாக முகப்புத்தகத்தில் அவரை வைத்து காமெடிகள் அதிகம் அரங்கேறுகின்றன. இதற்கு காரணம் என்ன? உண்மையிலேயே விஜயகாந்த் காமெடி பண்ணுகிறாரா? அவர் மக்களே என்று அழைப்பதைக் கூட நாம் மக்கழே என தண்ணி அடித்து விட்டு உளறுவது போல் ஸ்டேட்டஸ் போடுகிறோம். இது எதனால்... நமக்கு விஜயகாந்த் மீது அப்படி என்ன கோபம்?

தன்னை விமர்சித்த வடிவேலுவை தனிப்பட்ட முறையில் எதாவது சொன்னாரா என்பது தெரியாது. ஆனால் பொதுவெளியில் அவர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. இன்று வடிவேலுவின் தெனாலிராமனுக்கு பிரச்சினையை சில புல்லுருவிகள் கிளப்பும் போது அதில் கூட விஜயகாந்தை சில பத்திரிக்கைகள் சம்பந்தப்படுத்துகின்றன. இது நியாயமா? இன்று வடிவேலுவை முதல்வர் ஜெயலலிதா அரவணைப்பது போன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகவும் ஆளாளுக்கு அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்து பொங்குகிறார். இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒரு அருமையான காமெடி நடிகரை முடக்கி வைத்திருந்தார்களே. அப்போது இந்த பொங்கிகள் எல்லாம் எங்கே போனார்கள். எதாவது பேசினால் ஜெயலலிதாவால் தங்களுக்கு எதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று பயந்துதானே அடங்கிக் கிடந்தார்கள். வீட்டில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை பார்த்து ரசித்துவிட்டு வெளியில் அம்மாவின் பார்வைக்கு அடங்கிய பாம்பாய் இருந்தார்கள்.

சரி விசயத்து வருவோம்... விஜயகாந்த் மனதில் உள்ளதைப் பேசுகிறார்... அதை வெளிப்படும் விதம் தவறாக இருக்கலாம்... ஆனால் இன்றைக்கு மற்ற அரசியல்வாதிகளுக்கு இல்லாத தைரியம் அவரிடம் இருக்கு என்று எழுத்தாளர் திரு. பாலகுமாரன் அவர்கள் முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார். அது தினமணியிலும் பிரசுரமானது. அதற்கு எத்தனை பேர் நீங்க அவருக்கு ஆதரவா என்று பொங்கினார்கள் தெரியுமா?. கண்டபடி தங்களது கருத்தைப் திரு. பாலகுமாரனின் இந்த ஸ்டேட்டஸில் பதிந்தார்கள். அவர் மனதில்பட்டதைச் சொன்னது தவறா? இங்கு தனி மனிதனுக்கு கருத்துரிமை இருக்கு என்பதை நாம் மறந்துவிட்டுத்தானே பொங்கினோம்.

இன்றைக்கு பி.ஜே.பி. கூட்டணியில் அனைத்துக் கட்சிகளுக்காகவும் ஊர் ஊராகச் சென்று பேசும் ஒரே தலைவர் விஜயகாந்த்தான் என்பதை மறுக்க முடியுமா? காட்டுக்கும் மேட்டுக்கும் இழுத்தாலும் அனைவரையும் அரவணைத்துச் செல்ல நினைக்கிறார். ஒருவன் உண்மையாக இருப்பது என்பது மிகவும் சவாலான விஷயந்தான். அவரது வெளிப்படையான பேச்சும், செயல்களும் வேண்டுமானால் கேலிக்குரியதாக இருக்கலாம். ஆனால் ஒரு தனி மனிதனை கேலிக்குரியவனாக ஆக்கி சந்தோஷம் அடையும் நம்மைவிட அவர் கேலிக்குரியவரா? நம் மனதின் அழுக்குகள் கரைந்து போகாமல் கட்டியாய் இருப்பது ஏன்?

ஜெயா தொலைக்காட்சியில் அடிக்கொரு முறை விஜயகாந்தின் பொதுவெளி செயல்பாடுகளைப் போட்டுக்காட்டி இவருக்கா உங்கள் ஓட்டு என்று போடுகிறார்கள். இந்த இரண்டரை வருடத்தில் நம் அரசின் சாதனை என்ன என்று பட்டியலிட்டு ஓட்டுக் கேட்கலாம் தானே... முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்ததையும், கிராமங்களில் 18 மணி நேர மின்தடை செய்து வருவதையும் களவாணிப் பயலுகளை எல்லாம் கட்சியில் சேர்ப்பதையும் சொல்லி ஓட்டுக் கேட்கலாமே... அதை விட்டு விஜயகாந்தைக் காட்டி ஓட்டுக் கேட்பது எதற்காக..? ஆளும் கட்சிக்கும் அவர் மீது பயம் இருக்கிறது என்பதைத்தானே இது காட்டுகிறது.

இன்று விஜயகாந்தை விமர்சிக்க நடிகர் நடிகைகளை எல்லாரையும் களம் இறக்கி விட்டிருக்கிறார்கள். அன்று விஜயகாந்தை வைத்து வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர் ஒருவர் பம்பரம் விட அடம்பிடித்தார் என்று அடித்துச் சொல்கிறார். இத்தனை வருடமாக அவருக்கு ஞாபகத்தில் இல்லையோ... அப்போதெல்லாம் சொல்லத் தெரியவில்லையோ... சிங்கமுத்து, விந்தியா, ராமராஜன் என ஒரு கூட்டமே விஜயகாந்தை திட்டுவதையே தங்கள் பேச்சில் அதிகம் செய்கிறார்கள். இவர்கள் இப்படிப் பேசக் காரணம் தலைமையிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்பதற்காகத்தானே தவிர உண்மையில் விஜயகாந்தை தாக்க வேண்டும் என்பதற்காக அல்ல.... ஒரு நடிகராக அவர் நிறையப் பேருக்கு உதவியாக இருந்தார் என்பதை இவர்கள் மறுத்துச் சொல்ல முடியுமா?

அரசியல்வாதிகள் எல்லோருக்கும் கலைஞர் கருணாநிதி மாதிரி மேடைப் பேச்சு வருவதில்லை. ஏன் நம்ம முதல்வரே எழுதிக் கொடுத்ததை வைத்துத்தான் பேசுகிறார். சமய சந்தர்ப்பம் பார்த்து சூசகமாகப் பேசுவது எல்லாம் கலைஞர் அவர்களுக்கு மட்டுமே கை வந்த கலை. விஜயகாந்த் மனதில்பட்டதைப் பேசுகிறார்... அவர் எழுதி வைத்துப் பேசுவதில்லை... மக்களே... மக்களே... என்று விளித்துப் பேசுவதை அவரது ஸ்டைலாக ஆக்கியிருக்கிறார் இதில் என்ன தவறு இருக்கிறது.

சரக்கடித்துவிட்டு பேசுகிறார் என்று சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறோம். இன்று சரக்கடிப்பது என்பது பேஷனாகிவிட்டது. சில காலங்களுக்கு முன்னர் வரை வீட்டிற்கு சரக்கடித்து விட்டுப் போனால் பத்திரகாளியாக மாறும் இல்லத்தரசிகள் இன்று குறைந்து விட்டார்கள். எனக்கு தெரிந்த சில வீடுகளில் இப்போது இல்லத்தரசிகள் ஆம்லெட் போட்டுக் கொடுக்கிறார்கள். சில வீடுகளில் வாரத்தில் இரண்டு நாள் வீட்டிலேயே குடிக்க அனுமதி உண்டு.  யார் குடிக்கவில்லை... இவர் மட்டும்தான் குடிக்கிறார் என்பது போல ஸ்டேட்டஸ் போடும் நம்மில் பலர் குடிக்கத்தானே செய்கிறார்கள். எதோ நாமெல்லாம் உத்தமர்கள் போல ஒரு மனிதனைக் கேலிக்குரியவராக ஆக்குவதில் என்ன நியாயம்?

திராவிட கட்சிகள் நமக்கு என்ன செய்தன... இல்லை மற்ற கட்சிகள் மக்களுக்காக உழைத்தனவா... இதோ இதே விஜயகாந்த் வந்தால் மட்டும் என்ன செய்து விடப்போகிறார்? என்பதை நாம் நன்கு அறிவோம். அரசியல்வாதியாய் வாரிசு அரசியலை எதிர்க்கும் அவர் மச்சினனுக்காக காரியங்கள் செய்து காய் நகர்த்தத்தான் செய்கிறார். இது அரசியல்வாதியாய் அவருக்குள் வந்திருக்கும் குடும்ப வியாதி. இப்போது அரசியல் சாக்கடைக்குள் விழுந்தவன் எல்லாருமே உத்தமன் இல்லை என்பதை அறிவோம். இதைப் பற்றி இங்கு பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. 

பொதுவெளிகளில் அவரது செய்கைகள் தவறாக இருக்கலாம்... காரணம் அவருக்கு வரும் அதீதமான கோபம்தான். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பது பழமொழி, அவரது குணம் நல்ல குணமாகத்தான் இருக்கும் என்று நம்புவோம். விஜயகாந்தைப் பொறுத்தவரை பொது இடங்களில் அவரது கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை. அதுவே அவருக்கு மிகப்பெரிய மைனஸாக மாறிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்காக ஒரு தனி மனிதனை வாய்க்கு வந்தபடியெல்லாம் கிண்டல் கேலி பண்ணுவது என்பது தவறு. அவர் தனது கோபத்தை கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். தன் கோபத்தைக் கட்டுப்படுத்தும் பட்சத்தில் எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கலாம்.

எங்க தொகுதி மக்களெல்லாம் சிவகங்கையில் இருந்து தில்லியைப் பார்ப்பேன் என்று சென்ற முறை சொல்லி தனது சுற்றம் பார்த்த இந்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்களின் வாரிசான சிநேகத்தின் சிநேகமாய்... கனியுடன் காதல் மொழி பேசிய அடாவடி கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்களிக்காமல் நம்ம தொகுதி வளர்ச்சிக்காக யார் பாடுபடுவார்கள் என்று நினைக்கிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள்.

மொத்தத்தில் கலைஞரா ஜெயலலிதாவா ராமதாஸா வைகோவா விஜயகாந்தா என்றெல்லாம் பார்க்காமல் நமக்கு இவன் இதற்கு சரிப்பட்டு வருவான்னு அவனுக்கு வாக்களியுங்கள்.

இந்தப் பதிவு சிலருக்குப் பிடிக்கலாம் பலருக்குப் பிடிக்காமல் போகலாம்...  என்னோட மனதில்பட்டதை பகிர்ந்திருக்கிறேன்... அனைவருக்கும் பிடிக்க வேண்டும்  என்பதற்காக அல்ல... 
-'பரிவை' சே.குமார்.