முந்தைய பதிவுகளைப் படிக்க...
------------------------------------------------
50. காதலுக்கு கண் இல்லை
முன்கதைச் சுருக்கம்
கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதலை வெளிச்சமிட ராம்கிக்கு புவனாவின் சித்தப்பாவாலும் அவளைக் கட்டிக்கொள்ளத் துடிக்கும் ரவுடி மணியாலும் கத்திக் குத்து விழ, காதலின் வேகத்தில் சித்தப்பாவை எதிர்க்கும் புவனா, அவனைக் காணும் ஆவலுடன் கல்லூரிக்கு அண்ணனுடன் பயணிக்கிறாள். அங்கு ராம்கி இல்லாததால் கண்ணீரோடு காத்திருக்கிறாள்.
நண்பர்கள் சங்கமத்தில் ராம்கி கலக்க, அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
"இப்ப எப்படிடா இருக்கு?" என சரவணன் கேட்க, "வலி குறைஞ்சிருக்கா?" இது சேவியர், "அம்மா ரொம்பத் திட்டுனாங்களா?" என அண்ணாத்துரையும் "இன்னைக்கு லீவு எடுக்க வேண்டியதுதானே? எதுக்கு வந்தே" என பழனியும் கேட்டனர்.
"டேய்... டேய் இருங்கடா... எல்லாரும் மொத்தமாக் கேட்டா எப்படிடா... வலி இருக்குதுடா... அம்மாதான் ரொம்ப திட்டுறாங்க... வரும்போது கூட ரொம்ப பேசிட்டாங்க... அண்ணன்தான் அவங்களை சத்தம் போட்டுச்சு...லீவு போட்டுட்டு இருந்தா வீணாவுல அம்மா திட்டிக்கிட்டே இருப்பாங்க... அதான் கிளம்பி வந்துட்டேன்..."
"ம்... நல்லவேளைடா... கத்தி வயித்துல எறங்கியிருந்தா என்ன ஆகியிருக்கும்... நாங்க அங்க வராட்டி அவன் கண்டிப்பா திருப்பிக் குத்தியிருப்பான்... ஏதோ நல்ல நேரம்..." என்ற அறிவு அவனது கையில் இருந்த கட்டைத் தடவினான்.
"டேய்... புவனா போன் பண்ணுச்சா...?" அண்ணாத்துரை மெதுவாகக் கேட்டான்.
"ம்... பண்ணுச்சு... அதுக்கு ஏண்டா சொன்னீங்க... ஒரே ஒப்பாரி..."
"என்னடா அவ பதறிப் போயி போன் பண்ணியிருப்பா... ஒப்பாரின்னு சொல்றே... நாந்தான் மல்லிகாவுக்குச் சொன்னேன். அவ புவனாவுக்குப் போன் பண்ணியிருப்பா..." என்றான் சரவணன்.
"ம்... உள்ளதே அம்மா கத்திக்கிட்டு இருக்கு... இதுல இவ வேற போன் போட்டு அழுகிறா... என்னைய திட்டுன அம்மா அவளையும் சேர்த்துத் திட்டுறாங்க..."
"அதுக்காக அவ உயிரே நீதான்னு இருக்கா... அழுகாம என்னடா பண்ணுவா.. நீ அம்மாகிட்ட எதுவும் சொல்லலையில்ல..." கலவரத்துடன் கேட்டான் பழனி.
"அவங்க பேசுன பேச்சுக்கு நீங்க எனக்கு எப்படியோ அப்படித்தான் அவளும்... யாருக்காகவும் அவளை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்..."
"வெரிகுட்... சரியாத்தான் சொல்லியிருக்கே... இப்பத்தான் வைரவன் கூட வந்தா... இங்க வந்து விசாரிச்சாங்க... அவ பேசலை... ஆனா ராத்திரியெல்லாம் தூங்காம அழுதுக்கிட்டே இருந்திருப்பா போல... பாவம்டா... அவளைப் பார்த்து பேசிட்டு வா..." என்றான் சரவணன்
"வைரவன் இன்னும் போகலையில்ல... வாங்க கிளாஸ்க்குப் போயிடலாம்..."
"டேய் அவளைப் பார்த்துப் பேசிட்டு வாடான்னு சொல்றோம்... கிளாஸ்க்குப் போவோம்ன்னு சொல்றே... என்னடா நினைச்சிக்கிட்டு இருக்கே... உனக்கு அடிபட்டதுக்கு அவ கலங்கி நிக்கிறாடா..." அண்ணாத்துரை கத்தினான்.
"நீங்க வாறீங்களா இல்ல நான் கிளாஸ்க்குப் போகவா?"
"ஏய் என்னடா ஆச்சு உனக்கு? எப்பவும் என்னோட புவியின்னு பேசுவே... இன்னைக்கு என்னடான்னா... மச்சான் அவதான் உனக்கு எல்லாமே புரிஞ்சிக்க... இப்பவே வான்னு கூப்பிட்டா எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உன் பின்னாடி ஓடி வந்துருவா... ராத்திரி அவங்க வீட்ல என்ன நடந்திருக்கும்ன்னு அவ முகத்தைப் பார்த்தாலே தெரியுது... பார்த்து அவகிட்ட ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசிட்டு வாடா... ப்ளீஸ்" கெஞ்சலாகக் கேட்டான் சரவணன்.
"அவதான் எனக்கு எல்லாம்... ஆனா அம்மா பேசுறதைக் கேக்கும் போது தேவையில்லாம ஒரு பொண்ணோட மனசைக் கலைச்சு... இப்போ அவளால அம்மா, அண்ணன், அக்கான்னு எல்லாரையும் கஷ்டப்படுத்தனுமான்னு ஒரே யோசனையா இருக்குடா... பேசாம ரெண்டு பேரும் அவங்க அவங்க குடும்பச் சூழலைப் பார்த்து விலகிடுறது நல்லதோன்னு தோணுதுடா.."
"ஏய்.... என்னடா பேசுறே? இதை அவ மனசைக் கெடுக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்... இப்ப யோசிச்சு... அப்ப மூணு வருசமா அவ கூட சுத்துனது..." கத்தினான் சரவணன்.
"எதுக்குடா இப்ப கத்துறே... குடும்பச் சூழல்ன்னு வரும் போது காதலெல்லாம் தள்ளித்தானேடா நிக்கிது... எனக்கும் அப்படியே போகட்டும்... " கண் கலங்கினான்.
"மயிரு.. என்ன மசுத்துக்குடா அவளை காதலிச்சே... இன்னைக்கு இம்புட்டு யோசிக்கிற நாயி அன்னைக்கு என்ன பண்ணினே... புடுங்கிக்கிட்டா இருந்தே... அவ முகத்தைப் பார்த்துட்டு வா... அப்புறம் நீ முடிவெடுக்கலாம்..." கோபத்தில் வார்த்தைகளை வீசினான் அண்ணாத்துரை.
"இல்லடா... அது..." எதோ சொல்ல வந்தவன் "ராம்கி எப்படியிருக்கீங்க? அடி பலமா?" எனக் கேட்டபடி வந்த மல்லிகாவைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தி "இல்ல... கையில பட்டதால காயம் அதிகமில்லை... " என அவளுக்குப் பதில் சொன்னான்.
"ம்... அவனுகளுக்கு எம்புட்டு திமிரு... நீங்க ஏன் இவங்களை விட்டுட்டுப் போனீங்க..."
"இல்ல அந்த மணி எனக்குத் தெரிஞ்சவன்தான்னு போனேன்... ஆனா அங்க புவனாவோட சித்தப்பா வந்துட்டாரு... அவரு பேசிக்கிட்டுத்தான் இருந்தாரு... இவன்தான் கத்தி எடுத்துட்டான்..."
"இனிமே எப்பவும் இவங்க கூடவே இருங்க... ஆமா புவனாவைப் பார்த்தீங்களா?"
"இ... இல்ல..."
"பாவங்க... ரொம்ப பதறிப் பொயிட்டா... உங்க கூட பேசியிருப்பான்னு நினைக்கிறேன்... இப்ப கூட லேடீஸ் ரூம்ல உக்காந்து அழுதுக்கிட்டுத்தான் இருக்கா.... நாங்க எம்புட்டோ சொல்லியும் கேக்கலை... உங்களைத் தேடி இங்க வரத்தான் அவளுக்கு ஆசை... வைரவன் இன்னும் போகலைங்கிறதால தவிப்போட உக்காந்திருக்கா... நான் போயி அவளைக் கூட்டிக்கிட்டு வாறேன்..." என்றபடி கிளம்ப வைரவன் அவர்களருகே வந்தான்.
"வாங்கண்ணே..." என்றான் ராம்கி.
"என்ன ராம்கி... எப்ப வந்தே? மொதல்ல நானும் புவனாவும் வந்தோம்.. சாரிடா... நேத்து நடந்ததுக்கு.."
"விடுங்கண்ணே... நடக்கணுமின்னு இருந்திருக்கு... நடந்திருச்சு... அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க..."
"இல்ல புவனா பேரைச் சொல்லி உன்னைய அடிச்சிட்டாங்க... அந்த மணிப்பய தேவையில்லாம எல்லா விசயத்துலயும் மூக்கை நுழைக்கிறான். எங்க சித்தப்பாவையும் சத்தம் போட்டு விட்டுட்டேன்... நீ எதுவும் நினைச்சுக்காதேடா...." கைகளைப் பிடித்தபடி வைரவன் பேசினான்.
"அண்ணே.... நான் எதுவும் நினைக்கல.... இதனால புவனாவுக்கு எதுவும் பிரச்சினையில்லையே? பாவம் எங்கூட பழகுனதால அவ... அவங்களுக்கு வீட்ல எதுவும் பிரச்சினை வந்துடாம பாத்துக்கங்கண்ணே..."
"ம்... அவ ஒரு முடிவெடுத்தா மாறவே மாட்டான்னு எல்லாருக்கும் தெரியும். காலையில சித்தப்பாவைக்கூட வாய்யா போய்யான்னு பேசிப்புட்டா... அம்மாவுக்குத்தான் கோபம்... சரி எல்லாம் சரியாயிடும்..."
"ம்... எதுக்கு அவங்க தேவையில்லாம சித்தப்பாக்கிட்ட சண்டை போட்டாங்க..."
"எல்லாம் தேவையாத்தான் போட்டிருப்பா... அவ தேவையில்லாம எதுவும் செய்யமாட்டா... சரி பாத்துக்க... இனி அந்த மணிப்பய உங்கிட்ட வம்புக்கு வராம என்ன பண்ணனுமோ அதை நான் பண்ணிக்கிறேன்... சரி வாறேன்டா... பை" என்று வைரவன் கிளம்ப "என்னடா ரொம்ப மாறிட்ட மாதிரி பேசிட்டுப் போறாரு..."
"டேய் உங்க காதலுக்கு மச்சான் பச்சைக்கொடி காட்டுறாரு போல..." சிரித்தான் அறிவு.
"சும்மா போடா இவராவது ஏத்துக்கிறதாவது... அடிபட்டதால இப்படி பேசிட்டுப் போறாரு போல..."
"அவரு பேசினதை கவனிச்சியா சித்தப்பாக்கிட்ட சண்டை போட்டதைக் கூட அவ தேவையில்லாம எதுவும் பேச மாட்டா... எல்லாம் தேவையாத்தான் கேட்டிருப்பான்னு சொன்னாரு பாத்தியா... அப்ப புவனா உன்னைய காதலிக்கிறது இவருக்கு தெரிஞ்சாச்சு... அப்புறம் இவரு உங்க லவ்வுக்கு வில்லனா வர வாய்ப்பில்லை..." என்றான் அண்ணாத்துரை.
"ஆனா உன்னோட காதலுக்கு இப்ப நீதான் வில்லனாகப் பாக்குறே?" என்று சிரித்தான் சரவணன்.
"சரி வாங்கடா கிளாஸ்க்குப் போகலாம்..."
"புவனாவைக் கூட்ட மல்லிகா கூட்டப் போயிருக்கா... அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்..."- சேவியர்
"வந்தா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவாடா... உள்ள பிரச்சினையில இதுவேற பிரச்சினையாகும்டா..."
"என்னடா பெரிய பிரச்சினை... நீதான் உயிருன்னு இருக்க அவளைவிட உனக்கு வேறென்ன வேணும்... பிரச்சினை ஆகட்டும்... அப்பத்தான் ஒரு தீர்வு கிடைக்கும்... அம்மா பாவம்... அக்கா பாவமெல்லாம் மூட்ட கட்டிட்டு புவனாவுக்கு நல்ல காதலனா இருக்கப்பாரு... நீ அடிபட்டு செத்தாக்கூட அம்மா, அக்கா, அண்ணா, ஏன்... உங்கூட உயிராப் பழகுறோமே நாங்க எல்லாருமே அழுதுட்டு கொஞ்ச நாள்ல கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவோம்... ஆனா அவ கண்டிப்பா செத்துருவா... புரிஞ்சிக்க... எங்களைப் பொறுத்தவரை மத்தவங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் கவலை இல்லை... ஏன் எங்களுக்கே இதால பிரச்சினை வந்தாலும் கவலையில்லை... நீயும் தங்கச்சியும் சேர்ந்து சந்தோஷமா வாழணும்... அதுதான் எங்க ஆசை... அதுக்காக நாங்க என்ன வேணுமின்னாலும் செய்வோம்..." அண்ணாத்துரை உருக்கமாகப் பேசினான்.
சற்று நேரத்தில் மல்லிகாவுடன் அவர்களை நோக்கிப் புவனா வர, அவளைப் பார்ப்பதைத் தவிர்க்கப் பார்த்த ராம்கியின் மனசு கண்களைக் கட்டுப்படுத்த நினைத்து தோற்றுப் போக, அவளை நோக்கினான் தூக்கமிழந்து அழுதழுது சிவந்த கண்களும் வீங்கிய முகமுமாக வந்தவளைக் கண்டதும் உடைந்தான்.
"டேய்... அவள அழுகாதேன்னு தேத்துவேன்னு பார்த்தா... நீ அழுகுறே... இப்பத்தான் சொன்னே.... எல்லாத்தையும் விட்டுறலாம்ன்னு... அப்புறம் எதுக்கு அழுகிறே... ஆம்பிளைச் சிங்கமா காதல் வேண்டாம்ன்னு சிரிச்சிக்கிட்டே சொல்லிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே..." அண்ணாத்துரை குத்திக்காட்டினான்.
"முடியலடா... என்னோட புவியப் பாத்ததும் எல்லாம் மாறிப்போச்சுடா..." கண்ணீரோடு சொன்னான்.
அவர்கள் அருகே வரும்போது புவனாவை கண்ட்ரோல் பண்ணியபடியே மல்லிகா வர, "ராம்..." என்று உடைந்தாள் புவனா.
"புவி..."
"சாரிப்பா... என்னாலதானே உனக்கு இப்படி.." அழுதாள்.
"ஏய்.. நீ என்ன பண்ணுவே... நடக்கணுமின்னு இருந்திருக்கு... விடு எல்லாம் நல்லதுக்கேன்னு நினைப்போம்..." என்று அவளை ஆறுதல் பண்ண, கையைப் பிடித்துப் பார்த்தவள் சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவனைக் கட்டிக் கொள்ள, அவனது நண்பர்கள் அனைவரும் திடுக்கிட்டனர்.
(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
2 எண்ணங்கள்:
திடீர் திருப்பங்களுடன்,சுமுகமாகிப் போகிறது.பார்க்கலாம்,எப்படி முடிக்கிறீர்கள் என்று!(கொஞ்சம் வேலை.இந்த வாரம் முழுவதும் இணையத்தில் இணைய முடியவில்லை.இன்றிலிருந்து மறு வாரம் வரை தொடரலாம்.)
திருப்பத்துடன் தொடர் ரசித்த வண்ணம்!
கருத்துரையிடுக