மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014கிராமத்து நினைவுகள் : மகா சிவராத்திரி

சின்ன வயதில் சிவராத்திரி என்றால் மறுநாள் கோவில்களில் காவடி, பூக்குழி எல்லாம் பார்த்துவிட்டு பொரி உருண்டையும் பலகாரமும் வாங்கிக் கொண்டு வருவது என்பதாகத்தான் கழியும்.

எங்க ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீகூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடக்கும். பள்ளியில் படிக்கும் போது இரவு நாடகம்(கூத்து) பார்த்துவிட்டு பூக்குழி பற்றவைப்பதையும் பார்த்து சாமி கும்பிட்டு வரலாம் என வயல்களுக்குள் நடந்து குறுக்குப் பாதையில் கோவிலை அடைந்துவிடுவோம்.


மறுநாள் சாமி கும்பிடக்கூட இடம் கிடைக்காது என்பதால் இரவே சாமி கும்பிட்டு விட்டு கூத்து நடக்கும் இடத்திற்குச் சென்று சிறிது நேரம் வேடிக்கை பார்ப்போம். இரவு 10 மணிக்கு ஆர்மோனியம் பின்பாட்டு பாட ஆரம்பமாகும் கூத்தில் முதலில் பபூன் வந்து சில கதைகளைச் சொல்லி பல இரட்டை அர்த்த வசனங்கள் பேசிச் செல்வார். (முன்பைவிட தற்போது கரகாட்டத்தில் போல கூத்திலும் இரட்டை அர்த்த வசனங்களை எல்லாரும் பேசுகிறார்கள்) பின்னர் டான்ஸ் வந்து நாலு பாட்டை ஆர்மோனியத்துடன் அரையும் காலுமாக சின்னாபின்னமாக்கி ஆடுவார். பின்னர் பபூனும் இணைய மோதலில் ஆரம்பித்து காதல்வரை போய் அவர்கள் கிளம்பிவிடுவார்கள்.

இரவு பனிரெண்டு மணிக்கு மேல் கோவில் முன்பாக மறுநாள் பூ இறங்குவதற்காக விறகுகள் போட்டு பூக்குழி வளர்ப்பார்கள். சாமிக்கு தீப ஆராதனை பார்த்து மரங்களை கும்மலாக அடுக்கி அதனடியில் சூடம் கட்டிகட்டிகளாக வைத்து தீயைப் பற்ற வைப்பார்கள். மெதுவாக எரிய ஆரம்பித்து பின்னார் ஜூவாலை விட்டு எரிய ஆரம்பிக்கும். மறுநாள் காலை பூக்குழி இறங்கும் கண்ணப்பய்யா காவடி வரும் போதுதான் அந்தத் தீயை உடைத்துப் பரவி விடுவார்கள். நாங்களும் மெதுவாக வீடு நடையைக் கட்ட ஆரம்பிப்போம்.

கல்லூரியில் படிக்கும் போது ஒரு குழுவாக சைக்கிளில் கிளம்பிவிடுவோம். குறுக்காக நடந்து போனால் சுலபமான தூரம்தான்.... சைக்கிள் என்றால் தேவகோட்டையை தொட்டுத்தான் செல்ல வேண்டும். சைக்கிளில் போவலாம் என்று முடிவெடுத்து வந்தால் அம்மா இந்த இருட்டுக்குள்ள எதுக்குடா தேவையில்லாம என சப்தம் போடுவார்கள். சில தடவை பயணம் தடைபட்டு விடும். பல தடவை நீ சும்மா இரும்மா... பொயிட்டு இப்ப வந்துருவோம்... எல்லாருந்தானே போறோம்ன்னு கிளம்பிடுவோம்.

கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் கோவிலில் கூத்து என்றால் முதலில் கம்மங்காடு என்ற ஊரில் இருந்து அம்மனின் உறவினரர் ஒருவர் வந்து மேடையில் எதாவது பாடியோ ஆடியோ செல்வார். இது எப்பவும் கடைபிடிக்கும் முறையாகும். காரணம் அம்மனின் வரலாற்றுப்படி அவர் அந்த ஊருக்கு கூத்தாட வந்தவர்தான்... கூத்து நடந்து கொண்டிருக்கும் கண்மாய்ப் பக்கம் சென்று வர, கூட வந்த அண்ணன் சப்தம் போட்டதால் தனது சேலையால் கண்மாய்க்குள் இருந்த மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டதாகவும் அந்த மரத்திலேயே அவருக்கு சிலை செய்ததாகவும் சொல்வார்கள். இப்பவும் அம்மனின் கழுத்து ஒருபுறம் சாய்ந்திருக்க, அலங்காரம் இல்லாத நேரத்தில் பார்த்தால் கழுத்தில் கயிறு இருக்கும். 

கல்லூரியில் படிக்கும் போது பரிட்சைக்கு நான் படிக்கச் செல்லும் இடம் இந்தக் கோவில்தான்.... மிகவும் அமைதியாக இருக்கும்... மனசுக்கு ஒரு நிறைவைக் கொடுக்கும் இடமாக இருக்கும். இங்கு ஐயனார், கருப்பர், காளி, உளி வீரன், பிள்ளையார், முனீஸ்வரர் என தனித்தனியாய் கோவில்கள் உண்டு. படிக்கும் போது பாஸாக வேண்டும் என அம்மன் கோவிலுக்குப் பின்புறம் இருக்கும் ஈச்ச மரத்தில் முடிச்சிப் போட்டு வைப்பார்கள். புதனும் சனியும் கோவிலுக்கு சுற்று வட்டத்தில் இருந்து அதிகமான மக்கள் கூட்டம் வரும்.

சரி சிவராத்திரிக்கு வருவோமா... மறுநாள் காலையில் கோவிலுக்குப் போனால் ஒவ்வொரு காவடியாக பார்த்து கடைசியில் வரும் தானாவயல் காவடிக்காக காத்திருப்போம். ஏனென்றால் முப்பது நாப்பது காவடிகள் ஒன்றாக வரும்... காவடி ஆட்டம்... கால் போட்டு எல்லாரும் ஒரே மாதிரியாக... சும்மா தூள் கிளப்பிவிடுவார்கள். ஆனால் மதியம் ரெண்டு மணி ஆயிடும்... தானாவயல் காவடி வந்துவிட்டால் கூட்டம் கிளம்பிவிடும். இதற்கு இடையில் தண்ணீர்ப் பந்தலில் குடிக்கும் மோர் மற்றும் பானக்கத்திற்கு அன்று மட்டும் அளவில்லை... வயிறு குறையக் குறைய நிரப்பிக் கொண்டே இருப்போம்.

பின்னர் எங்க ஊரில் இருந்து மாமா ஒருவர் கீரணிக் கருப்பருக்கு காவடி கட்ட ஆரம்பிக்க இரவு ஊரில் அவங்க வீட்டில் சாமி அழைப்பு, ஆட்டம் எல்லாம் பார்த்து சாப்பிட்டு கூத்தாடிப் பெரியநாயகி அம்மன் கோவில் செல்வோம்... திருமணத்திற்குப் பிறகு நான் வளர்கிறேனே மம்மி என்ற கணக்கில் சைக்கிள் எல்லாம் வண்டியாகிவிட்டது. காலையில் எங்க ஊரில் இருந்து கீரணிக்கு காவடியுடன் நடக்க ஆரம்பிப்போம். கிட்டத்தட்ட பத்துப் பணிரெண்டு கிலோ மீட்டர் நடந்து காவடி செலுத்தி பின்னர் திரும்பி வருவோம்...

ஊரில் இருக்கும் வரை கீரணிக்கு காவடியுடன் செல்வதைத் தவற விடுவதில்லை. மாமாவும் மாப்பிள்ளை நீங்க நாளைக்கு வாறீங்க என்று அழைத்து விடுவார். கோவில்கள், திருவிழாக்கள், சந்தோஷங்கள் எல்லாம் துறந்து வீடு... வீடு விட்டா அலுவலகம் என்று எந்தவித சந்தோஷங்களும் இன்றி வாழ்க்கை பயணித்துக் கொண்டிருக்கிறது. ம்... அது ஒரு கனாக்காலம்....

நேற்றே பகிர நினைத்த பதிவு வெளியே சென்று விட்டதால் இன்று பகிருகிறேன்...

-கிராமத்து நினைவுகள் தொடரும்...
-'பரிவை' சே.குமார். 

13 கருத்துகள்:

 1. நான் வளர்கிறேனே மம்மி என்றதுடன் இனிய நினைவுகள் ரசிக்க வைத்தது... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. மிக அருமையான பகிர்வு குமார்.

  பதிலளிநீக்கு
 3. நினைவுப் பகிர்வு நன்று.சிவராத்திரி நினைவுகள் பசுமரத்தாணி போல் என்னிலும் உண்டு.பெருமூச்சு மட்டுமே எஞ்சி.............எங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பனவு எதற்கும் இல்லை.போர் சூழ்ந்த தேசம்.ஐந்து ஆண்டுகள் கழிந்தும்,சூனியம் போல் காட்சியளிக்கும் எங்கள் கிராமம்.ஐந்து மைல்களுக்கப்பால் வயலும்,கடற்கரையும் சங்கமித்து,ஐயனார் குடி கொண்ட கிராமத்தில் "அந்தக்" காலத்தில் சிவராத்திரி விரதம்/விழிப்பு!இன்று..............

  பதிலளிநீக்கு
 4. சூப்பர் குமார்..எனக்கும் பழைய நினைவுகள் வந்து போகின்றன.

  பதிலளிநீக்கு
 5. ஒவ்வொரு வருட சிவராத்திரி நேரத்தில் அய்யா TMS,மதுரை அரசமரம் பிள்ளையார் கோவில் விழாவில் வந்து பாடியது இன்னும் காதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது !ஹும்,அந்த சுகம் இன்று வருமா ?
  த ம 4

  பதிலளிநீக்கு
 6. பலவிதமான ஊர் நினைவுகள் நினைவுக்கு வந்து போகின்றது

  பதிலளிநீக்கு
 7. வெட்டி ப்ளாக்கர்ஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. மலரும் நினைவுகள்....

  பல சமயங்களில் நினைவுகளில் மட்டும் தான் வாழ்கிறோமோ என்று தோன்றிவிடுகிறது.......

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...