மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 19 பிப்ரவரி, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 51

முந்தைய பதிவுகளைப் படிக்க...


------------------------------------------------

51.  காதல் சக்கரம் முறியுமா?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதலை வெளிச்சமிட ராம்கிக்கு புவனாவின் சித்தப்பாவாலும் அவளைக் கட்டிக்கொள்ளத் துடிக்கும் ரவுடி மணியாலும் கத்திக் குத்து விழ, காதலின் வேகத்தில் சித்தப்பாவை எதிர்க்கும் புவனா,  அவனைக் காணும் ஆவலில் வந்தவள் காதல் வேகத்தில் அவனைக் கட்டிக்கொண்டாள்.

ல்லூரி வளாகத்துக்குள் ஒரு மாணவனும் மாணவியும் கட்டிப் பிடித்துக் கொள்வது என்பது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும் என்ற நிலையில் புவனா யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் ராம்கியை கட்டிப் பிடித்தது கொண்டதைப் பார்த்ததும் மற்றவர்கள் தவித்தார்கள்.

"ஏய் புவி... இது காலேஸ்... பர்ஸ்ட் கண்ட்ரோல் யுவர் செல்ப்... யாராவது பாக்கப் போறாங்க..." கத்தினாள் மல்லிகா.

"டேய் ராம்கி... " அதட்டினான் சரவணன்.

சூழலை உணர்ந்து படக்கென்று தன்னை விடுவித்துக் கொண்ட புவனா, "சாரி..." என்றபடி விலகினாள். ராம்கி சுற்றி ஒருமுறை பார்த்தான் பல கண்கள் அவர்கள் மீது இருந்ததைப் பார்த்ததும் வெட்கமாக இருந்தது. டிபார்ட்மெண்ட் பக்கம் பார்வையைச் செலுத்த ஐயாவும் இன்னும் சில ஆசிரியர்களும் பார்ப்பதைப் பார்த்ததும் அவனுக்கு என்னவோ போலாகிவிட்டது.

"என்ன புவி இது... எனக்கு ஒண்ணுமில்ல... இப்ப என்ன பண்ணியிருக்கே நீயி... யோசிச்சுப்  பாரு...  அம்புட்டுப் பேரும் நம்மளையே பாக்குறாங்க..." மெதுவாகச் புவனாவைக் கடிந்து கொண்டான்.

"சாரி... உங்களைப் பார்த்ததும் நேத்துல இருந்து கண்ட்ரோல் பண்ணி வச்ச எம்மனச கண்ட்ரோல் பண்ண முடியலை... எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்கப்பா.. உணர்ச்சி வசப்பட்டு இப்படிப் பண்ணிட்டேன்..." என்றாள்.

"இருந்தாலும் நீ..." என ராம்கி எதோ பேச வாயெடுக்க "இப்ப என்னடா நடந்து போச்சுன்னு அந்த புள்ளய சத்தம் போடுறே...  ஏதோ உம்மேல உள்ள பாசத்துல அப்படிப் பண்ணிட்டா.... அதுக்கென்ன இப்போ... பிரின்ஸ்பால் கூப்பிட்டா பதில் சொல்லுங்க... என்ன தலையவா எடுக்கப் போறாங்க... விட்டுத் தள்ளுடா... எப்புடியும் நாளைக்குத் தெரியப்போறது இன்னைக்கே தெரிஞ்சாச்சு... புவனா நீ கிளாஸ்க்குப் போ... மதியம் பேசிக்கலாம்... வாடா போகலாம்..." என்று சூழலை மாற்றி வகுப்பிற்கு அழைத்து வந்தான் அண்ணாத்துரை.

வகுப்புக்கள் நடந்து கொண்டிருக்கும் போது ராம்கிக்கும் புவனாவுக்கும் முதல்வரிடம் இருந்து தனித்தனியே அழைப்பு போனது. இருவரும் முதல்வர் அறைக்குச் செல்ல அங்கு அவர்களின் துறைத் தலைவர்களும் இருந்தனர். இருவரும் ஒன்றும் பேசாமல் போய் நிற்க, ராம்கியின் துறைத்தலைவர்தான் பேச்சை ஆரம்பித்தார்.

"என்ன தம்பி... இது படிக்கிற இடம்.. காலையில நீங்க நடந்துக்கிட்டது...." பேச்சை நிறுத்தி ராம்கியை ஏறிட்டார்.

"இல்ல சார்... அது... வந்து... வந்து..."

"ஒரு பொம்பளப்புள்ள... அதுவும் நல்லாப் படிக்கிற பொண்ணு இப்படி எல்லாரும் பாக்கிற மாதிரி... நடந்துக்கிறது முறையில்லயில்லம்மா...." புவனாவைப் பார்த்தார்.

"ராம்கிக்கு நடந்த ஒரு இன்சிடென்ட்டால... நான் அப்படிப் பண்ணிட்டேன்... இதுல ராம்கியோட தப்பு எதுவும் இல்லை... என்ன தண்டனையின்னாலும் எனக்கே கொடுங்க சார்..."

"இங்க பாரும்மா... இது படிக்கிற இடம்... தப்புப் பண்ணுனவங்க வேற யாருமா இருந்தா இந்நேரம் சஸ்பெண்ட் பண்ணி பேரண்ட்டைக் கூட்டியாரச் சொல்லியிருப்பேன்... நீங்க ரெண்டு பேருமே நல்லாப் படிக்கிறவங்க... கல்சுரல் ஆக்டிவிடீஸ்ல காலேசுக்கு பெருமை சேர்த்திருக்கீங்க... நீங்களே இப்படிப் பண்ணினா..."

"சாரி சார்... எங்க தப்புத்தான் சார்... தண்டனையை எனக்குக் கொடுங்க... புவனாவுக்கு தண்டனை கொடுத்த அது அவங்க படிப்பைப் பாதிக்கும் சார்..." என்றான் ராம்கி.

முதல்வர் சிரித்தபடி "நல்ல புள்ளைங்கப்பா நீங்க... மாத்தி மாத்தி தண்டனையை எனக்குக் கொடுங்க... எனக்குக் கொடுங்கன்னு கேக்குறீங்களே... நான் இன்னும் தண்டனை பற்றி முடிவே பண்ணலையே... இதுதான் முதலும் கடைசியும்... இனிமே இதுபோல நடந்தா நான் சிவியரா ஆக்சன் எடுப்பேன். அப்புறம் மன்னிப்பே கிடையாது. உங்களுக்கு  தண்டனை கொடுக்க வேண்டாம்கிறதுதான் உங்க துறைத்தலைவர்களோட வேண்டுதலும்... உங்க மேல எல்லாருக்கும் மதிப்பு இருக்கு... அதை காப்பாத்த வேண்டியது உங்க கையிலதான் இருக்கு... போங்க..."

"ரொம்ப நன்றி சார்...." என்றபடி இருவரும் வெளியே வந்தனர். "சாரி என்னாலதான் உங்களுக்கும் கெட்ட பெயர்" என்றாள் புவனா.

"இதுல என்ன உனக்கு எனக்குன்னு பிரிச்சிப் பேசுறது... உனக்கு ஒண்ணுன்னா எனக்கும்தான் அதுல பங்கிருக்கு... சரி எதுவும் நினைக்காம கிளாஸ் போ... மதியம் பேசிக்கலாம்" என்று சொல்ல, அவர்களைக் கடந்த ஒருவன் சக மாணவனிடம் " சே... இப்படிப் பிகரெல்லாம் நம்மக்குக் கிடைக்க மாட்டேங்குது மாப்ளே... கிடைச்சிருந்தா நமக்கும் இதுபோல அதிர்ஷ்டம் அடிச்சிருக்கும்... ம் அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்... நாளைக்கு நானும் கையில கட்டுப் போட்டுக்கிட்டு வந்தா வந்து ஒத்தரம் கொடுப்பாளா?" என்று நக்கலாகக் கேக்க, "டேய்" என ராம்கி அவனை நோக்கிப் பாயப் போக, புவனா அவனைத் தடுத்து "வேணாம் ராம்... இப்போ எதுவும் வேணாம்... யார் எது பேசினாலும் நாம பொறுமையா போக வேண்டிய நேரம் இது... இல்லைன்னா அவனுக்கு நானே பதில் சொல்லியிருப்பேன்... இப்ப எதாவது பேசினா மறுபடியும் பிரின்ஸ்பால் முன்னாடி நிக்கணும்..." என்றதும் இருவரும் அவரவர் வகுப்பறை நோக்கி நடந்தனர்.

மாலை வீட்டு வாசலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த தமிழய்யா, காபி கொடுத்த மனைவியிடம் "இன்னைக்கு நம்ம புள்ளங்க காலேசுல பேரைக் கெடுத்துக்கிருச்சுங்க...." என்றார்.

"மொட்டையா நம்ம புள்ளங்கன்னா யாரு... அப்படி என்ன பண்ணுச்சுங்க..?"

"அட நம்ம புவனாவும் ராமுந்தான்... புவனாவுக்கு வேண்டியவங்க ராமுவை அடிச்சிட்டாங்க போல... அதைக் கேக்க வந்த இந்தப் பொண்ணு அவரைப் பாக்கவும் கட்டிப்புடிச்சிடுச்சு..."

"ஐயையோ... அப்புறம்..?"

"நல்லவேளை முதல்வர் கூப்பிடும் முன்னால நானே ரெண்டு பேரோட துறையிலயும் பேசினேன். அப்புறம் முதல்வர்கிட்டயும் பேசிட்டு வந்தேன். அவரு கூப்பிட்டு கண்டிச்சி விட்டுட்டாரு. இந்த விசயத்துல நான் பேசினது அதுகளுக்குத் தெரியாது. ரெண்டும் என்னோட முகத்துல முழிக்க சங்கட்டப்பட்டுக்கிட்டு என்னைய பாக்கவே இல்லை...."

"ஆத்தாடி... வீட்டுகளுக்குத் தெரிஞ்சா என்னாகப் போகுதோ?"

"எப்பவா இருந்தாலும் தெரிஞ்சுதானே ஆகணும்...  பிரச்சினை வர்ற மாதிரி இருந்தா நானே ரெண்டு பக்கமும் பேசலாம்ன்னு பாக்குறேன்..." என்றபோது வாசலில் வந்து நின்ற டிவிஎஸ் பிப்டியில் இருந்து நாகம்மா இறங்கினாள்.

"அடடே... வாங்கம்மா... என்ன இம்புட்டு தூரம்? உள்ள வாங்க" என்று ஐயா சொல்ல, வாங்கம்மா என்று அம்மாவும் வரவேற்றார். உள்ளே வந்து நாகம்மா அமர, ராசு வாசலிலேயே நின்றான். 

"அட உள்ள வாங்கய்யா... நம்ம வீட்டுக்குள்ள வர்றதுக்கு என்ன... ரெண்டு பேருக்கும் காபி கொண்டாம்மா"  என்ற ஐயா "தம்பி எப்ப ஊருக்குப் போறாப்ல?" என ராசுவிடம் கேட்டார்.

சேரில் நெளிந்தபடி அமர்ந்த ராசு, "அடுத்த வாரம் போறேனுங்கய்யா" என்றான்.

"என்னம்மா... நீங்க இவ்வளவு தூரம் வந்திருக்கீங்கன்னா எதாவது..." என்று இழுக்க, "எதுக்கு இங்க வரப்போறேன்... எல்லாம் அவனாலதான்..." என்று அதிரடியாக நாகம்மா ஆரம்பித்தாள்.

"அவனாலதான்னா... ராமாலயா... அந்தப் புள்ளைக்கு என்ன?"

"புள்ளயாம் புள்ள... அட ஏய்யா நீங்க வேற எவளுக்காகவோ எவனுக்கிட்டயோ கத்திக்குத்து வாங்கிக்கிட்டு வந்து நிக்கிது..."

ஐயா எதுவும் பேசவில்லை... "என்னது கத்தியால குத்திட்டாங்களா?" காபியோடு வந்த அம்மா கலவரமாய் கேட்டார்.

"ம்... கையில குத்திட்டானுங்க..." காபியை வாங்கியபடி சொன்னான் ராசு.

"அவதான் முக்கியம்ன்னு சொல்றான்யா... என்னையவே எதுக்குறான்யா... எப்பவும் ஐயாவூடு போறேன்னு சொல்லிட்டு அவகூட சுத்தியிருக்கான்... உங்களுக்கெல்லாம் தெரிஞ்சும் மறச்சிட்டீங்க..."

"இங்க பாருங்கம்மா... ரெண்டு பேரும் பழகுறது எனக்கு தெரிய வந்தப்போ நானும் கண்டிச்சி... ரெண்டு குடும்பத்துலயும் நானே பேசுறேன்னு சொன்னேன்... வெளிய தெருவ சுத்தக்கூடாதுன்னு சொன்னேன்... புள்ளங்களும் அப்படித்தான் இருந்தாங்க...ரெண்டு பேருமே படிப்புலதான் கவனமா இருந்தாங்க... இங்க வந்தெல்லாம் அவங்க பேசிக்கிட்டு இருக்கலை... சின்னஞ் சிறுசுக ஒருத்தரை ஒருத்தர் விரும்பிட்டாங்க நாமதான் சேர்த்து வைக்கணும்..."

"நீங்க சாதாரணமா சொல்லுறீங்கய்யா... நேத்து குத்துனதுல எதாவது ஒண்ணுன்னா எனக்குத்தானேய்யா இழப்பு... பெரிய மனுசன் நீங்க அவனை திட்டித் திருத்தாம சேர்த்து வைக்கணுங்கிறீங்க..."

"அம்மா உங்க புள்ள உங்களை விட்டு எங்கயும் போகமாட்டன். ரெண்டு பேரையும் எங்க புள்ளங்களாத்தான் நாங்க பாக்குறோம்... அவங்க ஆசைக்கு பெரியவங்க நாம மதிப்புக் கொடுக்கலாமுல்ல... வீணாவுல அவங்க ஆசைய ஏன் கெடுக்கணும்..."

"நல்லாயிருக்குய்யா... அவங்க சாதி பெரிசா எங்க சாதி பெரிசான்னு எல்லாம் எனக்கு பாக்கத் தேவையில்ல... நாங்க வம்பு சண்டை வேண்டான்னு ஒதுங்கிப் போற சாதி... ஆனா அவங்க ஆ... ஊன்னா அருவாளைத் தூக்குற சாதி... எம்பையனுக்கிட்ட பாசுபோர்டெல்லாம் இருக்கு... பெரியவன் ஊருக்குப் போனதும் அவனையும் அங்கிட்டு அனுப்பிற வேண்டியதுதான்... வந்த கண்டிச்சி விடுங்க... இல்லைன்னா இனி இங்கிட்டு வாராதேன்னு போகச் சொல்லிடுங்க... எங்க குடும்பத்துக்கெல்லாம் காதல் கத்திரிக்காயெல்லாம் சரிப்பட்டு வராது. பெரிய மனுசன்னு பேச வந்தா கட்டி வப்போமுன்னு சொல்லுறீக..."

"ஏம்மா இம்புட்டு வேகமாப் பேசுறீங்க... அவங்க பழகினது அம்புட்டு பெரிய தப்பா... இருபத்து அஞ்சு வருசத்துக்கு முன்னால நாங்க காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்ப நல்லாயில்லையா என்ன... ஆரம்பத்துல எங்களை ஏத்துக்க மறுத்த எங்க குடும்பம் இப்ப எங்களோட நெருக்கமாத்தான் இருக்காங்க... முதல்ல எதிர்த்துட்டு அப்புறம் சேர்றதுக்கு நாம எல்லாருமா அவங்களோட காதல ஆதரிச்சி கல்யாணம் பண்ணி வைப்போம்... இதுல எதுக்கு சாதியும் சங்கடங்களும்..."

"அதானே பார்த்தேன்... பன்னியோட சேந்த கன்னும் பீ தின்னுமின்னு சும்மா சொல்லியிருக்காங்க... அதான் உங்ககிட்ட பழகி உங்க புத்தி வந்திருச்சு... நீங்களே ரெண்டு பேரையும் கோத்து விட்டிருப்பீங்க போல... இனி நான் பாத்துக்கிறேன். என்ன செய்யணுமோ அதைச் செய்துக்கிறேன்...." என்று நாகம்மா எழ, "இருங்கம்மா.... பேசலாம்..."

"போதும்யா... பேசினதெல்லாம் போதும்... நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... என்ன பண்ணனும்ன்னு எனக்குத் தெரியும்... வாடா" என்று நாகம்மா கிளம்பிச் செல்ல. "என்னங்க இப்படி பேசிட்டுப் போறாங்க... சும்மா இருக்கீங்க" என்றபடி அருகே வந்த மனைவியிடம்  சிரித்தபடி பேச ஆரம்பித்தார்.

"விடும்மா... அவங்களுக்கு பிள்ளைங்கதான் உலகம்... படிச்சவங்களே காதல்ன்னு வந்தா எதிர்க்கிறப்போ படிக்காதவங்க இவங்க எப்படி ஏத்துப்பாங்க... அதான் பெத்தமனசு கோபமாப் பேசிட்டுப் போறாங்க... புள்ள நம்மளை விட்டுப் போயிடுவானோன்னு பயப்படுறாங்க... அவங்க பயம் சரிதானே..." என்றபோது வாசலில் வைரவனின் வண்டி வந்து நின்றது.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

சூப்பர்ர்ர்,என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு, ஹி ஹி..

Unknown சொன்னது…

பெத்தவங்க எப்பவுமே காதலுக்கு எதிர் தான்,ஹூம்!

தனிமரம் சொன்னது…

சாதியம் ஒரு புறம் தாய்மை ஒரு புறம் கனவு தொடரட்டும் ஐயா!

தனிமரம் சொன்னது…

பொன் விழா காணும் தொடருக்கு முதலில் என் வாழ்த்துக்கள்.

தனிமரம் சொன்னது…

நாகம்மா போல பலர் நம் சமூகத்தில் ஐயா பாமர கூட்டம்!