முந்தைய பதிவுகளைப் படிக்க...
---------------------------------
44. விசாரணை வென்றதா?
முன்கதைச் சுருக்கம்:
கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. அக்காவின் திருமணத்துக்கு நண்பர்களை அழைத்திருந்தான் ராம்கி. திருமணத்திற்கு புவனா வந்ததும் மீண்டும் அவர்களது காதலில் புயல் மையம் கொள்ள ஆரம்பித்தது.
இனி...
"வாங்கண்ணே... அத்தாச்சி, சீதை, மாப்பிள்ளையெல்லாம் நல்லாயிருக்காகளா?"
"எல்லாரும் நல்லாயிருக்காகத்தா... மாப்ளங்க எங்க?"
"பெரியவன் உள்ளதான் இருக்கான்... சின்னவுக சேகரு வீட்டுப் பக்கம் போயிருப்பாக..."
"ம்... பெரிய மாப்ள என்ன சொல்றாரு... அவருக்கும் இனி பொண்ணு பாத்துட வேண்டியதுதானே?"
"இப்ப வேணாமுன்னுதான் சொல்லுறான்... நீங்களே பேசுங்க..." என்றவள் "ஏய் ராசு மாமா வந்திருக்காக பாரு" என்று உள்பக்கமாகப் பார்த்துக் கத்தினாள்.
"வாங்க மாமா..." கைலியை கட்டியபடி வெளியே வந்தான் ராசு.
"என்ன மாப்ள தூக்கமா?"
"இல்ல மாமா டிவி பாத்துக்கிட்டு இருந்தேன்... எல்லாரும் நல்லா இருக்காங்களா?"
"எல்லாரும் நல்லா இருக்காக... இங்க சும்மாதானே இருக்கீக... அந்தப்பக்கம் வரலாமுல்ல..."
"வரணுமின்னுதான் நினைக்கிறது... எதாவது வேல வந்துருது மாமா..."
"இந்தாங்கண்ணே... காபி குடிங்க... உனக்கு வேணுமாடா..." என்றபடி காபி டம்ளரை முத்துவிடம் கொடுத்தாள்.
:இருந்தாக் குடும்மா..."
"ம்... அதானே... அவுக அப்பனை மாதிரியே காபியின்னா போதும் எத்தனை தடவ கொடுத்தாலும் குடிப்பான்.." என்றபடி அவனுக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.
"சின்னவனைக் கூப்பிடவாண்ணே..."
"இருத்தா... நாம முதல்ல பேசி ஒரு முடிவுக்கு வரலாம்..."
"என்ன மாமா.... ஏதாவது பிரச்சினையா?"
"இல்ல மாப்ள... தம்பி ஏதோ பொண்ணு கூட பழகுறான்னு..." மெதுவாக இழுத்தார்.
"யாரு அம்மா சொன்னுச்சா.... இதுக்கு வேற வேலையில்ல... யாராவது சொல்றதை கேட்டுக்கிட்டு எதாவது பேசும்.."
"இல்ல மாப்ள... அப்படி எதாவது இருந்தா மொளையில கிள்ளிடுறது நல்லதுல்ல.... நாளக்கி நாம சந்தி சிரிக்க நிக்கக்கூடாதுல்ல..."
"மாமா... யாராவது சொல்றதைக் கேட்டுக்கிட்டு அவனைக் கேக்கிறது நல்லாயில்ல... அவன் நல்லாத்தான் படிக்கிறான்... எதாவது கேட்கப் போயி அவனோட படிப்பை நாமளே கெடுக்கணுமா என்ன சொல்லுங்க..."
"இல்லப்பா.... ஆனா..."
"அப்படியே பழகுனாத்தான் என்ன... இப்ப அவனோட வயசு அப்படி... எல்லாம் ஒரு வேலைக்குன்னு போகும் போது சரியாகும்... அப்புறம் அவனோட பாதை மாறும்போது அவன் காதலிச்சிருந்தாலும் அந்தப் பொண்ணைத் தேட மாட்டான்... அதுக்குள்ள அவளுக்கும் கல்யாணம் முடிஞ்சிடும்..."
"அதுக்காக கண்டிக்காம விட முடியுமா என்ன..." நாகம்மா குறுக்கிட்டாள்.
"அம்மா... கொஞ்ச நாள் பொறுத்துக்க... இந்த வருசம் முடிஞ்சதும் வேற காலேசுப் போகப்போறான்... அப்ப அந்தப் பொண்ணு வேற எங்கயாவது போகும்... இதை பேசாம விட்டுடுடலாம் மாமா..."
"இல்லப்பா சத்தம் போடாம விசாரிப்போம்... ஆத்தா நீ எதுவும் பேச வேண்டாம்... தெரிஞ்சதாக் காட்டிக்காதே.... நா விசாரிக்கிறேன்..."
"விசாரிச்சி அவனை வருத்தப்பட வைக்க வேண்டான்னு நினைச்சேன்... ம்... சரி அவனக் கூப்பிடுறேன்.. நீங்களே கேளுங்க..." என்றபடி ராசு எழுந்தான்,
"சின்ன மாப்ளயை வருத்தப்பட வைக்கணுங்கிறதுக்காக கேக்கலை... நாளைக்கு நாம வருத்தப்பட்டு நிக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் கேட்கணுங்கிறேன்." என்றார்.
சிறிது நேரத்தில் ராம்கியுடன் திரும்பி வந்தான் ராசு. "வாங்க மாமா" என்றபடி சேரில் இருந்த அவருக்கு எதிரே தரையில் அமர்ந்த ராம்கி, "அக்கா நல்லாயிருக்கா?" என்றான்.
"என்ன மாப்ள அக்கா இல்லாம கஷ்டமா இருக்கா..." என்று சிரித்தவர், "படிப்பெல்லாம் எப்படி போகுது?" என்றார்.
"ம்... நல்லா படிக்கிறேன் மாமா... இது கடைசி செமஸ்டர்... மேல படிச்சாத்தான் எதாவது நல்ல வேலைக்குப் போகமுடியும்... காரைக்குடியிலதான் மாஸ்டர் டிகிரி போடணும்..."
"ம்... படிப்புல உன்னய கொற சொல்ல முடியாது. ஆனா..."
"என்ன மாமா... சொல்ல வந்ததைச் சொல்லுங்க..."
"இல்ல... யாரோ பொண்ணு கூட ஊர் சுத்துறதைப் பாத்ததா சொல்றாங்க.... அதான்..."
"மாமா... படிக்கிற இடத்துல எல்லார் கூடவும் பழகவும் பேசவுந்தான் செய்யணும்... இதையெல்லாம் தப்புன்னா என்ன சொல்றது..."
"நாந்தப்புன்னு சொல்ல வரலை... ஆனா பாக்குற சாதி சனம் தப்பா பேசுமே... இந்தா கலியாணத்தன்னைக்கு நீ பிரண்டுன்னு கூட்டியாந்தே.. ஆனா அந்தப் பொண்ணு உங்கிட்ட ரொம்ப உரிமையா இருந்திருக்கா... உடனே நம்ம ஆளுக கண் காது மூக்கு வச்சில்ல பேசிப்புட்டானுக... எங்காதுல கேக்கவுமில்ல நா இப்ப உங்கிட்ட கேக்குறேன்... என்ன இருந்தாலும் பாமர மக்கள் பலவிதமா பேசுமில்ல... அதனால நமக்குத்தானேப்பு பாதிப்பு..."
"மாமா இது யாரு சொல்லி யாரு மூலமா வந்திருக்கும்ன்னு எனக்குத் தெரியும்... எல்லாரும் என்னோட பிரண்ட்ஸ்... நீங்க சொல்ற பொண்ணு கூட நிறைய போட்டிகளுக்கும் பட்டிமன்றத்துக்கும் போயிருக்கேன். அதனால அவங்க கொஞ்சம் பிரியாப் பேசுவாங்க... அம்புட்டுத்தான்...."
"இதை எங்களை நம்பச் சொல்றியா?" நாகம்மா குறுக்கிட்டாள்.
"என்ன நீ... என்னமோ யாரோ சொன்னாங்கன்னு மாமா வரைக்கும் போயிருக்கே... அவளை என்ன என்னோட பொண்டாட்டின்னா கூட்டிக்கிட்டுத் திரிஞ்சேன்..."
"என்னடா வாய்க்கு வாய் பேசுறே?" கையை ஒங்கினாள்.
"அம்மா... நீ சும்மா இருக்கமாட்டே... அதான் மாமா கேக்குறாகல்ல... இதுக்குத்தான் நா அப்பவே சொன்னேன்... வேண்டான்னு கேக்க மாட்டேனுட்டிங்க..." கத்தினான் ராசு.
"இங்க பாரு ராமு... நீ படிக்கிறியோ இல்லையோ இந்தக் குடும்பம் நல்ல நிலைக்கு வரணுமின்னு எல்லாரும் விரும்புறோம்... உங்கண்ணன் தலையெடுத்து உன்னைய படிக்க வக்கிறான்... சீதாவைக் கட்டிக் கொடுத்தான். நாளக்கி நீ பேர் சொல்ற மாதிரி வாழ்ந்தாத்தானே எல்லாருக்கும் பெருமை... அதை புரிஞ்சிக்க... காதல்... கத்திரிக்காயெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி வராது... அம்புட்டுத்தான்..."
"இல்ல மாமா... நான்..."
"நீ எதுவும் சொல்ல வேண்டாம்... வாய்க்கு வாய் பேசாம மாமா சொல்றதைக் கேளு... அண்ணே இவன அவுக அப்பா போட்டோ முன்னாடி சத்தியம் பண்ணச் சொல்லுங்க...."
"அம்மா.... சத்த இருவே... டேய் ராமு உன்னைப் பற்றி எனக்குத் தெரியும்... மாமாவும் அம்மாவும் பயத்துல பேசுறாங்க... அவங்க சொல்ற மாதிரி..."
"என்னண்ணே என்னைய சத்தியம் பண்ணச் சொல்றியா.... எப்படி அந்தப் பொண்ணை விரும்பலைன்னு அப்படித்தானே... என்னால முடியாதுண்ணே... என்னை மன்னிச்சிடு... எனக்கு நீ எம்புட்டு முக்கியமோ அப்படித்தான் என் கூட பழகுறவங்களும்... குறிப்பா அவ... அவளோட் பேசமாட்டேன்னுல்லாம் சத்தியம் பண்ண முடியாது...சாரி மாமா... " என்றபடி எழுந்து வெளியே சென்றுவிட்டான்.
"சித்தி... நான் வைரவன் பேசுறேன்".
"வைரா... எப்படா வந்தே? உங்க சித்தப்பாதான் நீ எப்ப வருவே வருவேன்னு கேட்டுக்கிட்டே இருந்தாரு..."
"என்ன சித்தி... சித்தப்பா என்னைய கேட்டாரா? ஆச்சரியமா இருக்கு... என்ன விஷேசம்?"
"இரு அவருக்கிட்டே கொடுக்கிறேன்.... பேசிக்க... அப்பனுக்கும் மகனுக்கும் இடையில எதாவது இருக்கும்..."
"அதுசரி... சித்தப்பாக்கிட்ட எனக்கு ஆயிரம்... நல்லாச் சொன்னே போ... சரி குடு..."
"வைரா..."
"சொல்லுங்க சித்தப்பா... என்ன விஷயம்?"
"உங்கிட்ட கொஞ்சம் பேசணுமின்னு நினைச்சேன்... கொஞ்சம் முக்கியமான விஷயம்... அதான் நேர்ல பேசுனா நல்லாயிருக்கும்..."
"சும்மா சொல்லுங்க சித்தப்பா... அங்கிட்டு சித்திதானே இருக்காக... இங்கிட்டு அம்மா, அப்பாவெல்லாம் வெளிய போயாச்சு... புவனா குளிக்கப் போயிருக்கா... என்னன்னு சொல்லுங்க..."
"ஒண்ணும் இல்ல... நம்ம புவனா விஷயமா?"
"அவளுக்கு என்ன?"
"அது... வந்து... யாரோ ஒரு பையன் கூட பழகுறாளாம்... அதான்"
"அவ அப்படியெல்லாம் பழக மாட்டா சித்தப்பா..."
"இல்லடா... அம்மா புலம்புச்சு... அதான் விசாரிக்கச் சொன்னேன்... விசாரிச்சா.... ராமகிருஷ்ணனாமுல்ல... உனக்குத் தெரியுமாமே..."
வைரவன் சிரித்தபடி தொடர்ந்தான். "சித்தப்பா அந்த பயதான் என்னைய காப்பாத்துனவன்... அவனும் அவளும் நிறைய பட்டிமன்றங்கள்ல பேசியிருக்காங்க... பிரண்டா பேசிப்பாங்க... எனக்கும் தெரியும்... யாரோ சொன்னாங்கன்னு விசாரிச்சிருக்கீங்க... ஆமா விசாரிச்சது யாரு..."
"இருந்தாலும் பொம்பளப்புள்ள நாலு பேரு பேசுற மாதிரி நடந்துக்கக் கூடாதுல்ல.... நம்ம மணிப்பயலுக்கிட்டத்தான் விசாரிக்கச் சொன்னேன்..."
"யாரு மணியா... நல்ல கதை சித்தப்பா இதை விசாரிக்க இவனா... சரியாப் போச்சு... அவனுக்கு சும்மாவே புவனா மேல ஒரு கண்ணு... அவனோட அப்பா கூட அப்பாக்கிட்ட சாடை மாடையா மகனுக்கு கட்டச் சொல்லியிருக்காராம்..."
"காலேசுக்குன்னு பொயிட்டா நம்ம பயலுக பாதிப்பேர் ரவுடியாத்தானேடா இருக்கானுங்க... நீகூட மூணு வருசம் ரவுடித்தனம் பண்ணலையா?"
"ரவுடித்தனம் பண்ணித்தான் படிக்காம ஊரைச் சுத்திட்டு இப்போ பணத்தைக் கொடுத்து வக்கீலுக்குப் படிக்கிறேன்... அன்னைக்கு சந்தோசமா இருந்தது இன்னைக்கு வலிக்கிதே சித்தப்பா... சரி மணி யாரு.... ரவுடி மட்டுமில்ல காசுக்காக கொலையும் பண்ணுறவன்..."
"சரி... இப்ப அவனா முக்கியம்... புவனாவைக் கண்டிச்சி வைக்கணும்... நல்ல இடமா மாப்பிள்ளை வந்த கட்டிக் கொடுத்துடணும்... அவ படிச்சது போதும்..."
"என்ன சித்தப்பா நீங்க... அவ நல்லா படிச்சி பெரியாளா வரணுமின்னு ஆசைப்படுறா... அரியர் வச்சி பணம் கொடுத்துப் பாஸ் பண்ணுன நான் இன்னைக்கு வக்கீலுக்குப் படிக்கிறேன்... கிளாஸ் பர்ஸ்ட் வர்ற அவளுக்கு ஆசையில மண்ணள்ளிப் போட்டு கல்யாணமா... அப்பாவோட ஆசையும் அவளை நல்லா படிக்க வைக்கணுங்கிறதுதான்... அவங்க ஆசையைக் கெடுக்கணுமா என்ன... அவளைப் பற்றி அடுத்தவங்க சொன்னாங்கன்னு தப்பா பேசாதீங்க..."
"என்னடா நீயி... அவளுக்காக சப்போர்ட் பண்ணுறே....நீதான் அவளை திட்டுவே... சரி... அவ படிக்க போறேன்னுட்டு நாளக்கி முகத்துல கரியைப் பூசிட்டுப் பொயிட்டா நமக்குத்தாண்டா அசிங்கம்... அம்மா அதுதான் புலம்புது..."
"அதுக்கு வேற வேலை இல்லை... நான் சும்மா அவளை வம்பிழுப்பேன்... அவ படிக்கணும்... நல்ல இடத்துல கட்டிக் கொடுக்கணுங்கிறதுதான் என்னோட ஆசை. அவ படிப்பை யாரும் கெடுத்துடாதீங்க... அவ படிக்கணும்... அப்புறம் அந்தப் பயலை எனக்குத் தெரியும்... அவனை நான் விசாரிச்சிக்கிறேன்... தேவையில்லாம கண்டவனையும் வச்சி எந்தங்கச்சியைப் பத்தி விசாரிக்கச் சொல்லாதீங்க... எனக்குப் பிடிக்கலை" என்றபடி போனை வைத்தான் வைரவன்.
(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
6 எண்ணங்கள்:
ரவுடித்தனம் பண்ணித்தான் படிக்காம ஊரைச் சுத்திட்டு இப்போ பணத்தைக் கொடுத்து வக்கீலுக்குப் படிக்கிறேன்... அன்னைக்கு சந்தோசமா இருந்தது இன்னைக்கு வலிக்கிதே சித்தப்பா...//நானும் இதை ஒரு காலத்தில் நண்பர்கள் வாழ்வில் நேரில் கண்டதை இன்று மீண்டும் பார்க்கின்றேன் உங்கள் பகிர்வின் மூலம்.
ஆவலுடன் அருமையான ஒரு தொடர் தொடரட்டும் ஐயா.
ம்......ம்.......நல்லாத்தான் போகுது.'நம்பி'க்கை,'தும்பி'க்கை
..................ஹ!ஹ!!ஹா!!!!
ம்ம்ம் என்ன ஆகப்போகுதுன்னு தெரியல இவர்கள் காதல்...தங்கச்சி மேல அண்ணன் வைத்திருக்கிற பாசத்தை அழகா சொல்லிருக்கீங்க சூப்பர்ர்..
முன்கதைச் சுருக்கத்துக்கு நன்றி.
இயல்பான சரளமான நடை.
உரையாடல்களின் எளிமை கவர்கிறது.
காதலுக்கான எதிர்ப்பு புயலுக்கான மையம்.. நல்ல உவமை.
வணக்கம்
குமார்(அண்ணா)
நன்றாக உள்ளது.. தொடருங்கள் அடுத்த தொடருக்காக காத்திருக்கோம்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்துரையிடுக