மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 7 நவம்பர், 2011

கிராமத்து நினைவுகள் : பொன்வண்டும் சில்வண்டும்

கிராமத்து நினைவுகள்தான் எத்தனை சுகமானவை... நிறைய நினைவுகளை எழுத்தாக்கினாலும் இன்னும் எழுதச் சொல்லும் சுவை அந்த வாழ்க்கையில் இருந்ததை... இருப்பதை மறக்க முடியாது.

சின்ன வயதில் ரசித்துச் செய்த சேட்டைகளாக இல்லாவிட்டாலும் கண்மாய்க்குள் போட்ட ஆட்டம், கூட்டாஞ்சோறு, கபடி, திருவிழாக்கள் என சந்தோஷித்த நாட்கள் அயிரை மீன் குழம்பு போல மனசுக்குள் ஆக்கிரமித்துத்தான் இருக்கிறது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் பொன்வண்டும் சில்வண்டும் எங்களிடம் பட்டபாடு இருக்கிறதே... அப்ப்பப்பா... வெயில் காலத்தில் பொன்வண்டும் மழைக்காலத்தில் சில்வண்டும் எங்கள் ஊரில் ஏராளமாக இருக்கும்.



பொன்வண்டு தகதகக்கும் நிறத்தில் மின்னும் தலையுடன் நீண்ட மீசையுமாக இருக்கும். இறக்கைக்கும் தலைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி கத்திபோல இருக்கும். அதில் இலைகளை வைத்தால் வெட்டிவிடும். சில நேரங்களில் தவறுதலாக விரலை வைத்தால் ரத்தம் வரும் அளவுக்கு படக்கென்று பிடித்துவிடும்.

பள்ளி விடுமுறை நாட்களில் கொள்ளையில் இருக்கும் வாகை மரங்களில்தான் தவம் இருப்போம். வாகை மரத்தின் இலைகளில் தொங்கிக் கொண்டிருக்கும். மரத்தில் ஏறியும் கல்லை விட்டு எறிந்தும் பிடிப்போம். சில நேரங்களில் பிடிப்பதற்காக கஷ்டப்பட்டு மரத்தில் ஏறி அருகில் செல்லும் போது பறந்து அடுத்த மரத்துக்குப் போய்விடும். அது பறக்கும் போது ஒருவித சப்தம் வரும். அதை வைத்தே அது எங்கு செல்கிறது என்பது தெரிந்துவிடும். ஓடி... விழுந்து... காலில் முள் குத்தி என்ன கஷ்டப்பட்டாலும் எப்படியும் பிடித்து வந்துவிடுவோம்.

சாமுண்டரி பாக்ஸில் தவிடு போட்டு அதன் மேல் வாகை இலையை போட்டு அதற்குள் அடைத்து வைப்போம். சில நேரங்களில் டப்பாவை திறந்ததும் பறந்து ஓடிவிடும். இருத்தும் பத்திரமாக வைத்து பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் கொண்டு போவோம்.

பொன்வண்டு சிறியதாக சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை என கலர்க்கலராய் முட்டையிடும். அந்த முட்டையில் விளக்கெண்ணையை தடவி வெயிலில் வைத்தால் குஞ்சு பொறிக்கும் என்ற வழிவழியாய் வந்த வாய்ச்சொல்லை நம்பி எண்ணையை தடவி வெயிலில் காத்திருந்த நாட்கள் எல்லாம் உண்டு. கடைசிவரை அப்படி ஒன்று நிகழ்வதேயில்லை.

பொன்வண்டின் கழுத்தில் நூலை கட்டி (பல நேரங்களில் அறுத்துவிடும்) வேகமாக சுத்தினால் அழகிய சப்தத்துடன் பறக்கும். பொன்வண்டு எல்லாருடைய புத்தகப் பைக்குள்ளும் வாகை இலையை சாப்பிட்டபடி வலம் வந்த நாட்கள்தான் எத்தனை இனிமையானவை.

பொன்வண்டு பற்றி தமிழ் விக்கிபீடியாவில்...

பொன்வண்டு (Sternocera) பூச்சி தொகுதியில் (Class Insecta), புப்ரெஸ்டிடெ (Buprestidae) என்ற உயிரியல் குடும்பத்தில், ஸ்டேர்னோசெரா (Sternocera) என்ற பேரினத்தை சேர்ந்த வண்டு வகைகளாகும்.

இவற்றின் உடலின் மேற்புற ஓட்டுப்பகுதி உலோகத்தைப் போல் மின்னும் தன்மை கொண்டதால் தமிழில் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. ஸ்டேர்னோசெரா பேரினத்தில் உலகெங்கும் சுமார் 56 வண்டினங்கள் (Beetle Species) உள்ளன.

இவ்வகை வண்டுகள் பொதுவாக தாவரவுண்ணிகளாகும்.



அடுத்ததாத பொன்வண்டுக்கு நேர்மாறான வண்டுதான் சில்வண்டு... அழகான உருவமில்லாமல் கருப்பாக வித்தியாசமாக இருக்கும். இது மழைக்காலங்களில் கருவமரத்தில் இருக்கும்... கத்திக் கொண்டேயிருக்கும். இதன் ரீங்காரம் இனிமையானது அல்ல... வீட்டில் யாராவது கத்தி அழுதாலோ அல்லது சப்தமாக கத்தினாலோ எதுக்கு சில்வண்டு மாதிரி கத்துறே என்பார்கள்.

இவற்றின் உடம்பில் இருந்து தண்ணி மேலில் பட்டால் பத்து வரும் என்பார்கள். இருந்தும் அதை பிடித்து கத்தவிட்டுப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம்... பிடித்துப் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு நல்லபிள்ளை போல் நாலு பேர் இருக்கும் போது அருகில் சென்று பாக்கெட்டை லேசாக அமுக்கினால் போதும் கத்த ஆரம்பித்துவிடும்.

பொன்வண்டைப் போன்று ராஜ மரியாதையெல்லாம் இதற்கு இல்லை. மரத்தடியில் விளையாடும் போதும்... கோவிலில் விளையாடும் போதும்... எங்களுடன் இருக்கும் சில்வண்டு வீட்டிற்கு வரும்போது மீண்டும் கருவமரத்தின் அருகில் விடப்படும்.

சில்வண்டு குறித்த குறிப்பு கிடைக்கவில்லை. சில்வண்டின் ஒரு இனமான மகரந்தம் காவும் சில்வண்டு குறித்த தகவல் மட்டுமே விக்கிபீடியாவில் கிடைத்தது.

சில்வண்டின் ஒரு இனமான மகரந்தம் காவும் சில்வண்டு குறித்து

ஓர்க்கிட் சில்வண்டு அல்லது மகரந்தம் காவும் சில்வண்டு (ஆங்கிலம்: Pollinating Cricket ;இலத்தின்: Glomeremus orchidophilus ) இதுவரை அறிந்த சில்வண்டு இனங்களுள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் ஒரேயொரு இனமாகும்.

வழமையாக சில்வண்டு இனங்கள் தாவரங்களைச் சேதப்படுத்துகின்றன, ஆனால் ஓர்க்கிட் சில்வண்டு ஓர்க்கிட் வகையொன்றில் மகரந்தச் சேர்க்கை நடாத்துகின்றது. அறியப்பட்ட தாவரங்களுள் முற்றாக இல்லாது போய்விடக்கூடிய தீவாய்ப்புக் கொண்ட ஆங்க்ரேக்கம் கடேட்டி (Angraecum cadetii) எனும் இன ஓர்க்கிட் தாவரத்தில் மட்டும் இந்தச் சில்வண்டு மகரந்தக்காவியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்பினால் 2011ம் ஆண்டுக்குரிய சிறந்த பத்து உயிரினங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2008இல் இவ்வுயிரினம் ரீயூனியன் தீவுப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

பொன்வண்டு மற்றும் சில்வண்டு குறித்த தகவல்களை வழங்கிய தமிழ் விக்கிபீடியாவுக்கும் படங்களை வழங்கிய கூகிளுக்கும் நன்றி.

சரிங்க... அடுத்த கிராமத்து நினைவுகளில் மீண்டும் ஒரு நினைவலையோடு சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்

படங்கள் உதவி : கூகிள்

25 எண்ணங்கள்:

RAMA RAVI (RAMVI) சொன்னது…

சுகமான நினைவுகள்.
பொன்வண்டு,சில்வண்டு பற்றிய அரிய தகவல்களுக்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பதிவுலகின் பாரதிராஜாவுக்கு வணக்கமும், வாழ்த்தும்

சக்தி கல்வி மையம் சொன்னது…

நினைவுகள்.. வண்டு குறித்த தகவல்கள் பல தெரியாதவையே..

Vidhya Chandrasekaran சொன்னது…

பொன்வண்டு பிடித்து, தீப்பெட்டிகளில் போட்டு ரெண்டு மூணு நாள் வைத்திருந்த காலங்கள். ஹும்ம்ம்ம்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆஹா எங்களை குழந்தை பருவத்திற்கே கூட்டிட்டு போயிட்டீங்க, பொன்வண்டுகிட்டே நானும் வெட்டு பட்டுருக்கிறேன்...!!!

செங்கோவி சொன்னது…

நாங்க தீப்பெட்டியில் பொன்வண்டை அடைத்து வைப்போம்..இனிமையான நினைவுகள்..

ராமலக்ஷ்மி சொன்னது…

அழகான நினைவுகள். தகவல்களுக்கும் நன்றி குமார்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

பொன் வண்டுபிடித்து கயிறு கட்டி விளையாடி அந்த நாள் நினைவுகளில் மூழ்கிப்போனேன்...


அழகிய பதிவு...

SURYAJEEVA சொன்னது…

பழைய நினைவுகள் என்றாலும் அதற்க்கான அறிவியல் விளக்கங்களையும் கண்டது புதுமை... அருமையான பகிர்வு

r.v.saravanan சொன்னது…

கிராமத்து நினைவுகள் ஒரு சுகானுபவம் தான் எப்போதுமே

தகவல்களுக்கு நன்றி குமார்

மனோ சாமிநாதன் சொன்னது…

'பதிவுலகின் பாரதி ராஜா!'
இந்தப் பட்டம் நன்றாய்த்தான் இருக்கிறது! உங்களுக்கு மிகவும் பொருத்தமாகவும் இருக்கிறது! அந்த அளவுக்கு உங்கள் பதிவில் கிராமீய மணம் மகிழம்பூ போல மணக்கிறது!
அருமையான பதிவு!

சுசி சொன்னது…

பொன்வண்டு.. எத்த்தனை வருஷத்துக்கு அப்புறம் பார்க்கறேன்/படிக்கறேன்.

சில்வண்டு இப்போதான் கேள்விப்படறேன்.

பகிர்வுக்கு நன்றிங்க.

பாரணை முடிச்ச:) அதிரா சொன்னது…

நல்ல தகவல், எனக்கும் பொன் வண்டு மிகவும் பிடிக்கும், சின்ன வயதில் வாகை மர இலையும் போட்டு போத்தலில் பிடித்து வைத்து, முட்டை போட்டிருக்கிறதா என தினமும் செக் பண்ணிய ஞாபகம்:)).

சில் வண்டு பிடிக்காது, அது நித்திரை கொள்ளவே விடாது..... விசர் வந்துவிடும் சத்தம் கேட்டாலே.

ஹேமா சொன்னது…

பொன் வண்டு நினைவுகள் பொன்னானவைகள்தான்.நானும் நெருப்புப் பெட்டியில் அடைத்து வைத்திருக்கிறேன் !

Asiya Omar சொன்னது…

தம்பிக்கு பதிவுலகின் பாரதிராஜான்னு வேறு பட்டமா?நல்ல பொருத்தம்.
பொன்வண்டு,சில்வண்டு நினைவுகளை அழகாக பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி.
நாங்களும் சிவப்பு பட்டுபூச்சியை தீப்பெட்டியில் போட்டு பள்ளிக்கு எடுத்துப்போன நினைவு வருகிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சி.பி. அண்ணா...
என்னது... பாரதிராஜாவா?
அதுசரி... அப்படி என்ன எழுதிவிட்டோம்... போங்க..
உங்கள் அன்புக்கு நன்றி.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரமா அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கருன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வித்யாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மனோ அண்ணா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க நண்பா செங்கோவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ராமலெஷ்மி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சௌந்தர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சூர்யாஜீவா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மனோ அம்மா...
நீங்களும் பட்டத்தை ஆமோதிக்கிறீர்களா? அது சரி...
அந்தளவுக்கெல்லாம் நம்ம எழுத்து இல்லையம்மா.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஆபீஸர் (திரு. மனோ சொன்ன பெயர்)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி அதிரா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோதரி ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆசியாக்கா...
நலமா?
நீங்களும் பட்டத்துக்கு ஆதரவா... சரித்தான் போங்க...
அந்தளவுக்கு எல்லாம் இன்னும் எழுதவில்லை அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ப.கந்தசாமி சொன்னது…

பள்ளி நாட்களை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

குமார்,தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.